ஸூபிய்யாக்களுக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்து

January 2, 2018

ஆக்கம் – மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ அவர்கள்

قال الشّيخ الأكبر محي الدّين ابن عربي قدّس سرّه ‘ أقلُّ درجات أهل الأدب مع القوم التّسليمُ لهم فيما يقولون، وأعلاها القَطْعُ بِصِدْقِهم، وما عَدَا هَذَيْنِ المَقَامَيْنِ فَحِرْمانٌ

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “அதப்” ஒழுக்கம் – மரியாதை – உள்ளவர்களின் “தறஜஹ்” பதவிகளில் மிகவும் குறைந்த பதவி “அல் கவ்ம்” ஞான மகான்கள் எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதேயாகும். அவர்களில் மிகவும் உயர்ந்த பதவி ஞான மகான்கள் சொன்ன விடயத்தை திட்டமாக நம்புவதாகும். இவ்விரு வழிகள் தவிரவுள்ளது நற்பாக்கியமற்ற மோஷமான வழியாகும்.

விபரம்: ஆரிபீன்களும், ஸூபிஸ ஞான மகான்களும் கூறுகின்ற ஆழமான ஆன்மீக கருத்துக்கள் விளங்காதவர்களும், “வஹ்ததுல் வுஜூத்” உள்ளமை ஒன்றே என்ற உயர் ஞானம் தெரியாதவர்களும் சற்றுப் பொறுமையுடன் அவை பற்றி ஆராய முற்பட வேண்டுமேயன்றி முன்பின் தெரியாமல் அவற்றை மறுப்பதற்கு முன்வருதல் அறிவீனம் என்று சொல்வதைவிட வடிகட்டிய முட்டாள் தனம் என்று சொல்வதே பொருத்தமானதாகும்.

இதனால்தான் மேற்கண்டவாறு இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். அவர்கள் மட்டும் அவ்வாறு கூறியுள்ளார்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். இறைஞானிகளிற் பலர் அவ்வாறு கூறியுள்ளார்கள்.

இறை ஞானிகள் என்று நாம் குறிப்பிடுவது “ஷரீஅஹ்”வுக்கு மாற்றமின்றிப் பேசிய மகான்களையே தவிர அதற்கு மாற்றமாகப் பேசியவர்களையல்ல. “ஷரீஅஹ்”வுக்கு மாறாகப் பேசுவோர் ஞானிகள் என்று அறிவில்லாத சிலரால் அல்லது பலரால் அழைக்கப்பட்டாலும் கூட “ஷரீஅஹ்”வையும் பேணி ஞானம் பேசுவோர் அவர்களை கணக்கெடுப்பதே இல்லை.

தொழுகை என்றால் ஒருவன் தன்னையும், அல்லாஹ் அல்லாதவற்றையும் மறந்திருப்பதேயாகும் என்று கூறிக் கொண்டு “ஷரீஅஹ்”வில் கூறப்பட்ட தொழுகையை விட்டவர் ஒரு சக்கரத்தில் துவிச்சக்கரவண்டியை செலுத்த நினைப்பவர்களும், முச்சக்கர வண்டியை இரு சக்கரத்திலும், நாற் சக்கர வண்டியை முச்சக்கரத்திலும் செலுத்த நினைப்பவர்களுமாவர். வண்டி நகருமா?

இவ்வாறுதான் ஷரீஅஹ், தரீகஹ், ஹகீகஹ், மஃரிபஹ் என்ற நான்கு சக்கரங்களைக் கொண்ட “தீன்” மார்க்கம் என்ற வண்டியுமாகும். குறித்த இந் நான்கு சக்கரங்களும் சரியாக சுழன்றாலேயே “இன்ஸான்” மனிதன் அல்லாஹ்வை சென்றடைவான்..

من رمى ميزان الشريعة من يده ساعة هلك

ஒருவன் ஷரீஅஹ் என்ற தராசை ஒரு நொடி நேரமாவது தன்கையை விட்டும் எறிந்தானாயின் அவன் அழிந்தான் என்பதே சரியான ஞானிகளின் தத்துவமாகும்.

“மஜ்தூப்” என்று சிலர் இருப்பார்கள். அவர்களை நாம் குறை கூறமாட்டோம். ஆயினுமவர்களை நாம் பின்பற்றிச் செயல்பட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இன்னோர் தொழும் விடயத்தில் மட்டுமன்றி அனைத்து விடயங்களிலும் தன்னையும், அல்லாஹ் அல்லாத அனைத்தையும் மறந்த நிலையிலேயே செயல்படுவார்கள். உண்ணுதல், உறங்குதல், மற்றுமுள்ள உலக நடவடிக்கைகளிலும் அவர்கள் நிதானமாகச் செயல்பட மாட்டார்கள்.

உண்மையான ஒரு மஜ்தூபுக்கு நெருப்பும், அழகிய பெண்ணும் ஒன்றுதான். அழகிய பெண்ணை அணைப்பது போல் நெருப்பையும் அவர் அணைப்பார். அவளைக் கட்டியணைத்து முத்தமிடுவதுபோல் அதையும் கட்டியணைத்து முத்தமிடுவார். இவரே உண்மையான “மஜ்தூப்” ஆவார்.

எனவே, இறைஞானிகளினதும், ஸூபீ மகான்களினதும் தத்துவம் விளங்காதவர்கள் அதை உண்மைக்கு மாறாக விமர்சிக்காமல் “அது பற்றி எமக்குத் தெரியாது” என்று அதைச் சொன்னவர்களிடம் ஒப்புவித்து விடுதலே மிகவும் குறைந்த அந்தஸ்த்தாகும். இவ்வாறு செய்தலே இறை ஞானிகளுக்கும், ஸூபீ மகான்களுக்கும் மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையாகும்.

ஆயினும் அவர்கள் கூறிய, கூறுகின்ற தத்துவத்தை விளங்கிக் கொள்வதுடன் அதுவே சரியானதென்று ஐயமறச் சொல்வதும், நம்புவதும் அவர்களுக்கு மற்றவர்கள் கொடுக்கும் உயர்வான அந்தஸ்த்து ஆகும்.

இறைஞானிகள், ஸூபீ மகான்களின் தத்துவம் விளங்காதவர்கள் அவர்களிடமே தத்துவத்திற்கான விளக்கத்தை ஒப்படைத்துவிடுதல் ஒரு வழி. அல்லது அதைச் சந்தேகமற விளங்கி அதை திட்டமாக நம்புதல் மற்ற வழி. இவ்விரு வழிகளில் ஒன்றையே மற்றவர்கள் பின்பற்ற வேண்டும். இதுவே நல்ல மனிதனின் பண்பு. இவ்விரு வழிகளுக்கும் மாறாக அவர்களின் கருத்தை எதிர்ப்பது பெருங்குற்றமாகும். அதோடு இவ்வாறு எதிர்ப்பவர்களுக்கு அந்த ஞானம் ஒரு போதும் வந்து சேராது. இதுவே “ஹிர்மான்” நற்பேறு அற்ற நிலை எனப்படும்.

இக்கால உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தத்துவத்தை மறுப்பதற்கு பிரதான காரணம் அவர்கள் இது தொடர்பான அறபு மொழியிலான நூல்களையோ, தமிழ் மொழியிலான நூல்களையோ தொட்டும் பார்ப்பதில்லை. அதோடு இறையியலை அறியும் விருப்பமும் அவர்களுக்கு இல்லை

You may also like

Leave a Comment