அத்வைத மெய்ஞ்ஞானம் மட்டுமே ஒற்றுமைக்கான ஒரே வழி

July 16, 2018

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே !

நம் நாட்டில் பல்வேறு சமயத்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களிடையே, பெரும்பாலும் தீய விளைவையே உண்டாக்கும் வேற்றுமை உணர்வுகளையும், ஒரு சமயத்தவரைப் பற்றி இன்னொரு சமயத்தவர் கூறிவருகின்ற எதிர்மறையான விமர்சனங்கள், கருத்துக்கள், காழ்ப்புணர்வுகளையெல்லாம் வேருடன் பிடுங்கி, களையெடுத்து, நாம் எல்லோரும் ஒரே தாய் தந்தையின் பிள்ளைகளாக, ஒருவருக்கொருவர் சொல்லாலும், செயலாலும் தொல்லைக்கொடுக்காமல் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்தால்தான், நம் நாட்டில் சம தர்ம சமுதாயம் அமையும் ! நம் நாடும் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடையும்.
நம் நாடும் நல்லரசாக நிச்சயம் மாறும் !

அதற்கு ஒரே சிறந்த வழி, ஆன்ம நேயம் என்னும் ஆன்மிகமே !இந்த ஆன்மிக ஞானமே இஸ்லாத்தில் ஸூஃபித்துவம் எனக் கூறப்படுகிறது !

இதன் அடிப்படையானது ஏகத்துவ ஞானம் எனும் அத்வைத மெய்ஞ்ஞானம் ! ஸூஃபி மஹான்கள் இதனை வஹ்ததுல் வுஜூத் . ஒரே உள்ளமை எனக்கூறுவர் .

அதாவது, எல்லாம் அவனே ! ஹமவோஸ்த் ! What exist is One ! உள்ளது ஒன்றே ! மற்றது அன்றே ! (இல்லவே இல்லை ) !

இதன் அர்த்தம் எந்தவொன்று அனைத்திற்கும் ஆதி மூலமாக உண்மையில் உள்ளமையாக உள்ளதோ அதுவே எங்குமாய் எங்கும் நீக்கமற நிறைந்த எல்லாம் வல்ல அனைத்தையும் அறிந்த ஆண்டவன் ! அது ஒன்றே. அந்த முழுமுதற் கடவுளே பிரஹ்ம்மம் என்றும் ஷிவம் என்றும் அரபியில் அல்லாஹ் என்றும் ஹிப்ரு என்னும் யூத மொழியில் ஜெஹோவா என்றும் ஜீசஸ் கிருஸ்து பேசிய அராமிக் மொழியில் எலேய்யா என்றும் சீன மொழியில் டாவோ என்றும் பல்வேறு விதமாக அழைக்கப்படுகிறது !

இப்போது சூஃபித்துவ அடிப்படையில் மஹா சக்திவாய்ந்த மந்திரமாகிய திருக்கலிமாவின் தாற்பரியத்தை தத்துவார்த்தை தெரிந்துக்கொள்வோம் !

அன்பர்களே ! இப்போது கலிமாவின் யதார்த்த கருத்தைப் பாருங்கள் ! லா இலாஹ இல்லல்லாஹ் என்பதில் லா இலாஹ……… என்றால் நாமும்,இந்த பூமியும், இதிலுள்ளவைகளும், வானம், அதிலுள்ள சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் அனைத்தும், அணுவிலிருந்து அண்டசராசரங்கள் வரை, எதுவுமே உண்மையில் இல்லவே இல்லை !

எல்லையற்ற வெட்டவெளியே உள்ளது என நம் அறிவில் கொள்ளவேண்டும்! இதனை ஆங்கிலத்தில் ப்லெனம், The Plenum எனக் கூறுவர் ! அரபியில் அமா, عما எனவும் கூறுவர் ! மெய்பொருளுக்கு அரபி மொழியில் حق ஹக் என்று சொல்லப்படும் ! இந்த வெட்டவெளி நிலையே, அல்லாஹ்வின் அருவ நிலை ! இதனை, தன்ஸீஹ் என்பர் !

அடுத்து, இல்லல்லாஹ்…….. அல்லாஹ்வைத் தவிர……. என்று சொல்லும்போது இருப்பது அனைத்தும் நான், நாங்கள், நீ, நீங்கள், அவன், அவள், அவர்கள், இவன், இவள், இவர்கள், அது, அவைகள், இது, இவைகள் மற்றும் நம் புலன்கள், அவைகளால் பார்க்கப்படுபவைகள், கேட்கப்படுபவைகள், நுகரப்படுபவைகள் சுவைக்கப்படுபவைகள் மற்றும் புலன்களுக்கு அப்பாற்பட்டவைகள் ஆக, அனைத்து சிருட்டிகளும் இறைவனின் தோற்றங்களே ! என்று அனைத்துமாகிய ஏகனின் உருவங்களாக அறிதல் ! இதுவே இறைவனின் உருவ நிலை ! இதனை, தஷ்பீஹ் என்று கூறுவர் ! இந்த இரண்டும் சேர்ந்த எல்லையற்ற இப்பிரபஞ்சத்தை (The Infinity of the Universe in total ) இறையின் அருவுரு நிலை என்பர் ! இதனை, தன்ஸீஹ் மஹ்ழ் تنزيه محض) ) என்பர் ! இதுவே, திருக்கலிமாவின் முழுமையான தத்துவார்த்தம் ! The real spirit of Kalima!

எனவே, அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே ! நண்பர்களே ! எவ்வாறு, கரும்பை அதன் சாற்றிற்காக விரும்புவோமோ ! அதே போன்று, திருக்கலிமாவின் சாறான, சத்தான ஆன்மிக ஞானாமிர்தத்தை அருந்துவோம் ! அத்வைத ஏகாந்த போதையில் இலயித்திருப்போம் குர்ஆன், ஹதீஸ், ஸூஃபி மஹான்களின் கருத்துக்கள், பாடல்கள் ஆன்மிக அறிஞர்களின் உபன்யாஷங்கள், சொற்பொழிவுகள் நூல் வடிவங்களிலும், ஆடியோ, வீடியோ C.D. க்கள் மூலமாகவும் இன்று பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் கிடைக்கின்றன !

தயவு கூர்ந்து அவைகளை வாங்கி படியுங்கள் ! காதுகுளிர கேளுங்கள் ! பாருங்கள் ! அவைகளையெல்லாம் உள்வாங்கி உணர முயற்சி செய்யுங்கள் ! வீண் விவாதங்களை தவிருங்கள் ! நேரடியாக, ஆன்மிகவாதிகளின் சத்சங்கங்களில் சேருங்கள் ! ஆன்மிக சாதகப் பயிற்சிகளை கசடறக் கற்று அதன்படி செயல்படுங்கள் ! ஈருல வாழ்விலும் ஈடேற்றம் அடையுங்கள் !

இறையன்புடன்
மௌலவீ ஸஹ்லான் றப்பானீ மற்றும் அமீருத்தீன்(மஹானந்தன் )

You may also like

Leave a Comment