Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஷுக்றன் கொரோனா!

ஷுக்றன் கொரோனா!

حمدا وشكرا يا الله
شكرا جزيلا يا كرونا

ஹம்தன் வஷுக்றன் யா அல்லாஹ்!
ஷுக்றன் ஜஸீலன் யா கொரோனா!

அறபு நாடுகளின் பீரங்கிப் பிரசங்கி கலாநிதி மஹ்மூத் அல்ஹிப்னீ அல் அன்ஸாரீ அவர்களின் உரையின் சுருக்கம்.

யா அல்லாஹ்! உன்னைப் புகழ்ந்து உனக்கு நன்றி சொல்கிறேன்!
யா – கொரோனா! உனக்கு பெறுமதி மிக்க நன்றி கூறுகிறேன்.

ஷுக்றன் கொரோனா! தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்ற இறைஞானிகளின் தத்துவத்தை உயிர்ப்பித்துவிட்டாய். தனித்திருத்தல், பசித்திருத்தல், விழித்திருத்தல் என்பவற்றிலுள்ள தத்துவத்தை உணர்த்திவிட்டாய். உலகில் வாழும் பல கோடி மக்களுக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டாய். பல கோடி மக்களைத் தனிமைப்படுத்தி விட்டாய். பல கோடி மக்களை பசியோடு வைத்து விட்டாய். பல கோடி மக்களை விழித்திருக்க வைத்து விட்டாய். என்னே உன் சாதனை! ஸுப்ஹானல்லாஹ்! நீ எவர் செய்த சதியின் உருவமாகவும், வெளிப்பாடாகவும் இருந்தாலும் இது யாவும் அறிந்த இறைவனின் நாட்டமே! அவன் நாடாமல் நீ வரவும் முடியாது, உன்னால் எதையும் சாதிக்கவும் முடியாது. அவனின்றி அனுவும் அசையாது.

ஷுக்றன் கொரோனா! உலகிலுள்ள பார்களை (BAR) மதுச்சாலைகளை மூட வைத்து மதுப்பிரியர்களை தள்ளாடச் செய்து அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்து விட்டாய்.

ஷுக்றன் கொரோனா! உண்ணுமுன் கை கழுவும் வழக்கத்தைக் கற்றுத்தந்த மா நபீயின் உயர் வழியை உயிர்ப்பித்துவிட்டாய்.

ஷுக்றன் கொரோனா! சினிமா தியேட்டர்களுக்கு – படமாளிகைகளுக்கு மூடு விழா நடத்தி பலரைப் பாவத்திலிருந்து பாதுகாத்துவிட்டாய்.

ஷுக்றன் கொரோனா! ஆடம்பர வாழ்வில் இனிமை கண்டு, அதில் லயித்துக் கிடந்து அல்லாஹ்வை மறந்து வாழ்ந்தவர்களுக்கு அவனை நினைவூட்டிவிட்டாய்.

ஷுக்றன் கொரோனா! உலகளாவிய ரீதியில் விபச்சார விடுதிகளை மூடச் செய்து விபச்சாரச் சகதியில் விழுந்து அதில் இராப்பகலாய் புரண்டு பணத்தையும், நேரத்தையும் வீணாக்கி பாவங்களைச் சுமந்து வந்த பலரை நல்வழிப்படுத்திவிட்டாய்.

ஷுக்றன் கொரோனா! நாட்டியமாடும் நங்கைகளினதும், விபச்சார வியாபாரிகளான அழகிகளினதும் “க்ளப்”களுக்கு (CLUB) மூடுவிழாச் செய்துவிட்டாய்.

ஷுக்றன் கொரோனா! முஸ்லிம் பெண்களின் “நிகாப்”, “ஹிஜாப்” என்ற முகத்திரையை நையாண்டி செய்து எள்ளி நகையாடி பலாத்காரமாக கழட்ட வைத்த மத, இனத்துவேசமுள்ள ஆண்களையும், பெண்களையும் முகத்திரை அணிய வைத்து பழிக்குப்பழி வாங்கிவிட்டாய்.

ஷுக்றன் கொரோனா! இறைவனை வணங்காமலும், அவனிடம் கையேந்தாமலும் காலத்தை வீணாக்கியவர்களை அவனை வணங்கச் செய்தும், கையேந்தச் செய்தும் சாதனை படைத்துவிட்டாய்.

ஷுக்றன் கொரோனா! உலகிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் மதுவோடும், மங்கையோடும் சிற்றின்பக் கடலில் மூழ்கிக்கிடந்த பண முதலைகளுக்கு நல்லதொரு பாடம் கற்றுக் கொடுத்துவிட்டாய்.

ஷுக்றன் கொரோனா! வறுமையின் வாடையைக் கூட நுகராத, ஆடம்பர உணவுண்டும், அடுக்கு மாடிகள் கொண்ட மாட மாளிகைகளில் படைத்தவனை மறந்து வாழ்ந்தவர்களுக்கு பக்தியைக் கற்றுக் கொடுத்துவிட்டாய்.

ஷுக்றன் கொரோனா! கடற்கரைகளிலும், கடைத் தெருக்களிலும், சந்தைகளிலும், சந்து பொந்துகளிலும் ஊர் பலாய் கழுவி அலைந்தவர்களை வீடுகளில் முடக்கி வைத்துவிட்டாய்.

ஷுக்றன் கொரோனா! நீ வந்து செய்த சாதனைகள் பல. இதேபோல் பல இழப்புக்களையும், நிம்மதியற்ற வாழ்வையும், கவலை, கஷ்டங்களையும் ஏற்படுத்தியுள்ளாய். நீ செய்த நன்மையும் போதும், தீமையும் போதும். இறையடியார்கள் தமது தவறை உணர்ந்து விட்டார்கள். நீ உனது விளையாட்டில் சிலதை மட்டுமே காட்டியுள்ளாய். இன்னும் பல விளையாட்டுக்கள் காட்ட திட்டமிட்டுள்ளாய். வேண்டாம் கொரோனா வேண்டாம். போதும் உன் தண்டனை. இறைவன் உன்னை அனுப்பியது சிலருக்கு அருள். சிலருக்குத் தண்டனை. சிலருக்கு சோதனை. அடியார்கள் உணர்ந்து கொண்டார்கள். நீ சென்றுவிடு.உன்னைப் படைத்து, கொரோனா என்ற பெயரில் உன்னை அனுப்பிய இறைவன் மீதும், இறை மறை மீதும் ஆணையிட்டு உன்னைக் கேட்கிறேன். நீ சென்றுவிடு. வந்த வழியை மறந்துவிடு. சென்றுவிடு என்றுதான் நான் உன்னைச் சொல்கிறேன். come again மீண்டும் வா என்று சொல்லவில்லை. மறாக don’t come again மீண்டும் வராதே என்றே சொல்கிறேன்.

அடியார்கள் சிலருக்கு அருளாகவும், இன்னும் சிலருக்கு தண்டனையாகவும், இன்னும் சிலருக்கு சோதனையாகவும் கொரோனாவை அனுப்பியவனே! மூன்று சாராரும் யாவையும் புரிந்து கொண்டார்கள். நீ அடியார்களுக்கு அருள் செய்தாலும் அவர்கள் உன் அடியார்கள்தான். நீ அவர்களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடியார்கள்தான். سَبَقَتْ رَحْمَتِيْ غَضَبِيْ “எனது கிருபை எனது கோபத்தை முந்திவிட்டது” என்று சொன்ன அருளாளனே! எல்லாமே உன் அருள்தான். ஒரு முடல் நீர் குடிப்பதாயினும் அது உன் அருள்தான். ஒரு தரம் சுவாசிப்பதாயினும் அது உன் அருள்தான். உன் நாடகத்தின் இரகசியத்தை நானும் அறியேன். வேறெவருமே அறியார்.

تَبَارَكَ الَّذِيْ بِيَدِهِ الْمُلْكُ சர்வ சிருட்டிகளின் ஆட்சியதிகாரம் உன் கையில்தான் உள்ளது. நீ நினைத்ததைச் செய்வாய். உன்னுடைய கோபப் பார்வை பிரபஞ்சத்தையே சாம்பலாக்கிவிடும். உன் தண்டனையைத் தாங்கிக் கொள்ள அடியார்களால் முடியாது. உனது அடியார்கள் அனைவரையும் இன, மத, மொழி வேறுபாடின்றி மன்னித்தருள்புரிவாயாக!

உனது ஹபீப் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் திரு முகத்திற்காகவும், உன்னுடைய ஏனைய நபீமார், றஸூல்மார் அனைவரின் திரு முகங்களுக்காகவும், உன்னுடைய வலீமார்களின் திரு முகங்களுக்காகவும் எங்களை மன்னித்து எங்களைச் சூழ்ந்துள்ள துன்பத்திலிருந்து எங்களுக்கு ஈடேற்றம் தருவாயாக

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments