Friday, March 29, 2024

அத்துவைதம்

தொகுப்பு : மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons).

(தொடர்-01)

என்னுரை

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

எல்லாப்புகழும் எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலாவுக்கே. புகழ்பவனும்  புகழப்பட்டவனும் புகழும் அவனே. எதார்த்தமான உள்ளமை அவனே. “ஹக்” என்றும் “கல்க்” என்றும் பெயர் சொல்லப்படுபவன் அவனே. சகல சிருஷ்டிகளாகவும் தனது பரிபூரணத்தை கொண்டிருப்பவன் அவனே.

ஸலவாத்தும் ஸலாமும் அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் குடும்பத்தவர்கள் மீதும் தென்றலாய் வீசட்டும்.

இன்று உலகில் வாழும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் அத்துவைதம் என்ற சொல்லை இந்து மதத்தோடு மட்டும் தொடர்புபடுத்தி புரிந்து வைத்துள்ளனர். இதனால் இஸ்லாத்திற்கும் அத்துவைதம் என்ற சொல்லிற்கும் எந்த தொடர்புமில்லை என்று நம்பியுள்ளனர். 

அத்துவைதம் என்ற வட மொழிச் சொல் தமிழ்பேசும் இந்துக்களாலும் முஸ்லிம்களாலும் பல கருத்துகளை மையப்படுத்தி பாவிக்கப்படுவதையும் இஸ்லாமிய அடிப்படையில் அத்துவைதம் என்ற சொல் புரிந்து கொள்ளப்படவேண்டிய விதம் பற்றியும் இச்சிறு நூலில் விளக்க முயற்சிக்கிறேன்.

சொற்பயன்பாடு பற்றிய தெளிவின்மையால் அத்துவைதம் என்ற சொல் யாரால் பாவிக்கப்பட்டாலும் அது இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கையை குறிக்கும் சொல்தான் என படித்தவர்களும் பாமரர்களும் உலமாக்களும் நம்பியிருப்பதையும் பிரச்சாரம் செய்வதையும் காணமுடிகின்றது. இதன் விளைவாக இஸ்லாமிய அடிப்படையில் அல்லாஹ்வையும் றஸூலையும் ஈமான் கொண்ட உண்மை விசுவாசிகளைக்கூட முர்தத்துகள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று சித்தரிப்பதற்காக ‘அத்துவைதிகள்’ என்ற சொல் சிலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு உண்மை முஃமினை இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன் என பிழையாக தீர்ப்புச்செய்வதும் அதை நடை முறைப்படுத்துவதும் தீர்ப்புச் செய்தவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் செயலும் அநீதியான செயலுமாகும்.

இந்த இழிநிலை மாறி உயர் நிலை ஓங்க இந்நூல் உதவும் என எதிர்பார்கின்றேன். நடு நிலையான சிந்தனையுடன் நூலை வாசித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்
– நூலாசிரியர் –

அத்துவைதம் – சொல் விளக்கம்

அத்துவைதம் என்பது வட மொழிச்சொல் இதனை ‘அ’ + ‘துவைதம்’ எனப்பிரிக்கலாம் ‘அ’ என்றால் அல்ல என்பது பொருள் ‘துவைதம்’ என்றால் இரண்டு அல்லது இருமை என்பது பொருள். எனவே அத்துவைதம் என்ற சொல்லுக்கு இரண்டல்ல என்பது பெருளாகும். இது ஒன்று அல்லது ஒருமையை குறிக்கின்றது. இச்சொல் ‘அத்துவிதம்’ என்றும் பாவிக்கப்படுகின்றது.

இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் துவைதம், அத்துவைதம் என்ற சொற்களின் பயன்பாடு அத்துவைதம் என்ற சொல்லை இந்துமத வேதாந்திகளும் சைவ சித்தாந்திகளும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை தெளிவாக அறிந்திருந்தால்தான் இஸ்லாமிய அத்துவைதத்தை இந்துக்களின் அத்துவைதத்திலிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்ளமுடியும்.

ஆதிசங்கரரின் அத்துவைதம் அல்லது கேவலாத்துவைதம்

கி.பி 8ம் நூற்றாண்டில் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் காலடி என்ற இடத்தில் தோன்றிய ஆதிசங்கரர் அத்துவைதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஒரு கோட்பாட்டை நிறுவினார். இது கேவலாத்துவைதம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இவரது கொள்கைகள்

01. ஒரு பிரமப்பொருள் மட்டுமே உள்ளது அது குணம் அல்லது பண்புகளற்றது. அது “நிர்குணப்பிரமம்” எனப்படுகின்றது. (நிர்க்குணம் என்பது குணங்கள் அற்றது என்பதைக்குறிக்கின்றது)

02. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான் அதுதான் ‘ஸத்’ என்றும் “பரப்பிரமம்” அல்லது “பரமாத்மா” என்றும் அழைக்கப்படுகின்றது. அதைத்தவிர எதுவும் மெய்ப்பொருள் அல்ல.

03. பரப்பிரமம் தனக்கு வெறாக ஒரு பொருளும் இன்றித் தானும் தனக்கு ஒரு குணமும் இன்றி நிர்விசேடமாய் இருக்கிறது. ( நிர்விசேடம் என்பது விசேட இயல்புகள் எதுவும் இல்லை என்பதைக்குறிக்கின்றது)

04. நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம் பொருளை ‘ஸகுணப்பிரமம்’ என வேறாக நோக்கவேண்டும்.

05. அனைத்து உயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மாவும் வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப் பொருளான பரமாத்மாவும் இரண்டும் இரண்டல்ல ஒன்றே. ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா உள்ளது. பரமாத்மாவிற்குள் ஜீவாத்மா உள்ளது.

06. பிரம்மத்தின் கனவாக நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது ஆன்மா என்பது பிரமத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கின்றது.

என்பவை இவரது கொள்கைகளாகும். மாயாவாதம், ஏகான்மவாதம்,விவர்த்தவாதம் போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இவரது கொள்கைகள் காணப்பட்டன. இவரது கொள்கையை வேதாந்திரி மகரிஷி ‘உணவு நம் உடலில் சத்தாக மாறிய நிலை’ என உதாரணம் மூலம் விபரித்துள்ளார்.

இராமனுஜரின் விசிட்டாத்துவைதம்

இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் கி.பி. 1017 ல் தோன்றிய வைணவ மகாச்சாரியாராகிய இராமனுஜர் அத்துவைதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஒரு கோட்பாட்டை நிறுவினார். இது விசிட்டாத்துவைதம் அல்லது விசிஷ்டாத்துவைதம் என்றும் அழைக்கப்படுகின்றது. “விசிஷ்டம்” என்றால் சிறப்பு என்பது பொருள் விசிஷ்டாத்துவைதம் என்றால் சிறப்பு நிலையான அத்துவைதம் என்பது பொருள்.

இவரது கொள்கைகள்

01. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை. ஆனால் ஜீவாத்மா பரமாத்மாவிவிலிருந்து வெளிப்பட்டது. ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு சிறிய பகுதி.

02. பிரமம் எனும் சத்து, சித்து எனும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார்.

03. நாமும் பரமாத்மாவும் ஒன்றாகவும் வேறாகவும் இருக்கிறோம்.

என்பவை இவரது கொள்கைகளாகும். துவைதம், அத்துவைதம் என்ற இரண்டு கோட்பாடுகளையும் இணைத்தது விசிட்டாத்துவைதம் ஆகும். இவரது கொள்கையை வேதாந்திரி மகரிஷி ‘வயிற்றுக்குள் உணவு’ என உதாரணம் மூலம் விபரித்துள்ளார்.

மத்துவரின் துவைதம்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி பகுதியில் உள்ள பாஜக சேந்திரம் என்ற சிற்றூரில் கி.பி. 1238ம் ஆண்டு தோன்றிய மத்வர் என்ற மத்வாச்சாரியார் என்பவர் துவைதம் என்ற கோட்பாட்டை முன்வைத்தார். “துவைதம்” என்பதன் பொருள் ‘இரண்டு’ அல்லது ‘இருமை’ என்பதாகும்.

இவரது கொள்கைகள்

01. ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பகுதியாகும். இது ‘ஸ்வகத பேதம்’ என்று வடமொழியில் சொல்லப்படும். இது தன்னுள் இருக்கும் வேற்றுமையை குறிக்கின்றது.

உதாரணம் :- மரத்திற்கும் மரத்திலுள்ள இலைக்கும் இடையிலான வேற்றுமை

02. கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள வேற்றுமையானது இரு பகுப்புகளுக்குள் இருக்கும் வேற்றுமையாகும். இது ‘விஜாதீய பேதம்’ எனப்படும்.

உதாரணம் :- மரத்திற்கும் மலைக்கும் இடையிலான வேற்றுமை.
03. இறைவன் வேறு படைப்புகள் வேறு

என்பவை இவரது கொள்கைகளாகும் இவரது கொள்கையை வேதாந்திரி மகரிஷி ‘நமக்கு முன் உணவு’ என உதாரணம் மூலம் விபரித்துள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்ட கொள்கைகளைத் தவிர இந்துக்களில் இன்னும் பலர் அத்துவைதத்திற்கு பல விளக்கங்களை கூறியுள்ளனர். அவற்றில் சிலதை தருகின்றேன்

“உப்பும் நீரும் கலந்த கலவையில் பாத்திரத்திலுள்ள ஒவ்வொரு சொட்டு நீரிலும் உப்பு எப்படி கலந்துள்ளதோ அதுபோல் பரமாத்மா இருக்கிறார்.”
– சாந்தேக்கிய உபநிஷத் –

“ஒரு சூரியன் பல குட நீர்களில் தோன்றுவது போலவும் ஓர் உருவம் பல கண்ணாடிகளில் தோன்றுவது போலவும் ஒரு பிரம்மமமே யாவற்றிலும் விளங்கி நிற்கின்றது.”
– ஆறுமுக நாவலர் –

“பிரம்மம்தான உலகாக மாற்றமடைந்துள்ளது.”
– பாதராஜனர் –

இங்கு நாம் கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில் பொதுவாக இந்துக்கள் பேசும் அத்துவைதம் சேர்தல்,பிரிதல், இறங்குதல், கலத்தல், மாற்றமடைதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஹுலூல், இத்திஹாத் எனப்படும் இரண்டு உள்ளமைகள் இருப்பதாகக்கூறும் ஷிர்க்கானதும் இறை பண்புகள் தொடர்பில் இஸ்லாமிய கருத்துக்களுக்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்ட குப்ரான கொள்கையாகும்.

இதை இந்துக்கள் அத்துவைதம் என்று சொன்னாலும் இது உண்மையில் அத்துவைதம் அல்ல. துவைதம் தான்.

இந்துக்கள் தமது அத்துவைதக்கருத்துக்களை பரிணாம வாதம், சூனிய வாதம், பிரதி விம்பவாதம், அவச்சேதவாதம்,அறிவகவாதம், விவர்த்தவாதம், உருமயக்கவாதம் போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் முன்வைக்கின்றனர். இந்தக்கோட்பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. முஸ்லிம்கள் அல்குர்ஆன் அல்ஹதீதின் கருத்துக்களினூடாக “தௌஹீத்” – “ஏகத்துவம்”, “வஹ்ததுல் வுஜூத்” – “மெய்ப்பொருள் ஒன்று” எனும் அடிப்படையில் அத்தஜல்லியாத் எனும் இறை வெளிப்பாடுகள் பற்றி விபரிக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் இந்துக்களின் அத்துவைதக்கருத்துக்களும் இஸ்லாமிய அத்துவைதக்கருத்துக்களும் ஒரே கருத்தை மையப்படுத்துவது போன்ற தோற்றப்பாடுகளும் இருக்கின்றன. இது பற்றிய தெளிவான அறிவற்றவர்கள் இந்துக்களின் அத்துவைதத்தையே முஸ்லிம்களும் பேசுவதாகவும், நம்பியிருப்பதாகவும் தவறாக கருதுவதுடன் இஸ்லாமிய அத்துவைதத்தை இந்து மத ஞானம் என்று கூறி மறுக்கின்றனர். ஒரு இஸ்லாமிய தத்துவம் அல்லது கருத்து அல்லது நம்பிக்கை இன்னொரு மதத்தில் கூறப்படுகின்றது என்பதற்காக அந்த தத்துவம் மாற்றுமத தத்துவம், வேற்றுமத ஞானம் எனக்கூறி அதை மறுப்பது அறியாமை.

ரிக்,யசூர், சாம, அதர்வனம் போன்ற இந்து மத வேதங்களிலும் உப நிஷத்துகளிலும் இறைவன் ஒருவனே என்றும் அவனுக்கு நிகர் இல்லை என்றும் அவனையே வணங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சிலதை இங்கு தருகின்றேன்.

01. ஏகம் ஏவம் அத்விதயம்
அவன் ஒருவனே வேறு எவரும் இல்லை
(சந்தேக்யோ உப நிஷத் – 6 : 2)

02. நா கஸ்ய கஸ்சிச் ஜனித நா கதிபத்
அவனுக்கு பெற்றோர்களும் இல்லை, பாதுகாவலரும் இல்லை
(ஸ்வதேஸ்வரா உபநிஷத் 6 : 9)
03. நா தஸ்தி பிரதிம அஸ்தி
அவனுக்கு நிகராக எதுவுமில்லை
(ஸ்வதேஸ்வரா உபநிஷத் 4 : 19)

04. அன்தாதம ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே
எவர்கள் இயற்கை வஸ்துக்களை வணங்குகின்றார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கிறார்கள். இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகிறார்கள்.
(யசூர் வேதம் 40 : 09)
05. தேவ் மஹா ஓசி
நிச்சயமாக கடவுள் மிகப்பெரியவன் ஆவான்
(அதர்வண வேதம் 20:58:3)

06. மா சிதன்யதிவி கன்சதா
நண்பர்களே! தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள் அவனை மட்டும் வணங்குங்கள் –
(ரிக்வேதம் 8:1:1)

07. ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே கின்ஜன்
இறைவன் ஒருவனே வேறு இறைவன் இல்லை. இல்லவே இல்லை.
(இந்து மத பிரம்ம சூத்திரம்)

மேலே குறிப்பிடப்பட்டுள்ளதன்படி இறைவன் ஒருவனே, அவனே மிகப்பெரியவன், அவனுக்கு நிகராக எதுவுமில்லை, அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள் போன்ற தத்துவங்கள் இந்து மத நூல்களில் கூறப்பட்டுள்ளன. இதே தத்துவங்கள் இஸ்லாமிய புனித வேதமான அல்குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளன.
இவ்விரண்டு மதங்களிலும் மேற்கூறப்பட்ட ஒரே தத்துவங்கள் கூறப்பட்டதற்காக இஸ்லாமிய தத்துவங்களை இந்து மத ஞானம் என வாதிடுவதும் வேற்று மதங்களின் தாக்கம் என கூறுவதும் பொருத்தமானதல்ல. அவ்வாறுதான் அத்துவைதம் என்றாலே அது இந்து மத ஞானம் தான் என்ற பிடிவாதமுமாகும்.
இஸ்லாம் கூறும் அத்துவைதம் வேறு இந்து மதத்தில் பேசப்படும் அத்துவைதம் வேறு. இரண்டுக்குமிடையிலான வேறுபாடுகளை அறியாதவர்கள் இஸ்லாமிய அத்துவைதம் பேசப்படும் போது அது இந்து மத அத்துவைதம் என்று நினைத்து அதை மறுக்கின்றனர். பொதுவாக இந்துக்களின் அத்துவைதம் பிரிதல், சேர்தல், இறங்குதல், இரண்டறக்கலத்தல், மாற்றமடைதல், அவதாரம் எடுத்தல் ஆகிய அம்சங்களைக்கொண்ட ஹுலூல், இத்திஹாத் எனப்படும் இரண்டு உள்ளமைகள் இருப்பதாகக் கூறும் ஷிர்க்கான கொள்கையாகும். சில சந்தர்ப்பங்களில் இந்துக்களின் அத்துவைதம் ஒரு உள்ளமை மட்டும் இருப்பதாக கூறினாலும் இறை தன்மைகள் தொடர்பில் பல ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்டுள்ளன. இஸ்லாமிய அத்துவைதம் ஒரு உள்ளமை மாத்திரமே இருப்பதாகவும் அந்த உள்ளமைக்கே சகல செயல்களும் சகல பண்புகளும் இருப்பதாகவும் வலியுறுத்தி அல்குர்ஆன், அல்ஹதீதின் அடிப்படையில் ஷிர்க்கை முற்றாக மறுக்கும் தூய ஈமானாகும்.

இஸ்லாமிய அத்துவைதம் பேசுவோரை இந்து மத ஞானம் பேசுகின்றனர் என்று குற்றம் சாட்டி இஸ்லாமிய அத்துவைதத்தை மறுப்போர், இறைவன் வேறு படைப்பு வேறு என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். இவர்கள் இரண்டு சுயமான உள்ளமைகள் இருப்பதாக வலியுறுத்தும் இந்து ஞானியான மத்வாச்சரியாரின் துவைத சித்தாந்தத்தையே தமது நம்பிக்கையாகக்கொண்டுள்ளனர் என்பதையும் இவர்களின் நம்பிக்கையும் இந்துமத ஞானத்தின் தாக்கம் தான் என்று எம்மால் குற்றம் சுமத்த முடியும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு இஸ்லாமிய தத்துவம் அல்லது நம்பிக்கை இன்னொரு மதத்தில் பேசப்படுகின்றதா என்பதையும் அந்த நம்பிக்கை போன்ற நம்பிக்கையை நாமும் நம்பியிருக்கின்றோமா என்பதையும் இஸ்லாமியர்களாகிய நாம் ஆராயவேண்டிய அவசியமில்லை. நமது நம்பிக்கை அல்குர்ஆன் அல்ஹதீதின் அடிப்படையில் அமைந்துள்ளதா? ஸஹாபாக்களும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய நேர்வழி பெற்ற இமாம்களும் ஸூபியாக்கள் எனப்படும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளும் அல்குர்ஆன் அல்ஹதீதுக்கு அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் நமது ஈமான் அமைந்துள்ளதா என்பதையே நாம் ஆராய்ந்து அதன்படி நம்பிக்கை கொள்ளவேண்டும்.

நாம் கொண்டுள்ள ஒரு நம்பிக்கையை இந்துக்களும் கொண்டிருக்கலாம் ஏனைய மதத்தவர்களும் கொண்டிருக்கலாம் அதற்காக அந்த நம்பிக்கை அவர்களுக்கு சொந்தமானது என நாம் முடிவு செய்யமுடியாது. எமது ஈமான் இஸ்லாமிய மூலாதாரங்களை மையப்படுத்தி அமைந்துள்ளதா என்பதையே நாம் கவனிக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments