உருவமும் பிரம்மமும் (தொடர்-4)

July 7, 2019

ஆக்கம் – சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ்
A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ அன்னவர்கள்
————————————————

அகீதாவுக்கு முரணானது எது?

உண்ணாமை, பருகாமை, உறங்காமை, போன்றவை அல்லாஹ்வின் தன்மை என்றும்; உண்ணல், பருகல், உறங்கல் என்பன சிருஷ்டியின் தன்மை என்றும் கருதினால் அத்தன்மைகள் அல்லாஹ்வின் தன்மை என்றும் சிருஷ்டியின் தன்மை என்றும் இரண்டாக வகுத்துப் பிரித்து நம்ப வேண்டி ஏற்படும்.

இவ்வாறு நம்புவது சிருஷ்டிகளுக்கும் செயலையும் தன்மையையும் தரிபடுத்துவதாக அமையும். இது குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும், இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கும் முரணானதாகும்.

மன்சூர் அவர்கள் தன்மைகளையும், செயல்களையும் பிரித்து இரண்டாகப் பேசுவதன் மூலம் சிருஷ்டிகளுக்குச் செயல்களும் தன்மைகளும் உண்டு என்று நம்பி விடுகிறார்.

சகல செயல்களும், தனமைகளும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என திருமறையும், நிறைமொழியும் கூறிக்கொண்டிருக்கையில், மன்சூர் அவர்கள், சிருஷ்டிகளுக்கும் தன்மையும் செயலும் உண்டு என்று தத்துவத்துக்கு முரணாகவும், மூலாதாரங்களுக்கு மாறாகலும் கூறுகிறார்.

அல்லாஹ்வையும் தூதரையும் நம்புவதா? அல்லது அறிஞர் மன்சூர் அவர்களை நம்புவதா? இஸ்லாமிய அறிஞர் சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! அல்லாஹ் சகல வஸ்த்துக்களும் தன்மைகளும், செயல்களும் தன்னில் நின்றுமுள்ளவை என்று குர்ஆனில் உறுதியாக கூறுகிறான்.

“நீங்கள் எங்கிருந்த போதும் மரணம் என்பது உங்களை நிச்சயமாக அடையும்(ஏற்படும்). நீங்கள் பலமான கோட்டைக்குள் இருந்தாலும் சரியே! அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் இது அல்லாஹ்வில் நின்றுகுள்ளது என்றும், அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அது உங்களில் நின்றுமுள்ளது என்றும் சொல்வார்கள். முஹம்மதே! எல்லாம் அவனில் நின்றுமுள்ளவை என்று சொல்லுங்கள். இந்தக் கூட்டம் இச் செய்தியை அறியாமல் இருப்பது ஏனோ? (அன்னிஷா : 78)

நாயகம் (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து பல வினாக்களைக் கேட்டார்கள். அவற்றுள் ஒன்று ஈமான் விசுவாசம் என்றால் என்ன? என்ாதுமாகும்: அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டும், அமரர்களைக் கொண்டும், வேதங்களைக் கொண்டும், றசூல்மார்களைக் கொண்டும், மறுமையைக் கொண்டும், நன்மை-தீமை யாவும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்றும் நம்புவதாகம் என பதில் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம். தொகுப்பு:மிஷ்காத்)

மேற்குறிப்பிட்ட திருமறை வசனம் மூலமாகவும், சகல செயல்களும் தன்மைகளும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்பது தெளிவாகிவிட்டது. அல்லாஹ்வுக்குச் செயல்களும் தன்மைகளம் இருப்பது போல் சிருஷ்டிகளுக்கும் செயல்களும் தன்மைகளும் உண்டு என நம்புதல் குர்ஆன் ஹதீஸ்களுக்கு முற்றும் மரணானதேயாகும்.

எல்லாப் பொருட்களும், உயிரினங்களும் அல்லாஹ்வின் அடிமைகள். அடிமைப் பொருட்கள் எப்பொழுதும் மற்றொன்றின் துணையை நாடி நிற்க வேண்டுமேயன்றி, அவை சுயமாக இயங்க முடியாது என சகோதரர் மன்சூர் கூறியுள்ளார். அவரின் இக்கூற்று நியாயமானதே!

அவரின் கூற்றுப்படி, சிருஷ்டியென்பது இன்னொன்றின் துணையை நாடி நிற்கக் கூடியது என்பது தெளிவாகியுள்ளது. இவ்வுண்மையை ஏற்றுக் கொள்ளும் மன்சூர் சிருஷ்டியின் மூலம் நிகழ்கின்ற செயலும் தன்மையும் கூட இன்னொன்றைக் கொண்டு நிற்பவையேயன்றி, அவை சுயமாக இயங்குபவையல்ல என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், செயலும் தன்மையும் கூட சிருஷ்டிதான். எல்லாப் பொருளும், உயிரம் சிருஷ்டி என்று கூறும் மன்சூர், அவற்றினால் உண்டாகும் தன்மைகளையும் செயல்களையும் சிருஷடி இல்லை என்று கூறலாமா?

இநைவன் திருமறையில் “நீங்களும் உங்கள் செயல்களும் சிருஷ்டிதான்” (அஸ்ஸப்பாத்து: 96) என்றும்; “அல்லாஹ்தான் சகல வஸத்துவையும் சிருஷ்டிப்பவன்” (ரஅத்: 16) என்றும் கூறியுள்ளான்.

எனவே, சகல செயல்களும் சிருஷ்டியாயிருப்பதால் சிருஷ்டியானது அன்னொன்றை நாடி நிற்பது போன்றும், சுயமாக இயங்காமலிருப்பது போன்றும் செயல்களும் தன்மைகளுங்கூட அவ்வாறே இன்னொன்றை நாடியே நிற்கின்றன.

எண்ணமும் செயலும் பிரம்மத்தின் நாட்டத்தின் அசைவுகள். அவையாவும் அப்பிரம்மத்தைக் கொண்டே நிற்கின்றன. அவை தனியாக நிற்கவோ, சுயமாக இயங்கவோ மாட்டாது.

சிருஷ்டி என்பது ஆதேயமானது. அது ஆதாரமானதல்ல. ஆதேயமானது தன்னைக் கொண்டு சுயமாக நிற்க மாட்டாது. இன்னொன்றைக் கொண்டு நிற்காமல் தன்னைக் கொண்டு நிற்பது பிரம்மம் என்கிற ஏகமான அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.

செயலுக்கும் தன்மைகளுக்கும் சொந்தமானவன் அல்லாஹ்தான். அவையாவும் அவனில் நின்றுமுள்ளவைதான்.

வானத்திலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்குச் சொந்தமானவை என்றால் அவ்விரண்டிலும் – அது அடஙகலும் – உள்ளவைகள் யாருக்குச் சொந்தமானவை?

சிருஷ்டிகள் மூலம் நிகழ்கின்ற செயல்களும் தன்மைகளும் வானத்திலும் பூமியிரும் உள்ளவையில்லையா?

சகல பொருட்களும், உயிரினங்களும் சிருஷ்டியாயிருப்பதால் அவை இன்னொன்றைக் கொண்டு நிற்கின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் சகோதரர் மன்சூர் ; செயலும் தன்மையும் சிருஷ்டி என்பதையும், அவை அல்லாஹ்வின் பிரம்மத்தைக் கொண்டே நிற்கின்றன என்பதையும் கற்றுக் கொள்ளவே வேண்டும்.

இவ்வுண்மையை மன்சூர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் சிருஷ்டிக்கு எத்தன்மையும், எச்செயலும் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ளுதல வேண்டும்.

சிருஷ்டியும் ஆதேயமானது! அதேபோல் செயலும் தன்மைகளும் ஆதேயமானவைகளே! ஆதெயமக்“ என்பது ஒரு ஆதாரத்தை அண்டி நிற்குமேயல்லாமல் அது இன்னோர் ஆதேயத்தைக் கொண்டு நிற்கமாட்டாது. அவ்வாறு கருதுதல் அறிவுடமையல்ல.

எந்த ஆதேயம் எந்த ஆதாரத்தைக் கொண்ட நிற்கிறதோ…. அந்த ஆதாரத்தை விட்டும் அந்த ஆதேயத்தைப் பிரிக்கமுடியாது.

“உறைப்பு என்ற (தன்மை) ஆதேயம். “மிளகாய்” என்ற (தாத்) ஆதாரத்தைக் கொண்டும், “அறிவு சக்தி” என்பன போன்ற ஆதேயங்கள் “முஹம்மத்” என்ற மனித உடலான ஆதாரத்தைக் கொண்டு நிற்பதால்: உறைப்பை மிளகாயை விட்டும், அறிவு சக்தி ஆகிய ஆதேயங்களை “முஹம்மத்” என்ற ஆதாரத்தை விட்டும் பிரித்து எடுக்க முடியாது.

ஆதேயமான ஒன்றைக் காண்பதாயிருந்தாலும் அதன் ஆதாரத்துடனேயே காணவும் சுவைக்கவும் முடியும்.

பச்சை, கறுப்பு போன்ற நிறங்கள் ஆதேயமானவை. இவை அன்னொன்றைக் கொண்டுதான் நிற்கும். நிறம் என்ற ஆதேயமானதை அது அண்டி நிற்கும் ஆதாரப் பொருளன்றிப் பார்க்க முடியாது. எந்தவொரு வஸ்த்துவின் ஆதாரப் பொருளன்றி நிறத்தை மட்டும் பார்க்க முடியுமா? ஆடியும் என்று அறிஞர் மன்சூர் தானும் கூற முன் வருவாரா? ‘ஆம்’ என்று கூறுவாரேயானால், அவ்வாறு எந்த ஒரு வஸ்த்துவினையும் சேராத தனித்த நிறம் ஒன்றைக் காட்டுவாரா?

இனிப்பு, உறைப்பு, புளிப்பு இவை போன்ற சுவைகளும் ஆதேயமானவைகள்தான். அவையும் அன்னொரு ஆதாரத்தைக் கொண்டுதான் நிற்கும் சுவை என்ற ஆதேயத்தை, அது அண்டி நிற்கும் ஆதாரப் பொருளின்றிச் சுவைக்க முடியாது. சுவையை மட்டு்ம் சுவைக்க முடியுமா? மாம்பழத்தை வாயிலிடாமல் அதன் சுவையை மன்சூர் அவர்களால் அனுபவித்து ருசித்து விடமுடியுமா?

எனவே, சர்வ சிருஷ்டிகளும் அதன் தன்மைகளும் சிருஷ்டிகள் என்ற வட்டத்துக்குள் அடங்குகின்றன. இச்சிருஷ்டிகள் யாவும் ஆதேயமானவை. அவையனைத்தும் பிரம்மம் எனப்படும் அல்லாஹ்வின் தாத்தாகிய ஆதாரத்தைக் கொண்டேதான் நிற்கின்றன. ஆதாரமாகிய பிரம்மம் ஒன்றே. அதில் நின்றும் வெளியாகும் தன்மைகள் செயயல்கள் என்ற ஆதேயங்களோ அனந்தம். அவற்றை ஆதாரத்தை விட்டும் வேறாக்க பிரிக்க தனித்து நோக்க எவராலும் முடியாது.

இதுவரை கூறப்பட்ட விபரங்களினால் செயலும் தன்மைகளும் சிருஷ்டியேயாகும் என்பதும், சிருஷ்டி என்பது அது சுயமாக இயங்க முடியாது என்பதும், அவை இறைவனின் பிரம்மத்தைக் கொண்டு பிரம்மத்திலுயே இயங்குகின்றன என்பதும், சிருஷ்டிகள் மூலமாக நிகழக்கூடிய, வெளிப்படக்கூடிய ஆதேயமான செயல்களும் தன்மைகளும் பிரம்மத்தின் செயல்களும் தன்மைகளுமேயாகும் என்பதும், சிருஷ்டிகளக்கு ஹகீகத்தில் எத்தன்மையம் கிடையாது என்பதும், ஆதாரத்தைக்கொண்டு நிற்கும் ஆதேயமான சிருஷ்டியை எவராலும் எவ்வாதத்தாலும் அதைக் கொண்டு பிரக்க முடியாத என்பதும் தெளிவாகி விட்டன.

சகல செயல்களும், தன்மைகளும் பிரம்மத்தினுடையவை என்றால், “செய்பவன் அவனை (அப்பிரம்மத்தை) விட வேறு எவருமில்லை” என்ற (லா பாஇல இல்லல் லாஹ்) திக்று மறுக்க முடியாத தத்துவமாக பரிணமிக்கின்றதை மன்சூர் அவர்களும் மற்றையோரும் உணரவேண்டும்.

வெட்டும் செயல் ‘கத்தி’யின் வழியாகவும், எரிக்கும் செயல் ‘தீ’ மூலமாகவும், சாப்பிடல் என்ற செயல் “மனிதன்” மூலமாகவும், இனிக்கும் தன்மை “சீனி”யின் மூலமாகவும் ஏற்பட்டாலுங்கூட, அவையாவும் அவ்வஸ்த்துக்களுக்குரியவையோ அல்லது அவ்வஸ்த்துகக்களில் நின்றும் உண்டாகுபவைகளோ அல்ல.

நாம், “முஹம்மத் சாப்பிட்டான்” என்றும் அவன் உறங்கினான் என்றும், சீனி இனித்தது என்றும் வார்த்தையளவில் சொல்லிக் கொண்டாலும், யதார்த்தத்தில் உண்டதும், உறங்கியதும், இனித்ததும் அப்பிரம்மமேயன்றி வேறு ஏது?

சாப்பிடுதல், உறங்குதல் என்பன போன்ற செயல்கள் ஆதேயமான சிருஷ்டிகளேதான். அவை அவற்றின் ஆதாரமான பிரம்மத்தைக் கொண்டே நிற்கின்றன. அப்பிரம்மத்தை விட்டும் அதனை அண்டி நிற்பவைகளைப் பிரிக்க முடியாது.

சாப்பிடுதல் என்ற செயலோ உறங்குதல் என்ற செயலோ அவற்றின் ஆதாரமின்றி நிகழ்வது அசாத்தியமானதேயாகும்.

உண்மையில் முஹம்மத் என்று ஒருவரில்லை என்றால் சாப்ிடுதல், உறங்குதல் என்பதும் அவருக்கில்லை.

சடமாக, சக்தியாக, செயலாக, தன்மையாக இப்படியெல்லாம் இருப்பது பிரம்மம் ஒன்றேயாகும். அப்பிரம்மத்தின் செயல்தான் சகல சிருஷ்டிகளிலும் வெளியாகும். இந்த அடிப்படையில் ஒரு வினாடிக்கு அப்பிரம்மத்தின் (அல்லாஹ்வின்) செயல்கள் எத்தனை கோடி என்று பாருங்கள்?

“வானத்திலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும் அவனிடம் கேட்பர். அவன் ஒவ்வொரு வினாடியும் வேலையில் இருக்கிறான்” (அர்ரஹமான்: 29)

இவ்வசனத்தில் “பிரம்மம்”(அல்லாஹ்) ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு வேலையில் உள்ளான் என்று கூறியுள்ளான். ஒவ்வொரு வினாடியும் அவன் செய்யும் வேலை என்ன? சிருஷ்டிகள் மூலம் நிகழக்கூடிய சகல செயல்களும் அவனுடையவை என்றால் அவன் எங்கே மலம் கழிக்கிறான்? என்று கேட்கவோ, எதைச் சாப்பிட்டான்? எதை உடுத்தான்? என்று கேட்கவோ முடியுமா? அவ்வாறு கேடபதுதான் அறிவுடமையாகுமா?

சகல செயல்களும் தன்மைகளும் பிரம்மத்தினுடையவை என்றால், பிரம்மம் சாப்பிட்டது, பிரம்மம் உறங்கியது, அல்லாஹ் வியாபாரம் செய்தான், அல்லாஹ் மலம் கழித்தான் என்றுதானே சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்லாமல், அப்துல்லாஹ் சாப்பிட்டான், ஆதம்லெப்பை உறங்கினான், இஸ்மாயில் வியாபாரம் செய்தான் என்று சாம் சொல்லக் காரணம்

இதில் கூடிய விபரம் உண்டு. “மஜாஸ் அக்லி”,“ஹகீகத் அக்லி” என்று இரு பிரிவுகள் இருக்கின்றன. அத்தகைய பிரிவுகளைச் சேர்ந்துதான் இதுவுமாகும். “ஆறு ஓடியது, மழை பயிரை முளைக்கச் செய்தது” போன்ற வாசகங்கள் இதற்குகு உதாரணங்களாகும்.

இதுவரை கூறியதிலிருந்து சகோதரர் மன்சூர் அவர்களின் (சகல வஸ்த்துவும் பிரம்மம்தான் என்றால் அவ்வஸ்த்துவில் உள்ள தன்மை அதற்கு மூலமான பிரம்மத்திலும் இருக்க வேண்டும். அதன்படி உண்ணல், பருகல், உறங்கல், திருமணம் செய்தல்,பிள்ளை பெறல் மற்றும் இவைபோன்ற செயல்கள்- தன்மைகள் அல்லாஹ்வுக்கு ஏற்பட்டுவிடுமே என்ற) வாதம் பிழை என்பதும் சிருஷ்டிகளுக்கு செயல்களோ தன்மைகளோ எதுவும் கிடையாது. அவ்வாறிருப்பதாக நம்புவது இஸ்லாமிய அகீதாவுக்கே முரணானது என்பதும் :

நன்மை, தீமை, செயல், தன்மையுட்பட சகல சிருஷ்டிகளும் அவனுக்குச் சொந்தமானவைகளும், அவனில் நின்றுமுள்ளவை என்பதும், சிருஷ்டிகள் என்பது ஆதேயமானவைகளாயிருப்பதால் அவைகளை அதாரமாகிய பிரம்மத்தில் (அல்லாஹ்வில்) நின்றும் வேறாக்க முடியாது என்பதும், ஆதேயமான ஒன்றில் ஆதேயமான இன்னொன்றைச் சேர்ப்பது அசாத்தியம் என்பதும், செயல்களை இரண்டாக வகுக்காமல் அவனில் நின்றுமுள்ளவை என நம்புவது கடமை என்பதும் தெளிவாகி விட்டது.

“றப்பு” (சிருஷ்டிகன்), “அப்து” (சிருஷ்டி) என்று இரண்டு வஸ்த்துக்கள் யதார்த்தத்தில் இல்லவே இல்லை. அடிமை என்பதும் எஜமான் என்பதம் நாமரூபத்தில் உள்ளதேயாகும். ஹகீகத்தாக இருப்பது பிரம்மம் ஒன்றேதான். இதுவே “அல்லாஹ்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அதனால்தான் மூலக்கலிமஹ்வான “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ் அல்லாத தெய்வம் இல்லை) என்ற அத்வைத ஞானக்கருத்தைப் பொதித்ததாக அருளப்பட்டது.

பஞ்சும் அதனாலுண்டான உடைகளும் “வுஜூது” அவைகளின் உள்ளமையைப் பொறுத்து உடைகள் பலதாகத் தோன்றினும், அவற்றின் மூலம் பஞ்சு ஒன்றேயாகும். உடைகள் நாமரூபத்தில்தான் இருக்கின்றதே தவிர, பஞ்சுக்கு “வுஜூது” இருப்பதைப் போன்று உடைகளுக்கம் தனித்தனி வுஜூதுகள் கிடையாது.

எல்லா உடைகளும் பஞ்சுதானாக – பஞ்சின் கோலங்களாக இருந்தாலும், எந்த உடை எந்தவடிவில் என்ன பெயரில் இருக்கிறதோஅந்த உடையை அதற்கான இடத்திற்கு உபயோகிக்க வேண்டியது “ஷரீஅத்”தாகும். தொப்பியை காலிலும், காலுறையை கைக்கும் அணிவது அறிவுடமையாகாது.

அதேபோல், ஒவ்வொரு வடிவத்துக்கு ஏற்ற சட்டமும் உபயோகமுறையும் உண்டு. எல்லாம் பஞ்சு என்பதற்காக இடம், பொருள், ஏவல் தெரியாமல் நாம் அணிந்து கொள்ளக் கூடாது.

வானம் பூமி, உயிருள்ளவை உயிரற்றவை மற்றுமுள்ள யாவும் பிரம்மம் தானாகவே இருந்தாலும் அவற்றில் ஒவ்வொன்றும், அதன் வடிவத்துக்கேற்ற பெயரால் வானம் என்நும்- பூமி என்றும் அழைக்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஏற்றசட்டமும் உபயோகமுறையும் உண்டு. எல்லாம் பிரம்மம் தான் என்பதற்காக நெருப்பை வாயிலிட்டுக் கொள்வதும் மலத்தை தலையில் இறைத்துக் கொள்வதும் பிழை.

எல்லாம் பிரம்மம் என்ற அறிவை ஒருவர் அறிவதும் ஒவ்வொரு வடிவத்துக்கும்(சிருஷ்டிக்கும்) உள்ள உபயோக முறையை அனுசரித்து நடப்பதும் கடமையாகும். “முந்தியவனும் அவனே பிந்தியவனும் அவனே, வெளியானவனும் அவனே உள்ளானவனும் அவனே” என்று அல்லாஹ் கூறியுள்ளான். இங்கு வலியுறுத்தப்படும் தத்துவம் எல்லாம் அவனே (ஹமவோஸ்த்) என்பதேயாகும்.

இத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஓட்டப் பந்தயம் ஒன்றில் முந்தியவனும் பிந்தியவனும் அவன்தான் பிரம்மம்தான் என்று இருவருக்கும் ஒரே பரிசை அல்லது சமமான பரிசை வழங்குவதும், முந்தினவனும் பிந்தினவனும் ஒருவன்தான் என குதர்க்கமாக வாதாடுவதும் அறிவின்மையின் அனர்த்தங்களாகும். வடிவத்துக்கேற்ற சட்டங்களையும், உபயோக முறைகளையும் பேணி நடத்தல் வேண்டும்.

காதணியும், கைவளையலும் தங்கம் தானாகவே இருந்தாலும்; காதணியைக் காதிலும். கைவளையலைக் கையிலும் அணிவதே அறிவுடமையாகும்.

வடிவங்களுக்கான உபயோக முறையை பேணாதவரும், எல்லாம் பிரம்மம் என்றால் மலமும் அல்லாஹ்தானா? எனக் கேட்பவரும் “அக்லு” எனும் புத்தியற்ற பைத்தியகாரராவார்.

மேலும் சகோதரர் மன்சூர் அவர்கள் நான்கு மதுகபுகளின் இமாம்களான ஷாபிஈ, ஹனபி, ஹன்பலி, மாலிக்(ரஹ்) ஆகிகொரைக் குறிப்பிட்டு இவர்கள் நால்வருமே இமாம்கள் என்று கட்டுப்படுத்தி இவர்களிலிருந்து ஆதாரம் தர முடியுமா? என்றும் கேட்டுள்ளார்.

ஆம்! இறைவனருளால் இயன்ற வரை ஆதாரம்தர எம்மால் முடியும். ஆனால் .ந்நால்வரை மாத்திரம் தானா இமாம்கள் என்று ஏற்க முடியும? ஏனையோர்களை (கஸ்ஸாலி போன்றவர்களை) இமாமாக ஏற்க மன்சூரால் ஏன் முடியாது போய்விட்டது. விந்தையான இக்கூற்றுக்கு விளக்கத்தை எதிர்பார்க்கின்றோம்.

மேற்குறிப்பிட்ட நால்வருள் எவராயினும் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்றோ அவ்வாறு சொன்னவனும் நம்பியவனும் காபிராகி விடுவான் என்றோ, சிருஷ்டிகளுக்கும் சுயமான செயல்கள் உண்டென்றோ, அனைத்துமாக வெளியாகியிருப்பது அல்லாஹ்தான் என்பது பிழையென்றோ கூறியிருக்கிறார்களா? அவ்வாறு அவர்களில் எவராவது கூறியிருந்தால் ஒன்றையேனும் சகோதரர் மன்சூர் எடுத்துக்காட்டட்டும், பார்க்கலாம்.

எல்லா உலமாக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் கிரந்தங்களான புஹாரீ, முஸ்லிம், நஸஈ, அபூதாவூத், இப்னுமாஜா, துர்முதி போன்ற அறிவுக் களஞ்சியங்களை வழங்கிச் சென்றோர் இமாம்களில்லையா? இமாம் இப்னுஹஜர். இமாம் நவவி, இமாம் ஜலாலுத்தீன் சுயூதி, இமாம் ஜலாலுத்தீன் மஹல்லி, இமாம் அல்கஸ்ஸாலி, இமாம் பக்றுத்தீன் அர்-றாஸி, இமாம் இப்னுஅறபீ, இமாம் அப்துல்வஹ்ஹாப் அஷ்ஷஅறானி போன்ற இஸ்லாமிய வரலாற்றில் சுட்டிக்காட்டப்படும் பேரறிஞர்கள் எங்கே போய்விட்டார்கள்?

இவர்கள் எல்லாம் இமாம்கள் இல்லையா? இவர்களின் கருத்துக்களை ஏற்கலாகாதா? ஏன்? மன்சூர் விளக்கம் தருவாரா?

எல்லாம் பிரம்மத்தின் தோற்றம் தான் என்ற தத்துவத்தை உலகளாவப் பேசியும், எழுதியும் வைத்துச் சென்றுள்ள இமாம் முஹ்யித்தீன் இப்னு அறபீ(றழி) அவர்களைப்பற்றி இஸ்லாமிய வரலாற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட இமாம்கள் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட இமாம் என்றும், குதுபு என்றும். கரையற்ற கடல் என்றும் புகழ்ந்துரைத்துள்ளார்களே! அத்தகைய இப்னு அறபீ(றழி) அவர்கள் யார்? அவர்கள் இமாம் இல்லையா?

இவர்கள் இமாம் இல்லை என்று இமாம்களில் எவரும் கூறியிருக்கிறார்களா? அல்லது அறிஞர் மன்சூர் மாத்திரம் தான் அவ்வாறு கூறுகிறாரா?

எனவே, பிரம்மம்தான் பிரபஞ்சமாகத் தோற்றுகிறதென்பதற்கும், அவனுக்கு உருவம் உண்டெண்பதற்கும் அல்குர்ஆன். ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள “இல்முத் தௌஹீத்” (ஏகத்துவ ஞானம்) “இல்முல் கலாம்” (பேச்சு ஞானம்) ஆகிய ஞானகலை நூற்களில் மிக விரிவான ஆதாரங்கள் உள்ளன என்பதை மன்சூர் உட்பட யாவரும் அறிய வேண்டும்.

முற்றும்……..

You may also like

Leave a Comment