முத்துப்பேட்டை ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள்.

January 22, 2018

“ஷெய்குத்தவா” வைத்திய மேதை என்று அழைக்கப்படுகின்ற ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அவர்கள் தமிழ் நாடு முத்துப்பேட்டை நகரை அண்மித்துள்ள ஜாம்புவானோடை என்ற இடத்தில் அடக்கம் பெற்றுள்ளார்கள்.

இவர்கள் நபீ மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்ட பனூ இஸ்றாயீல் காலத்தவர்கள் என்று வரலாறு கூறுகின்றது.

இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், எவ்வாறு, எப்போது தமிழ் நாட்டுக்கு வந்தார்கள் என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் அறியமுடியாதுள்ளது.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் இவர்கள் அடக்கம் பெற்றுள்ள இடம் தனி வயல் பிரதேசமாகவும், வன விலங்குகள் வாழும் பகுதியாகவும் இருந்ததாம்.

அந்தப்பகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நெற்காணி இரண்டு ஏக்கர் இருந்தது. அவர் தினமும் அங்கு சென்று தனது வயலை கவனித்து வருவது வழக்கம்.

ஒரு நாள் வழமை போல் அங்கு சென்ற அவர் மண் வெட்டியால் நிலத்தை வெட்டிக் கொண்டிருந்த சமயம் இரத்தம் வரத் தொடங்கியது. வியப்படைந்த அவர் அங்கு ஒரு மனிதனின் கால் இருப்பது கண்டு மயங்கிக் கீழே விழுந்து விட்டார்.

வழமைபோல் அவரின் மனைவி அவருக்கான பகலுணவை எடுத்துக் கொண்டு அங்கு வந்தாள். கணவன் மயங்கியிருந்தது கண்டு சற்று நேரம் செய்வதறியாது தன்னை மறந்து நின்றாள்.

கணவன் கண்விழித்ததும் அவரிடம் நடந்தது பற்றி வினவினாள். அவர் விளக்கம் சொன்னார். தொடர்ந்து அவ்விடத்தில் நிற்பதற்கு அச்சமாயிருந்ததால் இருவரும் வீடு வந்துவிட்டனர்.

அன்றிரவு நடுநிசியில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கண்விழித்த இருவரும் வெளியே வந்தனர். சுமார் நாற்பது முளம் நீளம் மதிக்கத்தக்க, கையில் ஒரு கைக்கோலுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் தனது காலை அவர்களிடம் காட்டி என் காலை காயப்படுத்திவிட்டீர்கள் என்றார். அன்று பகல் நடந்த சம்பவம் அவர்களின் நினைவுக்கு வந்தது.

இருவரும் அவரின் காலில் விழுந்து அவரிடம் விபரம் கேட்டார்கள்.

அதற்கவர் “நான் நபீ மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் காலத்தவன். அவர்களின் “உம்மத்” சமூகத்தில் உள்ளவன். நான் ஒரு டொக்டர் – வைத்தியன். பல்லாண்டுகளுக்கு முன் இவ்விடத்தை அடைந்தேன். பல வருடங்கள் இங்கேயே வாழ்ந்து மரணித்தேன்” என்றார்கள். அவ்விருவரும் பேச்சை தொடருமுன் மறைந்து விட்டார்கள்.

அவ்விருவரும் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டிருந்த, சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்திலுள்ள முத்துப்பேட்டை வந்து முஸ்லிம் பள்ளிவாயல் தலைவர்களிடம் விபரத்தைக் கூறினார்கள்.

முஸ்லிம்கள் பெருங்கூட்டம் ஒன்று அங்கு சென்று பார்த்துவிட்டு அவ்விடத்தை சுத்தமாக்கி ஓலையால் சிறிய மட்டத்தில் ஒரு குடிசை அமைத்து வெள்ளிக்கிழமை தோறும் அங்கு வந்து “பாதிஹஹ்” ஓதிச் செல்லும் வழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களின் “கறாமாத்” அற்புதங்கள் கொண்டு பிரசித்தி பெறத் தொடங்கி இன்று வானை முட்டும் “மனாறா”வைக் கொண்டு பெரிய “தர்ஹா”வாக காட்சியளிக்கிறது. தினமும் பக்தர்களும், பக்தைகளும், பைத்தியம், சூனியம், பேய், தேவுகளால் பாதிக்கப்பட்வர்களும் அங்கு வந்தவண்ணம் இருக்கின்றார்கள்.

அவர்களிற் பலர் தமது பிரச்சினை தீரும் வரை அங்கேயே தங்கியிருக்கின்றார்கள். அவர்களின் கனவில் மகான் ஷெய்கு தாஊத் வலீ நாயகம் அவர்கள் காட்சி கொடுத்து மருந்து, மாத்திரைகள் மூலம் பிரச்சினைகளையும், நோய்களையும் தீர்த்து வைக்கின்றார்கள்.

இவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் வைத்தியத்திற்கு உதவியாக “நேர்ஸ்” தாதி ஒருவர் இருந்ததாகவும் அறிய முடிகிறது. அவரின் அடக்கவிடமும் இன்றுவரை அங்கு இருக்கின்றது. அவர்களுக்கு உதவியாக இன்னொரு டாக்டர் – வைத்தியர் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அவரின் அடக்கவிடமும் இன்று வரை அங்கு பக்தர்களால் தரிசிக்கப்பட்டு வருகின்றது.

டொக்டர் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அவர்களின் தர்ஹாவில் வருடத்தில் ஒரு தரம் பெரும் கந்தூரி நிகழ்வு நடைபெற்று வருகின்றது. கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி சுமார் 14 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. உள்ளூர், வெளியூர் மக்கள் பல்லாயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.

மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹ் அப்பா றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

ஸதகதுல்லாஹ் அப்பா என்று ஸுன்னத் வல் ஜமாஅத் மற்றும் தரீகஹ் வாதிகளால் அழைக்கப்பட்டு வருகின்ற “வித்ரிய்யஹ் ஷரீபஹ்” நபீ புகழ் காப்பியத்தை யாத்தவர்களும், காயல் நகரைப் பிறப்பிடமாகவும், கீழக்கரையை உறங்குமிடமாகவும் கொண்ட அப்பா அவர்கள் டொக்டர் ஷெய்கு தாஊத் வலீ அவர்களின் “ஸியாறத்” தரிசனத்திற்காக முத்துப் பேட்டை வந்தார்கள். “தர்ஹா”வின் உள்ளே செல்ல முடியாமல் சுமார் 25 மீற்றர் தூரத்தில் நின்று “பாதிஹஹ்” ஓதி “துஆ” பிரார்த்தனையும் செய்து அங்கேயே உறங்கினார்கள்.

கனவில் தோன்றிய டொக்டர் ஷெய்கு தாஊத் வலீ

அப்பா அவர்களின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. ஷெய்கு தாஊத் என்பவர் உண்மையான ஒரு வலீதானா? டொக்டர் தானா? சந்தேகத்துடன் உறங்கினார்கள் அப்பா. அப்பாவின் உள்ளத்தை ஆன்மீக மனக்கண்ணால் பார்த்து அவரின் சந்தேகத்தை அறிந்து கொண்ட டொக்டர் ஷெய்கு தாஊத் தனது “ஜின்”களை அழைத்து அப்பாவின் வயிற்றை ஊன்றி அழுத்திவிடுங்கள் என்று பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்தார்கள். வயிற்றுவலி தாங்க முடியாத நிலையில் அப்பா அவர்கள் நடு நிசியில் எழுந்து “தர்ஹா”வை நெருங்கி டொக்டர் ஷெய்கு தாஊத் அவர்களிடம் முறையிட்டவர்களாக அங்கேயே சற்று நேரம் உறங்கினார்கள். கனவில் தோன்றிய டொக்டர் ஷெய்கு தாஊத் அவர்கள் அப்பாவின் வயிற்றைத் தடவி விட்டார்கள். அதோடு வயிற்று வலி வந்த வழி தெரியாமல் போய்விட்டது.

இந்த வரலாறை அப்பா அவர்கள் அங்கு தங்கியிருந்த அனைவருக்கும் கூறினார்கள். அது வரலாறாகிவிட்டது.

டொக்டர் ஷெய்கு தாஊத் அவர்களைப் புகழ்ந்தும், அவர்களின் “கறாமத்” அற்புதங்களை விளக்கியும் மார்க்க அறிஞர்களிற் பலர் அறபு மொழியில் “மவ்லித்”கள், “கஸீதஹ்”கள் எழுதியுள்ளார்கள். கேரளா – மலைபாரைச் சேர்ந்த உலமாஉகளும் எழுதியுள்ளார்கள். அந்த வரிசையில் காத்தான்குடியைச் சேர்ந்த ஞானபிதா, மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹூ அன்னவர்களும் அறபு மொழியிலும், தமிழ் மொழியிலும் எழுதியுள்ளார்கள்.

மகான் டொக்டர் ஷெய்கு தாஊத் வலீ அவர்களின் அருள் வேண்டி அவர்கள் பேரில் சங்கைக்குரிய ஞான பிதா அவர்கள் கோர்வை செய்த அறபு, மற்றும் தமிழ் “கஸீதஹ்” கள் இதோ…

ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மௌலித்

You may also like

Leave a Comment