Thursday, April 25, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மனிதன் மிருகமாக மாறுதற்கு ஸூபிஸ ஞானமின்மையே பிரதான காரணமாகும்.

மனிதன் மிருகமாக மாறுதற்கு ஸூபிஸ ஞானமின்மையே பிரதான காரணமாகும்.

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)

اَلتَّصَوُّفُ رُوْحُ الْإِسْلَامِ وَالْاِيْمَانِ – “ஸூபிஸ ஞானமென்பது ஈமான், இஸ்லாம் இரண்டினதும் உயிர்” என்ற தத்துவம் அறிவுள்ள எவராலும் மறுக்க முடியாத தத்துவமாகும். இத் தத்துவம் திருக்குர்ஆனிலிருந்தும், ஹதீதுகளிலுருந்தும் ஸூபீ மகான்கள் வடித்தெடுத்து எமது நன்மை கருதி எமக்கு வழங்கிய கிடைத்தற்கரிய தத்துவமாகும்.

ஒரு காலத்தில் ஸூபிஸ ஞானம் மார்க்கத்தின் உயிரென்று உணரப்பட்டு அதைக் கற்றவர்களும், கற்பவர்களும் இருந்தார்கள். எதிர்ப்புக்கள் இருந்தாலும் அதை எரிக்கும் வல்லமை பெற்ற மகான்களும் வாழ்ந்தார்கள். அவர்கள் அவ்வப்போது எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தரீக்காக்களை தாபித்து “பைஅத்” ஞானதீட்சை வழங்கி சிஷ்யர்களுக்கு வாழ்க்கையில் வரம்பிட்டு அவர்களை மனிதர்களாகப் புடம் போட்டு எடுத்தார்கள்.

இன்று அந்த சூழல் – நிலைமை முற்றாக மாறி ஸூபிஸம் என்பது வழிகெட்ட ஒரு கூட்டத்தின் கொள்கையென்றும், ஒரு சிலரின் வருவாய்க்கான வழியென்றும் படம் பிடித்துக் காட்டப்பட்டதால் அது சபைக்கு வராமல் ஒதுங்கிக் கொண்டது. கற்றுக் கொண்டிருந்தவர்கள் கற்கையை விட்டனர். கற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக மரணிக்க வழிகேடர்கள் சபைக்கும், சாலைக்கும் வந்தனர். இதனால் ஸூபிஸ ஞானம் தேய் பிறையாயிற்று. தெரிந்தவர்கள் ஒரு சிலர் இருந்தாலும் கூட அவர்கள் எதிரிகளின் ஏவுகணைகளுக்குப் பயந்து மௌனிகளாகினர்.

இந்நிலை ஏற்படுவதற்கு பிரதான காரணிகளாக இருந்தவர்கள் ஸூபிஸம் தெரியாத “ஷரீஆ”வோடு மட்டும் நின்ற உலமாஉகளேயாவர். இன்று ஸூபிஸ வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்கள் வஹ்ஹாபிகளும், வழிகெட்ட வேறு கொள்கை வாதிகளும், இன்னும் சில பொறாமை கொண்ட போலிக் குருமார்களுமேயாவர். நாய் பீ தின்பது அதிசயமில்லை. ஆயினும் நாயுடன் சேர்ந்து மனிதன் அதை தின்பதே அதிசயம்.

اَلشَّرِيْعَةُ بِلَا طَرِيْقَةٍ عَاطِلَةٌ ، وَالطَّرِيْقَةُ بِلَا شَرِيْعَةٍ بَاطِلَةٌ
“தரீகா இல்லாத “ஷரீஆ”வும், “ஷரீஆ” இல்லாத தரீகாவும் வீணானதே”

இத்தத்துவம் ஸூபி மகான்கள் திருக்குர்ஆனிலிருந்தும், ஹதீதுகளிலிருந்தும் வடித்தெடுத்து எமக்கு வழங்கிய தத்துவமாகும்.

இன்ஸான் – மனிதன் என்ற வண்டி இருசக்கரங்கள் உள்ளதாகும். ஒன்று “ஷரீஆ”. மற்றது “தரீகா”. இவ்விரு சக்கரங்களும் சரியாக சுழன்றால் மட்டும்தான் அந்த வண்டி தான் நாடிய இடத்தைச் சென்றடையும். ஒரு சக்கரம் சுழல மற்றது சுழலவில்லையானால் அது தனது இலக்கை அடையாது. மனித வண்டியின் இலக்கு இறைவனை அடைவதேயாகும்.

இன்று முஸ்லிம்களிற் பலர் இரு சக்கரமும் சுற்றாத வண்டியாயிருப்பதை நாம் காண்கிறோம். இவர்கள் மனித உருவத்திலுள்ள மிருகங்களாவர். இவர்கள் தொடர்பாக அறிஞர் கவியரசு அல்லாமா இக்பால்,

“ஸூறத் மே இன்ஸான் ஹே. ஸீறத் நெஹீ ஹே. ஸீறத் மே ஹயவான் ஹே. மகர்தும் நெஹீ ஹே!”

உருவத்தில் மட்டும் மனிதர்கள். நடைமுறை வாழ்வில் மிருகங்கள். ஆனால் வால் மட்டுமே இல்லை என்று கூறியுள்ளார்கள். இதை அறபு மொழியில் சொல்வதாயின்

اَلَّذِيْ لَيْسَ لَهُ شَرِيْعَةٌ وَلَا طَرِيْقَةٌ فَلَيْسَ بِإِنْسَانٍ، بَلْ هُوَ حَيَوَانٌ بِلَا ذَنَبٍ
என்று சொல்லலாம்.

இன்னும் மனிதர்களிற் பலர் ஒரு சக்கரம் மட்டும் சுற்றும் வண்டியாக இருப்பதையும் நாம் காண்கிறோம். அந்த ஒரு சக்கரம் கூட ஒழுங்காக இயங்காமல் பற பற என்று சத்தமிடும் சக்கரம்தான். இழுபட்டும், வளைந்துமே சுற்றுகிறது. இந்த வண்டியும் தனது இலக்கை அடையாது.

இன்னும் அவர்களிற் சிலர் மட்டுமே இரு சக்கரங்களும் ஒழுங்காக சுற்றும் வண்டிகளாக உள்ளனர். இவர்கள் மட்டுமே தமது இலக்கை அடைவர்.

மிதி வண்டிபோல் இரு சக்கரத்தில் செல்ல வேண்டியது ஒரு சக்கரத்தில் செல்லுமா? சென்றாலும் கூட குறித்த இலக்கைத்தான் அடைய முடியுமா? அல்லது திசை மாறிப் படுகுழியில் விழுமா? சந்தேகம்தான்.

இன்று வாழும் மனிதர்கள் மேற்கண்ட உதாரணங்கள் போன்றே இன்று வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் இரு சக்கரங்களும் சரியாக சுற்றியவர்களே தமது இலக்கை அடைவர். மனித வண்டி இறைவனை அடைய “ஷரீஆ”வும், ஸூபிஸமும் இன்றியமையாதவையாகும்.

وَمَنْ تَرَكَ الشَّرِيْعَةَ زَلَّتْ قَدَمُهُ، وَمَنْ تَرَكَ التَّصَوُّفَ عَمِيَتْ بَصِيْرَتُهُ.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments