அத்துவைதம் (தொடர்-04)

July 15, 2018

தொகுப்பு : மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ

*வஹ்ததுல் வுஜூத்’*

‘வஹ்ததுல் வுஜூத்’ என்பது உள்ளமை ஒன்று அல்லது மெய்ப் பொருள் ஒன்று எனும் பொருள் தருகின்றது. ‘வஹ்தத்’ என்பது ஒன்று என்பதைக் குறிக்கின்றது. ‘வுஜூத்’ என்பது உள்ளமை என்பதைக் குறிக்கின்றது. ‘உள்ளமை’ என்பது ‘இல்லாமை’ என்பதற்கு மாற்றமானது. ‘வுஜூத்’ உள்ளமை என்பது அல்லாஹ்வின் ‘தாத்’ எனும் மெய்ப் பொருளைக் குறிக்கின்றது. எனவே ‘வஹ்ததுல் வுஜூத்’ என்பது ‘உள்ளமை ஒன்று அல்லது மெய்ப் பொருள் ஒன்று’ அல்லாஹ் ஒருவன் எனும் பொருளைத் தருகின்றது. ஸூபியாக்கள் வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று பொருள் கொள்கின்றனர்.

வுஜூத் – உள்ளமை மூன்று வகைப்படுகின்றது.

*01.வாஜிபுல் வுஜூத் :*
இது தன்னைக் கொண்டு நிலைபெற்றது. இது நிலைபெறுவதற்கு மற்றொன்று தேவையில்லை. உதாரணம் : அல்லாஹ் தஆலாவின் ‘தாத்’ எனும் மெய்ப் பொருள். (قائم بنفسه)

02. *மும்கினுல் வுஜூத்*
எப்போதும் இன்னொன்றைக் கொண்டு நிலைபெற்றது. இது நிலை பெறுவதற்கு எப்போதும் இன்னொன்று தேவைப்படும். உதாரணம் : நிறங்கள் இவை தன்னைக் கொண்டு மட்டும் நிலைபெற முடியாது. இன்னொன்றைக் கொண்டே நிலை பெறுகின்றன. வெள்ளை நிறம் பாலில் தென்படுவது போல, அல்லாஹ்வின் படைப்புகள் அவை தன்னைக் கொண்டு மட்டும் நிலைபெறமாட்டாது. அல்லாஹ்வைக் கொண்டே நிலைபெறுகின்றன. (قائم بغيره)

03. *மும்தனிஉல் வுஜூத்*
இது தன்னைக் கொண்டு நிலைபெறுவதுமில்லை இன்னொன்றளவில் தேவையாவதுமில்லை. உதாரணம் :عنقاء எனப்படும் ‘யானை இராஞ்சிப் பறவை’ இது பெயரளவில் உள்ளதே தவிர யதார்த்தத்தில் இல்லாதது.

*’வஹ்ததுல் வுஜூத்’ கோட்பாடு*

உள்ளமை ஒன்று, மெய்ப் பொருள் ஒன்றுதான். படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகளாகும். அதாவது அல்லாஹ் ஒருவன், அவன்தான் உள்ளமை (வாஜிபுல் வுஜூத்). படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகளாகும் (மும்கினுல் வுஜூத்). படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவை. படைப்புகள் அனைத்தும் அந்த அல்லாஹ் என்ற மெய்ப்பொருள் தானானவை. அன்றி அந்த மெய்ப் பொருளுக்கு வேறானவையல்ல. அந்த உள்ளமை படைப்புகள் என்ற பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளது. படைப்புகள் பல்வேறு தோற்றங்களில் தோன்றினாலும் அல்லாஹ் என்ற உள்ளமையே அவ்வாறு தோன்றுகின்றது. படைப்புகள் மாய தோற்றத்தில் தென்படுகின்றனவே தவிர யதார்த்தத்தில் படைப்புகள் என்பது இல்லை.

பஞ்சு பிடவையாகத் தோற்றுவது போலவும், தங்கம் காப்பாகத் தோற்றுவது போலவும், கடல் அலையாகத் தோற்றுவது போலவும் அல்லாஹ் என்ற உள்ளமை சர்வ படைப்புகளாகவும் தோன்றுகின்றது. சர்வ படைப்புகளும் ‘ஹக்’ ஆகிய அல்லாஹ் தானானவைகள்தான். அவனுக்கு வேறானவைகள் அல்ல.

இங்கு ஹுலூல் என்பதற்கும் இத்திஹாத் என்பதற்கும் இடமில்லை. (ஹுலூல் இத்திஹாத் விபரம் பக்கம் 10ல் குறிப்பிடப்பட்டுள்ளது)

‘வஹ்ததுல் வுஜூத்’ கோட்பாட்டின்படி ஒரே உள்ளமையான அல்லாஹ்தான் ஹுலூல், இத்திஹாத் இன்றி பஞ்சு – பிடவையாக, சேட்டாக, சாரனாக, தொப்பியாக தோற்றுவது போலவும், தங்கம் – காப்பாக, மாலையாக, மோதிரமாக தோற்றுவது போலவும், கடல் – அலையாக, நுரையாக தோற்றுவது போலவும், இரும்பு – திறப்பாக, பூட்டாக தோற்றுவது போலவும் படைப்புகளாக தோற்றமளிக்கின்றான். இங்கு இரண்டு உள்ளமைகள், இரண்டு பொருட்கள் இல்லை. எனவே ஷிர்க் எனும் இணை கூட்டு இல்லை. இரண்டு பொருட்கள் இல்லாததால் இணை அசாத்தியம்.

பஞ்சுதான் பிடவையாக, சேட்டாக, சாரனாக, தொப்பியாக தோற்றுகின்றது. கடல்தான் அலையாக, நுரையாக தோற்றுகின்றது. தங்கம்தான் காப்பாக, மாலையாக, மோதிரமாக தோற்றுகின்றது. இரும்புதான் திறப்பாக, பூட்டாக தோற்றுகின்றது. இதுபோல் அல்லாஹ்தான் படைப்புகளாக தோற்றமளிக்கின்றான். இங்கு இரண்டு உள்ளமைகள் இல்லை. உள்ளமை அல்லாஹ் மாத்திரம்தான். அந்த உள்ளமைதான் சர்வ படைப்புகளாகத் தோற்றுகின்றது.

வஹ்ததுல் வுஜூத் கொள்கை அல்லாஹ் ஒருவன் என்பதையும், அவன் தனித்தவன் என்பதையும், உள்ளமை ஒன்று என்பதையும் வலியுறுத்துகின்றது.

இதே கருத்தையே அல்குர்ஆனும் அல்ஹதீதும் வலியுறுத்துகின்றன.

لا إله إلاالله وحده لا شريك له
லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு .

லா இலாஹ இல்லல்லாஹு : அல்லாஹ்வுக்கு வேறான எந்த சிருஷ்டியும் இல்லை. அவன் மாத்திரமே இருக்கின்றான்.

வஹ்தஹூ : அவன் தனித்தவன். உள்ளமை அவனுக்கு மட்டுமே உண்டு. உள்ளமையில் அவன் தனித்தவன். பண்புகள் அவனுக்கு மட்டுமே இருக்கின்றன. பண்புகளில் அவன் தனித்தவன். செயல்கள் அவனுக்கு மட்டுமே இருக்கின்றன. செயல்களில் அவன் தனித்தவன். தனித்தவன் என்றால் எப்போதும் அவன் தனித்தவன்தான். படைப்புகளைப் படைக்கு முன்னர் அவன் தனித்தவனாக இருந்ததுபோல் படைப்புகளைப் படைத்த பின்னும் அவன் தனித்தவன்தான்.

படைப்புகளைப் படைக்கமுன் அவன் தனித்தவன் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். காரணம் அவன் மட்டுமே அப்போது இருந்ததால் அவன் தனித்தவனாக இருந்தான் என்பதில் சந்தேகமில்லை.

படைப்புகளைப் படைத்தபின் அவன் தனித்தவனாக இருப்பதெப்படி? தனியாக இருந்த அவன் படைப்புகளைப் படைத்ததால் படைப்புகள் உருவாகி விட்டனவே இப்போது அவன் தனித்தவனா? அவனுடன் படைப்புகளும் இருக்கின்றனவா? அவன் தனித்தவன் என்றால் படைப்புகள் இருக்கின்றனவே? அவன் தனித்தவன் அல்ல என்றால் وحده – அவன் தனித்தவன் என்பதன் அர்த்தம் என்ன?

அல்லாஹ் தஆலா படைப்புகளைப் படைக்க முன்னர் எவ்வாறு தனித்தவனாக இருந்தானோ அவ்வாறே படைப்புகளைப் படைத்த பின்னரும் அவன் தனித்தவனாகவே இருக்கின்றான். படைப்புகள் அவனுக்கு வேறானவையல்ல. அவன்தான் படைப்புகளாக இருக்கின்றான். படைப்புகள் என்பது தோற்றங்களேதவிர யதார்த்தம் அல்லாஹ்தான். எனவே அவன் மட்டுமே இருக்கின்றான். ஒரு தங்கக் கட்டி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வேறு எந்த ஆபரணமும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். இப்போது தங்கம் தனியாக இருக்கிறது. அந்தத் தங்கக் கட்டியே ஒரு மாலையாகவும், ஒரு காப்பாகவும் ஆகிவிட்டால் இப்போது தங்கத்துடன் மாலையும் காப்பும் இருக்கின்றதா? அல்லது தங்கம் மாத்திரம் தனியே இருக்கின்றதா? இப்போதும் தங்கம் மட்டுமே தனியே இருக்கின்றது. மாலை,காப்பு என்பது தோற்றங்களேதவிர யதார்த்தம் தங்கம்தான். இவ்வாறு அல்லாஹ் தனித்தவன் என்பதை தெளிவாக வலியுறுத்துகின்றது வஹ்ததுல் வுஜூத் இதே கருத்தையே توحيد தௌஹீத் என்பதும் அத்துவைதம் என்பதும் வலியுறுத்துகின்றது.

லா ஷரீகலஹூ : அவனுக்கு கூட்டு இல்லை, அவனுக்கு இணை இல்லை.

இரண்டு உள்ளமை இல்லாததால் கூட்டு இல்லை. இரண்டு வஸ்த்துக்கள் இருந்தால்தான் இணை ஏற்படும். ஒரு வஸ்த்து மாத்திரம் இருந்தால் இணை ஏற்பட முடியாது. அவனுக்குக் கூட்டாக சேர்வதற்கு இன்னொரு பொருள் இல்லாததால் அவனுக்கு இணை ஏற்படுவது அசாத்தியம். மனிதர்கள் தமது எண்ணங்களில் இணையை ஏற்படுத்துகின்றனர். இதனால் முஷ்ரிக்குகளாகின்றனர். யதார்த்தத்தில் அவனுக்கு எந்தவித இணையும் இல்லவே இல்லை.

‘இணையற்றவன் என்பதைக் குறிக்கவே ஸூபிகளால் அத்துவைதம் என்ற தமிழ்ச் சொல் பாவிக்கப்படுகின்றது. அத்துவைதம் என்பது இரண்டற்ற நிலை, இணையற்ற நிலையாகும்’ இதையே தௌஹீத் எனும் அறபுச் சொல்லும் வலியுறுத்துகின்றது. மொழிகளுக்கு ஏற்ப சொற்கள் மாறுபடுகின்றனவே
தவிர மையக் கருத்து மாறுபடவில்லை என்பது அறிஞர்களுக்கு மறைவானதல்ல.

(அத்துவைதம் தொடரும் ……….)

You may also like

Leave a Comment