உயிரினங்களுக்கு கருணை காட்டுங்கள்! விஷமுள்ளவற்றைக் கொல்லுங்கள்!

May 6, 2020

(தொகுப்பு_மௌலவீ_அல்ஹாஜ்_A_அப்துர்_றஊப்_மிஸ்பாஹீ_பஹ்ஜீ)

விஷமுள்ள உயிரினங்கள் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வந்தால் அவற்றைக் கொல்வது பாவமாகாது. ஆயினும் அவை வாழுமிடங்களுக்குச் சென்று அவற்றைக் கொல்வது தவிர்க்கப்பட வேண்டும். விஷமில்லாத உயிரினங்களைக் கொல்வது பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும்.

உயிரினங்களில் மிகச் சிறந்த உயிரினம் மனிதன்தான். அவனை உரிய காரணமின்றிக் கொல்வது பாவமாகும்.

திரு மக்கா நகரின் எல்லைக்குள் உயிரினங்களைக் கொல்வது பெருங்குற்றமாகும்.
خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِى الْحِلِّ وَالْحَرَمِ،
اَلْحَيَّةُ وَالْغُرَابُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُوْرُ وَالْحِدْأَةُ،
எனினும் ஐந்து உயிரினங்களை மட்டும் “ஹறம்” உள்ளிட்ட எந்த இடத்திலும் கொல்ல முடியும். குற்றமாகாது. அவை: பாம்பு, காகம், எலி, கடி நாய், பருந்து.

பல்லி, பூரான், தேள், புலிமுகச் சிலந்தி போன்றவை விஷமுள்ளவை என்ற வகையில் பாம்புடன் சேர்ந்து விடும்.

பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் அடக்கம் பெற்றுள்ள எனது மதிப்பிற்குரிய தந்தை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் மிகத் தெளிவு பெற்ற ஞான மகான் ஆவார்கள்.

இவர்களிடம் கல்வி கற்றவர்களில் ஒருவர் கண்ணியத்திற்குரிய ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் ஆதம் லெப்பை ஆசிரியர் அவர்கள். அவர் என்னிடம் சொன்ன செய்தியொன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

என் தந்தையிடம் எனது சகோதரியின் வீட்டில் ஆசிரியர் அவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்த சமயம் ஒரு பூரான் அங்கு வந்ததாம். ஆசிரியர் எனது தந்தையிடம் பூரான் ஒன்று வந்துள்ளது என்று சொன்னாராம். தந்தை அவர்கள் என்னுடைய பாதணியை எடுத்து தாருங்கள் என்றார்களாம். ஆசிரியர் அதை எடுத்தாராம். அதைக் கையில் எடுத்த எனது தந்தை, ஒரு நிமிடம் அதை உற்று நோக்கியவர்களாக “நீ அல்லாஹ்வின் வுஜூதுக்கு வேறான ஒன்றல்ல, ஆயினும் நான் இவ்வாறான உருவத்தில் வந்தால் என்னை அடியுங்கள் என்று சொன்னவனும் அவன்தான். ஆகையால் உன்னை நான் அடிக்கிறேன்” என்று சொன்ன பின் அடித்தார்களாம். இவ்வாறு ஆசிரியர் அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

இது தொடர்பான விளக்கம் الله اسم الذات العلية என்ற தலைப்பில் நான் எழுதிக் கொண்டிருக்கின்ற தொடர் கட்டுரையில் இடம் பெறும்.
عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَتَلَ وَزَغَةً مِنْ أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، وَمَنْ قَتَلَهَا فِى الضَّرْبَةِ الثَّانِيَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً دُوْنَ الْأُوْلَى، وَمَنْ قَتَلَهَا فِى الثَّالِثَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً دُوْنَ الثَّانِيَةِ،
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள். “யாராவது முதலாவது அடியிலேயே பல்லியை கொன்றுவிடுவானாயின் அவனுக்கு இன்னின்ன நன்மை உண்டு என்றும், இரண்டாவது அடியில் அதைக் கொன்றானாயின் முதலடியில் கொல்வதால் கிடைக்கும் நன்மையை விட குறைந்த இன்னின்ன நன்மை உண்டென்றும், மூன்றாவது அடியில் அதைக் கொன்றானாயின் இரண்டாவது அடியில் கொல்வதால் கிடைத்த நன்மையை விட குறைந்த இன்னின்ன நன்மை கிடைக்குமென்றும் அருளினார்கள்.
ஹதீதுன் ஸஹீஹ்
அறிவிப்பு: அபூ ஹுறைறா

قَالَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ ‘ مَنْ قَتَلَ الْوَزَغَةَ فِى الْأُوْلَى فَلَهُ مِأَةُ حَسَنَةٍ، وَفِى الثَّانِيَة ِدُوْنَ ذَلِكَ، وَفِى الثَّالِثَةِ دُوْنَ ذَلِكَ،
“முதலாம் அடியில் பல்லியை கொன்றவனுக்கு நூறு நன்மையும், இரண்டாம் அடியில் அதைக் கொன்றவனுக்கு அதைவிடக் குறைந்த நன்மையும், மூன்றாம் அடியில் கொன்றவனுக்கு அதைவிடக் குறைந்த நன்மையும் உண்டு” என்று நபீ பெருமான் அருளினார்கள்.

إِنَّ النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اُقْتُلُوا الْوَزَغَةَ وَلَوْ فِى جَوْفِ الْكَعْبَةِ، رَوَاهُ الطبراني عن ابن عباس رضي الله عنه
கஃபதுல்லாஹ்வின் உட்பகுதியாயினும் அங்கு பல்லியை கண்டால் கொல்லுங்கள் என்று நபீ அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அருளினார்கள்.

ஆதாரம்: தபறானீ
அறிவிப்பு: இப்னு அப்பாஸ்

وَفِى حَدِيْثِ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا: لَمَّا اُحْرِقَ بَيْتُ الْمَقْدِسِ كَانَتِ الْأَوْزَاغُ تَنْفَخُهُ،
பைத்துல் மக்திஸ் – அல் பைத்துல் முகத்தஸ் எரிக்கப்பட்ட போது பல்லிகள் யாவும் ஒன்று சேர்ந்து ஊதி எரியூட்டின என்று ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

முன்னொரு காலத்தில் “பைதுல் மக்திஸ்” பள்ளிவாயல் யூதர்களால் எரிக்கப்பட்ட சமயம் இவ்வாறு நடந்துள்ளது.

وَفِى سُنَنِ ابْنِ مَاجَهْ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا أَنَّهُ كَانَ فِى بَيْتِهَا رُمْحٌ مَوْضُوْعٌ، فَقِيْلَ لَهَا مَا تَصْنَعِيْنَ؟ فَقَالَتْ اَقْتُلُ بِهِ الْوَزَغَ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَنَا أَنَّ إِبْرَاهِيْمَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ لَمَّا اُلْقِيَ فِى النَّارِ لَمْ يَكُنْ فِى الْأَرْضِ دَابَّةٌ إِلَّا طَفَئَتْ عَنْهُ النَّارَ، غَيْرَ الْوَزَغِ فَإِنَّهُ كَانَ يَنْفَخُ عَلَيْهِ النَّارَ، فَأَمَرَ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِهِ،
அன்னை ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் ஓர் ஈட்டி இருந்தது. அவர்களிடம் இது எதற்கு என்று கேட்கப்பட்டபோது, பல்லியைக் கொல்வதற்காக வைத்துள்ளேன் என்று கூறிய நாயகி அலைஹஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள். நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக் கிடங்கில் எறியப்பட்ட போது உலகிலுள்ள அனைத்து ஊர்வனவும் அந்த நெருப்பை அணைப்பதற்கு முயன்றன. பல்லியைத் தவிர. அது நெருப்பை ஊதி எரிக்கத் தூண்டியதாக எமக்கு கூறி அதைக் கொல்ல வேண்டும் என்றும் எங்களை நபீ பெருமான் பணித்தார்கள்.

ஆதாரம்: ஸுனன் இப்னு மாஜஹ்
அறிவிப்பு: ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா

عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ: مَنْ قَتَلَ وَزَغَةً مَحَا الله عَنْهُ سَبْعَ خَطِيْئَاتٍ،
எவனொருவன் ஒரு பல்லியைக் கொன்றானோ அவனின் ஏழு தீமைகளை அல்லாஹ் அழித்துவிடுவான் என்று நபீ அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: தாரீகு இப்னின் நஜ்ஜார்
அறிவிப்பு: ஆயிஷா நாயகி.

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَتَلَ وَزَغَةً فَكَأَنَّمَا قَتَلَ شَيْطَانًا،
ஒரு பல்லியை கொன்றவன் ஒரு ஷெய்தானை கொன்றவன் போலாவான் என்று நபீ பெருமான் அருளினார்கள்.

அதாரம்: அல்காமில்
அறிவிப்பு: இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ لَا يُولَدُ لِأَحَدٍ مَوْلُودٌ إِلَّا أَتَى بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَا لَهُ فَأُدْخِلَ عَلَيْهِ مَرْوَانُ بْنُ الْحَكَمِ، فَقَالَ: «هُوَ الْوَزَغُ بْنُ الْوَزَغِ الْمَلْعُونُ ابْنُ الْمَلْعُونِ»

நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறினார்கள்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் யாருக்காவது குழந்தை பிரசவித்தால் அதைப் பொருமானார் அவர்களிடம் கொண்டுவரப்பட்டு அவர்கள் அக்குழந்தைக்காக “துஆ” பிரார்த்தனை செய்வார்கள்.

ஒரு சமயம் மர்வானுப்னுல் ஹகம் என்பவர் கொண்டுவரப்பட்ட போது, அவன் சபிக்கப்பட்டவனின் மகன் சபிக்கப்பட்டவன், பல்லியின் மகன் பல்லி என்று பெருமானார் அவனை சபித்தார்கள்.

ஆதாரம்: அல்ஹாகிம்,

இந்த மர்வான் என்பவன்தான் பெருமானாரின் “வபாத்” மறைவின் பின் அவர்கள் திரு மதீனாவில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த சமயம் திரு மதீனா நகரின் அதிகாரியாயிருந்தான். ஒரு நாள் அவன் பள்ளிவாயலுக்கு வந்த நேரம், யாரோ ஒருவர் பெருமானாரின் திருவுடலை மூடியிருந்த கப்றின் மீது தனது முகத்தை புதைத்தவண்ணமிருந்தார். இதைக்கண்ட மர்வான் அவரின் பிடரியைப் பிடித்து என்ன செய்கின்றாய் என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டான். அதற்கவர் அவனை அதிகாரியென்றும் பார்க்காமல் சொல்லால் சாட்டையடி கொடுத்தார். அவர்தான் நபீ தோழர் அபூ ஐயூபில் அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு ஆவார்.

இந்த வரலாறை எழுதிய எனக்கு – எழுதிக் கொண்டிருந்த போது நடு நிசியில் இறை நேசர்களின் சமாதிகளை உடைத்து தரைமட்டமாக்கும் அட்டூழியக்காரர் சிலரின் உருவங்கள் என் கண் முன் தோன்றி மறைந்தன. ஏன் இவ்வேளை இவர்களின் உருவங்கள் தோன்றின என்று ஒரு நிமிடம் சிந்தித்தேன். இவர்கள்தான் இந்த மர்வானின் வழித்தோன்றல்கள் என்று யாரோ ஒருவர் என் காதுக்குள் மெல்லிய தொனியில் சொன்னாற்போலிருந்தது.

பல்லியின் சிறு குறிப்பு

பல்லி سَامٌّ أَبْرَصُ என்றும், وَزَغَةٌ என்றும் அறபியில் அழைக்கப்படும். “ஸாம்முன்” என்ற சொல்லுக்கும், “ஸும்முன்” என்ற சொல்லுக்கும் தொடர்புண்டு. இவ்விரு சொற்களுக்கும் நஞ்சு என்று பொருள் வரும். பல்லியின் உடல் முழுவதும் நஞ்சுதான். திரவமான ஒன்றில் அது விழுந்தால் அதை பாவித்தல் உடலில் நஞ்சை ஏற்படுத்தும். திண்மமான பொருளில் அது விழுந்தால் அந்த இடத்தையும், அதற்கருகில் உள்ள இடத்தையும் எடுத்துவிட்டுச் சாப்பிடலாம். ஆயினும் தவிர்த்துக் கொள்வது நல்லது. “அப்ரஸ்” என்ற சொல் வெண்குஷ்டத்தைக் குறிக்கும். பல்லிக்கு இச்சொல் பெயராக வந்ததற்கான காரணம் அது எல்லாக் காலமும் வெண்குஷ்டமுள்ளதாகவே இருக்கும் என்று விலங்கியல் மேதைகள் கூறுகின்றனர். உப்புள்ள பாத்திரத்தில் பல்லி விழுந்தால் அதைக் கொட்டி விட வேண்டும். அதைப் பாவிப்பதன் மூலம் வெண்குஷ்டம் வருவதற்கு சாத்தியமுண்டு. பல்லி வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். பல்லி செவிப்புலனற்ற உயிரினம். பாம்பும் இவ்வாறுதான். நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களின் சகோதரர்கள் பாழடைந்த கிணற்றில் எறிவதற்கு முன்பு பாம்பு செவிப்புலனுள்ளதாகவே இருந்தது. அவர்கள் அக்கிணற்றில் எறியப்பட்ட போது அங்கிருந்த பாம்புகள் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தீண்ட முற்பட்டது. அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் சத்தமிட்டார்கள். அதை உலகிலுள்ள பாம்புகள் அனைத்தும் செவியேற்றன. அந்த பயங்கர அதிர்ச்சியால் அன்று முதல் பாம்புகளுக்கு செவிப்புலன் இல்லாமற் போயிற்று. எங்காவது ஓர் வீட்டில் அல்லது கடையில் பல்லிகளின் தொல்லை இருக்குமாயின் மெல்லிய வெள்ளைத்துணியில் குங்குமம் வைத்து அங்கு வைக்கப்பட்டால் அவ்விடத்திற்கு பல்லி வராது. பல்லியைக் கொன்றால் பத்து நன்மை என்பது ஆதாரமற்றது. ஆயினும் பொதுவாக நன்மையுண்டு. ஒருவர் ஒரு செய்தியை சொல்லிக் கொண்டிருக்கும் போது பல்லி “ரிக் ரிக்” என்று சத்தமிட்டால் அவர் சொன்ன செய்தி உண்மையென்று முதியவர்கள் நம்பியிருந்தார்கள். இதுவும் ஆதாரமற்ற கதைதான்.

மனிதப் பல்லிகள்.

மனிதர்களில் பல்லிகள் போன்ற நச்சுத் தன்மையுள்ளவர்களும், தீக்குணமுள்ளவர்களும் உள்ளனர். “பைதுல் மக்திஸ்” பள்ளிவாயல் எரிக்கப்பட்ட வேளையிலும், நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “நும்றூத்” என்பவனால் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட வேளையிலும் உலகில் வாழ்ந்த உயிரினங்கள் யாவும் அந்த நெருப்பை அணைத்துவிட கடும் முயற்சி எடுத்தன. ஆனால் பல்லி மட்டும் வாயால் ஊதி நெருப்பை தூண்டிவிட்டது. இதேபோல் சிறு பிரச்சினைகளையும் ஊதிப் பெரிதாக்கி குழப்பத்தை ஏற்படுத்தும் மனித பல்லிகளும் உள்ளன. இவ்வாறான மனித பல்லிகள் உலமாஉகளில் இருப்பது சொல்லொணா வேதனைக்குரியதாகும்.

إِذَا صَلُحَ الرَّأْسُ فَلَيْسَ مِنَ الْجَسَدِ بَأْسٌ

(இந்த விபரங்கள் யாவும் இமாம் அஷ் ஷெய்கு கமாலுத்தீன் அத்தமீரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் حياة الحوان الكبرى என்ற நூல் இரண்டாம் பாகம் 399ம் பக்கத்திலிருந்தும், 11ம் பக்கத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும்)

You may also like

Leave a Comment