Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஜுனைதுல் பக்தாதி றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.....

ஜுனைதுல் பக்தாதி றழியல்லாஹு அன்ஹு அவர்கள்…..

-மௌலவீ AAM.அறூஸ் (றப்பானீ)-
ஹழரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ‘நுஹாவந்த்’ என்றும் ஊரிலிருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள் ஜுனைதுல் பக்தாதி(றழி) அவர்கள் . இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடைவைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதுல் பக்தாதி(றழி)அவர்களும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின் உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மார்க்க கல்வி பயின்று வந்தார்.

தம் மருமகனுக்கு ஏழு வயது நிறம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடன் தம் மரு மகனையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்ன வென்பது பற்றிய பிரச்சனை எழுந்த போது, அங்கு கூடியிருந்த அறிஞர்கள் பலர், பல்வேறு விளக்கங்களைக் கூறினர். ஆனால் அங்கு குழுமியருந்த அனைவரின் ஒப்புதலையும் அவைகள் பெறவில்லை.
அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம் சின்னஞ்சிறு மருமகனை அருகழைத்து ஸரீ அஸ் ஸகதீஅவர்கள் அது பற்றி அவர்களிடம் வினவ, ‘இறைவனின் அருட்கொடைகளை நுகர்ந்துவிட்டு, அவனுக்கு மாறு செய்யாதிருப்பதிம், ஒரு வேளை மாறுசெய்யின், அவ்வாறு மாறு செய்வதற்கு அவனளித்த அருட்கொடைகளை மூலகாரணமாகக் கொள்ளாதிருப்பதுமாகும்’ என்று மறுமொழி கூறினர்.
அது கேட்டு அங்கிருந்த அனைவர் புருவங்களும் மேலேறின. அனைவரும் அதனை ஒருமித்து ஏற்றுக் கொண்டனர். தம் மருமகன் ஜுனைதுல் பக்தாதி அவர்களை வாரி அணைத்து முத்தமிட்டு . அல்லாஹ் உமக்கு அருள் பாலிப்பானாக! உம் நாவன்மையே இறைவன் உமக்களித்த நற்பேறாகும்’ என்று புகழ்தனர். இதை எவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? என்று ஸரீ அஸ் ஸகதீஅவர்கள் கேட்க, ‘தங்களின் காலடியில் அமர்ந்துதான், என்று அடக்கமாக மறுமொழி பகர்தனர் ஜுனைதுல் பக்தாதி றழியல்லாஹு அன்ஹு அவர்கள். இளமையிலிருந்தே இவர்களுக்கு ஷாபி மத்ஹபின் மீது பற்றிருந்தது. எனவே அவர்கள் பக்தாதில் வாழ்ந்து வந்த இமாம் ஷாபி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான அபூஸர் இப்றாஹீம் இப்னு காலிதுல் கல்பீ. றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஷாபீ மத்ஹபின் பிக்ஹுகளைப் பயின்றனர். இருபது வயதை அடைந்தபோது தம் ஆசானின் அனுமதி பெற்று மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் செய்தனர்.
ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் தம்மிடமுள்ள நான்கு தீனார்களை எடுத்துச் சென்றுதம் மாமனாரின் காலடியில் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது. அவ்விதமே அவர்கள் செய்தார்கள். அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸரீஅஸ்ஸகதீறழியல்லாஹு அன்ஹு அவர்களைவாழ்த்தினர். பின்னர் தம் மருமகரை நோக்கி எனக்கு இன்று நான்கு தீனார்கள் தேவைப்பட்டன. நான் இறைவனிடம், ‘இறைவனே! அருளுக்குப் பாத்திரமானஒருவர் மூலம் எனக்கு அவற்றைத் தந்தருள்வாயாக! என்று இறைஞ்சினேன். உம் மூலம் அவற்றை இறைவன் அனுப்பித்தந்தான்:’ என்று கூறினர்.
‘ஒருவன் இறைதியானத்திலே தன் மனதை முற்றிலும் ஈடுபடுத்தி, தான் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்தொழிப்பதும் தௌபாவின்பாற்பட்டதேயாகும். மேலும் ஒருவன் நேர் வழி பெற்றபின், தான் முன்னர் செய்த பாவங்களை நினைப்பதும் வருத்தத்தை நல்குமாதலால் அவற்றை மறந்தொழிப்பதே மான்புடையதாகும்’ என்று கூறினர்.
தம் மருமகரின் அறிவையும், ஆன்மீக பரிபக்குவத்தையும் நன்கு விளங்கிக் கொண்ட ஸரீ அஸ் ஸகதீ(றழி)அவர்கள். அவர்களை நோக்கி, மக்களுக்கு அறிவுரை நல்குமாறு எவ்வளவோ கூறினர். ஆசான் இருக்கும்போது மாணவன் அறிவுரை பகர்வது அழகன்று என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
இக்காலை அவர்கள் ஒரு வௌ்ளி இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம்வழங்கி மக்களுக்கு அறிவுரை வழங்குமாறு அருள்வாய் மொழிந்து விட்டுச்சென்றனர். அக்கணமே விழித்தெழுந்து அவர்கள்தம் தகுதி தம் மாமனாரின் தகுதியைவிட உயர்ந்து விட்டதாக எண்ணினர். அவ்வெண்ணத்துடனேயே மாமனாரை சந்திக்கச் சென்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸரீ அஸ் ஸகதீ (றழி) அவர்கள், இதுவரை நீர் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர். இப்பொழுது நீரே பேச வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்முடைய பேச்சால் உலகம் உய்ய வேண்டியுள்ளது. உம் மாணவர்கள் பேசச் சொன்ன போதும் நீர் பேசவில்லை. பகுதாதிலுள்ள ஷெய்குமார்கள் பேசச்சொன்ன போதும் பேசவில்லை. நான் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்உம்கனவில் வந்து சொன்னதால் நீர் பேசப் போகிறீர்!’ என்று கூறினர்.
அப்போது ஜுனைதுல் பக்தாதி அவர்களுக்கு சிறிது முன் ஏற்பட்டிருந்த சிறிதளவு கர்வமம் தலை குப்புறக் கவிழ்தது. அவர்களிடம் தம்மை மன்னித்தருளும் படி வேண்டினர்.
பின்னர் தம் மாமனாரை நோக்கி இவ்விஷயம் தங்களுக்கு எப்படித் ​தெரிந்தது? எனக் கேட்டனர். அதற்கு ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், இறைவன் என் கனவில் திருத்தோற்றம் வழங்கி, மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகருமாறு ஜுனைதுக்கு ஆனையிட்டு வருமாறு என் தூதரை அனுப்ப வைத்துள்ளேன்: என்று இயம்பினான் எனக் கூறினார்கள்.
இதன் பின் சிறிது காலத்தில் ஸரீ அஸ் ஸகதீஅவர்கள் மறைந்தார்கள். அவர்கள் அபூ ஹப்ஸ் ஹத்தாத்(றழி) அவர்களிடமும் பின்னர்​ ​யகூப்​​ ஜையாத் (றழி) அவர்களிடமும் சென்று ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். இவர்களிடம் மட்டுமல்லாது இரு நூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் கல்வி பயின்றுள்ளனர்.
உலகிலேயே வாழ்ந்தும் வாழாதது போல வாழ்ந்து வந்த அவர்கள், ஸூபிகள் போன்று கிர்கா அணியாமல் ஆலிம்கள் போன்று சாதாரண மேலங்கியையே அணிந்து வந்தனர். அவர்களுடைய கையில் எப்போதும் தஸ்பீஹ் மாலை தவழ்ந்து கொண்டிருந்தது.
ஒருதடவை மக்கள் அவர்களை நோக்கி, ‘தாங்கள் ஆன்மீகத் துறையில் இத்தனை உச்சத்தை எய்தியதற்குக் காரணம் என்ன? என்று வினவியபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலுள்ள வணக்க இடத்தை சுட்டிக்காட்டி, ‘இதில் நான் நாற்பதாண்டுகளாக வீற்றிருந்து வணக்கம் நிகழ்த்தியதன் காரணமாக எய்தப் பெற்றேன்’ என்று கூறினர். மேலும், ‘உலகைத் துறத்தல்,நோன்பு நோற்றல், இரவு முழுவதும் விழித்திருந்துவணக்கத்தில் ஈடுபட்டிருந்தல் ஆகியவற்றால் இந்த உயர்ந்த நிலையை எய்தப் பெற்றேன்’ என்று கூறினர்.
நாற்பதான்டுகளாக ஒவ்வோர் இரவும் இஷாத் தொழத்துவங்கின் வைகறை தொழுகை தொழுது விட்டே ஓய்வுகொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இரவுத் தொழுகைக்குசெய்த வுழூவுடன் அவர்கள் வைகறைத் தொழுகையையும் தொழுவார்கள்.அவர்கள் தங்களின் வணக்க அறைக்குள் நுழைந்து விட்டால் நானூறு ரகஅத் தொழாமல் வெளியே வருவதில்லை. அவர்கள் தொழுவதற்குதொழுகை விரிப்பை விரிக்கும் பொழுது, இறைவனையன்றி வேறு எதனையும் தம் உள்ளத்தில் நுழையவிடாது மிக எச்சரிக்கையுடன் இருந்தனர் நோன்பு நோற்க தடைசெய்யப்பட்டநாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் ஆண்டு முழுவதும் நோற்றார்கள்.
அவர்கள் ஹஜ்ஜை தனியாக நடந்து சென்று முப்பத்தி மூன்று தடவை செய்துள்ளார்கள். அவர்களின் புகழ் நாளுக்கு நாள் பெருகிவருவது கண்டு கலீபா உட்பட சிலருக்கு பொறாமையுணர்வு ஏற்பட்டது. எனவே ஒரு பெண்ணை சோடித்து அவர்களிடம் அனுப்பி அவர்களை மாயவலையில் சிக்கவைத்து மானபங்கப்படுத்த சூழ்ச்சி செய்தனர். அந்தப் பெண் அவர்களின் தவமடத்திற்கு: சென்று அவர்களின் முன்னின்று, என்னைத் தங்களின் ஊழியராக ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதற்கு தனக்கு எவ்வித ஊதியமும் தர வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள் அவளின் சூழ்ச்சியை உணர்ந்த ஜுனைதுல் பக்தாதி அவர்களின் உள்ளம் என்றுமில்லாவண்ணம் கொதித்தது. இறைவனின் பேரருள் மட்டுமில்லாது இருப்பின் அவள் நம்முடைய இம்மை, மறுமை வாழ்வை நாசப்படுத்தி விடுவாள் என்றெண்ணி, அவர்கள் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுத்தகணம் அவள் பிணமாக சாய்ந்தாள். இவ்விஷயம் கேள்விப்பட்டு அவர்களைசந்திக்க வந்த கலீபா அச்சம் மேற்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
அவர்களின் நண்பர்களாக இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ உதுமான் ஹீரி,அபூ ஸயீது கஸ்ஸாஸ் ஆகியோர் இருந்தனர்.
துவக்கத்தில்அவர்கள்‘ஸமாஉ’ என்ற பேரின்ப நிகழ்ச்சியை பெரிதும் விரும்பவில்லை. பின்னர் மனம் மாறுதலடைந்து பேரின்ப இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் செய்தனர். ஒருவர் அவர்களை அனுகி, பொதுவாக அமைதியாக இருக்கும் மனிதன், ஸம்உ என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் தன்னிலையை மறக்க காரணம் என்ன? என்று வினவினார்கள்.
அதற்கு அவர்கள், ‘ஆன்ம உலகில் இறைவன் அனைத்து ஆன்மாக்ளையும் நேக்கி, நான் உங்களின்​இறைவனில்லையா? என்று வினவிய போது, அவை அனைத்தும் ‘ஆம்’ என்று ஒருமித்து முழக்கமிட்டன. இவ்வாறு பதிலுரைத்த சுவை அவற்றின் உள்ளத்தில் உறைந்துவிட்டது. பேரின்ப பாடல்களை செவியுற்றதும் அச்சுவை அவர்களின் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதன் காரணமாக அவர்கள் தன்னுணர்வு அற்று விடுகின்றனர். என்றனர்.
பேரின்ப இசையைக் கேற்பதற்கும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை மூன்றும் ஒருங்கே அமையவில்லையானால் அந்த இசையை, அது எவ்வளவுதான் மேலானதாக இருந்த போதினும் கேட்காதீர்கள்’ என்றனர்.
பிக்ஹு கலையில் மட்டுமின்றி, தஸவ்வுபிலும் மாபெரும் உச்சத்தை எய்தியிருந்த அவர்கள், பிக்ஹு பற்றிய கல்வி வேறு தஸவ்வுப் பற்றிய கல்வி வேறு என்று கூறினர். ஒருநாள் ஒருவர் அவர்களிடம் தஸவ்வுப் என்றால் என்ன? என்று வினவிய போது, ‘எதிலும் தோடர்பின்றி அல்லாஹ்வுடன் ஒன்றித்து இருப்பதாகும்’ என்று விளக்கம் அளித்தனர்.
இவ்வாறு கூறிய அவர்கள் பிக்ஹு கலையை வெளிப்டையாக போதித்த போதினும் தஸவ்வுப் பற்றிய கல்வியைத் தம் அறையின் கதவுகளைப் பூட்டி சாவியை தம் விரிப்பின் கீழ் பத்திரமாக வைத்துக் கொண்ட பின்னரே தம் மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.
‘தாவூஸூல் உலமா’ (மார்க்க அறிஞர்களின் மயில்), ‘’மஷாயிஹெபாத்தின்’ (அகமியக் கல்வியின் தலைவர்) என்றும் புகழப்பட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
கலீபா அல் மாமூன் காலத்திலிருந்து, கலீபா அல்முக்தரின் காலம் வரையிலும் நடந்த பன்னிரண்டு கலீபாக்களின் ஆட்சியிலும் பக்தாது மாநகரிலேயே வாழ்ந்து வந்தஅவர்கள் ஹிஜ்ரி 298ம் ஆண்டில் நோயுற்று படுத்த படுக்கையிலாயினர். இறுதியாக ஒருவௌ்ளிக் கிழமை, தம்முடைய எண்பதாவது வயதில் தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு உண்ணக் கொடுத்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு இறப்பின் முதல் வேதனை அவர்களைக் கவ்விப் பிடித்தது. உடனே தம் மாணவர் ஒருவரை நோக்கி தாம் வுழூ செய்யத் தண்ணீர் கொண்டு வருமாறு கூறிவுழூ செய்து தொழுது விட்டு, திருக் குர்ஆன் பிரதியை எடுத்து ஓதத் துவங்கினார்கள். வெகு சிரமத்துடன் குர்ஆன் முழுதையும் ஓதி முடித்தபின், இரண்டாவது தடவையும் ஓதத் துவங்கினர். ஸூரத்துல் பகரா 70 வது திரு வசனமாகிய ‘அல்லாஹ் நாடினால் இனி நாம் நிச்சயமாக நேர்வழி பெற்று விடுவோம்’ என்பதை ஓதியதும் அவர்களின் உயிர் பிரிந்த்தது.
அவர்கள் மறுநாள் அவர்களின் மாமனார் ஸரீ அஸ் ஸகதீ(றழி)அவர்களின்அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments