ஷெய்குனா அப்துர் றஹ்மான் அம்பா நாயகமும், ஷெய்குனா அப்துர் றஊப் மிஸ்பாஹீயும்

November 28, 2016

ஆக்கம் – அபுன் நூர் –

தொடர்-1.

வஹ்ததுல் வுஜூத் பிழையான கொள்கை என அதனை அறியாத ஸுன்னத்வல்ஜமாத் உலமாஉகளும் எண்ணிக்கொண்டுருப்பதால் இந்தியாவிலுள்ள பெரியார்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்காட்டி இச்சத்தியக்கொள்கைக்கு வலுச்சேர்க்கவேண்டும் என்ற நல்லெண்ணம் ஷெய்ஹுனா மிஸ்பாஹி அவர்களுக்கு உதித்தது.

அதற்காக “அல் கிப்ரீதுல் அஹ்மர்” (சிவப்புக்கெந்தகம்- இது ஷெய்ஹுல் அக்பர் அவர்களின் சிறப்புப்பெயர்) என்ற பெயரில் வஹ்ததுல்வுஜூத் விளக்கங்கள் அடங்கிய பத்வா ஒன்றினை ஷெய்ஹுனா மிஸ்பாஹி அவர்கள் தயாரித்தார்கள்.

இப்பத்வாவினை எடுத்துக்கொண்டு தனது நண்பர் மெளலவீ இஸ்மாஈல் பலாஹி (சின்ன சமது மெளலவீ) அவர்களுடன் இந்தியா பயணமானார்கள்.

அங்குள்ள பிரசித்திபெற்ற மார்க்க அறிஞர்களிடம் இப்பத்வாவினைக்காட்டி அவர்களின் கையெழுத்தைப் பெறுவதுதான் இப்பயணத்தின் நோக்கமாக இருந்தது.

ஷெய்ஹுனா மிஸ்பாஹி அவர்களுக்கு பரிச்சயமான அப்துல்கபூர் M.A என்ற பேச்சாளர் தற்கலையில் இருந்தார். அவரை சந்தித்து இந்தியாவில் இப்பத்வாவில் கையெழுத்தினைப் பெற யார் யாரை சந்திக்கலாம் என்று விசாரித்தார்கள். அதற்கவர், “மெளலவீ! வஹ்ததுல்வுஜூத் சம்மந்தமாக எல்லா உலமாஉகளுக்கும் தெரியாது, அதனால் எல்லோரும் ஒப்பம் வைக்க முன்வரமாட்டார்கள். எதற்கும் நீங்கள் காயல்பட்டணம் செல்லுங்கள். அங்கு இருப்பார்கள்” என்று ஆலோசனை சொன்னார்.

ஏற்கனவே கொழும்பு -பல்லாக் அண்ட் சன்ஸ் உரிமையாளர் சதக்ஹாஜியார், காயல் பட்டணத்தில் ஜலீல் மொஹிதீன் ஹசரத் என்பவர்களை இது சம்மந்தமாக சந்தியுங்கள் என்று சொல்லி அவருக்கும் ஒரு கடிதமும் எழுதி ஷெய்ஹுனா மிஸ்பாஹியிடம் கொடுத்திருந்தார்கள். எனவே அந்தக்கடிதத்தோடு காயல்பட்டணம் சென்று ஜலீல் மொஹிதீன் ஹசரத்தை சந்தித்தார்கள்.

அவர் பத்வாவின் பிரதியை வாங்கிக்கொண்டு மெளலவீ! நானும் இதற்கு கையொப்பம் வைக்கலாம், அத்தோடு மத்ரஸதுல் மவாலீ எனும் அரபுக்கல்லூரி கீழக்கரைக்கும் ஏர்வாடிக்கும் இடையிலுள்ள ஆயிஷா நகரில் இருக்கின்றது. நீங்கள் அங்கு சென்று தங்கியிருங்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நானும் அங்கு வந்துசேருவேன். அங்குவைத்து நானும் அங்குள்ள ஒஸ்தாதுமார்களும் சேர்ந்து கையெழுத்து வைக்கலாம் என்று கூறினார்.

ஷெய்ஹுனாவும் சின்ன சமது மெளலவியும் மீண்டும் ஆயிஷா நகர் மத்ரசாவிற்கு புறப்பட்டுச்சென்று அங்கிருந்த ஒஸ்த்தாதுமார்களைச் சந்தித்து விடயம் உரைத்து பத்வாவினை கையளித்துத் தங்கிக்கொண்டார்கள்.

இரு நாளாகி நான்கு நாளாகி ஒருவாரமாகிவிட்டது. ஜலீல் மொஹிதீன் ஹசரத் அங்கு வரவுமில்லை, ஒஸ்தாது மார்கள் பத்வாவினைப்புரட்டிப்படித்ததாகவும் தெரியவில்லை.

வெறுமனே நாட்கள் நகர்வதைக்கண்டு ஷெய்ஹுனா அவர்கள் ஒஸ்தாதுமார்களை வினவினார்கள் அத்தோடு ஜலீல் மொஹிதீன் ஹசரத்தோடு தொடர்புகொண்டு இங்கு எப்போது அவர் வருவார் என்ற விடயத்தையும் கேட்குமாறு வேண்டினார்கள்.

அதற்கவர்கள் ” மவ்லவீ! ஜலீல் மொஹிதீன் ஹசரத்தோடு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டோம், அவர்கள் வேறு பயணம் ஒன்று செல்வதால் இங்கு வரமுடியாதுள்ளதாம். நீங்கள் கொடுத்த பத்வா பிரதியினை மண்ணடியிலுள்ள Science medical shop இல் கொடுக்கிறார்களாம், உங்களை அங்கு சென்று பெற்றுக்கொள்ளட்டுமாம். மேலும் எங்களைப்பொறுத்தவரையில் வஹ்ததுல்வுஜூதை இப்பொழுதான் கொஞ்சம்கொஞ்சமாக நாங்கள் கற்றுவருகின்றோம். எனவே இந்த விடயத்தில் நாங்கள் கையெழுத்திட்டால் அதுசம்மந்தமான கேள்விகள் எழும்போது அதற்கான பதில்களை வழங்கவும் நன்கு தெரிந்திருக்கவும்வேண்டும்! ஆதலால் நாங்கள் கையெழுத்திடுவது தகுதியானதாக இருக்காது. ஆனால் வஹ்ததுல்வுஜூதை நாம் மறுக்கவில்லை.

நீங்கள் கம்பம் என்ற ஊரில் ஒரு மகான் வசித்துவருகிறார்கள். அவர்கள் தற்காலத்தில் வாழும், தென் நாடறிந்த பெரும் வலியுல்லாஹ்.ஆரிப்பில்லாஹ். நீங்கள் அங்கு சென்று அன்னாரை சந்தித்தால் கையெழுத்திட்டுத்தரக்கூடும். அதுதான் மிகப்பெரிய அங்கீகாரம் உங்களுக்கு” என்று சொன்னர்கள்.
அத்தோடு நீங்கள் அங்கு செல்வதென்றால் தலைமுடி மிகக்குறைவாக வைத்திருக்கவேண்டும், அடர்த்தியாக முடி வைத்திருந்தால் அவர்களுக்குப்பிடிக்காது, கவனமாக நடந்துகொள்ளுங்கள் என்றும் ஆலோசனை வழங்கினர்.

எனவே கம்பம் நோக்கி எவ்வாறு பயணிக்கவேண்டும், அங்கு போய்ச்சேர எவ்வளவு காலம் எடுக்கும் போன்ற விபரங்களை அவர்களிடம் பெற்றுக்கொண்டதோடு ஜலீல் மொஹிதீன் ஹசரத்திற்காக காத்திருந்து 15 நாட்களளவில் வீணாகிவிட்டது! ஒரு மாத விசா வேறு முடியப்போகிறதே! என்று கவலைப்பட்டவர்களாக கம்பம் நோக்கி அவசரமாக பிரயாணமானார்கள்.

இருவரும் கம்பத்தை அடைகிறார்கள். அது ஒரு காலை நேரம். தெருவிலே உள்ள உணவகமொன்றில் போசனத்தை முடித்தவர்களாக எதிர்பட்டோரிடம் அம்பா நாயகத்தின் தைக்கா எங்கிருக்கிறது என்று விசாரித்தவர்களாக அந்தத்தெருவில் முன்னேறி நடந்துகொண்டிருந்தார்கள்.

சற்று நடந்தபின்னர் இடையிலே ஒரு தைக்கா எதிர்படுகிறது. அம்பா நாயகத்தை சந்திப்பதற்கு முன்னர் இருவரும் தங்களை ஒழுங்கு படுத்திக்கொள்வோம் என்றெண்ணியவர்களாக இத்தைக்காவினுள் நுழைந்து முகம் கைகால்கள் கழுவிக்கொண்டிருக்கையில் ஒருவர் வந்து நீங்கள் யார்! எங்கு செல்லவந்திருக்கிறீர்கள் என்று விசாரித்தார்.

நாங்கள் அம்பா நாயகம் என்பவர்களைச்சந்திக்க வந்திருக்கிறோம். அதற்குமுன்னர் சற்று இளைப்பாறவே இப்பள்ளியினுள் நுழைந்தோம்! என்றனர் இருவரும்.

அப்படியா செய்தி! இதுதான் அம்பா நாயகத்தின் தைக்கா! நாயகம் உள்ளேதான் இருக்கிறார்கள் என்றார் அவர்.

இதுதான் அம்பாநாயகத்தின் தைக்கா என்று எதிர்பார்த்திருக்கவில்லை இருவரும்.

சரி என்று அவசர அவசரமாக தங்கள் முடிகளை அணிந்திருந்த தொப்பியினுள் ஒழுங்குபடுத்திக்கொண்டு அப்பள்ளியினுள்ளே நோட்டம்விட்டார்கள்.

ஓர் அறையினுள்ளிருந்து கணீர் என்ற குரல் வெளி வந்துகொண்டிருந்தது. இருபெண்கள் தரையில் அமர்ந்திருக்க அவர்களுக்கு அம்பா நாயகம் அவர்கள் மார்க்க விளக்கம் சொல்லிக்கொண்டுருப்பது தெரிந்தது.

அவர்கள் இருவரும் வெளியேறிய பின்னர் அம்பா நாயகத்தை சந்திக்க இருவர் வந்துள்ளனர் என்ற செய்தியை யாரோ அவர்களிடம் சென்று சொன்னதும் உள்ளே வருமாறு அழைப்பு வந்தது.

அறையினுள்ளே ஒரு கட்டிலில் அம்பா நாயகம் மிக்க கம்பீரமாக வீற்றிருந்தார்கள். அவர்கள் 70 வயது மதிக்கத்தக்கவர்களாக இருந்தார்கள். கட்டிலுக்கு எதிரே 4/5 பேர் இருக்கக்கூடிய சற்றுப்பணிவான பென்ஞ் (மேசை) ஒன்றும் கிடந்தது.

உள்ளே நுழைந்த இருவரும் அன்னாருக்கு ஸலாம் உரைத்து முஸாபஹா செய்து கரங்களைப்பற்றி முத்தமிட்டுக்கொண்டனர்.

இருவரும் அந்த பென்ஞ்சிலே இருக்க முயற்சிக்கையில், அங்கு இருக்க வேண்டாம், தான் வீற்றிருக்கும் கட்டிலில் வந்தமருமாறு அழைத்தார்கள் அம்பா நாயகம்.

ஒரு பெரிய நாதாவுடன் சரிசமமாக இருக்கக் கூச்சப்பட்டவர்களாக ஷைஹுனா மிஸ்பாஹி தயங்குகையில், “இல்லை இல்லை கட்டிலில் வந்தமர்ந்துதான் ஆகவேண்டும்!” என்று வற்புறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கட்டிலிலேயே அம்பா நாயகத்தை விட்டும் சற்றுத்தள்ளி ஒரு ஓரத்தில் அமர்ந்துகொண்டனர் இருவரும்.

நீங்கள் அப்படி அமரக்கக்கூடாது! என்னுடைய தொடை உங்களுடைய தொடையுடன் படுமளவு நெருக்கமாக வந்தமருங்கள்! என்று மீண்டும் அன்புக்கட்டளையிட்டனர் அம்பாநாயகம்.

பின்னர் ஷெய்ஹுனாவும் அம்பாநாயகத்தின் தொடையோடு தொடை படும்வண்ணம் நெருக்கமாக அமர்ந்துகொள்ள, பின்னர் சில அறிவுரைகளை வழங்கினார்கள்.

அதன்பின்னர், “என்ன வந்தீர்கள்!” என்று சபபுக்கு வினவினார்கள் அம்பா நாயகம்.

“நாயகமே! வஹ்ததுல்வுஜூத் சம்மந்தமாக நாங்கள் பேசினோம். எங்களுக்கு முர்தத் என்று பட்டம் தந்துவிட்டார்கள். அதனால் நாங்கள் வஹ்ததுல்வுஜூத் இன்னதுதான் என்று அறபியில் ஒரு பத்வா எழுதிக்கொண்டு வந்துள்ளோம்.

இந்தியாவுக்கு வந்த நோக்கம், இங்குள்ள பெரும் நாதாக்களிடம் கையெழுத்து எடுத்துக்கொண்டு செல்லலாம் என்றுதான். எங்களுக்கு அனைவரும் உங்களைத்தான் காட்டிவிட்டார்கள். அதனால்தான் நாங்கள் இங்கே வந்திருக்கம்.

நீங்கள் கையெழுத்துப்போட்டுத்தரவேணும். அல்லது பிழையாக இருந்தால் எங்களுக்குத் திருத்திச் சொல்லித்தரவேணும்” என்று கூறி முடித்தார்கள் ஷெய்ஹுனா மிஸ்பாஹி.

உடனே அம்பா நாயகம் தமது மகனாரைக் கூப்பிட்டார்கள்.

அப்துல்கபூர்! இங்க வாவேன்! இவரு…..சிலோனிலிருந்து அப்துர்றஊப் ஸாஹிப்……வஹ்ததுல் வுஜூதைப்பற்றி பத்வா ஒன்று எழுதிக்கிட்டு வந்திருக்கிறாராமே!

அதில் கையெழுத்துக்கேட்டு வந்திருக்கிறாரு…..!

நாம யாருக்காவது கையெழுத்துப்போட்டுக்கொடுத்த வரலாறுகள் உண்டா…..!

அல்லது யாராவது வஹ்ததுல்வுஜூதை எழுதிக்கிட்டு நம்மிடம் கையெழுத்துக்கேட்டு வந்த வரலாறுகள் உண்டா…..?

இல்லையே…..!

சரி வாசித்துப்பாப்பமே! வாவேன்! வாசியேன்!

என்று மகனிடத்தில் கூறினார்கள்.

மகனும் கட்டிலின் அருகில் வந்துநின்றவர் பத்வாவை கையிலெடுத்து அது முடியும்வரை மளமளவென்று வாசித்துக்கொண்டேவிட்டார். இது முக்கால் மணிநேரம் நீடித்தது.

அம்பா நாயகம் அப்படியே கட்டிலில் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு சொன்னார்கள்,

அப்துர்றஊப்! நல்லா…..எழுதியிருக்கியளே…!

(மகனை நோக்கி) ம்ம்ம் கையெழுத்துக் கேட்காரே!

சரி நீ போய் எழுதிக்கிட்டு வா! என்று மகனிடம் சொன்னார்கள்.

“இதை ஆரம்பித்திலிருந்து கடைசிவரை பார்வையிட்டேன். இது முழுக்க முழுக்க சரியானது. இதை மறுப்பவன் முஆனித்-மனமுரண்டுக்காரன். அவன் இருளில் கிடக்கின்றான்” என்று எழுதிக்கொடுண்டுவந்து கொடுத்தார் மகனார்.

உடனே அக்கடிதத்தில்,

“முஹம்மது அப்துர் றஹ்மான் அல்கம்பமீ” என்று தனது புனித கையெழுத்தை இட்டார்கள் அம்பாநாயகம்.

இதுதான் ஷெய்ஹுனா மிஸ்பாஹி அம்பா நாயகத்தைச்சந்திக்கும் முதல் சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்திலேயெ அம்பா நாயம் ஒரு வலியுள்ளாஹ் என்பதை அறிகிறார்கள். எப்படி!

பத்வாவில் கையெழுத்துவிட்டு விட்டு அம்பா நாயகம் பேசிக்கொண்டிருக்கையில் ஷெய்ஹுனா மிஸ்பாஹியைப்பார்த்து,

“உங்களுடைய தகப்பானுரைடைய ஜனாஸா நல்லடக்கத்துக்கு அப்தால்களில் ஒருவர் கலந்துகொண்டிருக்கிறார்” என்று சொன்னார்கள்.

இலங்கை-காத்தான்குடியில் நிகழ்ந்த ஜனாஸா நல்லடக்கத்திற்கு அப்தால் ஒருவர் கலந்துகொண்ட செய்தியை இந்தியா-கம்பத்திலுள்ள அதற்குமுன்னர் அறிமுகமில்லாத ஒருவர் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்பது பகலில் சூரியன் போன்று தெள்ளத்தெளிவாகின்றதல்லவா!

இதில் ஷெய்ஹுனாவின் தந்தையாரின் அந்தஸ்த்தும் விளங்குகிறதல்லவா….!

(அப்தால் என்பது ஒரே நேரத்தில் பல இடங்களில் சமூகமளிக்கும் ஆற்றலுடைய அவ்லியாக்களில் ஒரு பிரிவினர் ஆவர்)

மேலும் ஷெய்ஹுனா மிஸ்பாஹியைப்பார்த்து அம்பா நாயகம், “ம்ம்ம்….நீங்கள் கலியாணம் முடித்திருக்கும் இடம் கொஞ்சம் பணவசதியுள்ள இடமல்லவா” என்று கேட்டார்கள்.

ஆம் நாயகமே! ஓரளவுக்கு.

இல்லாவிட்டால் நீங்கதானே பிள்ளைகளுக்கு வீடுகட்டுவது, திருமணம் முடித்துக்கொடுப்பது போன்ற சகல வேலைகளிலும் ஈடுபடவேண்டிவரும். இல்லாவிட்டால் இந்த தீனுடைய வெசயத்தில் இவ்வாறு இறங்கமுடியாது போயிடுமே! அது உங்களுக்கு பாக்கியமா போச்சு என்றார்கள்.

முன்பின் சந்தித்து விபரம் அறியாவிட்டாலும் தமது ஆத்மீகக்கண்கொண்டு இவற்றையெல்லாம் அம்பா நாயகம் பார்த்தறிகிறார்கள் என்பது தெளிவானது அவர்களின் இப்பேச்சினூடாக.

நாயகமே! எனக்கு சரியான வயிற்றுவலி! குணமாக தண்ணீர் ஓதித்தாருங்கள் என்று ஷெய்ஹுனா கேட்க தண்ணீரும் ஓதிக்கொடுத்தார்கள்.

நாயகமே எனது ஆயுள் கூட துவா செய்யணும் என்றார்கள் மிஸ்பாஹி.

நீங்கள் இன்னும் 25 வருடங்கள் இருப்பீர்கள் என்றார்கள் அம்பா நாயகம்.

சரி! எப்ப போர!

இனி போவதுதான் நாயகமே!

கையில் செலவுக்கு காசு இருக்கா!

ஓரளவுக்கு இருக்கிறது நாயகமே!

இவ்வாறு அம்பா நாயகம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அம்பா நாயகம் தவிர வேறு யாரும் பாவிக்காத கழிப்பறை ஒன்று அந்தப்பள்ளிவாயலில் இருந்தது. அதனைப்பாவிக்கும்படி ஷெய்ஹுனா மிஸ்பாஹிக்கு பணித்தார்கள் அம்பா நாயகம்.

இந்த கழிப்பறை அம்பா நாயகம் மட்டுமே பாவிப்பது, அன்னாரைச் சந்திக்க வந்த ஸூபி ஹஸ்ரத்து தவிர வேறு எந்த உலாமாக்களும்கூட பாவிக்க வழங்கப்படவில்லை என்றும் சொன்னார்கள். அந்தளவு நம் ஷெய்ஹுனா மிஸ்பாஹிக்கு கண்ணியம் கொடுத்து நேசித்தார்கள் அம்பா நாயகம்.

ஷெய்ஹுனா மிஸ்பாஹி அவர்கள், தான் கொஞ்சம் வெளியே சென்றுவருகிறேன் என்று சொல்ல,
அதன் காரணம் அறிந்த அம்பா நாயகம் தன் மகனாரை அழைத்து பணம் கொடுத்து,

“இவர்….. சிகரட் புகைப்பவர்போல் தெரிகிறது……அவருக்கு சிகரட் வாங்கிக்கொடுங்கள்” என்றும் பணித்தார்கள். இக்கட்டளையைக்கேள்வியுற்ற மகனாருக்கு ஆச்சரியம் மேலிட்டது. ஏனெனில் அம்பா நாயகத்துக்கு புகைத்தல் பிடிப்பதில்லை ஆனால் அவர்களே வாங்கிக்கொடுக்கும்படி சொல்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டார்.

இவ்வாறு அவர்களுடன் இருந்து உரையாடிவிட்டு பொக்கிஷான கையெழுத்தைப்பெற்ற மட்டற்ற மகிழ்ச்சியில் சென்னை திரும்பினார்கள் ஷெய்ஹுனாவும் சின்ன சமத் மவ்லவியும்.

இணையும்…

You may also like

Leave a Comment