அல் இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

January 23, 2018
————————————————————————————-
சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் எழுதிய “அல் கனாபிலுல் மஸ்மூமதுல் மர்மிய்யா அலா அஃதாயில் வஹ்ததி வல் ஐனிய்யா” நூலின் தமிழாக்கம்
————————————————————————————–

அவர்களின் இயற் பெயர் முஹம்மத் ஆகும். அபூ ஹாமித் என்பது புனைப் பெயராகும். (அல் கஸ்ஸாலீ அத்தூஸீ, அந் நைஸாபூரீ, அஸ் ஸூபீ, அஷ் ஷாபிஈ அல் அஷ்அரீ) அவர்கள் தங்களின் காலத்தில் (ஹிஜ்ரீ 450 – 505 , ஆங்கில வருடம் 1058 – 1111) வாழ்ந்த பிரபல்யமான அறிஞர்களில் ஒருவராகும்.

அவர்கள் ஒரு சட்டக்கலை வல்லுநராகவும், அடிப்படைவாதியாகவும், தத்துவஞானியாகவும் காணப்பட்டார்கள். மேலும் ஞான வழியில் ஸூபீயாகவும், மத்ஹபுகளில் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றுபவராகவும் காணப்பட்டார்கள். அந் நேரம் ஷாபிஈ மத்ஹபில் இவர்கள் போன்ற திறமை மிக்க எவரும் இருக்கவில்லை. அகீதாவில் அஷ்அரிய்யாக்களைப் பின்பற்று பவராகவும் இருந்தார்கள்.

இமாம் கஸ்ஸாலீ அவர்கள் தன்னுடைய காலத்திலேயே பல பெயர்களைக் கொண்டு பட்டம் சூட்டப் பட்டவர்களாக இருந்தார்கள். அவற்றில் மிகப் பிரபல்யமானது “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” என்பதாகும். மேலும் அவர்களுக்கு “ஸைனுத்தீன்” “மஹஜ்ஜதுத் தீன்” “அல் ஆலிமுல் அவ்ஹத்” “முப்தில் உம்மஹ்” “பறகதுல் அனாம்” “இமாமு அஇம்மதித் தீன்” “ஷறபுல் உம்மஹ்” போன்ற பெயர்களும் உண்டு.

இமாம் கஸ்ஸாலீ அவர்கள் தன்னுடைய ஸூபித்துவ நூல்களை (குறிப்பாக இஹ்யாஉ உலூமித்தீன்) “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை உள்ளடக்கியதாகவே ஆக்கியுள்ளார்கள். அதன் விபரங்கள் பின்னால் வரும்.

இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். ஏகத்துவத்திற்கு நான்கு படித்தரங்கள் உள்ளன. மூன்றைக் கூறிவிட்டு பின்பு கூறினார்கள். நான்காவதாகிறது உள்ளமையில் ஒன்றையே பார்ப்பான். அது “ஸித்தீகீன்களின்” காட்சி நிலையாகும். அதை ஸூபீகள் “அல் பனாஉ பித் தௌஹீத்” ஏகத்துவத்தில் அழிதல் என்று கூறுவார்கள். ஏனெனில் உள்ளமையில் ஒன்றையே பார்ப்பது கொண்டு அவன் தன்னையும் காண மாட்டான். ஏகத்துவத்தில் மூழ்கியிருப்பது கொண்டு தன்னையே காணவில்லையானால் அவன் தன்னை விட்டும் (நான் என்பதை விட்டும்) ஏகத்துவத்தில் அழிந்தவனாக ஆகிவிட்டான். அதாவது தன்னையும் ஏனையவற்றையும் காணாமல் “பனா” ஆகிவிடுவான்.

மேலும் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். உள்ளமையில் (உறுதியாக) அல்லாஹ்வையும், அவனது செயல்களையும் தவிர வேறு இல்லை.

ஹகீகதுல் ஹகாயிக் எனும் தலைப்பின் கீழ் தன்னுடைய மிஷ்காதுல் அன்வார் எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள். இந்த இடத்திலிருந்துதான் ஆரிபீன்களாகிய ஞானிகள் ஏற்படுத்தப்பட்டதின் (மஜாஸ் – ஒரு பொருள் மற்றொண்டாக குறிக்கப்படும் ஓர் உருவணி) அடியிலிருந்து எதார்த்தத்தின் உச்சிக்கு ஏறுகின்றார்கள். தங்களின் விண்ணுலக யாத்திரையை சம்பூரணப்படுத்திக் கொள்கின்றார்கள். அல்லாஹு தஆலா தவிர வேறொன்று இல்லை என்று நேரடிக் காட்சி மூலம் காணுகின்றார்கள். அவனைத் தவிர உள்ள அனைத்தும் அழிந்தவை, இல்லாதவை என்று காணுகின்றார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அது அழியும் என்பதல்ல. மாறாக அது (படைப்பு) நிரந்தரமாக அழிந்த, இல்லாத ஒன்றாகும். அது வெறும் கற்பனை மாத்திரமே. ஏனெனில் அனைத்து வஸ்த்துக்களும் அதன் அதனுடைய “தாத்” உள்ளமையை எடுத்துப் பார்த்தால் அது கலப்பற்ற “அதம்” இல்லாமையாகும். ஆரம்பத்திலிருந்து “வுஜூத்” உள்ளமை பொருந்தக்கூடிய வகையில் எடுத்துப் பார்த்தால் ஹக் தஆலா தான் சிருட்டியாக தெரிகிறான். உண்மையில் சிருட்டி என்று ஒன்று இல்லை. ஆனால் அதை உண்டாக்கியவனை வைத்துப் பார்க்கும் போது இருப்பது அவன் மாத்திரமே!
(மிஷ்காதுல் அன்வார், இமாம் கஸ்ஸாலீ, பக்கம்: 69)

இந்த ஞானம் உண்மையில் சரியான, ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். ஆனால் இதை வெளிப்படுத்துவது தான் கூடாது என்று உங்களில் எவராவது கூறினல் அவரின் வாதம் தவறானதாகும். ஏனெனில் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு வாதிப்பவரை விட பன்மடங்கு சிறந்த அறிவாளியாகும். அவர்கள் தன்னுடைய நூற்களில் இத் தத்துவத்தை எழுதியிருப்பது அதை வெளிப்படுத்தலாம் என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.

பின் அவர்களின் பிரச்சினைகள், தடுமாற்றம் எல்லாம் ஸூபிய்யாக்களின் வழியை மேம்படுத்துவது கொண்டும், அது அல்லாததை விடுவது கொண்டும் இல்லாமலாகிவிட்டன. பின்பு இந்த அறிவுகளிலிருந்து ஓய்வு பெற்று ஸூபிய்யாக்களின் வழியை நோக்கி உண்மையான எண்ணத்துடன் சென்றார்கள்.

இமாம் கஸ்ஸாலீ அவர்கள் ஸூபிய்யாக்களின் நூல்களை மீட்டிப் பார்ப்பதன் மூலம் அவர்களின் அறிவுகளை உண்டாக்கிக் கொண்டார்கள். அபூ தாலிபுல் அல் மக்கீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “கூதுல் குலூப்” என்ற நூல், மற்றும் ஸூபிஸத்தின் குருமார்களின் பேச்சுக்கள் போன்று. (அபூ யஸீத் அல் பிஸ்தாமீ, ஜுனைதுல் பக்தாதீ, இமாம் ஹல்லாஜ், இமாம் ஷிப்லீ றஹிமஹுமுல்லாஹ் இன்னுமிவர்கள் போன்றோர்கள்)

இவ்வாறு நூற்களை மாத்திரம் படிப்பதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த அறிவுகள் தனக்கு போதாது என்று எண்ணிய அவர்கள், ஸூபிஸ ஞானத்தை (வஹ்ததுல் வுஜூதை) அனுபவ ரீதியாக பெற்றுக் கொள்ள முயற்சித்தார்கள்.

எனவே பக்தாத் நகரிலிருந்து வெளியாகி புனித மக்கஹ், சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் மற்றும் பைதுல் மக்திஸ் ஆகியவற்றுக்கிடையே பதவி, பட்டம், பொருளாதாரம் ஆகியவற்றை துறந்து தனிமையை (கல்வத்) அவசியமாக்கிக்கொண்டு சுற்றித் திரிந்தார்கள்.

அவர்களின் மாணவர் அபூ பக்ர் இப்னுல் அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். நான் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களை ஸூபிய்யாக்களின் ஆடை அணிந்தவராக வனாந்தரப் பகுதிகளில் கண்டேன். அவர்களின் தோல்புயத்தில் தோலினால் ஆன ஒரு நீர் அருந்தும் பாத்திரமும் இருக்கக் கண்டேன். அதேபோன்று பக்தாதில் அவர்களின் சபையில் 400 தலைப்பாகை அணிந்த பெரியவர்கள் அவர்களிடமிருந்து அறிவு கற்பதையும் கண்டுள்ளேன்.

இவ்வாறு சுற்றியும் “கல்வத்” தனித்திருந்தும், நப்ஸுடன் போராடியும் பத்து வருடங்களின் பின் மீண்டும் தூஸ் நகர் நோக்கி வந்து தன்னுடைய வீட்டுக்கு அருகில் ஒரு “புகஹாஉ” சட்டக் கலை வல்லுநர்களுக்கு ஒரு கல்லூரியையும், ஸூபிய்யாக்களுக்கு ஒரு தளத்தையும் கட்டினார்கள்.

தன்னுடைய இறுதி காலத்தில் தான் மரணிக்கும் வரை (ஹிஜ்ரீ 505) ஹதீதுகளைத் தேடிப்படித்து, “முஹத்திதீன்” களுடன் அமர்வதையும் ஆக்கிக் கொண்டார்கள்.

இமாம் கஸ்ஸாலீ அவர்களுக்கு ஸூபித்துவம், சட்டக்கலை, “உஸூல்” அடிப்படை, தர்க்கவியல், “இல்முல் கலாம்” கொள்கையறிவு, தத்துவ வாதிகளுக்கு மறுப்பு, இன்னும் இது போன்றவற்றில் அதிகமான நூற்கள் உள்ளன.

அவர்கள் ஸூபிஸ வழியில் சென்ற பிறகு கோர்வை செய்த நூற்கள்:

01. இஹ்யாஉ உலூமித்தீன்
02. அல் முன்கிது மினள்ளலால்
03. அல் மள்னூனு பிஹீ அலா ஙைரி அஹ்லிஹ்
04. அல் மள்னூனு பிஹீ அலா அஹ்லிஹ்
05. மிஷ்காதுல் அன்வார்
06. அல் மக்ஸதுல் அஸ்னா பீ ஷர்ஹி அஸ்மாஇல்லாஹில்
ஹுஸ்னா

(தொடரும்)

You may also like

Leave a Comment