அத்துவைதம் (தொடர்-05)

July 16, 2018

தொகுப்பு : மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ

*ஷிர்க் – இணை – கூட்டு*

ஷிர்க் என்பதன் பொருள் இணை அல்லது கூட்டு. ஒன்றைப்போல் இன்னொன்று இருப்பதை நாம் இணை என்று சொல்கின்றோம். அல்லாஹ்வுக்கு யதார்த்தத்தில் இணை இல்லை. மனிதன் தனது எண்ணத்திலேயே இணையை ஏற்படுத்துகின்றான். அல்லாஹ் தஆலாவுக்கு இணை இல்லை என்பதுவே இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை. அதுவே யதார்த்தமும்கூட. அல்லாஹ் தஆலாவைப்போல் இன்னொரு வஸ்த்துவுக்கு சுயமான உள்ளமை இல்லை. அவனது செயல்களைப்போல் எந்தவொரு வஸ்த்துவுக்கும் சுயமான செயல்கள் இல்லை. அவனது பண்புகளைப்போல் எந்தவொரு வஸ்த்துவுக்கும் சுயமான பண்புகள் இல்லை. அவன் மாத்திரமே இருப்பதால் உள்ளமையும் செயல்களும் பண்புகளும் அவனுக்கு மாத்திரமே இருக்கின்றன. எனவே அவனுக்கு இணை இல்லை. இணை என்பது யதார்த்தத்தில் அசாத்தியமானது. யதார்த்தமான உள்ளமையுடையவனே வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன். எனவே வணக்கமும் அவனுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما (النساء *48*

‘நிச்சயமாக அல்லாஹ் தஆலா தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத் தவிர அவன் நாடியவர்களுக்கு மற்ற எதையும் மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தைக் கற்பனை செய்கிறார்கள்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
(அன்னிஸா – 48)

அல்லாஹ்வுக்கு மட்டுமே வுஜூத் – உள்ளமை இருக்க அவன் அல்லாதவற்றுக்கு வுஜூத் – உள்ளமை இருப்பதாக நம்புவது அவனுக்கு மிக கோபத்தை ஏற்படுத்தும் விடயம். மன்னிக்க முடியாத குற்றம். இந்த குற்றத்தை அவன் மன்னிக்கமாட்டான். அது தவிரவுள்ள பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான். இணையற்ற, ஒப்பற்ற அவனுக்கு இணையாக அவனது வெளிப்பாடுகளான படைப்புகளுக்கு சுயமான வுஜூத் – உள்ளமை இருப்பதாக நம்பி இணை வைப்பது கற்பனையான விடயமேதவிர உண்மையல்ல. இதையே மேற்குறிப்பிட்ட திருமறை வசனத்தில் “பெரிய பாவத்தைக் கற்பனை செய்கிறார்கள்” என அல்லாஹ் தஆலா குறிப்பிடுகின்றான்.

இணை மூன்று வகை

01. ஷிர்க் ஜலீ – பகிரங்கமான இணை. அல்லாஹ்வை படைப்புகளில் கட்டுப்படுத்தி படைப்புகளை வணங்குதல் ஷிர்க் ஜலீ – பகிரங்கமான இணையாகும்.
சூரியன்,சந்திரன், விக்கிரகங்கள், தொழு உருவங்கள் போன்றவற்றை வணங்குவது வெளிப்படையான இணையாகும். கட்டுப்பாடற்ற பரிசுத்தமான அல்லாஹ்வை கட்டுப்பாடுடைய குறித்த சில படைப்புகளில் மட்டும் கட்டுப்படுத்தி வணங்குவது இந்த வகையில் அடங்குகின்றது.
படைப்புகளை வணங்குவதிலிருந்து முற்றாக நீங்கி லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் எனும் திருக்கலிமாவை உள்ளத்தால் ஏற்ற நிலையில் நாவினால் மொழிந்து கட்டுப்பாடற்ற அல்லாஹ்வை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி பொதுவாக வணங்குவதன் மூலமே இந்தப் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பான்.

02. ஷிர்க் கபீ – மறைவான இணை. வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கே வெளிப்படையில் செலுத்தினாலும் உள்ளத்தால் மனவெழுச்சிக்கும் உலக ஆசா பாசங்களுக்குக் கட்டுப்பட்டு நடத்தலும் செயல்கள் படைப்புகளிலிருந்து நடைபெறுவதாக நம்புதலும் ஷிர்க் கபீ – மறைவான இணையாகும்.
இறை கட்டளைகளுக்கு வழிப்பட வேண்டிய மனிதன் மனவெழுச்சிக்கு கட்டுப்பட்டு நடத்தல் ஷிர்க் கபீ – மறைவான இணை. எல்லாச் செயல்களும் யதார்த்தத்தில் அல்லாஹ்வில் இருந்தே நடைபெறும்போது படைப்புகளிலிருந்து செயல்கள் நடைபெறுவதாக நம்புதல் ஷிர்க் கபீ – மறைவான இணையாகும்.
கலப்பற்ற தூய எண்ணத்தை மனதில் ஏற்படுத்தி மனவெழுச்சிக்கு கட்டுப்படாமல் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்படுவதன் மூலமும், செயல்கள் யாவும் இறைவனுக்குரியனவே என்று ஒருமைப்படுத்துவதன் மூலமும் இந்தப் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பான்.

03. ஷிர்க் அக்பா – மிக மறைவான இணை. அல்லாஹ்வுக்கு வேறாக படைப்புகள் தனியான உள்ளமையுடன் இருக்கின்றன என்று நம்புவது ஷிர்க் அக்பா – மிக மறைவான இணையாகும். நான் என்று தனியாக ஒருவன் இருக்கின்றேன் (அன்னிய்யத்) என்று எண்ணுவதும், படைப்புகள் அல்லாஹ்வுக்கு வேறானவை (கைரிய்யத்) என நம்புவதும் இந்த வகையில் அடங்குகின்றது.

நானும் இல்லை. படைப்புகளும் இல்லை. அல்லாஹ் மட்டுமே இருக்கின்றான் என தன்னையும் படைப்புகளையும் விட்டு அழித்து (பனா) அல்லாஹ்வில் நிலைபெறுவதன் (பகா) மூலமே இந்தப் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கின்றான்.

வணக்க வழிபாடுகளிலும் எண்ணத்திலும் உள்ளமையிலும் ஒருமைப்படுத்துதல், ஏகத்துவம் செய்தல், அத்துவிதமாக்குதலே இந்த இணையை விட்டும் நீங்க சரியான வழியாகும்.

இணைவைப்பதன் பாதிப்புக்களை அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم (لقمان *13)*

‘இன்னும் லுக்மான் (அலைஹிஸ் ஸலாம்) தம்புதல்வருக்கு ‘என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்’ என்று நல்லுபதேசம் செய்து கூறியதை நினைவுபடுத்துவீராக.
(அல்குர்ஆன் : 31:13)

இத்திரு வசனத்தில் பொதுவாக ஷிர்க் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது வணக்க வழிபாடுகளில் இணைவைப்பதை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. பொதுவாக இணைவைப்பதைக் குறிக்கும் சொல். எனவே முற்றாக இணைவைப்பதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும் என்பதே இத் திருவசனத்தின் கருத்து.

ஒப்புவமையற்ற, நிகரற்ற அல்லாஹ்வுக்கு இணைவைப்பது உள்ளத்திற்கு செய்யும் அநீதி. பல படைப்புகள் இருப்பதாக நம்புவதும் இரண்டு உள்ளமைகள் இருப்பதாக நம்புவதும் இணை. அல்லாஹ் மட்டுமே இருக்க படைப்புகளும் இருப்பதாக பொய்யாக நம்புவது பெரும் அநீதி. இதையே அல்லாஹ் மேலுள்ள திருவசனத்தில் ‘இணைவைத்தல் மிகப் பெரும் அநியாயம்’ என்று குறிப்பிடுகின்றான்.

لا شريك له وبذلك امرت وأنا اول المسلمين (الانعام : *163)*

‘அவனுக்கு யாதோர் இணையுமில்லை. இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். அவனுக்கு (வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் நான் முதன்மையானவன்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
(அல்குர்ஆன் : 06:163)
அல்லாஹ் மட்டுமே இருக்கின்றான். அவன் அல்லாதவற்றுக்கு சுயமான உள்ளமை கிடையாது. அவன் மாத்திரமே இருப்பதால் அவனுக்கு நிகராக, ஒப்பாக இருப்பதற்கு எதுவுமில்லை. எனவே அவனுக்கு இணையில்லை. இணை ஏற்படுவது அசாத்தியமானது. அவனுக்கு இணை இருப்பதாக நம்புவது – அவன் அல்லாதவற்றுக்கு சுயமான உள்ளமை இருப்பதாக நம்புவது பொய்யான நம்பிக்கை. இல்லாததை கற்பனை செய்யும் நம்பிக்கை.

இதுவரை நான் எழுதிய விடயங்களிலிருந்து இணைவைத்தல் என்பது இரண்டு சுயமான உள்ளமைகள் இருப்பதாக நம்புவதையே பிரதானமாகக் கருதுகின்றது என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். இரண்டு சுயமான உள்ளமைகளை நம்புபவனே அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக படைப்புகளை வணங்குகிறான். இந்த வணக்கம் வெளிப்படையான இணையைக் காட்டுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் அவனது துவித நம்பிக்கையாகும். துவித நம்பிக்கை ஷிர்க் – இணையாகும். இரண்டு சுய உள்ளமைகள் இருப்பதாக நம்பியவன் முஷ்ரிக் – இணைவைத்தவனாவான். ஒரு சுயமான உள்ளமை மட்டுமே இருக்கின்றது. அதுதான் அல்லாஹ் என்ற வுஜூத். அவன் மாத்திரமே சகல செயல்களுக்கும் பண்புகளுக்கும் உரியவன் என்பதை நம்புவது தௌஹீத், ஏகத்துவம், அத்துவைதம் ஆகும். இதுவே இஸ்லாம் ஆகும். இவ்வாறு நம்பிய அத்துவைதியே முஃமின் – விசுவாசியாவான். இரண்டில்லை என்ற அத்துவைதமே இஸ்லாம். இரண்டுள்ளது என்ற துவைதம் ஷிர்க்.

எனவே அத்துவைதம் என்ற சொல்லைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் உண்மையான முஃமின்களை முர்தத் – மதம் மாறியவர்கள் என்று கூறுவதும் ‘அத்துவைதி’ என்று பழித்துரைப்பதும் இஸ்லாத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ளாதவர்களின் செயற்பாடுகளே தவிர உண்மை முஸ்லிம்களின் செயற்பாடுகள் அல்ல என்பதைப் புரிந்து நாம் செயற்பட வேண்டும்.

(அத்துவைதம் தொடரும் ……….)

You may also like

Leave a Comment