Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வலீமாருக்கு “கறாமத்” அற்புதம் உண்டு

வலீமாருக்கு “கறாமத்” அற்புதம் உண்டு

ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்

وَاَثْبِتَنْ لِلْاَوْلِيَا الْكَرَامَةْ
وَمَنْ نَفَاهَا انْبُذَنْ كَلَامَهْ

أي اِطْرَحْ كلامَ مَنْ يَنْفِيْهَا من المُعتَزِلة، ومن جَرَى على طريقتهم، وقد قال العلّامة النّسفِي فى عقائده كَرَاماتُ الأولياء حقٌّ، فَتَظْهَرُ الكرامة على طريق نَقْضِ العادة للوليّ، مِن قَطْعِ المَسافة البعيدة فى المُدَّةِ القليلة، وظُهور الطّعام والشّراب والِّلباس عند الحاجة والمَشي على الماء وفى الهواء وكلام الجَمادِ والعَجْمَاء وغير ذلك من الأشياء،

ويكون ذلك مُعجزةً للرَّسول الّذي ظهرتْ هذه الكرامة لواحدٍ من أمّته، لأنّه ظهربها أنّه وليّ، ولا يكون وليّا إلّا إذا كان مُحِقًّا فى دِيَانتِه بِرسالةِ رسولِه، إنتهى،

வலீமாருக்கு “கறாமத்” அற்புதம் உண்டு என்பதை நீ நிறுவு – தரிபடுத்து. அது அவர்களுக்கு இல்லை என்று சொல்பவனின் பேச்சை தூக்கியெறி.

அதாவது வலீமாருக்கு “கறாமத்” இல்லை என்று கூறும் முஃதசிலாக்களின் கூற்றையும், அவர்களின் கொள்கை வழி செல்பவர்களின் கூற்றையும் தூக்கியெறி.

அறிஞர் நஸபீ அவர்கள் தங்களின் “அகாயித்” என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

( வலீமாருக்கு “கறாமத்” அற்புதம் உண்டு என்பது உண்மையே. ஒரு வலிய்யுல்லாஹ்வுக்கு நடைமுறைக்கு மாற்றமாக அற்புதம் வெளியாகும். உதாரணமாக நீண்ட தூரத்தை குறைந்த – சொற்ப நேரத்தில் கடப்பது, தேவையான நேரம் உணவு, பானம், உடை என்பன கிடைப்பது, நீரில் நடப்பது, ஆகாயத்தில் நடப்பது, அவர்களுடன் கற்கரடு, புற்பூண்டு பேசுவது, இன்னுமிவை போன்றவை போன்று.

இவ்வாறான அற்புதம் நபீமாரால் வெளியானால் அது “முஃஜிஸத்” என்றும், வலீமாரால் வெளியானால் “கறாமத்” என்றும் அறபு மொழியில் சொல்லப்படும். பெயரில்தான் வித்தியாசமேயன்றி இரண்டும் ஒன்றேதான்.

ஒருவர் “வலீ” ஆக இருப்பதாயின் அவர் மார்க்க விடயங்களில், “ஷரீஆ” உடைய விடயங்களில் பற்றுள்ளவராயும், பூரண நம்பிக்கை உள்ளவராயும் இருத்தல் வேண்டும்.)

மேற்கண்டவாறு அல்லாமா நஸபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அகாயித் நஸபீ” என்ற நூலில் கூறியுள்ளார்கள்.

நபீமாருக்கு “முஃஜிஸத்” என்ற அற்புதமும், வலீமாருக்கு “கறாமத்” என்ற அற்புதமும் அல்லாஹ் அவர்கள் மீது கொண்ட அன்பின் காரணத்தினால் அவர்களுக்கு வழங்கும் “கிப்ட்” அன்பளிப்பாகும்.

“முஃதசிலா” என்ற பெயரில் முஸ்லிம்களில் ஒரு கூட்டம் வாழ்ந்து வருகின்றது. இக் கூட்டத்தவர்கள் அறபு நாடுகளிலேயே அதிகம் உள்ளனர். எனினும் இன்று வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் தமக்கு “முஃதசிலா” என்று பெயர் சொல்லிக் கொள்ளாது போனாலும் இவர்களும் கொள்கையில் அவர்கள் போன்றவர்களேயாவர்.

ஏனெனில் இவர்களும் வலீமார்களுக்கு கறாமத் – அற்புதம் இல்லையென்று திட்டமாக கூறுகின்றார்கள். அதோடு அவர்கள் நின்றுவிடவில்லை. அது “மெஜிக்” கண் கட்டி வித்தை என்றும், குறளி என்றும், இதையே வலீமார்கள் “கறாமத்” என்ற பெயரில் செய்து காட்டி மக்களை நம்ப வைத்தார்கள், ஏமாற்றினார்கள் என்றும் கூறுகிறார்கள்.

நல்லடியார்களுக்கு “கறாமத்” உண்டு என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும், பெருமானார் அவர்களினது அருள் வாக்குகளும் ஆதாரங்களாக உள்ளன.

வஹ்ஹாபிகள் “கறாமத்” பொய் என்று நிறுவுவதற்காக கிராமப்புறங்களுக்குச் சென்று படிப்பறிவற்ற அப்பாவி மக்களை ஒன்று கூட்டி “மெஜிக் ஷோ” காட்டி வலீமார்களுக்கு அல்லாஹ் வழங்கிய “கறாமத்” அற்புதத்தை பொய்யாக்கி வருகிறார்கள். இவ்வாறுதான் அவ்லியாக்கள் என்பவர்களும் செய்துள்ளார்கள். படிப்பறிவற்ற பொது மக்களை ஏமாற்றி வாழ்ந்துள்ளார்கள் என்று கூறி வலீமார் மீது தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஓர் ஆய்வாளனுக்கு – சிந்தனையாளனுக்கு (வஹ்ஹாபிகள் “கறாமத்”தை இந்த அளவு மறுப்பதற்கான காரணம் என்ன? என்று கேட்பதற்குத் தோன்றும். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் பிரதான காரணத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

வஹ்ஹாபிகள் “ஷெய்குல் இஸ்லாம்” என்று பட்டம் வழங்கி கொண்டாடி வருகின்ற இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் ஆகியோர் தமது வாழ்க்கையில் ஒரு “கறாமத்”காட்டியதற்குக் கூட நம்பத்தகுந்த ஆதாரம் ஒன்றுமில்லை. வரலாறை நாம் காணவில்லை. நாம் காணாது போனாலும் அவர்களுக்கு வரலாறு இருக்குமாயின் அது ஒரு நூலில் மட்டுமன்றி ஆயிரம் நூல்களில் வெளிவந்திருக்கும். அது மட்டுமல்ல. வஹ்ஹாபிஸ மேடைகளில் கொள்கை விளக்கம் நடைபெறமாட்டாது. தலைவர்களின் “கறாமாத்”துகள்தான் முழங்கப்படும். இதுகாலவரை நமது இலங்கை நாட்டில் நடந்த வஹ்ஹாபிகளின் மேடைகளில் ஒரு மேடையிலாவது தலைவர்களின் “கறாமத்” பேசப்பட்டுள்ளதா? எங்கே? எப்போது? யார் பேசினார்? அல்லது அவர்களின் “கறாமத்” அற்புதங்கள் என்ற பெயரில் எந்த மொழியிலோ ஒரு நூலாவது எழுதப்பட்டுள்ளதா? இல்லை. இல்லவே இல்லை.அவ்வாறிருந்தால் அதை வெளிக்கொணருமாறு கேட்டுக் கொள்கின்றேன். அதற்காக கறாமாத்துக்களை கற்பனை செய்து இதன் பிறகு ஒரு நூல் எழுதப்பட்டு வெளியிடப்படுமாயின் அதை ஸுன்னீ சமூகம் ஏற்றுக் கொள்ளாது.

இப்னு தைமிய்யா மரணித்து சுமார் 712 வருடங்கள் கடந்து விட்டன. இப்னு அப்தில் வஹ்ஹாப் மரணித்து சுமார் 234 வருடங்கள் சென்று விட்டன. இத்தனையாண்டுகள் கடந்திருந்தும் கூட இதுவரை அவர்களின் “கறாமத்” பற்றி ஒரு சிறு நூலாவது வெளிவராதிருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்றேயாகும். பாமரர் சிந்திக்காது போனாலும் படித்தவர்கள் சிந்திப்பார்கள். சிந்திக்கத்தான் வேண்டும்.

எனவே அவ்லியாஉகளுக்கு “கறாமத்” உண்டு என்பது திருக்குர்ஆனைக் கொண்டு நிறுவப்பட்டதென்றும், நபீ மொழிகள் கொண்டு நிறுவப்பட்டதென்றும் நம்ப வேண்டும். ஆதாரங்கள் தெரியாது போனாலும் உண்டு என்ற மட்டிலாவது நம்புவது அவசியமாகும். இவ்விடயம் மேற்கண்ட இரண்டு மூலாதாரங்கள் கொண்டு நிறுவப்பட்டிருப்பதால் இதை நம்பாதவன் திருக்குர்ஆன் வசனங்களிற் சில வசனங்களை நம்பாதவனாகி விடுவான். அதன் வசனங்களில் ஒன்றை நம்பாதவன் கூட “காபிர்” என்பது இஸ்லாமிய சட்டமாகும்.

இன்று வஹ்ஹாபிகளின் பேச்சைக் கேட்டு மதிமாறிய சிலர் திசைமாறிப்பறக்கின்றார்கள். எந்த அளவு மாறிப் போனார்களெனில் “கறாமத்”, “வலீ” என்ற சொற்களை மொழிவது கூட “குப்ர்” நிராகரிப்பாகி விடும் என்று பயப்படுகிறார்கள். இவர்கள் திருக்குர்ஆனை ஓதும் போது இவ்வாறான சொற்களைத் தவிர்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

வஹ்ஹாபிகள் எந்தளவு வழிகேட்டில் முன்னேறிவிட்டார்களெனில் ஒரு திருமண சபை முடிந்த பின் ஸலவாத் சொல்லுமுன் ஒருவர் எழுந்தார். அவருக்கு அருகில் இருந்த ஒருவர் “ஸலவாத்” சொன்னபின் எழுந்து செல்லுங்கள் என்றார். அதற்கவர் “ஸலவாத்தும் கத்தரிக்காயும்” என்று சொன்னவராக வெளியேறி விட்டார். இவரின் இந்த வார்த்தை “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்தி விட்டது என்பதில் சந்தேகமில்லை. இவருக்கு 60 வயது இருக்குமென்று நினைக்கிறேன். இவர் இவ்வாறு சொல்லாமல் வெளியேறியிருக்கலாம், ஆயினும் இவரில் பாய்ச்சப்பட்டிருந்த “வஹ்ஹாபிஸம்” என்ற நஞ்சு இவரைக் கொன்று நரகின் விறகாக்கி விட்டது.

சுருக்கம்:-

வஹ்ஹாபிகள், அவ்லியாஉகளுக்குள்ள “கறாமத்” அற்புதம் தொடர்பாக பேசாமல் இருப்பதும், மாறாக “கறாமத்” என்பது பொய்யென்றும், அது அவ்லியாஉகள் என்ற பெயரில் வாழ்ந்த போலிகள் செய்துகாட்டிய “மெஜிக் ஷோ” என்றும், குறளி என்றும், கண்கட்டி வித்தை என்றும் முழங்கிவருவதற்கான காரணம் என்னவென்று நான் ஆராய்ந்து ஆய்வு செய்த வகையில் அவர்கள் பின்பற்றிவருகின்ற அவர்களின் தலைவர்களான இப்னு தைமிய்யாவுக்கும், இப்னு அப்தில் வஹ்ஹாப் இருவருக்கும் “கறாமத்” இல்லாமற் போனதேயாகும். அவர்களால் ஒரு “கறாமத்” அற்புதமேனும் நடந்திருந்தால் போதும். அதை ஒன்பது இலட்சமாக்கி “கறாமத்துக்கடல்கள்” என்று ஒரு படமே தயாரித்திருப்பார்கள். ஐயோபாவம்!

{ மேற்கண்ட அறபு வசனங்கள் إثباتُ كراماتِ الأولياء என்ற நூலின் 4ம் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும். இந்நூல் ஷிஹாபுத்தீன் அஹ்மத் இப்னு அஹ்மத் அஸ்ஸுஜாயீ றஹிமஹுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்டது.
السُّجَاعي – أحمد بن شهاب الدين أحمد بن محمد السُّجاعي المصريّ الأزهريّ الشافعيّ، المُتَوفَّى سنة ١١٩٧
இவர்கள் 37 நூல்கள் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டியதாகும்.}

وقد اَقَرَّ شارحه سعد الدين وغيرُه من أئِمَّةِ أهل السنّة أسعد الله جميعَهم وخَذَل أعدائهم، إذا علمتَ هذا اِتّضَحَ لك أنّ الفاعل للكرامات كالمُعجزات إنّما هو الله تعالى وحده، لكن أظهَرها الله سبحانه وتعالى على اَيدِي أهل طاعته الموصُوفين بما تقدّم إكراما لهم وإذلالًا لِمُنازِعِيهم وخُصمائِهم، وليس لهم فى ذلك إكتسابٌ، ولا لهم على ذلك إقْتِدارٌ، فمن نَسَبَ لهم فى ذلك فعلا فقد ضَلَّ وحَادَ عن الطريق المستقيم،

إذ مذهبُ أهل السنّة والجماعة أنّ العبد لا يَخْلُق شيأً، من الأفعال، بَلِ المُتفرِّدُ بالخلق والإيجادِ هو الله الفاعل المختار، وحينئذٍ لا فرقَ فى إظهارها على يد أحدٍ منهم بين كونِه حيًّا أو ميّتا، وإنكارُ أهلِ الجهل والبُهتان وقوعَها على يد الأموات لِاعْتقادهم الفاسدِ أنّ الفاعل هو صاحبُ الكرامة،

ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கைவாதிகளான இமாம்களும், விரிவுரையாளர் சஃதுத்தீன் அவர்களும், இன்னும் பலரும் உறுதியாக கூறிய விபரம் பின்வருமாறு. (அல்லாஹ் இந்த மகான்களை சீதேவிகளாக்கி வைப்பானாக! இவர்களின் எதிரிகளை இழிவுபடுத்துவானாக! )

நபீமாரால் வெளியாகும் “முஃஜிசத்” அற்புதமாயினும், வலீமாரால் வெளியாகும் “கறாமத்” அற்புதமாயினும் அவற்றுக்குரியவன் – அவற்றை செய்பவன் அல்லாஹ்வேயன்றி நபீமாருமில்லை, வலீமாருமில்லை.

எனினும் தனக்கு விருப்பமான நல்லடியார்களான நபீமார், வலீமார் மூலம் அவற்றை அவன் வெளியாக்குகிறான். இவ்வாறு அவன் செய்வது அவர்களை சங்கைப்படுத்துவதற்காகவும், அவர்களின் எதிரிகளை இழிவுபடுத்துவதற்குமேயாகும். நபீமார்களாயினும், வலீமார்களாயினும் அவர்களில் எவராலும் எதையும் சுயமாகச் செய்ய முடியாது. எதையும் சுயமாகச் செய்பவன் அல்லாஹ் மாத்திரமே. எவனாவது அல்லாஹ் எதையும் சுயமாகச் செய்வது போல் அவனின் படைப்புகளும் செய்கின்றன என்று நம்புவானாயின் அவன் வழிகெட்டவனாகி விட்டான். நேரான வழியில் இருந்து நீங்கி விட்டான்.

ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கை என்னவெனில் மனிதனால் எந்த ஒரு செயலையும் படைக்க முடியாது. எச் செயலைப் படைப்பதும் அல்லாஹ் ஒருவனேயாவான். அவன் தவிர வேறு எவராலும் எச் செயலையும் படைக்க முடியாது. படைக்க முடியாதென்றால் எவராலும் எச் செயலையும் செய்ய முடியாது என்பதாகும். واللهُ خَلَقَكُمْ وَمَاتَعْمَلُوْنَ அல்லாஹ்தான் உங்களையும், உங்களில் செயல்களையும் படைத்தான் என்பது அல்லாஹ்வின் திருவாக்கு.

எவராலும் எச் செயலும் செய்ய முடியாதென்றால் மணித்தவர்களாலும் செய்ய முடியாது உயிருள்ளவர்களாலும் செய்ய முடியாதென்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

மரணித்தவர்களால்தான் எதையும் செய்ய முடியாதென்றும், உயிருள்ளவர்களால் எதையும் செய்ய முடியும் என்று வஹ்ஹாபிகள் நம்புகிறார்கள். அவர்களின் இந் நம்பிக்கை திருக்குர்ஆனுக்கு முரணானதாகும்.

திருக்குர்ஆனின் தீர்ப்பு என்னவெனில்செயல்களுக்குரியவன் – எதார்த்தத்தில் செய்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை. இதன் படி மரணித்தவர்களாலும் எதையும் சுயமாகச் செய்ய முடியாது. உயிருள்ளவர்களாலும் எதையும் சுயமாகச் செய்ய முடியாது.

மரணித்தவர்களால் மட்டுமே எதையும் செய்ய முடியாது, உயிருள்ளவர்களால் எதையும் செய்ய முடியுமென்று உயிருள்ள சிருஷ்டிகளுக்கு செயலைத் தரிபடுத்துவது, அதாவது உயிருள்ளவர்களால் செய்ய முடியுமென்று சொல்வது வஹ்ஹாபிகளின் கொள்கையாயிருப்பதினால் தான் உயிருள்ளவர்களிடம் உதவி தேடலாமென்றும், மரணித்தவர்களிடம் உதவி தேடக் கூடாதென்றும் அவர்கள் கூச்சலிடுகிறார்கள். இவர்களின் இக் கூற்று நான்கு மூலாதாரங்களில் மிகப் பிரதான மூலாதாரனமான திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முரணானதாகும்.

ஏனெனில் “ஸுன்னத்வல் ஜமாஅத்” கொள்கை என்னவெனில் எச் செயலாயினும் அதற்குரியவன் அதாவது அச் செயலைச் சுயமாக செய்பவன் அல்லாஹ் மட்டுமே ஆவான். ஒரு துரும்பை தூக்குவது போன்ற சிறிய வேலையாயினும், ஒரு மலையை தூக்குவது போன்ற பெரிய வேலையாயினும் அதைச் சுயமாகச் செய்பவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. لافاعِلَ إلّاالله “லாபாஇல இல்லல்லாஹ்” செய்பவன் அல்லாஹ் தவிர வேறுயாருமில்லை. சிருஷ்டிகளில் எவருக்கும் எச் செயலுமில்லை. இதுவே “ஸுன்னத்வல் ஜமாஅத்” கொள்கையாகும்.

“அகீதா” கொள்கை விளக்கம் தெரியாத பாமரர்கள், ஒரு நாட்டை தலை கீழாய் புரட்டுதல் போன்ற பெரிய செயல் அல்லாஹ்வுக்குரியதென்றும், ஒரு நுளம்பை அடித்துக் கொல்வது போன்ற சிறிய செயல் படைப்புக்குரியதென்றும் நம்புகிறார்கள். இது தவறு. தவறுமட்டுமல்ல இவ்வாறு நம்புதல் மத மாற்றத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையுமாகும்.

ஒருவன், நான் செய்தேன் என்று தான் செய்த செயலை தன்னுடன் சேர்த்துக் கொள்வதும், தனது நண்பனால் வெளியான செயலை அவனுடன் சேர்த்து அவன் செய்தான் என்று சொல்வதும், மனைவியால் வெளியான செயலை அவளுடன் சேர்த்து அவள் செய்தாள் என்று சொல்வதும் இவ்வுலக நடைமுறையை கருத்திற் கொண்டேயாகும். இந்த நடைமுறை பேணப்படாமல் உலகில் வாழ முடியாது. இதற்கு மாறாக ஒருவன் ஒரு செயலை செய்துவிட்டு அல்லாஹ் செய்தான் என்று சொல்வதும் அப்துல்லாஹ் ஒரு வேலையை செய்தால் அல்லாஹ் செய்தான் என்று சொல்லதும் உலக நடை முறைக்கு பிழையானதாகும். அதுமட்டுமல்ல. இவ்வாறு சொல்லிக் கொண்டு வாழவும் முடியாது. எனினும் இவ்வாறு சொல்லாமல் நான் செய்தேன், அவன் செய்தான், அவள் செய்தாள் என்று சொல்வது பொய்யாக – எதார்த்தத்துக்கு முரணாக இருந்தாலும் கூட இது தண்டனைக்குரிய பொய்யாகாது. இதற்கு புத்தியோடும், மார்க்கத்தோடும் தொடர்புள்ள விளக்கம் உண்டு.

தொடரும்…….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments