நான் மறைந்தால் அவன் வெளியாவான்.

February 17, 2019

اِنْ تَغَيَّبْتُ بَدَا ⚘ وَاِنْ بَدَا غَيَّبَنِيْ

قاله الشيخ الأكبر محي الدين ابن عربي قدّس سِرُّه

நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் என்னை மறைத்து விடுவான்.

இது முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் கூறிய தத்துவம்.

ஒரு மனிதனிடம் “நான்” என்ற உணர்வு இருக்கும் வரை அவன் அல்லாஹ்வை அடையவும் முடியாது, அவனைக் காணவும் முடியாது. ஒரு மனிதனிடமிருந்து எப்போது “நான்” என்ற உணர்வு இல்லாமற் போகின்றதோ அப்போதுதான் அவன் தான் யாரென்று உணர்ந்து கொள்வான்.

“அன்னிய்யத்” என்றால் நான் என்ற உணர்வு “அனானிய்யத்” என்றால் நான் என்ற மமதை “அனானிய்யத் என்ற மமதை நற்பண்புள்ளவர்களிடம் இருக்காது. ஆயினும் இது தீக் குணமுள்ளவர்களிடம் இருக்கும்.

“அன்னிய்யத்” நான் என்ற உணர்வு “நப்ஸை” அறுத்தெறிந்தவர்கள் தவிர மற்றவர்களிடம் நிச்சயமாக இருக்கும். இதை அகற்றுவதும் மிகக் கடினம்.

அல்லாஹ்வை அடைய விரும்பும் ஒருவன் மேற்கண்ட இரண்டு நச்சுப் பாம்புகளையும் கொன்றொழித்தால் மட்டுமே அவன் அல்லாஹ்வை அடைவதற்கு தகுதி பெற்றவனாவான். 

நானறிந்த வரை இதற்கு கை கண்ட மருந்து ஒரு ஞான குருவிடம் “பைஅத்” பெற்றுக் கொள்வது தவிர வேறு வழியில்லை. இது எனது அனுபவம்.

ஒரு இன்ஸான் – மனிதன் – “கமாலிய்யத்” பூரணத்துவம் பெற்ற ஒரு ஞான குருவின் கரம் பற்றி அவர் கூறும் விதிகளைப் பேணி ஆன்மீக வழி நடந்தால் அவனிலுள்ள “அன்னிய்யத்” என்ற நான் எனும் உணர்வு படிப்படியாக குறைந்து முழுமையாக இல்லாமற் போகுமிடத்து அவன் ஆன்மீகத்தில் சுட்டிக்காட்டக் கூடிய ஓர் இடத்தை அடைந்து விடுகிறான். 

அவன் தன்னுணர்வை முற்றாக இழந்ததும் அவன் நினைக்காமலேயே அவனிடம் வளர்ந்து வந்திருந்த “நான்” என்ற உணர்வு இருக்க வேண்டிய இடத்தில் “அவன்” என்ற உணர்வு  - அல்லாஹ் என்ற உணர்வு – ஆட்சி பீடத்தில் அமர்ந்து விடும். 


இவன் மறைந்தான். அவன் வெளியானான். மறைந்தவன் என்றால் மரணித்தவன் என்றே விளக்கம் வரும். “அப்து” என்ற அடிமை மரணித்தால் அந்த அடிமையின் ஆட்சிக் கதிரையில் “றப்பு” என்ற எஜமான் அமர்ந்து விடுவான். 

இதுவே “அடிமை மறைய எஜமான் உதிப்பான்” என்ற தத்துவத்தின் கருத்தாகும்.

“இன்ஸான்” மனிதன் தன்னுணர்வை இழந்துவிட்டால், இவன் இறந்து விட்டால் – “இன்ஸான்” என்ற பாத்திரம் – “மள்ஹர்” மூலம் செயல் வெளியானாலும் அது அல்லாஹ்வின் செயலென்றே கணிக்கப்படும். 


ஒருவன் “நான்” என்ற தன்னுணர்வை இழந்த நிலையில் “அனல் ஹக்கு” நான் அல்லாஹ் என்றே அவன் சொல்வான். ஆயினும் அவ்வாறு அவன் சொன்னது அவனுக்கே தெரியாமலிருக்கும். அவனில்லை எனும் போது அவன் சொன்னான் என்பதும் தவறுதான். “அனல்ஹக்கு” நான் அல்லாஹ் என்று சொன்னவன் அல்லாஹ் தானேயன்றி மனிதனல்ல. ஒரு மனிதன் தான் அல்லாஹ் என்று சொன்னால் தான் “ஷரீஅத்” என்ற வாள் அவனின் கழுத்தை துண்டாக்கும். ஆயினும் அல்லாஹ் நான் அல்லாஹ் என்று சொன்னால் எவ்வாறு “ஷரீஅத்” அவனைக் கொல்லும்?!


இதனால்தான் “மன்சூர் ஹல்லாஜ்” என்பவர் “அனல் ஹக்கு” என்று சொன்னவேளை – “ஹல்லாஜ்” என்ற ஒலிபெருக்கி மூலம் ஹக் தஆலா அவ்வாறு சொன்ன வேளை – அவரை  வெட்டிய நேரம் நான் இருந்திருந்தால் அவரை வெட்டுவதற்கு விட்டிருக்கமாட்டேன் என்று “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், வலீகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் றஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியுள்ளார்கள். இவர்கள் இருவரும் “ஷரீஆ”விற்கு முரணாகவா சொல்லிவிட்டார்கள்? 


இதை வாசிக்கும் நேயருக்கு ஒரு கேள்வி ஏற்படலாம். அதாவது “ஹல்லாஜ்” அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று “பத்வா” தீர்ப்பு வழங்கியவர்கள் ஏன் அவ்வாறு வழங்கினார்கள்?


இதற்கு சுருக்கமான விடை சொல்வதாயின் அவ்வாறு “பத்வா” வழங்கியவர்கள் உலமாஉகளாயிருந்தாலும் கூட அது “ஹல்லாஜ்” மீது அவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் பிரதிபலிப்பென்றே கூற வேண்டும்.        ஏனெனில் உலமாக்கள் வழங்கிய “பத்வா”வில் இந்நிகழ்வு நடந்த காலப்பகுதியில் “பக்தாத்” நகரின் அறிவுக் கண்ணாயும், “ஸெய்யிதுத்தாயிபா” ஸுபிகளின் தலைவராகவும் விளங்கிய ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் கையெழுத்து அந்த “பத்வா”வில் இருக்க வில்லை.

குறித்த அந்த “பத்வா” அரசனால் ஆறு தரம் ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தும் கூட அவர்கள் கையெழுத்திட வில்லை. ஏழாவது தரம் அனுப்பிவைக்கப்பட பிறகுதான் கையெழுத்திட்டார்கள்.

ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் இந்த நடவடிக்கை அவர்கள் அந்த “பத்வா”வை சரி காண வில்லை என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.

அக்காலப்பகுதியில் வாழ்ந்து அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று “பத்வா” வழங்கியவர்கள் பொறாமையினால் அவ்வாறு வழங்கவில்லை என்று யாராவது சொன்னால் அதை நாம் ஏற்றுக் கொண்டு அவ்வாறாயின் அவர்கள் அவ்வாறு “பத்வா” வழங்கியதற்கான காரணம் என்ன? என்று சமாளிப்பவர்களிடம் கேட்போம்.

அதற்கவர்கள் “ஹல்லாஜ்” சொன்னது பிழை என்பதினால்தான் அவ்வாறு “பத்வா” வழங்கினார்கள் என்று சமாளிப்பவர்கள் கதை சொன்னால் அவ்வாறாயின் அந்த “பத்வா”வில் ஆறுதரம் கையெழுத்திட ஜுனைத் றஹிமஹுல்லாஹ் ஏன் மறுத்தார்கள்? என்று அவர்களிடம் கேட்போம்.

ஆறுதரம் மறுத்தாலும் கூட ஏழாவது தரத்தில் கையொப்பமிட்டார்கள் தானே என்று அவர்கள் கூறினால் ஏழாவது தரத்தில் ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கையொப்பமிட்டாலும் கூட அப்போது  அவர்கள் தங்களின் “ஸுபீ” உடையை கழட்டி வைத்து விட்டு ஒப்பமிட்டதேன்? என்று சமாளிப்பவர்களிடம் கேட்போம்.

இங்கு ஏதோ ஓர் இரகசியம் இருக்க வேண்டும். அது எதுவென்று இங்கு நான் எழுத விரும்பினாற் கூட போலி அறிஞர்களின் வாள் என் கழுத்தை கொய்து விடுமென்று அஞ்சுகிறேன். 

ஆனால் ஒன்றை இங்கு எழுதாமலிருக்க என்னால் முடியவில்லை. ஆய்வாளர்கள் நடு நிலையில் நின்று ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எந்த சூழ்நிலையில் ஒப்பமிட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியாதுள்ளது.

நான் எனது நண்பர்கள் இருவருடன் “பக்தாத்” சென்று இமாம் ஜுனைத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் சமாதிக்கு முன்னால் நின்ற போது இமாம் ஹல்லாஜ் அவர்களைக் கொலை செய்வதற்கு நீங்கள் ஏன் ஒப்பமிட்டீர்கள்? என்று கேட்டேன். எனக்கு பதில் கிடைக்க வில்லை. இந்தப் பாவிக்கு எவ்வாறு பதில் சொல்வார்கள்? என்று என்னை நானே இழிந்துரைத்தவனாக மனக் குழப்பத்துடன் “ஸலாம்” கூறி மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். ஜுனைத் நாயகம் அவர்களின் காற்பாதம் என் தலைமேல் வைக்கிறேன். அவர்களின் செருப்பை கழுவிக் குடிப்பதற்குக் கூட நான் தகுதியற்றவன்தான். எனினும் அவர்கள் ஒப்பமிட்டதை என்மனம் நூறு வீதம் ஏற்றுக் கொள்ள வில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

You may also like

Leave a Comment