அல் ஆரிபு பில்லாஹ் அல்குத்புஷ் ஷெய்கு அஹ்மதுல் கபீர் அர் றிபாஈ றழியல்லாஹு அன்ஹு

January 15, 2019
ஆக்கம் – மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ
———————————–

அவர்கள் சிறப்பு மிக்க “ஸெய்யித்” உம், இஸ்லாத்தின் பால் நேர்வழி காட்டக் கூடியவர்களும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருக் கரத்தை முத்தமிட்ட பெருமைக்குரியவர்களுமான அபுல் அப்பாஸ் அஹ்மத் அர் றிபாஈ அல் கபீர் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள.

அன்னவர்களின் சங்கைமிகு வமிசத் தொடர் ஸெய்யிதுனா ஹுஸைன் ஷஹீதே கல்பலா றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களைப் பின்வருமாறு சென்றடைகின்றது.

இப்னுஸ் ஸெய்யித் அஸ் ஸுல்தான் அலீ அபில் ஹஸன் தபீனு பக்தாத், இப்னுஸ் ஸெய்யித் யஹ்யா அல் மக்ரிபீ, இப்னுஸ் ஸெய்யித் தாபித். இப்னுஸ் ஸெய்யித் அல் ஹாஸிம் (அலீ அபுல் பவாரிஸ்) , இப்னுஸ் ஸெய்யித் அஹ்மத், இப்னுஸ் ஸெய்யித் அலீ இப்னுல் ஹஸன், இப்னுஸ் ஸெய்யித் அபில் மகாரிம் றிபாஅதல் ஹஸன் அல் மக்கீ, இப்னுஸ் ஸெய்யித் அல் மஹ்தீ, இப்னுஸ் ஸெய்யித் அபில் முஹம்மத் அபில் காஸிம், இப்னுஸ் ஸெய்யித் அல் ஹஸன், இப்னுஸ் ஸெய்யித் அல் ஹுஸைன், இப்னுஸ் ஸெய்யித் மூஸா அத் தானீ, இப்னுல் இமாம் இப்றாஹீம் அல் முர்தழா, இப்னுல் இமாம் மூஸல் காழிம், இப்னுல் இமாம் ஜஃபர் அஸ் ஸாதிக், இப்னுல் இமாம் முஹம்மத் அல் பாகர், இப்னுல் இமாம் ஸைனுல் ஆபிதீன், இப்னுல் இமாம் அஷ் ஷஹீதுல் மழ்லூம் அல் ஹுஸைன் அஸ் ஸிப்த், இப்னுல் இமாம் அலமில் இஸ்லாம் ஸவ்ஜில் பதூல் உம்மில் ஹஸனைன் அலைஹஸ் ஸலாம் ஸெய்யிதினா அலீ கர்றமல்லாஹு வஜ்ஹஹூ வறழிய அன்ஹு.

தரீகத் மற்றும் ஹகீகத் உடைய ஷெய்காகிய அல்குத்புல் கௌத் ஸெய்யிதுனா அஹ்மதுல் கபீர் அர்றிபாஈ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் தரீகத்தின் அனுமதியை அலீ அல் வாஸிதீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடமிருந்து பெற்றார்கள். அவர்கள் அஷ் ஷெய்கு அபூ பக்ர் அஷ் ஷிப்லீ அவர்களிடமிருந்தும், அவர்கள் அபுல் காஸிம் ஜுனைதுல் பக்தாதீ அவர்களிடமிருந்தும், அவர்கள் தன்னுடைய மாமா ஸரிய்யுஸ் ஸகதீ அவர்களிடமிருந்தும், அவர்கள் இமாம் மஃறூபுல் கர்கீ அவர்களிடமிருந்தும், அவர்கள் ஹபீபுல் அஜமீ அவர்களிடமிருந்தும், அவர்கள் ஹஸனுல் பஸரீ அவர்களிடமிருந்தும், அவர்கள் ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹும் அவர்களிடமிருந்தும் பெற்றார்கள்.

அதேபோல் இமாம் அஹ்மத் அல் கபீர் அர்றிபாஈ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் தரீகத்தின் அனுமதியை வேறு ஒரு வழியிலிருந்தும் பெற்றுள்ளார்கள். தன்னுடைய மாமா அஷ் ஷெய்கு மன்ஸூர் அல் பதாஇஹீ அவர்களிடமிருந்தாகும். அது (தரீகஹ்) இமாம் ஜீனைதுல் பக்தாதீ ஊடாக அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சென்றடையும்.

அஹ்மத் றிபாஈ நாயகம் அன்னவர்கள் இறாக் நாட்டின் “பதாஇஹ்” என்ற இடத்தில் “ஹஸன்” என்ற கிராமத்தில் ஹிஜ்ரீ 512 ல் பிறந்தார்கள். அல் குர்ஆனையும், ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான மார்க்கச் சட்டங்களையும் கற்றார்கள். “அத்தன்பீஹ்” என்ற நூலை மனனமிட்டு அதற்கு ஒரு பெரும் விரிவுரையே எழுதினார்கள். “ஷாபிஈ” மத்ஹபின் சட்ட வல்லுனராகவும், “ஆலிமே றப்பானீ” அல்லாஹ்வை அறிந்த மார்க்க அறிஞனாகவும் ஆனார்கள். தன்னுடைய குருமார்களே தன்னளவில் திரும்பும் அளவு அல்லாஹ்வுக்கு வழிப்பட்டார்கள். அல்லாஹ் அவர்கள் மீது சொரிந்த அதிக அறிவுகளின் காரணத்தால் “அபுல் இல்மைன்” இரு அறிவுகளின் தந்தை என்று பட்டம் சூட்டப்பட்டார்கள். (வெளிரங்க மற்றும் உள்ரங்க அறிவுகளின் தந்தை). எந்தளவு என்றால் அவர்களின் குருமார்களின் காலத்திலேயே இவர்களின் வலுப்பம் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களின் மாமா அஷ் ஷெய்கு மன்ஸூர் அவர்கள் ஷெய்குமார்களின் தலைமைத்துவத்தை அவர்களுக்கு வழங்கினார்கள். பின்பு அவர்களை உம்மு அபீதாவிலேயே இருக்கும் படி ஏவினார்கள்.

இமாம் அஹ்மத் அர் றிபாஈ நாயகம் அன்னவர்களை அஷ் ஷெய்கு அபூ ஷுஜாஃ அஷ் ஷாபிஈ போன்ற பெரும் இமாம்கள் எல்லாம் “நிகரற்ற பெரும் ஆரிப், ஆலிம், பெரும் மலை” என்றெல்லாம் புகழ்ந்திருக்கின்றார்கள்.

இமாம் அஹ்மத் அர் றிபாஈ நாயகம் “யதீம்”களின் (அநாதைகளின்) தந்தையாகவும், ஏழைகளை அரவணைக்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். அநாதைகளைப் பொறுப்பேற்று அவர்களை வளர்ப்பவர்களாகவும், ஏழைகளுடன் நெருங்கிப் பழகக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். விதவைகளுக்கு கேட்காமலேயே அள்ளி வழங்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறு அநாதைகள், ஏழைகள், விதவைகளுக்கு அன்பு காட்டக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

ஏழைகள் மீது அன்பு காட்டுதல் அல்லாஹ் அளவில் நெருக்கி வைக்கக் கூடிய நல்லமல்களில் நின்றுமுள்ளது என்று சொல்வார்கள்.

நான் அழக் கூடிய ஒரு அநாதையைக் கண்டால் என் உறுப்புகள் அனைத்தும் நடுங்குகின்றன என்று சொல்வார்கள்.

நிரந்தர நோயளிகளிடம் சென்று அவர்களின் உடுப்புக்களைக் கழுவி, உணவூட்டி அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு அவர்களுடன் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு ஆரோக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள். அவர்களிடம் தனக்காக பிரார்த்திக்குமாறும் வேண்டுவார்கள்.

அதேபோன்று நஸாறாக்களைச் சார்ந்த கண் தெரியாத, விதவைகள், இயலாதவர்களுக்கும் உதவி புரிவார்கள். இவர்களின் இந் நற் பன்புகளைப் பார்த்து அவர்களில் ஒரு கூட்டமே இவர்களிடம் இஸ்லாம் மார்க்கத்தை தழுவியுள்ளார்கள்.

இந்த விடயத்தில் “அல்லாஹ்வின் அடியார்களுக்கு இரக்கம் காட்டுவதன் மூலம் அடைய வேண்டியதை நாம் அடைந்து கொண்டோம்” என்று கூறினார்கள்.

அவர்களின் அற்புதங்கள் அதிகமானவை உள்ளன. விரிவை அஞ்சி பிரபல்யமான அவர்களின் அற்புதம் ஒன்றை மட்டும் இங்கு எழுதுகின்றோம். இமாம் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் பதிவு செய்துள்ள றிபாஈ நாயகம் அன்னவர்களின் “பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருக் கரத்தை முத்தமிட்டதும், அவர்களின் புனித குரலை அவர்கள் கேட்டதும்” என்ற அற்புதமாகும்.

“ஹிஜ்ரீ 555ம் ஆண்டு இமாம் அஹ்மத் அல் கபீர் அர் றிபாஈ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் புனித ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றிவிட்டு, மன்னர் இறஸூல் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித மதீனஹ் நகர் வந்து, பெருமானார் அன்னவர்களின் புனித றவ்ழஹ் ஷரீபஹ் முன் நின்று என்னுடைய பாட்டனாரே! உங்கள் மீது என் ஸலாம்! என்றதும், உடனே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என் மகனே! பேரரே! உங்கள் மீதும் ஸலாம் உண்டாவதாக! என்று பதிலளித்தார்கள். அந்த புனித மிக்க பெருமானாரின் குரலை – பதிலை அங்கு கூடியிருந்த அனைவரும் காதால் கேட்டார்கள். பதிலைக் கேட்ட றிபாஈ நாயகம் அன்னவர்களின் உடல் மஞ்சலாகி, நடுங்கி முட்டுக்காலில் நின்றார்கள். நீண்ட நேரம் அழுது பின் பின்வரும் பாடலைப் பாடியனார்கள்.
في حالة البعد روحي كنت أُرسلها تقبل الأرض عني وهي نائبتي
وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينَك كي تحظى بها شفتي

“நான் தொலைவில் இருந்த போது என் உயிரை அனுப்பினேன். அது இப்புனித பூமியை எனது பிரதிநிதியாக முத்தமிட்டது. இப்போது நான் உடலுடன் வந்திருக்கின்றேன் உங்களின் வலக்கரத்தை நீட்டுங்கள் பாட்டனாரே! நான் முத்தமிடப் போகின்றேன்”

உடனே றஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன்னுடைய மணமான, முபாறக்கான திருக்கரத்தை தன்னுடைய புனித கப்ரு ஷரீபில் இருந்தவாறே நீட்டினார்கள். அதை றிபாஈ நாயகம் முத்தமிட்டு தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்கள். இச் சம்பவத்தை அங்கு கூடியிருந்த கிட்டத்தட்ட தொன்னூராயிரம் பேர் கண்டார்கள். அவர்களில் அஷ் ஷெய்கு அல் ஹுஜாஜ், அஷ் ஷெய்கு ஹயாத் இப்னு கைஸ், அஷ் ஷெய்கு அப்துல் காதிர் அல் ஜீலானீ, அஷ் ஷெய்கு கமீஸ், அஷ் ஷெய்கு அதிய் இப்னு முஸாபிர் அஷ் ஷாமீ றழியல்லாஹு அன்ஹும் போன்ற பெரியார்களும் இருந்தனர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மாதத்தின் கதாநாயகர் சுல்தானுல் ஆரிபீன் செய்யிதுனா அஹ்மதுல் கபீர் அர் றிபாஈ நாயகத்தின் பொருட்டால் பெருமானாரின் திருக்கரத்தையும், திரு முகத்தையும் பார்க்கும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக!

You may also like

Leave a Comment