Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“ஷஹீத்” சொல் பற்றி ஓர் ஆய்வு

“ஷஹீத்” சொல் பற்றி ஓர் ஆய்வு

(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)
இச் சொல் அறபுச் சொல். இதற்கு பல பொருள் இருந்தாலும் முஸ்லிம்களிடம் அறியப்பட்ட பொருள் “புனிதப் போரில் உயிர் துறந்தவர்” என்பதாகும். இச் சொல் இதே பொருளுக்கும், வேறு பொருளுக்கும் பாவிக்கப் படுகிறது. இதன் பன்மைச் சொல் “ஷுஹதாஉ” என்பதாகும்.

இச் சொல் அல்லாஹ்வின் அழகு மிகு திரு நாமங்களில் ஒன்றுமாகும். இச்சொல் அல்லாஹ்வின் திரு நாமமாக பாவிக்கப் படும் போது இதற்கு பன்மைச் சொல் வராது.

“ஷஹீத்” என்ற சொல்லுக்கு “புனிதப் போரில் மரணித்தவர்” என்ற பொருளைக் கருவாகக் கொண்டு இவருக்கான இஸ்லாமிய சட்டங்கள் பற்றி சுருக்கமாக ஆய்வு செய்வோம்.

புனிதப் போரில் மரணித்தவர்

புனிதப் போரில் மரணித்த ஒருவருக்கு சாதாரணமாக மரணித்த ஒருவரின் “ஜனாஸா”வுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இரண்டு கடமைகள் மட்டுமே செய்ய வேண்டும். அவை ஒன்று. “கபன்” செய்தல். துணியால் உடல் அனைத்தையும் சட்ட நூல்களில் கூறப்பட்டவாறு மறைத்தல். இரண்டு. அடக்கம் செய்தல். இவ்விரண்டும் கடமை. குளிப்பாட்டுதல், தொழுகை நடத்துதல் இரண்டும் கூடாது. இவர் இவ்வுலகிலும், மறுவுலகிலும் “ஷஹீத்” என்ற பெயருக் குரியவராவார்.
அதோடு شَهِيْدُ الدُّنْيَا وَالآخِرَة இம்மையிலும், மறுமையிலும் “ஷஹீத்” என்று அழைக்கப் படுவார்.

சாதாரணமாக மரணித்தவர், அதாவது சாதாரண நோயால், அல்லது முதுமையால் மரணித்தவர். எந்த வகையிலும் “ஷஹீத்” அல்ல. அவரின் “ஜனாஸா”வுக்கு பிரேதத்திற்கு நான்கு கடமைகள் செய்ய வேண்டும். குளிப்பாட்டுதல், “கபன்” செய்தல், தொழுகை நடத்துதல், அடக்கம் செய்தல் போன்று.

ஷஹீதுல் ஆகிறஹ்

இன்னொருவர் “ஷஹீதுல் ஆகிறஹ்” “மறுமையில் ஷஹீத்” என்றழைக்கப் படுவார். இவர் யாரெனில் நீரில் மூழ்கி, விபத்தில் சிக்கி, கட்டிடம் மரம் போன்றவை விழுந்து, கொலை செய்யப்பட்டு, (சுடப்பட்டு – வெட்டப்பட்டு – நஞ்சூட்டப்பட்டு) நெருப்பில் எரிந்து, பிரசவ வருத்தத்தில், வாந்தி பேதி நோயால், மற்றும் பயங்கர நோயால் மரணித்தவர்களாவர். பொதுவாக திடீர் மரணம் ஏற்பட்டவராவார். கொரோனா வைரசால் மரணிப்பவர்களும், மார்க்கக் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் மரணிப்பவரும் இவர்களில் சேர்ந்து விடுவார்கள். இவர்கள் அனைவரும் “ஷஹீதுல் ஆகிறஹ்” மட்டும் தான்.

இவர்களின் “ஜனாஸா”வுக்கு வழமையில் “ஜனாஸா”வுக்குச் செய்யப்படுகின்ற நான்கு கடமைகளும் செய்வது கடமையாகும். (குளிப்பாட்டுதல், “கபன்” செய்தல், தொழுகை நடத்துதல், நல்லடக்கம் செய்தல்)

புனிதப் போரில் மரணித்தவர்கள் பதவியில் உயர்ந்தவர்கள்: அதையடுத்து திடீரென்று மரணித்தவர்கள்: அதையடுத்து சாதாரணமாக மரணித்தவர்கள். “ஜனாஸா”வுக்கு செய்யப்படும் நான்கு கடமைகளில் புனிதப் போரில் மரணித்தவர்களுக்கு இரண்டு கடமைகள் மட்டும் செய்ய வேண்டும். மற்ற இரண்டு கடமைகளும் செய்வது தடை. அதாவது “ஹறாம்” தண்டனைக் குரிய குற்றமாகும்.

தொற்று நோய் உண்டா? இல்லையா? என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாயிருந்தாலும் மருத்துவர்கள் தொற்று நோயென்று சொல்கின்ற நோயால் மரணித்தவர் “ஷஹீதுல் ஆகிறஹ்” மட்டும்தான். இவர் புனிதப் போரில் மரணித்தவர் போன்றவரல்ல.

திடீர் மரணமெய்தியவர் மறுமையில் “ஷஹீத்” என்றால் அவர் சாதாரணமாக மரணித்தவர் போனறவரல்ல. அவருக்கு மறுமையில் உயர் பதவிகள் உண்டு.

இது தொடர்பான விரிவான விபரங்கள் உண்டு. கால சூழ்நிலையை கருத்திற் கொண்டு அவற்றை எழுதவில்லை.

எவர் எவ்வாறு மரணித்தாலும் அவரை நல்லடக்கம்தான் செய்ய வேண்டும். நெருப்பால் எரிப்பதோ, மின்சாரத்தால் சுடுவதோ, எரிப்பதோ கூடாது. பெரு வெள்ளம் காரணமாக எந்த வகையிலும் பூமியில் அடக்க முடியாத ஒரு கட்டத்தில் பிரேதத்தை ஒரு பெட்டியில் வைத்து வெள்ளத்தில் விடலாம். இது தவிர எரிப்பது கூடாது.

கொரோனாவால் மரணித்த நீர்கொழும்பைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் எரிக்கப் பட்டிருந்தால் அதை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இதன் பிறகு அவ்வாறு நடக்காமல் வழி செய்ய வேண்டும். இதுவே இஸ்லாம். اَلدِّيْنُ النَّصِيْحَةُ “மார்க்கமென்பது நல்வழி காட்டுதல்தான்” இது நபீ மொழி.

எனினும் மாற்றுக் கட்சியிலுள்ள சிலர் இதை “ஷிர்க்” இணைவைத்தலான காரியம் போல் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒரு புரளியை ஏற்படுத்துவது உகந்ததல்ல. அரசாங்கம் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து எரித்தோ தீருவோம் என்று அடம் பிடித்தால் அதை நீதிக்கு முன் நிறுத்தி முடிவு செய்யலாம்.

( إنّما الأعمال بالنّيات செயல்கள் யாவும் எண்ணங்களுக் கேற்பவே)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments