இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

February 12, 2018

அவர்களின் இயற் பெயர் அப்துல் ஹக் என்பதாகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவரின் தந்தை முஹம்மத் என்பவருமாகும். ஸ்பெய்ன் நாட்டின் றிகோட் (Ricote) நகரைச் சேர்ந்தவர்கள். ஹிஜ்ரீ 613 அல்லது 614ல் பிறந்தார்கள்.

ஸ்பெய்ன் நாட்டில் வளர்ந்த அவர்கள் அங்கேயே தனது ஆரம்பக் கல்வியை – ஷரீஅத் மற்றும் அறபு – கற்றார்கள். தத்துவம் (philosophy), தர்க்கவியல் மற்றும் சூனியக் கலைகளை ஆழமாகக் கற்றிருந்த அவர்கள் உந்துலுஸ் நகரில் இருந்த பெரும் ஸூபிய்யாக்களிடம் சென்று அவ்வழியே (ஸூபிஸம்) சென்றார்கள்.

ஹிஜ்ரீ 640ல் ஸ்பெய்ன் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களும், அவர்களின் சில சீடர்களும் அங்கிருந்து வெளியாகி “மொரோக்கோ” நாட்டுக்கு வந்தார்கள். அவர்களின் அநேக நூல்களை “மொரோக்கோ”விலேயே கோர்வை செய்தது போன்று, அங்கேயே “ஸூபிஸ” நூல்களைப் படித்து, அவைகளைக் கற்றுக் கொடுக்கும் வேலையிலும் ஈடுபட்டார்கள். “மொரோக்கோ” நாட்டின் பல பாகங்களுக்கும் தன்னுடைய “ஸப்ஈனிய்யஹ்” தரீகஹ்வை பரப்புவதற்காகச் சென்றார்கள். அவர்களின் வழி பரவியபோது “வஹ்ததுல் வுஜூத்” தெரியாத உலமாஉகள் அவர்களை எதிர்த்தார்கள். அவர்களுக்கு “ஸிந்தீக்” பட்டம் வழங்கி அங்கிருந்தும் வெளியேற்றினார்கள்.

இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் தான் குடியேறுவதற்காக, அங்கே தனது அழைப்புப் பணியை மேற்கொள்வதற்காக ஒரு நாட்டை யோசித்து “மிஸ்ர்” நாட்டை வந்தடைகின்றார்கள். இதை கேள்வியுற்ற “மொரோக்கோ” வாசிகள், இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களின் கொள்கையை விளங்கப்படுத்தி “மிஸ்ர்” நாட்டு மக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு தூதரை அனுப்புகின்றார்கள். “மிஸ்ர்” வாசிகளிடமிருந்து எந்த வரவேற்பும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவர்களில் (“மிஸ்ர்” வாசிகளில்) சில உலமாஉகள் இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களை மறுத்து, அவர்களின் கொள்கையை இல்லாமலாக்கி, அவர்களை விட்டும் மக்களை திசை திருப்பவுதில் ஈடுபட்டனர். எனவே இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் அங்கிருந்தும் வெளியாகி திரு “மக்கஹ்” வந்தடைந்தார்கள்.

இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 652 தொடக்கம் தான் “வபாத்” ஆகும் வரை திரு மக்கஹ் நகரிலேயே இருந்தார்கள்.

இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் தன்னுடைய “வஹ்ததுல் வுஜூத்” வழிக்கு மக்களை அழைக்கும் பணியில் தீவிரமாக இருந்தார்கள்.

பின்பு திரு மக்கஹ் நகரில் இருந்த உலமாஉகள் அவர்களின் ஸூபிஸ வழியை மறுத்து, மக்களை எச்சரிக்கவும் செய்தார்கள். அதன் காரணத்தால் (இஸ்லாமிய பூமி தனக்கு இடமளிக்காது என்றெண்ணி) அங்கிருந்தும் வெளியாகி இந்தியா செல்ல எண்ணினார்கள். ஆனால் அவர்கள் இந்தியா செல்லாமலேயே தன்னுடைய வாழ்வை முடித்துக் கொண்டார்கள். வரலாற்றாசிரியர்கள் ஒரு கூட்டம் அவர்கள் திரு மக்கஹ் நகரில் கொலை செய்யப்பட்டு மரணித்ததாக கூறுகின்றார்கள். இது ஹிஜ்ரீ 669 ல் நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது.
(அல் பிதாயஹ் வந் நிஹாயஹ் 13 -261, லிஸானுல் அறப் 2-392, அத் தபகாதுல் குப்றா 1-203, அல் மல்ஸூஅதுஸ் ஸூபிய்யஹ் 197, இப்னு ஸப்ஈன் வபல்ஸபதுஸ் ஸூபிய்யஹ்)

இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் அதிக எண்ணிக்கையிலான நூல்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

01. பத்துல் ஆரிப்
02. அல் மஸாயிலுஸ் ஸக்லிய்யஹ்
03. அல் இஹாதஹ்
04. அல் அல்வாஹ்
05. அத் தவஜ்ஜுஹ்
06. அர் றிஸாலதுன் நூரிய்யஹ்.

இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நம்பியவர்களும், தனது வழியை சுருக்கமாகப் பின்வரும் வார்த்தை மூலம் கூறியுள்ளார்கள். அதுவாகின்றது, “அல்லாஹ் மாத்திரமே உள்ளான். அனைத்துக்கும் அடிப்படையான, சம்பூரணமானவன் அவனே! எல்லாம் அவனே!” என்பதாகும்.
(றஸாயில் இப்னு ஸப்ஈன், பக்கம் 192 )

இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களிடம் உள்ளமையில் அல்லாஹ் தவிர வேறொன்று இல்லை. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அவனே என்பதுமாகும்.

இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் உண்மையான “வுஜூத்” இற்கும், பேதமையான “வுஜூத்” இற்குமிடையில் பாகுபாட்டை உறுதி கொண்டார்கள்.
(ஹறகதுத் தஸவ்வுபுல் இஸ்லாமீ – முஹம்மத் ஷறப், பக்கம் – 659)

மேலும் மெய்ப்பொருள் ஒன்றே என்றும் அது தவிரவுள்ளவை பேதமை என்றும் கூறுகின்றார்கள்.
(றிஸாலதுப்னி ஸப்ஈன், பக்கம் – 276 )

இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களிடம் அல்லாஹ்வின் திரு நாமமாகிய “ளாஹிர்” வெளியானவன் என்பது “நிச்சயமாக பிரபஞ்சத்தின் அனைத்து வெளிப்பாடுகளும் அல்லாஹ் தானானதே! மேலும் கூறுகின்றார்கள். வெளியான ஒவ்வொன்றும் அவன் தானானதே! அதனாலேதான் தனக்கு “ளாஹிர்” வெளியானவன் என்று பெயர் வைக்கத் தகுதியானான் என்று கூறுகின்றார்கள்.
(றிஸாலதுப்னி ஸப்ஈன், பக்கம் – 190 )

பாமரர்கள் – பேதமமை கொண்டு பார்க்கக் கூடியவர்கள் – அல்லாஹ் சகல வஸ்த்துக்களையும் படைத்தவன் என நம்புகின்றார்கள். அதே நேரம் அனைத்து வஸ்த்துக்களும் அவனுடைய “குத்றத்” சக்தியின் பிரதிபலிப்பு என்றும் நம்புகின்றார்கள். ஆனால் உலமாஉகள் அதாவது இப்னு ஸப்ஈன் மற்றும் அவர்கள் போன்றவர்கள் படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ் தான் என்று நம்புகின்றார்கள். அல்லது அவர்கள் கூறுவது போன்று “படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வைக் கொண்டு பேதமையில் காட்சியளிக்கின்றன. எதார்த்தத்தில் அவை அல்லாஹ்வேதான்”.
(றஸாயில் இப்னு ஸப்ஈன், பக்கம் – 136 )

இக்கருத்தை இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு உறுதி செய்கின்றார்கள். “அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களிலும் முழுமையாக உள்ளான். அவன் சிலவற்றில் முழுமையாகவும், சிலவற்றில் கொஞ்சமாகவும் இருக்கின்றான் என்பதல்ல. ஒரே நேரத்தில் “ஷைஉன்” வஸ்த்துவாகவும், வஸ்த்துக்களல்லாமலும் இருக்கின்றான்.நீ காணக் கூடிய அனைத்தும் இன்னொன்றால் பார்க்க முடியாத “தாத்”. அத்தகைய “தாத்” ஐயே நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாய்.
(றஸாயில் இப்னி ஸப்ஈன், பக்கம் 196) அதாவது எம்மை விட்டும் மறைந்துள்ள, வெளிக் கண்களால் இவ்வுலகில் பார்க்க முடியாத அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையாகின்றது அதுவே புலன்களால் உணரப்படக் கூடிய வஸ்த்துக்களாக வெளியாகி உள்ளன.

இன்னும் கூறுகின்றார்கள். உள்ளமை ஒன்றே! அதுவே அனைத்து உருவங்களாகவும் இருக்கின்றது.
(றிஸாலதுப்னி ஸப்ஈன், பக்கம் – 242 )

இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜுத்” ஐ மறுக்கக் கூடிய முஸ்லிம்கள் தௌஹீதாக கொண்டுள்ள அனைத்து நம்பிக்கைகளையும் பிழை காணுகின்றார்கள். இது தொடர்பாக பின்வருமாறு கூறுகின்றார்கள். (பாமரர்களின் தௌஹீதில் பிரயோசனம் இல்லை. உதவி பெறுவதில் சிறப்பில்லை. “ஹுலூல்” கோட்பாட்டில் ஈடேற்றம் இல்லை. “இத்திஹாத்” கோட்பாட்டிலும் பிரயோசனம் இல்லை. எந்தவொரு அந்தஸ்த்திலும் ஆசையில்லை… பின் “வஹ்ததுல் வுஜூத்” – சூழ்தல் – அளவில் பார். அதிலே சிந்தனை செய். அதை சுதந்திரமாகச் சொல்.
(றஸாயில் இப்னு ஸப்ஈன் , பக்கம் – 133 )

அல்லாஹு தஆலாவுக்கு “தரிபாடாகுதல்” (உள்ளமையாக இருத்தல்) என்ற வர்ணனை தவிர எந்த ஒரு வர்ணனையும் இல்லை. அவனே சகல வஸ்த்துக்களிலும் இருக்கின்றான்.
(ஹறகதுத் தஸவ்வுபுல் இஸ்லாமீ, பக்கம் – 284 )

இக்கருத்தாகின்றது அவன் – அல்லாஹ் – “பாதின்” (உள்ளானவன்) என்ற தனது பெயரின் அடிப்படையிலாகும். அறிந்து கொள்! அவனது “ளாஹிர்” – வெளியானவன் – என்ற பெயரின் அடிப்படையில் படைப்புக்கள் அனைத்தினதும் தன்மைகள் கொண்டு வருணிக்கப்பட்டவன் ஆவான். அதுமட்டுமன்றி அவற்றின் பெயர்கள் கொண்டும் பெயர் வைக்கப்பட்டவன். ஏனெனில் அவை அனைத்தும் அவனே!

“அல் வஹ்ததுல் இலாஹிய்யஹ்” என்ற “வஹ்ததுல் வுஜூத்” அனைத்து அழகிய மற்றும் இழிவானவைகளையும் உள்ளடக்கிக் கொள்ளும். மேலும் சிறப்பான, சிறப்ற்றவைகளையும் அடக்கும். இப்னு தைமிய்யஹ் என்பவர் சொன்னார். (எனக்கு இப்னு ஸப்ஈன் அவர்களுடனும் அவர்கள் போன்றவர்களுடனும் இருந்தவர்கள் பின்வருமாறு சொன்னார்கள். ஒரு தடவை இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் வீதியால் ஒரு செத்த நாயின் பினத்துக்கருகால் சென்ற போது அவர்களின் நண்பன் அவர்களிடம் இதுவும் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையில் கட்டுப்பட்டதுதானா? என்ற கேட்டதற்கு, அவனுக்கு வேறான ஒரு பொருள் உண்டா? ஆம், இதுவும் அவனின் உள்ளமையில் உள்ளதுதான் என்று பதில் அளித்தார்கள்.
(மஜ்மூஉ பதாவா இப்னி தைமிய்யஹ், 13-186 )

You may also like

Leave a Comment