Wednesday, April 24, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பள்ளிவாயல்களின் நிர்வாகிகளுக்குரிய நிபந்தனைகள்.

பள்ளிவாயல்களின் நிர்வாகிகளுக்குரிய நிபந்தனைகள்.

ஆக்கம் – அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ
——————————————————————————————————-

பரம் பொருளாம் மெய்ப்பொருளின்
தூது வந்தது
மனிதா புரியுதா?
யாரும் இதய சுத்தி பெற்று விட்டால்
எல்லாம் புரியுமே
அமலன் சொன்னது
இதில் அர்த்தமுள்ளது.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ.

அல்லாஹ்வின் பள்ளிவாயலை நிர்வகிப்பவர்களுக்கு எத் தன்மைகள் இருக்க வேண்டுமென்பது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் விபரமாக கூறியுள்ளான். நேற்றைய பதிவிலுள்ள திருக்குர்ஆன் வசனங்களை மீண்டும் ஒரு முறை கவனிக்கவும். (ஸூறதுத் தவ்பா – 17, 18)

அல்லாஹ் கூறிய நிபந்தனைகள்:

நிபந்தனை ஒன்று: அவன் அல்லாஹ்வைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்டவனாக இருத்தல் வேண்டும். “முஃமின்” விசுவாசியாக இருத்தல் வேண்டும்.

நிபந்தனை இரண்டு: இறுதி நாளைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்டவனாக இருத்தல் வேண்டும்.

நிபந்தனை மூன்று: ஐங்காலம் தொழுபவனாக இருத்தல் வேண்டும்.

நிபந்தனை நான்கு: “ஸகாத்” கொடுப்பவனாக இருத்தல் வேண்டும்.

நிபந்தனை ஐந்து: அல்லாஹ்வை மட்டும் அஞ்சுபவனாக இருத்தல் வேண்டும்.

பள்ளிவாயல் நிர்வாகியில் இவ் ஐந்து நிபந்தனைகளும் ஒரே நேரத்தில் இருத்தல் வேண்டும்.
பள்ளிவாயல் நிர்வாகிக்குரிய ஐந்து நிபந்தனைகளில் முதல் நிபந்தனை அவன் அல்லாஹ்வைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்ட “முஃமின்” விசுவாசியாக இருக்க வேண்டுமென்று அல்லாஹ் கூறியுள்ளான்.

அல்லாஹ்வைக் கொண்டு விசுவாசம் கொள்வதில் இரண்டு வகையுண்டு. ஒன்று அவன் வேறு என்றும், அவன் படைத்த சிருட்டி வேறு என்றும் நம்புதல். மற்றது சிருட்டி என்பது அவன் தானானதேயன்றி அவனுக்கு வேறானதல்ல என்றும், சிருட்டி என்பது அவனின் “தஜல்லீ” வெளிப்பாடு என்றும் நம்புதல்.

இவ்விரு வகை நம்பிக்கையில் முந்தின நம்பிக்கை போலி நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை பற்றி ஆழமாக ஆய்வு செய்தால் இதில் “குப்ர்”, “ஷிர்க்”என்று சொல்லப்படுகின்ற இணைவைத்தல் மறைந்திருப்பது தெளிவாகும்.

இந்த வகை நம்பிக்கையுடையோருக்கே يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ விசுவாசிகளே! அல்லாஹ்வைக் கொண்டும், அவனின் திருத்தூதரைக் கொண்டும் விசுவாசம் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

அல்லாஹ் இவ்வசனத்தின் மூலம் விசுவாசம் கொண்டவர்களை அழைத்து மீண்டும் விசுவாசம் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளான். விசுவாசம் கொள்ளாதவர்களையே விசுவாசம் கொள்ளுமாறு சொல்ல வேண்டும். இதுவே நியதி. மாறாக விசுவாசம் கொண்டவர்களை மீண்டும் விசுவாசம் கொள்ளுமாறு சொல்வது “தஹ்ஸீலுல் ஹாஸில்” تحصيل الحاصل நடத்தி முடிந்த ஒன்றை மீண்டும் நடத்துமாறு சொல்வது போன்ற அர்த்தமற்ற ஒன்றாகும். அர்த்தமற்ற எதையும் அல்லாஹ் செய்வதுமில்லை. சொல்வதுமில்லை.

எனவே, “ஈமான்” விசுவாசம் கொண்டவர்களை அழைத்து மீண்டும் விசுவாசம் கொள்ளுமாறு சொன்னது அவர்கள் முதலில் விசுவாசம் கொண்டது பிழை என்பதினாலாகும். பிழையான விசுவாசம்தான் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற விசுவாசமாகும். (ஹக்கு வேறு கல்கு வேறு என்ற விசுவாசமாகும்)

இந்த விசுவாசம் பிழையானதாயிருப்பதால் பிழையான விசுவாசம் கொண்டுள்ள ஒருவர் எதார்த்தத்தில் விசுவாசி அல்ல.

ஆகையால் பள்ளிவாயல் நிர்வாகி விசுவாசியாக இருக்க வேண்டுமென்பது பிழையான இந்த விசுவாசமுள்ளவரை எடுத்துக் கொள்ளாது. எனவே, பள்ளிவாயல் நிர்வாகியாக இருப்பவர் ஸூபிஸமும், தரீகா ஞானமும் கூறுகின்ற விசுவாசியாக இருக்க வேண்டுமென்பது தெளிவாகிறது. அதாவது சிருட்டி என்பது அல்லாஹ் தானானதேயன்றி அவனுக்கு வேறானதல்ல என்றும், சிருட்டி என்பது அல்லாஹ்வின் “தஜல்லீ” வெளிப்பாடு என்றும் நம்பியவன்தான் பள்ளிவாயல் நிர்வாகியாக இருக்க வேண்டுமென்பது உறுதியாகிவிட்டது.

பள்ளிவாயல் நிர்வாகிக்கு அல்லாஹ் கூறியுள்ள இந்த நிபந்தனையுள்ள ஒருவனை வலை விரித்து தேடிக் கண்டுபிடிப்பது கூட கஷ்டமானதாக, அல்லது அசாத்தியமானதாக இருந்தால் இந்த இடத்திலிருந்து ஒரு படியேனும் இறங்கி அவனுக்குரிய நிபந்தனையை தளர்த்த வேண்டும். தளர்த்துவதென்றால் அந்த நிபந்தனையை முழுமையாக விட்டுவிடாமல் அவன் குறைந்தபட்சம் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான இருபது “ஸிபாத்” தன்மைகளையும், அவனுக்கு “முஸ்தஹீல்” ஆன, அவனில் இருக்க முடியாத இருபது “ஸிபாத்” தன்மைகளையும், அவனுக்கு “ஜாயிஸ்” ஆன, அவனில் இருப்பதற்கு ஆகுமான ஒரு “ஸிபத்” தன்மையையும் அந்த நிர்வாகி அறிந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தல் அவசியம்.

இவ்வாறு முடிவு செய்தால் மட்டும்தான் குறித்த நிபந்தனையுள்ள ஒருவனைத் தேடியாவது எடுக்க முடியும். ஆயினும் இதுவும் கடினமானதே.

இக்காலத்தில் பள்ளிவாயல் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்படுவோர் அல்லாஹ் கூறிய நிபந்தனைகளை கருத்திற் கொண்டு தெரிவு செய்யப்படாமல் பணம், பட்டம், பதவி என்பவற்றை கருத்திற் கொண்டே தெரிவு செய்யப்படுகிறார்கள். இது முற்றிலும் திருக்குர்ஆனுக்கு முரணானதாகும்.

சுருக்கமென்னவெனில் பள்ளிவாயல் நிர்வாகியாகத் தெரிவு செய்யப்படுபவர் உண்மையான விசுவாசியாக இருக்க வேண்டுமேயன்றி போலியான விசுவாசியாக இருத்தல் கூடாது. ஸூபிஸமும், தரீகாவும் கூறுகின்ற நிபந்தனையுள்ள ஒரு விசுவாசி தெரிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய ஒருவர் கிடைக்காத போது அல்லாஹ்வின் 41 “ஸிபாத்” தன்மைகளையும் அறிந்த ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். இதற்கு மாற்றம் செய்வது திருக்குர்ஆனுக்கு மாற்றம் செய்வதாகிவிடும்.

அல்லாஹ் சிருட்டி தானானவனா அல்லது வேறானவனா என்ற விபரமறியாமல் பொதுவாக அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று மட்டும் அறிவது “ஈமான்” விசுவாசமாகாது. ஸூபிஸமும், தரீகாவும் கூறும் விசுவாசமே சரியான ஈமானும், விசுவாசமுமாகும். பொதுவாக அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று மட்டும் நம்புதல், விசுவாசம் கொள்ளுதல் சரியானதென்று ஒருவன் வாதிட்டால் அவன் அப்புஹாமி, அருணாசலம், பெர்ணந்து போன்ற பிற மதத்தவர்களையும் விசுவாசி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் இறைவன் ஒருவன் உள்ளான் என்று பொதுவாக நம்பியவர்களேயாவர். அவர்கள் இறைவனை மறுக்கும் நாத்திகர்கள் அல்ல.

மேற்கண்ட மூவரும் இறைவனை நிராகரிக்கும் “முல்ஹித்”கள் அல்ல. நாத்திகர்கள் அல்ல. அவர்களும் “முஃமின்” ஆத்திகர்களேயாவர். அவர்கள் செய்கின்ற தவறு விக்கிரகங்களையும், சிலைகளையும் வணங்குவதேயாகும். இதை இஸ்லாம் சரிகாணவில்லை.

இத்துடன் பள்ளிவாயல் நிர்வாகிக்கு அல்லாஹ் கூறியுள்ள ஐந்து நிபந்தனைகளில் ஒன்று நிறைவுற்றது.

நிபந்தனை இரண்டு: பள்ளிவாயல் நிர்வாகிக்குள்ள இரண்டாவது நிபந்தனை அவன் இறுதி நாளைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்டவனாயிருத்தல்.

இன்று வாழும் முஸ்லிம்களில் அநேகர் இந்த நம்பிக்கையுள்ளவர்களேயாவர். இந் நம்பிக்கையிலும் சற்று விளக்கத்துடன் கூடிய நம்பிக்கை இருத்தல் வேண்டும்.

நிபந்தனை மூன்று: ஐந்து நேரம் தொழக்கூடியவனாயிருத்தல். பள்ளிவாயல் நிர்வாகி தொழுபவனாக இருந்தால் போதும். தவிர்க்க முடியாத சில நேரங்களில் தொழுகை தவறினாற் கூட அதைக் “கழா” செய்வதுடன் ஏனைய தொழுகைகளில் பேணுதல் உள்ளவனாக இருப்பதவசியம்.

வெள்ளிக்கிழமை மட்டும், விஷேட தினங்களில் மட்டும் தொழுபவனாக இருத்தல் கூடாது.

நிபந்தனை நான்கு: “ஸகாத்” கொடுப்பவனாக இருத்தல் வேண்டும். இது பணக்காரனாக இருக்கும் நிர்வாகிக்கு மட்டுமுரிய நிபந்தனையாகும். இவர்கூட வருடாந்தம் ஸகாத் கொடுப்பவனாக இருக்க வேண்டுமேயன்றி வாழ்நாளில் ஒரு தரம் மட்டும் கொடுத்தால் போதுமென்ற கொள்கையுள்ளவராக இருப்பது கூடாது.

நிபந்தனை ஐந்து: அல்லாஹ்வை மட்டும் அஞ்சுபவனாக – பயப்படக் கூடியவனாக இருத்தல் வேண்டும். இதன் சுருக்கம் என்னவெனில் பதவியுள்ளவர்களுக்கும், பணமுள்ளவர்களுக்கும் ஒரு நீதியும், அவை இல்லாதவர்களுக்கு இன்னொரு நீதியும் சொல்லக் கூடியவனாக இருத்தல் கூடாது.

ஒரே நேரத்தில் இவ் ஐந்து நிபந்தனைகளும் உள்ள ஒருவர் அல்லாஹ்வின் பள்ளிவாயல் நிர்வாகியாயிருப்பதற்கு பொருத்தமானவர்தான்.

பள்ளிவாயல் நிர்வாகிகளாயிருப்பதற்கு மேற்கண்ட ஐந்து நிபந்தனைகளும் உள்ளவர்கள் உலமாஉகள் – மார்க்கம் கற்றவர்களேயாவர். எந்த ஒரு பள்ளி நிர்வாகமாயினும் அதன் உறுப்பினர்களில் அதிகமானோர் உலமாஉகளாயிருப்பதே எல்லா வகையிலும் சிறந்ததாகும்.

இன்று உலமாஉகள் புறம் தள்ளப்படுகிறார்கள். ஈமானும், இஸ்லாமும் தெரியாத பணம் படைத்தவர்களும், பதவியுள்ளவர்களும், தீவரவாதிகளும், பயங்கரவாதிகளுமே தெரிவு செய்யப்படுகிறார்கள். இது திருக்குர்ஆனுக்கும், நபீ வழிக்கும் முற்றிலும் முரணானதாகும்.

கலப்பு நிர்வாகம் கடைசி வரை சரிவராது. ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகளும், அதற்கு எதிரான கொள்கைவாதிகளும் கலந்திருக்கின்ற நிர்வாகத்தால் பிரச்சினைகளும், சிக்கல்களும் உருவாகுமேயன்றி தீர்க்கமான எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமற் போய்விடும். இழுபறியிலேயே காலம் கடந்து செல்லும். உருப்படியான எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாமற் போய்விடும். கயிறு இழுக்கும் போட்டி பள்ளிவாயல் நிர்வாகத்தில் இருப்பது கூடாது.

கலப்பு நிர்வாகத்தால் பிரச்சினைகள் உருவாகி அடிதடி, கைகலப்புகள் ஏற்படுவதால் எந்த ஊராயினும் அங்கு ஸுன்னீகளுக்கென்று தனியான பள்ளிவாயலும், மற்றவர்களுக்கென்று தனியான பள்ளிவாயலும் இருக்க வேண்டும். அல்லது கலப்பு நிர்வாகத்திலுள்ள மாற்றுக் கொள்கையுடையோர் ஸுன்னீகளின் தீர்மானங்களை எதிர்த்து குழப்பங்களை ஏற்படுத்தாமல் ஸுன்னீகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறுதான் கலப்பு ஜம்இய்யதுல் உலமா சபையின் நிலையுமாகும்.

பள்ளிவாயல் “இமாம்” தொழுகை மற்றும் நிகழ்வுகள் நடத்துபவர் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுள்ளவராகவும், “அஷ்அரிய்யா” கொள்கையுள்ளவராகவும் இருத்தல் அவசியமாகும்.

காத்தான்குடி ஜாமிஉள்ளாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் நிர்வாகம் கலப்பு நிர்வாகமாக இருப்பதினால்தான் நிர்வாகிகளுக்கிடையில் கருத்து மோதல்களும், ஒழுக்கமற்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. அண்மையில் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் ஒரு நாளிரவு “இஷா” தொழுகைக்கான “அதான்” பாங்கு கூட சொல்லப்படாமல் விட்டது “மஹல்லா”வாசிகளின் கண்களைக் குளமாக்கியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments