பெருமையை நீக்கி பேரின்பம் காண்போம்

February 1, 2018

ஆக்கம் – மௌலவீ ASM. இர்ஷாத் றப்பானீ
———————————–

ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து அவன் மரணிக்கும் வரை பல்வேறு “அமல்”களை வேலைகளை செய்கின்றான்.இதில் சில வேலைகள் இறைவனால் அவனுக்கு கட்டாயமாக்கப்பட்டவைகள், இன்னும் சில அவனுக்கு சுன்னத்தாக்கப்பட்ட வேலைகள்,மற்றும் அவன் விரும்பினால் செய்யலாம் விரும்பாமல் விட்டால் செய்யத்தேவையில்லை என்று அவனிடம் விருப்பம் கொடுக்கப்பட்ட வேலைகள்.இன்னும் சில அவனுக்கு தடைசெய்யப்பட்ட வேலைகள்.இவ்வாறு பல படித்தரங்களையுடைய வேலைகளை மனிதன் செய்கின்றான்.
மேற் சொன்னவாறு பல வேலைகளைச் செய்தாலும் தடைசெய்யப்பட்ட வேலைகளை தவிர ஏனைய அனைத்து வேலைகளும் இறைவனுக்காகவே செய்யப்படவேண்டும்.அதாவது ஒரு மனிதன் ஒரு நல்ல காரியத்தை செய்யும் போது நான் அல்லாஹ்வுக்காக, அவனை பயந்தவனாக, அவனின் திருப் பொருத்தத்தை நாடியவனாகவே செய்கின்றேன் என எண்ணிக் கொள்ளவேண்டும்.மறாக தற்பெருமைக்காக,மற்றவர்கள் எம்மை பாராட்ட வேண்டும் என்ற முகஸ்துதிக்காக,மற்றவர்களை பயந்தவனாக ஒரு வேலையை,வணக்கத்தை செய்தால் அங்கு அவர் தன் இறைவனை மறந்து ஒரு சிருஷ்டியின் அன்பை ஆதரவை எதிர்பார்த்தவராக மாறுகின்றார்.இதன் மூலம் இறைவனின் அன்பைவிட்டும், பொருத்தத்தை விட்டும் அவர் தூரமாகிப்போய்விடுகின்றார். தொடரான இவரது இந்த கெட்ட எண்ணத்தினால் இறைவனுக்கும் இவருக்குமுள்ள தூரம் அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையாது.
நல்ல வணக்கங்களை எந்த நோக்கத்துக்காக செய்யுமாறு நாங்கள் பணிக்கப்பட்டோமோ அந்த நோக்கம் இவ்வாறான கெட்ட எண்ணங்களால் நிறைவேறாது.எனவே நாம் எம் வாழ்வில் செய்யக்கூடிய அனைத்து நன்மையான காரியங்களிலும் இறைவனின் திருப் பொருத்தத்தை,அவனின் அன்பை மாத்திரமே விரும்ப வேண்டும். தற்பெருமைக்காகவோ, மற்றவர்கள் எம்மைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவோ, மற்றவர்களுக்கு பயந்தோ எமது வணக்கங்களை செய்யக்கூடாது.இயன்றவரை எம் எண்ணங்களை இறைவனுக்காவே செய்கின்றேன் என்று மாற்றிக் கொள்ளவேண்டும்.இல்லையேல் எம் வணக்கங்கள் هباءً منثورا பரத்தப்பட்ட புழுதிபோல மறுமையில் காட்சியளிக்கும். யானை உண்ட விளாங்கனி போல் எதுவித பிரயோசனமும் எமக்களிக்காது.

உதாரணமாக நாம் தொழுகையை எடுத்துக் கொள்வோம். ஒருவர் தொழுவதற்காக பள்ளிவாயலுக்கு செல்ல நினைத்தால் அவர் தனது உள்ளத்தில் இறையச்சத்தை கொண்டுவர வேண்டும்.இறை பொருத்தத்தை நாடி,இறைகாட்சியை விரும்பியே பள்ளிவாயலை நோக்கிச் செல்ல வேண்டும்.மாறாக ஏதோ ஒரு கடமையை நிறைவேற்ற வேண்டும் அல்லது மற்றவர்கள் எம்மை தப்பாக நினைப்பார்கள்,மற்றவர்கள் எம்மை பாராட்ட வேண்டும் என்பன போன்ற நஜீஸான எண்ணங்களை உள்ளத்தில் வைத்துக் கொண்டு பள்ளிவாயலுக்குச் சென்று ஆயிரம் ரக்அத்துக்களை தொழுதாலும் அதன் மூலம் எந்த வித பிரயோசனமும் அவருக்கு கிடைக்காது.

குறிப்பாக முகஸ்துதி,தற்பெருமை இவை இரண்டையும் நாம் நீக்கிவிட வேண்டும். முகஸ்துதி என்பது ஒரு கொடிய நோயாகும்.(அதாவது மற்றவர்களின் விருப்பு வெறுப்புக்காக நாம் எமது வணக்கங்களை செய்வது.)இந்த முகஸ்துதியானது பலதரப்பட்ட வகைகளாக ஒரு மனிதனின் உள்ளத்தில் இடம்பெறுகின்றது.எந்த அளவுக்கு என்றால் ஒரு மனிதன் தான் இது நல்ல விடயம் என்று எண்ணிக்கொள்வான் அனால் அதை அவன் முகஸ்துதிக்காகவே செய்தான் என்பதை உணர மாட்டான்.இவ்வாறு ஒரு மனிதன் அறியாமலேயே முகஸ்துதி என்ற இந்த கொடிய நோய்க்கு ஆளாகின்றான்.இதே போன்றதுதான் தற்பெருமையும்.அதுவும் அவன் அறியாமலேயே அவனுடன் ஒட்டிக் கொள்கின்றது.
சூபியாக்கள் எமக்கு இந்த தற்பெருமையைப் பற்றி விளக்கும் போது வணக்கங்களை செய்யும் போது நீ எக்காலமும் தற்பெருமையை தவிர்ந்துகொள்.ஏனெனில் தற்பெருமை என்பது இறைவனின் அருளை விட்டும் உன்னை நிராசையாக்கிவிடும்,அவனுடைய நெருக்கத்தை விட்டும் உன்னை தூரமாக்கிவிடும்,அவனுடைய படித்தரங்களை விட்டும் உன்னை குருடாக்கிவிடும்,அகப்பார்வை என்னும் ஔியை உன்னிலிருந்து நீக்கிவிடும்,வணக்கங்களில் கிடைக்கக் கூடிய இன்பங்களை இல்லாமல் செய்துவிடும்,அவனை அறிந்து தெளியக்கூடிய எண்ணத்தை தடுத்துவிடும்,சிலவேலைகளில் உன்னுடைய வணக்கங்கள் உன் முகத்திலேயே திருப்பியடிக்கப்படும்.இதனால் நீ அழிந்தே போய்விடுவாய்.ஏனெனில் இறைவன் பெருமை உள்ளவர்களின் வணக்கங்களை அவர்கள் தௌபாச் செய்து அப்பெருமையிலிருந்து மீளும் வரை ஏற்றுக் கொள்ளமாட்டான்.என்று கூறியுள்ளார்கள்.

அதுமாத்திரமல்ல கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் (யாருடைய உள்ளத்தில் கடுகளவேனும் பெருமை இருக்கின்றதோ அவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்)

மேற்கண்ட நபி மொழியும், சூபியாக்களின் அறிவுரைகளும் பெருமை என்பது எவ்வளவு தூரம் ஒரு மனிதனை மிருகமாக மாற்றுகின்றது என்பதை உணர்த்துகின்றன.பெருமையென்றால் என்ன? அது எவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றது?நாம் செய்யும் வணக்கங்களில், செயற்பாடுகளில் இப் பெருமை எவ்வாறு ஊடுருவி எம்மை இறைவனை விட்டும் தூரப்படுத்துகின்றது என்பதை கீழ்வரும் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சம்பவம் எமக்கு படிப்பினையாக அமைகின்றது.

இப்றாஹீம் அலஹிஸ்ஸலாம் அவர்கள் ஓர் இரவு முழுவதும் நின்று வணங்கினார்கள்.காலை நேரமாகிய போது தான் இரவு முழுதும் வணங்கியதை நினைத்து தன் உள்ளத்திலே ஆனந்தம் கொண்டார்கள்.அந்த ஆனந்தத்திலே “இப்றாஹீமுடைய றப்பு நல்ல ரப்பாக ஆகிவிட்டான்.இப்றாஹீம் நல்ல அடியானாக ஆகிவிட்டார்” என்று கூறினார்கள்.பகல் நேரம் வந்தபோது அவர்களுடன் சாப்பிடுவதற்கு யாருமே இருக்கவில்லை.இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சாப்பிடும் போது யாராவது ஒருவர் தன்னுடன் கூட இருந்து சாப்பிடுவதை விரும்புபவர்களாக இருந்தார்கள். யாருமில்லாத காரணத்தால் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்து ஒருவரை தேடினார்கள்.அந்த நேரத்தில் இறைவன் இரண்டு மலக்குகளை வானத்திலிருந்து மனித உருவில் இறக்கினான்.அவ்விருவரையும் கண்ட இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பகல் உணவு உண்பதற்காக அவர்களை அழைத்தார்கள்.அவ்விருவரும் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவ்விருவரிடமும் நாங்கள் அந்த தோட்டத்துக்கு செல்வோம் ஏனெனில் அங்கேதான் நீர் ஊற்று இருக்கின்றது.அங்கு சென்று சாப்பிடுவோம் என்று கூறி அவர்களை அழைத்துச் சென்றார்கள்.தோட்டத்தை அடைந்ததும் அங்கே இருந்த நீர் ஊற்று நீர் இல்லாமல் வறண்டு கிடப்பதை கண்டு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெட்கப்பட்டார்கள்.இதை அவதானித்த அந்த இரண்டு மலக்குகளும் இப்றாஹீமே!உங்களின் இறைவனிடம் இந்த ஊற்றிலே நீரை மீட்டுத்தரும்படி துஆ செய்யுங்கள் என்று கூறினார்கள்.அவ்வாறே இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துஆ செய்தார்கள்.ஆனால் ஊற்றில் நீ்ர் வரவில்லை.இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவ்விருவரையும் துஆ செய்யுமாறு பணித்தார்கள்.அவர்களில் ஒருவர் துஆ செய்தார் ஊற்றிலே நீர் வந்தது.மற்றவர் துஆ செய்தார் நீர் நிரம்பி வழிந்தது.இதன் பின்னர் அவ்விருவரும் விடயத்தை கூற ஆரம்பித்தார்கள்.நாங்கள் இருவரும் மலக்குகள்.நீங்கள் முழுஇரவும் வணங்கியதை நினைத்து உங்கள் உள்ளத்தில் பெருமைப்பட்டதன் காரணமாகவே இறைவன் உங்கள் துஆவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று விடயத்தை தெளிவுபடுத்திச் சென்றார்கள்.(இந்த சம்பவத்தை எடுத்துக் கொண்டு நபிமார்கள் பெருமையுடன் வாழ்ந்தார்கள் என்று கூறுவது அறிவீனமாகும்.இவ்வாறான சம்பவங்கள் நபிமார்களின் வாழ்க்கையில் நடப்பது அவர்களின் உம்மத்துக்கள் அதன் மூலம் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காகவேயாகும்.)

அன்புள்ள ஆன்மீகச் சகோதரர்களே! மேற் சொன்ன இந்த சம்பவம் எமக்கு நிறைய படிப்பினைகளைச் சொல்லிக்காட்டுகின்றது.உண்மையில் தான் செய்த நல்ல அமல்களை நினைத்துத்தான் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவ்வாறு கூறினார்கள் ஆனால் அது கூட பெருமையின் அடையாளமாகும் என்பதை இறைவன் எமக்கு உணர்த்தியுள்ளான். அதுமாத்திரமல்ல இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் خَلِيْلُ الله இறைவனின் கூட்டாளி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்கள் அவர்களின் நிலையே இவ்வாறென்றால் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களின் நிலையை நாம் என்னவென்று சொல்வது.

எனவேதான் சூபியாக்கள் எங்களுக்கு உன்னுடைய வணக்கங்களும்,அனைத்து நன்மையான செயற்பாடுகளும் இறைவனின் நல்லனுகூனத்தை கொண்டும்,அவனின் நிஃமத்தை கொண்டும்,அவனின் சிறப்பை கொண்டும்,அவனின் றஹ்மத்தை கொண்டும்,அவனின் அன்பைக் கொண்டுமே இடம்பெறுகின்றன என்று நீ உறுதி கொள்.இறைவனின் முன்னிலையில் தன்னைத் தாழ்த்தி பணிந்தவனாக அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்துடன் நீ வணங்கு.என்று கூறியுள்ளார்கள். இதனால்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீ இறைவனை பார்ப்பவனைப் போல் வணங்கு.நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.இந்த அடிப்படையில் நாங்கள் வணக்கம் செய்யும் போதுதான் அதில் எமக்கு இன்பம் கிடைக்கும்.

இறைவன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹீ அறிவித்தான்.”நீங்கள் என்னை வணங்குவதற்காக தயாரானால் உங்களின் நப்ஸ்சை தாழ்த்தி, பலவீனப்படுத்தி,பயந்த நிலையில் என்னை வணங்குங்கள்.அதுதான் ஏற்றமானது.இன்னும் நீங்கள் என்னை உங்களின் உறுப்புக்கள் நடுங்கிய நிலையில் அழையுங்கள்”என்றும் இவ்வாறே நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹீ அறிவித்தாகவும் ஹதீதுகள் இடம் பெறுகின்றன.

நபீமார்களின் தறஜாவை இவ்வுலகில் யாரும் அடைந்து கொள்ளவில்லை அப்படி இருந்தும் இறைவன் நபிமார்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருப்பது பாமரமக்களான எங்களை தூக்கத்திலிருந்து அதட்டி எழுப்புவது போலுள்ளது.காரணம் இறையச்சத்துடன் அவனைப் பணியாமல் வேறு நோக்கங்களுக்காக வணங்குவது அது இறைவனிடத்தில் வணக்கமாக கருதப்படமாட்டாது.அதுமாத்திரமல்லாமல் அந்த வணக்கத்தின் மூலம் எந்தவொரு பிரயோசனமும் எமக்கு கிடைக்காது.

இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.என்ற இஹ்லாஸான தூய எண்ணத்தோடு வணக்கங்களை செய்யும் போதுதான் எமக்கு அந்த வணக்கங்களின் மூலம் இறைகாட்சி என்ற பேரின்பம் கிடைக்கும்.வரலாறுகளை நாங்கள் படித்துப்பார்க்கின்ற போது நபிமார்கள், சஹாபாக்கள்,வலீமார்கள்,பெரியோர்கள் இப்படிப்பட்ட பேரின்ப காட்சியிலே மூழ்கி தங்களையே மறந்து இருந்த பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.குறிப்பாக தொழுகையில் இவ்வாறான பேரின்ப நிலையை அவர்கள் அதிகமாக அடைந்துள்ளார்கள்.

உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் முதுகில் பாய்ந்த அம்பை தோழர்கள் அவர்கள் தொழும்போது பிடுங்கி எடுத்தார்கள்.தொழுது முடிந்த பிறகு தன்முதுகை தொட்டவர்களாக எங்கே என்முதுகில் இருந்த அம்பு என கேட்க நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது நாங்கள் அதைப் பிடுங்கி விட்டோம் நாயகமே என்று தோழர்கள் கூற அப்படியா எனக்கு அது தெரியாது என்று பதில் கூறினார்கள்.உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த நிலையை அவர்களின் எதிரிகளும் அறிந்து வைத்திருந்தார்கள் அதனால்தான் வீரத்திலே சிங்கமாகிய அவர்களின் முன்னால் நின்று எதிர்க்க சக்கியற்ற அவர்களின் எதிரிகள் அவர்களை கொலை செய்ய சரியான தருணம் அவர்கள் தொழும்போது அவர்களை வெட்டுவதுதான் என்று முடியுசெய்து தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களை வெட்டினார்கள்.

முஸ்லிம் இப்னு யாஸீர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகைக்காக நின்றார்களானால் இறைவனின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஒரு சிறிய சத்தத்தையும் கேட்கமாட்டார்கள்.ஒரு நாள் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களின் வீடு தீப்பிடித்து எரிந்தது.மக்கள் தீயை அணைத்து அவர்களை வெளிப்படுத்த முயற்சி செய்தார்கள்.ஆனால் நெருப்பை முழுமையாக அணைக்கும் வரை அவர்கள் எதுவுமே அறியாதவர்களாக தொழுது கொண்டே இருந்தார்கள்.இன்னுமொருநாள் அவர்கள் ஜும்ஆஹ் பள்ளியொன்றில் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களின் தோளின்மேல் பெரிய பாம்பு ஒன்று விழுந்தது.இதைக்கண்ட மக்கள் திடுக்கிட்டார்கள்.ஆனால் அவர்கள் எதையுமே உணராதவர்களாக தொழுது கொண்டே இருந்தார்கள்.

சஃதுப்னு முஆத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையில் நிற்கும் போது இவ்வுலக எண்ணம் அவர்களின் உள்ளத்தில் வந்தால் தொழுகையை விட்டு விட்டு மீண்டும் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.

உத்பதுல் குலாம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் குளிர் காலத்தில் தொழும்போது அவர்களிலிருந்து கடுமையாக வியர்வை வெளியேறக் கூடியவர்களாக இருந்தார்கள்.இதுபற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட போது இறைவனின் முன்னால் நிற்கும் போது ஏற்படக்கூடிய வெற்கத்தினாலேயே இவ்வாறு எனக்கு வியர்வை வெளியேறுகின்றது என கூறினார்கள்.

அம்மாறுப்னு சுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழும்போது முன்னால் அவர்களின் புதிய பாதணி இருந்தது.தொழுது கொண்டிருக்கும் போது அவர்களின் புதிய பாதணியின் பக்கம் ஒரு முறை திரும்பிப் பார்த்தார்கள் அது இருக்கின்றதா?இல்லையா? என்று.இவ்வாறான எண்ணம் வந்ததன் காரணமாக உடனேயே தொழுகையை விட்டு விட்டு தனது பாதணியை எடுத்து எறிந்து விட்டார்கள்.அதன் பின்னர் அவர்கள் மரணிக்கும் வரை பாதணி அணியவேயில்லை.

றபீஉப்னு கய்தம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழும்போது அவர்களின் முன்னால் இருபதாயிரம் திர்ஹம் பெறுமதியான அவர்களின் குதிரை இருந்தது.அந்நேரம் அங்கு வந்த ஒரு கள்வன் அதை திருடிச் சென்றான்.இதையறிந்த மக்கள் தொழுகை முடிந்த பிறகு அவர்களுக்கு ஆருதல் கூறினார்கள்.அதற்கு அவர்கள் குதிரையை திருடுவதை நான் அறிந்தேன் .இருந்தாலும் நான் அந்தக் குதிரையைவிட மிக விருப்பமான ஒரு விடயத்தில் மூழ்கி இருந்தேன் என கூறினார்கள்.சிறு நேரத்தின் பின்னர் அவர்களின் குதிரை அவர்களுக்கு முன்னால் வந்து நின்றது.

இவைகளெல்லாம் தொழுகையில் பெரியார்களுக்கு கிடைத்த இன்பமான நிலைகள்.இது போன்ற நிலைகள் தொழுகைக்கு வெளியேயும் நபிமார்கள்,ஸஹாபாக்கள்,ஸுபியாக்கள், பெரியோர்களுக்கு நிகழ்ந்துள்ளது.

அவைகள் அனைத்தையும் இங்கு குறிப்பிட்டால் இச்சிறு கட்டுரை ஒரு நூலாக மாறிவிடும்.கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொடக்கம் அனைத்து நல்லடியார்களுக்கும் இவ்வாறான நிலமைகள் தொழுகையிலும்,தொழுகையல்லாத நேரத்திலும் இடம்பெற்றுள்ளன.இன்ஷா அல்லாஹ் “நல்லடியார்களின் ஆன்மீக நிலைகள்” என்ற தலைப்பில் அவைகள் வெளிவரும்.

மேலே கூறப்பட்ட அனைத்து சம்பவங்களும் எமக்கு நிறைய படிப்பினைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றது.இருந்தாலும் சுருக்கமாக நாம் அவைகளில் இருந்து விளங்கிக் கொள்வது.வணக்கங்களில் பேரின்பம் இருக்கிறது.அந்த இன்பத்தை அடைந்தவர்கள் இவ்வுலகையே மறந்து விடுவார்கள்.அவர்களுக்கு இவ்வுலகத்தில் எந்தவிதமான ஆசைகளும் இல்லை.அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் இறைவனின் காட்சியை விரும்புவதாகவே இருந்தது.இதனால்தான் அவர்கள் வணக்கங்களில் பேரின்பத்தை அடைந்தார்கள்.

இவ்வாறான நிலைகளை அடைவதற்கு இப்பெரியோர்கள் செய்த காரியம் என்ன என்பதை நாம் சற்று சிந்தித்தோமானால் நாங்களும் அவர்களைப் போல் காட்சிகளைக் காணாமல் போனாலும் காலப்போக்கில் அயராத முயற்சியின் காரணமாக அர்ஹமுர்ராஹிமீனான அல்லாஹ் அவனின் அருளை கொண்டு எமக்கு அந்த பாக்கியத்தை தருவான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

அப் புனிதர்கள் செய்த காரியம் இவைதான். இறைவனைப் பயந்தார்கள். இறைபொருத்தத்தை,அவனின் அன்பை,அவனின் நெருக்கத்தை மாத்திரமே தங்களின் வணக்கங்களின் மூலம் நாடினார்கள்.அத்தோடு அவர்கள் தங்களை தாழ்த்திக் கொண்டார்கள். “நான்”என்ற தற்பெருமையை விட்டும் தங்களை தூய்மைப்படுத்தினார்கள்.தங்களின் எந்தவொரு செயல்களையும் இறைவனுக்காகவே செய்தார்கள்.வேறு எதுவித நோக்கங்களும் அவர்களுக்கு இருக்கவில்லை.

இவைகளுடன் இன்னு மொன்றையும் அவர்கள் செய்தார்கள்.அதுதான் அவர்களை இந்த நிலைக்கு “நான்” என்பதை அழிப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது.ஸஹாபாக்களாயினும், சூபியாக்களாயினும், பெரியோர்களாயினும் அவர்கள் அவர்களின் செய்குமார்களுக்கு அவர்களையே அர்ப்பணித்தார்கள். ஸஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ம் அவர்களின் முன்னிலையில் தங்களை ஓர் அடிமைபோன்று ஆக்கிக் கொண்டார்கள்.அவர்களுக்கென்று உலக விடயத்திலோ ஆன்மீக விடயத்திலோ சுயமான விருப்பு வெறுப்பு இருக்கவில்லை.அனைத்துக் காரியத்தையும் நபியவர்களின் விருப்பப்படியே செய்துவந்தார்கள்.எனவே அவர்களுக்கென்று ஒரு சுயம் இருப்பதை அவர்கள் உணரவில்லை.இதனால் அவர்களுக்கு பெருமை வரவில்லை, முகஸ்துதி ஏற்படவில்லை. அதன்காரணமாக அவர்கள் இலகுவாக இறைகாட்சியைப் பெற்றுக் கொண்டார்கள்.

இதேபோல்தான் ஸுபியாக்களும்,பெரியோர்களும் தங்களின் செய்ஹிடம் அவர்களை ஒப்படைத்து வாழ்ந்தார்கள்.உலக விடயமாயினும்,ஆன்மீக விடயமாயினும் செய்ஹின் சொல்லே வேதவாக்கு என்று நினைத்து வாழ்ந்தார்கள்.செய்ஹின் முன்னால் நான் ஒன்றுமே இல்லாதவன் (ஒரு மைய்யித்) என்ற எண்ணம் அவர்களின் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருந்தது.இதன் காரணமாக “நான்” என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கவில்லை,பெருமை இருக்கவில்லை,முகஸ்துதி இருக்கவில்லை, நான் பெரிய அறிவாளி என்ற மமதை இருக்கவில்லை.சுருங்கச் சொன்னால் செய்ஹின் முன்னால் நான் ஒரு அடிமை என்ற எண்ணத்துடன் வாழ்ந்தார்கள்.இவ்வாறான நல்ல எண்ணங்களால் அவர்களின் உள்ளம் அழுக்குகளை விட்டும் தூய்மை அடைந்து நல்லவிடயங்களை ஏற்றுக்கொள்ளும் பாத்திரமாக மாறியதால் தனது செய்ஹு சொல்லக்கூடிய அனைத்து விடயங்களையும் அது மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது.செய்ஹின் கட்டளைகளில் எதுவித குறைகளையும் அது காணவில்லை அதன் காரணமாக அந்த உள்ளம் இறைகாட்சி கிடைப்பதற்கு தகுதியான உள்ளமாக மாறியதால் அப்பெரியோர்கள் இறைகாட்சியை அனுதினமும் அனுபவித்தார்கள்.

உதாரணமாக ஒரு பாத்திரம் நிறைய மண் நிறப்பப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம்.அப்பாத்திரத்தில் இன்னுமொரு பொருளை வைக்க முடியாது.அதேபோன்றுதான் “நான்”என்ற பெருமை,மமதை குடிகொண்ட உள்ளத்தில் செய்ஹுமார்களின் இறைஞான ஔி உட்செல்லாது முதலில் நாம் உள்ளத்தை சுத்தப்படுத்த வேண்டும்.செய்ஹின் சமூகத்தில் நான் எதுவுமே இல்லாத ஒரு அடிமை என்ற எண்ணத்தை கொண்டு உள்ளதின் அழுக்குகளை நீக்க வேண்டும்.அதன் பின்னர்தான் செய்ஹின் சமூகம் செல்ல வேண்டும்.அவ்வாறு சென்றால்தான் அவர்களின் உதவியுடன் இறை காட்சியை பெற்றுக் கொள்ளலாம்.

மேற் சொன்ன சம்வங்களில் இடம் பெற்ற நல்லடியார்கள் அனைவரும் இவ்வாறு வாழ்ந்தனால்தான் அவர்களின் உள்ளத்திருந்து பெருமை நீங்கி பேரின்பம் கண்டார்கள்.

ஆகவே இறைவன் எங்களின் உள்ளங்களை பெருமையை விட்டும் சுத்தப்படுத்தி எமது செய்ஹுக்கு எல்லா நிலைகளிலும் கட்டுப்பட்டு பேரின்ப நிலையை அடையும் பாக்கியத்தை தருவானாக!

குறிப்பு :- இக்கட்டுரை தரீக்கா வழியில் செல்லக்கூடியவர்களுக்கே பயனளிக்கும்.
?இறைஞானியின் இன்பவாக்கு:-

?வணக்கங்களில் பேரின்பம் காண்பதற்கு இறையியலை இயன்றவரை எடுத்துக் கொள்ளுங்கள்.

?தூய எண்ணம் இல்லாத கிரியைகளும் குப்பை. தவறி கூட செய்திடாதே நீயும் அந்த தப்பை.

?இறைவனின் அமுதவாக்கு:-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ ۖ

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்.
-Sura An-Nisa’, Ayah 59

You may also like

Leave a Comment