அத்துவைதம் (தொடர்-03)

July 11, 2018

தொகுப்பு : மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ

*توحيد الأفعال (தௌஹீதுல் அப்ஆல்) செயல்களை ஒன்றாக்குதல் / செயல்களை ஏகத்துவம் செய்தல் / செயல்களை அத்துவைதமாக்குதல்*

அல்லாஹ் தஆலா இந்த சிருஷ்டிகளில் தனது தாத் – உள்ளமையையும் தனது ஸிபாத் – பண்புகளையும், தனது அப்ஆல் – செயல்களையும் மறைத்து வைத்துள்ளான். எல்லா செயல்களும் அல்லாஹ்வில் நின்றே நடைபெறுகின்றன. உள்ளமையில் அவனைத்தவிர எந்தவொரு செயலையும் யாராலும் செய்ய முடியாது.

لا فاعل إلا الله கண் இமைப்பதாயினும் அது அவனால்தான் முடியுமேதவிர மனிதனால் முடியாது. இந்த இரகசியத்தை இலகுவில் புரிந்து கொள்ள முடியாமல் அவன் மறைத்து வைத்துள்ளான். அல்லாஹ்வின் செயல்கள் பற்றிய ஞானத்தை ஒரு மனிதனுக்கு அவன் வழங்கும்போது சகல செயல்களும் அல்லாஹ்வின் செயலே என்பதை கண்காட்சியாகவும் அனுபவரீதியாகவும் அந்த மனிதனால் உணர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அனைத்து செயல்களும் அல்லாஹ்வின் செயலே என்பதை நம்பி அனுபவத்தில் உணர்ந்து வாழ்ந்தவர்களே விசாரணையின்றி சுவர்க்கத்தில் நுழையும் எழுபதாயிரம் பேர்களாவர். இவர்களை விசாரணை செய்வதற்கு இவர்களுக்கென்று எந்த சுயமான செயலுமில்லை. எந்த செயலும் செய்யாதவர்களை விசாரணை செய்ய முடியாது.

இவர்கள் அல்லாதவர்கள் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே என பெயரளவில் நம்பியிருந்தாலும் தமக்கென்று சுயமான செயல்கள் இருப்பதாகவும் ஏனைய படைப்புகளுக்கும் சுயமான செயல்கள் இருப்பதாகவும் நம்பியிருந்தவர்கள். இதனால் பிறரின் செயல்களால் மகிழ்ச்சியும் கோபமும் இவர்களுக்கு ஏற்பட்டது.
இவர்களிடம் எல்லாச் செயல்களும் அல்லாஹ்வின் செயலே என்ற பெயரளவிலான நம்பிக்கை மாத்திரம் இருந்ததே தவிர அனுபவரீதியான நடைமுறை இருக்கவில்லை. இவர்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு.
எச்செயல் யாரால் நிகழ்ந்தாலும் அது அல்லாஹ்வினாலேயே நிகழ்ந்தது. எனவே செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன என்றநம்பிக்கையின் மூலம் செயல்களில் தௌஹீத் செய்தல், செயல்களை ஒன்றாக்குதல், செயல்களை அத்துவைதமாக்கல் தௌஹீதின் முதல் அம்சமாகும்.

பல்வேறு செயல்கள் பல சிருஷ்டிகளிடம் வெளியாகும்போது அது அல்லாஹ்வின் செயலாக எவ்வாறு இருக்க முடியும்?. அப்படியாயின் அல்லாஹ் எங்கோ இருந்து கொண்டு தனது படைப்புகளின் செயல்களை வெளிப்படுத்துகின்றானா? இவ்வாறு நாம் நம்பிக்கை கொண்டால் அல்லாஹ் என்ற உள்ளமையில் இருந்து செயல்கள் பிரிந்து வந்து படைப்பு என்ற உள்ளமையில் சேர்ந்து செயலாக வெளிப்படுகின்றது என்று சொல்ல வேண்டி ஏற்படும். இதன்போது இரண்டு உள்ளமைகள் இருப்பதாகவும், அல்லாஹ்வின் செயல் அவனில் இருந்து பிரிந்து வந்து விட்டதாகவும் நாம் நம்ப வேண்டியேற்படும். இது ஷிர்க்கை ஏற்படுத்தும் நம்பிக்கை. ஒரு படைப்பின் செயலைக்கூட அந்த படைப்பிலிருந்து பிரிக்க முடியாதபோது படைத்தவனின் செயலை எவ்வாறு அவனில் இருந்து பிரிக்க முடியும். இது அசாத்தியமானதும் அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கு பொருத்தமற்றதுமாகும்.

அல்லாஹ்வின் செயல்கள், அவனைவிட்டும் பிரியாத நிலையில் அவன் தன்னிலேயே வெளிப்படுகின்றன. படைப்புகள் அவனது உள்ளமைக்கு வேறானவையல்ல. அவனது தாத்தின் – உள்ளமையின் தோற்றங்களே படைப்புகளாக இருப்பதால் அவற்றில் வெளியாகும் செயல்கள் அனைத்தும் அவனில் வெளியாகும் அவனது செயல்களே. இதுவே
الأفعال توحيد செயல்களை ஒன்றாக்குதல், செயல்களை ஏகத்துவம் செய்தல் என்பதாகும்.

توحيد الصفات (தௌஹீதுஸ் ஸிபாத்) பண்புகளை ஒன்றாக்குதல் / பண்புகளை ஏகத்துவம் செய்தல் / பண்புகளை அத்துவைதமாக்குதல்.

பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் பண்புகளே என பண்புகளை ஒன்றாக்குதல் தௌஹீதின் இரண்டாவது அம்சமாகும். பல்வேறு பண்புகள் படைப்புகளில் வெளியாகின்றன. குறிப்பாக قدرة – சக்தி, ارادة – நாட்டம், علم – அறிவு,حياة – உயிர்,سمع – கேள்வி,بصر – பார்வை,كلام – பேச்சு ஆகிய ஏழு பண்புகளும் படைப்புகளில் காணப்படுகின்றன.

இவை குறித்த கட்டுப்பாடுடனும் எல்லையுடனும் படைப்புகளில் செயல்படுகின்றன. இவை எங்கிருந்து வந்தன? இவை யாருடைய பண்புகள்? இவை அல்லாஹ்வில் இருந்தே வந்தன. இவை அல்லாஹ்வின் பண்புகள்தான்.
அல்லாஹ்வின் கட்டுப்பாடற்ற பரிசுத்த பண்புகள் படைப்புகளில் கட்டுப்பாட்டுடன் வெளியாகின்றன. இந்த பண்புகள் பல சிருஷ்டிகளில் வெளியாகினாலும் இவை அனைத்தும் அல்லாஹ்வின் பண்புகள் என பண்புகளை ஒன்றாக்குதல் توحيد الصفات – தௌஹீதுஸ் ஸிபாத் ஆகும்.

மேற்குறிப்பிட்ட ஏழு பண்புகளும் அல்லாஹ்விலிருந்தே இந்த படைப்புகளுக்கு வந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. அவ்வாறாயின் அல்லாஹ்விலிருந்து இந்த பண்புகள் பிரிந்து வந்து படைப்புகளில் சேர்ந்துவிட்டனவா? இவ்வாறு நாம் நம்பிக்கை கொண்டால் இரண்டு உள்ளமைகள் இருப்பதாகவும் அல்லாஹ்வின் பண்புகள் அவனை விட்டும் பிரிந்து வந்துவிட்டதாகவும் நம்ப வேண்டியேற்படும். இது ஷிர்க்கை ஏற்படுத்தும் நம்பிக்கை. ஒரு பண்பு அது எதில் தங்கியுள்ளதோ அதை விட்டும் ஒருபோதும் பிரியாது.

الصفة لا تـفارق الموصوف
சீனியை விட்டும் அதன் பண்பாகிய இனிப்பை தனியாக பிரிக்க முடியாது. மிளகாயிலிருந்து அதன் பண்பாகிய காரத்தை தனியாக பிரிக்க முடியாது. இதுபோல் அல்லாஹ் தஆலாவிலிருந்து அவனது பண்புகளை பிரிக்க முடியாது. அவை பிரிந்து வரவும் மாட்டாது.

قدرة என்ற சக்தி அல்லாஹ்வுடையது. அது அவனது தாத் – உள்ளமையில் தங்கியுள்ளது. அவனில் தங்கியுள்ளது. இந்த சக்தி அவனை விட்டும் தனியாக பிரியாது. அவ்வாறாயின் படைப்புகளுக்கு எவ்வாறு சக்தி வந்தது?

علم எனும் அறிவு அல்லாஹ்வுடையது. அது அவனது தாத்-உள்ளமையில் தங்கியுள்ளது. அவனிலேயே உள்ளது. இந்த அறிவு அவனை விட்டும் தனியாக பிரியாது. அவ்வாறாயின் படைப்புகளுக்கு எங்கிருந்து அறிவு வந்தது?

இவ்வாறு இந்த 07 பண்புகளையும் நாம் சிந்திக்க முடியும். இந்த 07 பண்புகளும் அல்லாஹ்வை விட்டும் பிரியாமல் எப்படி படைப்புகளில் வந்து சேர்ந்தது.? அல்லாஹ்வின் பண்புகள் அவனின் உள்ளமையை விட்டும் பிரியாமல் அவனிலேயே வெளிப்படுகின்றன. படைப்புகள் அவனுக்கு வேறானவை அல்ல அவன் தானானவைதான். அவற்றில் வெளியாகும் பண்புகள் அனைத்தும் அவனது பண்புகளே. இதுவே الصفات توحيد பண்புகளை ஒன்றாக்குதல், பண்புகளை ஏகத்துவம் செய்தல், பண்புகளை அத்துவைதமாக்குதல் ஆகும்.

توحيد الذات (தௌஹீதுத் தாத்) உள்ளமையை ஒன்றாக்குதல் / உள்ளமையை ஏகத்துவம் செய்தல் / உள்ளமையை அத்துவைதமாக்குதல்.

பலதாய் தோற்றும் உள்ளமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் உள்ளமையே என உள்ளமையை ஒன்றாக்குதல் தௌஹீதின் மூன்றாவது அம்சமாகும். ஆயினும் இதவே யதார்த்தத்தில் தௌஹீதின் முதன்மையான அம்சமாகும்.

அல்லாஹ் மாத்திரமே சுயமான உள்ளமை உடையவன். அவனுக்கு மாத்திரமே வுஜூத் அல்லது தாத் எனப்படும் உள்ளமை உண்டு. படைப்புகளுக்கு தனியான வுஜூத் – உள்ளமை கிடையாது. படைப்புகள் சுயமான உள்ளமையுடன் இருப்பதுபோல் தோன்றுகின்றன. இந்த உள்ளமைத் தோற்றம் எங்கிருந்து வந்தது? அல்லாஹ்விடமிருந்தே வந்தது.அவனிலிருந்து இந்த உள்ளமை பிரிந்து வரமுடியாது. இது அசாத்தியமானதாகும். அத்துடன் அவனது பரிசுத்த தன்மையில் குறை ஏற்படுத்துவதுமாகும். இவ்வாறு அல்லாஹ்விலிருந்து படைப்புகளின் உள்ளமை பிரிந்து வந்துள்ளது என்று நம்புவது ஷிர்க்கான நம்பிக்கையாகும்.

அல்லாஹ் தஆலாவின் உள்ளமை அவனை விட்டும் பிரியாமல் படைப்புகளாகத் தோன்றுகின்றது. படைப்புகளுக்கு தனியான உள்ளமை இல்லை. படைப்புகளின் உள்ளமையாகத் தோன்றுவது அல்லாஹ்வின் உள்ளமைதான் என நம்புவதே توحيد الذات உள்ளமையை ஒன்றாக்குதல், உள்ளமையை ஏகத்துவம் செய்தல், உள்ளமையை அத்துவைதமாக்குதல் ஆகும்.

எனவே செயல்களிலும் பண்புகளிலும் உள்ளமையிலும் கூட்டு அல்லது இணையில்லை. காரணம் இரண்டு வஸ்த்துக்கள் இல்லை. செயல்களும் பண்புகளும் உள்ளமையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருக்கின்றன. இதுவே தௌஹீத், ஏகத்துவம், அத்துவைதம் ஆகும்.

இதைப் போதிக்கவே லா இலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவை இறைத் தூதர்கள் போதித்தார்கள். லா இலாஹ இல்லல்லாஹ் எனும் திருக் கலிமாவின் பிரதான நோக்கம் தௌஹீதுல் உலூஹிய்யஹ் அல்லது தௌஹீதுல் இபாதா எனும் வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் அல்லது வணக்க வழிபாடுகளில் ஏகத்துவம் செய்தல் மட்டுமல்ல. இது திருக் கலிமாவின் மூலம் எதிர்பார்க்கப்படும் செயல்பாடுகளில் ஒன்று. வணக்க வழிபாடுகளில் மட்டும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது திருக் கலிமாவின் பிரதான நோக்கமாயின் அது ஷிர்க்கை முற்றாக இல்லாதொழிப்பதற்கு வந்த மூல வாக்கியமாக இருக்க முடியாது.

மனிதர்களின் மனங்களிலுள்ள ஷிர்க்கெனும் இணையை முற்றாக நீக்க வந்த மூல வாக்கியமான லா இலாஹ இல்லல்லாஹ், வணக்க வழிபாடுகளில் மாத்திரம் ஷிர்க்கை நீக்கினால் அது பூரணமான வாக்கியமாக இருக்க முடியாது.

லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் ‘வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை’ என வைத்துக் கொண்டால் ‘வணக்கத்திற்குத் தகுதியற்றவன் அல்லாஹ்வைத் தவிர ஒருவன் இருக்கிறான்’ என்ற கருத்து வந்துவிடும். அதாவது வணங்கப்பட தகுதியற்ற படைப்புகள் சுயமாக இருக்கின்றன என்ற கருத்துண்டாகும். அத்துடன் உணவளிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இருக்கின்றானா? படைப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இருக்கின்றானா? உயிரபிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இருக்கின்றானா? போன்ற வினாக்களும் உண்டாகும். இவ் வினாக்களுக்கான விடைகள் நிச்சயமாக ஷிர்க்கை முற்றாக ஒழிக்க வந்த திருக்கலிமாவில் இருக்கவே வேண்டும். வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற பொருள்தான் திருக்கலிமாவின் பொருள் என்றால் இந்த வினாக்களுக்கு திருக்கலிமாவில் விடைகள் இல்லை என்றே முடிவு செய்ய வேண்டும்.

லா இலாஹ இல்லல்லாஹ் எனும் திருக்கலிமா அல்குர்ஆனின் திருவசனங்களில் ஒன்று. உலகில் தோன்றிய நபிமார்கள் பேசிய வார்த்தைகளில் மிகச் சிறந்த வார்த்தை. இது ஷிர்க் எனும் இணையை வேரறுக்க வந்த வாரத்தை. இந்த வார்த்தை பூரணமாக தௌஹீதை வலியுறுத்த வேண்டும். உள்ளமையிலும் செயல்களிலும் பண்புகளிலும் ஒருமைத் தன்மையை நிலை நிறுத்தி அல்லாஹ் மாத்திரமே இருக்கின்றான். அவனுக்கே எல்லாச் செயலும் உரியன. அவனுக்கே சகல பண்புகளும் உரியன என்று ஏகத்துவத்தை வலியுறுத்த வேண்டும். வணக்க வழிபாடுகளில் மட்டும் தௌஹீதை வலியுறுத்தி ஏகத்துவத்தை குறுகிய வட்டத்தில் அடைக்க முடியாது.

எனவே லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள்…
01.படைத்தல், வளர்த்தல், பரிபாலித்தல், உணவளித்தல், உயிர்ப்பிக்கச் செய்தல், மரணிக்கச் செய்தல் மற்றுமுள்ள எல்லா செயல்களும். அச் செயல்கள் படைப்புகளில் வெளியானாலும் அவை அனைத்தும் அல்லாஹ்விலிருந்து விட்டும் பிரியாத அவனது செயல்களே என்பதையும்

02. சக்தி, நாட்டம், அறிவு, உயிர், கேள்வி, பார்வை, பேச்சு ஆகிய பண்புகளும் மற்றுமுள்ள எல்லாப் பண்புகளும். அந்தப் பண்புகள் படைப்புகளில் வெளியானாலும் அவை அனைத்தும் அல்லாஹ்விலிருந்து விட்டும் பிரியாத அவனது பண்புகளே என்பதையும்

03. வணக்க வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன என்பதையும்

04. வுஜூத் எனும் உள்ளமை அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது. படைப்புகளுக்கு தனியான உள்ளமை, அல்லாஹ்வை விட்டும் பிரிந்த வேறான உள்ளமை இல்லை என்பதையும் படைப்புகளின் உள்ளமை அல்லாஹ்வின் உள்ளமைதான் என்பதையும் வலியுறுத்தக் கூடியதாக, பூரணமான தௌஹீதை நிலைநாட்டக் கூடியதாக, ஷிர்க்கை முற்றாக நீக்குவதாகவே அமைய வேண்டும். அதுவே பூரணத்துவமான தௌஹீதை நிலைநாட்டும். இந்த அடிப்படையில் நோக்கும்போது லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள் அல்லாஹ்வுக்கு வேறான எந்த சிருஷ்டியும் இல்லை என்பதாகும். அல்லாஹ் மட்டுமே இருக்கிறான். அவனைத் தவிர எதுவுமில்லை. எந்தச் செயலுமில்லை. எந்தப் பண்புமில்லை என்ற தூய்மையான தௌஹீதை/ ஏகத்துவத்தை/வஹ்ததுல் வுஜூதை/ அத்துவைதத்தை நம்பியவனே உண்மையான இறை விசுவாசியாவான். இங்கு தௌஹீத்/ ஏகத்துவம்/வஹ்ததுல் வுஜூத்/அத்துவைதம் என சொற்கள் பலதாக இருந்தாலும் கருத்து ஒரே கருத்தாகும். நம்பிக்கை ஒரே நம்பிக்கையாகும்.

(அத்துவைதம் தொடரும் ……….)

You may also like

Leave a Comment