Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்முராகபஹ்.... முஷாஹதஹ் !

முராகபஹ்…. முஷாஹதஹ் !

{وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ (4)} [الحديد: 4]
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (57-04)
என்று அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்.

இந்த அடிப்டையில் அல்லாஹ் மஈ ! الله معي ! அல்லாஹ் என்னுடன் இருக்கின்றான் ! என்பதன் அர்த்தம் என்ன?

ஒரு வெள்ளி மோதிரத்தை சுட்டிக்காட்டி, இந்த வெள்ளி மோதிரத்துடன் வெள்ளி இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம் ? மோதிரம் முழுவதும் வெள்ளியே உள்ளது என்றுதான் அர்த்தம் கொள்வது போல், மண் பானையுடன் மண் இருக்கிறது என்றாலும், அந்த பானை முழுவதும் மண்ணாலானது என்பதே உண்மை !

அதேபோல், கத்தியுடன் இரும்பு இருக்கிறது !
அலுமாரியுடன் மரம் இருக்கிறது !
பாயுடன் கோரைப்புல், பன் இருக்கிறது

இவ்வாறு, எந்தவொரு வஸ்துவையும் சுட்டிக்காட்டும்போது, அந்தந்த பொருளுடன் அதனதன் மூலப்பொருளே உள்ளது என்பது எவ்வளவு நிதர்சனமோ, அதே போன்று என்னுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று சுட்டும்போது என்னின் மற்றும் அனைத்தின் ஆதிமூலமான அல்லாஹ்வே என்னாக என் உடலாக, உயிராக, மனமாக, ஆன்மாவாக இருக்கின்றான் என்பதே மெய்யான, மெய்ப் பொருளாகும் !

இதனையே معية حقيقية மஇஅத்தே ஹக்கீகிய்யஹ் என்பர் !

அல்லாஹு நாளிருன் ! الله ناظر ! அல்லாஹ் உற்றுநோக்கியவனாக இருக்கின்றான் ! அதாவது அல்லாஹ் என்னாகயிருந்து நானாகயிருந்து அனைத்தையும் அதாவது தன்னையே தான் உற்று நோக்குபவனாக இருக்கின்றான் ! என்றே பொருளாகும்.

அல்லாஹு ஹாலிருன் ! الله حاضر ! அல்லாஹு ஷாஹிதுன் ! الله شاهد ! இது இரண்டிற்கும் பிரசன்னமாக இருப்பவன், சமுகமளித்து இருப்பவன் என்ற ஒரே அர்த்தமே வரும் !

مشاهدة ! ! என்பது شهد…………ஷஹித என்னும் மூலச்சொல்லிருந்தது شهيد ,شاهد مشهود، مشاهدة ஷஹீத், ஷாஹித், மஷ்ஹூத், முஷாஹதஹ் முதலிய சொற்கள் வந்துள்ளன ! இவைகளில் ஷஹீத் என்பது அஸ்மாஉல் ஹுஸ்னா என்னும் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் தொன்னூற்று ஒன்பதில் ஒன்றாகும் !

அதன் அர்த்தமாவது, சாட்சியாக இருந்து பார்ப்பவன் , பிரசன்னமாக இருப்பவன் என்பதாகும். அதாவது, ஒரு வஸ்துவை அல்லது ஒரு மனிதனை அவனுடைய உடல் மட்டுமல்லாமல் உள்ளத்தின் அசைவுகளையும் சாட்சியாக நின்று பார்ப்பவன் !

One Who witnesses a thing or man within and without ! என்று பொருள்படும் ! பிரசன்னமாக இருப்பவன் என்பதற்கு, ஒருவன் உள்ளத்தில் ஏதாவதொன்றை நினைக்கும்போதும், நாவினால் ஏதாவது ஒன்றை பேசும்போதும் மற்ற செயல்களில் ஈடுபடும்போதும் அந்த இடத்தில், அந்த நேரத்தில் சமுகமளித்து, ஹாழிராக இருந்து பார்ப்பவன், கேட்பவன் ! One Who presents at the time and place and watches what is going on !

இதனாலேயே அல்லாஹு ஹாலிருன் என்றும் கூறப்படுகின்றான்! இந்த ஹாலிருன், ஷாஹிதுன் இரண்டிற்கும் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், பிரசன்னமாக இருப்பவன், சமுகமளித்து இருப்பவன்,என்ற ஒரே அர்த்தமே !

சரி…… இப்போது, முஷாஹதஹ் என்னும் சாட்சி நிலை அல்லது பிரசன்ன நிலையைப்பற்றிய சூசகத்தை ஆய்வு செய்வோம் !

நீதி மன்றத்தில் கூண்டில் நிற்கும் ஒரு மனிதனைப் பார்த்து, நீதிபதி கேட்கின்றார், குறிப்பிட்ட அந்த இடத்தில், அந்த நேரத்தில், நீர் பிரசன்னமாக இருந்தீரா ? (were you present at that place and at that time ?)

பதில் : ஆம், ஐய்யா!

நீதிபதி : அந்த நிகழ்வை, சம்பவத்தை உம் கண்களால் கண்டீரா ? Had you seen that incident with your eyes ?

பதில்: ஆம் ! சத்தியமாக, நிச்சயமாக, இந்த என் இரண்டு கண்களாலும் கண்டேன் என சாட்சி அளிக்கின்றேன், பிரபு………..!

நீதிபதி : சரி, நீர் போகலாம் !

இது, பிரசன்னமாக இருத்தல் ! சாட்சி அளித்தல் என்பதற்கு ஒரு சின்ன மேற்கோள் !

ஆனால், இறைவன் பிரசன்னமாக இருக்கின்றான் ! சாட்சியாக இருக்கின்றான் ! என்றால் எங்குமாய் எங்கும் எல்லாமுமாய் எல்லாமும் ஆகியிருக்கக்கூடியவன் அல்லாஹ் !
The All in All , The Omnipresent and The All – Pervading ! அங்கிங்கிங்கெனாதபடி எங்குமாய் எங்கும் நீக்கமற நிறைந்த, இறைந்த இறைவனான அவன் அன்ஃபுஸ், ஆஃபாக் எனும் உள்ளும் புறமுமான நாயனல்லவா ? அல்லாஹ் அல்லவா ? அவனைத் தவிரவும் வேறொன்றுமில்லை! அதனால்தான், ஸூஃபி மஹான்கள் கூறுகின்றனர் ! கண்களை மூடி, உன்னுடைய உடலையும், மனதையும் வெட்டவெளியில் தொலைத்துவிடு காணாமலாக்கிவிடு !கரைத்துவிடு ! ஃபனாவாக்கிவிடு! லா இலாஹ இல்லல்லாஹ்வின் தத்துவார்த்தப்படி, இருக்கக்கூடிய நீயே… நீயே அல்லாஹ் ……….! இந்த உணர்வுடன் உன்னுடைய ஹ்ருதய ஸ்தானங்களான மார்பின் நடுவில், அனாகதா ஆதாரத்தில், புருவங்களின் நடுவில் ஆக்ஞா ஆதாரத்தில், தலை உச்சியின் நடுவில், சகஸ்ரார ஆதாரத்தில், இவைகளில் ஏதாவது ஒரு மைய்யத்தில் உன் உள்ளத்தின் பார்வையை வைத்து, நான் (அல்லாஹ்) ஷாஹிதாக, சாட்சியாக நின்று உள்ளுக்குள் ஓடுகின்றவைகளை பார்க்கின்றேன் என்ற ஒரே எண்ணத்துடன், எந்த வகையிலும், இந்த சாட்சி நிலையை தவற விடாமல், ஷுஹூத் செய்து வாருங்கள் !

சாட்சி நிலையை இழந்து விட்டால் அது பாழ் நிலை ஆகிவிடும் ! இறை நிலை கிட்டாது ! அல்லாஹ் நம்மை பாது காப்பானாக ! ஆமீன்……………….!

அடுத்து, முராக்கபஹ் ! مراقبة

رقب றகப என்னும் மூலவார்தையிலிருந்து, رقيب مراقب مراقبة முதலான வார்த்தைகள் வந்துள்ளன !

இதில், றகீப் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் இன்னுமொன்று ! இதன் பொருள், சர்வ ஜாக்கிரதையாக கண்கானிப்பவன் One Who supervises something or somebody with meticulous care !

ஒரு ஐம்பது, நூறு பேர்களை வைத்து வேலை வாங்கும் ஒரு சூப்பர்வைஸர், தன் கீழ் வேலை செய்யும் ஒவ்வொருவரையும் மிக உன்னிப்பாக கண்காணித்துத்கொண்டே வருவார், யாராவது ஒருவர் வேலையில் தவறிழைத்தால், உடனை அதனை கண்டுப்பிடித்து, அவரைக் கண்டிப்பார். அந்த அளவுக்கு கண்காணித்து வருவார் ! இருப்பினும், அவரும் சராசரி மனிதர்தானே ! சமயங்களில் தன் வேலையில், அவர் கவனக்குறைவாக, அலட்சியமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது ! அதனால், அவரையும், ஏமாற்றிவிடுவர் !

ஆனால், அல்லாஹ் அவ்வாறா ! அவன் கண் இமைக்கும் நேரம் தன் கண்காணிப்பில், மறதியுள்ளவனாக இருப்பானா ? இருந்தால், இந்தப்பிரபஞ்சம் ஒட்டுமொத்தமாக எப்பொழுதோ அழிந்தொழிந்து போயிருக்குமே ! மறதி என்பது அவனுக்கு மாறான ஸிஃபத், தன்மையாகும் ! அப்படியென்றால், குணங்குடி மஸ்தான் ஸாஹிப் அப்பா(ரஹிமஹுல்லாஹு அலைஹி) ஏன் இவ்வாறு பாடியுள்ளார்கள்…?

” நினைப்பதுவும் மறப்பதுவும் உன் செயலெனின் என் செயலென்ன ? என் கண்ணே றஹ்மானே !”
நினைப்பது அவன் செயல். அதில் எந்த சந்தேகமும் இல்லை ! மறப்பதுவும் அவன் செயலென்றால் அதன் உட்கருத்தென்ன ?

அதாவது, றப்பாகிய அல்லாஹ் தன்னுடைய தோற்றமேயான அப்து எனும் அடியானை, )இவன் தன்னை யார் என்று அறியாவிட்டாலும் ( தன் அப்தை தானாகவே உணர்ந்துள்ள அல்லாஹ், அடியானின் மறதியையும் தன்னுடைய செயலாக இரக்கத்துடன் ஏற்று அதனை பொருந்தியும் கொள்கின்றான்!

றப்பாகிய நானே அப்தாகிய அடியானாகவும், அவனுடைய மறதி மற்றும் எதிர்மறை குணங்கள் அனைத்துமாகவும் உள்ளேன் !

ஏனெனில், லா ளார்ர لا ضار இல்லல்லாஹ் ! தீமை செய்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை !
அதனால், மறதி, அசதி, கவலை, பயம், சந்தேகம் போன்ற Negative, evil charactarism எதிர்மறை மற்றும் தீய குணாதிஷயங்கள் ஏகனான அல்லாஹ்வில் நின்றும் உண்டானதே !

ஏன் இவ்வாறெல்லாம் அமைத்திருக்கிறான் ? என்பதன் தத்துவம் அவனுக்கு மட்டுமே தெரிந்த இரகஸியம் ! அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எவ்வகையான உள்ளமையும், சக்திகளும் இல்லவே இல்லை என்னும்போது, இந்த சாத்தானாக இருக்கட்டும், அசுத்த ஆவியாக, நாயாக இருக்கட்டும், பேயாக இருக்கட்டும், கெட்ட ஜின்களாக, நாற்றத்தில் உழலும் பன்றிகளாக இருக்கட்டும், அவைகள் மட்டும் எங்கிருந்து வந்தன ? தரீக்கத்தில், ஞான வழியில் செல்கிறோம் என்று சொல்லும் சிலரே அவைகள் அல்லாஹ்வின் உள்ளமையிலிருந்து வரவில்லை !

அவைகள் அல்லாஹ்வுக்கு வேறானவை, மாறானவை என்று விவாதம் செய்வதை பார்த்தால், அல்லாஹ் ஏகன் என்னும் அஹதானவன் அல்ல ! அவர்கள் இரண்டு பேர்கள் ! அல்லது மூன்றுபேர்கள் ! இன்னும் அதற்கும் அதிகம் என்று சொல்வதற்கொப்பாகும் !

அவைகள் அல்லாஹ்வின் உள்ளமையிலிருந்தே வந்தன . அவைகள்அல்லாஹ் தானானவைகளே !

சரி, நாம் இப்போது தொடங்கிய இடத்திற்கு வருவோம் ! அல்லாஹ் றகீபாக கண்காணிப்பவனாக இருக்கின்றான் என்று சொல்லும்போது, அல்லாஹ் நல்லது கெட்டது அனைத்துமாகவும் இருக்கின்றான் ! அவைகளின் சகலவிதமான தன்மைகளும் அவனுக்கே சொந்தம் என்னும்போது, அந்த அல்லாஹ் தன்னைத்தானே கண்காணிக்கின்றான் என்பதே தாற்பரியமாகும் ! ஆதலால், கல்பில் கலிமாவின் கருத்தை , அதாவது, நானே அல்லாஹ் ! நானாகிய என்னைத்தவிர வேறு யாருமில்லை ! என்னும் உணர்வை உள்ளத்தில் கொண்டு, கண்களை மூடி முறாக்கபஹ் என்னும் தன்னுள்ளே என்ன நிகழ்கின்றது என்பதை கண்காணித்து வரவேண்டும் ! இவ்வாறு, முஷாஹதஹ், முறாக்கபஹ்வில் நாம் மூழ்கிவிடவேண்டும் ! அப்போதுதான், நம் மனதில் எழும் எல்லாவகையான எண்ணங்கள், உணர்வுகள் கற்பனைகள் எல்லாம் ஓய்தொழிந்து, இஹ்லாஸ் اخلاص என்னும் சலனமற்ற, கலப்பற்ற உளத்தூய்மையை எய்த முடியும் !

இத்தகைய இஹ்லாஸ் உடைய நிலையைத்தான் இருலோக இரட்சகர் நபிகள் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈமானுடைய இறுதி நிலை என நவின்றனர் !

இதுவே சலாம் ! என்னும் சாந்தி நிலை ! இதுவே இஸ்லாம் என்னும் யோக நிலையாகவும் அறியப்படுகிறது ! அன்றுப்பிறந்த பாலகனுடைய அகப்பரிசுத்த நிலை ! ஏனெனில் அவர்களுக்கு உலகியல் சம்பந்தப்பட்ட நஃப்ஸ், மனம், எண்ணங்கள் எனும் நஜீஸ், அசுத்தம் அணுவளவுகூட ஒட்டியிருக்காது ! ஆகவே, இத்தகைய தஸ்கியத்துன்னஃப்ஸ், تزكية النفس என்னும் மனத்தூய்மையை நாம் அடைந்து இன்ஸானே காமிலாக இன்ஸான் அல்லாஹ்வாகவே நம்முடைய ஆதி நிலையான, பூர்விக பரிபூர்ண நிலையை, சுத்த சுயம்பு நிலையை இறை நிலையை எய்த, எல்லாம் வல்ல ரஹ்மான் ஏகன் அல்லாஹ், நம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

இறையன்புடன்
மௌலவீ ஸஹ்லான் றப்பானீ மற்றும் அமீருத்தீன் (மஹானந்தன் )

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments