Friday, March 29, 2024
Homeநிகழ்வுகள்28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு.

28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு.

வருடா வருடம் மிக விமர்சையாக நடைபெற்று வருகின்ற அஜ்மீர் அரசர்
அதாயே றஸூல் குத்புல் ஹிந்த் கரீபே நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும்,
அன்னவர்களது அருமை மைந்தர் ஸர்தாரே ஸர்வார் ஸாஹிபே ஜலால் ஹழ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ
(றழி) அன்னவர்களினதும் ஹாஜாஜீ உர்ஸே முபாறக் மாகந்தூரி 28வது வருடமாக இவ்வருடமும் அல்
ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரணையுடன் கரீப் நவாஸ்
பெளண்டேஷன் நிறுவனத்தால் மிக விமர்சையாக கடந்த 18.06.2014 புதன்கிழமை மாலை 5.00 மணி
தொடக்கம் 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணி வரை நடாத்தப்பட்டது 
இவ்வாண்டு 28வது வருடமாக நடைபெற்று
முடிந்த இந்நிகழ்வுக்காக முஹிப்பீன்கள், முரீதீன்கள் சுமார் 1 மாத காலத்திற்கு முன்பிருந்தே
அலங்கார வேலைகள் தொடக்கம் அலுவலக வேலைகள் வரை இரவு பகல் பாராது மிக சிறப்பாக செயற்பட்டு
இம்மாவிழாவை சிறப்பாக்க எல்லா வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.
அல்லாஹ் அவர்களுக்கு ஈருலக ஈடேற்றத்தை கொடுப்பானாக.

இப்பணிகள் தொடர்பான சில காட்சிகள்.


18.06.2014 கொடியேற்ற தினத்தன்று
சரியாக 4.45 மணி அளவில் கல்முனை வாழ் ஸுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்களால் கரீபே
நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும், அன்னவர்களது அருமை மைந்தர்
ஸர்தாரே ஸர்வார் ஸாஹிபே ஜலால் ஹழ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும் பெயரிலான புனித திருக்கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

அத்தோடு கந்தூரி நிகழ்வுக்காக இந்தியாவின்
அஜ்மீர் பதியிலிருந்து வருகை தந்த அஷ்ஷெய்க், அஸ் ஸெய்யித் அப்துர் றஊப் ஸாஹிப் அவர்களுக்கும்
அவர்களோடு வருகை தந்த இரண்டு சாதாத்மார்களுக்கும் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அன்னவர்கள்
மாலை அணிவித்து வரவேற்றார்கள்.
அதேபோல் நிகழ்வுக்காக விசேட அதிதிகளாக
கலந்ந்து கொண்ட பிரிகேடியர் கொமாண்டர் பாலித ஃபெர்னாண்டோ, மேஜர் குட்வின் அல்விஸ்
C.O , மேஜர் அஸங்க அல்விஸ், அஜித் பிரசன்ன OIC, றனசிங்க AOIC உள்ளிட்ட மற்றும் பல இராணுவ,
பொலிஸ் முக்கியஸ்தர்களுக்கு காத்தான்குடி நகர சபை உதவித்தவிசாளர், கந்தூரி தலைவர்கள்
மற்றும் உலமாக்கள் மாலைகளை அணிவித்து கௌரவப்படுத்தி வரவேற்றனர்.
நிகழ்வின் துவக்கத்தில் இராணுவ அதிகாரிகளால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய
கீதமும் ஒலிக்கவிடப்பட்டது.

அதனை அடுத்து எமது நாட்டின் சமாதானம்,
இன ஒருமைப்பாடு, அமைதியான வாழ்வும் அபிவிருத்தியும் வேண்டி “துஆ” பிரார்தனை செய்யப்பட்டு
புனித முறாதிய்யா முழக்கத்துடன் புனித திருக்கொடி ஏற்றப்பட்டது.

அதன் பின் முஹிப்பீன்களில் ஒருவரால்
அன்பளிப்பு செய்யப்பட்ட 6.5 அடி உயரமான சந்தணக்குச்சி ஒன்று பள்ளிவாயல் முன்றலில் அதிதிகள்
முன்னிலையில் எரிய விடப்பட்டது.
அதனை அடுத்து ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வின்
முதலாம் நாளின் முதல் அமர்வு மஜ்லிஸ் மண்டபத்தை அலங்கரித்தது. இந்நிகழ்வில் நபீமார்,
வலீமார், ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி), ஹழ்ரத் ஹாஜா பக்றுத்தீன்
சிஷ்தீ (றழி) மற்றும் மரணித்த அனைத்து முஸ்லீம்கள்
மீதும் புனித கத்முல் குர்ஆன் பாராயணம் செய்யப்பட்டு தமாம் செய்யப்பட்டது.

நிகழ்வுக்கு வருகை தந்த இராணுவ,
பொலிஸ் அதிகாரிகள் அல் ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் அன்னவர்களது புனித அடக்கஸ்தலம்
மற்றும் கந்தூரி அலங்கார வேலைகள் என்பவற்றை பார்வையிட்டனர்.

அன்றைய நாளின் மஃரிப் தொழுகையின்
பின் மௌலிது அதாயிர்றஸூல் மஜ்லிஸ் நிகழ்வில் இடம்பெற்றது. இஷா தொழுகையின் பின் ஹாழிறு பாச்சரம்
இசைக்கப்பட்டு பின்னர் சங்கைக்குரிய மௌலவீ மாதிஹுர் றஸூல் HMM இப்றாஹீம் நத்வீ அவர்களால்
ஆத்மீகப் பேருரை நிகழ்த்தப்பட்டது.
மீண்டும்
இரண்டாம் நாள் நிகழ்வு 19.06.2014 அன்று மாலை 5.00 மணிக்கு
ஆரம்பமாகி புனித மௌலிது அதாயிர் றஸூல், புனித
குத்பிய்யஹ் றாதிப், ஹாழிறூ பாச்சரம் போன்றவை மஜ்லிஸ் நிகழ்வில் இடம்பெற்றது. அன்றைய நாளின் ஆத்மீகப் பேருரை சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அன்னவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

இதனிடையே
விசேட அதிதியாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி ஜெனரல் லால் பெரேரா மற்றும் பல இராணுவ
அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

மாகந்தூரியின் 03ம் நாள்
நிகழ்வு 20.06.2014 அன்று வழமை போன்று மாலை 5 மணிக்கு
மௌலிது அதாயிர் றஸூல் உடன் ஆரம்பாகி. மஃரிப்
தொழுகையின் பின் புனித தலைபாதிஹா ஓதப்பட்டது. இஷா தொழுகையின் பின் ஹாழிறூ பாச்சரம் இடம்பெற்று ஷெய்கு நாயகம் அன்னவர்களினால் ஆத்மீகப் பேருரை நிகழ்த்தப்பட்டது.
03ம் நாளின் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னர் அல்ஹாஜ் அப்துல் ஜவாத்
ஆலிம் வலியுல்லாஹ் அன்னவர்களது புனித அடக்கஸ்தலத்துக்கு சந்தனம் பூசப்பட்டு அஜ்மீர்
ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களது புனித தர்ஹாவில் போர்த்தப்பட்ட புனிதப்போர்வை
சங்கைக்குரிய அஸ் ஸெய்யிதுஸ் ஸாதாத் அப்துர் றஊப் ஸாஹிப் அன்னவர்களாலும் ஷெய்கு நாயகம்
அன்னவர்களாலும் ஏனைய உலமாக்களாலும் போர்த்தப்பட்டு பின்னர் சமாதானம், சுபீட்சம், நிம்மதியான
வாழ்வு வேண்டி பிரார்த்திக்கப்பட்டது.

04ம்
நாள் வழமை போன்று மஜ்லிஸ் நிகழ்வுகள் இடம்பெற்று விசேட மௌலிதாக புனித பத்ர் ஸஹாபாக்களின் புகழ் மணக்கும் பத்ர் மௌலித் ஷரீப் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஷெய்கு நாயகம் அன்னவர்களினால் மார்க்க விளக்க உரை நிகழ்த்தப்பட்டது.
28வது
வருட மாகந்தூரியின் இறுதித் தினமான 22.06.2014 அன்றைய நிகழ்வுகள் காலை 6.00 மணிக்கு
ஆரம்பமாகியது. தொண்டர்கள் மிக உற்சாகமாக தத்தமது பிரிவுகளில் பணிகளை பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார்கள். அன்று பகல் 1.00 மணிக்கு
ஷெய்கு நாயகம் அன்னவர்களால் “துஆ” செய்யப்பட்டு
நிகழ்வில் கலந்துகொண்ட பிரிகேடியர் கொமாண்டர் பாலித ஃபெர்ணாண்டோ உள்ளிட்ட மற்றும் பல இராணுவ
அதிகாரிகளால் அருளன்னதான நிகழ்வு (கார்ட் நார்ஸா விநியோகம்) துவக்கிவைக்கப்பட்டது.
அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான
எமது மஜ்லிஸ் நிகழ்வு பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியிருந்தது. மௌலிது அதாயிர் றஸூல்
நிகழ்வின் பின்னர் மத்ரஸதுஸ் ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா குர்ஆன் மத்ரஸா மாணவ மாணவியர்களுக்கான
தகைமைச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு
செய்யப்பட்ட கடந்த ஆண்டில் புலமைப்பரிசில், சாதாரண தரம், உயர்தரம் போன்றவற்றில் சித்தி
அடைந்த, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இறுதி நிகழ்வாக சங்கைக்குரிய ஷெய்கு நாயகம்
அன்னவர்களால் ஆத்மீகப்பேருரை நிகழ்த்தப்பட்டது. வருடா வருடம் நடைபெறுவது போன்றே இம்முறையும்
சங்கைகுரிய ஷெய்கு நாயகம் அன்னவர்களால் 28வது வருட மாகந்தூரியில் கடமையாற்றிய 600 தொண்டர்களில்
நின்றும் ஒருவர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டு இந்தியாவின் அஜ்மீர்பதி செல்வதற்கான
அதிஷ்ட விமானப் பயணச்சீட்டை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொரு நாளும் நடைபெற்ற ஆத்மீகப் பேருரையிலிருந்து தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையளித்த முஹிப்பீன்களில்
தினமும் தெரிவு செய்யப்பட்ட 5 அதிஷ்டசாலிகளுக்கு பெறுமதியான பரிசில்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டதும் இங்கு
குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டும் வழமை போன்றே ஹாஜாஜீ மாகந்தூரியில்
அருள் நாடி வந்த சுமார் 5000 மக்களுக்கு அருளன்னதானம் வழங்கப்பட்டு பெரிய ”துஆ” வுடனும் ஸலவாத்துடனும் 28வது வருட மாகந்தூரி இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்வு தொடர்பான மேலதிக புகைப்படங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments