ஆஷுறா வருகிறது ஆயத்தமாகுங்கள்

September 8, 2019
முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாள் “ஆஷூறா” தினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முந்தின ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் முஹம்மது (صلى الله عليه وسلم) அவர்கள் ஜாஹிலிய்யஹ் காலத்திலிருந்தே
“ஆஷூறா” நோன்பை நோற்று வந்துள்ளார்கள்.
பின்னர் மதீனா வந்த போதும் யூதர்கள் அந்த நோன்பை நோற்றிருப்பதைக் கண்டு அதை நோற்பதற்கு நாமே தகுதியானவர் எனக்கூறி தாமும் நோற்று மற்றவர்களையும் நோற்கும்படி நவின்றார்கள்.
பிற்காலத்தில் “தாஸூஆ” ஒன்பதாம் நோன்பையும் தான் மறுவருடம் ஹயாத்தாக இருப்பின்
நோற்பேன் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள். நபீ (صلى الله عليه وسلم) அவர்கள் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்காவிட்டாலும் நோற்பேன் என்று கூறியதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது.
ஆஷூறா தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய ஒரு தினமாகும். இத்தினத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.

 • இன்றுதான் நபீ ஆதம் (عليه السلم) அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்து அவரை ஏற்றுக் கொண்டான்.

நபீமார்கள் அனைவரும் நபிப்பட்டம் கிடைத்த பின்னும், அதற்கு முன்னும் குற்றம் செய்யாதவர்களாயிருக்கும் பட்சத்தில் ஆதம் நபீ செய்த குற்றம் என்ன என்ற கேள்விக்கு இத்துண்டுப் பிரசுரத்தில் விளக்கம் சொல்ல முடியாதுள்ளது.

 • இன்றுதான் நபீ நூஹ் (عليه السلم) அவர்களின் கப்பல் ஜூதி எனும் மலையில் தரை தட்டியது. இந்தக் கப்பல்
  தூபான் என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் நூஹ் நபீ (عليه السلم)  அவர்களால்தான் செய்யப்பட்டது. ஜூதி மலையில் தட்டிய கப்பலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது
  கண்டுபிடித்துள்ளார்கள். ஜூதி மலை இன்னும் இருக்கிறது. இந்த மலையில் நபீ நூஹ் (عليه السلم)  அவர்கள் கட்டிய பள்ளிவாயல் ஒன்று இன்றும் அவ்வாறே இருக்கிறது. மனிதர்கள் கூட்டம்
  கூட்டமாகச் சென்று அதைப் பார்த்து வருகிறார்கள்.
 • இன்றுதான் நபீ மூஸா (عليه السلم)  அவர்களும், நபீ ஈஸா (عليه السلم)  அவர்களும் பிறந்தார்கள்.
 • இன்றுதான் நும்றூத் எனும் சர்வாதிகாரி நபீ இப்றாஹீம் (عليه السلم)  அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்தான்.
 • இன்றுதான் நபீ யூனுஸ் (عليه السلم)  அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது.
 • இன்றுதான் நபீ ஐயூப் (عليه السلم)  அவர்களின் துன்பம் நீங்கியது.
 • இன்றுதான் நபீ யஃகூப் (عليه السلم)  அவர்கள் தனது மகன் யூசுப் (عليه السلم)  அவர்களை இழந்ததால் இழந்திருந்த
  கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
 • இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்டிருந்த நபீ யூசுப் (عليه السلم)  அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
 • இன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நாள்.
 • இன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்த நாள்.
 • இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியிலுள்ளவர்களுக்கு முதன் முதலில் இறங்கியது.
 • நபீ நூஹ் (عليه السلم)  அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் பின்பு முதன் முதலாக இப்பூமியில் சமையல் செய்யப்பட்டது
  பத்தாம் நாளான ஆஷூறா தினம்தான். நபீ நூஹ் (عليه السلم)  அவர்கள்தான் முதலில் சமையல் செய்தார்கள்.
 • இன்றுதான் சுலைமான் நபீ (عليه السلم)  அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
 • இன்றுதான் நபீ ஸகரிய்யா (عليه السلم)  அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) மகனாகப் பிறந்தார்கள்.
 • இன்றுதான் நபீ மூஸா (عليه السلم) அவர்கள் பிர்அவ்னையும், அவனுடைய சூனியக்காரர்களையும்
  தோற்கடித்தார்கள்.
 • இன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கி இறந்தான்.
 •   இன்றுதான் நபீ பேரர் ஹுஸைன் (رضي الله عنه)  கொல்லப்பட்டார்கள்.
 • இன்றுதான் அஹ்லுல்பைத் என்று அழைக்கப்படுகின்ற நபீ (صلى الله عليه وسلم)
  அவர்களின் இனபந்துக்களில்
  அநேகர் கொலை செய்யப்பட்டார்கள்.

 

         இத்தகைய விஷேடங்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
நிகழ்ச்சிகளும் முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாளான ஆஷூறா தினத்திலேதான் நடைபெற்றுள்ளன.
இதனால்தான் இந்நாள் முஸ்லிம்களுக்கு விஷேட நாளாக அமைந்துள்ளது.
              முஸ்லிம்கள்
இந்நாளை சாதாரண நாளாக நினைத்து வீண் விளையாட்டில் கழிக்காமல் நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், திக்று செய்தல், பிக்று செய்தல், தியானம் செய்தல், முறாகபஹ் முஷாஹதஹ் எனப்படும்
பேரின்ப ஆத்மீக தியானம் செய்தல் போன்ற நல்ல விடயங்களைக் கொண்டு இந்நாளைச் சிறப்பித்தல்
அவசியம்.
       “ஆஷூறா” நோன்பு பற்றி நபீ
(صلى الله عليه وسلم)
அவர்களிடம் கேட்கப்பட்ட போது
“ஆஷூறா” நோன்பு கடந்த வருடத்தின் குற்றங்களுக்குப் பரிகாரமாக
அமையுமென்று விடை பகர்ந்தார்கள்.
    “ஆஷூறா” தினத்தில் மனிதர்கள்
நோன்பு நோற்பதுபோல் மிருகங்களும், பூச்சி, புழுக்களும் நோன்பு நோற்கின்றன. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.
பறவை இனத்தில் முதலில் “ஆஷூறா” நோன்பு நோற்ற பறவை மைனா.
     “ஆஷூறா” தினத்தில் ஒருவன்
தனது குடும்பத்தவர்களையும், உறவினர்களையும் பேணி நடந்தால் அல்லாஹ் அவனுக்கு
அருள் நிறைந்த விசாலமான வாழ்வைக் கொடுக்கிறான் என்றும், அந்த வருடம் முழுவதும் அவனுக்கு அளவற்ற அருள் செய்கிறான் என்றும் நபீ (صلى الله عليه وسلم)
அவர்கள் அருளினார்கள்.
               “அல்பறகா” எனும் நூலில் இது பற்றிக் கூறுகையில் ஐம்பது ஆண்டுகளாக இந்த விடயத்தை நாங்கள் பரீட்சித்து
வருகிறோம். எந்த மாற்றமுமின்றிச் சொன்னபடியே நடந்து வருகிறதென்று ஆத்ம ஞானி சுப்யான்
தௌரி (رحمة الله عليه) கூறுகிறார்கள்.
    நபீ பேரர் ஹுஸைன்
(رضي الله عنه)  அவர்கள்
ஈராக் நாட்டிலுள்ள கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டது  இத்தினத்திலேயாகும்.
      இதனால்தான் ஆஷூறா
தினத்தில் ரொட்டி சுட்டு ஹஸன், ஹுஸைன், பாதிமஹ் ஆகியோரின் ஆத்மசாந்திக்காக
யாஸீன் கத்ம் ஓதி வருகிறார்கள். இன்றுவரை இந்த வழக்கம் இலங்கையில் பல பாகங்களிலும், குறிப்பாகக் காத்தான்குடியிலும் இருந்து வருகிறது.
இந்த வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வந்த போதினும் சமீபத்தில்
தோன்றிய வழிகெட்ட கூட்டங்களிற் சில இவ்வழக்கம் பித்அத் என்றும், ஷிர்க் என்றும் மக்களிடையே பறை சாற்றி வருகின்றது. இத்தகைய கூட்டங்கள் பற்றிப்
பொது மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
       முஹர்றம் மாதமான
இம்மாதம் ஒன்பதாம், பத்தாம் நாட்கள் விஷேடமான நாட்களாயிருப்பதுபோல்
இம்மாதத்தில் வேறு விஷேட நாட்களும் இருக்கின்றன.
         இம்மாதத்தின்
முதல் நாள் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல் நாளாகும். இந்நாள் அறபு அரசர்களிடம் அதி
விஷேட நாளாகும். அவர்கள் இந்நாளில் புத்தாடை உடுத்து அதி விஷேட உணவு சாப்பிட்டு மகிழ்வார்கள்.
இம்மாதத்தின் நான்காம் நாள் நஜ்றான் வாசிகளான நஸாறாக்களுடன் நபீ (صلى الله عليه وسلم)  அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
 • இம்மாதத்தின் ஏழாம் நாள் நபீ யூனுஸ் பின் மத்தா (عليه السلم)  அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளியேறிய நாளாகும்.
 • இம்மாதத்தின் பதினேழாம் நாள் உஹது யுத்தம் நடந்த நாளாகும்.
 • இம்மாதத்தின் பதினேழாம் நாள்தான் நபீ மணி (صلى الله عليه وسلم) அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா (رضي الله عنه) கொலை செய்யப்பட்டார்கள்.

 

        இம்மாதம் இருபத்தைந்தாம்
நாள் தொடக்கம் மாதம் முடியும் வரை “நஹ்ஸ்” உடைய நாட்கள் என்று
சொல்லப்படுகிறது. அதாவது பறகத் குறைந்த நாள் என்று கருதப்படுகிறது. அதாவது இந்நாட்களில்
திருமணம் செய்தல், வீடுகட்டுதல், வியாபாரம் துவங்குதல், பொதுவாக நல்ல காரியம் ஆரம்பித்தல் பொருத்தமற்றதென்று வைத்திய நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந் நாட்களில்தான் ஆத், தமூத் கூட்டத்தினர்கள் பயங்கர சோதனை மூலம் அழிக்கப்பட்டார்கள்.
          ரமழான் மாதத்தில்
நோற்கத் தவறிய “கழா” நோன்புள்ளவனும் நேர்ச்சை நோன்புள்ளவனும் தாஸூஆ
– ஆஷூறா ஒன்பதாம் பத்தாம் நாட்களில் தம்மீதுள்ள கழா அல்லது நேர்ச்சை நோன்பு நோற்றால்
அவர் நோற்ற நோன்பு நிறைவேறுவதுடன் இவ்விரு சுன்னத்தான நோன்புகளின் நன்மையும் கிடைக்கும், ஆனால் நிய்யத் வைக்கும் பொழுது பர்ழான ரமழான் நோன்பு என்றும், நேர்ச்சை நோன்பு என்றும் நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும்.
                   “கழா” நோன்பு அல்லது நேர்ச்சை நோன்பு இல்லாதவர்கள் ஆஷூறா – தாஸூஆ நோன்பு
என்று நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும்.
       எனவே, இம்மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்களில் நோன்பு நோற்றும், குடும்பத்தவர்கள் உறவினர்களைப்
பேணியும், ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் முதலியன வழங்கியும் நல்லடியார்களில்
சேர்வோம்.
– வஸ்ஸலாம் –
வெளியீடு
அகில இலங்கை ஸூபிஸ உலமாசபை
31.10.2014

 

You may also like

Leave a Comment