“வுஜூத்” உள்ளமை பற்றி ஓர் ஆய்வு

March 19, 2019

ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்

அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான “ஸிபாத்” தன்மைகள் இருபது உள்ளன. அவற்றில் ஒன்று “வுஜூத்” உள்ளமை எனப்படும். உள்ளமை என்ற கருத்தை தருகின்ற இச்சொல்லுக்கு நேரடி எதிர்ச் சொல் “அதம்” என்ற சொல் என்று தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இச்சொல்லுக்கு இன்மை அல்லது இல்லாமை என்று பொருள் வரும். இதுவே உண்மை.

எனினும் விடயம் தெரியாத மௌலவீமார் உள்ளிட்ட சிலர் உள்ளமை என்பதும், உண்மை என்பதும் இரண்டும் ஒன்றுதான் என்று எண்ணிக் கொண்டு அல்லது நம்பிக் கொண்டு உள்ளமை என்ற சொல்லின் எதிர்ச் சொல் “கதிபுன்” பொய் என்றும் கூறுகின்றார்கள். இது தவறு. தவறென்றால் தவறினுந்தவறென்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் உள்ளமை என்ற சொல்லின் நேரடி எதிர்ச் சொல் “அதமுன்” இல்லாமை அல்லது இன்மை என்று வரும். “ஸித்குன்” உண்மை என்ற சொல்லின் எதிர்ச் சொல்தான் “கதிபுன்” பொய் என்று வரும்.

“வுஜூத்” உள்ளமை என்பது ஒரு வஸ்த்து உள்ளதாக இருப்பதைக் குறிக்கும். இதை உளதாக இருத்தல் என்றும் சொல்வதுண்டு.

எனவே, இறையியலை அறிவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் முதலில் இப்போது நான் சொல்லி வந்த விபரத்தை ஐயம் தெளிவுற விளங்கிக் கொள்ள வேண்டும்.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். அதாவது அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன தன்மைகளில் “வுஜூத்” என்பது மனிதனுக்கு தொழுகை “வாஜிப்” கடமையானது போன்றதென்று விளங்கிக் கொள்ளுதல் தவறு. மனிதனுக்கு தொழுகை “வாஜிப்” கடமை என்றால் அதை அவன் செய்ய வேண்டும். அல்லாஹ்வுக்கு “வுஜூத்” கடமை என்பது இந்தக் கருத்தின் அடிப்படையில் அல்ல.

“வுஜூத்” உள்ளமை அவனுக்கு கடமை என்பது அது அவனில் இருப்பது அவசியம் என்ற அடிப்படையில் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். தொழுகை போல் அவன் அதைச் செய்ய வேண்டும் என்ற கருத்தில் அல்ல.

இறை ஞானம், ஸூபிஸம் பேசுவோர் “வுஜூத்” என்றும், “வுஜூதிய்யத்” என்றும் பேசுவார்கள். இதனால் இரண்டும் தனித் தனியானதென்றும் விளங்கிக் கொள்ளுதல் கூடாது. இரண்டும் ஒன்றுதான். சொற் பிரயோகத்தில் மயங்குதல் கூடாது.

அல்லாஹ்வுக்கு “வுஜூத்” அவசியம் என்பது هَلِ اللهُ مَوْجُوْدٌ؟ அல்லாஹ் என்று ஒருவன் உள்ளானா? என்ற கேள்விக்கு ஆம் உள்ளான் – نَعَمْ هُوَ مَوْجُوْدٌ என்று பதில் சொல்வது போன்றதாகும்.

அல்லாஹ் இருக்கின்றானா? என்ற கேள்வி அவன் உள்ளானா? இல்லையா? என்ற கருத்தை தருமேயன்றி அவன் நின்று கொண்டிருக்கின்றானா? அமர்ந்து கொண்டிருக்கின்றானா? அவன் சாய்ந்து கொண்டிருக்கின்றானா? என்ற கருத்தை தராது.

உதாரணமாக அப்துல்லாஹ்வின் நண்பன் ஒருவன் அவனின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி அப்துல்லாஹ் இருக்கின்றானா? என்று கேட்டால் அப்துல்லாஹ் வீட்டில் உள்ளானா? என்றுதான் கேட்கிறான் என்பதை புரிந்து பதில் சொல்ல வேண்டும். அப்துல்லாஹ்வின் கேள்விக்கு அவன் இருக்கவில்லை – அமர்ந்திருக்கவில்லை – நின்று கொண்டிருக்கின்றான் என்றோ சாய்ந்து கொண்டிருக்கின்றான் என்றோ பதில் சொல்வது கேள்வியை புரிந்து கொள்ளாதவனின் பதிலாகும்.

இவ்வாறுதான் ஒருவன் இன்னொருவனிடம் அல்லாஹ் இருக்கின்றானா? இல்லையா? என்று கேட்கும் கேள்வியுமாகும். இக்கேள்வியின் கருத்து அல்லாஹ் உள்ளானா? இல்லையா? என்பதேயாகும். இவ்வாறான கேள்வியின் கருத்து அல்லாஹ் எப்படி இருக்கின்றான்? என்ற கருத்தல்லவென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் அறபுக் கல்லூரி ஒன்றில் ஓதிக் கொண்டிருந்தான் – படித்துக் கொண்டிருந்தான். “அகீதா” கொள்கை விளக்க நூல்களில் “நூறுள்ளலாம்” என்று ஒரு நூல் உண்டு. அதில்
اَللهُ مَوْجُوْدٌ قَدِيْمٌ بَاقِيْ – مُخَالِفٌ لِلْخَلْقِ بِالْإِطْلَاقِ
என்று ஒரு பாடல் வரும். இதில் “அல்லாஹு மவ்ஜூதுன்” என்று ஒரு வசனம் வந்துள்ளது. அதாவது அல்லாஹ் இருக்கின்றான், உள்ளான் என்று இதற்கு பொருள் வரும். வகுப்பாசிரியர் இப்பாடலுக்கு விளக்கம் சொல்கையில் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான “ஸிபாத்” தன்மைகளில் ஒன்று “வுஜூதுன்” உள்ளமை என்று சொன்னார். மாணவன் உள்ளமை என்றால் என்ன? என்று அவரிடம் கேட்டான். அதற்கவர் உள்ளமை என்றால் உள்ளமைதான். பாடத்தில் – வகுப்பில் ஒழுக்கம் பேண வேண்டும் என்று அவன் மீது சீறிப் பாய்ந்து தனது மேசையிலிருந்த “முன்ஜித்” என்ற அகராதி நூலைத் தூக்கி அவன் மீது எறிந்தார். கலாட்டா முடிந்தது. அந்த மாணவன் இவன்தான் என்றால் அது பொய்யாகாது.

இவ்வாறு மூலக் கொதி பிடித்தவர்களின் நடவடிக்கையும், விளக்கமின்மையுமே இறை ஞானக்கலை – ஸூபிஸம் அணைந்து போனதற்கான காரணங்களில் ஒன்றென்று சொன்னால் அது பொய்யாகாது.

அல்லாஹ் என்ற பெயரில் ஒருவன் உள்ளான் என்ற நம்பிக்கை உள்ளவன்தான் “முஃமின்” விசுவாசியாக இருக்க முடியும். இவன்தான் ஆத்திகனுமாவான். அவ்வாறு ஒருவன் இல்லை என்று நம்பினவன் “முல்ஹித்” ஆவான். நாத்திகன் ஆவான்.

அந்த அடிப்படையில் உலகில் வாழும் சுமார் எழுநூறு கோடி மனிதர்களில் தொன்னூறு வீதமானோர் ஆத்திகர்களேயாவர். “முஃமின்”களேயாவர். உலகில் வாழும் எந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாயினும் கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரும் “முஃமின்” விசுவாசிகளேயாவர். எனினும் அவர்கள் “முஹம்மதுர் றஸூலுல்லாஹ்” முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒரு நபீ என்றும், றஸூல் என்றும் நம்பாமல் இருப்பது மட்டுமே அவர்களை விசுவாசிகள் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு தடையாக உள்ளது.

அல்லாஹ் என்று ஒருவன் உள்ளான், கடவுள் என்று ஒருவன் உள்ளான் என்று நம்பினவனும், அவனல்லாத – அவனுக்கு வேறான யாருமில்லை என்றும், எதுவுமில்லை என்றும் நம்பினவனும் ஒருபோதும் சிருட்டியை, சிலையை, விக்கிரகத்தை வணங்கமாட்டான். கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்று மட்டும் நம்பிக் கொண்டு அவனைப் பற்றிய ஏனைய எந்த ஒரு விளக்கமும் தெரியாதவன் தான் சிருட்டியை வணங்குவான். அல்லது அதை வணங்குகின்றவனை ஆதரிப்பான்.

“{வஹ்ததுல் வுஜூத்” என்ற இறையியலும், தஸவ்வுப் என்ற ஸூபிஸ ஞானமும் பேசுகின்ற எவரும் சிலை வணக்கம் – சிருட்டி வணக்கம் செய்வதுமில்லை. அது ஆகும் என்று சொல்வதுமில்லை. அவ்வாறு ஒருவர் சொல்வாராயின் அவர் கடவுளை – இறைவனை – அல்லாஹ்வை சரியாகப் புரிந்து கொள்ளாதவரேயாவார்.

அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை என்பது எது போன்றுமில்லாதது. அதற்கு நிகர் கிடையாது. நிறம் கிடையாது. எடை கிடையாது. எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. எவராலும் அதை சூழ்ந்து கொள்ளவும் முடியாது. ஆயினும் அதை எட்டிக் கொள்ள முடியும், அறிந்து கொள்ளவும் முடியும். ஆயினும் அதை சூழ்ந்து கொள்வது சாத்தியமானதேயாகும்.

لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ، أَيْ لَا تُحِيْطُ بِهِ الْأَبْصَارُ، وَلَا تُحِيْطُ بِهِ الْعُلُوْمُ، وَالْعَجْزُ عَنْ دَرْكِهِ دَرْكٌ، وَالْعَجْزُ عَنْ إِدْرَاكِهِ إِدْرَاكٌ، وَلَا يَعْلَمُ كُنْهَ ذَاتِهِ إِلَّا هُوْ،

You may also like

Leave a Comment