Thursday, April 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்வஸீலாத் தேடலாமா? --

வஸீலாத் தேடலாமா? —

(தொடர் 08……)

உலகில் யாரால் அல்லது எந்த வஸ்துவால் என்ன செயல் வெளியானாலும் அச்செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.

கத்தி வெட்டியது. நெருப்பு சுட்டது என்பதெல்லாம் மஜாஸ் அக்லீ என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.ஏனெனில் சுடுதல் என்ற செயலும் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் நெருப்புக்கும், கத்திக்கும் உரியதல்ல. நெருப்பு சுயமாகச் சுடுவதுமில்லை. கத்தி சுயமாக வெட்டுமதுமில்லை.

நெருப்புச் சுயமாகச் சுடும் என்று சொல்வதும் கத்தி சுயமாக வெட்டும் என்று சொல்வதும் அறியாமையாகும். நெருப்பு சுயமாக சுடுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் (அலை) அவர்களைச் சுட்டிருக்க வேண்டும்.
கத்தி சுயமாக வெட்டுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் தங்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்த நேரத்தில் அந்தக் கத்தி அவர்களை வெட்டியிருக்க வேண்டும். எனவே, நெருப்பு சுயமாகச் சுடுவதுமில்லை என்பதும் கத்தி சுயமாக வெட்டுவதுமில்லை என்பதும் விளங்கி விட்டது.

மேலே நான் எழுதிக் காட்டிய உதாரணங்களில் “ஷபல்லாஹுல் மறழ” (அல்லாஹ் நோயைச் சுகப்படுத்தினான்.) என்பதும் “அன்பதல்லாஹுல் பக்ல” (கீரையை அல்லாஹ் முளைக்கச் செய்தான்.) என்பதும் “ஹகீகத் அக்லீ” என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதாவது ஒரு செயலை அச்செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்வதாகும். இவ்விரு உதாரணங்களிலும் சுகமாக்குதல், முளைக்கச் செய்தல் என்ற இரு செயல்களும் அச்செயலுக்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

இதே போல் “ஷபத்தவாஉல் மறழ” (மருந்து நோயைச் சுகமாக்கி விட்டது) என்பதும் “அன்பதல் மதருல் பக்ல” (மழை கீரையை முளைக்கச் செய்து விட்டது.) என்பதும் “மஜாஸ் அக்லீ” என்ற வகையைச் சேர்ந்ததாகும்.அதாவது ஒரு செயலை அச்செயலுக்குரியவனின் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அது வெளியாவதற்கு வழியாக – பாத்திரமாக இருந்த ஒருவன் பக்கம் அல்லது ஒன்றின் பக்கம் சேர்த்துச் சொல்வதாகும்.

இவ்விரு உதாரணங்களிலும் சுகமாக்குதல், முளைக்கச் செய்தல் என்ற இரண்டு செயல்களும் அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கப்படாமல் அவ்விரு செயல்களும் வெளியாவதற்கு வழியாக – காரணமாக இருந்த மருந்தின் பக்கமும், மழையின் பக்கமும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

சுகப்படுத்துபவனும், முளைக்கச் செய்பவனும் அல்லாஹ்வாக இருந்தாலும் “மஜாஸ் அக்லீ“ என்ற முறைப்படி அவ்விரண்டு செயல்களும் வெளியாவதற்கு வழியாக இருப்பவர்கள் பக்கம் சேர்த்து மருந்து சுகப்படுத்தி விட்டதென்றும், மழை கீரயை முளைக்கச் செய்து விட்டதென்றும் தாராளமாகச் சொல்லலாம். இவ்வாறு சொல்லுதல் எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரணானதல்ல.

எனவே எந்தச் செயல் யாரால் அல்லது எந்த வஸ்துவால் வெளியானாலும் அச்செயல் அல்லாஹ்வின் செயலென்ற இஸ்லாமிய அடிப்படைத் தத்துவத்தின் படி நம்பினவன் மட்டும்தான் விசுவாசியாவான். இதற்கு மாறாக எந்தவொரு செயலேனும் சிருஷ்டிக்குரியதென்று நம்பினால் அதாவது சிருஷ்டிக்கு சுயமான செயலுண்டு என்று நம்பினால் அவ்வாறு நம்புகிறவன் “முஷ்ரிக்“ இணைவைத்தவனாகி விடுவான். ஏனெனில் சிருஷ்டிக்கு சுயமான செயலுண்டு என்று நம்புதலே ஷிர்க்கை ஏற்படுத்தி விடும்.

(முற்றிற்று)

==**==**==**==**==**==**==**==**==**==

(தொடர் 07…..)
இன்னுமோர் உதாரணத்தில் மூலம் இவ்விரு வகையையும் தெளிவு படுத்துகின்றேன். இவ்விரு வகையையும் விளங்கிக் கொள்வதற்கு மேலே நான் எழுதிக் காட்டிய உதாரணம் போதுமானதாயிருந்தாலும் “பிதிக்ரில் அம்திலதி தத்தலிஹுல் அஷ்யா” (உதாரணங்கள் கூறுவது கொண்டு விஷயங்கள் தெளிவாகும்) என்ற முதுமொழிக்கமைய இங்கு இன்னுமோர் உதாரணத்தை எழுதுகின்றேன்.

“அன்பதல்லாஹுல் பக்ல” (அல்லாஹ் கீரையை முளைக்கச் செய்தான்) என்பது போன்று. முளைக்கச் செய்தல் என்பது ஒரு செயல் இச்செயலுக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான். வேறுயாருக்கும் முளைக்கச் செய்ய முடியாது.
மேலே எழுதிக் காட்டிய உதாரணத்தில் முளைக்கச் செய்தல் என்னும் செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

இது “ஹகீகத் அக்லி” என்பதற்கு நான் கூறும் மற்றுமோர் உதாரணமாகும். இதே உதாரணத்தை “அன்பதல் மதறுதல் பக்ல” (மழை கீரையை முளைக்கச் செய்தது) என்று முளைக்கச் செய்தல் என்னும் செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்க்காமல் அதற்குக் காரணமாக, வழியாக இருந்த மழையின் பக்கம் சேர்த்துச் சொல்லலாம். இவ்வாறு சொல்லுதல் “மஜாஸ் அக்லி” எனப்படும்.

ஒரு செயலை அச்செயலுக்குரியவன் பக்கம் அல்லது அச்செயலுக்குரிய வஸ்துவின் பக்கம் சேர்த்துச் சொல்லும் “ஹகீகத் அக்லி” நடைமுறையும் ஒரு செயலை அச்செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அச்செயலுக்கு வழியாக இருந்தவன் பக்கம் அல்லது வழியாக இருந்த வஸ்துவின் பக்கம் சேர்த்துச் சொல்லும் “மஜாஸ் அக்லி” நடைமுறையும் திருக்குர்ஆனிலும் கையாளப்பட்டுள்ளன.

திருக்குர்னில் ஹகீகத் – மஜாஸ்

அல்லாஹ் திருக்குர்ஆனின் அநேக இடங்களில் மேலே சொல்லப்பட்ட இரண்டு முறைப்படியும் கூறியுள்ளான். “வஇதா மரிள்த்து பஹுவ யஷ்பீன்” (நான் நோயுற்றால் அவன் சுகப்படுத்துவான்)

திருக்குர்ஆன் – 26.80 

இத்திருவசனத்தில் இரண்டு அம்சங்களுள்ளன.

ஒன்று – நோய் கொடுத்தல்


இரண்டு – சுகம் கொடுத்தல்

இது நபீ இப்றாஹீம் (அலை) அவர்களின் பேச்சு, அவர்களுக்கு நோய் கொடுப்பதும். சுகம் கொடுப்பதும் இரண்டு செயல்களாகும். இவ்விரு செயல்களுக்கும் உரியவன் அல்லாஹ்வேயன்றி ​வேறு யாருமில்லை. எவருக்கும் நோய் கொடுக்கவும் முடியாது, சுகம் கொடுக்கவும் முடியாது.

எனினும் மேலே குறித்த ஒரு வசனம் நோய் கொடுத்தல் என்ற செயல் நபீ இப்றாஹீம் (அலை) அவர்களின் பக்கமும், அல்லாஹ்வின் பக்கமும் சேர்க்கப்பட்டு அருளப்பட்டுள்ளது.

“வஇதா மரிள்த்து” என்பது நான் நோயுற்றால் என்ற அர்த்தமும் “பஹுவ யஷ்பீன்” என்பது அவன் சுகம் தருவான் என்ற அர்த்தமும் உள்ளதாகும். “வஇதா மரிள்த்து” நான் நோயுற்றால் என்பது நோய் கொடுத்தல் என்ற செயல் இப்றாஹீம் (அலை) அவர்களின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதுதான் “மஜாஸ் அக்லீ” எனப்படும்.

“வஇதா மரிள்த்து” என்ற வசனம் “வஇதா அம்ரளன” (அவன் என்னை நோயாளியாக்கினால்) என்று வந்திருந்தால் இது “ஹகீகத் அக்லீ” ஆகிவிடும். இதிலிருந்து திருக்குர்ஆனில் “மஜாஸ் அக்லீ” கையாளப்பட்டிருப்பது தெளிவாகின்றது.

“பஹுவ யஷ்பீன்” அவன் சுகப்படுத்துவான் என்பது சுகப்படுத்துதல் என்ற செயல் அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.இது “ஹகீகத் அக்லீ” எனப்படும்.

“பஹுவ யஷ்பீன்” என்ற வசனம் “பத்தவாஉ யஷ்பீன்” (மருந்து என்னை சுகப்படுத்தும்) என வந்திருந்தால் இது “மஜாஸ் அக்லீ” ஆகிவிடும். எனவே, திருக்குர்ஆனில் ஒரு வசனத்திலேயே மேலே சொல்லப்பட்ட இரண்டு முறைகளும் கையாளப்பட்டிருப்பது தெளிவாக விளங்குகிறது.

அல்லாஹு யதவப்பல் அன்பஸஹீன மவ்திஹா (உயிரினம் ஆண்மக்கள் மரணிக்கும் பொழுது அல்லாஹ்தான் அவற்றை மரணிக்கச் செய்கின்றான் மரணிக்கச் செய்தல் எனும் செயல் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் வேருயாருக்குமில்லை. வேருயாரையும் மரணிக்கச் செய்யவும் முடியாது.

எனவே, மரணிக்கச் செய்தல் எனும் செயலுக்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் அச்செயலைச் சேர்த்து அல்லாஹ் மரணிக்கச் செய்வான் என்று அருளப்பட்டுள்ளது .இதுதான் ஹகீகத் அக்லீ எனப்படும்.

குல்யதவப்பாக்கும் மலகுல்மௌதில்லதீ வுக்கில பிகும் (உங்களைக் கொண்டு சாட்டப்பட்ட மலக் – அமரர் உங்களை மரணிக்கச் செய்வான். இத்திருவசனத்தில் மேலே சொன்ன வசனத்தில் சொல்லப்பட்டதற்கு மாறாக மரணிக்கச் செய்தல் எனும் செயல் அச்செயலுக்குப் பாத்திரமாக வழியாக இருந்த அமரரின் பக்கம் சேர்த்து மலக்குல்மௌத்து உங்களை மரணிக்கச் செய்வார் என்று அருளப்பட்டுள்ளது இதுதான் மஜாஸ் அக்லீ எனப்படும்.

இன்னும் இவை போன்ற வசனங்கள் மஜாஸ்அக்லீ முறைப்படி அருளப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு எழுதுகின்றேன்.

வஇதா துளியத் அலைஹிம் ஆயாதுஹு சாதாத்துஹும் ஈமான் (அவர்களிடம் அல்லாஹ்வின் திரு வசனம் ஓதப்பட்டால் அத்திருவசனங்கள் அவர்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்)

மனிதர்களிடம் திருக்குர்ஆனின் வசனங்கள் ஓதப்படும் இடத்து, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றவன் அல்லாஹ் ஒருவன்தான் ஏனெனில் நம்பிக்கையை ஏற்படுத்தும் அதிகப்படுத்தும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கேதான் உண்டு. எனினும் மேலே குறித்த வசனத்தில் திருவசனங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்துமென்று அல்லாஹ் கூறியுள்ளான்.

நம்பிக்கையை அதிகப்படுத்தும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டேயன்றி திருவசனங்களுக்கு இல்லை. எனினும் நம்பிக்கை அதிகப்படுத்துவதற்கு திருவசனங்கள் வழியாக – காரணமாக இருப்பதனால் அவ்வழியின் பக்கம் சேர்த்து “மஜாஸ் அக்லீ” முறைப்படி அல்லாஹ் கூறியுள்ளான்.

இன்னும் ஒரு வசனம் – “யவ்ம யஜ்அலுல் வில்தான ஷீபன்” (வாலிபர்களை நரையுடையவர்களாக அந்த நாள் ஆக்கும்)

திருக்குர்ஆன் – 73.17 

வாலிபர்களை நரையுடையவர்களாக ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமேயுண்டு. எனினும் இத்திரு வசனத்தில் வாலிபர்களை அந்த நாள் தான் நரையுடையவராக்கின்றது. என்று கூறியுள்ளான்.

வாலிபர்களை நரையுடையவர்களாக ஆக்குவதற்கு அந்நாள் வழியாக இருப்பதனால் “மஜாஸ் அக்லீ” முறைப்படி அல்லாஹ் கூறியுள்ளான்.

மேலும் ஒரு திருவசனம் – “வலாயகூத வயஊக வநஸ்றா, வகத் அலல்லூ கதீறா” (யகூத், யஊக், நஸ்று எனும் விக்கிரகங்கள் அநேகரை வழிகெடுத்து விட்டன.)

திருக்குர்ஆன் – 71.23.24 

நேர்வழி காட்டும் வல்லமையும், வழிகெடுக்கும் வல்லமையும் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளதாகும். எனினும் இத்திருவசனங்களின் விக்கிரகங்கள் வழிகெடுத்து விட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்.

வழிகெடுப்பவன் அல்லாஹ்வாக இருந்தாலும் அந்த விக்கிரகங்கள் வழிகெடுப்பதற்கு வழியாக இருப்பதனால் அவை பக்கம் சேர்த்து “மஜாஸ் அக்லீ” எனும் முறைப்படி அல்லாஹ் கூறியுள்ளான்.

மற்றுமொரு மறைவசனம் இதோ

– “யாஹாமானுப்னிலீ ஸர்ஹன்” (ஹாமானே எனக்கு ஒரு மாளிகை கட்டு)

திருக்குர்ஆன் – 40.36 

பிர்அவ்ன் என்பவன் ஹாமானை நோக்கி “எனக்கு ஒரு மாளிகை கட்டு” எனக் கூறினான். மாளி​கை கட்டுவது வேலையாட்களே தவிர ஹாமான் இல்லை. எனினும் ஹாமான் என்பவர் மாளிகை கட்டுவதற்கு ஒரு வழியாக இருப்பதால் அவரின் பக்கம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை சொல்லிவந்த விவரங்களிலிருந்து “மஜாஸ் அக்லீ” முறைப்படி பேசுவது திருக்குர்ஆனிலும் வந்துள்ளதென்பது தெளிவாகிவிட்டது. “ஹகீகத் அக்லீயும் மஜாஸ் அக்லீ”யும் என்ற தலைப்பில் இதுவரை நான் எழுதிவந்த விவரங்களிலிருந்து ஒரு செயலை அச்செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்வதும், அல்லது அச்செயல் வெளியாகுவதற்கு வழியாக இருந்தவனின் பக்கம் அல்லது ஒரு வஸ்துவின் பக்கம் சேர்த்துச் சொல்வதும் ஒரு மொழியிலுள்ள வழக்கம் என்பதும் இவ்வழக்கம் அறபு மொழியிலுள்ள திருக்குர்ஆனிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதென்பதும் தெளிவாகிறது.

உலகில் நிகழ்கின்ற செயல்கள் யாவும் யதார்த்தத்தில் அல்லாஹ்வின் செயலாக இருந்தாலும் அச்செயலெல்லாம் அவன் பக்கம் சேர்த்துப்பேசப்படுவதில்லை.

ஒரு சில செயல்கள் மட்டுமே அவன் பக்கம் சேர்த்துப் பேசப்படுகின்றன. எனினும் அநேக செயல்கள் அவை வெளி​யாவதற்கு வழியாக இருக்கின்றவர்கள் பக்கம் அல்லது வழியாக இருக்கின்ற வஸ்துவின் பக்கம்தான் சேர்த்துப் பேசப்படுகின்றன.

முஸம்மில் தொழுதான், முபாறக் சாப்பிட்டான், முனாஸ் திருடினான் என்றுதான் சொல்லப்படுமேயல்லாமல் அல்லாஹ் தொழுதான், அல்லாஹ் சாப்பிட்டான், அல்லாஹ் திருடினான் என்று யாரும் சொல்வதில்லை.

ஆயினும், சகல செயல்களுக்கும் உரியவன் அல்லாஹ்தான் என்ற கருத்துப்படியும் “லா பாயில இல்லல்லாஹ்” (செய்பவன் அல்லாஹ் தவிர வேறுயாருமில்லை) என்ற தத்துவத்தின் படியும் எச்செயல் யாரால் வெளியானாலும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ் வேயன்றி வேறுயாருமில்லை.

( தொடரும்………)
==**==**==**==**==**==**==**==

(தொடர் 06……)

நபிமொழி . 08

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர்கள் ஒரு பிரயாணம் செய்தார்கள். அப்பிரயாணத்தின் போது இருட்டாகிவிட்டது. இரவைக் கழிப்பதற்காக வழியில் இருந்த மலைக்குகையொன்றில் நுழைந்தார்கள். அவர்கள் உள்ளே போனபின் மலையுச்சியிலிருந்து விழுந்த கல் ஒன்று அவர்கள் தங்கியிருந்த குகையின் வாயலை அடைந்து விட்டது.

அக்கல் பெரிய கல்லாக இருந்த படியால் அவர்களால் அதை அகற்ற முடியாமல் போயிற்று. அதை அகற்றாமல் அவர்கள் வெளியேற வேறுவழியும் இல்லாமலிருந்தது.
குகைக்குள் மாட்டிக் கொண்ட மூவரும் சற்று நேரம் செய்வதறியாது யோசித்துக் கொண்டும், கவலையடைந்து கொண்டுமிருந்தனர்.

அவர்களிலொருவர் மற்ற இருவரிடம் நாம் இதிலிருந்து தப்ப முடியாது போலிருக்கிறது. இதற்து என்ன வழிசெய்யலாமென்று கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவர் நாம் இதிலிருந்து தப்புவதற்கு எந்த வழியுமே இல்லை. எனினும் நாம் நமது வாழ்க்கையில் செய்த அமல்களில் தூய்மையான அமல்களும் இருக்கும் அந்த வணக்கத்தைக் கொண்டு நாம் இப்பொழுது வஸீலாத் தேடிப்பார்ப்போம் என்று ஆலோசனை சொன்னார்.

அவர் கூறிய ஆலோசனையை மற்ற இருவரும் சரி கண்டதால் அவ்வாறே செய்வதென்று முடிவு செய்தார்கள்.

மூவரில் ஒருவர் “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த நோயால் பீடிக்கப்பட்ட பெற்றோர் இருந்தார்கள். நான் காலையில் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். வரும் பொழுது எனது பெற்றோர்களுக்கும், மனைவி மக்களுக்கும் இராச்சாப்பாட்டுக்காக பால் கொண்டு வருவேன். முதலில் எனது பெற்றோர்களுக்கே அதைக் கொடுப்பேன். அவர்கள் அருந்தி மிஞ்சுகின்ற பாலையே எனது மனைவி மக்களுக்கு கொடுப்பேன். பெற்றோரின் பசிதீராமல் எனது மனைவி மக்களுக்கு நான் கொடுத்ததேயில்லை.

ஒரு நாள் எனது தேவை காரணமாக காட்டில் நான் தாமதமாகியதால் குறித்த நேரத்திற்கு வீடு திரும்ப முடியாமல் போய்விட்டது. சிறிதுநேரம் கழித்து நான் வந்தபொழுது எனது பெற்றோர்கள் என்னை எதிர்பார்த்திருந்து விட்டு உறங்கிவிட்டார்கள். அவர்களை விழிப்பாக்கி அவர்களின் தூக்கத்தை கலைக்க விரும்பாத நான் விடியும்வரை பால் பாத்திரத்தை ஏந்தியவனாக நின்றுகொண்டிருந்தேன். எனது குழந்தைகளோ பசிக்கொடுமையினால் பால் கேட்டு எனது காலடியில் தவழ்ந்து திரிந்தார்கள். அவ்வாறிருந்தும் அவர்களுக்கு கொடுக்காமல் விடியும்வரை காத்திருந்து விடிந்த பிறகு எனது பெற்றோர்களுக்குக் கொடுத்து விட்டுத்தான் எனது பிள்ளைகளுக்குக்கொடுத்தேன்.

இறைவா! நான் இவ்வேலையை எனது பெற்றோர் மீது எனக்கிருந்த பாசத்தினாலும், அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டிய காரணத்தினாலுமேயன்றி யாரிடமும் எதையும் எதிர் பார்த்து நான் அங்கணம் செய்யவில்லை.

எனவே, நான் செய்த இவ்வேலை உன்னிடத்தில் தூய்மையானதாகவும், “இக்லாஸ்” கலப்பற்றதாயுமிருந்தால் இக்கல்லினால் எங்களுக்கேற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கிவைப்பாயாக என்று வேண்டினார்.

அப்பொழுது அக்கல் சற்று நகர்ந்தது. எனினும் அதன் வழியாக வெளியேற முடியாமலிருந்தது.

இரண்டாம் நபர்“இறைவா! எனது சாச்சாவுக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் எனக்கு மிக விருப்பமுள்ளவள். அவளுடன் நான் உடலுறவு கொள்ள விரும்பினேன். ஆயினும் அவள் அதற்கு இணங்கவில்லை. இவ்வாறு ஒரு வருடம் ஓடியது.

ஒரு நாள் அவள் என்னிடம் வந்த பொழுது உடலுறவுக்குச் சம்மதிக்கும் நிபந்தனையுடன் 120 தீனார் அவளுக்குக் கொடுத்தேன். அவளுடன் உடலுறவு கொள்ளத் தயாரான பொழுது அவள் என்னை நோக்கி நான் உனக்கு ஹறாமாக்கப்பட்டவள். என்னுடன் உடலுறவு கொள்ளாதே என்று சொன்னாள்.

உடனே நான் அவளை விட்டும் விலகிவிட்டேன். அவளிடம் கொடுத்த 120 தீனார்களையும் அவளிடம் இருந்து பெறவுமில்லை. “இறைவா! எனது இவ்வேலை உன்னிடத்தில் புனிமானதாகவும், “இக்லாஸ்” கலப்பில்லாததாயுமிருந்தால் இக்கல்லினால் ஏற்பட்டுள்ள கஷ்டத்தினை நீக்கி வைப்பாயாக” என்று வேண்டினார்.

அந்தக்கல் மீண்டும் சற்று நகர்ந்தது. எனினும் அவ்வழியால் வெளியேறமுடியாமல் இருந்தது.

மூன்றாமவர் “இறைவா! கூலிக்கு வேலை செய்பவர்கள் எனக்குத் தேவைப்பட்டனர். பல கூலியாட்களைக் கொண்டு வேலை வாங்கிவிட்டு அவர்களுக்குரிய கூலிகளையும் கொடுத்து விட்டேன்.

எனினும் அவர்களில் ஒரு கூலியாள் தனது கூலியை வாங்காமல் என்னிடம் விட்டுச் சென்று விட்டார். நான் அதை சும்மாபோட்டு வைக்காமல் எனது மூலதனமான ஆடு, மாடு, ஒட்டகம், அடிமை போன்றவற்றுடன் அதையும் சேர்த்துப் பெருக்கினேன். அவருடைய கூலி வியக்கத்தக்க அளவுக்கு பெருகிவிட்டது.

ஒரு நாள் அவர் என்னிடம் வந்து தான் விட்டுச் சென்ற கூலியை தருமாறு கேட்டார். இதோ நீகாணும் ஆடு, மாடு, ஒட்டகம், அடிமை போன்ற எல்லாமே உண்ணுடையதுதான் எடுத்துச் செல் என்றேன்.

அதற்கவர் என்னை கிண்டல் செய்யாதே என்றார். நான் கிண்டல் செய்ய வில்லை. நான் சொல்வது உண்மைதான் என்று சொன்னேன். அவர் மிக்க மகிழ்ச்சியுடன் அவை அனைத்தையும் எடுத்துச் சென்றார். இறைவா! என்னுடைய இந்த வேலை உன்னிடத்தில் புனிதமானதாயும் “இக்லாஸ்”கலப்பில்லாததாயுமிருந்தால் இக்கல்லினால் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கி வைப்பாயாக என்று வேண்டினார். அக்கல் முழுமையாக அகன்று மூவரும் வெளியேறினார்கள். என்று நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் :புஹாரி 
அறிவிப்பு :அப்துல்லாஹ்பின்உமர் (றழி) 

மேலே குறித்த ஹதீதின் மூலம் நல்லமல்களைக் கொண்டு வஸீலாத் தேடலாமென்பது தெளிவாகிவிட்டது. நல்லமல்களைக் கொண்டு வஸீலாத் தேடுதல் ஆகுமென்றால் அந்நல்லமல்கள் உருவாகும் நபர்களைக் கொண்டு வஸீலாத் தேடுதலும் தாராளமாக ஆகும்.

அறபு மொழியில் நல்லமல்களுக்கு “அஃமாலேஸாலிஹா”என்றும், அவ்வமல்கள் உருவாகும் நபர்களுக்கு “தவாதே பாளிலா”என்றும் சொல்லப்படும். மேலே குறித்த ஹதீதின் படி அமல்களைக் கொண்டு வஸீலாத் தேடுதல் ஆகுமென்பது தெளிவாகும்.

இதுவரை “அஃமால்”வணக்கங்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது பற்றிய ஆதாரங்களையும், விபரங்களையும் கண்டோம். இனி நபிமாரிடமும், அவ்லியாக்களிடமும் நேரடியாகக் கேட்பது பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.

நேரில் கேட்டல்

ஒரு நபியின் அல்லது ஒரு வலீயின் கப்றடிக்குச் சென்று அந்த நபீயின் அல்லது வலீயின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்காமல் அந்த நபீயிடம் அல்லது வலீயிடம் நேரடியாகக் கேட்பது பற்றி சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

இது கொள்கை விளக்கத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகவிருப்பதால் இஸ்லாமிய கொள்கையின் பக்கம் நாம் சற்று திரும்புவோம்.

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையாதெனில், படைத்தல், காத்தல், வளர்த்தல், உண்டாக்குதல், அழித்தல், நன்மை செய்தல், தீமைசெய்தல், நோய் கொடுத்தல், சுகம் கொடுத்தல், கொடுத்தல், எடுத்தல், உயிராக்குதல், மரணிக்கச் செய்தல் போன்ற செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும். இவற்றில் ஒன்று கூட வேறொருவருக்குச் சொந்தமானதாயிருக்க முடியாது.

நன்மையும், தீமையும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளதென நம்புதல்தான் ஈமான் விசுவாசமாகும். “ஈமான்” நம்பிக்கை ஆறு பர்ழுகளில் “வல்கத்ரிகைரிஹீ வஷர்ரிஹீ மினல்லாஹி தஆலா” (நன்மையும், தீமையும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளதென நம்புதலும் ஒன்றாகும்.)

நன்மையும், தீமையும் என்றால் சகல செயல்களும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளது. என்று நம்புதல் வேண்டும். அதாவது அனைத்தும் அவனின் செயலென்று நம்புதல் அவசியமாகும். “அல்லாஹ் சகல வஸ்துவையும் படைத்தான்”(திருக்குர்ஆன் 06:101)“உங்களையும், நீங்கள் செய்யக்கூடியவைகளையும் அல்லாஹ் தான் படைத்தான்”திருக்குர்ஆன் (37:96)

மேலே குறித்த திருவசனங்களும், சகல செயல்களையும் சகல வஸ்துக்களையும் அல்லாஹ்தான் படைத்தான் என்பதை உறுதியாகக் கூறுகின்றன. சகல செயல்களும் அல்லாஹ்வுக்கு சொந்தகமானவை. அல்லாஹ்வுக்குரியவை. அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை. என நம்புகின்றபொழுது வேறுயாருக்கும் எச்செயலும் கிடையாதென்றும் நம்புதல் வேண்டும். அவ்வாறு நம்புதல் இவ்வாறான நம்பிக்கையை அவசியமாக்கிவிடும்.

ஒரு விசுவாசியின் நம்பிக்கை இவ்வாறுதான் இருக்க வேண்டும். இவ்வாறு நம்புகின்றவன் மட்டும் தான் விசுவாசியாயுமிருப்பான். இதற்கு மாறாக நம்பியவன் விசுவாசியுமில்லை. அவ்வாறு நம்புதல் விசுவாசமுமில்லை. இந்த அடிப்படையின் படி யார் எதைச் செய்தாலும் அது அல்லாஹ்வின் செயலன்றி வேறுயாருடையதுமில்லை.

வேறுயாராலும் எதுவும் செய்யவும் முடியாது. உதாரணமாக முஸம்மில் என்பவன் தொழுதானென்றால் அவனால் உருவான தொழுகை என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் முஸம்மிலுக்குரியதல்ல. அதாவது அவனுடைய செயலல்ல.

முக்தார் என்பவன் சாப்பிட்டானென்றால் அவனால் உருவான சாப்பிடுதல் என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் உருவான சாப்பிடுதல் என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் அவனுக்குரியதல்ல.

முனாஸ் என்பவன் திருடினானென்றால் அவனால் உருவான திருடுதல் என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் அவனுக்குரியதல்ல. எனவே, தொழுதல், சாப்பிடுதல், திருடுதல் போன்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே மேலும் அவையனைத்தும் அவனின் செயல்களே!

இந்த விவரப்படி அதாவது செயல்களெல்லாம் அவனுடைதென்ற விவரப்படி எந்தவொரு செயலாயினும் அதைச் செய்பவன் அல்லாஹ் என்றுதான் நம்புதல் வேண்டும்.

சகல செயல்களும் அல்லாஹ்வின் செயல் என்ற முடிவின் படி அப்துல்லாஹ்வுக்கும் ஒரு செயலுமில்லை. ஆதமுக்கும் ஒரு செயலுமில்லை. ஹவ்வாவுக்கும் ஒரு செயலுமில்லை. ஹாஜராவுக்கும் ஒரு செயலும் கிடையாது. எனினும், அல்லாஹ்வின் செயல் எவர் மூலம் அல்லது எந்த வஸ்து மூலம் வெளியாகின்றதோ அச் செயலை அவர் செய்ததாகவும், அவ்வஸ்த்து செய்ததாகவும் உலக நடைமுறையில் சொல்லப்பட்டுவருகிறது.

​தொழுகை என்பது ஒரு மனிதனால் நடைபெருகின்ற ஒரு செயலாக இருந்தாலும் கூட அச் செயல் அவன் மூலம் அவன் வழியாக வெளியாவதைக் கொண்டு மட்டும் தான் அவன் தொழுதான் என்று கூறப்படுகின்றதேயல்லாமல் அச் செயலுக்கு உரியவன் இணைதுனையில்லாத அல்லாஹ் ஒருவனேயாவான் .தொழுதவனல்ல.

இதே போல் சாப்பிடுதல் என்பது ஒரு மனிதனால் நடைபெருகின்ற ஒரு செயலாக இருந்தாலும் கூட அச் செயல் அவன் மூலம் வெளியாவதைக் கொண்டு மட்டும் தான் அவன் சாப்பிட்டான் எனகூறப்படுகின்றதேயல்லாமல் அச்செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவனேயாவான். சாப்பிட்டவனல்ல.

இன்னுமிதேபோல் திருடுதல் என்பது ஒரு மனிதனால் நடைபெருகின்ற செயலாக இருந்தாலும் அச்செயல் அவன் மூலம் அவன் வழியாக வெளியாவதை கொண்டு மட்டும் தான் அவன் திருடினான் என்று கூறப்படுகிறதேயல்லாமல் அச் செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவனேயாவான். திருடினவனல்ல.

கீழே நான் எழுதப் போகின்ற விஷயத்தை விளங்கிக் கொண்டால் நான் இதுவரை கூறிவந்த விபரங்களை மிக எளிதாகப்புரிந்து கொள்ள முடியும். ஒரு செயலுக்குரியவன் ஒருவன் இருக்க அச் செயலை அதற்குரியவனின் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அது வெளியாவதற்குப் பாத்திரமாக வெளியாக இருந்தவன் பக்கம் சேர்த்துச் சொல்லுதல் உலக வழக்கமேயன்றி யதார்த்தமில்லை.

ஹகீகத் அக்லியும், மஜாஸ் அக்லியும்

ஹகீகத் அக்லீ என்றும், மஜாஸ் அக்லீ என்றும் இருவகையுண்டு. இவையிரண்டும் “இல்முல்மஆனீ” என்று சொல்லப்படுகின்ற யாப்பிலக்கணக்கலையில்தான் பேசப்பட்டுள்ளது.

இக் கலை படிக்ககாதவர்களுக்கு இப்பொழுது நான் சொல்லப் போகின்ற விஷயம் சுத்த சூனியமாகவே இருக்கும். அறிவும், சிந்தனையும் உள்ளவர்கள் மட்டுமாவது விளக்கிக் கொள்ள வேண்டும். என்பதற்காக இங்கு அதன் விபரங்களை சுருக்கமாக எழுதுகின்றேன்.

“ஹகீகத் அக்லி” என்றால் ஒருசெயலை அச் செயல் வெளியான பாத்திரத்தின் பக்கம் சேர்த்துக் கொள்ளாமல் அச்செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துக்சொல்வதாகும்.

உதாரணமாக –“ஷபல்லாஹுல் மறள” (அல்லாஹ் நோயை சுகப்படுத்தி விட்டான்) என்பது போன்று இது தான் ஹகீகத் அக்லி என்பதற்கு உதாரணமாகும்.

சுகப்படுத்துதல் என்பதுஒருசெயல் இச்செயலுக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான். இச்செயல்வேறு யாருக்குமில்லை.மேலே கூறிய உதாரணத்தில் சுகப்படுத்துதல் என்றசெலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்து சொல்லப்பட்டிருக்கிறதேயல்லாமல் அச்செ​யல் வெளியாவதற்கு பாத்திரமாக அல்லது வழியாக இருந்த மருந்தின் பக்கம் சேர்த்துச்சொல்லப்படவில்லை. இதுதான் “ஹகீகத் அக்லி”என்றுசொல்லப்படுகிறது.

“மஜாஸ் அக்லி” என்றால் ஒருசெயலை அச் செயலுக்குரியவன் பக்கம்சேர்க்காமல் அச்செ​யல் வெளியாவதற்கு பாத்திரமாக அல்லது வழியாக இருந்தவன் பக்கம் சேர்த்துக் சேர்த்துக்சொல்வதாகும்.

உதாரணமாக –“ஷபல்லாஹுல் மறள” (அல்லாஹ் நோயை சுகப்படுத்தி விட்டான்) எனும் உதாரணத்தில் “ஷபத்தவாஉல் மறள” (மருந்து நோயை சுகப்படுத்தி விட்டது) என்றுசொல்வதுபோன்று.

சுகப்படுத்துதல் என்பது ஒருசெயல் அதற்குரியவன் அல்லாஹ் மட்டும்தான். இச்செயலை அல்லாஹ்வின் பக்கம் சேர்க்காமல் சுகப்படுத்துதல் எனும் அல்லாஹ்வின் செயல் வெளியாவதற்கு வழியாக -பாத்திரமாக இருந்த மருந்தின் பக்கம்சேர்த்துக் சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் “மஜாஸ் அக்லி”என்றுசொல்லப்படும்

 ( தொடரும்………)

==**==**==**==**==**==**==**==**==**==

(தொடர் 05…..)
யார் பாடியிருந்தாலும் பாடலின் கருத்து திருக்குர்ஆனுக்கும் நபீ(ஸல்) அவர்களின் நிறை மொழிக்கும் மாற்றமில்லாதிருப்பதால் அந்தப் பாடலைப் பாடுவதில் எவ்விதக்குற்றமும் கிடையாது.

ஒரு அறபீ நபீ(ஸல்) அவர்களிடம் வந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பற்றி முறையிட்டார் அப்பொழுது நபீ(ஸல்) அவர்கள் “துஆ”ச் செய்தார்கள். அக்கனமே மேகம் திரண்டு வந்து பெருமழை பெய்யத் தொடங்கியது.

அப்பொழுது நபீ(ஸல்) அவர்கள் “அபூதாலிப்” உயிருடன் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். என்று கூறிவிட்டு அவரின் பாடலைப்பாட யாருண்டு? என்று வினவினார்கள்.
அங்கு வீற்றிருந்த வீரர் அலீ(றழி) அவர்கள் நாயகமே! அவரின் பாடலையா கேட்கின்றீர்கள். என்று கேட்டு விட்டு

“வஅப்யளு யுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹி திமாலுல் யதாமா இஸ்மதுன் லில் அறாமிலி” என்று பாடிக்காட்டினார்கள்.

இப்பாடலின் பொருள்:- “நபீ(ஸல்) அவர்கள் வென்மையானவர்கள். அவர்களின் பெருட்டைக் கொண்டு மழை தேடப்படும். அவர்கள் அனாதைகளுக்கு அன்பு காட்டி விதவைகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள்.”

அலீ(றழி) அவர்கள் இந்தப் பாடலைப் பாடியதும் நபீ(ஸல்) அவர்களின்முகம் மலர்ந்தது. அந்தப் பாடலை நபீ(ஸல்) அவர்க்ள மறுக்கவுமில்லை. “யுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹி” அவர்களின் பொருட்டினால் மழை தேடப்படும் என்ற வசனத்தை மறுக்கவுமில்லை.

ஆதாரம் ; புகாரி 

இது வரை கூறிய ஹதீதிலிருந்தும் வரலாறுகளிலிருந்தும் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது ஆகுமென்று விளங்குகின்றது. நபீ(ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டு வஸீலாத் தேடுவதை நபீ(ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது.

ஹஸ்ரத் சவாத் பின் காரிப்(றழி) அவர்கள் ஸகாபாக்களில் ஒருவர் நபீ(ஸல்) அவர்களைப் புகழ்ந்து நீண்ட பாடலொன்று பாடியுள்ளார்கள்.

நபியவர்களைப் புகழ்ந்து பாடிய பாடலை அவர்களுக்கு முன்னால் பாடிக்காட்ட விருந்த அந்தச் ஸகாபிக்கு ஒரு நாள் சந்தர்ப்பம் கிட்டுயது. நபீ(ஸல்) அவர்கள் முன்னிலையில் அவர் பாடிக்காட்டினார். நபீ(ஸல்) அவர்களும் அவர் பாடியதைக் கேட்டுக் கொண்டிருந்தார்களேயன்றி அதை ஆட்சேபிக்கவில்லை.

ஸஹாபி சவாத் பின் காரிப்(றழி) அவர்கள் தனது பாடலில் ஓரிடத்தில் “வஅன்னக அத்னல் முர்ஸலீன வஸீலதன்” என்றும் இன்னுமோரிடத்தில் “வகுன்லீ ஸபீஅன் யவ்ம லாதூ ஷபாஅத்தின்” என்றும் பாடியுள்ளார்கள்.

“வஅன்னக அத்னல் முர்ஸலீன வஸீலதன்” (நாயகமே! நீங்கள் றஸீல் மார்களில் வஸீலாவால் மிக நெருங்கியவர்கள்)

“வகுன்லீ ஸபீஅன் யவ்ம லாதூ ஷபாஅத்தின்” (மன்றாடுபவர்கள் இல்லாத நாளில் நீங்கள் எனக்கு மன்றாடக்கூடியவர்களாக இருந்து கொள்ளுங்கள்) என்பது இவ்விரு அடிகளினதும் பொருளாகும். இவ்விரு அடிகளும் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவதையும், அவர்களிடம் மன்றாடக் கேட்பதையும் வலியுறுத்துகின்றன.

இவ்விரு அடிகளும் தருகின்ற கருத்து பிழையானதாகவும், வஹ்ஹாபிகள் சொல்வது போல் “ஷிர்க்” இணைவைத்தலை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்திருந்தால் நிச்சயமாக நபீ(ஸல்) அவர்கள் அக்கணமே அதனைத் தடுத்திருப்பார்கள்.

ஆனால் அவ்வாறன்றி மகிழ்ச்சியுடன் நபீ(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியின் “கஸீதா” பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தது அவர்கள் அதனைச்சரிகண்டார்கள் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.

ஆதாரம் : அல் கபீர் 
ஆசிரியர் : இமாம் தபறானி (றஹ்) 

நபீ(ஸல்) அவர்களின் வபாத்துக்குப் பிறகு அவர்களின் மாமி முறையான சபிய்யா நாயகி (றழி) அவர்கள் ஒரு பாடலின் மூலம் நபீ(ஸல்) அவர்களைப் புகழ்ந்தார்கள்.

அந்தப் பாடலின் ஓர் இடத்தில். . . . . .

“அலா யாறஸூலல்லாஹி அந்த றஜாஉனா வகுந்த பினா பர்ரன் வலம்தகு ஜாபியா”

என்று பாடினார்கள். இதன் கருத்தாவது அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் எங்களின் ஆதரவும், ஆதாரமுமாவீர்கள். நீங்கள் எங்களை வெறுக்காமல் நன்றி உள்ளவராகவே இருந்தீர்கள்” என்பதாம்.

சபிய்யா நாயகியின் இந்தப் பாடலை ஸஹாபாக்களும் கேட்டார்கள். எனினும் எவரும் எவ்வித மறுப்பும் கூறவில்லை. குறிப்பாக “அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் தான் எங்களின் ஆதாரமும், ஆதரவுமாவீர்கள்” என்ற கருத்தைப் பற்றியும் ஸஹாபாக்கள் ஒன்றும் சொல்லவில்லை.

ஆதாரம் ; ஷவாஹிதுல் ஹக் 

இந்த வரலாறின் மூலமாகவும் வஸீலாவிவகாரம் தெளிவுபடுத்தப்படுகிறது. போலி வஹ்ஹாபிகளின் பொய் வாதம் நிராகரிக்கப்படுகிறது.

​மேலும் சில ஆதாரங்கள்

“இமாம் ஷாபி(றஹ்) அவர்கள் பக்தாத் நகரிலிருந்த காலத்தில் அங்குள்ள “அஃளமிய்யா” எனுமிடத்தில் சமாதி கொண்டிருக்கும் அபூ ஹனீபா(றஹ்) அவர்களின் கப்றடிக்குச் சென்று அவர்களுக்கு சலாமுரைத்து தங்களின் தேவைக்காக அவர்களைக் கொண்டு வஸீலாவும் தேடுவார்கள்” என அல்லாமா இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் தங்களின் “அல்கைறாத்துல் ஹிஸான் பீ மனாக்கிபில் இமாமி அபீஹனீபதன் நுஃமான்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மத்ஹபுடைய இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (றஹ்) அவர்கள் இமாம் ஷாபி(றஹ்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள். இதைக் கண்ட இமாம் அவர்களின் மகன் அப்துல்லாஹ் வியப்புற்று நின்றார். அவரை நோக்கி இமாமவர்கள் “மகனே! இமாம் ஷாபி(றஹ்) அவர்கள் மனிதர்களுக்குச் சூரியன் போன்றவர்களும், உடலுக்கு ஆரோக்கியம் போன்றவர்களுமாவர்” எனக் கூறினார்கள்.

மொரோக்கோ நாட்டு மக்கள் இமாம் மாலிக்(றஹ்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுகிறார்கள் என ஷாபி இமாமவர்களிடம் தெரிவிக்கப்பட்ட பொழுது இமாமவர்கள் எவ்வித மறுப்பும் கூறவில்லை.

யாருக்காவது அல்லாஹ்விடம் ஒரு தேவையிருந்து அதையவர் பெற்றுக்கௌ்ள விரும்பினால் இமாம் கஸ்ஸாலி(றஹ்) அவர்களைக் கொண்டு “வஸீலா” உதவி தேடவும், என்று ஷாதுலிய்யாஹ் தரீக்காவின் இஸ்தாபகர் “குத்புஸ்ஸமான்” அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலி (றஹ்) அவர்கள் அருளியுள்ளார்கள்.

“இமாம் ஷாபி (றஹ்) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் சந்ததிகளைக் கொண்டு வஸீலாத் தேடியுள்ளார்கள்” என்று அல்லாமா இப்னு ஹஜர் (றழி) அவர்கள் தங்களின் “அஸ்ஸவாயிகுல் முஹ்ரிகா லி அஹ்லிள் ளலாலி வஸ்ஸந்தகா” எனும் நூலில் குறித்துள்ளார்கள்.

ஸஹீஹான ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான “துர்முதி”யின் ஆசிரியர் அறிஞர் அல்லாமா அல் இமாம் அபூ ஈஸா அத்துர்முதீ (றஹ்) அவர்கள் ஒரு நாள் அல்லாஹ்தஆலாவை கனவில் கண்டபொழுது ஈமானை பாதுகாத்து அந்த ஈமானுடனேயே மரணிப்பதற்கு வழி என்னவென்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்தஆலா இமாம் துர்முதி(றஹ்) அவர்களுக்கு ஒரு துஆவை சொல்லிக் கொடுத்து அதை ஸூப்ஹூத் தொழுகைக்கு முன்னாலும், பின்னாலும் ஓதிவருமாறு கட்டளையிட்டான்.

இமாமவர்கள் தினமும் அந்த துஆவை ஓதிவந்ததோடு தனது நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களையும் ஓதிவருமாறு பணித்தார்கள். அல்லாஹ் கற்றுக் கொடுத்த துஆ இதுதான்.

إلهى بحرمة الحسن وأخيه وجدّه وبنيه وأمّه وأبيه نجّني من الغمّ الذي أنا فيه يـاحيّ يـا قيـّوم يـاذا الجلال والإكرام أسألك أن تحيي قلبي بنور معرفتك يــا الله يــاالله يــاارحم الراحميـن.

“இலாகீ பிஹூர்மதில் ஹஸனி வஅகீஹி வஜத்திஹிவ வபனீஹி வஉம்மிஹீ வஅபீஹி நஜ்ஜினீ மினல் கம்மில்லதீ அனபீஹி யாஹைய்யு யாகையூம் யாதல்ஜலாலி வல்இக்றாம் அஸ்அலுக அன்துஹ்யிய கல்பீ பிநூரி மஃரிபதிக யாஅல்லாஹ் யாஅல்லாஹ் யாஅல்லாஹ் யா அர்ஹமர் றாஹிமீன்”

இதன் பொருளாவது “இறைவா! ஹஸன் (றழி) அவர்களின் பொருட்டைக் கொண்டும், அவர்களின் சகோதரன், பாட்டன், பிள்ளைகள், தாய், தந்தை முதலானோரின் பொருட்டைக் கொண்டும் நானிருக்கும் துக்கத்திலிருந்து என்னை ஈடேற்றமாக்கி வைப்பாயாக! உனது ஞானம் என்ற ஒளி கொண்டு எனது கல்பை பிரகாசமாக்கி வைப்பாயாக!” என்பதாகும்.

இத் தகவலை அஸ்ஸெய்யித் தாஹிர் பின் முஹம்மது காசிம் பா அலவி (றஹ்) அவர்கள் தங்களின் “மஜ்மஉல் அஹ்பாப்” எனும் கிரந்தத்தில் கூறியிருப்பதாக இமாம் நபஹானி (றஹ்) அவர்கள் தங்களுடைய “ஷவாகிதுல்ஹக்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ் வரலாற்றில் இருந்து இமாம் துர்முதி(றஹ்) அவர்கள் ஹஸன் (றழி) அவர்களைக் கொண்டும், அவரது குடும்பத்தவரைக் கொண்டும் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பதும், அவ்வாறு வஸீலா தேடுமாறு அல்லாஹ் தான் அவர்களைப் பணித்தான் என்பதும் நன்கு தெளிவாகின்றது.

ஒரு அடியான் ஸூப்ஹூத் தொழுகைக்குப் பிறகு மூன்று தரம் “அல்லாஹூம்ம றப்ப ஜிப்ரீல, வமீகாயீல, வயிஸ்றாபீல, வஇஸ்றாயீல,வமுஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அஜிர்னீ மினன்னார்” என்று கூறுமாறு நபீ(ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

இதன் பொருளாவது ; “ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்றாபீல், இஸ்றாயீல்(அலை) ஆகியோரினதும் நபீமுஹம்மத் (ஸல்) அவர்களினதும் றப்பே! நரகிலிருந்து என்னை ஈடேற்றமாக்கி வைப்பாயாக!”

அல்லாஹ் சகல சிருஷ்டிகளினதும் றப்பாக இருக்கும் பொழுது நான்கு அமரர்களையும், நபீ(ஸல்) அவர்களையும் குறிப்பாகச் சொல்லி இவர்களின் றப்பு என்று கூறியதிலிருந்து குறிப்பாக இவர்களைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

ஆதாரம் : ஷர்குல் அக்தார் 
அறிவிப்பு : இமாம் நவவி (றஹ்) 
ஆசிரியர் : இப்னு அல்லான் (றஹ்) 

வஸீலாத் தேடலாமா?எனும் தலைப்பில் இதுவரை நான் கூறிய ஆதாரங்களிலிருந்தும், விபரங்களிலிருந்தும்நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவதும், நபியல்லாத ஒருவரைக் கொண்டு வஸீலாத் தேடுவதும், அவர்கள் உயிரோடிருக்கும் போது தேடுவதும், அவர்கள் மரணித்த பிறகு தேடுவதும், அவர்களின் பொருட்டைக் கொண்டு தேடுவதும், அவர்களிடம் நேரடியாகக் கேட்பதும் மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட விடயங்கள் என்பது தெளிவாகிவிட்டது.

இது வரை கூறிய ஆதாரங்கள் யாவும் ஒரு நபியின் பொருட்டைக் கொண்டும், நபியல்லாத ஒருவரின் பொருட்டைக் கொண்டும், வஸீலாத் தேடுவதற்கான ஆதாரங்களாகும். அதாவது, ஆளைக் கொண்டு வஸீலாத் தேடுவதற்கான ஆதாரங்களாகும்.

ஒரு நபரைக் கொண்டு வஸீலாத் தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷமாயிருப்பது போல் ஒரு நபர் செய்த அமலைக் கொண்டு அவரது செயலைக் கொண்டு அனுமதிக்கப்பட்ட விஷயமேயாகும். இதைப் பற்றி இங்கு ஆராய்வோம்.

அமலைக் கொண்டு வஸீலாத் தேடுதல்

“இஸ்தயீனூ பிஸ்ஸப்ரி வஸ்ஸலாத்தி” (பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் நீங்கள் உதவி தேடுங்கள்) 

 திருக்குர்ஆன் 2 : 153 

பொறுமையும், தொழுகையும் மனிதர்கள் செய்கின்ற அமல்களேயாகும். இத்திரு வசனத்தில் இவ்விரண்டைக் கொண்டும் “வஸீலா” உதவிதேடுமாறு அல்லாஹ் விசுவாசிகளைப் பணித்துள்ளான்.

பொறுமை, தொழுகை இரண்டு வகையான வணக்கங்கள் மட்டும் இத்திரு வசனத்தில் கூறப்பட்டிருந்தாலும் “இபாதத்” வணக்கம் அல்லது அமல்கள் என்ற அடிப்படையில் இவ்விரண்டும் தான் வணக்கங்கள் என்றோ அமல்கள் என்றோ சொல்லமுடியாது.

நோன்பு, ஸகாத், ஹஜ்ஜூ, திக்று, பிக்று, முறாக்கபா, முஷாஹதா போன்ற எல்லா நற்கிரியைகளும் மார்க்கத்தில் நல்லமலாக கணிக்கப்படுகின்றன. எனவே இவை அனைத்தையும் கொண்டு நாம் வஸீலாத் தேடலாமென்பது விளங்கும். மேலும் பொறுமையும், தொழுகையும் சிருஷ்டிகள் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தால் சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலாத் தேடலாமென்பது விளங்கும்.

எனவே மேற்கூறிய திருவசனத்தில் நல்லமல்களைக் கொண்டும், சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலாத் தேடுவதற்கு மறுக்கமுடியாத ஆதாரமும் இருக்கின்றது.

வஹ்ஹாபிஸத்தை நாடெங்கும் பரப்பிய நல்லவர்கள் இத்திருவசனம் தருகின்ற வெளிப்படையான அர்த்தத்தையும், அது உள்ளடக்கி நிற்கின்ற விளக்கத்தையும் உணராமல்தான் வஸீலாத் தேடுவது கூடாதென்றும், அவ்வாறு கேட்பது “ஷிர்க்” இணைவைத்தலை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

 ( தொடரும்………)

==//==//==//==//==//==//==//==//==//== 
​ (தொடர் 04)…..  

இவ் வரலாற்றைக் கூறும் இமாம் அத்பி(றழி) அவர்களும், இவ் வரலாற்றை மேற்கோள்காட்டிப் பேசும் இமாம் சுப்யான் பின் உஐனா (றழி) அவர்களும், சாதாரண அறிவுடையவர்களல்லர். ஷாபி மத்ஹபை ஸ்தாபித்த இமாம் ஷாபி (றஹ்) அவர்களின் ஆத்மீக ஞானாசிரியர்களாவார்கள். இமாம் ஷாபி (றஹ்) அவர்களின் மத்ஹபை பின்பற்றி வாழும் நாம் அவர்களின் ஞானகுருக்களின் சொல்லை தட்டிக் கழிக்கவோ, அல்லது அதிற் சந்தேகங்கொள்ளவோ முடியாது.

இமாம் அத்பீ(றழி) அவர்கள் கூறும் வரலாறு நபீ(ஸல்) அவர்களை “சியாரத்” செய்வது பற்றியும், அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது பற்றியும், அவர்களிடம் பாவமன்னிப்புக் கேட்பது பற்றியும், அவர்களிடம் “ஷபாஅத்” மன்றாட்டம் கேட்பது பற்றியும் தெளிவாகக் கூறுகின்றது.

நபீ(ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் அவர்களின் கப்றடிக்கு ஒரு அறபி வந்து அவர்களின் கப்றில் விழுந்து அங்குள்ள மண்ணை தலையில் போட்டுக் கொண்டு அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் சொன்னீர்கள் நாங்கள் கேட்டு வந்தோம் அல்லாஹ் உங்கள் விஷயமாகத் திருக்குர்ஆனிலே அவர்கள் தமக்கு அநீதி செய்து கொண்டு உங்களை நாடி உங்கள் காலடிக்கு வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு நீங்களும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்கள் அல்லாஹ்வைப்பாவமன்னிப்பளிப்பவனாகவும்,அன்புள்ளவனாகவும் பெற்றுக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளான்.

‘நாயகமே! நான் எனக்கு அநீதி செய்து கொண்டேன். பாவமன்னிப்பத் தேடியவனாக உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கெஞ்சிக் கேட்டார். நபீ(ஸல்) அவர்களின் கப்றில் இருந்து உனது குற்றம் மன்னிக்கப்பட்டதென்று ஒரு சப்தம் கேட்டது.

இந்த வரலாறு ஹஸ்ரத் அலீ(றழி) அவர்கள் கூறியதாக இமாம் அபூ ஸயீத் அஸ்ஸம் ஆனி (றஹ்) அவர்கள் அறிவித்திருப்பதாக அல்லாமா இப்னு ஹஜர் (றழி) அவர்கள் “அல் ஜவ்ஹறுல் முனள்ளம்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த வரலாறும் நபீ(ஸல்) அவர்களை “ஸியாரத்” செய்வது பற்றியும், அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது பற்றியும், அவர்களிடம் பாவமன்னிப்புக் கேட்பது பற்றியும், அவர்களிடம் “ஷபாஅத்” மன்றாட்டம் கேட்பது பற்றியும் தெளிவாகக் கூறுகின்றது.

மேலும் நபீ(ஸல்) அவர்களின் புனித கப்றிலுள்ள மண்னைத் தலைமேல் போட்டுக் கொள்வது பற்றியும் விவரிக்கின்றது.

நபீ(ஸல்) அவர்களின் புனித கப்றிலுள்ள மண்ணைத் தலையில் போட்டுக் கொண்ட அந்த ஸஹாபி ஏன் அவ்வாறு செய்தார் என சற்று ஆராய்ந்து பார்த்தால் நபீ(ஸல்) அவர்கள் மீது அவருக்கு இருந்த அன்புதான் காரணமேயன்றி வேறொன்றுமில்லை என்பதும் தெளிவாகும்.

ஒரு அறபி நபீ(ஸல்) அவர்களின் கப்றடிக்கு வந்து “இறைவா! இவர் உனது “ஹபீப்” நண்பர். நான் உனது அடிமை, ஷெய்தான் உனது பகைவன், நீ எனது குற்றத்தை மன்னித்தால் உனது நண்பர் மகிழ்ச்சி அடைவார். உனது அடிமை வெற்றி பெறுவான். உனது விரோதி கோபமடைவான். நீ எனது குற்றத்தை மன்னிக்காவிட்டால் உனது நண்பர் கோபமடைவார். உனது விரோதி திருப்தி அடைவான். உனது அடிமை அழிந்து விடுவான். நீ சங்கையுள்ளவன் உனது அடிமை அழிந்து போவதையும், உனது நண்பர் கோபமடைவதையும், உனது விரோதி திருப்பியடைவதையும் நீ விரும்பமாட்டாய்.

“இறைவா! அறபு மக்களில் யாராவது ஒரு தலைவன் மரணித்துவிட்டால் அவனுடைய கப்றில் உரிமையிடுவார்கள். இவரோ உலக மக்களின் தலைவர். இவருடைய கப்றில் என்னை உரிமையிடுவாயாக!” என்று வேண்டிநின்றார்.

இவ் வரலாறை அல்லாமா இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் தங்களின் “அல் ஜவ்ஹறுல் முனள்ளம்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு சமயம் ஒரு அறபி நபீ(ஸல்) அவர்களின் கப்றடிக்கு வந்து “இறைவா! அடிமைகளை உரிமையிடுமாறு நீ பணித்திருக்கின்றாய் இவர் உனது நண்பர். நான் உனது அடிமை. எனவே உனது ஹபீபுடைய கப்றில் என்னை உரிமையிட்டு விடு” என்று கேட்டார். அப்பொழுது உன்னை மட்டும் உரிமையிடுமாறு கேட்கின்றாயே! உலகிலுள்ள அனைத்து விசுவாசிகளுக்காகவும் கேட்க வேண்டாமா? உன்னை உரிமையிட்டேன். சென்றுவா என்று ஒரு அசரீரி கேட்டது.

இந்த வரலாறை இமாம் ஹஸ்தல்லானி (றஹ்) அவர்கள் தங்களின் “அல்மவாகிபுல்லதுன்னிய்யா” எனும் நூலில் எழுதியுள்ளார்கள்.

ஒரு சமயம் மதீனா வாசிகளுக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. நபித்தோழர்கள் அன்னை ஆயிஷா நாயகி (றழி) அவர்களிடம் முறையிட்டனர்.

ஆயிஷா நாயகி (றழி) அவர்கள் நபித்தோழர்களை நோக்கி நபீ(ஸல்) அவர்களின் கப்றடிக்குச்சென்று அதிலிருந்து வானம் தெரியுமளவு ஒரு துவாரம் இட்டு கப்றுக்கும், வானத்துக்குமிடையில் முகடில்லாமல் ஆக்குங்கள் என்று கூறினார்கள்.

நபித்தோழர்களும் அவ்வாறே செய்தனர். அப்பொழுதே பெருழை பெய்யத்தொடங்கியது. புற்பூண்டுகள் முளைத்துச் செடிகொடிகள் யாவும் செழித்து வளரலாயின. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள் பெருகத் தொடங்கின. அவை அளவுக்கதிகமாகப் பொருத்து கடுமையான கொழுப்பு ஏற்பட்டதனால் கால் நடைகள் வெடிக்கத் தொடங்கின.

இந்த விபரத்தை அல்லாமா, அஸ்ஸெய்யித் அஸ்ஸம்ஹூதி (றஹ்) அவர்கள் தங்களின் “குலாஸதுல் வபா” எனும் நூலில் ஹஸ்ரத் அபுல் ஜவ்ஸா (றழி) அவர்களைத் தொட்டும் இமாம் தாரமீ (றஹ்) அவர்கள் தங்களின் தாரமீயில் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

கொழுப்பு அதிகரித்துக் கால் நடைகள் வெடித்ததால் அந்த வருடம் “ஆமுல் பத்க்” வெடிப்பு வருடம் என்றழைக்கப்பட்டதாக அல்லாமா முறாகீ (றஹ்) அவர்கள் கூறியுள்ளதாக இமாம் யூஸூப் அந்நபஹானி (றஹ்) அவர்கள் தங்களின் “ஷவாகிதுல் ஹக்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு சமயம் ஒரு அறபி நபீ(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களைக் கொண்டு மழைபெய்ய வேண்டினார்கள். அதைத் தொடர்ந்து பல பாடல்களும் பாடினார்கள். அவற்றின் இறுதியில் . . . . . .

“வலைஸலனா இல்லா இலைக்க பிறானுனா வஅய்ன பிறாறுல் கல்கி இல்லா இலர்றுஸ்லி”

(உங்ளைத் தவிர நாங்கள் ஒதுங்குமிடம் எமக்கில்லை. சிருஷ்டிகள் றசூல்மார்களிடமின்றி வேறெங்குதான் ஒதுங்கும்?) என்று பாடினார்.

நபீ(ஸல்) அவர்கள் அவர்களின் பாடலைக் கேட்டுக் கொண்டு இருந்தார்களேயன்றி அதை மறுக்கவில்லை. இந்த ஹதீதை அறிவித்த அனஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். அந்த அறபி இந்தப் பாலைப் பாடி முடித்தவுடன் நபீ(ஸல்) அவர்கள் எழுந்து தங்களின் போர்வையை நிலத்தில் இழுத்துக்கொண்டு மிம்பறை-பிரசங்க மேடையை நோக்கி விரைந்தார்கள். மிம்பரில் ஏறிய நபீ(ஸல்) அவர்கள் பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தி விட்டு அவர்களுக்காக துஆச் செய்தார்கள். நபீ(ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி நிற்கும் போதேபெரு மழைபெய்யத் தொடங்கியது.

ஆதாரம் – பைஹகீ
அறிவிப்பு – அனஸ் (றழி) 

         
உங்களைத் தவிர நாங்கள் ஒதுங்குமிடம் எமக்கு இல்லை. சிருஷ்டிகள் றசூல்மார்களிடமேயன்றிவேறெங்குதான் ஒதுங்குவார்கள்? எனும் அந்த ஸஹாபியின் பாடல் வஸீலா எனும் உதவி தேடுதலை தெளிவாகக் காட்டுகிறது.

அந்த ஸஹாபி நபீ(ஸல்) அவர்களின் முன்னிலையில் பாடியிருந்தும் அவர்கள் அது பற்றி ஒன்றும் பேசாமல் மொளனமாயிருந்தது அவர்கள் அப் பாடலை சரி கண்டுள்ளார்கள் என்பதற்கு மறுக்க முடியாத ஓர் ஆதாரமாகும்.

நபீ(ஸல்) அவர்களின் முன்னிலையில் செய்யப்பட்ட ஒரு செயலை, அல்லது பேசப்பட்ட ஒரு பேச்சை அவர்கள் சரியென்று சொல்லாமலும், பிழையென்று சொல்லாமலும் மொளனமாகயிருந்தார்களாயின் அச்செயல் அல்லது அந்தப்பேச்சு இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகிவிடும்.

இது அனைத்து இமாம்களும் ஏகோபித்துச் சொன்ன ஒரு முடிவாகும். இதனடிப்படையில் அந்த ஸஹாபி பாடிய பாடல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட பாடல் என்பது தெளிவாகி விட்டது.

இப்படியான கருத்துக்ளைக் கொண்ட பாடல்களைத் தான் வஹ்ஹாபிகள் மறுத்து வருகின்றார்கள். இத்தகைய பாடல்களை “ஷிர்க்” என்றும், இணைவைத்தல் என்றும், அறியாமையிலிருக்கும் அவர்கள் கூறுகின்றனர்.

வஸீலாக் கோரும் கஸீதாக்கள்

இது போன்ற கருத்துக்ளைக் கொண்ட “வஸீலா” உதவிகோரும் “கஸீதா” பாடல்கள் நிறையவுள்ளன. அவற்றில் சில பாடல்களை நாம் கவனிப்போம்.

“யாஸெய்யிதீ யாறஸூல்ல்லாஹி குத்பியதீ மாலீ சிவாக வலா அல்வீ இலா அஹதின்”

பதினெட்டு அடிகளைக் கொண்ட பாடல் தொகுப்பின் முதலடி தான் இந்த அடி இதன் பொருள்.

“எனது தலைவரே! அல்லாஹ்வின் றஸூலே!” எனது கைபிடித்து காப்பாற்றுங்கள். உங்ளைத் தவிர வேரு யாருமில்லை.வேரு யார் பக்கமும் நான் ஒதுங்கவும் மாட்டேன்.

இப்பாடல் தொகுப்பு பதினெட்டு அடிகளும் கருங்கல்லில் பொறிக்கப்பட்டு திரு மதீனா நகரில் உள்ள நபீ(ஸல்) அவர்களின் “றவ்ழாஷரீபின்” சுவரில் துருக்கியரின் ஆட்சிக்காலத்தில் பெறிக்கப்பட்டிருந்தது. வஹ்ஹாபிஸத்துக்கு வித்திட்ட நஜ்தி ஸாகிபுவின் எஜமான் இப்னு ஸூஊத் என்பவன் சவூதி அரேபியாவை ஆட்சிசெய்த காலத்தில் கறுப்புமையைக்கொண்டு அந்தப் பாடல்ளை அழித்து விட்டான். எனினும் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இன்றும் அந்தப் பாடல் தெரியும்.

இந்தப் பாடலைப் பாடியவர் யாரென்பது பற்றி தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பாடியதென்றும் சொல்லப்படுகின்றது.

( தொடரும்………)

==//==//==//==//==//==//==//==//==//==



வஸீலாத் தேடலாமா? 
​ (தொடர் 03) 

அதிசங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்

இது வரை ஹஸ்ரத் உமர் (றழி) அவர்கள் பற்றிக் கூறப்பட்ட குறிப்புகளிலிருந்து அவர்களின் சொற் செயல்கள் அனைத்தும் சரியானவை என்பதும், அவர்களை அவற்றில் பின் பற்ற வேண்டும் என்பதும் தெளிவாகிவிட்டது.
  மேலே குறித்த ஹதீதில் உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியதிலிருந்து வஸீலாத் தேடுவதும் ஆகுமென்பதும் தெளிவாயிற்று இன்னுமிந்த ஹதீதில் சிந்திக்க வேண்டிய இன்னுமொரு விஷயம் உண்டு. அது பற்றி ஆராய்ந்து பார்ப்போம். கலீபா உமர் (றழி) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமல் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியது ஏனெனில் நபியில்லாத ஒருவரைக் கொண்டும் வஸீலாத் தேடலாம் என்பதை மக்களுக்கு விளக்கி வைப்பதேயாம்.

நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருக்கும் பொழுதும், அவர்கள் வபாத்தான பொழுதும் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாம் என்பது அன்று வாழ்ந்த முஸ்லீம்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு விஷயமாகவே இருந்தது. நபியல்லாத ஒருவரைக் கொண்டு வஸீலாக் கேட்பதுதான் அறியப்படாத அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயமாயிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் தான் கலீபா உமர் (றழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியிருந்தால் மக்களுக்கு இந்த உண்மை அதாவது நபியல்லாத ஒருவரைக் கொண்டும் வஸீலாத் தேடலாமென்பது தெரியாமற் போயிருக்கும்.

இதனால் தான் நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமல் நபியல்லாத ஒருவரான அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள். வஹ்ஹாபிகள் இந்தச் சம்பவத்தை வைத்துக் கொண்டு உயிரோடிருப்பவர்களைக் கொண்டு மட்டும் தான் வஸீலாத் தேடலாமேயன்றி மரணித்தவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாகாதென்று கூறுகின்றார்கள்.

கலீபா உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடிய நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்றும் அப்பாஸ் (றழி) அவர்கள் உயிரோடிருந்தார்கள் என்றும் இதனால் தான் உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள் என்றும் கூறுகின்றார்கள்.

வஹ்ஹாபிகளின் இக்கூற்று அர்த்தமற்றதும் விந்தையானதுமாகும். ஏனெனில் நான் முன்னால் எழுதிக் காட்டிய பல ஹதீதுகளிலும், நான் இங்கு குறிப்பிடாத அனேக ஹதீதுகளிலும் நபீ(ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களைக் கொண்டு ஸஹாபாக்கள் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

எனவே நபீ(ஸல்) அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்னாலேயே அவர்களைக் கொண்டு வஸீவாத் தேடப்பட்டிருப்பது என்பதற்கும், அவர்கள் உயிரோடிருந்த பொழுதும் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டிருப்பது என்பதற்கும், அவர்கள் மரணித்த பிறகும் அவர்களைக் கொண்டு வஸீவாத் தேடப்பட்டிருப்பது என்பதற்கும், இன்னும் நபியில்லாத ஒருவரைக் கொண்டு வஸீவாத் தேடப்பட்டிருப்பது என்பதற்கும், இது வரை பல ஆதாரங்கள் எழுதப்பட்டுள்ளன. சிந்தனையுள்ளவர்களுக்கு இதில் கூறப்பட்ட ஆதாரங்களே போதுமானதாகும்.

உமர் (றழி) அவர்களின் வஸீலா

கலீபா உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடிய சமயம் அப்பாஸ் (றழி) அவர்களை விடச் சிறந்தவராக அலி (றழி) அவர்கள் இருந்தது உண்மைதான். எனினும் சிறப்புக் கூடியவர் இருக்கும் பொழுது சிறப்புக் குறைந்தவரைக் கொண்டு வஸீலாத் தேடலாமென்பதை மக்களுக்கு விளக்கி வைப்பதற்காகவே அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள்.

ஞானிகள் கூறும் காரணங்கள்

உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடிய சமயம் நபீ(ஸல்) அவர்கள் அங்குதான் அடக்கப்பட்டிருந்தார்கள்.

மரணித்தவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாமென்றபடி உமர் (றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியதற்கு ஆரிபீன்களான ஞானிகள் ஒரு காரணம் கூறுகின்றார்கள். அதை இங்கே எழுதுகின்றேன்.

ஸஹாபாக்கள் சிறந்தவர்களாயிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஈமான் எனும் விசுவாசம் தொடர்பாக ஒரே தரத்தையுடையவர்களல்லர். அவர்களிற் சிலர் மறு சிலரை விட “ஈமான்” எனும் நம்பிக்கை கூடினவர்களாயும், இன்னும் சிலர் குறைந்தவர்களாகவும் இருந்தார்கள்.

இவர்களில் நம்பிக்கை கூடியவர்கள் எதையும் தாங்கும் இதயமுடையவர்களாயும், என்னதான் நேர்ந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளக்கூடியர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் நம்பிக்கை குறைந்தவர்கள் அதாவது நம்பிக்கையில் பலவீனமானவர்கள் சிறு விஷயங்களுக்குக் கூட நம்பிக்கை தளர்ந்து விடுவார்கள். சிறு விஷயங்களை தாங்கிக் கொள்ளவுமாட்டார்கள்.

கலீபா உமர் (றழி) அவர்கள் நம்பிக்கையில் பலம் குறைந்தவர்கள் மீது கருணை காட்டியும், அவர்களின் நம்பிக்கையில் குறைபாடு ஏற்படாமலிருப்பதை கருத்தில் கொண்டும் தான் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமல் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்களேயன்றி மரணித்தவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது கூடாது என்பதற்காக அல்ல.

இதன் விபரமென்னவெனில், உமர்(றழி) அவர்கள் அப்பாஸ்(றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமல் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியும் காரியம் முடியாது போனால் அல்லது அந்தக் காரியம் தாமதமானால் நம்பிக்கை பலம் குறைந்தவர்களுக்கு அது மேலும் பலவீனத்தையும், ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடும். நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியும் கிடைக்க வில்லையே என்று நபீ(ஸல்) அவர்கள் மீது தவறான எண்ணம் ஏற்படவும் கூடும்.

நபீ(ஸல்) அவர்களைக் தரக்குரைவாக நினைத்தலும், அவர்கள் மீது சந்தேகம் கொள்ளுதலும் ஈமான் எனும் நம்பிக்கைக்கு முரணானதாகும். ஈமானில் பலம் குறைந்தவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்படக்கூடாதென்பதினால் தான் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடாமல் அப்பாஸ்(றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள்.

அப்பாஸ்(றழி) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியும் காரியம் முடியவில்லையானால் அதனால் யாருக்கும் சந்தேகமோ, நம்பிக்கையில் பலவீனமோ ஏற்படமாட்டாது. ஏனெனில் அவர் ஒரு ஸஹாபியாயிருந்தாலும் அவர் நபியல்ல. ஒரு நபி மீது சந்தேகம் கொள்வதற்கும் நபியல்லாத ஒருவர் மீது சந்தேகம் கொள்வதற்குமிடையில் வித்தியாசமுன்டு.

ஹிஜ்ரி 198ல் மக்கா நகரில் மரணித்த சுப்யான் பின் உஐனா (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

இமாம் அத்பீ (றஹ்) அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள். நான் நபீ(ஸல்) அவர்களின் கப்றுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது ஒரு அறபி வந்து “அஸ்ஸலாமு அலைக யாறஸூலல்லாஹ்” என்று சலாம் கூறிவிட்டு அல்லாஹ் திருக்குர்ஆனில் உங்களின் சிறப்பு பற்றி கூறுகையில் அவர்கள் தமக்கு அநீதி செய்து விட்டு உங்களிடம் வந்து பாவமன்னிப்புக் கோரி நீங்களும் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரும் போது அவர்கள் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், அன்புள்ளவனாகவும் பொற்றுக் கொள்வார்கள் என்றும் கூறுகின்றான்.

இதோ நான் உங்களின் காலடிக்கு பாவமன்னிப்புக் கேட்பவனாகவும், உங்களைக் கொண்டு “ஷபாஅத்” மன்றாட்டம் கேட்பவனாகவும் வந்து நிற்கின்றேன் என்று கூறிய அந்த அறபி அழுதுசலித்தவராக நபீ(ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடி விட்டு மன்னிப்புக் கோரிய பின் போய் விட்டார்.

அவர் போய் சற்று நேரத்தின் பின் அங்கு அமர்ந்திருந்த எனக்கு தூக்கம் வந்தது. நான் சற்று நேரம் கண்ணுரங்கினேன். அப்பெழுது நபீ(ஸல்) அவர்கள் என் கனவில் தோன்றி “அத்பீ அவர்களே! நீங்கள் எழுந்து சென்று அந்த அறபியிடம் அல்லாஹ் அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டான் என்று கூறுங்கள்” என்று சொன்னார்கள். 
  ( தொடரும்………)
================================================================

வஸீலாத் தேடலாமா?

தொடர் கட்டுரை
(தொடர் 02)

அதிசங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்

நபீ(ஸல்) அவர்களிடம் வந்து கண்ணொளி மீண்டும் வருவதற்கு “துஆ” செய்யுமாறு கேட்ட ஸஹாபியிடம் “நீ விரும்பினால் நான் “துஆ” செய்கிறேன். நீ விரும்பினால் பொறுமை செய்” என்று நபீ(ஸல்) அவர்கள் கூறியதன் அர்த்தம் என்னவெனில் நீவிரும்பினால் “துஆ” கேட்காமலும், மருந்து செய்யாமலும் இருந்து கொண்டு அல்லாஹ் உனக்குத் தந்த சன்மானத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு அவ்லியாக்களிடம் உயர்ந்த கூட்டத்துடன் சேர்ந்து கொள் என்பதாகும்.
  சுருங்கச் சொன்னால் நான் துஆ கேட்டு நீ கண்ணொளி பெறுவதைவிட கண் தெரியாதவனாகவே நீ வாழ்வதுதான் மேலானதென்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதிலிருந்து அங்கு வந்தவர் சஹாபியாக இருந்தாலும் அவர் “முதவக்கிலீன்”களிலோ “முகர்றபீன்”களிலோ சேர்ந்திருக்கவில்லை என்பது தெளிவாகின்றது. அந்த சஹாபி பொறுமை செய்வதை விரும்பாமல் “துஆ” செய்யுமாறே நபீ(ஸல்) அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

நான் “துஆ” கேட்டு உனக்குச் சுகம் கிடைப்பதை விட கண் தெரியாதவனாக இருப்பது சிறந்ததென்று நபீ(ஸல்) அவர்கள் அவருக்குக் கூறியிருந்தும் கூட அந்த சிறப்பான விஷயத்தை நபித் தோழர் விரும்பாமல் போனதற்கு காரணமென்ன என்பதை ஆராய்ந்துபார்ப்போம்.

கண்பார்வையிழந்த அந்த ஸஹாபி நபீ(ஸல்) அவர்களின் கருத்தை விளங்கியிருந்தும்கூட பொறுமை செய்வதை விரும்பாத காரணமென்னவெனில், அவர் தனது வீட்டில் தொழுவதை விட நபீ பெருமானார் (ஸல்) அவர்களின் பள்ளிவாயலில் அவர்களோடும் தொழுவதையே வரும்பினார். அவரைப் பள்ளிவாயலுக்கு வழிகாட்டி அழைத்து வர உதவியாளர் யாரும் அவருக்கிருக்கவில்லை. இதனால் குருடனாகயிருந்து வீட்டில் தனித்துத் தொழுது மரணிப்பதை விட கண்ணொளி பெற்று நபீ(ஸல்) அவர்களின் பள்ளிவாயலுக்கு ஐவேளைத் தொழுகைக்கும் சமூகமளித்து அவர்களுடன் தொழுவதை மேலானதாகக் கருதினார். இதனால்தான் பொறுமை செய்து கொண்டிருப்பதை விட கண்ணொளி கிடைப்பதைப் பெரிதும் விரும்பினார். அந்த ஸஹாபி

இந்த ஹதீதிலிலுள்ள மற்றுமொரு நுட்பத்தையும் இங்கு நாம் உற்றுணர்வோம்.

நபீ(ஸல்) அவர்களிடம் “துஆ” செய்யுங்கள் என்று அந்த ஸஹாபி கேட்டிருந்தும் நபீ(ஸல்) அவர்கள் “துஆ” செய்யாமல் அவருக்கு ஒரு துஆவைக் கற்றுக் கொடுத்தார்களேயல்லாமல் அவருக்காக “துஆ​ச்செய்யவில்லை. இதற்கான காரணமென்னவெனில் அந்த ஸஹாபி நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடவேண்டு மென்பதையும், அவர் மனமொடிந்து அழுது சலித்து இறைவனிடம் கொஞ்சிக் கேட்கவேண்டுமென்பதையும் விரும்பியதற்காகத்தான் நபீ(ஸல்) அவர்கள் துஆ கேட்காமல் அவருக்கு துஆவை கற்றுக் கொடுத்தார்கள்.

மேலே குறித்த நபீ மொழி மூலம் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாக் கேட்கலாம் என்பதும், வஸீலாக் கேட்குமாறு கற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள்தான் என்பதும் தெளிவாகிவிட்டது.

வஹ்ஹாபிகளும் இந்த ஹதீஸ் பற்றிக் கூறிக்காட்டி விளக்கம் சொன்னால் இதை மறுக்க வழியில்லாத காரணத்தால் இது நபீ (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் நடந்த சம்பவம் என்றும் அவர்கள் இப்பொழுது இந்த ஹதீதின் படி செயல்பட முடியாதென்றும் கூறி மழுப்பி விடுகின்றார்கள். இவர்கள் மழுப்பினாலும் நாம் விடப்போவதில்லை.

“சுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையுள்ள நாம் இவர்களின் இந்தக் கருத்தை இரண்டு வகையில் மறுப்போம்.

ஒன்று – நபீ(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்ற கருத்தை நாம் மறுக்கின்றோம்.

அவர்கள் இன்று வரை உயிரோடுதானிருக்கின்றார் என்பதற்கும், உயிரோடுதான் இருப்பார்கள் என்பதற்கும் திருக்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை இதே கட்டுறையில் விளக்கமாக விரித்துள்ளேன்

இரண்டு – நபீ(ஸல்) அவர்கள் “வபாத்” மரணித்த பிறகும் ஸஹாபாக்கள் இந்த ஹதீது கொண்டு அமல் செய்துள்ளார்கள் என்பதற்கும் வரலாற்று ரீதியான ஆதாரமுண்டு. இதனால் வஸீலாத் தேடுவது நபீ(ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்தது போல் அவர்களின் மறைவின் பின்னரும் நடைமுறப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

             ஒரு வரலாற்றுத் தகவல்

நபீ(ஸல்) அவர்களின் வபாத்துக்குப் பின்பு கலீபா உஸ்மான் (றழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் நபித்தோழர்களில் ஒருவருக்கு கலீபா அவர்களிடம் ஒரு தேவை ஏற்பட்டது. அவர் கலீபா அவர்களி்டம் பல தடவைகள் சென்று கேட்டுப்பார்த்தார். எனினும் அவரின் தேவை நிறைவேறவில்லை.

எனவே மேலே குறித்த ஹதீஸை “ரிவாயத்” பேசி வந்த நபித் தோழர் ஹஸ்ரத் உஸ்மான் பின் ஹூனைப் (றழி) அவர்களிடம் சென்று முறையிட்டார். அவர் அந்த ஸஹாபிக்கு அந்த துஆவைக் கற்றுக் கொடுத்து இதைக் கொண்டு நீ வஸீலாத் தேடினால் உனது காரியம் சித்தியாகும். என்று சொன்னார்.

அந்த ஸஹாபியும் ஹதீஸில் இடம் பெற்ற “துஆ” வை ஓதி நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு “வஸீலா” தேடினார். அல்லாஹ்வும் கலீபா உஸ்மான் (றழி) அவர்கள் மூலம் அவருடைய தேவையை நிறைவேற்றிக் கொடுத்தான்.

ஒரு நாள் கலீபா உஸ்மான் (றழி) அவர்களின் வீட்டுக்கு அந்த ஸஹாபி வந்து கதவைத்தட்டினார். காவற்காரன் கதவைத் திறந்து அவரை கலீபாவிடம் அழைத்துச் சென்றான்.

உஸ்மான் (றழி) அவர்கள் அவரை வரவேற்று அமரச் செய்து அவருடைய தேவையைப் பற்றி வினவினார்கள். அந்த ஸஹாபி தனது தேவையை தெரிவிக்கவே அவர் அதனை உடனே நிறைவேற்றி வைத்ததுடன், மேலும் தேவையேற்படின் தன்னைச் சந்திக்குமாறும் கூறி அனுப்பி வைத்தார்கள்.

தனது தேவையைப் பெற்றுக் கொண்டு வழியில் வந்து கொண்டிருந்த ஸஹாபி தனக்கு அந்த “துஆ” வைக் கற்றுக் கொடுத்த ஹஸ்ரத் உஸ்மான் பின் ஹூனைப் (றழி) அவர்களைக் கண்டு “அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக! எனது விஷயமாக கலீபாவிடம் பேசியதால் எனது தேவை முடிந்து விட்டது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதைக் கேட்ட ஹஸ்ரத் உஸ்மான் பின் ஹூனைப் (றழி) அவர்கள் வியப்படைந்தவர்களாக “இறைவன் மீது ஆனையாக! நான் கலீபாவுடன் உங்கள் விஷயமாக ஒன்றும் பேசவில்லை. எனினும் நான் நபீ(ஸல்) அவர்களுடன் இருந்தபொழுது கண்பார்வையற்ற ஒரு ஸஹாபி அவர்களிடம் வந்து தனக்கு கண்பார்வை கிடைக்க “துஆ” ச் செய்யுங்களென்று கேட்டார். நபீயவர்கள் அவருக்காக துஆச் செய்யாமல் நான் உங்களுக்குச் சொல்லித்தந்த துஆவை அவருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த ஸஹாபியும் அவ்வாறே துஆ கேட்டார். அதே சபையில் அவருக்கு பார்வை கிடைத்து விட்டது. இதை நான் நேரில் கண்டேன். அதைத்தான் நான் உங்களுக்கு கற்றுத்தந்தேனே தவிர, கலீபாவுடன் நான் ஒன்றும் சொல்லவில்லை” என்று சொன்னார்.

“கண்ணொளி பெற்ற ஸஹாபி அந்த “துஆ” வை ஓதியதால்தான் கண்ணொளி பெற்றார். அதேபோல் நீங்களும் ஓதியதால்தான் கலீபா மூலம் உங்கள் தேவையைப் பெற்றிருக்கின்றீர்கள் என்று சொன்னார்கள்.

இந்த ஹதீது தபறானி, பைஹகீ ஆகிய இருபெரும் ஹதீதுக் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.

நபீ(ஸல்) அவர்கள் உயிரோடிருந்த பொழுதுதான் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டுள்ளதென்றும், அவர்கள் வபாத்தான பிறகு அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாகாதென்றும், மேலே குறித்த ஹதீது நபீ(ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்துக்கே பொருத்தமானதேயன்றிஅவர்களின் வபாத்துக்குப் பிறகு பொருத்தமற்றதென்றும் கூறிவரும் அறிவில்லாத வஹ்ஹாபிகளுக்கு தபறானியும், பைஹகீயும் கூறியுள்ள இந்த ஹதீது நேரடி மறுப்பாக இருப்பதை காண முடிகின்றது.

ஸஹாபாக்களை பின்பற்றுமாறும், அவர்கள் சென்ற வழியில் செல்லுமாறும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம். அவர்களின் செயல்களில் அவர்களைப் பின்பற்றுவதால் குற்றமொன்றும் வந்தவிடாது.

 நபிமொழி : 03 

நபீ(ஸல்) அவர்கள் “துஆ” க் கேட்கும் பொழுது உனது நபியின்​பொருட்டைக் கொண்டும் எனக்கு முன்னுள்ள நபிமார்களின் பொருட்டைக் கொண்டும் என்று “துஆ” கேட்பார்கள்.

நபீ(ஸல்) அவர்கள் தன்னைக் கொண்டும், தனக்கு முன் தோன்றி மறைந்த நபிமார்களைக் கொண்டும் வலீலாத் தேடியுள்ளார்கள் என்பது இந்த ஹதீதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மரணித்தவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது ஆகுமென்பதற்கும் இந்த ஹதீதில் ஆதாரமிருக்கின்றது.

நபிமொழி – 04

யாராவது தனது வீட்டிலிருந்து தொழுகைக்காக வெளிப்பட்டு இறைவா உன்னிடம் கேட்பவர்களின் பொருட்டாலும், இதோ உன்னிடம் நான் நடந்து வருகின்ற இந்த நடையின் பொருட்டாலும் உன்னிடம் கேட்கிறேன். நான் பெருமைக்காகவோ, முகஸ்துதிக்காகவோ எனது வீட்டில் இருந்து வெளிப்படவில்லை. எனினும் உனது கோபத்திலிருந்து தப்பிக் கொள்வதற்காகவும், உனது திருப் பொருத்தத்தையடைந்து கொள்வதற்காகவுமே வெளிப்பட்டேன். நீ என்னை நரகிலிருந்து காப்பாற்றுமாரும், உன்னைத் தவிர குற்றத்தை மன்னிப்பவர் வேறுயாருமில்லாதிருப்பதனால் எனது குற்றத்தை மன்னித்து விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். என்று கூறுவானாயின் அல்லாஹ் அவன் பக்கம் முன்னோக்குவான் என்றும், இன்னும் அவனுக்காக எழுபதாயிரம் அமரர்கள் பாவமன்னிப்புக் கேட்பார்கள் என்றும் நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – இப்னுமாஜா 
                       அறிவிப்பு – அபூஸயீத் அல்குத்ரி (றழி) 

இந்த ஹதீதை இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸூயூத்தி (றஹ்) அவர்கள் தங்களின் “ஜாமிஉல்கபீர்” எனும் நூலிலும், இன்னும் அநேக இமாம்கள் தமது நூல்களிலும் கூறியிருக்கின்றார்கள்.

இன்னும் இந்த ஹதீதை இமாம் இப்னுஸ்ஸூன்னி (றஹ்) அவர்கள் பிலால் (றழி) சொன்னதாகப் பேசி வந்துள்ளார்கள்.

மேலும், இந்த ஹதீதை அல்-ஹாபிழ் அபூநுஐம்(றஹ்) அவர்கள் தங்களின் “அமலுல் யவ்மி வல்லைலா” எனும் நூலிலும் இமாம் பைஹகீ (றஹ்) அவர்கள் தங்களின் “பைஹகீ” எனும் நூலில்“கிதாபுல் தஅவாத்” எனும் பாடத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள். ஹதீதுக் கலை மேதைகள் பலர் இந்த நபிமொழியை குறிப்பிட்டிருப்பதால் இது சரியான பலமிக்க ஹதீதென்பது நன்கு தெளிவாகின்றது.

“முஹத்திதீன்கள்” எனப்படும் ஹதீதுக்கலை நிபுணர்களில் அநேகர் ஒரு ஹதீஸை கூறிவந்தார்களானால் அது சரியான – பலங்கூடிய ஹதீஸ் என்று கணிக்கப்படும்.

இந்த ஹதீதில் நபீ(ஸல்) அவர்கள் “உன்னிடம் கேட்பவர்களின் பொருட்டைக் கொண்டு. . .” என்று கூறிய வசனம் தான் வஸிலாத் தேடலாமா என்பதற்கும் ஆதாரமாக இருக்கின்றது.

“அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக பிஹக்கிஸ் ஸாயிலீன அலைக” (இறைவா! உன்னிடம் கேட்பவர்களின் பொருட்டைக் கொண்டு கேட்கிறேன்) மேலே குறித்த ஹதீதில் இடம் பெற்ற “பிஹக்கிஸ் ஸாயிலீன” என்ற வசனம் “கேட்பவர்கள் அனைவரின் பொருட்டைக் கொண்டும்” என்ற கருத்தைத் தருகின்றது.

ஏனெனில் “பிஹக்கிஸ் ஸாயிலீன்” என்ற வசனத்திலுள்ள “அஸ்ஸாயிலீன்” என்ற சொல் “அஸ்ஸாயில்” என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும்.

“அஸ்ஸாயில்” என்றால் கேட்பவன் என்றும் “அஸ்ஸாயிலீன்” என்றால் கேட்பவர்கள் என்றும் அர்த்தம் வரும்.

இந்த வசனத்திலிருந்து உலகில் அல்லாஹ்விடம் கேட்கின்ற அனைத்து விசுவாசிகளின் பொருட்டைக் கொண்டும் நபீ(ஸல்) அவர்கள் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பதும் தெளிவாகி விட்டது.

“கேட்பவர்கள் அனைவரின் பொருட்டைக் கொண்டும்” எனும் இவ்வசனம் கேட்பவர்கள் ஒவ்வொருவரின் பொருட்டைக்கொண்டு மென்ற கருத்தை உள்ளடக்கியதாயுள்ளது. இதன் படி நபீ(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்கின்ற ஒவ்வொரு விசுவாசியின் பொருட்டைக் கொண்டும் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பது தெளிவாகி விட்டது.

மேலும் இந்த வசனமானது நபீ(ஸல்) அவர்களின் காலத்தில் உயிரோடிருந்து அல்லாஹ்விடம் கேட்பவர்களையும் குறிக்கும். அவர்களின் காலத்தின் பிறகு இறுதி நாள் வரை அல்லாஹ்விடம் கேட்பவர்களையும் குறிக்கும்.

இதன் படி நேற்று வாழ்ந்த விசுவாசியைக் கொண்டும், இன்று இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிக்கின்ற விசுவாசியைக் கொண்டும், நாளை வாழப் போகின்ற விசுவாசியைக் கொண்டும் நபீ(ஸல்) அவர்கள் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பது வௌ்ளிடை மலை போல் விளங்குகின்றது.

இந்த மூலக் கருத்தை அடிப்படையாக வைத்து சற்று ஆழமாக ஆராய்ந்தால் நபீ(ஸல்) அவர்களுக்கும், பிறகு வந்தவர்களில் விசுவாசிகள் என்று நிச்சயமாக அறியப்பட்ட அவ்லியாக்கள், குத்புமார்கள் ஆகியோரைக் கொண்டும் நபீ(ஸல்) அவர்கள் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பது விளங்கி விட்டது.

நபீ(ஸல்) அவர்கள் இவ்வாறு வஸீலாத் தேடுவதுடன் நின்று விடாது தங்களின் ஸஹாபாக்களையும் இவ்வாறு கேட்குமாறு பணித்தார்கள்.

ஸஹாபாக்களும், அவர்களுக்குப் பிறகுள்ள தாபியீன்களும் இந்த ஹதீதின் படி அமல் செய்து வந்துள்ளார்கள்என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் பல உள்ளன. விரிவையஞ்சியே அவற்றை விடுத்தேன்.

நபிமொழி – 05

அலீ(றழி) அவர்களின் தாயும், அஸத்பின் ஹாஸிம் அவர்களின் மகளுமான நபீ(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டி வளர்த்த தாயார் பாத்திமா மரணித்த பொழுது அவர்களிடம் நபீ(ஸல்) அவர்கள் சென்று தலைப்பக்கமாக அமர்ந்து கொண்டு “ எனது தாய்க்குப் பிறகுள்ள தாயே! அல்லாஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வானாக!” எனப் புகழ்ந்து விட்டு, தங்களின் போர்வையால் அவர்களை கபன் செய்யுமாறு பணித்து விட்டு அவர்களுக்காக கப்று தோண்டுமாறும் பணித்தார்கள்.

ஸஹாபாக்கள் கப்று தோண்டினார்கள். இறுதியில் நபீ(ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தால் அவர்களின் கப்றை தோண்டி, தங்களின் திருக்கரத்தாலே மண்ணை எடுத்து விட்டு அக்கப்றுக்குள் இறங்கி அங்கே சாய்ந்து கொண்டு-

“அல்லாஹ்தான் உயிராக்குபவனும், மரணிக்கச் செய்பவனுமாவான். அவன் உயிருள்ளவன். ஒரு போதும் மரணிக்க மாட்டான் இறைவா! எனது தாயான அஸதுடைய மகளான பாத்திமா செய்த குற்றங்களை உனது நபியின் பொருட்டைக் கொண்டும் எனக்கு முன்னுள்ள நபிமார்களின் பொருட்டைக் கொண்டும் நீ மன்னித்து விடுவாயாக! இன்னும் அவருக்கு அவரின் கப்றை விசாலமாக்கி விடுவாயாக! நீ மிக்க அருளாளன்” என்று கூறினார்கள்.

                                         ஆதாரம் – தபறானி 
                         அறிவிப்பு – அனஸ்பின் மாலிக் (றழி) 

இந்த ஹதீதை அல்லாமா இப்னு ஹஜர் (றழி) அவர்கள் “அல்ஜவ்ஹறுள்”, முனள்ளம் எனும் நூலிலும் இமாம் சுலைமான் அத்தபறானீ (றஹ்) அவர்கள் “அல்கபீர்”, “அல் அவ்ஸத்” ஆகிய நூல்களிலும் கூறியுள்ளார்கள்.

இன்னுமிந்த ஹதீதை இமாம் இப்னு ஹிப்பான், இமாம் அல்ஹாகிம் போன்ற ஹதீதுக்கலை மோதைகளும் கூறியுள்ளார்கள்.

மேலும் இந்த நபி மொழியை ஹஸ்ரத் ஜாபிர் (றழி) அவர்களை மேற்கோள் காட்டி இமாம் இப்னு அபீஷைபா (றஹ்) அவர்களும், இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடமிருந்து இமாம் இப்னு அப்துல் பர் அவர்களும் ஹஸ்ரத் அனஸ் (றழி) அவர்களிடமிருந்து இமாம் அபூ நுஐம் (றஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

இவையனைத்தையும் ஒன்று சேர்த்து அல்ஹாபிழ் ஜலாலுத்தீன் அப்துர் றஹ்மான் அஸ்ஸூயூதி (றஹ்) அவர்கள் தங்களின் “அல்ஜாமிஉல் கபீர்” எனும் நூலில் கூறியுள்ளார்கள்.

மேலே குறித்த ஹதீதில் பாலூட்டிய தாய் பாத்திமா அவர்களுக்காகப் பிராத்தனை செய்த நபீ(ஸல்) அவர்கள் தங்களின் பொருட்டைக் கொண்டும், தங்களுக்கு முன்னுள்ள நபிமார்களின் பொருட்டைக் கொண்டும் வஸீலாத் தேடியுள்ளார்கள்.

இந்த ஹதீதில் நபீ(ஸல்) அவர்கள் தங்களின் பொருட்டைக் கொண்டும், தங்களுக்கு முன்னுள்ள நபிமார்களின் பொருட்டைக் கொண்டும் வஸீலாத் தேடலாம் என்பதற்கும், மேலும் மரணித்தவர்களைக் கொண்டும் வஸீலாத் தேடலாம் என்பதற்கும் தெட்டத் தெளிவாக ஆதாரம் உள்ளது.

நபீ(ஸல்) அவர்கள் பாத்திமாவை தங்களின் போர்வையால் கபன் செய்யுமாறு பணித்திருப்பதிலிருந்து நபிமார் பாவித்த பொருட்களைப் பாவிப்பதில் “பறகத்” அருள் உண்டு என்பதும் தெளிவாகின்றது.

நபிமொழி – 06

இரண்டாவது கலீபா உமர் (றழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கடும் பஞ்சம் மக்களைப் பிடித்தது. அப்பொழுது நபித் தோழர்களில் ஒருவரான ஹஸ்ரத் பிலால் பின் ஹர்து (றழி) அவர்கள் நபீ(ஸல்) அவர்களின் புனித அடக்கஸ்தலத்துக்கு வந்து அல்லாஹ்வின் றஸூலே! மக்கள் அழிந்து போயினர். உம்மத்துக்காக மழை பெய்யக் கேளுங்களென்று வேண்டினார்கள். பிறகு நபீ(ஸல்) அவர்கள் அவரின் கனவில் தோன்றி மழை பெய்யுமென்று அறிவித்தார்கள்.

ஆதாரம் – பைஹகீ 
                            அறிவிப்பு – இப்னு அபீஷைபா (றழி) 

இந்த ஹதீதிலிருந்து நபீ(ஸல்) அவர்கள் வபாத்தான பிறகும் கூட அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டிருப்பது தெளிவாக விளங்குகின்றது.

வஸீலாத் தேடிய ஹஸ்ரத் பிலால் பின் ஹர்து (றழி) அவர்கள் ஸஹாபாக்களில் ஒருவர். இவர் கண்ட கனவு சரியானதா? உண்மையானதா? கனவைக் கொண்டு சட்டம் எடுக்கலாமா? என்பதைப் பற்றி நாம் இங்கு ஆராயத்தேவையில்லை. அது வேறு விஷயம்.

அந்த நபித்தோழர் நபீ(ஸல்) அவர்களின் கபுறடிக்கு வந்து அவர்களிடம் கேட்டது விழிப்பில் நடந்ததேயன்றிக் கனவில் நடந்ததல்ல. ஆகையால் நபித் தோழர் ஒருவர் விழிப்பில் செய்த ஒரு செயல் மட்டும் நமக்குப் போதிய ஆதாரமாகும்.

ஏனெனில் ஸஹாபாக்கள் பற்றி நபீ(ஸல்) அவர்கள் கூறுகையில் “எனது ஸஹாபாக்கள் நட்சத்திரம் போன்றவர்கள் அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி பெற்று விடுவீர்கள்” என்று கூறியுள்ளார்கள்.

நபீ(ஸல்) அவர்களின் இக் கூற்றின் தாற்பரியமென்னவெனில் ஸஹாபாக்கள் தவறு செய்யமாட்டார்களாகையால் அவர்களைப் பின்பற்றுங்கள் என்பதேயாகும்.இக்கூற்றிலிருந்து ஸஹாபாக்களின் செயல்களைப் பின்பற்றலாம் என்றும், அவர்களின் செயல்கள் மார்க்கத்துக்கு முரணில்லாதவை என்றும் விளங்குகின்றது.

இன்னும் நபீ(ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் பற்றிக் கூறுகையில் “அல்லாஹ அல்லாஹ பீ அஸ்ஹாபீ” (எனது தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்) என்று கூறியுள்ளார்கள்.

இன்னும் “வஇதா துகிர அஸ்ஹாபீ பஅம்ஸிகூ” (எனது ஸஹாபாக்கள் பற்றிப் பேசப்பட்டால் உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்) என்றும் நபீ(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்னுமிவை போன்ற அநேக ஹதீதுகள் ஸஹாபாக்களின் சிறப்பு பற்றி வந்துள்ளன. விரிவையஞ்சி விடுகின்றேன்.

ஸஹாபாக்களின் சிறப்பு பற்றி மேலே கூறிய ஹதீஸ்களில் இருந்து அவர்கள் நேர்மையுள்ளவர்கள் என்றும், அவர்களின் சொற்செயல்களைப் பின்பற்றக் கூடுமென்பதும் தெளிவாக விளங்குகின்றது.

மேலே குறித்த ஹதீதில் ஹஸ்ரத் பிலால் பின் ஹர்து (றழி) அவர்கள் தானிருந்த இடத்திலேயே இருந்து கொண்டு ​கேட்காமல் நபீ (ஸல்) அவர்களின் கபுறடிக்கு வந்து கேட்டதிலிருந்து மரணித்த ஒருவரிடம் ஒரு தேவையைக் கேட்பதாயின் அவரின் கபுறடிக்கு வந்து கேட்கவேண்டுமென்பதற்கும், அவரின் பொருட்டைக் கொண்டும், இவரின் பொருட்டைக் கொண்டும் என்றும் கேட்காமல் நேரடியாக அவரிடம் கேட்பது ஆகும் என்பதற்கும் இதில் ஆதாரமிருக்கிறது. நுட்பமாக ஆராய்ந்தால் தெளிவாகும். எளிதாக விளங்கிக் கொள்வதற்காக சுருக்கமாகச் சுட்டிக் காட்டுகிறேன்.

மேலே குறித்த ஹதீஸில் நபீ (ஸல்) அவர்களின் கபுறடிக்கு (றழி) அவர்கள் “ இறைவா ! உனது நபியின் பொருட்டைக் கொண்டு மழை பெய்யச் செய்வாயாக ! ” என்று கேட்காமல் இஸ்தஸ்கி லி உம்மதிக ( உங்களின் உம்மத்துக்களுக்கு மழைபெய்யக் கேளுங்கள்) என்று கேட்டார்கள்.

இதுவரை நான் எழுதிய விவரங்களும், ஆதாரங்களும் நபீ (ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டும், அதாவது அவர்களைக் கொண்டும், ஏனைய நபிமார்களின் பொருட்டைக் கொண்டும் வஸீலாத் தேடுவது பற்றியவையாகும்.

நபிமார்களிடமும், அவ்லியாக்களிடமும் நேரடியாகக் கேட்பது தொடர்பாக இன்னும் விவரம் எழுதவில்லை.

மேலே குறித்த ஹதீதில் வந்துள்ள “ உங்களின் உம்மத்துக்களுக்காக மழை பெய்யக் கேளுங்கள் ” என்ற வசனம் நேரடியாகக் கேட்பதோடு தொடர்புடைய ஒரு வசனமாதலால் இன்ஷா அல்லாஹ் அதற்குரிய இடத்தில் விளக்குவேன்.

கலந்துரையாடல்

மத்ஹபுடைய இமாம் மாலிக் (றழி) அவர்களுக்கும், கலீபா மன்சூர் அவர்களுக்குமிடையே நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் பற்றி இங்கு குறிப்பிடுகிறேன். ஒரு சமயம் கலீபா மன்சூர் “ ஹஜ்ஜு ” செய்யச் சென்றபொழுது மதீனா முனவ்வறா சென்று நபீ (ஸல்) அவர்களின் கப்றை ஸியாரத் செய்வதற்காக போனார்.

அப்பொழுது அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது நபீ (ஸல்) அவர்களின் கப்றை முன்னோக்கி சலாம் கூறி துஆ செய்வதாயின் கிப்லாவுக்குப் பின் காட்ட வேண்டும். கிப்லாவை முன்னோக்கி துஆ கேட்பதாயின் நபீ (ஸல்) அவர்களின் கப்றுக்குப் பின்காட்ட வேண்டும். எவ்வாறு செய்து கொள்வதென்று அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டது.

அந்நேரம் மத்ஹபுடைய இமாம் மாலிக் (றஹ்) அவர்கள் “ மஸ்ஜிதுன் நபவீ ” நபீ (ஸல்) அவர்களின் பள்ளிவாயலில் இருந்தார்கள்.

கலீபா மன்சூர் இமாமவர்களை அணுகி தனக்கேற்பட்ட சந்தேகத்தைக் கூறி விடைபெற்றார்.

அதற்கு இமாம் மாலிக் (றஹ்) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் கப்றை விட்டும் நீ முகத்தை திருப்பிவிடாதே. அவர்கள்தான் உனக்கும் உனது தந்தை ஆதம் நபீ (அலை) அவர்களுக்கும் “ வஸீலா ” வாக இருக்கின்றார்கள்.

நீ அவர்களின் கப்றை முன்னோக்கி கிப்லாவை உனது பின் பக்கமாக ஆக்கிக்கொள். அவர்களைக் கொண்டும் “ ஷபாஅத் ” தைக்கேள். அல்லாஹ் அவர்களை உனக்கு ஷாபிஃஆக – சிபாரிசு செய்பவர்களாக ஆக்கிவைப்பான் ” எனக்கூறி அவர்கள் பாவம் செய்துவிட்டு உங்களை நாடி உங்கள் காலடிக்கு வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கேட்டு நபீ (ஸல்) அவர்களும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்கள் அல்லாஹ்வை பாவத்தை மன்னிப்பவனாகவும், இரக்கமுள்ளவனாகவும் பெற்றுக்கொள்வார்கள். என்ற இறைமறை வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.

கலீபா மன்சூர் அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

இந்தச் செய்தியை இமாம் காளீ இயாழ் அவர்கள் பலம் வாய்ந்த ஆதாரத்துடன் தங்களின் “ அஷ்ஷிபா ” என்ற நூலிலும், இமாம் ஸுப்கீ (றஹ்) அவர்கள் தங்களின் “ ஷிபாஉஸ்ஸகாம் ” என்ற நூலிலும் இமாம் அஸ்ஸெய்யித் அலி அஸ் ஸம்ஹுதி (றஹ்) அவர்கள் தங்களின் “ குலாஸதுல் வபா ” எனும் நூலிலும், இமாம் அல்லாமா கஸ்தல்லானீ (றஹ்) “ குன்னிய்யா ” எனும் நூலிலும், அல்லாமா இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் “ அல்ஜவ்ஹறுல்முனள்ளம் ” எனும் நூலில் கூறியுள்ளார்கள். மேலும் இமாம் அல்லாமா ஷர்கானீ (றஹ்) அவர்கள் “ இச்செய்தி உண்மையானது இதை அறிவித்தவர்களில் எவரும் பொய் சொல்லக் கூடியவர்களுமில்லை. பலங்குறைந்தவர்களுமில்லை ” என்று தங்களின் “ ஷர்ஹூல் மவாஹிப் ” எனும் நூலிலும் கூறியுள்ளார்கள்.

இமாம் மாலிக் (றஹ்) அவர்களின் இந்தச் செய்தியைப் பொய்யென்று சொல்பவர்களை மறுப்பதற்காகவே அறிஞர் ஷர்கானீ (றஹ்) அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்.

இமாம் மாலிக் (றஹ்) அவர்களுக்கும், கலீபா மன்சூர் அவர்களுக்கும் இடையில் நடந்த இச்சம்பவத்தின்மூலம் நபீ (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாம் என்பதும், நபீ (ஸல்) அவர்கள் வபாத்தான பிறகும் கூட அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாம்மென்பதும் தெளிவாகிவிட்டது.

நபிமொழி – 07

இரண்டாவது கலீபா உமர் (றழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒருசமயம் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது கலீபா உமர் (றழி) அவர்கள் ஹஸ்ரத் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு மழைகேட்டு வஸீலாத் தேடினார்கள். அப்பாஸ் (றழி) அவர்களிடம் கலீபா அவர்கள் வந்து இறைவா ! நாங்கள் எங்கள் நபீ முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொண்டு உன்னிடம் மழை பெய்யக் கேட்போம். நீ மழையை இறக்குவாய். இப்பொழுது எங்களுடைய நபியின் தந்தையின் சகோதரர் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு உன்னிடம் வஸீலாத் தேடுகிறோம். நீ மழையை இறக்கிவைப்பாக ” என்று சொன்னார்கள்.

ஆதாரம் – புஹாரீ அறிவிப்பு – அனஸ் பின் மாலிக் (றழி) 

இந்த ஹதீதில் நாம் பெறவேண்டிய கருத்துக்கள் பல இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான கருத்துக்கள் பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.

கலீபா உமர் (றழி) அவர்கள் ஸஹாபாக்களில் ஒருவர். அதுமட்டுமின்றி நாற்பெரும் கலீபாக்களில் ஒருவராகவும் விளங்குகிறார்கள்.

நபித்தோழரின் செயல் நமக்கும் போதிய ஆதாரமாகும். அதிலும் குறிப்பாக ஒரு கலீபாவின் செயல் பலம் வாய்ந்த ஆதாரமாகிவிடும்.

ஏனெனில் நபித்தோழர்கள் பற்றி நபீ (ஸல்) அவர்கள் பல தடவைகள் மேம்படுத்திச் சொல்லியிருக்கின்றார்கள். இது தொடர்பாக முன்னால் பல ஹதீதுகளை ஆதாரமாக எழுதியுள்ளேன். இங்கு இன்னும் சில தகவல்களைத் தருகின்றேன். எனது நடைமுறைகளையும், எனக்குப் பிறகு வருகின்ற நேர்மையுள்ள நல்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். பின்பற்றுங்கள் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

                                ஆதாரம் – அபூதாவூத் , துர்முதி 

“ அல்லாஹ் உண்மையை உமறுடைய நாவின் மீதும் அவருடைய கல்பின் மீதும் அமைத்துள்ளான். ” என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – அஹ்மத் , துர்முதீ 
அறிவிப்பு – இப்னு உமர் (றழி) 

இந்த ஹதீதை அபூதாவூத், இமாம் ஹாகிம் போன்றோர் ஹஸ்ரத் அபூதர் (றழி) அவர்கள் கூறியதாக “ முஸ்தத்றக் ” எனும் நூலிலும், இமாம் அபூயஃலா (றஹ்) அவர்கள் ஹஸ்ரத் அபூ ஹூரைரா (றழி) அவர்கள் அறிவித்ததாக அதே நூலில் மற்றொரு குறிப்பிலும், இமாம் தபறானி (றஹ்) அவர்கள் ஹஸ்ரத் பிலால் (றழி), முஆவியா (றழி) ஆகியோர் அறிவித்ததாக “ அல்ஜாமிஉல்கபீர் ” எனும் நூலிலும், இமாம் இப்னு அதீ (றஹ்) அவர்கள் ஹஸ்ரத் பள்லுப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவித்ததாக “ அல்காமில் ” எனும் நூலிலும் கூறியுள்ளார்கள்.

“ உமர் என்னுடன் இருக்கிறார் நான் உமருடன் இருக்கிறேன் எனக்குப்பிறகு உண்மையென்பது உமருடன் இருக்கும். அவர் எங்கு இருந்தாலும் சரியே ” என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – தபறானீ 
அறிவிப்பு – பள்ல் பின் அப்பாஸ் (றழி) 

“ எனக்குப் பிறகு ஒரு நபீ இருப்பாராயின் அவர் உமர்தான் ” என நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – அஹ்மத் , துர்முதி 

இந்த ஹதீதை ஹஸ்ரத் உக்பா பின் ஆமிர் அல்ஜூஹனீ (றழி) அவர்கள் அறிவித்ததாக இமாம் ஹாகிம் அவர்கள் “முஸ்தத்றக்” எனும் நூலிலும், இஸ்மத் பின்மாலிக் (றழி) அவர்கள் அறிவித்ததாக இமாம் தபறானீ அவர்கள் “ அல்ஜாமிஉல்கபீர் ” எனும் நூலிலும் எழுதியுள்ளார்கள்.

எனக்குப் பிறகு வருகின்ற இருவரைப் பின்பற்றுங்கள் ஒருவர் அபூபக்கர் (றழி) மற்றவர் உமர் (றழி). இவ்விருவரும் அல்லாஹ்வின் நீளமான கயிறு. பலம்வாய்ந்த கயிற்றைப் பற்றிப்பிடித்தவன் தோல்வி காணமாட்டான். என்று நபீ (ஸல்) அவர்கள் அருளினார்கள்.

ஆதாரம் – அல்ஜாமிஉல்கபீர் 
அறிவிப்பு – அபுத்தர்தா (றழி) 

( தொடரும்………) 

==============================================================



தொடர் —-01

அவ்லியாக்களிடம் வஸீலாத்தேடுதல்,உதவிதேடுதல்,நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித் தரக்கேட்டல் முதலியவை “ஷிர்க்” என்றும், குப்று என்றும் சிலர் கூறுகிறார்கள். 
அவர்கள் தமது விஷமத்தனமான வழிகெட்ட கொள்கையை பரப்பி மக்களை தமது வலைக்குள் எடுத்துக் கொள்ளத் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களின் விஷமப் பிரச்சாரத்தினால் ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களிற் பலர் வழி தவறி விட்டார்கள் 
நபிமார்களைக் கொண்டும், அவ்லியாக்களைக் கொண்டும் வஸீலாத் தேடுவதை வணக்கமெனக்கருதி கஷ்ட நஷ்டங்களின் போது “யாறஸூலல்லாஹ்” என்றும், “யாமுஹ்யித்தீன்” என்றும், “யாரிபாயி” “யாஹாஜா” என்றும் உதவி தேடி வந்தமக்கள் அவ்வாறு செய்தால் “ஷிர்க்” ஏற்பட்டு விடும் எனப்பயந்து அந்த வழக்கத்தை கைவிட்டு விட்டார்கள். பயந்து கைவிட்டது மட்டுமல்ல அது நிஜமாகவே “ஷிர்க்” கை ஏற்படுத்திவிடும் என நம்பிக்கொண்டார்கள். 
ஒருவர் வஸீலா கேட்பது ஆகுமென்று நம்பிக்கொண்டு வஸீலாக் கேட்காமல் இருப்பதற்கும் அது “ஷிர்க்” என நம்பிக்கொண்டு கேட்காமல் இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. 
ஒருவன் வஸீலாக் கேட்பது ஆகுமென்று நம்பிக் கொண்டு கேட்காமலிருப்பானாயின் அவன் குற்றவாளியாக மாட்டான். ஆனால் வஸீலாக் கேட்பது “ஷிர்க்” என்று நம்பிக்கொண்டு ஒருவன் கேட்காமல் இருந்தால் அந்த நம்பிக்கையைக்கொண்டே அவன் பெரும் குற்றவாளியாகி விடுவான் 
மார்க்கத்தில் “ஷிர்க்” கான காரியம் ஒன்றை “ஷிர்க்”கில்லை. என்று நம்புவதும், “ஷிர்க்” இல்லாத காரியம் ஒன்றை “ஷிர்க்” என்று நம்புவதும் பெருங்குற்றமாகும். 
வஸீலாத் தேடுதல் “ஷிர்க்” என்று சொல்பவர்கள் உலமாக்களாயிருப்பினும், ஏனையோராயிருப்பினும் அவர்கள் அனைவரும் பெரும் பாவத்திலேயே இருக்கின்றார்கள். 
எனவே, “வஸீலாத் தேடலாமா?” என்ற இத்தலைப்பில் என்னால் முடிந்தவரை ஆதாரங்கள் திரட்டி வஸீலாத் தேடலாமா என்பதை நிரூபித்து எழுதுகின்றேன். 
வஸீலாக் கேட்பது தொடர்பாக “சுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையுடைய இமாம்களும், அறிஞர்களும் அநேக நூல்கள் எழுதியிருக்கின்றார்கள். 
அவற்றில் நடுத்தரமான நூல்களும் உள்ளன. மிக விளக்கமான நூல்களும் உள்ளன. நான் அவற்றில் முக்கிய நூல்களிலிருந்து வஸீலாவை நிரூபித்துக் காட்டக் கூடிய பிரதான ஆதாரங்களை மட்டும் பொறுக்கியெடுத்து இங்கு எழுதுகின்றேன். 
ஒருவன் ஒரு தேவையை அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்பது மட்டும் தான் ஆகுமேயன்றி நபிமார்கள், அவ்லியாக்கள் ஆகியோரின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பதும், நபிமார்களிடமும், அவ்லியாக்களிடமும் நேரடியாகக் கேட்பதும் ஆகாதென்று வஹ்ஹாபிகள் கூறுகின்றார்கள். 
நான் “வஸீலாத் தேடலாமா?” என்ற இத் தலைப்பில் வஹ்ஹாபிகள் ஆகுமென்று கூறுகின்ற விஷயத்தை விட்டுவிட்டு அவர்கள் “ஷிர்க்” என்று கூறி வரும் விஷயங்களுக்கு மட்டும் விளக்கம் எழுதுகின்றேன். 
வஸீலா என்ற சொல் “வஸல” “தவஸ்ஸல” எனும் சொல்லடிகளிலிருந்து பிறந்த ஒரு சொல்லாகும். 
“அல்வஸீலா” என்றால் எதைக் கொண்டு அல்லாஹ்வின் பக்கம் நெருங்கப்படுகின்றதோ அது “வஸீலா” என்றழைக்கப்படும். 
“வஸீலா” என்ற சொல்லுக்கு “வஸாயில்” என்றும் “வஸீல்” என்றும் “வுஸூல்” என்றும் பன்மை வரும். அல்லாஹ்விடம் கேட்டல் 
அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் “என்னை அழையுங்கள் உங்களுக்கு நான் விடைதருவேன்” என்று கூறியுள்ளான். இத்திருவசனத்தின் படி ஒருவன் தமது தேவையை அல்லாஹ்விடம் கேட்டால் அவன் அதை நிறைவேற்றிவைப்பான் என்பது தெளிவாகி விட்டது. 
ஒருவன் தனது தேவையை அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்பது தொடர்பாக யாருக்கும் எந்தப் பரச்சினையும், எந்தக் கேள்வியுமில்லை.இதை யாரும் மறுப்பதுமில்லை. 
ஒரு தேவையை கேட்பது தொடர்பாக மூன்று வகைகள் உள்ளன: 
ஒன்று – ஒருவன் தனது தேவையை அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்பது உதாரணமாக “யா அல்லாஹ்! எனது நோயைச் சுகப்படுத்துவாயாக” என்பது போன்று 
இரண்டு – ஒருவன் தனது தேவையை நபிமார்கள், அவ்லியாக்கள் முதலானோரின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பது. உதாரணமாக “யா அல்லாஹ்! எனது நோயை நபிமார்கள், அவ்லியாக்களின் பொருட்டைக் கொண்டு சுகப்படுத்துவாயாக” என்பது போன்று 
மூன்று – ஒருவன் தனது தேவையை நபிமார்களிடமும், அவ்லியாக்களிடமும் நேரடியாகக் கேட்டல். உதாரணமாக “நபிமார்களே! அவ்லியாக்களே! எனது நோயைச்சுகப்படுத்துங்கள்” என்பது போன்று. இம் மூன்று வகையில் அதாவது அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்பதில் எந்தப்பிரச்சினையுமில்லை.எத்தகைய கருத்து வேறுபாடுகளுமில்லை. 
எனினும் நபிமார்கள், அவ்லியாக்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பதிலும், அன்பியாக்களிடமும், அவ்லியாக்களிடமும் கேட்பதிலும் தான் கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. 
முதலில் அன்பியாக்கள், அவ்லியாக்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பது பற்றி வந்துள்ள ஹதீஸ்களில் முக்கியமானவைகளை எழுதுகிறேன். 
நபிமொழி : 01 
ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களை சுவர்க்கத்தில் இருக்கச் செய்து அங்கு நின்ற மரமொன்றை சுட்டிக்காட்டி இந்த மரத்தை நீங்கள் நெருங்க வேண்டாமென்று பணித்திருந்தான். 
அல்லாஹ்வின் கட்டளையை வழிகெடுக்கும் ஷைத்தானின் தூண்டுதலால் மீறிய நபி ஆதம் (அலை) அவர்கள் அந்த மரத்தண்டை சென்று அதிலிருந்த பழத்தை பறித்துச்சாப்பிட்டார்கள். இதனால் அவர்கள் பாவம் செய்தவர்களாகி விட்டார்கள். 
பாவம் செய்த நபியவர்கள் பின்னர் மனம் வருந்தியவர்களாக “இறைவா! முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருட்டினால் எனது குற்றத்தை மன்னித்துக் கொள்வாயாக!” என்று வேண்டினார்கள். 
அதற்கு அல்லாஹ் அப்படியொருவரை நான் படைக்கவில்லையே! அவர் பற்றி உனக்கு எவ்வாறு தெரியவந்ததென்று ஆதம் நபியிடம் கேட்டான். 
அதற்கு ஆதம்நபி அவர்கள் “இறைவா! நீ என்னை உனது கையால் படைத்து எனதுயிரை என்னில் ஊதியபொழுது நான் எனது தலையை உயர்த்திப் பார்த்தேன்.” 
அப்பொழுது “அர்ஷூ” என்னும் உனது உயர்வு மிக்க சிம்மாசனத்தின் தூன்களில் “லாயிலாக இல்லல்லாஹூ முஹம்மதுர்றசூலுல்லாஹி” என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். 
உனது திருப்பெயருடன் முஹம்மத் என்ற பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. 
உனது பெயருடன் இன்னுமொருவரின் பெயரை நீ சேர்ப்பதென்றால் அவர் உனக்கு மிக விருப்பமானவராகத்தான் இருப்பார். என்பதை உணர்ந்துதான் அவரின் பொருட்டைக் கொண்டு எனது குற்றத்தை மன்னிக்குமாறு உன்னிடம் கேட்டேன் என்று கூறினார்கள். 
அதற்கு அல்லாஹ் ஆதமே! நீ உண்மை சொல்லி விட்டாய். நிச்சயமாக அவர் சிருஷ்டிகளில் எனக்கு மிக விருப்பமானவர்தான். அவரின் பொருட்டைக் கொண்டு நீ என்னிடம் கேட்டால் நிச்சயமாக நான் உன்னை மன்னித்து விடுவேன். எனக் கூறிவிட்டு முஹம்மத் இல்லையானால் உன்னைப் படைத்திருக்கவும் மாட்டேன் என்றும் கூறினான். 
ஆதாரம் : அல்ஹாகிம் 
இமாம் பைஹகீ (றஹ்) அவர்கள் இந்த ஹதீஸை “தலாயினுன்நுபுவ்வத்” எனும் நூலிலும் கூறியுள்ளார்கள். 
இந்த ஹதீஸை இமாம் ஹாகிம் (றஹ்) அவர்கள் பதிவு செய்து விட்டு இது சரியான ஹதீது என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். 
இந்த ஹதீஸில் வஸீலாவுக்கு ஆதாரம் இருப்பது கண் உள்ளவர்களுக்கு நன்றாக விளங்கும். எனினும் அதை இங்கு விரிவாக விளக்குவதற்கு முன் மேலே கூறிக்காட்டி​ய ஹதீஸில் நபி ஆதம் (அலை) அவர்கள் பாவம் செய்ததாகவும், அதற்காக நபி (ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டு பாவமன்னிப்புத் தேடியதாகவும் கூறப்பட்டுள்ளது பற்றி ஒரு சில வரிகள் மட்டும் எழுதுகின்றேன். ஆதம் நபி முதல் அண்ணல் நபீ(ஸல்) அவர்கள் வரை உலகில் தோன்றிய சகல நபீமார்களும் “நுபுவ்வத்” எனும் நபித்துவம் கிடைப்பதற்கு முன்னும், அது கிடைத்த பின்னும் “மஃஸும்” பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்பது ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கையாயிருக்க ஆதம்(அலை) அவர்கள் பாவம் செய்தார்கள் என்று கூறப்பட்டிருப்பதன் விளக்கம் என்ன? என்று ஒரு கேள்வி எழும். 
இன்னும் உலகப்பிரசித்தி பெற்ற இறைஞான மேதை அஷ்ஷெய்கு அபூ மத்யன்(றழி) அவர்கள் “லவ்குந்து மகான ஆதம லஅகல்துஷ்ஷஜறத மஅ அஸ்லிஹா” (ஆதமுடைய இடத்தில் நான் இருந்திருந்தால் அந்த மரத்தை நான் வேருடன் சாப்பிட்டிருப்பேன்) என்று கூறியதன் விளக்கம் என்ன? என்றும் இன்னொரு கேள்வியெழும். 
இவ்விரு கேள்விகளும் விரிவான விளக்கம் கூறித் தெளிவுபடுத்த வேண்டிய கேள்விகளாயிருப்பதனால் அவற்றை இக் கட்டுரையில் விளக்காமல் இன்னுமொரு கட்டுரையில் விளைக்கிவைக்க நாடியுள்ளேன் இன்ஷா அல்லாஹ். 
மேலே கூறிய ஹதீஸில் இருந்து நபீ(ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் வஸீலா கேட்பது ஆகும் என்பதும், முதன் முதலில் நபீ ஆதம் (அலை) அவர்கள்தான் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பதும், நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியவர் ஒரு நபீயேயன்றி சாதாரணமானவரல்ல என்பதும், ஒரு தந்தையின் பாவம் மன்னிக்கப்படுவதற்கு நபீ(ஸல்) அவர்கள்தான் பொருட்டாக காரணமாக இருந்துள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது. 
ஆதம் நபீ(அலை) அவர்கள் முதல் மனிதனாகவும் நபீ(ஸல்) அவர்கள் ஆதம் நபீக்கு பல்லாயிரம் வருடங்கள் கழித்துப் பிறந்த அவர்களின் மகனாகவுமிருக்க பிந்தினவரின் பொருட்டைக் கொண்டு முந்தினவர் வஸீலாத் தேடுதல் எவ்வாறு சாத்தியமாகுமென்று ஒரு கேள்வி எழுகின்றது. 
இக் கேள்வியும் முந்தின இரு கேள்விகள் போல் விரிவான பதில் கொண்டு விளக்கவேண்டிய ஒன்றுதான் எனினும் புத்தியும் சிந்திக்கும் ஆற்றலும் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக எழுதுகின்றேன். அல்லாஹ் நபீஆதம்(அலை) அவர்களை படைப்பதற்கு 2000ம் வருடங்களுக்கு முன் நபீ முஹம்மத்(ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்துவிட்டான். அவ்வொளிக்கு “நுபுவ்வத்” எனும் நபித்துவத்தையும் வழங்கினான். 
இதனால்தான் “குந்துநபிய்யன் வஆதமு பைனல்மாஇ வத்தீனி” (நபீ ஆதம் அவர்கள் படைக்கப்படுவதற்காக நீரையும் மண்ணையும் அல்லாஹ் கலந்து பிசைந்து கொண்டிருந்த சமயமே நான் நபீயாக இருக்கின்றேன்) என்று நபீ(ஸல்) அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் ; துர்முதி,அஹ்மத், 
ஷர்ஹுஸ் ஷுன்னா 
அறிவிப்பு ; அபூஹுரைரா(றழி) 
நபீ ஆதம் (அலை) அவர்கள் “அபுல் ஜஸத்” சடலத்தின் தந்தை,என்றும் , நபீ(ஸல்) அவர்கள் “அபுர்றூஹ்” றூஹின்-உயிரின் தந்தை என்றும் வர்ணிக்கப்படுகிறார்கள். இதனால்தான் தந்தைக்கு முன் பிறந்த தனயன் என்று நபீ(ஸல்) அவர்கள் சொல்லப்படுகிறார்கள். சட உலகின் தந்தையாக நபீஆதம் (அலை)அவர்களும், ஆன்ம உலகின் தந்தையாக நபீ(ஸல்) அவர்களும் இருக்கின்றார்கள். 
நபீஆதம்(அலை) அவர்களின் உயிருக்குத் தந்தையாக நபீ(ஸல்) அவர்கள் இருப்பது போல், நபீ(ஸல்) அவர்களின் உடலுக்குத் தந்தையாக நபீ ஆதம் (அலை) அவர்கள் விளங்குகின்றார்கள். எனவே ஆதம் நபியிலும், அஹ்மத் நபியிலும் எதார்த்தத்தில் முந்தினவர்கள் நபி(ஸல்) அவர்களேயாவர். இவ்விவரத்தின் படி பிந்தினவர்தான் முந்தினவரைக் கொண்டு வஸீலாத் தேடியுள்ளாரேயன்றி பிந்தினவரைக் கொண்டு முந்தினவர் உதவி தேடவில்லை. 
​ மேலே எழுதிக்காட்டிய ஹதீஸில் நபி(ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவது ஆகுமென்பதற்கு போதிய ஆதாரமுண்டு. “வமன் யுஷாபிஹ் அபஹீ பமா ளலம” தந்தை செய்த வேலையை மக்கள் செய்வதில் தப்பொன்றுமில்லை. 
நபிமார்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடலாம் என்பதற்கு இந்த அளவு தெளிவானதும்,சரியானதுமான ஒரு ஹதீஸ் இருக்க வஸீலாத் தேடுதல் “ஷிர்க்” என்று கூறுபவன் அகக் கண்ணும், புறக்கண்ணும் குருடான அந்தகனும், மூளை கலங்கிய முழுப்பைத்தியக் காரணுமேயாவான். 
வஸீலாத் தேடுதல் “ஷிர்க்” என்று கூறும் வஹ்ஹாபிகளிடம் மேலே கூறிய ஹதீஸைக் கூறிக்காட்டினால் அதை மறுப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ வழியில்லாததால் அது ளயீபான – பலங்குறைந்த ஹதீஸ் என்று சொல்லிவிடுகின்றார்கள். 
மேலும் இந்த ஹதீஸ் புஹாரியில் இருக்கிறதா? அல்லது முஸ்லிமில் இருக்கிறதா? சரியான ஆறு ஹதீதுக் கிரந்தங்களில் இருக்கிறதா? என்றும் கேட்கின்றார்கள். 
இவர்கள் கேட்கும் தோரணையைப் பார்த்தால் ஏதோ ஆதாரம் காட்டி விட்டால் வஹ்ஹாபிஸத்தை விட்டுவிட்டு “சுன்னத்வல் ஜமாஅத்” அகீதாக் கொள்​கையை உடனே ஏற்றுக் கொள்வார்கள் போல் தோன்றும் நாம் காட்டி விட்டாலோ “இது ளயீபானது” பலங்குறைந்தது என்று மீண்டும் தமது பிடிவாதப்போக்கையும், மனமுரண்டையமே ​வெளிப்படுத்தி மறுப்பார்கள். 
இந்த பலமிக்க ஹதீஸை பலங்குறைந்தது-ளயீபானது என்று கூறும் வஹ்ஹாபிகளிடம் அவ்வாறு நீங்கள் சொல்ல என்ன ஆதாரம்? யாராவது முன்னோர்கள் அவ்வாறு எழுதியுள்ளாரகளா? என்று நாம் திருப்பிக்கேட்டால் விழியை பிதுக்கி மௌனிகளாகின்றனரேயன்றி முறையான பதில் கூறுகிறார்கள் இல்லை. 
இதற்குக்காரணம் மேற்குறித்த ஹதீஸ் பலங்குறைந்தது என தட்டிக்கழிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லாதிருப்பதேயாகும். 
ஹதீதுக்கலை மேதைகளில் யாராவது அந்த ஹதீஸ் ளயீபானது என்று சொல்லியிருக்கவேண்டும். அல்லது அது ளயீபானதா இல்லையா? என்பதை ஆராய்ந்தறியக் கூடியவர் அத்தகைய ஆற்றலுடையவர் அது ளயீபானது என்று கூறவேண்டும். இவ்விரு வழிகளில் ஒன்றின் மூலம் தான் ளயீபான ஹதீஸை அறிந்து கொள்ளலாம். 
ஹதீதுக்கலை மேதைகளில் யாராவது அந்த ஹதீது ளயீபானது என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை. இன்று வாழ்பவர்களில் ளயீபான ஹதீஸை கண்டுபிடிக்குமளவுக்கு அறிவாற்றல் உள்ளவர்களும் யாருமில்லை. 
ஒரு ஹதீது ஸஹீஹானதா? பலங்கூடியதா? ளயீபானதா? பலங்குறைந்ததா? என்பதை ஆராய்ந்தறியக்கூடிய ஆற்றல் இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் போன்ற ஹதீதுக்கலை விற்பன்னர்களுக்கு மட்டும் தான் இருந்தது. 
ஒரு ஹதீது ளயீபானதா இல்லையா? என்பதைக் கண்டுபிடித்தல் இலேசான கருமமில்லை. அதற்குப் பல கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக ஹதீதுக் கலையில் விஷேட திறமை பெற்றிருக்க வேண்டும். 
விஷயம் இவ்வாறிருக்க அறபுக்கல்லூரியில் ஆறேழு வருடங்கள் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் கீழ் ஒரு சில கிதாபுகளை மட்டும் ஓதிவிட்டு, ளயீபான- ஸஹீஹான ஹதீது கண்டுபிடிக்க முற்படுவது கண் தெரியாதவன் காரோட்ட முற்படுவது போன்ற முட்டாள் தனமாகும். இதனால் தானும் விபத்துக்குள்ளாகி பிறரும் விபத்துக்குள்ளாக நேரிடும் என்பதை இவர்கள் உணரவேண்டும். 
எனவே இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் போன்ற ஹதீதுக் கலையில் பாண்டித்தியம் பெற்றவர்கள் இன்று உலகில் எக் கோணத்திலும் இல்லாதிருப்பதால் ஒரு ஹதீது ளயீபானதா? ஸஹீஹனதா? என்று ஆராய்ந்தறியக் கூடிய யாருமே இல்லை. 
ஹதீதுக்கலை மேதைகளில் யாராவது இன்ன ஹதீது ளயீபானதென்றும், இன்னஹதீது ஸஹீஹானது என்றும் சொல்லியிருந்தால அன்றி வே​றெந்த வகையிலும் அவற்றை கண்டுபிடிக்க முடியாது. 
நான் மேலே கூறிக்காட்டிய இமாம் பைஹகீ, இமாம் ஹாகிம் (றஹ்) ஆகிய ஹதீதுக்கலை மேதைகள் எடுத்தாண்டு பேசி வந்த ஹதீஸை தகுதி வாய்ந்த எந்தவொரு “முஹத்திது” ஹதீதுக் கலை மேதையும் ளயீபென்று- பலங்குறைந்தது என்று சொல்லாமல் இருக்கும் போது நாலு கிதாபை ஓதிவிட்டும், நாலு தமிழ்ப் புத்தகங்களை வாசித்து விட்டும் இது ளயீபானது இது ஸஹீஹானது என்று நபி மொழியில் தன்னிச்சையாக தீர்ப்புக் கூறும் வஹ்ஹாபிகள் அல்லாஹ்வைப் பயந்து அவனது தண்டனைக்கும் அஞ்சிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு ஸஹீஹான ஹதீஸை ளயீபானதென்று சொல்வது பெரிய குற்றமாகும். 
மேலே கூறிய ஹதீது ளயீபானதென்று வஹ்ஹாபிகள் கூறுவதற்கு அவர்களின் ஒரேஒரு ஆதாரம் என்ன தெரியுமா? அந்த ஹதீது பிரசித்தி பெற்ற ஆறு ஹதீதுக்கிரந்தங்களில் இடம் பெறாமலிருப்பதாகும். 
புஹாரி, முஸ்லிம், அபூதாவுத், துர்முதி, இப்னுமாஜா,நஸயீ போன்ற ஆறு ஹதீஸ் கிரந்தங்களிளும் இடம் பெற்றிருப்பவை மட்டும் தான் சரியான ஹதீஸ்கள் என்றும், ஏனைய ஹதீஸ் கிரந்தங்கள் யாவும் ளயீபானவை என்றும் வஹ்ஹாபிகள் நம்புகின்றனர் போலும். 
இது அவர்களின் அறியாமையும், மூளைக் கோளாறுமேயாகும். ஏனெனில் சரியான கிரந்தங்கள் எனப்படும் பிரசித்தி பெற்ற புஹாரி, முஸ்லிம், அபூதாவுத், துர்முதி, இப்னுமாஜா,நஸயீ போன்ற கிரந்தங்களில் வராத ஸஹீஹான ஹதீதுகள் பல்லாயிரம் இருக்கின்றன. 
ரியாளுஸ்ஸாலிஹீன் அத்கார், அல்முவத்தா, அல்தர்ஹீபுவத்தர்கீப், முஸ்தத்றக், ஜாமிஉஸ்ஸகீர், பைஹகீ, தாரகுத்னீ போன்ற கிரந்தங்களில் ஸஹீஹான- சரியான ஹதீதுகள் பல்லாயிரம் இருக்கின்றன. 
இந்நூலில் வந்துள்ள பல்லாயிரம் ஹதீதுகளைக் கொண்டு புகஹாக்கள் எனும் மார்க்கச் சட்ட மேதைகள் சட்டங்கள் கூட வகுத்துள்ளார்கள். 
பிக்ஹூச்சட்டங்கள் எடுக்கப்படுகின்ற ஹதீதுகள் ஸஹீஹான- சரியானவையாக இருக்க வேண்டும் என்பது சட்ட மேதைகளின் ஏகோபித்த முடிவாகும். 
உண்மை இவ்வாறிருக்க ஆறுகிரந்தங்களில் உள்ள ஹதீதுகளை மட்டும் தான் நாங்கள் நம்புவோம். ஏனைய கிரந்தங்களில் உள்ளதை நம்பமாட்டோம் என்ற பானியில் எடுத்த எடுப்பில் புஹாரியில் இருக்கிறதா? முஸ்லிமில் இருக்கிறதா? என்று வஹ்ஹாபிகளும், வழிகெட்ட சில்லறை ஏஜன்டுகளும் கேட்பது முழு முட்டாள்தனமான கேள்விகளேயன்றி அறிவுபூர்வமான கேள்விகள் அல்ல. மேலே குறித்த ஆறு கிரந்தங்களும் சரியான ஹதீதுகளைக் கொண்டவை என்று சொல்வதனால் அவ்வாறு கிரந்தங்களிலுமுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை என்பதுதான் அர்த்தமேயல்லாமல் அவற்றிலல்லாத ஹதீதுகளெல்லாம் பிழையென்பதோ, பலங்குறைந்த தென்பதோ கருத்தல்ல. வஹ்ஹாபிகளின் விளக்கம் முழுவதுமே குழப்பமானதுதான். 
எனவே, மேலே கூறிய இமாம் ஹாகிம் அவர்கள் அறிவித்துள்ள ஹதீதிலிருந்து நபி(ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டு அதாவது அவர்களைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவது ஆகுமென்பதும், அது நபி ஆதம் (அலை) அவர்களின் செயல் என்ற வகையில் அதைச் செய்வது நல்ல காரியம் என்பதும் தெளிவாகிவிட்டது. 
பொருட்டு பற்றி ஒரு குறிப்பு 
வஸீலாத்தேடும் பொழுது “நபிமார்களின் பொருட்டைக் கொண்டு அவ்லியாக்களின் பொருட்டைக் கொண்டு” என்று நாம் கேட்கிறோம்.எனவே “பொருட்டு” என்றால் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். 
பொருட்டு என்பதற்கு அறபு மொழியில் “ஜாஹ்” என்றும் “ஹக்” என்றும் சொல்லப்படும். உதாரணமாக “இஷ்பி மறளீ பிஹக்கி நபிய்யிக” (உனது நபியின் பொருட்டால் எனது நோயைச் சுகப்படுத்து என்பது போன்று) 
சுருங்கச் சொன்னால் அவர்களின் “றுத்பத்” எனும் பதவி கொண்டும், “மன்ஸிலத்” எனும் அந்தஸ்து கொண்டும், எனது நோயைச் சுகப்படுத்திவிடு என்பதாகும். இமாம் ஹாகிம் அவர்கள் அறிவித்துள்ள மேற்கூறிய நபி மொழியில் நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாக் கேட்பதற்கு ஆதாரமிருப்பதுடன் அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்னாலேயே அவர்களைக் கொண்டு வஸீலாக் கேட்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும் ஆதாரமிருக்கிறது. 
நபிமொழி – 02 
கண்பார்வை இழந்த ஒரு சஹாபி நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் றசூலே எனக்கு கண்பார்வை கிடைப்பதற்கு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்” என்று வேண்டினார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் “நீ விரும்பினால் நான் துஆ கேட்கிறேன் நீ விரும்பினால் பொறுமை செய்து கொள். அதுதான் சிறந்ததுமாகும்” என்று கூறினார்கள். 
இவ் விஷயத்தில் பொறுமை செய்ய விரும்பாத ஸஹாபி நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள். நாயகமே என்று சொன்னார்கள். 
நபி(ஸல்) அவர்கள் அவரை “வுளு” எனும் சுத்தம் செய்ய வைத்துப் பின்வருமாறு “துஆ” வை கற்றுக் கொடுத்தார்கள்.”அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக வஅதவஜ்ஜஹூ இலைக பிநபிய்யிக முகம்மதின் நபிய்யிர் றஹ்மதி யாமுகம்மத் இன்னீ அதவஜ்ஜஹூ இலாறப்பீ பீகளாயி ஹாஜதீ லிதுக்லாலீ அல்லாஹூம்ம ஷப்பி உஹூபிய்ய “ 
“இறைவா! நான் உன்னிடம் கேட்கிறேன் “றஹ்மத்” அருளுடைய நபியான உனது நபி முகம்மதைக் கொண்டு உன் பக்கம் முன்னோக்குகின்றேன். முகம்மதே! எனது தேவை எனக்கு நிறைவேற்றப்படுவதற்காக எனது இறைவனளவில் உங்களைக் கொண்டு முன்னோக்குகின்றேன். இறைவா! எனக்கு அவர்களைச் சிபாரிசு செய்யக்கூடியவர்களாக ஆக்கிவிடு” 
ஆதாரம் : நஸயீ, துர்முதீ தபறானீ, பைஹகீ 
அறிவிப்பு : உத்மான் பின் ஹூனைப் (றழி) 
இந்த ஹதீஸை இமாம் பைஹகீ (றஹ்) அவர்கள் சரியெனக் கூறிவிட்டு “பகாம வகத் அப்ஸற” அந்த ஸஹாபி கண்ணொளி பெற்று எழுந்து சென்றார் என்றும் எழுதியுள்ளார்கள். 
இன்னுமிந்த ஹதீஸை இமாம் புஹாரி அவர்கள் தங்களின் “தாரீக்” எனும் நூலிலும் இப்னுமாஜா இமாம் ஹாகிம் போன்ற ஹதீஸ்கலை விற்பன்னர்கள் “முஸ்தத்றக்” எனும் நூலிலும் கூறியுள்ளார்கள். இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி(றழி) அவர்கள் தங்களின் “அல்ஜாமிஉல்கபீர்” “அல்ஜாமிஉஸ்ஸகீர்” எனும் நூல்களிலும் கூறியுள்ளார்கள். 
இந்த ஹதீதில் நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலா தேடப்பட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது. 
ஹதீதில் வந்துள்ள “பினபிய்யிக” (உனது நபியைக் கொண்டு) என்ற சொல்லும், “வஅதவஜ்ஜஹூபிக” (உங்களைக் கொண்டு முன்னோக்குகின்றேன்) என்ற சொல்லும் வஸீலாவின் விவகாரத்தை விளக்கமாக கூறுகின்றன. எனவே, மேலே குறித்த ஹதீதில் இருந்து நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது ஆகுமென்பதும், நபி(ஸல்) அவர்கள் ஹயாத்துடன் உயிருடனிருந்த நேரத்திலேயே அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டுள்ளதென்பதும், அவர்களைக் கொண்டு வஸீலாத்தேடுமாறு சொன்னது நபி(ஸல்) அவர்களேதான் என்பதும் தெளிவாகி விட்டது. 
ஹதீதின் புதையல் 
நபி(ஸல்) அவர்களிடம் தனது கண்ணொளிக்காக ‘துஆ’ கேளுங்கள் என்று ஸஹாபி கேட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் அவருக்காக “துஆ” க் கேட்காமல் நீ விரும்பினால் துஆ கேட்கிறேன். நீவிரும்பினால் பொறுமை செய். அதுதான் சிறந்தது. என கூறியதில் ஆழமான பல ஆன்மீக மெய்ஞ்ஞானக் கருத்துக்கள் அடங்கியுள்ளன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன். 
மனிதரில் பலரகம் 
ஒரு மனிதனுக்கு நோய் வந்துவிட்டால் அந்த நோயை அல்லாஹ்வினால் அவனுக்கு வழங்கப்பட்ட ஒரு சன்மானமெனக் கருதி அந்நோயை மருந்து மாத்திரையைக் கொண்டு சுகப்படுத்துவதற்கு வழி செய்யாமல் தனக்குக் கிடைத்த அச்சன்மானத்தை முழுமனதுடன் ஏற்று அல்லாஹ்வின் செயலைப் பொருந்திக் கொண்டு வாழ்பவர்கள் ஒரு கூட்டத்தினர். 
இக் கூட்டத்தினர் “முதவக்கிலீன்”” அல்லாஹ்வில் “”தவக்குல்” வைத்தவர்களென்று அழைக்கப்படுகின்றார்கள். இவர்கள் நோய்க்கு மருந்து செய்யாமல் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பதுடன் நோய் தந்தவன் விரும்பினால் சுகப்படுத்துவான் என்ற நம்பிக்கையில் இருந்து விடுவார்கள். எந்தவொரு தேவையேற்பட்டாலும் பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்காக துஆ கேட்கமாட்டார்கள். “துஆ” கேட்பது அல்லாஹ்வின் செயலை ஆட்சேபித்தல் போன்றதென அவர்கள் கருதுவார்கள். இவர்கள் தான் “முதவக்கிலீன்” என்றழைக்கப்படுகின்றார்கள். 
இவர்களல்லாதவர்கள் நோய் வந்தால் பொறுத்திருக்க மாட்டார்கள். உடனே அதற்கான பரிகாரம் செய்வார்கள். மருந்து மாத்திரைகள் சாப்பிடுவார்கள். எந்த தேவைக்கும் அல்லாஹ்விடம் “துஆ” கேட்பார்கள். 
இவ்வாறு உலகில் இரு பிரிவினர் இருக்கின்றார்கள். முந்தினவர்கள் “முதவக்கிலீன்” அல்லாஹ்விடம் தமது சகல காரியங்களையும் ஒப்படைத்துவிட்டு அவனுடைய வணக்க வழிபாட்டில் நிலைத்திருப்பார்கள். 
இவர்கள் தமது வாழ்க்கைச் செலவுக்காகவும், உணவு, உடை போன்றவற்றுக்காகவும், உழைக்கமாட்டார்கள். அல்லாஹ் இவர்களின் காலடிக்கு அனுப்பி வைப்பதை மட்டும் ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் “முதவக்’கிலீன்” என்றழைக்கப்படுவது போல் “முகர்றபீன்” அல்லாஹ்வை நெருங்கியவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். இவர்கள் அவ்லியாக்கலில் ஒரு பிரிவினர். 
( தொடரும்………) 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments