பொதுச் சொல்

February 25, 2019

اَلْمُطْلَقُ إِذَا اُطْلِقَ يَنْصَرِفُ إِلَى الْفَرْدِ الْكَامِلِ

(பொதுச் சொல் ஒன்று எந்த ஒரு குறிப்புமின்றி பொதுவாகச் சொல்லப்பட்டால் அது அவ்விடயத்தில் பூரணத்துவம் பெற்ற ஒன்றையே குறிக்கும்)

இது ஒரு பொதுத் தத்துவம். இவ்வாறு சொன்னவர் யார் என்று அறிந்து கொள்ள வலை விரித்து காலத்தை வீணாக்காமல் சரியானதா என்பதை மட்டும் ஆய்வு செய்து அறிந்து கொள்வதே சிறந்தது.

உதாரணமாக قَالَ رَسُوْلُ اللهِ – றஸூலுல்லாஹ் சொன்னார்கள் – என்று ஒருவர் தனது பேச்சில் கூறினால் அவரின் கருத்து முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும்.

மேற்கண்ட பொது விதி இதையே உணர்த்துகிறது. ஏனெனில் 313 றஸூல்மார்களில் பூரணத்துவம் பெற்ற, அல்லாஹ்வின் முழுமையான வெளிப்பாடு – اَلْمَظْهَرُ الْأَتَمُّ சம்பூரணம் பெற்ற “றஸூல்” முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மாத்திரமே. அவர்கள்தான் “ஸெய்யிதுல் முர்ஸலீன்” றஸூல்மார்களின் தலைவராவார்கள்.

எனவே, றஸூல் என்ற பொதுச் சொல் 313 றஸூல்மார்களில் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான சொல்லாக இருந்தாலும் கூட இச் சொல் எந்த ஒரு “றஸூல்” அவர்களின் பெயருடன் இணைக்கப்படாமல் வருமிடத்து அது முஹம்மத் அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் அவர்களையே குறிக்கும்.

இதுவே, மேலே அறபு மொழியில் எழுதிக் காட்டிய பொதுத் தத்துவத்தின் விளக்கமாகும். இவ்வடிப்படையில் ஒருவர் பேசும் போது قَالَ رَسُوْلُ اللهِ அல்லாஹ்வின் “றஸூல்” சொன்னார்கள் என்று கூறினால் அவரிடம் எந்த றஸூல் என்று கேள்வி கேட்பவன் மேற்கண்ட பொது விதியை அறியாதவன் என்பது தெளிவாகிவிடும்.

எனினும் முஹம்மத் அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தவிரவுள்ள ஏனைய 312 றஸூல்மார்களில் ஒருவர் சொன்ன செய்தியைக் கூற விரும்புகன்ற ஒருவன் قَالَ رَسُوْلُ اللهِ என்ற வசனத்தின் பின் அந்த றஸூலின் பெயரை அவசியமாக குறிப்பிட வேண்டும்.

இவ்வாறுதான் “நபீ” என்ற சொல்லுமாகும். எனினும் “அஷ் ஷெய்கு” என்ற சொல்லோ, “அல் குத்பு” என்ற சொல்லோ, “அல் வலீ” என்ற சொல்லோ மேற்கண்ட விதிக்கு உட்பட்டதல்ல. ஏனெனில் இவர்களில் “அல்பர்துல் காமில்” சம்பூரணத்துவம் பெற்றவர் யாரென்பதில் அறிஞர்களின் ஏகோபித்த முடிவை – அறிய முடியாதுள்ளது.

“அஷ் ஷெய்கு” குரு என்ற சொல் தொடர்பாக நாம் ஆய்வு செய்தால் இதிலும் “அல் பர்துல் காமில்” யாரென்பதில் ஏகோபித்த முடிவை அறிய முடியாதுள்ளது.

யாராவது ஒருவர் قَالَ شَيْخُنَا எங்களின் ஷெய்கு (குரு) சொன்னார்கள் என்றால் அது அவர் “பைஅத்” செய்து கொண்ட அவரின் குருவை குறிக்குமேயன்றி வேறொரு குருவை குறிக்காது. இவ்வாறுதான் ஒருவர் قَالَ شَيْخُ شَيْخِنَا எங்களின் ஷெய்குடைய ஷெய்கு சொன்னார்கள் என்று கூறுவதுமாகும்.

யாராவது ஒருவர் قَالَ الْعَارِفُ بِاللهِ இறை ஞானி சொன்னார் என்று தனது பேச்சில் சொன்னாராயின் அது பொதுவாக இறை ஞானி என்ற கருத்தை தருமேயன்றி இன்ன இறை ஞானி என்று எவரையும் குறித்துக் காட்டாது.

குத்புமார், வலீமாரிற் சிலர் விஷேட சிறப்பு பெயர்கள் கொண்டு பிரசித்தி பெற்றுள்ளார்கள். உதாரணமாக மஹ்பூபே ஸுப்ஹானீ, மஃஷூகே றஹ்மானீ, கிந்தீலே நூறானீ, அல் பாஸுல் அஷ்ஹப் முதலான சிறப்பு பெயர்கள் கொண்டு அஸ் ஸெய்யித் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களும், “ஸுல்தானுல் ஆரிபீன்” என்ற சிறப்பு பெயர் கொண்டு அஸ் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ அவர்களும், அஷ் ஷெய்குல் அக்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூறுல் அப்ஹர் என்ற சிறப்பு பெயர்கள் கொண்டு இப்னு அறபீ அவர்களும், ஹுஜ்ஜதுல் இஸ்லாம் என்ற சிறப்பு பெயர் கொண்டு இமாம் முஹம்மத் அல் கஸ்ஸாலீ அவர்களும், கரீப் நவாஸ் என்ற சிறப்பு பெயர் கொண்டு அஜ்மீர் ஹஸன் ஹாஜா அவர்களும், அல்குத்புல் அக்பர் என்ற சிறப்பு பெயரால் அபுல் ஹஸன் அஷ்ஷாதுலீ அவர்களும் பிரசித்தி பெற்றிருப்பது போன்று.

இவர்களின் சிறப்பு பெயர்களுடன் சேர்த்து قَالَ الْمَحْبُوْبُ السُّبْحَانِيْ என்றும், قَالَ سُلْطَانُ الْعَارِفِيْنَ என்றும், قَالَ الشَّيْخُ الْأَكْبَرُ என்றும் ஒருவர் பேசினால் அவரின் பேச்சு குறித்த சிறப்பு பெயர்களுக்குரியவர்களையே குறிக்கும். வேறெவரையும் குறிக்காது.

ஓர் ஊரில் பல ஆலிம்கள் – மௌலவீமார்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் ஆலிம்கள் என்று சொல்வதற்கு தகுதியற்றவர்கள் என்று அறிந்து கொண்ட அவ்வூர் மக்கள் (எங்களுடைய ஆலிம் சொன்னார்) என்று கூறினால் அது அந்த ஆலிமை மாத்திரமே குறிக்கும். மற்றவர்கள் ஆலிம்களாக இருந்தாலும் அவர்களைக் குறிக்காது.

நான் ஓர் ஊருக்குச் சென்றிருந்தேன். அவ் ஊரில் சுமார் 75 ஆலிம்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டுமே அவ்வூர் மக்களால் பெரிய ஆலிம் என்று அழைக்கப்பட்டு வந்தார். இதனால் அவர்தான் 74 ஆலிம்களை விடவும் அறிவாற்றல் மிக்கவராக இருந்தார் என்று நான் எண்ணியிருந்தேன்.

ஒரு நாள் சாப்பாடு சபையொன்றில் அவருடன் நானும் கலந்து கொண்டிருந்தேன். சாப்பாடு முடிந்தபின் பெரிய ஆலிம் என்ற வகையில் அவரையே “துஆ” ஓதுமாறு வீட்டுக் காரன் பணித்தான். அவ்வேளை அங்கு ஒன்பது ஆலிம்கள் இருந்தார்கள்.

பெரிய ஆலிம் அவர்கள் ஓதிய “துஆ”வில் பல பிழைகள் இருந்தன. ஊரின் பெரிய ஆலிமே இவ்வாறிருந்தால் சிறிய ஆலிம்கள் இவரை விட அறிவாளிகளாகவே இருப்பார்கள் என்று சந்தேகப் பட்டவனாக அவ் ஊர் மக்களில் முக்கியமானவர்களிடம் அவர் பற்றி வினவினேன். அதற்கவர்கள் அவர் சின்ன ஆலிம்களை விட அறிவாற்றல் குறைந்தவர்தான். ஆயினும் பெருத்த உடலையும், அழகிய தோற்றத்தையும் கொண்டவராக இருப்பதாலும், ஊருக்கு மூத்த ஆலிம் என்ற வகையிலுமே அவர் பெரிய ஆலிம் என்று அழைக்கப்பட்டு விட்டார் என்று விளக்கம் கூறினார்கள்.

எனவே, ஓர் ஊரில் ஆலிம்கள் பலர் இருக்கும் நிலையில் பெரிய ஆலிம் என்று ஒருவர் அழைக்கப்படுவதால் அவர்தான் மற்றவர்களைவிட அறிவாற்றல் மிக்கவர் என்று எவரும் கருதிவிடலாகாது. அவரிடம் மார்க்க “பத்வா” கேட்டு வழி கெட்டு விடவும் கூடாது.

இதை இங்கு நான் எழுதியதற்கான காரணம் என்னவெனில் இன்று உலகில் வாழும் உலமாஉகளில் இமாம்கள் போன்ற தலை சிறந்த உலமாஉகள் இருந்தாலும் கூட தலை குழம்பிய உலமாஉகளும், قَالَ الْجُمْهُوْرُ என்ற வசனத்திற்கு இமாம் ஜும்ஹூர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள் என்று பொருள் கூறும் உலமாஉகளும், اَلْمَالُ فِى الصُّنْدُوْقِ என்ற வசனத்திற்கு “அல்மாலு” முப்ததா, “பீ” ஜார், “யே” மஜ்றூர் முழாப், “அஸ்ஸுன்தூக்” முழாப் இலைஹி என்று “இஃறாப்” சொல்பவர்களும் உள்ளார்கள் என்பதையும் தரமான உலமாஉகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வியப்பான விடயம் என்னவெனில் இத்தகைய உலமாஉகள் உலகப் பிரசித்தி பெற்ற குத்புமார்களையும், மற்றும் ஞான மகான்களின் தத்துவங்களையும் மறுத்துப் பேசி பொய்யாக்கி வருவதேயாகும்.

You may also like

Leave a Comment