Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முஸ்லிமல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா ?

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா ?


தொகுப்பு – மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)


இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தை வலியுத்துகின்றது. ஒரு போதும் வன்முறையை ஆதரிக்கவில்லை. மற்றவர்களை அநீதியாக கொலை செய்யுமாறு கூறவுமில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது என்றும். மாற்று மதத்தவர்களை கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலே கூறப்பட்டுள்ளது என்றும் சிலர் அல்குர்ஆனை தவறாகப் புரிந்துள்ளனர்.
இந்த விடயத்தை சரியாக புரிந்துகொள்வதாயின் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள பின்வரும் வசனங்களை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் .


{وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ وَلَا تُقَاتِلُوهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّى يُقَاتِلُوكُمْ فِيهِ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ كَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ} [البقرة: 191]
(உங்களை வெட்டிய) அவர்களை எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள் ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.. (அல்குர்ஆன் 2:191)
என்று அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
இந்தவசனத்தில் وَاقْتُلُوهُمْ “அவர்களைக் கொல்லுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதை பார்த்துவிட்டு மாற்று மதத்தவர்களை கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக நாம் தீர்மானிக்க முடியாது. இந்த வசனத்தை தெளிவாக நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்ட வசனத்தில் وَاقْتُلُوهُمْ “அவர்களைக் கொல்லுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. ஒரு வசனத்தில் “அவர்கள்” என்று கூறப்பட்டால் அது யாரைக் குறிக்கிறது என்பதை முன்னால் உள்ள வசனங்களில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். “அவர்கள்” என்பது பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? என்று ஆய்வு செய்யவேண்டும். 
இதற்கு முன்னால் உள்ள வசனத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதை நாம் நன்கு அவதானித்தால் விடயத்தை புரிந்து கொள்ள முடியும்.
{وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (190) } [البقرة: 190]
உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 2:190)
இந்த வசனத்தில் “ உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும் போர் செய்யுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அதன்பின் தொடர்ந்து வரும் வசனத்தில் “அவர்களைக் கொல்லுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. 
இங்கு “அவர்களைக் கொல்லுங்கள்” என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுங்கள் என்ற பொருளில் கூறப்படவில்லை. மாறாக “உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி போர் புரியவரும்” அவர்களுடன் போரிடுங்கள் அவர்களைக் கொல்லுங்கள் என்றே கூறப்படுகிறது. இதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் 
ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது நியதி. எந்த ஒரு நாடும் தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாமல் இருப்பதில்லை. அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாமல் இருப்பதுமில்லை?
போர் என வந்துவிட்டால் உலகில் நியாயங்கள், தர்மங்கள் தூக்கி எறியப்படுகின்றன. ஆனால் திருக்குர்ஆன் அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் எனக் கூறிப் போர்க்களத்திலும் நீதியை போதிக்கின்றது.
இது போல் அல்குர்ஆனில் பின்வரும் வசனங்களையும் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் .
وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّى يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَد ْتُمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا (89) [النساء: 89،]
(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் (நயவஞ்சகர்கள் )விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை(நயவஞ்சகர்களை) எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் – அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:89)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்குர்ஆன் 4:89 வசனத்தில் وَاقْتُلُوهُم “அவர்களைக் கொல்லுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. “அவர்கள்” என்று யாரைக் குறிக்கிறது என்பதை முன்னால் உள்ள வசனங்களில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். “அவர்கள்” என்பது பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? என்று ஆய்வு செய்யவேண்டும். 
இதற்கு முன்னால் உள்ள வசனத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் நன்கு அவதானித்தால் விடயத்தை புரிந்து கொள்ள முடியும். இதற்கு முன்னால் உள்ள 4:88 வது வசனத்தில் நயவஞ்சகர்களைப்பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு “அவர்கள்” என குறிப்பிடப்படுவது நயவஞ்சகர்களை யாகும். நயவஞ்சகர்கள் என்போர் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வோர் ஆவர். எனவே இந்த வசனத்தில் “(நயவஞ்சகர்களை) எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள்” என்று கூறப்பட்டுள்ளதே தவிர பொதுவாக முஸ்லிமல்லாத மக்களைகொல்லுமாறு குறிப்பிடப்படவில்லை. அத்துடன் அதை தொடர்ந்து வரும் வசனம் பின்வருமாறு கூறுகின்றது.
إِلَّا الَّذِينَ يَصِلُونَ إِلَى قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ أَوْ جَاءُوكُمْ حَصِرَتْ صُدُورُهُمْ أَنْ يُقَاتِلُوكُمْ أَوْ يُقَاتِلُوا قَوْمَهُمْ وَلَوْ شَاءَ اللَّهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقَاتَلُوكُمْ فَإِنِ اعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَاتِلُوكُمْ وَأَلْقَوْا إِلَيْكُمُ السَّلَمَ فَمَا جَعَلَ اللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا [النساء: ، 90
ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள் எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள் ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.
(அல்குர்ஆன் 4:90)

இந்த வசனத்தில் உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள் ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
“அவர்களை கொல்லுங்கள்” என்று அல்குர் ஆனில் குறிப்பிடப்படுவது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளை கொல்லுங்கள் அல்லது முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யும் நயவஞ்சகர்களை கொல்லுங்கள் என்ற கருத்திலேயேயாகும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை கொல்லுங்கள் என்ற கருத்தில் அல்ல என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். 
இதுபோல் பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வரலாற்றில் அநீதிக்கு எதிரான போர் நடை பெற்றுள்ளது.
மக்களைச் சுரண்டி கொள்ளையடித்து, அநியாயமான வரி விதிப்புகளை மேற்கொண்டு, பெறப்பட்ட பணத்தைக் மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச் செய்து கொண்டு, அந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரியும் அக்கிரமக்கார அரசர்களின் நாடுகள் மீது நபியவர்கள் படையெடுத்துள்ளார்கள். அவர்களின் நான்கு கலீபாக்களும் படையெடுத்துள்ளார்கள். அங்குள்ள மக்களும் அதை ஆதரித்தார்கள்.
இதை அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகிறான்

وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا} [النساء: 75]

பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் ‘எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பானவரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்து விட்டது. (அல்குர்ஆன் 4:75)

யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்த அக்கிரம ஆட்சியாளருக்கு எதிராக போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது. அப்பாவி பொது மக்களைகொலை செய்யுமாறு இங்கு கூறப்படவில்லை.

மேலும் அல்லாஹ் தஆலா கூறுகிறான்
{وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ} [البقرة: 193]

ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் – அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது (அல்குர்ஆன் 2:193)

وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ} [الأنفال: 39]
. (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். 
(அல்குர்ஆன் 8:39) 
மேலே உள்ள இரண்டு வசவனங்களையும் நன்றாக கவனித்துப்பாருங்கள். 
இந்த வசனங்களில் குழப்பமும், கலகமும் விஷமங்களும் நீங்கும் வரை அவர்களுடன் போரிடுமாறும் அவர்கள் விஷமங்கள் செய்வதிலிருந்து விலகிக் கொண்டால் – பகை கொண்டு போர் செய்தல் கூடாது என்றும் அல்லாஹ் தஆலா கூறுகிறான்.
எனவே நியாயமற்ற முறையில் வன்றையில் ஈடுபடுவதை இஸ்லாம் விரும்பவில்லை. அநீதிக்கு எதிராகவே குரல்கொடுக்கின்றது. 
மேலும் அல்லாஹ் தஆலா கூறுகிறான்

{قَاتِلُوا الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ اللَّهُ وَرَسُولُهُ وَلَا يَدِينُونَ دِينَ الْحَقِّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حَتَّى يُعْطُوا الْجِزْيَةَ عَنْ يَدٍ وَهُمْ صَاغِرُونَ (29)} [التوبة: 29]
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் வரி (செலுத்தும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள் (அல்குர்ஆன் 9:29)

இவ்வசனத்தில் முஸ்லிம் அல்லாதவரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்குமாறு கூறப்படுகிறது. வரிசெலுத்தாதவர்களுடன் போர் புரியுமாறும் கூறப்படுகிறது.
இது பிற மதத்தவர் மீது செய்யப்படும் அநீதி என சிலரால் கருதப்பட்டாலும் இது பற்றிய உண்மை நிலையை அறிந்து கொண்டால் ஜிஸ்யா வரியை குறை கூறவேண்டியேற்படாது.

இஸ்லாம் எவ்வாறு வரி விதிக்கின்றது?
முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஸகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், விளைவிக்கப்படும் தானியங்கள் ஆகிய அனைத்திலிருந்தும் ஸகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
ஸகாத் என்பது இஸ்லாமிய அரசால் முஸ்லிம்களிடம் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஸகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமியச் சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஸகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.
மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஸகாத் வரியிலிருந்தே நடந்து வரும்போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருப்பது நியாயமாகாது.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும்போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாக கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

1. முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.
2. முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸகாத் வரி விதிப்பது.
3. முஸ்லிமல்லாதவர்கள் மீது வேறு விதமான வரிகள் விதிப்பது.
இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் ஆராய்வோம்.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும்போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரிசெலுத்தும் முஸ்லிம்கள் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.
வரி செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை முஸ்லிமல்லாதவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் எழும்.
முஸ்லிம் அல்லாதவர்கள் வரி செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவார்கள். மனோரீதியாக தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்கள் என்று எண்ணும் நிலை ஏற்படும்.
ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் வரி வாங்கப்படாதவர்களுக்கு அது அவமானமாகவும் ஆகும். வரி வாங்கப்படாமலிருப்பது சட்டப்படியான உரிமை அவர்களுக்கு இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆகவே இந்த நிலையை நடைமுறைப்படுத்தும்போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.
தங்களிடம் மட்டும் வரி வாங்கி விட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதவர்களும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.
ஸகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்த வரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் அமைந்துள்ளது.
இந்த ஸகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும்போது, இன்னொரு மதச்சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும். இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள், வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இதை அவர்களால் ஏற்க முடியாது.
முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் இஸ்லாமிய அரசு தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஸகாத் எனும் வரியை விதிக்க முடியாது.
ஸகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஸகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அது மதக் கடமையாக உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்குக் காட்டுவார்கள்.
முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்புத் தர மாட்டார்கள். இயன்ற வரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஸகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.
வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.
இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
‘ஸகாத்’ என்ற வகையல்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ‘ஜிஸ்யா’ எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விடப் பல மடங்கு அதிகமாக வரி செலுத்தினர்.
இஸ்லாமிய ஆட்சியில் வரி செலுத்துவதில் முஸ்லிம்கள் தான் அதிகம் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்யப்படுகின்றது.
இவ்வசனத்தில் “போர் செய்யுங்கள்” என்று கூறப்படுவது இஸ்லாமிய ஆட்சியின் எல்லையில் வாழ்ந்து கொண்டு இஸ்லாம் மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் ஜிஸ்யா வரிசெலுத்தாமலும் இருப்பவர்கள் ஜிஸ்யா என்னும் வரி செலுத்தும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள் என்பதை குறிப்பதாகும். ஜிஸ்யா என்னும் வரி செலுத்த மறுப்பது நாட்டின் சட்டத்தை மிறும் செயலாகும். எனவே இந்தப் போர் நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான போர் ஆகும். 
இவ்வசனத்தில் ‘இழிந்தவர்களாக’ என்று கூறப்படுவது போருக்கு வந்து தோற்று இழிவடைவதைக் குறிப்பதாகும்.

மேலும் அல்லாஹ் தஆலா கூறுகிறான்

{كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَكُمْ وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (216)} [البقرة: 216]
. போர் செய்தல் – அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் – (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (அல் குர்ஆன் 2:216)
மனிதனின் அறிவு பலவீனமானது. அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.மனிதன் நல்லது என கருதும் அம்சம் அவனுக்கு தீமையாக அமையும் தனக்கு தீமை என காண்பது துன்பமாக அமையும்.இதில் இச்சிறு கூட்டத்தினர் யுத்தம் புரிவதை அவர்கள் எதிர்ப்பார்த்தும் இருக்கவில்லை மாறாக அல்லாஹ்வின் நாட்டம் யுத்தம் புரிவதாக இருந்தது.இருந்த போதிலும் அவர்கள் அல்லாஹ்வின் தீர்ப்பை உள்ளத்தால் பொருந்திக் கொண்டார்கள்.இதன் விளைவு பாரிய விடிவாகவும் வெற்றியாகவும் அமைந்தது

இதுபோல் திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் போர் செய்தார்கள் என்பதை “இஸ்லாம் சமாதானத்தை விரும்புகிறது என்றால் இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் நடந்தது ஏன்?” எனும் கட்டுரையில் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும்.
முஸ்லிமல்லாத மக்களை அநியாயமாக வெட்டிக் கொல்வது ஜிஹாத் அல்ல . இதைப் புரிந்து கொண்டால் இஸ்லாத்தின் அணுகு முறயைப் புரிந்து கொள்ளலாம்.
போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி நடந்தார்கள், முஸ்லிமல்லாதவர்களுடன் எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது என்பதை அறிந்து கொண்டால் இன்னும் தெளிவுபெறலாம். 
போர் வந்து விட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிரிகளை எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்று இஸ்லாம் கட்டளை இட்டுள்ளது.
சுமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய முஸ்லிமல்லாதவர்களுடன் அதே நல்லுறவுடன் நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் கட்ளையிடுகின்றது.
பொதுவாக முஸ்லிமல்லாதவர்கள் னைவரையும் வெட்டிக் கொல்லுமாறு இஸ்லாம் ஒருபோதும் கூறவேயில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை. 
தான தர்மங்கள் செய்வதிலும், உதவிகள் புரிவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.
{لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ} [الممتحنة: 8]

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். (அல்குர்ஆன் 60:8(
முஸ்லிமல்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அல்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்றவாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்தார்கள்.
தமக்கு தீங்குசெய்ய வந்த பிற மதத்தவர்களுடன் நபியவர்கள் நடந்து கொண்ட முறையைப் பின்வரும் ஹதீதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

صحيح مسلم (4/ 1721)
45 – (2190) حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ امْرَأَةً يَهُودِيَّةً أَتَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهَا عَنْ ذَلِكَ؟ فَقَالَتْ: أَرَدْتُ لِأَقْتُلَكَ، قَالَ: «مَا كَانَ اللهُ لِيُسَلِّطَكِ عَلَى ذَاكِ» قَالَ: – أَوْ قَالَ – «عَلَيَّ» قَالَ قَالُوا: أَلَا نَقْتُلُهَا؟ قَالَ: «لَا»، قَالَ: «فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
யூதப் பெண்ணொருத்தி நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இது பற்றி விசாரித்தார்கள். உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன் என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இவளைக் கொன்று விடட்டுமா? என நபித்தோழர்கள் கேட்டதற்கு கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், என்ற ஹதீது நூலில்இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.)
இஸ்லாமியச் சட்டப்படி அவளைக் கொல்ல அனுமதியிருந்தும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைத் தான் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் பயன்படுத்தினார்கள்.
முஸ்லிமல்லாத மக்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி நடந்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
சிலர் மேலே கூறப்பட்ட அல் குர்ஆன் வசனங்களையும் பின்வரும் ஹதீதுகளை தவறாகப் புரிந்துகொண்டு முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லவேண்டும் என பிரச்சாரம் செய்வதுடன் அவ்வாறான தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இதனால் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணம் முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஏற்படுவதுடன் உலகலாவிய ரீதியில் முஸ்லிம்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். எனவே மேலே கூறப்பட்ட அல் குர்ஆன் வசனங்களை தெளி வாக புரிந்துகொள்வதுடன் பின்வரும் ஹதீதுகளையும் தெளி வாக புரிந்துசெயற்பவேண்டும்.
صحيح البخاري (1/ 14)
25 –
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ المُسْنَدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو رَوْحٍ الحَرَمِيُّ بْنُ عُمَارَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ

‘மனிதர்கள், அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 
அறிவிப்பு – அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) புஹாரீ – ஹதீஸ் இல -25
இந்த ஹதீதில் முஸ்லிம் அல்லாத மனிதர்கள் எல்லோரையும்கொல்ல வேண்டும் என கூறப்படவில்லை.முஸ்லிம்ளோடு சண்டையிட வரக்கூடியவர்களுடன் போர் புரியுமாறு கூறப்பட்டுள்ளதே தவிர இஸ்லாமிய நாட்டில் முஸ்லிம்களுடன் இணங்கி வாழ்பவர்களுடன் போர் புரியுமாறு கூறப்படவில்லை.
இங்கு أُقَاتِلَ (உகாதில) என்றசொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன்பொருள் ஒருவருடன் மற்றவர் போர் புரிதல் என்பதாகும். போருக்கு வருபவருடன் போர் புரிதல் என்பது இதன் பொருளாகும். போருக்கு வராமல் அமைதியாக இருப்பவரை அநீதியாகக் கொல்லவேண்டும் என்பது இதன்பொருள் அல்ல. இந்த ஹதீத் தொடர்பாக விரிவான விளக்கம் உள்ளது அவற்றை இங்கு எழுதினால் அந்த கட்டுரை விரிவடைந்துவிடும்.

مسند أحمد ط الرسالة (9/ 478)
5667 – حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” بُعِثْتُ بَيْنَ يَدَيِ السَّاعَةِ بِالسَّيْفِ، حَتَّى يُعْبَدَ اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَجُعِلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي، وَجُعِلَ الذُّلُّ وَالصَّغَارُ عَلَى مَنْ خَالَفَ أَمْرِي، وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ “)
நான் மறுமை நெருங்கும் வேளையில் அல்லாஹ் மாத்திரம் அவனுக்கு இணையின்றி வணங்கப்படும் வரை வாளுடன் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன். எனது உணவு எனது ஈட்டியின் நிழலின் கீழ் ஆக்கப்பட்டுள்ளது. எனது கட்டளைக்கு மாறு செய்பவர்களுக்கு இழிவு ஆக்கப்பட்டுள்து. யார் ஒரு சமூகத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவர்களில் நின்றும் உள்ளவராவார்.
இந்த ஹதீத் பலவீனமானது என்பது ஹதீத் கலை அறிஞர்களில்பெரும்பாலனோரின் கருத்து.
ஆயினும் இந்த ஹதீதில் கூறப்பட்டுள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாளுடன் அனுப்பப்பட்டார்கள். எனவே வாளால்தான் இஸ்லாத்தை பரப்பவேண்டும் என்ற கருத்து அல்குர்ஆனில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஹிக்மத் எனும் இறை ஞானத்தைக்கொண்டும் அழகிய உதேசத்தைக் கொண்டும் இறைவனிக் பாதைக்கு அழைக்குமாறு கட்டளையிட்டு அருட்கொடையாக நபியவர்கள் அனுப்பபட்டுள்ளதாகவே அல் குர்ஆன் கூறுகின்றது.
எனவே ஹிக்மத் எனும் இறை ஞானத்தைக்கொண்டும் அழகிய உதேசத்தைக் கொண்டும் இறைவனிக் பாதைக்கு அழைத்த பின்னரும் முஸ்லிம்களோடு போர் புரிய வருபவர்களுடன்தான் வாளைக்கொண்டு போர் புரியவேண்டும் என்பது தான் இந்த ஹதீதின் பொருளாகும். இந்த ஹதீதை தவறாக விளங்கிக் கொண்டு சிலர் இஸ்லாத்தின் பெயரால் அநியாயமாக உயிர்களை கொலை செய்கின்றனர். இது மிகத் தவறான விடயமாகும். மனிதர்களை நேர்வழிப்படுத்த நபியவர்கள் வந்தார்களே தவிர அவர்களை கொன்றொழிப்பதற்காக வரவில்லை.

صحيح مسلم (1/ 53)
37 – (23) وحَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَا: حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِيَانِ الْفَزَارِيَّ، عَنْ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ ” مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَكَفَرَ بِمَا يُعْبَدُ مَنْ دُونِ اللهِ، حَرُمَ مَالُهُ، وَدَمُهُ، وَحِسَابُهُ عَلَى اللهِ “

யார் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லி அல்லாஹ் தவிர வணங்கப்படுபவற்றை நிராகரிக்கின்றாரோ அவரது சொத்துக்களும் அவரது இரத்தமும் விலக்கப்பட்டதாகும் அவருக்கு கூலிகொடுப்பது அல்லாஹ்வை சார்ந்ததாகும். (முஸ்லிம் )

இந்த ஹதீதில் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய நாட்டில் வாழக்கூடியவருக்கான பாதுகாப்பை பற்றி கூறப்பட்டுள்ளது. அதற்காக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை கொல்லவேண்டும் என்பது இங்கு கருத்தல்ல.

இஸ்லாம் போர் சம்பந்தமாக கூறும் தெளிவான வழிகாட்டல்களை இங்கு கவனிய்யுங்கள்

صحيح مسلم (3/ 1357)
– (1731) وحَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ هَاشِمٍ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمَّرَ أَمِيرًا عَلَى جَيْشٍ، أَوْ سَرِيَّةٍ، أَوْصَاهُ فِي خَاصَّتِهِ بِتَقْوَى اللهِ، وَمَنْ مَعَهُ مِنَ الْمُسْلِمِينَ خَيْرًا، ثُمَّ قَالَ: «اغْزُوا بِاسْمِ اللهِ فِي سَبِيلِ اللهِ، قَاتِلُوا مَنْ كَفَرَ بِاللهِ، اغْزُوا وَلَا تَغُلُّوا، وَلَا تَغْدِرُوا، وَلَا تَمْثُلُوا، وَلَا تَقْتُلُوا وَلِيدًا، وَإِذَا لَقِيتَ عَدُوَّكَ مِنَ الْمُشْرِكِينَ، فَادْعُهُمْ إِلَى ثَلَاثِ خِصَالٍ – أَوْ خِلَالٍ – فَأَيَّتُهُنَّ مَا أَجَابُوكَ فَاقْبَلْ مِنْهُمْ، وَكُفَّ عَنْهُمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ، فَإِنْ أَجَابُوكَ، فَاقْبَلْ مِنْهُمْ، وَكُفَّ عَنْهُمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى التَّحَوُّلِ مِنْ دَارِهِمْ إِلَى دَارِ الْمُهَاجِرِينَ، وَأَخْبِرْهُمْ أَنَّهُمْ إِنْ فَعَلُوا ذَلِكَ فَلَهُمْ مَا لِلْمُهَاجِرِينَ، وَعَلَيْهِمْ مَا عَلَى الْمُهَاجِرِينَ، فَإِنْ أَبَوْا أَنْ يَتَحَوَّلُوا مِنْهَا، فَأَخْبِرْهُمْ أَنَّهُمْ يَكُونُونَ كَأَعْرَابِ الْمُسْلِمِينَ، يَجْرِي عَلَيْهِمْ حُكْمُ اللهِ الَّذِي يَجْرِي عَلَى الْمُؤْمِنِينَ، وَلَا يَكُونُ لَهُمْ فِي الْغَنِيمَةِ وَالْفَيْءِ شَيْءٌ إِلَّا أَنْ يُجَاهِدُوا مَعَ الْمُسْلِمِينَ، فَإِنْ هُمْ أَبَوْا فَسَلْهُمُ الْجِزْيَةَ، فَإِنْ هُمْ أَجَابُوكَ فَاقْبَلْ مِنْهُمْ، وَكُفَّ عَنْهُمْ، فَإِنْ هُمْ أَبَوْا فَاسْتَعِنْ بِاللهِ وَقَاتِلْهُمْ، وَإِذَا حَاصَرْتَ أَهْلَ حِصْنٍ فَأَرَادُوكَ أَنْ تَجْعَلَ لَهُمْ ذِمَّةَ اللهِ، وَذِمَّةَ نَبِيِّهِ، فَلَا تَجْعَلْ لَهُمْ ذِمَّةَ اللهِ، وَلَا ذِمَّةَ نَبِيِّهِ، وَلَكِنِ اجْعَلْ لَهُمْ ذِمَّتَكَ وَذِمَّةَ أَصْحَابِكَ، فَإِنَّكُمْ أَنْ تُخْفِرُوا ذِمَمَكُمْ وَذِمَمَ أَصْحَابِكُمْ أَهْوَنُ مِنْ أَنْ تُخْفِرُوا ذِمَّةَ اللهِ وَذِمَّةَ رَسُولِهِ، وَإِذَا حَاصَرْتَ أَهْلَ حِصْنٍ فَأَرَادُوكَ أَنْ تُنْزِلَهُمْ عَلَى حُكْمِ اللهِ، فَلَا تُنْزِلْهُمْ عَلَى حُكْمِ اللهِ، وَلَكِنْ أَنْزِلْهُمْ عَلَى حُكْمِكَ، فَإِنَّكَ لَا تَدْرِي أَتُصِيبُ حُكْمَ اللهِ فِيهِمْ أَمْ لَا»، قَالَ عَبْدُ الرَّحْمَنِ هَذَا أَوْ نَحْوَهُ، وَزَادَ إِسْحَاقُ فِي آخِرِ حَدِيثِهِ، عَنْ يَحْيَى بْنِ آدَمَ، قَالَ: فَذَكَرْتُ هَذَا الْحَدِيثَ لِمُقَاتِلِ بْنِ حَيَّانَ – قَالَ يَحْيَى: يَعْنِي أَنَّ عَلْقَمَةَ يَقُولُهُ لِابْنِ حَيَّانَ – فَقَالَ: حَدَّثَنِي مُسْلِمُ بْنُ هَيْصَمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ مُقَرِّنٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ،

புரைதா பின் அல்ஹசீப் அல்அஸ்லமீ (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால்,தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள்.
பிறகு, பின்வருமாறு அறிவுரை கூறுவார்கள்: இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்கவீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; உம்முடைய எதிரிகளான இணைவைப்பாளர்களை நீர் சந்தித்தால் மூன்று அம்சங்களின் பக்கம் அவர்களை அழைப்பீராக.
அவற்றில் எந்த ஒன்றை ஏற்றுக்கொள்ள அவர்கள் முன்வந்தாலும் அவர்களிடமிருந்து அதை ஏற்பீராக, நடவடிக்கையை நிறுத்தி விடுவீராக. 
பிறகு அவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுப்பீராக! அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களிடமிருந்து அதை ஏற்று, அவர்கள்மீது நடவடிக்கையை நிறுத்திவிடுவீராக.
பிறகு அவர்களை (அவர்கள் வசிக்கும்) அந்த ஊரிலிருந்து முஹாஜிர்கள் (நாடு துறந்தோர்) வசிக்கும் பகுதிக்கு வந்து குடியேறுமாறு அழைப்பீராக. மேலும், அவர்களிடம் “இவ்வாறு நீங்கள் செய்தால் முஹாஜிர்களுக்குக் கிடைக்கும் சாதகங்களும் முஹாஜிர்களுக்கு ஏற்படும் பாதகங்களும் உங்களுக்கும் உண்டு” என்று தெரிவித்துவிடுவீராக.
அங்கிருந்து இடம்பெயர அவர்கள் மறுத்தால் அவர்களிடம் கூறிவிடுங்கள்: முஸ்லிம்களில் நாட்டுப்புறத்தாரைப் போன்றுதான் நீங்களும் இருக்க வேண்டும்; மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்குப் பொருந்தும் அனைத்து இறைச்சட்டங்களும் உங்களுக்கும் பொருந்தும்.போர்ச் செல்வங்கள் (ஃகனீமத்) மற்றும் போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) சொத்துகள் எதுவும் உங்களுக்குக் கிடைக்காது; முஸ்லிம்களுடன் இணைந்து அறப்போர்களில் ஈடுபட்டால் தவிர (அப்போது மட்டுமே அவர்களுக்கு அச்செல்வங்கள் கிடைக்கும் என்று கூறிவிடுங்கள்). அதற்கும் அவர்கள் மறுத்தால் அவர்களிடம் “ஜிஸ்யா” (இராணுவக்) காப்புவரியைக் கோருக.
அதையேற்று அவர்கள் உமக்கு இணங்கினால் அவர்களிடமிருந்து அதை ஒப்புக்கொண்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவிடுவீராக. அதற்கும் அவர்கள் மறுத்தால், அல்லாஹ்விடம் உதவி கோரிவிட்டு, அவர்கள்மீது போர் தொடுப்பீராக. ஒரு கோட்டையை நீர் முற்று கையிடும்போது, அல்லாஹ்வின் பொறுப்பையும் அவனுடைய தூதரின் பொறுப்பையும் நீங்கள் தர வேண்டுமென அவர்கள் விரும்பினால், அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பை அவர்களுக்குத் தந்துவிடாதீர்.
மாறாக, அவர்களுக்கு உமது பொறுப்பையும் உம்முடைய தோழர்களின் பொறுப்பையுமே தருவீராக. ஏனெனில்,நீங்கள் உங்களது பொறுப்பையும் உங்களுடைய தோழர்களின் பொறுப்பையும் முறித்துக் கொள்வதானது,அல்லாஹ்வின் பொறுப்பையும் அவனுடைய தூதருடைய பொறுப்பையும் முறித்துக்கொள்வதைவிட எளிதானதாகும்.
நீங்கள் ஒரு கோட்டைவாசிகளை முற்றுகையிடும்போது, அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது இறங்கிவருவதற்கு அவர்கள் விரும்பினால், அல்லாஹ்வின் தீர்ப்பிற்கு அவர்கள் இறங்கிவர உடனே அவர்களுக்கு அனுமதியளிக்காதீர். மாறாக,உம்முடைய தீர்ப்புக்கு இணங்கிவர அவர்களுக்கு அனுமதியளிப்பீராக. ஏனெனில், அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பைச் சரியாக நீர் நிறை வேற்றுவீரா என்பது உமக்குத் தெரியாது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் (இதை அறிவித்துவிட்டு), “இவ்வாறுதான் ச ுஃப்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அல்லது இதைப்போன்று (வேறு வார்த்தைகளில்) அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.
ஆதாரம் – முஸ்லிம், ஹதீது இல 3566.
இந்த ஹதீதில் போர் சம்பந்தமாக தெளிவான வழிகாட்டல்கள் வழிகாட்டல்கள் கூறப்பட்டுள்ளன. முஸ்லிம் அல்லாதவர்களை கண்ட இடத்தில் கொல்லவேண்டும் என்று கூறப்படவில்லை என்பதை 
தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
எனவே திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகள்யாவும் அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன.
அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.
திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என பழி தீர்த்தல் என்பன போன்ற சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போர் குறித்த வசனங்களும் இதுபோல் அரசின் மீது சுமத்தப்பட்ட கடமையே தவிர தனி நபர்கள் மீதும், குழுக்கள் மீதும் சுமத்தப்பட்டதல்ல. இவ்வாறு நாம் கூறுவதற்கு திருக்குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தை கவனிய்யுங்கள்

وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا} [النساء: 75]
பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் ‘எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பானவரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்து விட்டது. (அல்குர்ஆன் 4:75)

இந்த வசனத்தில் “பலவீனர்களுக்காக நீங்கள் ஏன் போரிடக் கூடாது?” என்று கூறப்படுகிறது.
பலவீனர்கள் என்பது மக்காவில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்கள் மக்காவில் சொல்லொணாத துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஊரை விட்டு ஓடி உயிர் பிழைத்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன.

ஆயினும் அவர்களை போர் செய்யுமாறு திருக்குர்ஆன் கட்டளையிடவில்லை. அவர்களுக்காக நீங்கள் ஏன் போர் செய்யக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தலைமையில் அமைந்த முஸ்லிம் அரசுக்குத் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
பலவீனர்களும், பாதிக்கப்பட்டவர்களும் போர் நடவடிக்கையில் இறங்கலாம் என்றிருந்தால் அந்தப் பலவீனர்களுக்குத்தான் போரிடுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கட்டளயிடப்படவில்லை.அரசாங்கத்தின் மீதுதான் போர் கடமையாக்கப்பட்டது . தனி நபர்கள் மீது அல்ல என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறே கீழே குறிப்பிடப்படும் அல்குர்ஆன் வசனங்களும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளாகவும் போர்க்காலங்களில் பின்பற்றப்படும் கடும் நடவடிக்கைகளாகவும் அமைந்துள்ளன.

{انْفِرُوا خِفَافًا وَثِقَالًا وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ [التوبة: 41]
9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.

{فَقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِينَ عَسَى اللَّهُ أَنْ يَكُفَّ بَأْسَ الَّذِينَ كَفَرُوا وَاللَّهُ أَشَدُّ بَأْسًا وَأَشَدُّ تَنْكِيلًا (84)} [النساء: 84]
4:84. எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்து விடுவான் – ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.

{فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا [النساء: 74]
4:74. எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.

الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا (النساء:76)
4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِمَنِ اتَّقَى وَلَا تُظْلَمُونَ فَتِيلًا} [النساء: 77]
4:77. “உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஸகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”

{ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انْفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الْأَرْضِ أَرَضِيتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ (38) } [التوبة: 38،]
9:38. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.

{ فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا ذَلِكَ وَلَوْ يَشَاءُ اللَّهُ لَانْتَصَرَ مِنْهُمْ وَلَكِنْ لِيَبْلُوَ بَعْضَكُمْ بِبَعْضٍ وَالَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ فَلَنْ يُضِلَّ أَعْمَالَهُمْ (4) سَيَهْدِيهِمْ وَيُصْلِحُ بَالَهُمْ (5) وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ (6} [محمد: 4 – 6]

47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

{إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَاضْرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ (12)} [الأنفال: 12]
8:12. (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.

{فَإِذَا انْسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدْتُمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ} [التوبة: 5]
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஸகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قَاتِلُوا الَّذِينَ يَلُونَكُمْ مِنَ الْكُفَّارِ وَلْيَجِدُوا فِيكُمْ غِلْظَةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ} [التوبة: 123]
9:123. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் – நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மேலே கூறப்பட்ட அல் குர்ஆன் வசனங்களை தவறாக புரிந்துகொண்டு பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் தீவிரவாதமாகும். இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.

ஜிஹாத் என்றால் என்ன ?

ஜிஹாத் என்ற இஸ்லாமிய மரபுச்சொல் இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல், தாக்கி அழித்தல், அவர்கள் மீது போர் தொடுத்தல் என்ற ரீதியில் ஒரு தவறான கருத்து நிலை பெற்றிருக்கிறது.
இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்குலக மீடியாக்களின் இடைவிடாத பிரச்சாரமும் ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் மற்றொரு காரணம்.
ஜிஹாத் என்ற சொல்லுக்கு மொழியியல் வழக்கில்– அயராத போராட்டம் என்று முதல் பொருள் இருந்தாலும் விடா முயற்சி, கடின உழைப்பு என்றும் பொருள் உண்டு.

போராட்டம் என்பதை இரண்டு வகையாக நோக்கவேண்டும்.

ஒன்று: இறைவழியில் போராடுதல்! 
இரண்டாவது தனது மனோ இச்சைக்கு எதிராக போராடுவதன் மூலம் ஆத்ம திருப்தியை பெறுதல்.
இதுவே பெரிய ஜிஹாத் ஆகும்!

இறைவழியில் போராடுதல் என்பது இஸ்லாம் அனுமதித்த அடிப்படையில் தற்காத்துக் கொள்வதற்காக, இறையாண்மையை பாதுகாப்பதற்காக,சொந்த நாட்டை மீட்பதற்காக, நம்பிக்கைத் துரோகிகளின் சதியை முறியடிப்பதற்காக, அநீதியழைக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக போன்ற காரணங்களுக்காக இந்தப் போராட்டம் இருக்க வேண்டும். 
அத்துடன், போரின்போது பொதுமக்களை துன்புறுத்துவது,பெண்கள், சிறுவர்கள், முதியவர்களைகொல்வது, தாவரங்கள், நெற்பயிர்கள், தானிய இருப்புகளை அழிப்பது போன்ற இஸ்லாம் கண்டிப்பாக தடைசெய்துள்ள விடயங்களை தவிர்ந்துகொள்ளல்வேண்டும்.

மனோ இச்சைக்கு எதிராக போராடுதல் என்பது மனிதன் தனது மனதுடன் போராடி, மன இச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவது ஆகும் . எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் – ஜிஹாதுல் அக்பர் என நபி ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.
எனவே மனதுடன் போராடி மன இச்சைகளை வீழ்த்தி நமது உள்ளத்தில் இறையாட்சியை நிறுவுவதுதான் மிகப்பெரிய ஜிஹாத் ஆகும்.

ஒரு எதிரி நாட்டுடன் போரிட வேண்டுமெனில் அதனை தனி நபரோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. ஒரு இஸ்லாமிய அரசுதான் அத்தகைய ஜிஹாதை அறிவிக்கவும் நடத்தவும் அதிகாரம் படைத்ததாகும். இன்று உலகில் எங்குமே இஸ்லாமிய அரசு இல்லாத நிலையில் ஜிஹாத் என்ற பெயரில் செய்யப்படுபவை எதுவும் ஜிஹாதே அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. அது மட்டுமல்ல இந்த விஷயத்தில் உலகாதய அழைப்பு ரீதியானதும் ஒழுக்க ரீதியானதுமான எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்கும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மத குருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப்படுத்தக்கூடாது. மரங்களை வீடுகளை கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக்கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.
அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற நடைமுறை இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்கவும் இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.

{كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ} [آل عمران: 110]

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள் (அல்குர்ஆன் 3:110 ) 
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள்: “உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும் எனகூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
கொடுங்கோள் ஆட்சியாளனின் முன் உண்மையை எடுத்துரைப்பது மாபெரும் அறப்போர் ஆகும். (நூல்: முஸ்லிம்)
ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் குரல் கொடுப்பதும் அறவழியில் போராடுவதும் ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.

குறிப்பு:- இந்தக் கட்டுரையில் இணையத்தளங்களில் வெளிவந்த குறிப்புகள் பொருத்தமான இடங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்புகளை தந்த இணையத்தளங்களுக்கு நன்றி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments