உருவமும் பிரம்மமும் (தொடர்-3)

July 5, 2019

ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ அன்னவர்கள்
————————————————-

3.லம்யலித், வலம் யூலத்

”அவன் பெறவில்லை, அவன் பெறப்படவும் இல்லை”

இறைவன் இவ்வசனத்தில் “விலாதத்” என்ற சொல்லைக் கையாண்டுள்ளான். “விலாதத்” என்பது ஒரு பெண் தனது வயிற்றிலுள்ள சிசுவை பிரசவிப்பதை(பிரிப்பதை)க் குறிக்கும்.

“பிரசவித்தல்” என்பது பெண்பாலுக்கு மட்டும் உரித்தான தொழில். பெண்ணைக் குறித்தே அச்சொல் பயன்படுத்தப்படும். ஆயினும், ஆணுமல்லாத,பெண்ணுமல்லாத தன் “தாத்” (பிரம்மத்தைப்) பற்றி “அது பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளான்.

“தாத்” (பிரம்மம்) ஆணுமில்லை பெண்ணுமில்லை என்றால், அது பெறுகிறதா இல்லையா என்பதையும் சொல்லிக் காட்ட வேண்டியதில்லையே? ஆணுமல்லாத-பெண்ணுமல்லாத “அலி” எனப்படு்ம் அது கூட பிரசவிப்பதில்லை என்பது யாவரும் நன்கறிந்ததேயாகும். இம்மூன்று வர்க்கமுமல்லாத அப்பிரம்மம் பெறுகிறதா இல்லையா என்பதைப் பற்றி ஏன் வீணே பிரஸ்தாபிக்க வேண்டும்? நாம் சிந்திக்க வேண்டும்!

ஆணும் அலியும் பிரசவிப்பதில்லை. பெண் மட்டுமே பிரசவிப்பாள். இறைவனின் “தாத்” (பிரம்மம்) இம்மூன்றும் இல்லை என்றால் “பிரசவித்தல்” பற்றி பிரஸ்தாபிக்க வேண்டியதில்லை. எனவே “பிரசவித்தல்” என்பதற்கு வேறு விளக்கம் உண்டு. அது பின்னால் வரும்.

அவ்வசனத்துக்கு ஒரு பெண் பிரசவிப்பது போல் இறைவன் பிரசவிக்கவில்லை என அர்த்தம் கொண்டால், அது (பிரம்மம்) பெண்தான் என்றும், ஆயினும் அது பிரசவிக்கவில்லை என்றும் தானாகவே ஒரு கருத்து ஏற்பட்டுவிடும்.

ஒரு பெண் பேறில்லாத காரணத்தாலோ, அன்றி திருமணமாகாத காரணத்தாலோ பிரசவிக்காமல் இருப்பாள் என்பது கண் கூடு.

“பிரசவித்தல்” என்பது பெண்ணைக்குறித்தே உபயோகப்படுத்தப்படும் ஒரு சொல். ஆகையால், அப்பிரம்மம் பெண் என்றும், மேற்கூறிய இரு காரணங்களால் அது பிரசவிக்கவில்லை என்றும் கருத்து வந்துவிடும்.

சிலர், பிரம்மம் பெண்தான் என்றும், அது பெண்ணொருத்தி பிரசவிப்பது போல் பிரசவிக்கிறது என்றும் கருதினார்கள். அத்தகைய கருத்தை மறுப்பதற்காகவே அவ்வாறு இறைவன் கூறியதாக விளக்கம் சொல்கிறார்கள்.

இவர்களின் இத்தகைய வியக்கம்தான் அதற்குக் காரணம் என நாம் வைத்துக்கொண்டால் அதில் பல்வேறு ஆட்சேபனைகள் எழுகின்றன. மேலும், இது “அவன் பெறவில்லை” என்ற கருத்தை மட்டும் காட்டி நிற்கிறதேயன்றி, அவ்வாறு பெறாததற்கு காரணம் என்ன? என்பதை விளக்குவதாக இல்லை.

இலறவன் ஏன் பெறுவதில்லை?

“இறைவன் ஏன் திருமணம் செய்யவில்லை? ஏன் அதன் மூலம் குழந்தைகளைப் பெறவில்லை?”

இவை போன்ற அர்த்தபுஷ்டியான வினாக்களுக்கு, அத்வைத ஞான வட்டத்திலேதான் தர்க்க ரீதியான பதில்கள் உள்ளன.

சிருஷ்டிகள் திருமணம் செய்து கொள்கின்றனர். குழந்தைகளைப் பெறுகின்றனர்.இவ்விரு தன்மைகளும் சிருஷ்டிகளின் தன்மைகள். இவை அல்லாஹ்வில் ஏற்படுவதால் அவன் சிருஷ்டிகளுக்கு ஒப்பாகி விடுகிறான். சிருஷ்டிகளுக்கு ஒப்பாகி விடுகிறான். சிரஷ்டிகளுக்கு ஒப்பாக வேண்டும் என்பதனால் அவன் திருமணம் செய்யாமலும், சந்தானங்களைப் பெறவில்லை என்றும் சிலர் கூறுவர்.

இது பகுத்தறிவால் ஏற்கப்படும் தர்க்க ரீதியான காரணமல்ல. அவன் திருமணம் செய்வதாலும், பிள்ளைகளைப் பெறுவதாலும் சிருஷ்டிகளுக்கு ஒப்பாகி விடுகிறான் என்றவாதம் பிழையானதே!

ஏனெனில், ஒப்பு-நிகர் என்பது அவனுக்கு அறவே இல்லாமலிருக்கும் போது, அவன் அதற்கு ஒப்பாகி விடுகிறான், இதற்கு ஒப்பாகி விடுகிறான் என்பது காரணமில்லை.

அதுவே அதற்குக் காரணம் என்பது முற்றிலும் பிழையான வாதமாகும். அவனல்லாத ஒன்றும் இல்லாதிருக்கும் போது அவன் எதற்கு ஒப்பாவது? எங்ஙனம் ஒப்பாவது?

மேலும், அவ்வாறு சிருஷ்டிகளுக்கு ஒப்பாக வேண்டும் என்பதைக் காரணமாகக் கொண்டால், “அவனக்கு திருமணம் செய்யவும், சந்தானங்களைப் பெறவும் முடியும். ஆனால், சிருஷ்டிகளுக்கு ஒப்பாக வேண்டும் என்பதனாலேயே பிரசவிக்காமல் இருக்கிறான்” என்ற அர்ததம் தானாகவே தோன்றிவிடும்.

எனவே, அவன் பெறவில்லை, திருமணம் செய்யவில்லை என்ற கூற்றுக்களுக்கு மேலே குறிப்பிட்ட “ஒப்பாகுதல்” என்பது காரணமில்லை. அதற்குக் காரணம்; (ஆணாக-பெண்ணாக-கணவனாக-மனைவியாக-பிள்ளையாக இவ்வாறெல்லாம்) அனைத்துமாக வெளியாகியுள்ள பிரம்மத்தை (அல்லாஹவை)ப் பொறுத்து அவ்விரண்டும் அசாத்தியமானவைகளாக இருப்பதினாலேயேயாகும்.

பெறுதல் தரும் பிரிதல்

“பெறுதல்” என்பது தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளியாகுவது போல், ஒன்றிலிருந்து இன்னொன்று வெளியாகுவதை (பிரிவதைக்) குறிக்கும்.

எனவே, அவன் பெறவில்லை என்பதன் அர்த்தம், அவனில் (அப்பிரம்மத்தில்) இருந்து எதுவும் பிறந்து(பிரிந்து) வரவில்லை என்பதேயாகும். சர்வசிருஷ்டிகளும் அவனில் இருந்து வந்தவைகள்தான். ஆயினும் தாயின் வயிற்றிலிருந்து சிசு பிரிந்து வந்தது போல்-கோழியில் இருந்து முட்டை வேறாகி வெளியானதைப் போல் அவை அவனுடைய பிரம்மத்திலிருந்து பிரிந்து வேறாக வந்தவையல்ல.

பிரபஞ்சம் பிரம்மத்தின் குழந்தைகள்தான். ஆயினும் சிசு தாயின் வயிற்றிலிருந்து பிரிந்து வந்து அது வேறாகவும் தாய் வேறாகவும் இருப்பது போல், பிரபஞ்சம் என்பது, பிரம்மத்திலிருந்து பிரிந்து வந்து அது வேறாகவும், பிரம்மம் வேறாகவும் இருக்கின்றது என்பது அரத்தமில்லை.

“அவன் பெறவில்லை” என்பதின் சரியான அரத்தமும் தர்க்கரீதியான காரணமும் நாம் மேலே வலியுறுத்தியவாறு “பிரியவில்லை” என்பதுதான். இதற்கு, இவ்வத்தியாயம் (சூறதுல் இக்லாஸ்) இறங்கிய வரலாற்றை சற்று நோக்கினால் “பெறவில்லை” என்பதன் கருத்து “பிரியவில்லை” என்பது தான், என்பது தெளிவாகும்.

இறங்கிய வரலாறு

நாயகம் (ஸல்) அவர்களிடம் காபிர்கள் வந்து “முஹம்மதே! நீங்கள் கூறும் தெய்வம் எதனாலானது? பித்தளையினாலா? செம்பினாலா? தங்கத்தினாலா? அல்லது மரகதத்தினாலா? எதனாலானது?” என்று கேட்டார்கள். அந்நேரம் அருளப்பட்டதுதான் ”இக்லாஸ்” அத்தியாயமாகும். (தப்ஸீர் ஜமல்:பாகம் 4,பக்:603)

நாம், காபிர்களின கேள்வியை சற்று கவனித்தல் வேண்டும். அவர்கள்“தெய்வம் எதனாலானது?” என்றுதான் கேட்டார்களேயன்றி, “அவன் ஒருவனுக்கு நிகராக யாரேனும் இருக்கிறார்களா?” என்றோ அவர்கள் கேட்கவில்லை.

அவர்களின் கேள்வி “தெயவம் எதனாலானது?” என்பதுதான். அதாவது, அதற்கு மூலம் எது? அது எதிலிருந்து உண்டானது? என்பதுதான்.

“தெய்வம்” எதனாலானது? என்ற கேள்விக்கு இறைவன் கூறிய பதில்தான் “இக்லாஸ்” அத்தியாயமாகும். இதில் கேள்விக்குரிய பதில் இருக்கிநதா என்பதைத்தான் நாம் நோக்க வேண்டும்.

காபிர்களின் கேள்விக்கு சரியான பதிலளிப்பதாயின் இறைவன் இன்னதினால் ஆனவன். அல்லது எதாலும் ஆகாதவன் என்றதான் பதிலளிக்க வேண்டும். ஆனால் ஞானமடையவனாக அல்லாஹ் “அவன் ஏகன். அவன் தேவையற்றவன். அவன் யாரையும் பெறவில்லை. அவனை எவரும் பெறவுமில்லை, அவனுக்கு நிகராக எதுவும் இல்லை” என்று பதிலளித்துள்ளான்.

இறைவனின் இவ்விடையில் கேள்விக்குரிய பதில் எப்படி எங்கே இருக்கிறது? மன்சூர் அவர்கள் எடுத்து விளக்குவாரா? அத்வைத ஞான அறிவுடன் நோக்குங்கால் இவ்வத்தியாயத்தில் உள்ள நான்கு வசனங்களிலும் காபிர்களின் கேள்விக்குரிய பதில் சரியாவே இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளதிற் புலனாகும்.

சுருக்கமாக கூறுவதாயின், காபிர்களின் கேள்வியினுடைய அடிப்படை நோக்கம்: அறைவன் எதனால் ஆனவன் என்பதுதான் என்பதை மேலே தெளிவாகக் கண்டோம். “இக்லாஸ்” அத்தியாயத்திலுள்ள குறிப்பிட்ட நான்கு வசனங்களும், அவன் எதனாலும் ஆகவில்லை என்பதனையும், அவனிலேயே எல்லாம் ஆகியுள்ளன என்பதையும், அவன் எதிலிருந்தும் பிரியவில்லை என்பதையும் தெளிவாக வலியுறுத்துகின்றது.

“அவன் பெறவில்லை” என்பதன் பொருள்: அவனின் பிரம்மத்திலிருந்து எதுவும் பிரியவில்லை என்பதேயாகும். இது போன்றே “வலம்யூலத்” (அவன் பெறப்படவும் இல்லை) என்பதன் பொருள், அவன் இன்னொன்றிலிருந்து பிரிந்து உண்டானவன் அல்ல என்பதை வலியுருத்துகின்றது.

அவனிலிருந்து எந்த ஒன்றும் பிரியாதது போல், அவனும் எதிலிருந்தும் பிரிந்தவனல்ல என்பதையே இம்மூன்றாம் வசனம் எடுத்துக கூறுகிறது. எனவே, அவ்வசனத்தில் கூட சகோதரர் மன்சூர் அவர்களின் வாதம் சரியானது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக, எனது வாதம் சரி என்பதற்கே அவ்வசனம் ஆதாரமாக உள்ளது.

இனி, மேற்படி அத்தியாயத்தின் நான்காம் வசனமான “அவனுக்கு நிகராக யாரும் இல்லை” என்பதை ஆராய்வோம். அதிவேனும்,“அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை” என்பதற்கோ, அல்லது “அவன்தான் எல்லாமாகவும் வெளியாகியுள்ளான் என்பது பிழை” என்பதற்கோ சிறியதோர் ஆதாரமாவது இருக்கிறதா என்பதை அலசிப்பார்ப்போம்.

வலம யகுன்லஹூ குபுவன் அஹத்

“அவனுக்கு நிகராக யாரும்(எதுவும்) இல்லை”

இவ்வசனத்தின் பொருள் இதுதான். இதில் குறிப்பிடப்படும் நிகர் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டால்தான், இறைவனுக்கு அது உண்டா இல்லையா என்பதைப் பற்றி முடிவு செய்ய முடியும்.

திருமறையில் இறைவனுக்கு நிகர் இல்லை என்ற அர்த்தத்தை தரக்கூடிய வசனங்களும், அவனுக்கு உதாரணம் உணடு என்று பொருள்படும் வசனங்களும் காணப்படுகின்றன. எனவே நாம் நிகர்-உதாரணம் என்ற பதங்களுக்கிடையிலான வேறுபாடுகளை முதலில் அறிவோம்.

நிகரும் உதாரணமும்

அறபு மொழியில் “குப்வுன்”,”மித்லுன்” என்ற சொற்கள் நிகர-ஒப்பு என்ற அரத்தங்களுக்கும்: “மதல்“,“மிதால்” என்ற சொற்கள் உதாரணம்-மாதரி என்ற அர்த்தங்களுக்கும் வழங்கப்படுகின்றன.

இச் சொற்கள் இடம்பெறும் திருவசனங்களாவன:
“அல்லாஹ்வுக்கு நிகராக எதுவும்(யாரும்) இல்லை” (இக்லாஸ்;4)
“அவனைப் போல் எதுவும் இல்லை” (அஷ்ஷூரா;11)
இவ்விரு திருவசனங்களிலும் நிகர்-ஒப்பு என்ற அரத்தங்களைத் தரக்கூடிய “குப்வுன்-மித்லுன்” என்ற சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன.

“அல்லாஹ்வுக்கு உயரந்த உதாரணம் உண்டு” (நஹ்ல்:60)
“அவனுக்கு உயரந்த உதாரணம் உண்டு” (றூம்:27)
இவ்விரு வசனங்களிலும் உதாரணம் என்ற அரத்தத்துக்கு “மதலுன்” என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. நாம் பொதுவாக அல்லாஹ்வுக்கு நிகர் இல்லை, உதாரணம் உண்டென்று நம்புதல் வேண்டும்.

“உதாரணம்-நிகர்” என்ற தலைப்பில் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்-ஷஅறானீ(றஹ்) அவரகள் தங்களின் “அல் யவாகீத் வல் ஜவாஹீர்” எனும் கிரந்தத்தின் முதலாம் பாகம் 108ம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

உதாரணம் என்றால், ஒன்றில்உள்ள ஒரு அம்சம் அல்லது பல அம்சங்கள் இன்னொன்றில் இருப்பது ஒன்றிலுள்ள சகல அம்சங்களும் மற்றதிலும் இருக்க வேண்டும் என்பதல்ல.

முஹம்மத் சிங்கம் போன்றவன் என்றால் அவனுக்கு நான்கு கால்களும், ஒருவாலும், பிடரிச் சடையும் இருக்க வேண்டும் என்பது விதியல்ல. முறுக்கேறிய உடலும்,வீரமும் முஹம்மத் என்பவரில் இருப்பதால் அவர் சிங்கம் போன்றவர் என நாம குறிப்பிடுவோம். உதாரணம் என்பதன் வரைவிலக்கணத்துக்கு “முஹம்மத் சிங்கம் போன்றவர்” என்பது ஒரு உதாரணம் சிங்கத்துக்கு முகம்மத் நிகர் என்பது அர்ததமல்ல.

நெட்டையான ஒருவரை “பனைமரம்” என்றும், உடற்பருமனான ஒருவரை “மலை” என்றும், புத்தியில்லாத ஒருவரை “கழுதை” என்றும் நாம் பேச்சு வழக்கில் கையாளுவதை கவனித்தால் இலகுவாக விவரம் புரியும். இவை யாவும் உதாரணங்களேதான்.

இதன் அடிப்படையில் அல்லாஹ்வுக்கும் உதாரணங்கள் கூறமுடியும். உதாரணமாக “அல்லாஹ் மொராக்கோ மன்னர் ஹூஸைனைப் போன்றவன்”,“அல்லாஹ் சேனைத் தலைவனைப் போன்றவன்” என்றெல்லாம் கூறலாம். இவ்வாறு கூறுவதெல்லாம் உதாரணங்களே தாம். நிகரல்ல.

மேலும், இவ்வடிப்படையை வியங்கி இவ்வாறு கூறியவனும், அதைநம்பியவனும் இறைவனுக்கு நிகர் கற்பித்தவனாகி விட மாட்டான்.

இனி நிகர் என்றால் என்ன என்பதைப் பற்றி இமாம் அவர்கள் கூறுவதைக் கவனிப்போம்.

“நிகர்” என்றால் ஒன்றிலுள்ள சகல அம்சங்களும் இன்னொன்றில் இருப்பது. சகல தன்மைகளிலும், அளவிலும் ஒன்றுக்கு இன்னொரு வஸ்து ஒத்திருப்பது நிகராகும். இரண்ட கறுப்பு நிறங்களையும், இரண்ட வெள்ளை நிறங்களையும் இவ் வரைவிலக்கணத்துக்கு நிகரானதாக எடுத்துக் காட்டலாம். இரண்டு “ரைக்பிங்சீற்” (வெள்ளைத்தாள்)களை இரண்டு கைகளிலும் எடுத்துக்காட்டி இத்தாள்களக்கு மறுதாள் “நிகர்” என்று கூறலாம். இவ்வடிப்டையில் கூறப்படுவதே நிகராகும்.

இவ்வரைவிலக்கணப்படி, அல்லாஹ்வுக்கு உண்டு என்று கூறவோ கொள்ளவோ முடியாது. “அனைத்தும் அவனே” என்ற என்வாதப்படி அவ்வனைத்தையும் கொண்ட இன்னொன்றாக ஒரு பிரம்மத்தை மனசூராலாவமு காட்ட முடியுமா? அல்லாஹ்வுக்கு நிகர் இல்லாமற் போனதற்கு, அவனல்லாத இன்னொன்று இல்லாமற் போனதே காரணமாகும். “அவனல்லாத ஒன்று இல்லை” என்பதே கலிமஹ்வின் தத்துவமாகும், அத்வைத ஞானத்தின் அடிப்படையுமாகும்.

ஒன்று இன்னொன்றுக்கு நிகர் என எவராவது கூறுவதாயின் அவருக்கு குறைந்த பட்சம் இரண்டு பொருட்களாவது தேவைப்படும். பிரம்மத்தைத் தவிர இன்னொன்று இல்லாமலிருக்கும் போது எங்ஙனம் அவனக்கு நிகர் ஏற்பட முடியும்? இரண்டென்பதே இல்லை என்றால் நிகர் என்ற பேச்சுக்கும் அங்கு இடமில்லை என்பதும் தெளிவாகிறதல்லவா?

இரண்டுமில்லை, பலதுமில்லை என்றால் இருப்பது ஒன்றுதான் என்பதும், மேலும் எதுவும் அதற்கு வேறல்ல என்பதும் புலனாகும். அத்தகைய ஒரு பிரம்மத்தில் இது வேறு அது வேறு எனப் பிரிப்பதும், வேறாக்க முனைவதும் அசாத்தியமானதேயாகும்.

எனவெ, அல்லாஹ் (என்ற பெயரால் அழைக்கப்படும் அப்பிரம்மத்தை)வைப் போல் இன்னொன்று உண்டென்று நம்புவதும், நிகர் கற்பிப்பதும் முற்றிலம் பிழையானதே! அவன் நிகரற்றவனாக காரணம், அனைத்துமாக அவனிருப்பதனால்தான் என்பதை வாசகர்கள் நுட்பமாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

“இக்லாஸ்” அத்தியாயத்தின் மேற்குறிப்பிட்ட நான்காம் திருவசனம் “இறைவனுக்கு நிகர் இல்லை” என்பதை தெள்ளதிற் புலனாகக் காட்டுகின்றது.

யதார்த்தத்தில், அல்லாஹ்வுக்கு நிகர் இல்லவே இல்ல. என்றாலும், ஒருவர் தனது அறிவின்மையின் காரணமாக அல்லாஹ்வைப் போல் இன்னொன்று உண்டென்று நம்புவாராயின் அவரைப்பொறுத்து (அதாவது அவரது எண்ணத்தில்) நிகர் வைத்த குற்றவாளியாகுவார். அப்படி அவர் நம்பியிருப்பதால் அல்லாஹ்வுக்கு நிகர் உண்டென்பது அர்த்தமில்லை.

பிரம்மம்தான் மனிதனாயும், மற்றுமுள்ள சர்வகோடி சிருஷ்டிகளாகவும் இருக்கின்றது என்ற தத்துவப்படி, சிருஷ்டிகளின் தன்மைகள் அதற்கு மூலமான பிரம்மத்திலும் இருக்கவேண்டும் என்றும், இவ்வாறு அல்லாஹ்வுக்கும் உண்டென்று கூறுவதாயின், அவன் எங்கு பிறந்தான்? என்ன பொருளை உண்டான்? எதனை உடுத்தான்? யாரை மணம் செய்தான்? எங்கே மலம் கழித்தான்? என்பதையும் விவரிக்க முடியுமா? என வியர்ந்து கேட்கிறார், சகோதரர் மன்சூர்.

சிரஷ்டிகளின் தன்மை பிரம்மத்தில் (அல்லாஹ்வில்) ஏற்படக்கூடாது என்பது அவர் வாதம். எல்லாமாயிருப்பது பிரம்மம் ஒன்றே என்ற தத்துவப்படி, சிருஷ்டியின் தன்மைகள் அப்பிரம்மத்தில் ஏற்படுவதால் எனது வாதம் பிழை என்பதும் அவரின் முடிவு.

தன்மைகள் யாருக்குரியன?

பிரபஞ்சத்திலுள்ள சர்வ சிருஷ்டிகளும், தன்மைகளும் அல்லாஹ்வில் நின்றும் உள்ளவையேயாகும்.

நன்மை-தீமை யாவும் இறைவனில் நின்றுமுள்ளதென நம்புதல் “ஈமான்” விசவாசத்தில் ஓர் அங்கமாகம். அதன் ஆறு அம்சங்களில் இவ்வாறு விசுவாசங் கொள்வதும் ஒரு அம்சமாகும். இவ்வம்சம் இல்லாதவன் விசுவாசியாக மாட்டான்.

சகோதரர் மன்சூர் அவர்களின் வாதப்படி, அவர் ஈமானின் ஆறாவது அம்சத்தை நம்பவில்லை என்பது தெளிவாகி விட்டது. அவர் அதை நம்பியவராயிருந்தால், சிருஷ்டிகளுக்கும் தன்மைகள் உண்டு என்று வாதிட முன்வந்திருக்கமாட்டார்.

சிருஷ்டி என்பது இல்லாதது. அதுவே யதார்த்தத்தில் இல்லாதிருக்க; அதற்கு இன்னின்னது உண்டு என்றும். இன்னின்னது இல்லை என்றும் செயல்களையோ, தன்மைகளையோ அதன்பால் (சிருஷ்டியின் பக்கம்) சேர்த்தல் அசாத்தியமானதேயாகும். இல்லாத ஒன்றளவில் இன்னொன்றைச் சேர்ப்பது எங்ஙனம் சாத்தியமாக முடியும்?

சிருஷ்டி என்பது இல்லாத ஒன்றெனில், சிரஷ்டியின் பெயரிலும், உருவத்திலும் இருப்பது பிரம்மமேயாகும். எனவே, சிருஷ்டியின் மூலம் நிகழ்கின்ற சகல செயல்களும், தன்மைகளும் பிரம்மத்துக்குரியவையேயாகும்.

செயல்களும், தன்மைகளும் சிருஷ்டிகள் மூலம் நிகழ்ந்தாலும் அவை சிருஷ்டிகளுக்குரியவையல்ல. பிரம்மத்தின் செயல்களும் தன்மைகளம் சிருஷ்டிகள் என்ற வழி மூலமாக நிகழ்கின்றன. இதனால் தன்மைகளும் செயல்களும் வழிக்குச் சொந்தமாகி விடாது. வழியில் நின்றும் உள்ளவையுமல்ல. அவ்விரண்டும் பிரம்மத்துக்கே சொந்தம் என்பதும், அப்பிரம்மத்தில் நின்றுமே சிருஷ்டிகள் மூலமாக வெளியாகின்றன என்பதுமே உண்மையாகும்.

எனவே,சிருஷ்டிகள் மூலம் நிகழ்கின்ற சகல செயல்களும் தன்மைகளும், மற்றும் நன்மை தீமை யாவும் அவனுடையவை என்றும், அப்பிரம்மத்தில் நின்றுமுள்ளவை என்றும் நம்புதல், “ஈமான்” நம்பிக்கையின் அம்சங்களில் ஒன்றில்லை என்று கூற மன்சூர் முன்வருவாரா?

இது, குர்ஆன் பாடசாலையில் படிக்கின்ற ஐந்து வயதுச் சிறுவர்களுக்கும் தெரிந்த விசயமேயாகும். குர்ஆன் பாடசாலையில் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற “ஆமன்து பில்லாஹி வமலாயி கதிஹி……” என்ற பாடம் இக்கூற்றை உணர்த்துகிறது.ஷ

தொடரும்…………….

You may also like

Leave a Comment