Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“பைஅத்” ஞான தீட்சை வழங்கும் குருமாரில் இருக்க வேண்டிய நிபந்தனைகள்

“பைஅத்” ஞான தீட்சை வழங்கும் குருமாரில் இருக்க வேண்டிய நிபந்தனைகள்

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

الشّروط المعتبرة فى الشّيخ الّذي يبايع النّاس

إذا لم يكن للشيخ خمـسُ فوائـد …. وإلا فدجـالٌ يقــود إلى جهل
عليمٌ بأحكام الشريعة ظـــاهرا ً… ويَبْحَثُ عن علم الحقيقة عن أصل
ويُظهِر للوُرَّادِ بالبِشر والقِــرى … و يخضع للمسكين بالقـول والفعل
فذاك هو الشيخ المعظّم قـــدرُه …. عليم بأحكام الحـرام من الحِــلِّ
(قلائد الجواهر فى مناقب الشّيخ عبد القادر، ص 17 )

“பைஅத்” ஞான தீட்சை வழங்கும் குருமாரில் இருக்க வேண்டிய நிபந்தனைகள் பின்வருமாறு.

இந்நிபந்தனைகளை உள்வாங்கி பாடலில் தந்துள்ளார்கள் புனித றமழான் மாதம் முதல் நாள் பிறந்த வலீகட்கரசர் அல் பாஸுல் அஷ்ஹப் – வலீமாரின் ராஜாளி அஸ்ஸெய்யித் அஷ் ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்கள்.

(“பைஅத்” வழங்கும் குருவில் ஐந்து நிபந்தனைகள் இல்லையெனில் அவர் அறியாமை அளவில் இழுத்துச் செல்லும் தஜ்ஜாலே ஆவார். அவர் ஷரீஆவின் வெளியரங்கமான சட்டங்களை அறிந்தவராயிருத்தல். “ஹகீகத்” என்று சொல்லப்படுகின்ற எதார்த்தம் பற்றிய ஆய்வுள்ளவராயிருத்தல், தன்னை நாடிவருவோரை முகமலர்ச்சியுடனும், விருந்து வழங்கியும் வரவேற்பவராயிருத்தல், சொற் செயலால் ஏழைகளுடன் பணிவாக நடப்பவராயிருத்தல், “ஹறாம்”, “ஹலால்” விபரங்களை அறிந்தவராயிருத்தல்.

இவ் ஐந்து சிறப்பம்சங்கள் உள்ளவர் மட்டுமே கண்ணியத்திற்குரிய “ஷெய்கு” குரு ஆவார்.

முதலாவது நிபந்தனை “ஷரீஆ”வின் வெளிப்படையான சட்டங்களை அறியாதவரை தூக்கியெறிந்து விடும். ஏனெனில் “ஷரீஆ”வின் சாதாரண சட்டங்கள் கூட தெரியாத ஒருவரால் சிஷ்யர்களை ஷரீஅத் வழியில் சரியாக வழி நடத்த முடியாது.

இந்த நிபந்தனை மிகப்பிரதான நிபந்தனையாகும். இக்காலத்தைப் பொறுத்தவரை போலிக் குருமார் மலிந்து விட்டார்கள். அவர்களின் வெளிவேஷத்தைக் கண்டு மயங்குபவர்களும் மலிந்து விட்டார்கள். ஆகையால் ஒருவரைக் குருவாக கொள்ள விரும்பும் ஒருவர் அவர் “ஷரீஆ”வின் சட்டங்களை அறிந்தவரா? என்பதை அறிந்து அவரின் கை பிடிக்க வேண்டும்.

இரண்டாவது நிபந்தனை “ஹகீகத்” என்றும் “மஃரிபா” என்றும் “வஹ்ததுல் வுஜூத்” என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகின்ற இறை ஞானம் உள்ளவராக இருத்தல் வேண்டும். குறைந்தளவு “தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

இந்த இரண்டாவது நிபந்தனை இத்தகைமை இல்லாதவரை தூக்கி எறிந்து விடும்.

மூன்றாவது நிபந்தனை தன்னை நாடி வருவோரை முக மலர்ச்சியுடனும், விருந்து வழங்கியும் வரவேற்பவராக இருக்க வேண்டும். குரைக்கும் நாயாக இருந்தாலும் கடிக்கும் நாயாக அவர் இருத்தல் கூடாது. தன்னை நாடி, தன்னிடம் ஞான தீட்சை பெற வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தோடு வருவபனை ஒரு வேளையோ, ஒரு நாளோ தங்கச் செய்து அவருக்கு முடிந்த வகையில் விருந்து வழங்கி உபசரிப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மாறாக வருபவனின் பாக்கட்டை பார்ப்பவராகவும், காலடிக்கு வந்தவனுக்கு ஒரு கிளாஸ் வெறும் தண்ணீராவது கொடுக்காதவராகவும் இருத்தல் கூடாது. இந்த மூன்றாவது நிபந்தனை இத்தகைமை இல்லாதவரை தூக்கி எறிந்து விடும்.

நாலாவது நிபந்தனை சொற் செயல்களால் ஏழைகளுடன் பணிவாக நடப்பவராக இருத்தல் வேண்டும். இவன் ஏழை, இதனால் தனக்கு என்ன “துன்யா” கிடைக்கப் போகிறதென்று அவனுடன் உரட்டிக் கல்லாக இருத்தல் கூடாது. இந்நான்காம் நிபந்தனை இதற்குத் தகுதியில்லாதவரை தூக்கி எறிந்து விடும்.

ஐந்தாவது நிபந்தனை அந்த குரு ஹறாம், ஹலால் தெரிந்தவராக இருத்தல் வேண்டும். இத்தன்மை இல்லாதவரால் “ஷரீஆ”வின் படி சிஷ்யனை வழி நடாத்த முடியாது. இவ் ஐந்தாம் நிபந்தனை ஹலால், ஹறாம் தெரியாத குருவை தூக்கி எறிந்து விடும்.

هَذَا زَمَانُ اغْتِرَارِ النَّاسِ بِالْمَلَابِسِ وَالصُّوَرِ وَالْأَشْكَالِ، كَمَا يُقَالُ ” اَلنَّاسُ بِاللِّبَاسِ”
உடைகளைக் கொண்டும், உருவங்களைக் கொண்டும் மக்கள் ஏமாறும் காலமாயிருப்பதால் ஞானகுருவை தெரியும் விடயத்தில் மேற்கண்ட நிபந்தனைகள் உள்ள ஒருவரை தெரிவு செய்து கொள்ளுதல் அவசியமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments