விஞ்ஞானத்தை வென்ற பேரொளி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

December 5, 2017

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் முன்னறிவிப்பு செய்த விஞ்ஞான உண்மை.

உலகில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறி மறையாக அல் குர்ஆன் அமைந்துள்ளது. 1439 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ்வின் தூதர் இருலோக இரட்சகர் முஹம்மத் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட புனித அல் குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக குறிப்பிடுவதுடன், உலகில் வாழுகின்ற மக்களுக்கு வழிகாட்டியாகவும் காணப்படுவதுடன், விண்ணியல், மண்ணியல், தாவரவியல், கருவியல், சமுத்திரவியல், விலங்கியல் என பலதரப்பட்ட விஞ்ஞானக் கருத்துக்களையும் தெளிவாக கூறிக்கொண்டிருக்கிறது.

நவீன விஞ்ஞான வளர்ச்சிகளில்லாத 6ஆம் நூற்றாண்டில் அருளப்பட்ட அல் குர்ஆன் இன்றைய நவீன அறிவியல் உண்மைகளைக் தெளிவாக கூறுவது எவ்வாறு சாத்தியம்? என பலரையும் வியப்பில் ஆழ்த்துவதுடன் பல அறிஞர்களையும் ஆராய்ச்சி செய்ய தூண்டுகிறது. அல்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகளில் சிலதைக் கண்டறிந்துள்ள இன்றைய நவீன விஞ்ஞானம் இன்னும் பலதைக் கண்டுபிடிக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

மனிதன் மரணிக்கக் கூடியவன்தான். ஆயினும் மறுமை நாளில் அவன் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான். அப்போது அவனது நன்மைகள், தீமைகளுக்கு ஏற்ப அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் பரிசாக வழங்கப்படும் என்பதே உண்மை. இதுவே இஸ்லாமிய நம்பிக்கை.

இறந்த பின்னர் அடக்கம் செய்யப்படும் மனித உடல் சில மாதங்களில் மண்ணோடு மண்ணாகிவிடும். அவ்வாறான மனிதன் மீண்டும் எப்படி உருவாக்கப்படுவான்? என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை காணப்படுகின்றது. அருள்மறை அல்குர்ஆன் இதற்கு பின்வருமாறு பதிலுரைக்கின்றது:

أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ ، بَلَى قَادِرِيْنَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ  – القيامة: 3 ، 4 

இறந்து, உக்கி மண்ணாய்போன அவனுடைய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா? அவனது நுனிவிரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (அல் கியாமஹ்: 3,4)

இத்திருவசனம் மனிதன் மரணித்த பின் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான் என்பதை வலியுறுத்துகின்றது.

அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கப்படுவான் என்பது பற்றி தெளிவுபடுத்தும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ، إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُ، خُلِقَ وَفِيهِ يُرَكَّبُ (صحيح مسلم: 2955 

ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண்சாப்பிட்டு விடும் மனிதனின் (முதுகுத் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர! அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்.

அறிவிப்பவர்: அபூஹுறைறா றழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ» قَالُوا: يَا أَبَا هُرَيْرَةَ أَرْبَعُونَ يَوْمًا؟ قَالَ: أَبَيْتُ، قَالُوا: أَرْبَعُونَ شَهْرًا؟ قَالَ: أَبَيْتُ، قَالُوا: أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: أَبَيْتُ، «ثُمَّ يُنْزِلُ اللهُ مِنَ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ، كَمَا يَنْبُتُ الْبَقْلُ» قَالَ: «وَلَيْسَ مِنَ الْإِنْسَانِ شَيْءٌ إِلَّا يَبْلَى، إِلَّا عَظْمًا وَاحِدًا، وَهُوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ (صحيح مسلم: 2955 )

உடனே இறந்து போனவர்கள் பச்சைப் புற் பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும் என நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

(மேலுள்ள நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி மொழி பெயர்ப்பு)

அறிவிப்பவர்: அபூஹுறைறா (றழியல்லாஹு அன்ஹு), நூல்: முஸ்லிம்

மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மனிதன் அவனது (முதுகுத் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பு (عَجْبُ الذَّنَبِ) முதுகுத் தண்டின் வேர் பகுதி நுனியை அடிப்படையாகக் கொண்டே (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான் என்பதையும் அவன் இறந்த பின் எவ்வளவு காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் உள்வால் எலும்பு (عَجْبُ الذَّنَبِ) முதுகுத் தண்டின் வேர் பகுதி அழியாது அதை அழிக்கவும் முடியாது என்பதையும் தெளிவு படுத்துகின்றது.

இதை ஆராய்ச்சி செய்ய நினைத்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி.

ஹான்ஸ் ஸ்பீமேன் (Hans Speman) இதை தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் உள்வால் எலும்பு (முதுகுத் தண்டின் வேர் பகுதி) குறித்து தீவிரமாக ஆராய்ந்தார். அதனை பல ஆயிரம் டிகிரி வெப்பத்தில் எரிக்கவும், வீரியம் மிக்க அமிலங்களின் கலவை கொண்டு அதனை கரைக்கவும் முயற்சி செய்தார். அதில் சிறு மாற்றத்தைக் கூட அவரால் செய்ய முடியவில்லை. ஆராய்ச்சியின் முடிவாய் திருக்குர்ஆனினதும் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும் வார்த்தைகளை உண்மைப்படுத்தி உலகிற்கு அறிவித்தார்.

இந்த விஞ்ஞான உண்மை 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எப்படி தெரிந்தது?

அது மட்டுமின்றி மக்களுக்கு அவ்வப்போது பல மறைவான இரகசியங்களையும் கூறியுள்ளார்கள். இவைகளை எப்படி அறிந்து கொண்டார்கள் என்பதை நாம் ஆழமாக சிந்தித்து நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் யதார்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

ஒளியின் வேகத்தை மிகைத்த நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.

மிஃராஜ் பயணம் நபித்துவம் பெற்று 11 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டது இஸ்ரா எனவும் அங்கிருந்து விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டது “மிஃராஜ்” எனவும் அழைக்கப்படுகிறது. மிஃராஜ் பயணத்திற்கு முன் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சு பிளக்கப்பட்டு “ஸம் ஸம்” நீரால் கழுவப்பட்டு பின்னர் “ஈமான்” மற்றும் ஞானத்தினால் அது நிரப்பப்பட்டது. இவ்வாறு இதற்கு முன்னர் அவர்களது வாழ்வில் மூன்று முறை நடைபெற்றிருக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வானவர் கோமான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொண்டு வந்த “புராக்” எனும் வாகனத்தில் ஏறியவர்களாக பைத்துல் மக்திஸை நோக்கி சென்றார்கள். அங்கு அனைத்து நபீமார்களுக்கும் இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். முதலாம் வானத்திலிருந்து ஏழாம் வானம் வரை பல நபீமார்களையும் சந்தித்து உரையாடினார்கள். அதன் பின்னர் “ஸித்ரதுல் முன்தஹா” என்ற இடம் வரை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் பயணித்தார்கள். அதன் பின்னர் வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூட அனுமதிக்கப்படாததோர் இடத்திற்கு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாத்திரம் சென்று இணையற்ற அல்லாஹ்வை தனது தலைக்கண்களினால் கண்டார்கள்.

அவனோடு உரையாடினர்கள். இந்த நேரத்தில்தான் ஐங்காலத் தொழுகை கடமையாக்கப்பட்டது. இவ்வாறு பல வியக்கத்தக்க விடயங்களை கண்ட பின் தன் பயணத்தை நிறைவு செய்து கொண்டு மண்ணகம் திரும்பினார்கள்.

இது மிஃராஜ் பயணத்தின் சுருக்கமான வரலாறு. இங்கு நாம் சிந்திக்கவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.

பூமியிலிருந்து ஏழாம் வானத்தையும் அதன் தடிப்பத்தையும் தாண்டுவதற்கு 7000 ஆண்டுகள் தேவை என ஹதீதுகள் கூறுகின்றன.

849 – أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَسَنِ الْقَاضِي، حدثنا إِبْرَاهِيمُ بْنُ الْحُسَيْنِ،حدثنا آدَمُ بْنُ أَبِي إِيَاسَ،حدثنا شَيْبَانُ،حدثنا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَدْرُونَ مَا هَذِهِ الَّتِي فَوْقَكُمْ؟» فَقَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: ‘ فَإِنَّهَا الرَّفِيعُ: سَقْفٌ مَحْفُوظٌ، وَمَوْجٌ مَكْفُوفٌ. هَلْ تَدْرُونَ كَمْ بَيْنَكُمْ وَبَيْنَهَا؟ ‘ قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «فَإِنَّ بَيْنَكُمْ وَبَيْنَهَا مَسِيرَةَ خَمْسِمِائَةِ عَامٍ، وَبَيْنَهَا وَبَيْنَ السَّمَاءِ الْأُخْرَى مِثْلُ ذَلِكَ» . حَتَّى عَدَّ سَبْعَ سَمَاوَاتٍ، وَغِلَظُ كُلِّ سَمَاءٍ مَسِيرَةُ خَمْسِمِائَةِ عَامٍ، ثُمَّ قَالَ: هَلْ تَدْرُونَ مَا فَوْقَ ذَلِكَ؟ ‘ قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «فَإِنَّ فَوْقَ ذَلِكَ الْعَرْشُ وَبَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ السَّابِعَةِ مَسِيرَةُ خَمْسِمِائَةِ عَامٍ» . ثُمَّ قَالَ: «هَلْ تَدْرُونَ مَا هَذِهِ الَّتِي تَحْتَكُمْ؟» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «فَإِنَّهَا الْأَرْضُ وَبَيْنَهَا وَبَيْنَ الْأَرْضِ الَّتِي تَحْتَهَا مَسِيرَةُ خَمْسِمِائَةِ عَامٍ» . حَتَّى عَدَّ سَبْعَ أَرَضِينَ وَغِلَظُ كُلُّ أَرْضٍ مَسِيرَةُ خَمْسِمِائَةِ عَامٍ ‘، ثُمَّ قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ أَحَدَكُمْ بِحَبْلٍ إِلَى الْأَرْضِ السَّابِعَةِ لَهَبَطَ عَلَى اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى» . ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ} الحديد: 3.

அபூ ஹுறைறஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உங்களுக்கு மேலுள்ளது என்ன என்று தெரியுமா? என்று கேட்டார்கள். ஸஹாபாக்கள் அல்லாஹ்வும் அவனது தூதராகிய நீங்களுமே நன்கு அறிவீர்கள் என்று கூறினார்கள். அது உயர்த்தப்பட்டது. பாதுகாக்கப்பட்ட முகடு (கூரை), மேலும் மறைக்கப்பட்ட அலை என்று கூறினார்கள். உங்களுக்கும் அதற்குமிடையில் எவ்வளவு தூரம் என்பதை அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கும் ஸஹாபாக்கள், அல்லாஹ்வும் அவனது தூதராகிய நீங்களுமே நன்கு அறிவீர்கள் என்று கூறினார்கள். உங்களுக்கும் அதற்குமிடையில் 500 வருட நடை தூரம், அதற்கும் அதையடுத்த வானுக்குமிடையிலும் அதேபோல் 500 வருட நடை தூரம். ஏழு வானங்களையும் எண்ணிக் காட்டினார்கள். ஒவ்வொரு வானத்தின் கனமும் அதேபோல் 500 வருட நடை தூரமாகும் என்று கூறினார்கள். பின்பு அதற்கு மேல் என்ன உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? அதற்கும் ஸஹாபாக்கள், அல்லாஹ்வும் அவனது தூதராகிய நீங்களுமே நன்கு அறிவீர்கள் என்று கூறினார்கள். நிச்சயமாக அதற்கு மேல் அர்ஷ் உண்டு. அர்ஷுக்கும் ஏழாம் வானத்திற்குமிடையில் ஐநூறு வருட நடை தூரமாகும் என்று சொன்னார்கள். பின்பு உங்களுக்கு கீழ் உள்ளது என்ன என்று தெரியுமா என்று கேட்டார்கள். ஸஹாபாக்கள் அதற்கும் அல்லாஹ்வும் அவனது தூதராகிய நீங்களுமே நன்கு அறிவீர்கள் என்று கூறினார்கள். அது பூமி. அதற்கும் அதையடுத்துள்ள பூமிக்கும் இடையிலுள்ள தூரம் 500 வருட நடை தூரமாகும். ஏழு பூமிகளையும் எண்ணிக் காட்டினார்கள். ஒவ்வொரு பூமியின் கனமும் அதேபோன்று 500 வருட நடை தூரமாகும் என்று கூறினார்கள். பின்பு என்னுடைய ஆன்மா எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக “நிச்சயமாக நீங்கள் ஒரு கயிற்றை ஏழாவது பூமிக்கு தொங்க விட்டால் அது அல்லாஹ்தஆலா மீதே விழும்” என்று கூறி பின்வரும் திருவசனத்தை ஓதிக் காட்டினார்கள். “முந்தினவனும் அவனே! பிந்தினவனும் அவனே! உள்ளானவனும் அவனே! வெளியானவனும் அவனே!”

850 – أَخْبَرَنَاهُ أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، وَأَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو قَالَا: حدثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ،حدثنا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ،حدثنا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي نَصْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ الْأَرْضِ إِلَى السَّمَاءِ مَسِيرَةُ خَمْسِمِائَةِ سَنَةٍ، وَغِلَظُ السَّمَاءِ الدُّنْيَا مَسِيرَةُ خَمْسِمِائَةِ سَنَةٍ، وَمَا بَيْنَ كُلِّ سَمَاءٍ إِلَى السَّمَاءِ الَّتِي تَلِيهَا مَسِيرَةُ خَمْسِمِائَةِ سَنَةٍ، وَالْأَرَضِينَ مِثْلُ ذَلِكَ، وَمَا بَيْنَ السَّمَاءِ السَّابِعَةِ إِلَى الْعَرْشِ مِثْلُ جَمِيعِ ذَلِكَ وَلَوْ حَفَرْتُمْ لِصَاحِبِكُمْ ثُمَّ دَلَّيْتُمُوهُ لَوَجَدْتُمُ اللَّهَ عَزَّ وَجَلَّ ثَمَّ» . تَابَعَهُ أَبُو حَمْزَةَ السُّكَّرِيُّ وَغَيْرُهُ عَنِ الْأَعْمَشِ فِي الْمِقْدَارِ

அபூ தர் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது. நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பூமிக்கும் வானுக்குமிடையில் 500 வருட நடை தூரமாகும். முந்திய வானத்தின் கனம் 500 வருட நடை தூரமாகும். ஒவ்வொரு வானத்திற்கும் அதையடுத்த வானத்திற்குமிடைப்பட்ட தூரம் 500 வருட நடை தூரமாகும். அதேபோன்றே பூமிகளுமாகும். 7வது வானிற்கும் அர்ஷிற்குமிடைப்பட்டவை அவைகள் போன்றாகும். (தூரமும் 500 வருட நடை தூரமாகும்) நீங்கள் உங்கள் நண்பனுக்கு குழி (கப்ர்) தோன்றி அதிலே கயிற்றை தொங்க விட்டால் அங்கே அல்லாஹ்வையே பெற்றுக் கொள்வீர்கள். (அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத், ஆசிரியர்: இமாம்: பைஹகீ)

7000 ஆண்டுகள் ஒரு மனிதன் நடப்பதாயின் சராசரியாக 307 மில்லியன் கிலோமீட்டர் அதாவது 30 கோடி 70 இலட்சம் கிலோமீட்டர் நடக்க முடியும் இந்த தூரத்தைக் கடக்க சுமார் 6 கோடி 13 இலட்சம் மணிநேரம் தேவைப்படும்.

இந்த தூரத்தை ஒளியின் வேகத்தில் கடப்பதாயின் சுமார் 17 நிமிடங்களில் கடக்க முடியும் என இன்றைய விஞ்ஞானம் கூறுகின்றது.

இதைவிட அதிகமான, மனிதனால் கணக்கீடு செய்ய முடியாத தூரத்தை நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுமார் 15 நிமிடத்திற்குள்ளாக கடந்து சென்று திரும்பியிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் ஒளியைவிட பல மடங்கு வேகமாகத்தான் பிரயாணம் செய்திருக்கவேண்டும்.

அதிவேகமான இந்தப்பிரயாணத்தின் போது அவர்களின் உடலை காற்றின் வேகத்திலிருந்து பாதுகாக்க எந்த விதமான பாதுகாப்பு கவசங்களையும் அணிந்திருக்கவில்லை. அவ்வாறாயின் அவர்களின் உடல் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது?

இந்த விண்வெளிப் பயணத்தில் அவர்கள் ஏழு வானங்களையும் தாண்டிச் செல்லும் போது சுவாசிப்பதற்கான பிராணவாயுவை (ஒட்ஜிசன் வாயு) அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. அவ்வாறாயின் எப்படிச் சுவாசித்தார்கள்?

அவ்வாறாயின் அவர்களின் யதார்த்த நிலை என்ன என்பதையும் அவர்கள் யார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

அவர்களின் யதார்த்த நிலைபற்றி விபரிக்க இச்சிறுபிரசுரம் போதாது. பின்வரும் ஹதீஸ் அவர்களின் யதார்த்த நிலை பற்றி சுருக்கமாக விபரிக்கின்றது.

عَنْ جَابِرٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ غَزْوَةِ الطَّائِفِ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مَلِيًّا مِنَ النَّهَارِ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهُ انْتَجَاهُ

ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். தாயிப் யுத்த நாளில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் காலை நேரம் எழுந்து சென்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஸெய்யிதுனா அபூ பக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் றஸூலே! இன்று நீங்கள் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அதற்குப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “அவருடன் நான் பேசவில்லை. ஆனால் அவருடன் பேசியது அல்லாஹ்தான்” என்று கூறினார்கள்.

(அல் முஃஜமுல் கபீர் லித்தப்றானீ)

வெளியீடு:
அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா.
BJM வீதி, காத்தான்குடி 06.
கை பேசி: 077 320 18 11
02.12.2017

You may also like

Leave a Comment