Wednesday, April 24, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அவனின்றி அணுவும் அசையாது. அணுவின் அசைவும் அவன் அசைவே.

அவனின்றி அணுவும் அசையாது. அணுவின் அசைவும் அவன் அசைவே.

(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)

அவனின்றி அணுவும் அசையாது என்ற தத்துவமும், “அவனன்றி எதுவுமில்லை” என்ற தத்துவமும் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகின்றன.

இதற்கு எவராலும் மறுக்க, மறைக்க முடியாத ஆதாரம் முதல் மனிதன் – ஆதிபிதா நபீ ஆதம் “அலா நபிய்யினா வஅலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்” அவர்கள் படைக்கப்பட்டவுடன் முதலில் மொழிந்த “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனமேயாகும்.

இத் திரு வசனத்தின் ஆழ, நீளத்தையும், அது உள்வாங்கியுள்ள அகமியத்தையும் அல்லாஹ்வின் அருள் பெற்ற ஓர் இறையியல் மேதை விளக்கி வைத்தால் மட்டுமே அது சரியான விளக்கமாயிருக்கும்.

இது தவிர வேறெவர் விளக்கி வைத்தாலும் அது சரியான விளக்கமாயிருக்காது. அவர் பல பல்கலைக் கழகங்களில் படித்து பட்டங்கள் பெற்றவராயிருந்தாலும் சரியே! அவர் ஆகாயத்தில் சப்பணம் போட்டு இருந்தாலும் சரியே! இதுவே எனது 77வருட வாழ்க்கையில் நான் கண்ட அனுபவ அறிவாகும். இவ்வாறு நான் சொல்வதால் நான் கர்வத்திலும், மமதையிலும், “அன்னிய்யத் – அனானிய்யத்” என்ற அகங்காரத்திலும் சொல்வதாக எவரும் எண்ணிக்கொள்ள வேண்டாமென்று அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ

“அவனின்றி எதுவும் அசையாது” என்றால் அவனின் “தாத்” இன்றியும், அவனின் “இறாதத்” நாட்டமின்றியும் எதுவும் அசையாதென்பதே அர்த்தமாகும்.

இறைவனின் நாட்டமின்றி எதுவும் அசையாதென்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவனின் “தாத்” அசையாமல் எதுவும் அசையாதென்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வதென்று ஒருவர் கேட்பாராயின் அவருக்கு பின்வருமாறு விளக்கம் சொல்லலாம்.

அதாவது “இறாதத்” என்ற நாட்டம் “ஸிபத்” என்ற தன்மையாகும். அறிவு, சக்தி என்பன போன்று. “ஸிபத்” என்ற தன்மை ஆதேயமானதேயன்றி ஆதாரமானதல்ல. ஆதேயமென்பது தனியே நிற்காமல் ஏதோனுமோர் ஆதாரத்திலேதான் நிற்கும். இது “ஸிபத்” என்பதற்கான வரை விலக்கணமாகும். இதை அறபு மொழியில் சொல்வதாயின் وَهِيَ مَا لَا يَقُوْمُ بِنَفْسِهَا என்று செல்லவேண்டும்.

உதாரணமாக அப்துல்லாஹ்வின் நாட்டம், அறிவு, சக்தி என்பன போன்று. இவையாவும் அப்துல்லாஹ்வின் “ஸிபத்” தன்மைகள் எனப்படும். தன்மை என்பதற்கு மேலே சொன்ன வரைவிலக்கணத்தின் படி அவை தனியே நிற்கமாட்டா. அப்துல்லாஹ்வில்தான் அவை நிற்க வேண்டும். தன்மை என்பது எதில் நிற்கிறதோ அதை விட்டும் அத்தன்மையைப் பிரித்தெடுக்க முடியாது. இதுவே தத்துவம்.

اَلصِّفَةُ لَا تُفَارِقُ الْمَوْصُوْفَ தன்மை என்பது எதில் நிற்கிறதோ அதை விட்டும் அது ஒரு கணமும் பிரியாதென்பதே சரியான முடிவாகும். இவ்விடயத்தில் ஸூபீ மகான்களுக் கிடையில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது. குறை குடங்கள் தளம்பலாம். அதற்காக உண்மையை மறைக்கவும் முடியாது. மாற்றவும் முடியாது.
நான் கூறிய மிகவும் சுருக்கமான விளக்கத்தின் படி அவனின்றியும், அவன் நாட்டமின்றியும் அனுவும் அசையாதென்றால் அவனின்றி எதுவும் நடக்காதென்பதும், அவனன்றி எதுவுமில்லை என்பதும் திரையறுந்த சிந்தனையாளர்களுக்கு மறைவானதல்ல.
மேற்கண்ட இவ்விளக்கத்தின் படி “கொரோனா வைரஸ்” என்பது அவன் நாடாமல் வந்ததுமல்ல, அவன் படைக்காமல் வேறுயாரும் படைத்ததுமல்ல.
உலகிலுள்ள மனிதர்களின் தொகையை குறைப்பதற்காகச் சில நாடுகள் செய்த சதிதான் “கொரோனா வைரஸ்” என்று சொல்லப்படுவது உண்மையென்று வைத்துக் கொண்டாலும் கூட இச்செயல் இறைவன் நாடாமல் நடக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காலத்தை ஏச வேண்டாம் ஏனெனில் காலமும் அவனே – இறைவனே! என்று நபீ பெருமான் கூறியிருப்பதாலும், காய்ச்சலை ஏசாதீர்கள் என்றும் அவர்களே கூறியிருப்பதாலும் கொரோனாவை ஏச வேண்டாம். என்றும் கொரோனா என்ற வெளிப்பாடும் இறைவனின் வெளிப்பாடுதான் என்றும் நான் சொல்வதில் தவறுமில்லை. தப்புமில்லை. அறியாமைத் திரை நீங்கின் அனைத்தும் அவன் என்ற எதார்த்தம் புரியும்.
எனவே, கொரோனா வைரஸால் அல்லல் படுவோரும், அது வந்துவிடுமோ என்று அஞ்சுவோரும் எல்லாம் இறைவன் செயலும், இறைவனின் நாட்டமுமாகும் என்பதைப் புரிந்து நிம்மதியடைய வேண்டுமென்றும், கொரோனா வைரஸ் ஏற்படாமலிருக்க அரசாங்கமும், வைத்தியர்களும், சுகாதாரத் துரை சார்ந்தவர்களும் கூறுகின்ற அறிவுரையின் படி தமது வாழ்வையும், நடைமுறைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
فِرَّ مِنَ الْمَجْذُوْمِ فِرَارَكَ مِنَ الْاَسَدِ குஷ்டரோகியை கண்டால் சிங்கத்தை கண்டு ஓடுவது போல் நீ விரைந்தோடு என்று சொன்னவர்களும், لَا عَدْوَى தொற்று நோய் இல்லையென்று சொன்னவர்களும், குஷ்டரோகியின் கரம் பற்றி அவனோடு ஒரே பீங்கானில் சாப்பிட்டவர்களும் நபீ பெருமான்தான் என்பதையும் புரிந்து வாழ்வதே சரியான வாழ்க்கையாகும். இதற்கான பூரண விளக்கம் சில நாட்களில் பதிவாகும்.

اِنْتِشَارُ الْمَوْتِ وَالْأَمْرَاضِ مِنْ عَلَامَاتِ السَّاعَةِ ، اَلْفَوَاحِشُ وَالْبَغْيُ سَبَبَانِ لِلْوَبَاءِ وَالْكُرُوْنَا
மரணம் பரவலாவதும், நோய்கள் பரவலாவதும் உலக முடிவிற்கான அடையாளமாகும். அநீதி, அட்டூழியம், பாவம் என்பன பயங்கர நோய்களுக்கும், கொரோனாவுக்கும் பிரதான காரணங்களாகும்.

وَاَمَّا إِبْتِلَاءُ اللهِ تَعَالَى لِعِبَادِهِ فَنِعْمَةٌ، وَدُعَائُهُمْ إِيَّاهُ نِعْمَةٌ، وَكَشْفُهُ ضُرَّهُمْ نِعْمَةٌ، وَمُجَازَاتُهُمْ عَلَى مَا اَصَابَهُمْ نِعْمَةٌ،
இறைவன் அடியார்களைச் சோதிப்பதும் அருள்தான்: அடியார்கள் மனமுருகி அவனை அழைப்பதும் அருள்தான்: அடியார்களின் நோய் நொடிகளை அவன் சுகப்படுத்துவதும் அருள்தான். அடியார்களின் பொறுமைக்காக அவர்களுக்கு அவன் கூலி வழங்குவதும் அருள்தான்.

சோதனையின் உருவத்தில் வெளியாவதும் அருள்தான், வேதனையின் உருவத்தில் வெளியாவதும் அருள்தான், காலில் ஏறிய ஆணியை டொக்டர் பிடிங்கி எடுப்பது வேதனையின் உருவத்தில் வெளியாகும் அருளே! நோயால் வாடும் குழந்தைக்கு கசப்பான மருந்து கொடுப்பதும் வேதனையின் உருவத்தில் வெளியாகும் அருளே! ஊரடங்குச் சட்டமும் அருள்தான், அதை மீறினோர் தண்டிக் கப்படுவதும் அருள்தான். எல்லாமே அருள்தான், எல்லாமே அருள் மயம்தான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments