Tuesday, April 23, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கொள்கைப் போர் புரிந்த புரட்சிப் புயல் அஷ்ஷஹீத் மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள் 

கொள்கைப் போர் புரிந்த புரட்சிப் புயல் அஷ்ஷஹீத் மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள் 

By : MIM. Ansar (Teacher)
فسألوا أهل الذكر إن كنتم لاتعلمون (النحل43 )43 
“பஸ்அலூ அஹ்லத் திக்ரி இன்குன்தும் லாதஃலமூன்” நீங்கள் அறியாதவர்களாகவிருந்தால் இறை தியான சிந்தனையுடைய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர்களாக.
(அல்குர்ஆன் -நஹ்ல் : 43)
“உலமாக்கள் நபீமார்களின் வாரிசுகள்”
(புஹாரீ-10முஸ்னத் அஹ்மத்-21336)
மேற்படி அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவற்றின் போதனைப்படி மக்ளை இறை வழியின்பால் அழைத்தவர்கள்தான் எமது ஆத்மீக வழிகாட்டிகளான அவ்லியாக்களும், இமாம்களும் ஸாலிஹான உலமாக்களும் ஆவர். இவர்கள் இவ்வுலக மக்களுக்கு இறைஞான தத்துவங்களையும், அண்ணலாரின் அகமியங்களையும், அள்ளி வழங்கினார்கள். இதனால் கறை படிந்த எத்தனையோ உள்ளங்களில்போடப்பட்டிருந்த திரைகள் கிழித்தெறியப்பட்டு மெய்ஞ்ஞான தீபம் எனும் ஒளிச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. இவ்வாறு எண்ணற்ற முஸ்லிம்களின் உள்ளங்களில் ஏகத்துவத்தை ஏற்றி வைத்த அறிஞர்களில் ஒருவர் தான் சங்கைக்குரிய மௌலானா மௌலவீ ஆஷிஹுல் அவ்லியா அஷ்ஷஹீத் MSM. பாறூக் (காதிரீ) அவர்களாகும்.

அவனியில் அவதரித்தல்.

தௌஹீதின் இமயம் ஏகத்துவத்தின் எழுச்சிக் குரல் சுன்னத் வல் ஜமாஅத்தின் சிங்கம் மௌலவீ அல்ஹாஜ் MSM. பாறூக் (காதிரீ) அவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்த அகமது மீராசாஹிபு – அவ்வாப்பிள்ளை தம்பதியினருக்கு அருமைப் புதல்வராக 1957 ஆண்டு இவ்வையகத்தில் அவதரித்தார்கள்.
கல்வி கற்றல்
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மௌலவீ MSM. பாறூக் (காதிரீ) அவர்கள் தமது 5வது வயதில் அதாவது 1962ம் ஆண்டு அல்குர்ஆன் ஓதுவதற்காக அபுல் இர்பான் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் (வலீ) அவர்கள் அதிபராக கடமையாற்றிய அல் மத்ரசதுர் றப்பானிய்யஹ் குர்ஆன் மத்ரஸஹ்வில் சேர்க்கப்பட்டார்கள்.
“வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற்கிணங்க இவர்கள் தமது எட்டாவது வயதில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதக்கற்றுக் கொண்டார்கள். இவரது திறமையை உணர்ந்த பெரிய ஆலிம் அவர்கள் சுமார் 2 வருடங்கள் வரை தமது மத்ரசாவில் அறபு, இலக்கணம், இலக்கியம், தப்ஸீர், பிக்ஹ், மன்திக், அகீதா போன்ற அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார்கள்.
அதன்பின் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்த அன்னார் 1967ம் ஆண்டு காத்தான்குடி மத்ரசதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு சுமார் 7 வருடங்கள் ஓதியபின் மௌலவீ பாஸில் பலாஹி பட்டம் பெற்று தொடர்ந்து 3 வருடங்கள் இம்மத்ரஸாவிலேயே விரிவுரையாளராக கடமை புரிந்த இவர்கள் இங்கு ஓதிய காலத்தில் கலையக ஆளுமன்றத்தின் பிரதிக் கலாச்சார அமைச்சராகப் பதவி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.
அறபுக் கல்லூரியின் அதிபர்
பின்னர் அட்டாளைச்சேனை “ஷர்க்கிய்யஹ்” அறபுக் கல்லூரியில் சுமார் 1 வருடம் வரை அதிபராகக் கடமை புரிந்தார்கள். அதன்பின் ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் பஃதாத் பள்ளிவாயலில் பேஷ் இமாமாகவும் மஆனிமுன் முஸ்தபா அறபுக் கல்லூரியில் அதிபராகவும் கடமை புரிந்தார்கள். இறுதியாக காத்தான்குடியில் சுன்னத்வல்ஜமாஅத்தின் தளமாக இயங்கும் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் வளாகத்தில் அமைந்திருக்கும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றி பல “றப்பானீ” ஆலிம்களை உருவாக்கினார்கள்.
 
இறைஞானக் கல்வி பெறல்
ஆத்மீகப்பேரொளி அறிஞர் அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) அவர்களின் மெய்ஞ்ஞான விளக்கங்களினால் கவரப்பட்ட மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள் வெறுமையான “ஷரீஅத்” அறிவில் மட்டும் பிரயோசனம் கிடையாது என்பதையறிந்து மனிதனை அல்லாஹ்வின்பால் சென்று சேர்க்கக் கூடிய அறிவுகளான தரீக்கத், ஹகீகத், மஃரிபத் ஆகிய அறிவுகளை தேடிப்படிப்பதில் ஆர்வங் காட்டினார்கள். இதற்காக மெய்ஞ்ஞான அறிவை வழங்கக் கூடிய அறிஞர்களான அப்துர் றஸீத் தங்கள் மௌலானா வாப்பா, அப்துல் காதிர் ஸுபி ஹஸ்ரத், அப்துர் றஊப் (மிஸ்பாஹி) போன்றவர்களை நாடிச் சென்று மெய்யறிவின் விளக்கங்களைப் பெற்று வந்தார்கள்.
கொள்கைப் போர் முழக்கம்.
1979 ம் ஆண்டு முதல் தனது கொள்கைப் போர் முழக்கத்தையும் மௌலவீ பாறூக் காதிரி அவர்கள் ஆரம்பித்தார்கள். இதற்காக காத்தான்குடியின் வலீமார்களின், வாசஸ்தலமாக திகழும் பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயலை தனது பிரச்சாரத்திற்கான பிரதான தளமாக பயன்படுத்தி வந்தார்கள். இங்கு வருடாந்தம் நடைபெற்று வரும் கந்தூரிகள், வாராந்தம் நடைபெற்று வரும் புனித குத்பிய்யஹ் மஜ்லிஸ் ஜும்ஆ பிரசங்கம் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு அல்லாஹ்வின் அகமியங்கள் பற்றியும் அவ்லியாக்களின் அந்தரங்கங்கள் பற்றியும் ஆணித்தரமான விளக்கங்களையளித்து வந்தார்கள்.
அண்ணல் நபீ (ஸல்) அவர்கள் இவ்வையகத்தில் அவதரித்த புனித றபீஉனில் அவ்வல் மாதத்தில் கொழும்பு, கண்டி, காலி, பேருவலை தர்ஹாடவுன், கல்முனை போன்ற ஊர்களுக்குச் சென்று அண்ணலாரின் அகமியங்களைப் பற்றியும், பூமான் நபீ (ஸல்) அவர்களை புகழ்வதன் அவசியத்தையும் வலியுறுத்தி வஹாபிகளின் விசமப் பிரசாரங்களை முறியடித்து வந்தார்கள். இதே போன்று இந்தியா, ஈராக் போன்ற நாடுகளுக்குச் சென்று ஜும்ஆப் பள்ளிவாயல்கள், மீலாத் மேடைகள் போன்றவற்றில் ஸுன்னத்வல் ஜமாஅத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தினார்கள். இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இவரது 4 குத்பாப் பிரசங்கங்களை ஒளிபரப்பியது. இவரின் பேச்சாற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
 
அறிஞரின் எழுத்துப்பணி
தனது “கணீர்” என்ற குரல் வளத்தின் மூலம் மக்களை நேர்வழியில் அழைத்த மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள் தனது எழுத்துப்பணி மூலமும் இஸ்லாத்துக்கு மாபெரும் சேவை புரிந்தார்கள். தமிழ், அறபு ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமைப் பெற்று விளங்கிய மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள் பல இஸ்லாமிய தத்துவ நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள். கொழும்பில் இருந்து வெளிவரும் “வெற்றி” எனும் ஆத்மீகப் பத்திரிகையில் “அகிலத்தின் பேரொளி அண்ணல் நபீ (ஸல்) அவர்கள் பற்றி அல்குர்ஆன் ஓதும் புகழ்மாலை” “மெளலிது ஓதுவோம் வாருங்கள்” என்ற தலைப்புக்களில் தொடர் கட்டுரைகளை எழுதி வந்தார்கள். இதில் “மெளலிது ஓதுவோம் வாருங்கள்” என்ற தொடர் கட்டுரை பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. மேலும் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அப்துர் ரஷீத் (வலீ) அவர்கள் பெயரிலான புகழ் மாலை (அறபு) “தப்லீக்” இயக்கம் பற்றிய வினா விடை ஆகிய நூல்களையும் அறிவுலகுக்கு எழுதி வழங்கினார்கள்.
இறை நேசர்களின் நேசர்
அல்லாஹ்வையறிந்து அவனை அடைந்தவர்களான அவ்லியாக்கள் மீது மௌலவீ பாறூக் அவர்கள் அளவில்லா அன்பும், பாசமும், நேசமும் கொண்டிருந்தார்கள். இதனால் அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்களுக்கு அடிக்கடி சென்று ஸியாரத் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். குறிப்பாக காத்தான்குடி பத்ரிய்யஹ்வில் வாழும் அப்துல் ஜவாத் ஆலிம் (வலீ), தலைநகரில் தலைசிறந்து விளங்கும் ஷெய்கு உஸ்மான் (வலீ), குப்பியாவத்தையில் அடங்கியிருக்கும் அப்துல் காதிர் ஸுபி ஹஸரத், நாவலயில் அடங்கியிருக்கும் அப்துல் காதிர் (வலீ) (கேத்தல் பாவா) போன்ற அவ்லியாக்களின் ஸியாரங்களுக்குச் சென்றார்கள். அத்தோடு இந்தியா, ஈராக் போன்ற நாடுகளுக்கும் அவ்லியாக்களின் ஆசியைப் பெறும் நோக்கில் ஆத்மீகப் பயணம் மேற்கொண்டு வந்தார்கள்.
 
அறிஞரைப் பற்றி அறிஞர்கள்
“முஸ்லிம் சமுதாயம் தரமான நூறு உலமாக்களையிழந்து விட்டது” இது அறிஞர் அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) அவர்கள் மௌலவீ பாறூக் காதிரீ அவர்களின் மரணச் செய்தி கேட்டு வெளியிட்ட கருத்து.
“மௌலவீ அப்துர் ரஊப் அவர்களுக்கும், மௌலவீ பாறூப் காதிரீ அவர்களுக்கும் நிகராக இவ்வுலகில் யாருமேயில்லை. இவர்கள் இருவரும் மார்க்கத்தின் மலைகள்.”
இது கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ அப்துர் ரஷீத் தங்கள் வாப்பா அவர்களினால் ஒரு சந்தர்ப்பத்தில் கூறப்பட்ட கருத்து.
“மௌலவீ அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) ஏகத்துவத்தின் ஆதாரம் மௌலவீ பாறூக் காதிரீ ஸுன்னத் வல் ஜமாஅத்தின் ஆதாரம்”.
இது கம்பம் நகரிலடங்கியிருக்கும் அம்பா நாயகம் அவர்கள் கூறிய கருத்து.
 
தௌஹீத் புரட்சியின் உயிர்த்தியாகி
29.05.1998 வௌ்ளிக் கிழமை பிற்பகல் சனி இரவு சுமார் 10.30 மணியிருக்கும் காத்தான்குடி எங்கும் ஒரே இருள்மயம். காரணம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் எமது அறிஞர் மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள் இரவு நேர சாப்பாட்டை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். அப்போது வீட்டின் கதவு தட்டப்படுகிறது. மனைவி யாரென குரல் கொடுக்கிறார்.
“நான்தான் றியாஸ் வந்திருக்கின்றேன். எனது மனைவி பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருக்கிறார். இந்த தண்ணீரை ஓதித் தாருங்கள்” என்று மறுமொழி வருகிறது. உடனே இரக்க சிந்தையுடைய மௌலவீ பாறூக் அவர்கள் தண்ணீர் ஓதிக் கொடுப்பதற்காக கதவைத் திறக்கின்றார்கள். அங்கே வந்து நின்றவர்களில் ஒருவன் மௌலவீ அவர்களைத் துப்பாக்கியால் சுட்டு விட்டான். அந்தத் துப்பாக்கியின் குண்டுகள் அவர்களின் தூய உடலைத் துளைத்து விட்டது.
மௌலவீ அவர்களுக்கு தனது அஜல் முடிந்து விட்டது என்பது தெரிந்துவிட்டது. உடனே திருக்கலிமாவை மொழிந்தவராகத் தனது ஷேய்கு நாயகமான தங்கள் வாப்பா அவர்களின் புகைப்படத்தை உற்று நோக்கியபடி தனது உமிழ்நீரை எடுத்து காயப்பட்ட இடத்தில் தடவுகிறார்கள். தனது கண்களை மூடித் தக்பீர் கட்டி எவ்வித உலகப் பேச்சும் பேசாமல் ஷஹீதானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
 
நல்லடக்கம்
அடுத்தநாள் சனிக்கிழமை பின்னேரம் காத்தான்குடியின் பொது மையவாடியில் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் ஷெய்குனா அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பெருந்தொகையான மக்கள் இலங்கைத் தீவெங்குமிருந்து வந்து அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.
இறை தண்டணை
இந்த ஈழத்திரு நாட்டில் மனிதக் கொலைகள் மலிந்து விட்டன. ஆனால் மௌலவீ பாறூக் காதிரீ அவர்களின் கொலை இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. பொன்னுக்கும் மண்ணுக்கும், பெண்ணுக்கும் பதவிக்கும் எனப்படுகொலைகள் நடைபெறும் இந்த நாட்டில் மார்க்கத்தின் பெயரால் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞர் படுகொலை செய்யப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
இவ்வாறானதொரு அவப்பெயரை ஆலிம்கள் நிறைந்து வாழும் இந்தக் காத்தான்குடி பெற்றுவிட்டது. இந்த வரலாற்றுக் கறையை வரலாற்று ஏடுகளில் இருந்து என்றுமே அகற்ற முடியாது. அத்துடன் இதற்கு காரணமானவர்கள் இறை தண்டணையில் இருந்து என்றுமே தப்ப முடியாது. என்பதும் இறைஞானிகளின் கூற்றாகும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments