நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு முடி , வேறு பொருட்களை நினைவுச் சின்னங்களாகப் பாவிக்கலாமா?

December 25, 2016

ஆக்கம் : MIM. அன்ஸார் ஆசிரியர்

அகிலம் சிறந்தோங்க நன் நெறிகளைப் புகட்டி , மேலான வாழ்வில் மனிதர்களை நிலை நிறுத்துவதற்கு அல்லும் பகலும் பல தியாகங்களை மேற் கொண்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்த திங்களில் நாம் வீற்றிருக்கின்றோம்.

அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். “நான் கீழ்க்காணும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிரசிலிருந்து நாவிதர் திருமுடியை எடுத்துக் கொண்டிருந்தார். கீழே விழவிருக்கும் அந்தத் திருமுடியை பெற்றுக் கொள்வதற்காக தோழர்கள் வலம் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒரு முடியும் கூட யாரேனும் ஒரு தோழரின் கரத்திலிருந்தே தவிர தரையைத் தொடவில்லை.” (ஆதாரம் : முஸ்லிம்)

“உம்மு ஸலமஹ் றழியல்லாஹுஅன்ஹா அவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு முடிகளிற் சில இருந்தன. யாருக்காவது கண் திருஷ்டியின் தொல்லையோ, அல்லது வியாதியின் சிரமமோ இருந்தால் அந்த முடியை உம்மு ஸலமஹ் றழியல்லாஹு அன்ஹா சுத்தமான நீரில் முக்கி எடுத்து அதனை வியாதியுடையோருக்கு குடிக்கக் கொடுப்பார்கள். அதனால் நோய் குணமாகிவிடும்.” (ஆதாரம்: புகாரீ)

இமாம் பைஹகீ கீழ்க்காணும் நிகழ்வை தெரிவிக்கின்றார்கள். “கலீபஹ் அபூபக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியின் போது நடந்த “யர்மூக்” யுத்தகளத்தில் காலித் இப்னு வலீத் றழியல்லாஹு அன்ஹு தலைமை தாங்கினார்கள். போர் மும்முரமாக நடைபெற்ற போது தளபதி காலித் இப்னு வலீத் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைப்பாகை கீழே விழுந்து விடுகிறது. தளபதி புரவியை விட்டு இறங்கி அதனைத் தேட முனைந்து விடுகின்றார்கள். மற்ற வீரர்களெல்லாம் தளபதியின் செயலைப்பார்த்து,

“நம்மீது எதிரிகளின் அம்புகள் மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் வாள்கள் நம்மீது மின்னலாய்ப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்வா? வீழ்வா? என்ற வினாவின் கொக்கியில் நாம் தொங்கி நிற்கின்ற வேளையில் தளபதி தனது தலைப்பாகையை தேடிக் கொண்டிருக்கின்றாரே!” என ஆச்சரிய முற்றுக் கூறினார்கள்.

இதனைச் செவியேற்ற தளபதி அவர்கள், வீரர்களின் வெறுப்பைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. இறுதியில், தொப்பி – தலைப்பாகையைத் தேடிப் பெற்றுக் கொண்டார்கள். அதன் பின்னே போர்க்களம் புகுந்து வெற்றி ஈட்டினார்கள். தமது செயல் கொண்டு வெறுப்படைந்த ஸஹாபாக்களைப் பார்த்து அதன் காரணத்தை இப்படி விளக்கினார்கள். “என்னுடைய தொப்பியினுள் முஹம்மது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சில திரு முடிகளை வைத்திருந்தேன்.

போர்க்களத்தில் தொப்பி – தலைப்பாகை கீழே விழவும் அந்தத்திருமுடிகளும் ஒரு சமயம் கீழே விழுந்து அதன் மீது மனிதர்களின் கால்கள் மிதிக்க நேர்ந்திடுமோ என அஞ்சியே அதனைத் தேடிப் பெற்றிட முற்பட்டேன். பெற்றும் கொண்டேன். அந்தத் திருமுடியின் பாக்கியத்தால்தான் இந்த யர்மூக் போரிலும் நாம் வெற்றி வாகை சூடினோம். இந்தத் திருமுடிகளை என்னுடன் வைத்துக் கொண்டு, எந்தப் போர்க்களத்திற்குள் சென்றாலும் அதன் பாக்கியத்தால் வெற்றியுடன்தான் திரும்புவேன். (ஆதாரம் : ஹுஜ்ஜதுல் வாஹீ அலல் ஆலமீன்)

“நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரு கால் உறைகள், ஒரு கம்பு, ஒரு வாளுறை என்பன இப்னு அப்தில் அஸீஸ் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் இருந்தன.

அவற்றினை அன்னார் மிகக் கண்ணியத்தோடு பாதுகாத்து அவற்றைத் தினமும் பார்வையிடவும் செய்வார்கள். சிறப்பு விருந்தினர் வருகை தரும் போது “யார் மூலம் உங்களைக் கண்ணியப்படுத்தினானோ அவரின் அனந்தப் பொருட்கள் இவை” என்று கூறுவார்கள். (ஆதாரம்: நூறுல் ஈமான்.)

“முஆவியஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் லுங்கி , சட்டை, மேலாடை , சில திருமுடிகள் … இருந்தன” (ஆதாரம்: இக்மால்)

“நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகளை கீழே விழ விடாது தாங்கிப்பிடித்து பறக்கத்திற்காக பாதுகாத்து வைக்கும் வழக்கம் ஸஹாபாக்களிடம் இருந்தது. (ஆதாரம்: ஷரஹ் முஸ்லிம் , பாகம் 02)

அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். “நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் திருமுடியை கையில் எடுத்துக் கொண்டு இவ்வாறு எச்சரித்தார்கள். “எவனாவது எனது முடியிலிருந்து ஒரு முடிக்கேனும் அவமரியாதை செய்தானேயானால் அவன் மீது சுவனம் ஹறாமாகும்” (அவன் சுவனம் புக மாட்டான்) (அறிவிப்பவர்: இப்னு அஸாகிர், ஆதாரம்: ஜாமிஉஸ் ஸகீர்.)

ஞானகுருவான அபுல் காஸிம் இப்னுல் மஃமூன் என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார்கள். “எங்களிடம் நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபயோகித்த கோப்பை ஒன்று இருந்தது. நோயாளிகளுக்காக அதில் நீரை ஊற்றி வைப்போம். அதன் மூலம் நோயாளிகள் நலம் பெறுவார்கள்” (ஆதாரம்: கிதாபுஷ்ஷபா” – பாகம் 01)

மேற்படி ஆதாரங்களிலிருந்து நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயர் திருமுடிகள் மூலமும், அவர்கள் பாவித்த பொருட்கள் மூலமும் நோய் நிவாரணமும், நினைவுச் சின்னமாகப் பாதுகாத்து வைத்தலும் , அதன் மூலமான பறக்கத்துக்களும் பெறத்தக்கது என்பதை அவதானிக்கலாம். இவ்வாறான சிறப்புக்கள் நபீமாருக்கு உண்டென்பதை பின்வரும் இரு நிகழ்வுகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.

அதே நேரம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கென்று எவ்விதமான தனிச்சிறப்புக்களும் இல்லை. அவர்களும் எம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்தான் என பறை சாற்றும் விளக்கமில்லாதவர்களுக்குப் போதிய போதனைகளையும் இதன் மூலம் பெறக் கூடியதாகவும் உள்ளன.

“உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) நிச்சயமாக வரும். உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு அமைதியும், மூஸாவின் கிளையினரும், ஹாறூனின் கிளையினரும் விட்டுச் சென்றவற்றிலிருந்து சொச்சமும் அதில் (அப் பேழையில்) இருக்கின்றன. அதை மலக்குகள் சுமந்து கொண்டு வருவர். நீங்கள் உண்மை விசுவாசிகளாயிருப்பின் , இதில் உங்களுக்கு நிச்சயமாக அடையாளமுண்டு” (அல் குர்ஆன் 2: 248 )

தாபூத் பேழை பெட்டியினுள் இருந்த பொருட்கள் என்ன? என்பது பற்றி குர்ஆன் விரிவுரையாளர் ஏறத்தாழ ஒருமித்த கருத்தையே முன் வைக்கின்றனர்.

இதனைப் பின்வரும் சான்றாதாரங்கள் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன.

“அந்தப் பெட்டியில் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ஹாத் வேதம் பொறிக்கப்பட்ட சில பலகைத் துண்டுகளும், மூஸா , ஹாறூன் ஆகிய இரு நபீமார்களின் கைக் கோல்களும், ஹாறூன் நபீயின் தலைப்பாகையும் இருந்தன” என இப்னு அப்பாஸ் றழிஹல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள். (ஆதாரம்: அன்வாறுல் குர்ஆன், ஸூறதுல் பகறஹ் தப்ஸீர்)

“பலகைத்துண்டுகள், மூஸா நபீயின் கம்பு, ஆடைகள், தௌறாத் வேதத்தின் ஒரு பகுதி , மூஸா நபீயின் செருப்புக்கள், ஹாறூன் நபீயின் தலைப்பாகை” அப்பெட்டியில் இருந்தன என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.

அந்தப் பெட்டியில் மூஸா நபீயின் கம்பு, செருப்புக்கள் , ஹாறூன் நபீயின் கம்பு, தலைப்பாகை, மன்னுஸ்ஸவ்வாவின் ஒரு பகுதி” இருந்தன. (ஆதாரம்: தப்ஸீர் லுபூபுத் தஃவீல்)

அந்தப் பெட்டியினுள் “பலகைத்துண்டு , மூஸா நபீயின் கம்பு, ஆடைகள், ஹாறூன் நபீயின் தலைப்பாகை” போன்றன இருந்தன. (ஆதாரம்: தப்ஸீர் பைளாவீ)

“இஸ்ரவேலர்கள் எங்கே சென்றாலும் இப்பெட்டியை உடன் கொண்டு செல்வர். இப்பெட்டியினால் அவர்களுக்கு ஓர் அமைதி ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. அதாவது இப்பெட்டி எவ்விடத்திலிருந்ததோ அதனைக் கண்ணுறுகிற அவர்களின் மனமும் சாந்தியடையும். (ஆதாரம்: அன்வாறுல் குர்ஆன்)

“பனூ இஸ்ரவேலர்களிடம் இருந்த அந்தப் பெட்டியினுள் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் , நபீ ஹாறூன் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர்கள் விட்டுச் சென்ற பொருட்களே இருந்தன என்றும் போர்க்களங்களில் இந்தப் பெட்டியினை முன்னால் வைத்து உதவி தேடுவர். வெற்றியும் பெறுவர்” எனவும் தப்ஸீர்களான கபீர், றூஹுல் மஆனீ , ஜலாலைன் போன்றவற்றிலும் காணப்படுகின்றன.

நபீமார்களின் பொருட்களில் அருள் நிறைந்திருக்கின்றது என்பதற்கு மேற்படி பேழை கொண்டிருந்த பொருட்களும் அதன் மூலம் அம்மக்கள் அடைந்த நன்மைகளும் தக்க சான்றுகளாகின்றன.

You may also like

Leave a Comment