Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“றழியல்லாஹு அன்ஹும்” எனப்படுவோர் யார்?

“றழியல்லாஹு அன்ஹும்” எனப்படுவோர் யார்?

ஆக்கம் : MJ. அஹ்மத் ஸுஹ்ரீ
(அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் சிரேஷ்ட மாணவர்)
அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் அலைக்கும்

இன்று இஸ்லாமியர்கள் என்ற போர்வையிலே இவ்வுலகிலே காட்சியளிக்கக் கூடியவர்கள் நபீமார்கள், றஸூல்மார்கள் என்று சொல்லப்படக்கூடிய இறைத்தூதர்களுக்கு, அவர்களின் திருநாமங்கள் உச்சரிக்கப்பட்டால் “அலைஹிஸ்ஸலாம்” என்று சொல்கின்றார்கள்.

ஆனால் நபித்தோழர்களான ஸஹாபாக்களுடைய, இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்களுடைய பெயர் நாமங்கள் சொல்லப்பட்டால் “றழியல்லாஹு அன்ஹு” என்றோ, “றஹ்மதுல்லாஹி அலைஹி” என்றோ சொல்வது மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது.
சிலர் நாம் யாருடைய, எப்படிப்பட்டவர்களுடைய நாமங்களை – பெயர்களை உச்சரிக்கின்றோம் என்று கூட சிந்திக்காமல் அவமரியாதையாக அபூபக்கர் வந்தார், உமர் வாளையெடுத்தார், உத்மான் உறங்கினார், அலீ செய்தார் என்று இஸ்லாத்தின் மாபெரும் கலீபாக்களையே தரக்குறைவாகவும், “றழியல்லாஹு அன்ஹு” என்று சொல்லாமலும் அவர்களின் திருநாமங்களைக் கூறுவதை நாம் இன்று காண்கின்றோம்.
இவற்றுக்குக் காரணம் வஹ்ஹாபிகள் என்று சொல்லப்படக்கூடிய வழிகேடர்கள் எடுத்ததையெல்லாம் “ஷிர்க்” என்றும், “பித்அத்” என்றும், வீணான செயல்கள் என்றும் சொல்லி அறியாத மக்களைக் குழப்பி அவர்களைத் திசைதிருப்புவதும், நல்லோர்கள் பற்றிய மகோன்னதத்தைப் புரியாததுமேயாகும்.
இதன் காரணமாக மார்க்க அறிவு இல்லாத பாமரர்கள் – படிக்காதவர்கள் தாங்கள் செய்யக் கூடிய ஓர் நற்செயலை இது மார்க்கத்திற்கு முரணானது என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட விடயமென்றும் நம்பி தங்களுடைய ஈமானையே இழந்து செல்லக்கூடிய ஓர் நிலையை நாம் இன்று காணக்கூடியதாக இருக்கிறது.
எனவே, இவ்வாறான ஈமானற்றுப் போகும் விடயங்களை விட்டும் நீங்கி, அல்லாஹ்வின் பொருத்தம் எனும் மழையில் நனைவதற்காக நபித்தோழர்களின், அவ்லியாஉகளின் திருநாமங்கள் கூறப்படுகின்றபோது “றழியல்லாஹு அன்ஹு”, “றஹ்மதுல்லாஹி அலைஹி” என்று சொல்வது பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.
அன்பர்களே!
நாம் நபித்தோழர்களின் பெயர்கள் சொல்லப்படும்போதும் அவர்கள் அல்லாதோரின் பெயர்களைக் கேட்கும்போதும் “றழியல்லாஹு அன்ஹு”, “றஹ்மதுல்லாஹி அலைஹி” என்று சொல்கின்றோம். இது முற்றிலும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.
இதைக் கொண்டு நாம் நாடக்கூடியதாகிறது, அவர்களின்மீது இறைவனுடைய பொருத்தத்தைத் தேடுவதேயாகும்.
உதாரணமாகச் சொல்லப்போனால் நாம் பெருமானார் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அன்னவர்களின்மீது “ஸலவாத்” சொல்கின்றோம். صلى الله على محمد என்று சொல்கின்றோம். ஆனால் இதனுடைய அர்த்தம் (பொருள்) யாதெனில் أللهم صل على محمد “இறைவா! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது நீ ஸலவாத் சொல்வாயாக” என்பதாகும்.
இதிலே நாம் சிந்திக்க வேண்டிய, ஆராய வேண்டிய சில தத்துவங்களும், நுட்பங்களும் இருக்கின்றன.
இறைவன் திருக்குர்ஆனில்
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
( الأحزاب : 56)
“நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய அமரர்களும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஈமான் கொண்டோரே! நீங்கள் அந்த நபியின் மீது ஸலவாத்தும், சலாமும் சொல்லுங்கள்” என்று சொல்கின்றான்

(அல் அஹ்ஸாப் – 56)
விசுவாசிகளே! நீங்கள் நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது ஸலவாத்தும், சலாமும் சொல்லுங்கள் என்று கட்டளையிடுகின்றான். அப்படியானால் நாம் எவ்வாறு சொல்ல வேண்டும்.
اُصلي واُسلم على محمد
“நான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும், சலாமும் சொல்கின்றேன்” என்றுதானே சொல்ல வேண்டும். அப்படியா சொல்கின்றோம்? இல்லை! முாறாக,
أللهم صل على محمد
“இறைவா! நீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வாயாக” என்று சொல்கின்றோம்.
இறைவன் எமக்குக் கட்டளையிடுகின்றான். ஆனால் அதனை நாம் நிறைவேற்றாமல் ‘இறைவா, நீயே ஸலவாத் சொல். எம்மால் முடியாது’ என்று சொல்கின்றோம்.
அப்படியானால் இதனுள் உள்ள ரகசியம் என்ன?
‘இறைவா! உன்னுடைய ஹபீபுடைய – காதலருடைய பெயரைச் சொல்ல நாங்கள் தகுதியிலார். நீயே அதற்குத் தகுதியுடையோன். நீயே அவர்கள்மீது ஸலவாத் சொல்வாயாக’ என்று கூறி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பெயரின் மகோன்னத நிலையை ஓங்கச் செய்கின்றோம். இதுவே இதனுள் உள்ள தத்துவமாகும்.
இதேபோன்றுதான் ஸஹாபாக்கள், வலீமார்கள், நல்லோர்களின் பெயர்களைக் கேட்கும்போது “றழியல்லாஹு அன்ஹு”, “றஹ்மதுல்லாஹி அலைஹி” என்று சொல்வதுமாகும்.
இன்று சிலர் நினைக்கின்றனர் “றழியல்லாஹு அன்ஹு” என்று ஏதோ ஓர் இமாம், ஏதோ ஓர் கிதாபில் – புத்தகத்தில் சொல்லியிருக்கிறார் என்று. அப்படியல்ல.
“ஸல்லல்லாஹு அலா முஹம்மதின்” எனும் சொல்லை எவ்வாறு இறைவன் சொன்னானோ அதேபோன்றுதான் “றழியல்லாஹு அன்ஹு” என்றும் இறைவன்தான் சொல்கின்றானே தவிர இச்சொல் இமாம்களாலோ, அறிஞர்களாலோ கூறப்பட்ட சொல்லல்ல! அது இறைவனின் சொல்!
இறைவன் சொல்கின்றான் :
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ
(البينة :  8-7)
“நிச்சயமாக, ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்கிறார்களே, அவர்கள் நன்மையிலே – நன்றியிலே இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களுடைய றப்பிடத்திலே ஆறுகள் ஓடக்கூடிய “அத்ன்” எனும் சொர்க்கம் இருக்கிறது. அவர்கள் அதிலே எப்போதும் நிரந்தரமாக இருப்பர். அவர்களைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவனைத் தொட்டும் அவர்களும் பொருந்திக் கொண்டார்கள். அதாகிறது அவனுடைய றப்பைப் பயந்த – உள்ளச்சம் கொண்ட ஒருவனுக்கும் இருக்கிறது” என்று சொல்கின்றான்.

 (அல் பய்யினஹ் : 7-8)
சிலர் கருதுவர் இவ்வசனம் நபித்தோழர்களுக்கு மாத்திரம் உரியது என்று. அப்படியல்ல! இதில் அறிவுடையோருக்கு அத்தாட்சி – ஆதாரமிருக்கிறது. யாதெனில்
ذلك لمن خشي ربه
“அந்தப் பொருத்தம் என்பது தன்னுடைய றப்பைப் பயந்த சிலருக்கும் இருக்கிறது” என்று சொல்கின்றான்.
அவர்கள்தான் வலீமார்கள் என்று சொல்லப்படக்கூடிய இறைநேசர்களாகும். இவர்களைப் பார்த்துதான் இறைவன் பிறிதொரு ஆயத்தில் ‘அல்லாஹ் தவிர்ந்த ஏனைய விடயங்களில் கவலையும், பயமும் கிடையாது’ என்று சொல்கின்றான்.
அப்படியானால் உலகத்தையும், உலகத்தோரையும், பதவிகள் தப்பிப் போவதையும், காசுகள் வராமல் தடைபடுவதையும் பயந்து வாழ்பவர்களுக்கு இப்பதவி கிடையாது. மாறாக தன்னுடைய றப்பாகிய அல்லாஹ்வை பயந்தவர்களுக்கு மாத்திரமே என்று சொல்கின்றான்.
இவ்வாறு “றழியல்லாஹு அன்ஹு”, “றஹ்மதுல்லாஹி அலைஹி” என்று சொல்வது வாஜிபான – பர்ழான ஓர் காரியமல்ல. மாறாக முஸ்தகப்பான – ஆகுமான (விரும்பத்தக்க) ஓர் விடயமேயாகும்.
قال النووي فى المجموع : يستحب الترضي والترحم على الصحابة والتابعين فمن بعدهم من العلماء والعباد وسائر الأخيار، فيقال رضي الله عنه أو رحمة الله عليه أو رحمه الله ونحو ذلك
இமாம் நவவீ றழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள் :
“றழியல்லாஹு அன்ஹு”, “றஹ்மதுல்லாஹி அலைஹி”, “றஹிமஹுல்லாஹ்” என்ற, அது போன்ற சொற்களைக் கொண்டு ஸஹாபாக்கள், தாபிஈன்கள், அறிஞர்கள், சிறந்தோர் போன்றோர்கள் மீது சொல்வது முஸ்தகப்பான – ஆகுமான (விரும்பத்தக்க) விடயமாகும்” என்று சொல்கிறார்கள்.
நூல் : அல் மஜ்மூஃ
பாகம் : 06
பக்கம் : 156 – 157
ஹறாமான ஓர் விடயத்தைச் செய்தாலே பாவம், தண்டனை கிடைக்குமே தவிர, முஸ்தகப்பான- ஆகுமான (விரும்பத்தக்க) ஓர் விடயத்தைச் செய்வது கொண்டு நன்மைதான் கிடைக்குமேயல்லாமல் பாவமோ, தண்டனையோ கிடைக்காது.
இனியோரே!
நாம் சுன்னத் வல் ஜமாஅத் வழி வாழக்கூடிய மக்களாகவும், நபித்தோழர்களையும், நல்லோர்களான வலீமார்களையும் அதிகம் நினைவு கூறக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம்.
சந்தனம், அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களைத் தொட்டோர் மணப்பது போல், நல்லோர்களான நபீமார்கள், ஸஹாபாக்கள், வலீமார்கள் போன்றோரின் பெயர்களைக் கேட்கும் போது “அலைஹிஸ் ஸலாம்”, “றழியல்லாஹு அன்ஹு”, “றஹ்மதுல்லாஹி அலைஹி” போன்ற சொற்களை மொழிவது கொண்டு எமதுள்ளம் மணம் பெறுகிறது. இதனால் எமக்கே நன்மைகள் இருக்கின்றனவேயல்லாமல் நாம் இவ்வாறான சொற்களை மொழியாமல் விடுவதால் அன்னோர்களில், அன்னோரின் அந்தஸ்த்தில் எதுவும் குறைவு ஏற்படப் போவதில்லை.
எனவேதான் நல்லோர்களைப் புகழ்ந்து அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று நற்பாக்கியம் அடைவோமாக! ஆமீன்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments