தியாகங்கள் செய்வோம்! இறைவனைக் காண்போம்!!!

September 9, 2016

கவி – மௌலவீ MJ. அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ)

எல்லாம் அவனாய் இருந்திடும் இறையை

துல்ஹஜ் மாதம் தோன்றிய பிறையை

கண்டதும் எம்மில் அழித்திட்டான் கறையை

அவனை நாமும் போற்றிட வாரீர்!

 

நபிமார் அணியில் தோன்றிய நாதர்

இறைவனின் சோதனை பெற்றிட்ட வேதர்

“கலீலுல்லாஹ்” என்னும் பெயர் பெற்ற ராஜர்

இப்றாஹீம் நபியின் சரித்திரம் கேட்பீர்!

ஆஸரின் அன்பு வித்திட்ட புதல்வர்

ஸாறா ஹாஜர் அன்னையர் கணவர்

இஸ்மாயீல் இஸ்ஹாக் தந்திட்ட முதல்வர்

தியாகத்தின் சரிதை சொல்வதைக் கேளீர்!

 

செல்வங்கள் அதிகம் கொண்டிட வாழ்ந்தார்

மலக்கினில் ஒருவர் இறையிடம் கேட்டார்

இறைவா உன்னை எப்படி மறவார்?

இறைவனும் சொன்னான் நீர் சென்றறிவீர்!

 

கொடியவன் நும்றூத் சூழ்ச்சியும் செய்தான்

அக்கினி குண்டம் அவர்களை எறிந்தான்

நெருப்பே நீயும் குளிர்ந்திடு என்றான்

இறைவனின் சொல்லால் ஈடேற்றம் பெற்றார்!

 

கஃபா கட்டிட நாயனும் சொன்னான்

பெண்ணுடன் மகனை அழைத்தே சென்றார்

இடையில் வனத்தில் விட்டே மீண்டார்

அவரின் தியாகம் அனைவரும் பாரீர்!

 

கனவில் மகனை பழியிட கண்டார்

கண்ணும் விழித்தார் திகைத்தே நின்றார்

மகனை அறுத்திட எண்ணம் கொண்டார்

இத்தியாகமும் இன்று யார்தான் செய்வார்?

 

சோதனை மேல் சோதனை கண்டார்

இறைவனில் பொறுமை கொண்டிட வாழ்ந்தார்

இறையுடன் அவரும் தோழராய் ஆனார்

அனைத்திலும் அவரும் வெற்றியும் கண்டார்

 

தோழா நீயும் அவர்கதை கேட்டாய்

அவரின் தியாக உணர்வினை கண்டாய்

நீயும் இதுபோல் தியாகங்கள் செய்தால்

இறைவனில் நீயென்றும் பெருமிதம் கொள்வாய்

 

பணத்துக்கும் பதவிக்கும் கொள்கையை விட்டால்

குடும்பத்து உறவுக்காய் இறையியல் விட்டால்

மறுமை வாழ்வை இம்மையில் விற்றால்

இறைவனில் என்றும் சோதனை காண்பாய்

 

கொள்கை யுணர்வை நெஞ்சினில் கொள்வாய்

கொள்கையே உயிரென உலகினில் வாழ்வாய்

கொள்கைக்காய் எதையும் விட்டிட துணியாய்

கொள்கையில் வாழ்ந்தே இறைவனை அடைவாய்

 

மரணித்த பின்பும் உயிர்பெற வாரீர்!

இறைவனின் பொருத்தம் பெற்றிட வாரீர்!

கொள்கையில் என்றும் நிலைத்திட வாரீர்!

தியாகங்கள் செய்தே அருள்பெற வாரீர்!!!

You may also like

Leave a Comment