Tuesday, April 23, 2024
Homeஎழுத்தாக்கங்கள் இது இமாம் ஷாபிஈ அவர்களின் சட்டம்.

[ “ஜனாசா” தொழுகையில் “வஜ்ஜஹ்து” ஓதுவது “ஸுன்னத்” அல்ல] இது இமாம் ஷாபிஈ அவர்களின் சட்டம்.


--------------------------------------------------------------
ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்
--------------------------------------------------------------

இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஷாபிஈ மத்ஹபின் சட்டப்படி தொழுகைக்காக “நிய்யத்” வைத்து “அல்லாஹு அக்பர்” என்று முதல் தக்பீர் சொல்லி கை கட்டியவுடன் ( அஊது – பிஸ்மி ) ஓதாமல் “வஜ்ஜஹ்து” என்று ஆரம்பமாகும் “துஆ” ஓதுதல் “ஸுன்னத்” ஆகும்.

இந்த “துஆ” ஜனாசா – மையித் தொழுகையில் மட்டும் “ஸுன்னத்” ஆக்கப்படவில்லை. இதற்கான காரணம் பின்னால் வரும்.

ஒருவர் மரணித்தால் அவரின் பொடியை – பிரேதத்தை – அவசியத் தேவைக்காக மட்டும் அடக்காமல் பிற்படுத்தலாம். இன்றேல் அடக்கி விடுவதே சிறந்தது. 
ஒரு மையித்தின் அவசியத் தேவைக்கேயன்றி அடக்கும் பணியை பிற்படுத்தினால் அந்த “மையித்” நல்லடியானாய் இருந்தால் قَدِّمُوْنِيْ – قَدِّمُوْنِيْ  என்னை அவசரமாக அடக்கி விடுங்கள். என்னை அவசரமாக அடக்கி விடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும். என்று நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள். இதனால் மையித்தை அவசரமாக அடக்குவதே சிறந்ததாகும்.

மரணித்தவர் நல்லடியானாயிருந்தால் அவர் அல்லாஹ்வின் திருச் சமுகத்துக்கு அவசரமாகப் போவதையே விரும்புவார். மரணித்த நல்லடியான் மணமகன் போன்றவனாவான். மணவறையில் வீற்றிருக்கும் “மஃஷுகா”வை அவசரமாகப் பார்த்து மகிழவே அவன் வரும்புவான்.

அவசியத் தேவை என்பதில் குளிப்பாட்டுதல், “கபன்” செய்தல், “கப்று” தயார் செய்தல், தொழுகை நடத்துதல் என்பன அடங்கும். இவற்றுக்காக மட்டும் அடக்கப் பணியைப் பிற்படுத்தலாம். மரணித்த ஒருவனுக்கு ஒரு மகன் இருந்து அவன் தனது தந்தைக்காக தொழுகை நடத்த விரும்பினால் அவனுடைய வருகைக்காகவும் பிற்படுத்தலாம். அவன் தொழுகை நடத்துவதற்கு லாயக்கற்றவனாயிருந்தால் அவனை எதிர்பார்க்க முடியாது.

மையித்தின் உறவினர், நண்பர்கள், அயலவர்கள் வர வேண்டும் என்ற காரணம் அவசியத் தேவையில் அடங்காது. நம் நாட்டு முஸ்லிம்களில் அநேகர் இந் நடைமுறைக்கு மாற்றமாகவே செயல்படுகின்றனர். சில ஜனாசாக்கள் 24 மணி நேரம் வரை அடக்கப்படமால் பிற்படுத்தப்படுவது மணவறையில் இருக்கும் மணவரசியைப் பார்க்க விடாமல் மணமகனைத் தடுப்பது போன்றதாகும்.

“ஜனாசா” தொழுகையில் “வஜ்ஜஹ்து” ஓதுவது கூட “ஸுன்னத்” இல்லை என்பதற்கான காரணம் மையித்தை அவசரமாக  அடக்க வேண்டுமென்பதற்கேயாகும். இதைக் கருத்திற் கொண்டு ஏனைய தொழுகைகளில் உள்ள “ஸுன்னத்” ஆன ஒரு வணக்கம் கூட நிறுத்தப்பட்டுள்ளதென்றால் மையித்தை அவசரமாக அடக்க வேண்டுமென்பதில் இஸ்லாம் எந்த அளவு முக்கியதுவம் கொடுத்துள்ளதென்பதை புரிந்து செயற்பட வேண்டும்.

மையித் வீட்டார் அவர் வரவேண்டும், இவர் வர வேண்டுமென்று எதிர்பார்த்து அடக்கப் பணியை  பிற்படுத்துவது குற்றம்தான். இதுவே சட்டம். ஆனால் இவ்வாறுதான் சட்டம் உள்ளதென்று கிதாபின் பெயர் பக்கத்துடன் சொன்னாற் கூட அதற்கு செவிசாய்க்காமல் மையித் வீட்டவர்கள் நடந்து கொள்வது வேதனைக்குரியதே.

சில வயோதிபப் பெண்கள் உள்ளார்கள். அவர்களுக்கு ஆனாவும் தெரியாது. அலிபும் தெரியாது. ஆயினும் கெய்ரோ அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் படித்து கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் போல் மையித் வீட்டில் சட்டம் பேசுவார்கள். நன்றாக கற்ற ஒரு மௌலவீ எவ்வளவுதான் சட்டம் சொன்னாலும் அவர் சொல்வது அங்கு எடுபடாது. இவ்வாறு அடங்காப் பிடாரியான பெண்கள் அடங்கி ஒதுங்கி விட வேண்டும். அல்லது அவர்கள் அடக்கப்பட வேண்டும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments