Thursday, April 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கடவுள் என்றால் யார் ? Who is the God ?

கடவுள் என்றால் யார் ? Who is the God ?

கடவுட் தன்மை என்றால் என்ன ? What is the Divinity? என்பதை புரிந்து கொள்ள ஆன்மிக வழியில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலோருக்கு தெரிந்த ஒரு குட்டிக் கதை! அதனை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வருவோம் !

கடலில் வாழும் பகுத்தறிவுவாதியான் மீன் (scholar fish ) ஒன்றுக்கு ஒருநாள் திடீரென்று ஒரு சந்தேகம் வந்ததாம் ! நாம் வாழும் இந்த தண்ணீருக்கு மேலேயிருந்து கடல், கடல்…. சமுத்திரம்…….. என்றெல்லாம் சந்தோஷமான கூக்குரல்கள் வருகின்றனவே ! அந்த கடல், சமுத்திரம் என்றால் என்ன ? அது எங்கே இருக்கிறது ?

இதனை தெரிந்துக்கொள்ள விரும்பி, மிக்க ஆர்வத்துடன், தன் எதிரே வந்த மீன்களிடமெல்லாம் கேட்டுக்கொண்டே திரிந்ததாம் !

எந்த அறிவாளி மீன்களிடமிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை ! அப்போது, ஞானமுள்ள ஒரு மீன் (Theosophist fish ) அதன் எதிரே வந்து, அதனைப் பார்த்து கேட்டதாம்….. என்ன ? கடலைத்தேடுகிறாயா ?  அதற்கு, அது ஆம் ! என பதிலளித்தது.

இப்போது, நீ இருக்கும் இந்த இடத்தைவிட்டு என்னுடன் உன்னால் வெளியே வரமுடியுமா ? அது, சரி என்றதும், அந்த ஞானி மீன் அதனை கூட்டிக்கொண்டு வந்து, கடல் மட்டத்துக்கு மேலே ஒரு நொடி தன் தலையைத்தூக்கி அறிவாளி மீனே ! உன் தலையை மேலே மேலே தூக்கிப்பார் ! என்றது.

அந்த மீனும் தன் தலையை சற்றுத் தூக்கிப்பார்த்துவிட்டு, ஐயஹோ ! எனக்கு மூச்சுத்திணறுகிறது ! நான் செத்துவிடுவேன் ! என்று கூறி சட்டென்று தன் தலையை தண்ணீருக்குள் இழுத்துக்கொண்டதாம் ! அது சரி ! கடலைக்காட்டுகிறேன் என்று சொல்லி தண்ணீருக்கு வெளியே என் தலையைத்தூக்கிப் பார்க்கச் சொல்லி என்னை ஒரேயடியாக சாகடிக்கப்பார்த்தாயே !

இது நியாயமா ? என கோபமாக கேட்டதாம் ! அதற்கு அந்த ஞானமுள்ள மீன் சொன்னதாம்…… அட முட்டாளே !
வெளியிலிருக்கும் மனிதர்களுக்கு நாம் வாழும் இந்த தண்ணீரே கடலடா !

நீயும் அதுபோல் வந்தால்தான் உனக்கு கடல் என்றால் என்னவென்று தெரியும் என்பதற்காக உன் தலையை வெளியில் தூக்கிப்பார்க்க சொன்னேன் !

உன்னால் ஒரு நொடி நேரம்கூட வெளியில் இருக்க தாக்குபிடிக்க முடியவில்லை ! மூச்சும் பிடிக்க முடியவில்லை !

எந்த தண்ணீர் இல்லாவிட்டால் உன்னாலும், என்னாலும் உயிர் வாழ முடியாதோ ! எந்த தண்ணீருக்குள் நீயும், நானும், நம் இனம் அனைத்தும் மற்றும் நம்முடன் வாழும் நீர் வாழ்வன எல்லாம் சந்தோசமாக  உல்லாசமாக உலாவி, குலாவி வருகின்றோமா எந்த நீரின் அம்சங்களாக நாமெல்லாம் இருக்கின்றோமோ இந்த தண்ணீர் வேறு நாம் வேறு அல்ல என்று எதை நான் உணர்ந்திருக்கிறேனோ அந்த தண்ணீர்தாண்டா நீ தேடும் அந்த மாபெரும் கடல், சமுத்திரம் என்றதாம் ! இப்போதுதான் அந்த அறிவாளி மீனுக்கு ஞானோதயம் உண்டானதாம்!

இதேப்போன்று தான், மனிதர்களில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது சதம் பேர்கள், கடவுளை வெளியில், வேறு எங்கோ, அர்ஷில், கயிலாயத்தில், வைகுண்டத்தில் கடவுள் இருப்பதாகவும் அங்கிருந்து கொண்டு, பொம்மலாட்டக்காரன், பொம்மைகளை கயிறுகள்கொண்டு ஆட்டுவிப்பதுபோலவே, ஆண்டவன் என்று ஒருவன் பிரமாண்டமான உருவத்தில் ஏழு வானங்களுக்கு மேலே, அர்ஷு என்னும் அரியாசனத்தில் அமர்ந்துக்கொண்டு தன்னுடைய சக்திகளை நம் மீது சினிமாவில் காட்டுவதுபோல், பாய்ச்சி நம்மையெல்லாம்
இயக்கி வருகின்றான் என்றும் நினைத்துக்கொண்டு தன்னையும், மற்றவரையும் ஏமாற்றிப்பிழைக்கின்றனர் ! அவ்வாறல்ல ! ஹள்ரத், செய்யிதினா, அபூ பக்கர் ஷிப்லீ ரஹிமஹுல்லாஹு அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்….

“மக்களெல்லாம் அர்ஷில்தான் அல்லாஹ் இருக்கின்றான் என கதைக்கின்றார்கள் நான் நவில்கின்றேன் அல்லாஹ்வில் தான் அர்ஷ் அமைந்துள்ளது”

எவ்வாறு மஹா சமுத்திரத்துக்குள்தான், மாபெரும் திமிங்கலத்திலிருந்து சிறிய மீன்கள் வரையும், அங்குலம் அளவே வெளியில் தெரியும் inch- caped rocks என்னும் பெரும் குன்றுகளும் மற்றும் நீர் செடி கொடிகளும், சிப்பி்களும், அவைச்சிலவற்றில் முத்துக்களும், மற்றும் பவளப்பாறைகளும், இன்னும் அறிவியலார் இதுவரை கண்டுபிடிக்காத எவ்வளவோ அதிசயங்களும் மறைந்துள்ளன !

எல்லாம் வல்ல ஏக இறைவனின் எண்ணற்ற கோடானகோடி சிருஷ்டிகளில் இந்த பூமி அவ்வளவு ஒன்றும் பெரியதல்லவே !

இந்த சிறிய பூமியின் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட இந்த கடல்களுக்குள்ளே இவ்வளவு விசித்திரம் இருக்கும்போது ! றப்புல் ஆலமீனாகிய சர்வ லோகங்களையும் தன்னில் நின்றும் தன்னுள்ளேயே படைத்து, வளர்த்து, பாதுகாத்து வருகின்ற வல்ல அல்லாஹ்வில் தான் படைப்புக்களில் மிகப் பெரிய அர்ஷிலிருந்து குர்ஸீ, லௌஹு, கலம்,  சொர்க்கம், நரகம் எல்லாம் எல்லாம் ஏன் இருக்காது ? எங்குமாய் எங்கும் நீக்கமற நிறைந்த அனைத்துமான அணுவிலிருந்து அண்டசராசரங்கள் வரை உள்ளும் புறமும் அவனே நிறைந்துள்ளான் ! அவனைத்தவிர வேறேதும் இல்லவே இல்லை ! இதுவே, கலிமா தௌஹீதின் தத்துவம் !
ஆக, நாமும் மற்ற அனைத்து சிருட்டிகளும் அல்லாஹ்வில் தான் உள்ளோம் !

அவனாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றோம் ! அவனே நம்முள் நிரம்பி வழிகின்றான் ! இறுதியில் அவனே நாமும், அனைத்தும் ! We are all in Allaah ! We are all filled by Allaah ! We are all over-flowing Allaah ! At last, we are all Allaah Himself !

இறை நன்றிகள் !
இறையன்புடன்
மஹானந்தன் ( அமீருத்தீன்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments