Thursday, March 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வஹ்ததுல் வுஜூத் (உள்ளமை ஒன்று) எனும்கொள்கை வழிகேடல்ல. அதுவே ஸூபி தரீக்காக்கள் கூறும்...

வஹ்ததுல் வுஜூத் (உள்ளமை ஒன்று) எனும்கொள்கை வழிகேடல்ல. அதுவே ஸூபி தரீக்காக்கள் கூறும் சரியான ஈமான் – நம்பிக்கை.

தொகுப்பு : சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) அவர்கள்

அல்லாஹுதஆலா தனது தாத் – உள்ளமையைக் கொண்டும், ஸிபாத் – தன்மைகளைக் கொண்டும், அஸ்மாஉ – திருநாமங்களைக் கொண்டும் சிருஷ்டிகளாக வெளியாகியிருக்கின்றான். படைப்புக்களாகத் தோற்றுவது அவன்தான். அவனைத் தவிர வேறில்லை. அவன் மாத்திரமே இருக்கின்றான். அவனுடைய தாத் – அழியாமலும், மாறுபடாமலும், விகாரப்படாமலும் அவன் எவ்வாறிருந்தானோ அவ்வாறேயிருக்கும் நிலையில் பிரபஞ்சமாக, படைப்புக்களாக அவனே தஜல்லீ – வெளியாகியுள்ளான். அவனது வெளிப்பாடான பிரபஞ்சம், படைப்பு அவனை விட்டும் பிரிந்ததுமல்ல, அவனுக்கு வேறானதுமல்ல, அவன் தானானதுதான் என்பதே “வஹ்ததுல் வுஜூத்” – உள்ளமை ஒன்று, மெய்ப் பொருள் ஒன்று எனும் தௌஹீத் ஆகும். இதுவே அத்தஜல்லிய்யாதுல் இலாஹிய்யஹ் (இறை வெளிப்பாடுகள்) என ஸூபி ஞானிகளால் குறிப்பிடப்படுகின்றது.

வஹ்ததுல் வுஜூத் கொள்கையை வழிகெட்ட ( வஹ்ததுல் வுஜூத்) அத்வைதம் என குறிப்பிடுவோர் நேர்வழியான ( வஹ்தத்துல் வுஜூத்) அத்வைதம் எது என்பதை தெளிவுபடுத்தவேண்டும். அல்லது வஹ்ததுல் வுஜூத் என்பதே வழிகேடுதான் அதில் நேர்வழி கிடையாது என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

ஆயினும் சென்ற காலங்களில் “வஹ்ததுல் வுஜூத்” என்ற பெயரைக் கேட்டாலே தலை தெறிக்க ஓட்டம் பிடித்தவர்களும், “பத்வா”க்களுக்குப் பயந்து பதுங்கியிருந்தவர்களும் இப்போது வஹ்ததுல் வுஜூதுக்கு பிழையான விளக்கங்களை சொல்லிக் கொண்டு தம்மை தரீக்காவாதிகளாகவும், ஸூபீகளின் வாரிசுகளாகவும் காட்சிப்படுத்த முன்வந்துள்ளார்கள். இவர்கள் வஹ்ததுல் வுஜூதை பிழையாக விளங்கிக் கொண்டு அல்லாஹ் தனது தாத் – உள்ளமையைக் கொண்டு சிருஷ்டிகளாக வெளியாகவில்லை, அவன் தனது பண்புகளை (சக்தியை) சிருஷ்டிகளில் பிரதிபலிக்கச் செய்கின்றான் என்று நம்புவதே சரியான வஹ்ததுல் வுஜூத் என்று உண்மைக்கு மாற்றமான கருத்துக்களைக் கூறுகின்றனர். வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று, மெய்ப் பொருள் ஒன்று அது இரண்டுமல்ல, பலதுமல்ல என்ற கோட்பாட்டிற்கு இவர்கள் கூறிவரும் மேற்கண்ட வியாக்கியானம் முற்றிலும் தவறானதும், வஹ்ததுல் வுஜூதின் அடிப்படையையே தகர்த்தெறியக் கூடியதுமாகும். இவர்கள் அல்லாஹ்வுக்கு வுஜூத் – உள்ளமை இருப்பதுபோல் படைப்புகளுக்கும் வுஜூத் – உள்ளமை இருக்கின்றது என்று நம்புகின்றனர். இது ஷிர்க் – இணையாகும்.

உள்ளமை ஒன்றுதான். அது அல்லாஹ் மாத்திரம்தான். சிருஷ்டி என்பது சுயமான உள்ளமையற்றது. அது அல்லாஹ்வின் உள்ளமையைக் கொண்டே நிலை பெற்றுள்ளது. நீர்க்குமிழி நீரின் உள்ளமையைக் கொண்டு நிலை பெற்றிருப்பது போலவும், ஐஸ் கட்டி நீரின் உள்ளமையைக் கொண்டு நிலை பெற்றிருப்பது போலவும் சிருஷ்டிகள் அல்லாஹ்வின் உள்ளமையைக் கொண்டு நிலை பெற்றுள்ளன. இங்கு இரண்டு உள்ளமைகள் இல்லை. இருப்பது ஒரு உள்ளமை மாத்திரமே. நீர்க்குமிழி என்று தனியான ஒரு உள்ளமையும், நீர் என்று தனியான ஒரு உள்ளமையும் இல்லை. ஐஸ்கட்டி என்று தனியான ஒரு உள்ளமையும், நீர் என்று தனியான உள்ளமையும் இல்லை. இருப்பது நீர் மாத்திரமே. அதுபோல சிருஷ்டி என்று தனியான ஒரு உள்ளமையும், அல்லாஹ் என்று தனியான உள்ளமையும் இல்லை. இருப்பது அல்லாஹ் என்ற உள்ளமை மாத்திரமே. அல்லாஹ் மாத்திரமே.

அல்லாஹ் தனது உள்ளமையைக் கொண்டு சிருஷ்டிகளை விட்டும் பிரிந்த நிலையில் தனியாக இருந்து கொண்டு சிருஷ்டிகளின் உள்ளமையில் தனது பண்புகளை – சக்தியை பிரதிபலிக்கச் செய்கின்றான் என்ற நம்பிக்கை, அல்லாஹ்வுக்கு இணையாக சிருஷ்டிகளுக்கும் உள்ளமை இருக்கின்றது, சுயமான இருப்பு இருக்கின்றது என்ற ஷிர்க்கான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இது தவறான நம்பிக்கையாகும்.

அல்லாஹ் ‘தாத்’தைக் கொண்டு சிருஷ்டிகளாக வெளியாகியுள்ளான்.

அல்லாஹ்வின் “தாத்” என்பதும், “வுஜூத்” என்பதும் அவனது உள்ளமையையே குறிக்கின்றது என்பது யதார்த்தவாதிகளின் கருத்து. எனவே, அல்லாஹ்வின் “தாத்” அல்லது வுஜூத் மட்டுமே இருக்கின்றது. வஹ்ததுல் வுஜூத் கொள்கையை போதித்த ஸூபீகள், அல்லாஹ் தனது தாத் – உள்ளமையைக் கொண்டும் தனது ஸிபாத் – பண்புகளைக் கொண்டும் தனது அஸ்மாஉ – திரு நாமங்களைக் கொண்டும் சிருஷ்டிகளாக வெளியாகி இருக்கின்றான் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
(البقرة – 115)

கிழக்கும், மேற்கும் (ஒளிர்ந்த பிரதேசமும், இருண்ட பிரதேசமும்) அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் “வஜ்ஹ்” இருக்கின்றது. என்ற திருமறை வசனத்துக்கு விரிவுரை எழுதிய அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் அல் குர்ஆன் விரிவுரை பக்கம் 55ல் “நீங்கள் வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும் எங்கு நோக்கினாலும் அங்கே சகல பண்புகளைக் கொண்டும் வெளியான அல்லாஹ்வின் தாத் – உள்ளமை இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதே கருத்தை கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் தங்களின் “தப்ஸீருல் ஜீலானீ” பக்கம் 147 லும், அல்லாமஹ் இஸ்மாயீல் ஹக்கீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் தப்ஸீரு றூஹில் பயான் என்ற அல்குர்ஆன் விரிவுரையில் பாகம் 01, பக்கம் 212 லும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நாம் எங்கு நோக்கினாலும் படைப்புக்களையே பார்க்கின்றோம். ஆனால் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ் இருப்பதாக, அவனது தாத் – உள்ளமை இருப்பதாக அல் குர்ஆன் கூறுகிறது. எங்கு நோக்கினாலும் அல்லாஹ்வின் ஸிபாத் – பண்புகள் மட்டும் பிரதிபலிப்பதாக அல் குர்ஆன் கூறவில்லை என்பதை இங்கு நாம் சிந்தனையுடன் நோக்க வேண்டும்.

அல்லாஹ் தனது தாத் – உள்ளமையைக் கொண்டு சிருஷ்டிகளாக வெளியாகி உள்ளான் என்ற கருத்தையே மேலே குறிப்பிட்ட திருமறை வசனம் தெளிவுபடுத்துகிறது. அல்லாஹ்வின் தாத்தை – உள்ளமையை விட்டும் அவனுடைய பண்புகளை வேறாக பிரிக்கமுடியாது என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புதூஹாதுல் மக்கிய்யஹ் எனும் நூலில்…

فسبحان من أظهر الأشياء وهو عينها
வஸ்த்துக்களின் மூலப் பொருளாக இருந்து அவற்றை வெளியாக்கியவன் துய்யவன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இங்கு வஸ்த்துக்களின் (عين) மூலப் பொருளாக அவன் (அல்லாஹ்) இருக்கின்றான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (இது ஞானிகளிடத்தில் عينية என்று சொல்லப்படுகின்றது) மாறாக வஸ்த்துக்களில் அவனது பண்புகள் பிரதிபலிக்கின்றன என்று அவர்கள் குறிப்பிடவில்லை. தொடர்ந்து ஷெய்குல் அக்பர் நாயகம் அவர்கள்

فإنّ الفقير الإلهي يرى الحق عينَ كلّ شيئ
இறைஞானி ஹக்கை (அல்லாஹ்வை) சகல வஸ்த்துக்களினதும் மூலப் பொருளாக காண்பான் என்றும்,

وهو معكم اينما كنتم
நீங்கள் எங்கிருந்த போதும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான் என்ற திருமறை வசனம் ஹக்கு (அல்லாஹ்) எங்களுடன் அவனுடைய தாத் – உள்ளமையைக் கொண்டிருக்கின்றான் என்பதை தெளிவாக்குகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் அல் யவாகீத் வல் ஜவாஹிர் என்ற நூலின் பாகம் 01, பக்கம் 60, 61ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாமஹ் கஸ்னவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அகாயிதுன் நஸபீ” என்ற நூலின் விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “அல்லாஹ் தனது அறிவைக் கொண்டும் தனது சக்தியைக் கொண்டும் தனது நிர்வாகத்தைக் கொண்டும் எல்லா இடங்களிலும் இருக்கின்றான். அவனது தாத் – உள்ளமையைக் கொண்டு எல்லா இடங்களிலும் இருக்கவில்லை என்ற முஃதஸிலாக்களினதும் புஹாறாவைச் சேர்ந்த பெரும்பாலானவர்களினதும் கூற்று வீணானது என்று கூறியுள்ளார்கள்.

ஷெய்குல் இஸ்லாம் இப்னுல்லப்பான் றஹிமஹுல்லாஹ் அவர்கள்

ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون( الواقعة 85

“நாங்கள் அவனுக்கு (நோயாளிக்கு) உங்களை விட மிக நெருக்கமாக இருக்கின்றோம். எனினும் நீங்கள் பார்க்காமல் இருக்கின்றீர்கள்” என்ற அல்லாஹ்வின் பேச்சுக்கு பின்வருமாறு விளக்கம் சொல்லியுள்ளார்கள்.

“அல்லாஹ் தனது அடியானுக்கு எதார்த்தமாக நெருங்கியுள்ளான்” என்பதை இந்த வசனம் காட்டுகின்றது. அவன் இடத்தை விட்டும் தூயவன் என்பதால் தனது தாத் – உள்ளமைக்கு எப்படி தகுமோ அப்படி நெருங்கியுள்ளான்.

அல்லாஹ் தனது அடியானுக்கு தனது அறிவைக் கொண்டும், சக்தியைக் கொண்டும், நிர்வாகத்தைக் கொண்டும் மட்டுமே நெருங்கியுள்ளான். (தாத்தைக் கொண்டு நெருங்கவில்லை) என்றிருந்தால் “நீங்கள் (அவனை) அறியாமல் இருக்கின்றீர்கள்” என்று சொல்லியிருப்பான். நீங்கள் அவனைப் “பார்க்காமல் இருக்கின்றீர்கள்” என்று சொல்லியிருப்பதால் அல்லாஹ்வின் நெருக்கம் கண் பார்வையால் பார்க்கப்படும் எதார்த்தமான நெருக்கம் ஆகும். அல்லாஹ் கண் பார்வையை விட்டும் திரையை நீக்கினால் இது சாத்தியமாகும். தொடர்ந்து ஷெய்குல் இஸ்லாம் இப்னுல் லப்பான் றஹிமஹுல்லாஹ் அவர்கள்

ونحن أقرب إليه من حبل الوريد ق – 16
நாங்கள் அவனுக்கு அவனது பிடரி நரம்பை விட மிக நெருங்கியுள்ளோம் என்ற திருமறை வசனமும் நாம் மேலே சொன்னதையே நிரூபிக்கின்றது. தன்மைகளின் நெருக்கத்திற்கும், பிடரி நரம்பின் நெருக்கத்திற்கும் சம்பந்தமில்லை.

தன்மைகளின் நெருக்கம் கருத்து ரீதியானது (பௌதீகமற்றது) பிடரி நரம்பின் நெருக்கம் புலனுணர்வுக்கு உட்பட்டது (பௌதீகமானது). அல்லாஹ் பிடரி நரம்பை விட நெருங்கியுள்ளான் என்று கூறப்பட்டுள்ளதால் அவன் தனது தாத் உள்ளமையைக் கொண்டே நெருங்கியுள்ளான் என்று கூறியுள்ளார்கள். (அல் யவாகீத் வல் ஜவாஹிர் பகுதி முடிவுற்றது)

அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் அல் இன்ஸானுல் காமில் பக்கம் 38ல் “ஓர் அடியான் ஆன்மீக உயர் படித்தரத்தை அடையும் போது (கவ்னிய்யத்துடைய பதவியிலிருந்து குத்ஸிய்யத்துடைய பதவிக்கு உயர்ந்து செல்லும் போது) திரை நீங்கிவிட்டால் அல்லாஹ்வின் தாத் – உள்ளமை தான் அடியானுடைய உள்ளமை என்பதை அறிந்து கொள்வான்” என்றும், அதே நூல் பக்கம் 41ல் படைப்புகளின் தோற்றத்தில் அல்லாஹ்வின் தாத்- உள்ளமைதான் வெளியாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் இஹ்யாஉ உலூமித்தீன் என்ற நூல் பாகம் 04 பக்கம் 328ல் “உள்ளமையில் அல்லாஹ்வின் தாத் – உள்ளமையையும், அவனது செயல்களையும் தவிர வேறில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் அத்துஹ்பதுல் முர்ஸலஹ் என்ற நூலில் “நிச்சயமாக ஹக்கு ஸுப்ஹான ஹுவ தஆலாதான் வுஜூத் உள்ளமை ஆகும். அந்த உள்ளமைக்கு கோலமில்லை, எல்லையில்லை, கட்டுப்பாடில்லை. அவ்வாறு இருப்பதுடன் அது (அந்த உள்ளமை) கோலத்திலும், எல்லையிலும் வெளியாகியுள்ளது. (இவ்வாறு வெளியாகிய காரணத்தினால்) கோலமின்மை, எல்லையின்மை ஆகிய தன்மைகளிலிருந்து அது (அந்த உள்ளமை) மாறுபடவில்லை. அது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கின்றது. வுஜுத் – உள்ளமை ஒன்றே ஆகும். உடைகள் பலதாகும். அந்த வுஜுத் – உள்ளமை சகல சிருஷ்டிகளுக்கும் எதார்த்தமாகவும், அந்தரங்கமாகவும் இருக்கின்றது. சகல படைப்புகளும் அணு உட்பட அந்த உள்ளமையை விட்டும் நீங்கியிருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலே நான் எடுத்துக் காட்டிய கருத்துக்களில் இமாம்களும், ஞானிகளும் அல்லாஹு தஆலா தனது தாத் – உள்ளமையைக் கொண்டு படைப்புக்களாக வெளியாகி உள்ளான் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்கள். இவர்களின் கருத்துக்களை சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் அல்லாஹு தஆலா தனது தாத் – உள்ளமையைக் கொண்டு படைப்புக்களாக வெளியாகவில்லை. அவன் தனது பண்புகளை மட்டும் படைப்புக்களில் பிரதிபலிக்கச் செய்கின்றான் என்று கூறுகின்றார்கள். இவர்கள் வஹ்ததுல் வுஜூத் கோட்பாட்டை சரியாகப் புரிந்து கொள்ளாமையே இதற்குக் காரணம்.

இவர்கள் மேலே குறிப்பிட்ட இமாம்களின் கருத்துக்களை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகள் என்று தங்களை அறிமுகம் செய்து கொள்பவர்களின் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை தொடர்பான நிலைப்பாடு இப்போது மாற்றமடைந்துள்ளது. சென்றகாலங்களில் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை இஸ்லாத்திற்கு மாற்றமானது அதைப் பேசக் கூடியவர்கள் “முர்தத்”கள் மதம் மாறியவர்கள் என்று குருட்டு “பத்வா” இந்த நாட்டில் தீவிரமாக அமுல்படுத்தப்பட்ட போது “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகளில் அதிகமானோர் மௌனிகளாகப் பதுங்கியிருந்தனர். “வஹ்ததுல் வுஜூத்” என்ற பெயரைக் கூட சொல்லப்பயந்தார்கள். இப்போது “பத்வா”வின் தீவிரம் குறைந்துள்ளதால் பதுங்கியிருந்தவர்கள் வெளியாகி வந்து பின்வரும் கருத்துக்களைக் கூறுகின்றனர்.

01. ‘வஹ்ததுல் வுஜூத்’ என்று ஒன்று இஸ்லாத்தில் உள்ளது. அதை எப்படி என்று விபரிக்க முடியாது.
02. ‘வஹ்ததுல் வுஜூத்’ கொள்கையை வலீமார்கள்தான் பேச வேண்டும். மற்றவர்கள் பேசக் கூடாது.
03. ‘வஹ்ததுல் வுஜூத்’ என்றால் அல்லாஹ் தனது பண்புகளை படைப்புக்களில் பிரதிபலிக்கச் செய்கின்றான் என்பதுதான்.
04. ‘வஹ்ததுல் வுஜூத்’ என்பது ‘எல்லாம் அவனே’ என்பதல்ல.

மேலுள்ள நான்கு கருத்துக்களையும் கூறுபவர்கள் ‘வஹ்ததுல் வுஜூத்’ என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான். அது இஸ்லாத்திற்கு விரோதமானதல்ல என்ற கருத்தை சமீப காலமாக ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க விடயம்தான். எனினும் ‘வஹ்ததுல் வுஜூத்’ கூறும் சரியான தத்துவத்தை இவர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

இன்றும் சிலர் வழிகெட்ட ( வஹ்ததுல் வுஜூத்) அத்வைதம் என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் நேர்வழியான ( வஹ்ததுல் வுஜூத்) அத்வைதம் எது என்பதை தெளிவுபடுத்தவேண்டும். அல்லது வஹ்ததுல் வுஜூத் என்பதே வழிகேடுதான் அதில் நேர்வழி கிடையாது என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

அல்லாஹ் தனது தாத்- உள்ளமையைக் கொண்டு படைப்புகளாக வெளியாகி இருக்கின்றான் என வஹ்ததுல் வுஜூத் (உள்ளமை ஒன்று) எனும் கொள்கை தொடர்பாக ஸூபிகளும், ஞானிகளும் சொல்லியுள்ள சில கருத்துக்களை கீழே தருகின்றேன்.

01. படைப்பு புத்தியால் அறியப்பட்டது, ஹக்கு (அல்லாஹ்) புலன்களால் அறியப்பட்டவன்.
நூல் : புஸூஸுல் ஹிகம், பக்கம் 108,
ஆசிரியர்: அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ்

02. உருவங்களில் வெளியாகி இருப்பது தாதுல் அலிய்யஹ் (ذات العليّة) அல்லாஹ்வின் தாத் – உள்ளமையாகும்.
நூல் : மிஃறாஜுத் தஷவ்வுக் இலா ஹகாஇகித் தஸவ்வுப்,
ஆசிரியர் – அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னுல் மஹ்தீ இப்னு அஜீபஹ் றஹிமஹுல்லாஹ்

03. வஸ்த்துக்களை உருவாக்கியவன் அவன்தான். அவற்றின் வுஜுத் – உள்ளமையும் அவன்தான். எல்லாவற்றினதும் தாத் – உள்ளமையின் மூலப் பொருள் அவன்தான்.
நூல் : அந் நாதிறாதுல் ஐனிய்யஹ்,பக்கம் : 91
ஆசிரியர்: அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ்

04. அறிந்து கொள்! வுஜூதில் – உள்ளமையில் அல்லாஹ்வையும் அவனது செயல்களையும் தவிர வேறில்லை. எல்லாம் அவனே
நூல் : கல்வத்தின் இரகசியங்கள்,பக்கம் : 02
ஆசிரியர்- அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஸித்தீகீ றஹிமஹுல்லாஹ்

05. அதற்கு மேலே வஹ்தது தாத்தி – எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மம் வெளியாகும்
நூல் : கல்வத்தின் இரகசியங்கள்,பக்கம் : 28
ஆசிரியர் : அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஸித்தீகீ றஹிமஹுல்லாஹ்

06. இந்த குத்புடைய ஆலம் உங்களுக்கு வெளியானதும்… எல்லாச் சிருஷ்டிகளிலும் வுஜூத் – உள்ளமை எப்படி ஊடுருவிப் பாய்ந்திருக்கின்றது என்பது உங்களுக்கு வெளியாகும்.
நூல் : கல்வத்தின் இரகசியங்கள்,பக்கம் : 23,24
ஆசிரியர்- அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஸித்தீகீ றஹிமஹுல்லாஹ்

07. உலகாதி சர்வ சிருஷ்டிகளின் சகல அணுக்களின் ஸூறத்துகளும் ஹக்கு தஆலாவின் தாத்தில் ஹக்கின் தாத்து தானாகவே இருக்கும்.
நூல் : அத்தகாஇகு,பக்கம் : 20,
ஆசிரியர்- அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஸித்தீகீ றஹிமஹுல்லாஹ்

08. எனினும் ஒவ்வொரு ஸூறத்தும் இந்த ஹகீகத்து முஹம்மதிய்யஹ்வின் மர்தபாவில் தாத்து தானாகவே இருந்தது.
நூல் : அத்தகாஇகு, பக்கம் 20,
ஆசிரியர்- அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஸித்தீகீ றஹிமஹுல்லாஹ்

09. இன்ஸான் காமில் என்பது அல்லாஹு தஆலாவின் தாத்திற்கும், அவனுடைய சம்பூரண இலட்சணங்கள் அத்தனைக்கும் மழ்ஹறாக – உதயஸ்தானம் – கண்ணாடியாக இருப்பவராகவும், அவரின் காட்சி, அல்லாஹ்வின் தாத்து ஸிபாத்துகளின் காட்சியாகவும் ஆகுமே அவராக இருக்கும்.
நூல்: அத்தகாஇகு,பக்கம்- 42,
ஆசிரியர்- அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஸித்தீகீ றஹிமஹுல்லாஹ்

10. அவர்களுடைய இருதயத்தையும், ஆன்மாவையும் சுத்தமாக்கியதனால் கண் காட்சியாகவும், அனுபவமாகவும் இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் சுயமான உள்ளமையுடைதல்ல என்றும், வுஜூது, மெய்ப்பொருளான ஹக்குதஆலாவின் வுஜூதுதான் இந்த உலகாதி தோற்றங்கள் உண்டாகுமிடமாகும். அதிலிருந்துதான் இவை உண்டான பொருளாக தோற்றமாகிறது என்றும் அறிந்து கொண்டு…
நூல் : அல் ஹக்கு,பக்கம்- 31,
ஆசிரியர்- அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஸித்தீகீ றஹிமஹுல்லாஹ்

11. அவன் சகல வஸ்த்துக்களுடனும் ஒன்றாக இருப்பது எப்படி என்றால் தண்ணீர் ஐஸுடன் இருப்பது போலும், தங்கம், மோதிரம், காப்பு, மற்றும் தங்க நகைகளுடன் தானாக இருப்பது போன்றாகும்.
நூல் அல் ஹக்கு, பக்கம் 48,
ஆசிரியர்- அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஸித்தீகீ றஹிமஹுல்லாஹ்

12. ஆரிபீன்கள், ஹகீகத்து (எதார்த்தம்) எனும் வானத்தளவில் ஏறிய பின்னர் உலகில் மெய்ப் பொருளான ஒரே நாயனைத் தவிர வேறொன்றுமில்லை என்று காணுவதில் அவர்கள் எல்லோரும் ஏகோபித்தவர்களேயாவர்.
நூல் : ஞான தீபம், பக்கம் – 35,
ஆசிரியர்- அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஸித்தீகீ றஹிமஹுல்லாஹ்

13. சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்வின் உள்ளமையைக் கொண்டே நிலை பெற்றுள்ளன. அவன் சிருஷ்டிதான். சிருஷ்டி அவன்தான்.
நூல்: ஹாஷியதுல் அரூஸீ, பாகம் – 24, பக்கம் – 02,
ஆசிரியர்- ஷெய்குல் இஸ்லாம் அஸ்ஸெய்யித் முஸ்தபா அல் அரூஸீ றஹிமஹுல்லாஹ்

14. அபூ ஸுலைமான் அத்தாறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள். ஈருலகிலும் உனது றப்பை மட்டும் நீ பார்க்கும் வரை உனது அமலில் நீ தூய்மையானவனாக ஆகமாட்டாய்.
நூல் – இல்முல் குலூப், பக்கம் – 157,
ஆசிரியர் – அபூதாலிப் அல் மக்கீ றஹிமஹுல்லாஹ்

15. அவனே வஸ்த்துக்களின் மூலப் பொருளாகும்….. சிருஷ்டிகள் என்ற பெயரில் அவனே இருக்கின்றான்….. உலகம் அவனுடைய உருவமாகும்.
நூல் – புஸூஸுல் ஹிகம், பக்கம் – 111,
ஆசிரியர் – அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ்

16. அல்லாஹ் மட்டுமே இருக்கின்றான். அல்லாஹ்வே உதவி தேடுபவனும், உதவி தேடப்பட்டவனுமாவான். தனது பண்புகளைக் கொண்டு தனது பெயர்களைத் தொட்டும் தனது செயல்களில் தனது தாத் – உள்ளமையைக் கொண்டும் ஊடுருவிப்பாய்ந்துள்ளான். அல்லாஹ்வைக் கொண்டே தவிர நன்மையான விடயத்தை செய்யும் சக்தியோ, பாவமான காரியத்திலிருந்து விலகும் சக்தியோ இல்லை….. வெளியானவைகள் அனைத்தினதும் மூலப் பொருள் அவன்தான்.
நூல் – றஸாஇல் இப்னு ஸப்ஈன், பக்கம் – 190,
ஆசிரியர் – இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ்

17. இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள். நாம் சிருஷ்டிகளில் யாரையும் காணவில்லை. உள்ளமையில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் உண்டா?
நூல் – ஈகாழுல் ஹிமம்,பக்கம் – 44,
ஆசிரியர் – இப்னு அஜீபஹ் றஹிமஹுல்லாஹ்
நூல் – லதாஇபுல் மினன், பக்கம் – 130,
ஆசிரியர் – தாஜுத்தீன் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ்

18. அல்லாஹ்வை உனக்கு மறைப்பது அவனுடன் இருக்கும் இன்னொரு உள்ளமை அல்ல. அவனுடன் எந்த வஸ்த்துவும் இல்லை. உனக்கு அவனை மறைப்பது அவனுடன் ஒரு உள்ளமை இருப்பதாக நீ நினைக்கும் பேதமைதான்.
நூல்- ஹிகமுல் அதாஇய்யஹ்,பக்கம் 21,
ஆசிரியர் – தாஜுத்தீன் இப்னு அதாஇல்லாஹ் அல் ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ்

19. உள்ளமையைப் பொறுத்து அவன் (அல்லாஹ்) படைப்புக்களின் மூலப் பொருள் (عين) ஆவான்
நூல் : புஸூஸுல் ஹிகம்,
ஆசிரியர் : அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ்

மஹ்பூபு மனோண் மணிக் கீதம் எனும் நூலில் அஷ்ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பாடியுள்ள விடயங்களைக் கீழே தருகின்றேன்.

20. ஆலத்தில் நிறைந்திடும் அஹதெனும் பொருளதை
அனுதினம் அகந்தனில் நினைத்திடுவீர்
கோலத்தில் அது நின்று குறிப்பாய் இலங்கிடும்
ஹூ என்பதை அன்றி வேறில்லையே
மஹ்பூபு மனோண் மணிக் கீதம் (பக்கம் 04)

(உலகத்தில் நிறைந்திருப்பது அஹத் எனும் பொருளான அல்லாஹ் தஆலா தான் என்று ஷெய்கு அவர்கள் இங்கு குறிப்பிட்டுள்ளார்கள். அல்லாஹ்வின் தன்மைகள், பண்புகள் மட்டும் நிறைந்துள்ளன என்று குறிப்பிடவில்லை.)

21. மண்ணது விண்ணாய் மறைகள் அனைத்துமாகி
அண்ணல் அஹ்மதுமானாய் ஆதியே நீயும்
அமாவெனும் மர்தபாவில் அறியாதிருப்பதுடன்
ஆலத்தில் கோலமுமானாய் அஹதே நீயும்
மஹ்பூபு மனோண் மணிக் கீதம் (பக்கம் 06)

(மண்ணாகவும், விண்ணாகவும், மறைகள் அனைத்துமாகவும், அஹ்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகவும் ஆனவன் நீதான் என்றும், உலகத்தில் கோலமாக, உருவமாக ஆனவன், அஹதான அல்லாஹ்வே நீதான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.)

அல்லாஹ்வின் தன்மைகள், பண்புகள் மட்டும் அனைத்துமாக ஆனது என்று ஷெய்கவர்கள் குறிப்பிடவில்லை.

22. அஹதிய்யத்தெனும் கடலே ஆதியுமாச்சு
அதிலெழுந்த அலைகளது ஆலமுமாச்சு
ஆலமுமாச்சு அதுவே கோலமுமாச்சு.
மஹ்பூபு மனோண் மணிக் கீதம் (பக்கம் – 07)

(கடல் அலையாக ஆகியதே தவிர கடலின் தன்மை மட்டும் (ஸிபத்) அலையாக ஆகியது என்பது அர்த்தமல்ல. கடல் அலையாக ஆகியது என்றால், கடல் தனது தாத் உள்ளமையைக் கொண்டும், தனது தன்மைகளைக் கொண்டும் அலையாகியது. அலை என்பது கடல்தான். கடலுக்கு வேறானதல்ல. இதுபோல் அஹதிய்யத் என்ற அல்லாஹ்வின் தாத் – உள்ளமை உலகமாகவும், உருவமாகவும் ஆகியது என்று ஷெய்கு அவர்கள் கூறியுள்ளார்கள்.)

தாத் – உள்ளமை பற்றிக் குறிப்பிடும் போது ஸிபத் – தன்மையை தனியாக குறிப்பிடா விட்டாலும் அது ஸிபத்தையும் உள்ளடக்கிக் கொள்ளும். ஏனெனில் தாத் – உள்ளமையை விட்டும் ஸிபத் – தன்மைகள் ஒரு போதும் பிரியாது. அதாவது தன்மைகள் அது எதில் தங்கி நிற்கிறதோ அதை விட்டும் பிரியாது.

الصفة لا تفارق الموصوف
மிளகாயை விட்டும் உறைப்பும், தேனை விட்டு இனிப்பும் தனியாகப் பிரியாதது போல அல்லாஹ்வின் தாத்தை விட்டும் அவனது தன்மைகள் பிரியாது. மிளகாய் வாங்கினேன் என்று ஒருவன் சொன்னால் அதன் பொருள் மிளகாயின் தன்மையான உறைப்பையும் சேர்த்து வாங்கினான் என்பதுதான்.

அதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. தேன் குடித்தேன் என்று ஒருவர் சொன்னால் அதன் பொருள் தேனின் பண்பான இனிப்பையும் சேர்த்துக் குடித்தான் என்பதுதான். அதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அதேபோன்று அல்லாஹ் தாத்தைக் கொண்டு வெளியானான் என்று ஸூபிகள் சொல்லும் போது அவன் தனது தாத்தைக் கொண்டும், பண்புகளைக் கொண்டும் வெளியானான் என்பதுதான் பொருள். அதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. அந்த அடிப்படையிலே மேலே சொல்லப்பட்ட பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

23. இல்லல்லாஹு என்று சொல்லி இணையதை தள்ளு
ஏக பராபரம்பொருளை எங்குமே கொள்ளு
எங்குமே கொள்ளு – அதில் தங்கியே நில்லு.
மஹ்பூபு மனோண் மணிக் கீதம் (பக்கம் – 07)

(ஏக பராபரம் பொருள் (அல்லாஹ்வின் தாத்தை) எங்குமே இருப்பதாக நம்பிக்கை கொள் என்று ஷெய்கு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.)

24. அய்னமாதுவல்லூ என்று ஆதி சொன்னதே
அது அனைத்தும் அவனே என்ற அற்புதமே
அற்புதமே நீயுமுணர்ந்திடுமிதே
மஹ்பூபு மனோண் மணிக் கீதம் (பக்கம் – 07)

(அனைத்துமே அவனே – அல்லாஹ்வே என்று ஷெய்கு நாயகம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அனைத்தும் அல்லாஹ்வின் பண்புகள் என்று குறிப்பிடவில்லை)

25. அஹதிய்யத் என்ற அடங்காப் பொருள் நீயே
வஹ்தத்து என்று தொகுப்போடு நின்றாயே
வாஹிதிய்யத்தென்று வகுப்புடனின்றாயே
ஆலம் அர்வாஹில் ஜோதியா நின்றாயே
ஆலம் மிதாலில் கோலமுமானாயே
ஆலம் அஜ்ஸாமில் அடங்கி மறைந்தாயே
ஆலம் இன்ஸானிலே ஜாமிவுமானாயே
சித்தர்கள் தேடிய திரவியமுனீயே
நித்திய ஆனந்த நேசனுமே நீயே
காதலித்தோர் காணும் காட்சிப் பொருள் நீயே
ஏழு வகை தோற்றத்தில் வாழும் பொருள் நீயே
மாளாமல் மாண்டோர்க்கு தோற்றும் பொருள் நீயே
மஹ்பூபு மனோண் மணிக் கீதம் (பக்கம் – 09)

(நீயே அல்லாஹ் ஏழு வகை மர்தபாக்களிலும் இருப்பவன். நீயே கோலமாய், காட்சிப் பொருளாய் , வாழும் பொருளாய் இருக்கின்றாய் என்று ஷெய்கு நாயகம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அல்லாஹ்வின் பண்புகள் கோலமாய், காட்சிப் பொருளாய், வாழும் பொருளாய் இருப்பதாகக் குறிப்பிடவில்லை)

26. கன்ஸுல் மக்பியில் தன்ஸீஹுமானோனே
கண்ட பொருளதில் நின்று நிறைந்தோனே
மஹ்பூபு மனோண் மணிக் கீதம் (பக்கம் – 13)

(காணும் பொருளில் நின்று நிறைந்தவன் அல்லாஹ் தான் என்று ஷெய்கு நாயகம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்)

27. எப்பொருளினும் தானாய் பற் பலதுமாய் தோன்றியே
ஒப்புவமையொன்றுத் தோன்றாத என் நேசனே
மஹ்பூபு மனோண் மணிக் கீதம் (பக்கம் – 19)

(எந்தப் பொருளிலும் தானாகவும், பற்பலதுமாகவும் தோன்றியவன் ஒப்புவமை இல்லாத அல்லாஹ் தான் என்று ஷெய்கு நாயகம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்)

28. என்னிலே தானிருந்தே இலங்குவதை அறியாமல்
தன்னிலை தான் மறந்தேன். என்னைத் தாவி அணைத்திடுவாய்.
கோலங்குறிப்பற்ற குன்ஹு தாத்தாயிருந்து
எல்லாக் கோலங் குறிப்புமானாய்.
மஹ்பூபு மனோண் மணிக் கீதம் (பக்கம் – 23)

(என்னிலே இறைவா நீ இருந்து இலங்குகின்றாய். குன்ஹு தாத்தான அல்லாஹ்வே நீ எல்லாக் கோலங்களாகவும், குறிப்புக்களாகவும் ஆனாய் என்று ஷெய்கு நாயகம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.)

29. ஹுவிய்யத்தென்ற குன்ஹிலிருந்து குறிப்புடன் வெளியானாய்
அகந்தனில் பிரகாசா என்னை ஆதரி நேசா
ஜகந்தனில் உன்னையன்றியே வேறு திரவியமுண்டோ நேசா.
மஹ்பூபு மனோண் மணிக் கீதம் (பக்கம் – 24)

(உலகில் உன்னைத் தவிர வேறு திரவியம் – பொருள் இருக்கின்றதா இறைவா என்று ஷெய்கு நாயகம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்)

மேலே குறிப்பிடப்பட்ட பாடல்கள் அனைத்திலும் அல்லாஹ் தனது தாத்தைக் கொண்டு படைப்புக்களாக வெளியாகி இருக்கின்றான் என்பதை அஷ்ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பாடியுள்ளார்கள்.)

அன்பார்ந்த சகோதரர்களே! ஞான வழி நண்பர்களே!

இதுவரை நான் எழுதிக்காட்டிய ஸுபிகள், ஷெய்குமார்கள், ஞானிகளின் கூற்றுக்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். நான் விரிவையஞ்சி இங்கு ஸூபிய்யாக்களின் நூல்களிலுள்ள கருத்துக்களில் ஒரு சிலதை மாத்திரமே எழுதியுள்ளேன். அவர்களின் நூற்கள் ஆழ்கடல்கள் போன்றவை. அவைகளில் பொதிந்துள்ள தத்துவங்களை ஒரு ஞான குருவின் வழிகாட்டுதலுடன் ஆராய்ந்து பாருங்கள். அல்லாஹுதஆலா மட்டுமே இருக்கின்றான். அவனைத்தவிர எதுவுமில்லை. அவனே தனது தாத் – உள்ளமையைக் கொண்டும், ஸிபாத் – தன்மைகளைக் கொண்டும், அஸ்மாஉ – திருப் பெயர்களைக் கொண்டும் சிருஷ்டிகளாக தஜல்லீ – வெளியாகி காட்சியளிக்கின்றான் என்ற உண்மையைப் புரிந்து கொள்வீர்கள். இதுவே தூய்மையான ஈமான்.

அல்லாஹ்வைப் பற்றிய அறிவு, ஞானம் அவன் நாடியவர்களுக்கே கிடைக்கும். யார் அந்த ஞானம் வழங்கப்படுகின்றாரோ அவர் அதிகமான நன்மைகள் வழங்கப்பட்டவராவார்.
அல்ஹம்துலில்லாஹ்.

முற்றும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments