Saturday, April 20, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஏகத்துவ உலகம் மறக்க முடியாத ஏந்தல்அப்துர்றஷீது நாயகம் அவர்கள்​​​

ஏகத்துவ உலகம் மறக்க முடியாத ஏந்தல்அப்துர்றஷீது நாயகம் அவர்கள்​​​

மௌலவீ HMM.இப்றாஹீம் (நத்வீ)
1841 தொடக்கம் இலங்கை வந்த காதிரிய்யஹ் –ரிபாயிய்யஹ் தரீகதுகளின் அணியில் மலர்ந்த ஷெய்குமார்களின் எட்டாமவரும், கண்மணி நபி (ஸல்) 33வது தலைமுறையினரும் “குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா” எனப் புகழப்பட்டவர்களுமான அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அப்துர்றஷீது தங்கள் மெளலானா வாப்பா வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்கள் இலங்கை வந்த​ ஷெய்குமார்களில் மாணிக்கமாக – மரகதமாக கணிக்கப்படுகிறார்கள்.​
மலர்வு
இவர்கள் மகான் அஸ்ஸெய்யிது முஹம்மது அவர்களின் ஆன்மீகப் புதல்வராக ஹிஜ்ரி 1357இல் அந்தரோ தீவில் மலர்ந்தார்கள். இவர்களது தந்தை வழி எங்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடையதும், தாய் வழி இமாம் அஸ்ஸெய்யிது ஹுசைன் (றழி) அவர்களுடையதுமாகும்.

 காத்தான்குடி வருகை
1947 இல் காத்தான்குடிக்கு வருகை தந்த ஷெய்குனா அப்துர்றஷீது நாயகம் அவர்கள், தங்களது பரம்பரையில் தோன்றி 1841 இல் காத்தான்குடி வந்த அஸ்ஸெய்யிது, அஷ்ஷெய்கு ஐதுரூஸ் அல் அதனீ (றஹ்) அவர்கள் தரீகஹ்வின் நடவடிக்கைகளுக்காக ஒலைக்குடிசையாக அமைத்திருந்த முஹ்யித்தீன் தைக்காவில் அமர்ந்தார்க​ள். பின்பு 1950 இல் அதைக் கல்லால் கட்டிய அவர்கள் 1980 இல் முற்றாக அதை மாற்றம் செய்து மாடி வைத்து கட்டினார்கள். அங்கிருந்து கொண்டே மார்க்கப் பணி செய்த அவர்கள் காதிரிய்யஹ் ரிபாயிய்யஹ் தரீகஹ்களை ஹயாத்தாக்கினார்கள்.
அப்போது காத்தான்குடியில் நிகழ்ந்த மார்க்கப்பிரச்சினையில் எங்கள் ஞானபிதா மௌலவீ, அல்ஹாஜ் அப்துர்ரஊப் மிஸ்பாஹி அவர்களை முழு மனதுடன் ஆதரித்தார்கள். இதனால் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சில ஓதிப் படித்த காடையர்களால் சாணி போன்ற அசுத்தப் பொருள்கள் கொட்டப்பட்டன. அதனால் மனம் வருந்திய மொளலானா வாப்பா அவர்கள் காத்தான்குடியை வெறுத்துச் சென்றார்கள். மரணிக்கும் வரை காத்தான்குடிக்கு வரவே இல்லை.
​ அவர்கள் ஊரை விட்டு வெளியேறும் போது எமது ஞானபிதா அவர்களிடம், மகன் நான் போகின்றேன்.நான் பணத்துக்காக இங்கு வருவதாக சிலர் கருதுகின்றனர்.நான் பணத்தின் அடிமையல்லன். எனக்கு இந்த இலங்கையில் ஒரு சதம் கூட கிடைக்காவிடினும் சக்தியத்துக்கு மாறாக நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்கள் உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் சொல்வது உண்மை. உண்மை ஒரு போதும் பொய்யாகாது என்று சொன்னார்கள். அவர்களது உயரிய அவ் வார்த்தைகள் இன்றும் எமது செவிகளில் ஒலித்த வண்ணமேயுள்ளன.
அவர்கள் கண்டியில் நிழார் ஹாஜியார் அவர்களின் வீட்டில் இருக்கையில் ஞானபிதா அவர்களுடன் நாம் சென்று தரிசித்த போது, ‘மகன், நம்மிட இஸ்லாத்தை போதிக்கும் உலமாக்களை உருவாக்குங்கள் என்று கூறினார்கள்.அது மட்டுமல்ல, நமது றஊபு மௌலவிக்கும் பாறூக் மௌலவிக்கும் நிகரான உலமாயார்தானிருக்கிறார்? என்று கேட்டு நமது உலமாக்களை கௌரவப்படுத்தினார்கள். ஞானபிதா அவர்கள் வாப்பா அவர்களைச் சந்திக்கச் சென்றால் எழுந்து நின்று வரவேற்பதுடன் அவர்களைச் சந்திக்க வருவோரையெல்லாம்தங்களிடம் சலாம்சொல்லு முன் ஞானபிதா அவர்களிடம் ஸலாம் சொல்லுமாறு பணித்தார்கள்.
சேவைகள்
காத்தான்குடியில் முஹ்யித்தீன் தைக்கஹ்வையும் அதன் காணியில் “மத்ரஸதுல் பலாஹ்” அறபுக் கல்லூரியையும் உருவாக்கியது போல் கண்டி பட்டுப்பிட்டியில் மஸ்ஜிதுல் ரிபாஈ பள்ளிவாயலையும் அருகில் மத்றஸதுல் மின்ஹாஜிய்யஹ் அறபுக் கல்லூரியையும் நிறுவினார்கள். ​அதேபோல் தெஹிவளையில் இஸ்லாமிய கலைஞான நூலகமொன்றையும் அல்ஜாமியதுல் கௌதிய்யஹ் அறபுக் கல்லூரியையும் நிறுவினார்கள். வெளிநாட்டவரான அவர்கள் நினைத்திருந்தால் இப்பாரிய சேவைகளைச் செய்யாமல் கோடிக் கணக்கான பணத்துடன் தனது நாட்டுக்குப் பறந்திருக்க முடியும் ஆனால் அவர்கள் நபியவர்களின் பரம்பரை என்பதை இச்சேவையின்
மூலம் நிரூபித்து விட்டார்கள்.
விசக் கற்கள்
சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் மெளலானா வாப்பா அப்துர் றஷீது நாயகம் அவர்களால் பத்து இடங்களில் விசமுறிஞ்சும் கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
​​ காத்தான்குடி முஹ்யித்தீன் தைக்காவில் 1968ஆம் ஆண்டிலும் அவர்களின் மாண்புமிகு மாமாவால் காங்கேனோடையில் அமைக்கப்பட்ட தைக்கஹ்வில் 1958இலும், கண்டி பட்டுப்பிட்டி மஸ்ஜிதுர்ரிபாஈ பள்ளிவாயலிலும், அக்கரைப்பற்று ஆலம்குளத்திலும், பதியதளாவ பள்ளியிலும், எல்பிட்டிய, தந்துற, மடுக்கல், நூரேக்கர், காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜீம்அஹ் பள்ளிவாயலில் சமாதி கொண்டுள்ள ஞாதபிதா அவர்களின் தந்தை அப்துல் ஜவாத் வலிய்யுல்லாஹ் அவர்களின் புனித தர்ஹாவிலுமாக பத்து இடங்களில் விசக்கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இனமத பேதமின்றி மக்கள் பெரும் பயன் பெற்று வருகின்றனர். இப்புனித கற்கள் நாய், பாம்பு, தேள் போன்றவற்றால் தீண்டப்பட்ட விசத்தை உறிஞ்சிக் கொள்வதுடன் வாத நோய்க்கும் மாபெரும் சஞ்சீவியாகத் திகழ்கின்றன.
“கறாமத்அற்புதங்கள்”
· தங்கள் வாப்பா அவர்கள் தங்களது மாமாவுடன் 13 வயதில் காத்தான்குடிக்கு வந்தபோது முஹ்யித்தீன் தைக்கஹ்வில் றாதிப் மஜ்லிஸ் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது அணையும் நிலையிலிருந்த விளக்கில் “ஹவ்ழ்” நீரை ஊற்றி எரிய வைத்தார்கள்.
· 1965ஆம் ஆண்டு மாக்கொடிவிழாமல் அபாய நிலையிலிருந்த அப்துல் மஜீத் ஹாஜியாரின் மனைவியை “புனித குத்பிய்யஹ்” மூலம் சுகம் பெறச் செய்தார்கள்.
· முஹ்யித்தீன் தைக்கஹ்வில் வெள்ளரிப்பழ விதையை நட்டி சில நாட்களில் அம்மரத்தில் வெள்ளரிப்பழம் காய்க்க வைத்தார்கள்.
· பாம்பு கடித்தும், சுறாமுள் குத்தியும் வேதனையின் எல்லையைக் கடந்திருந்த இருவருக்கு உண்டியல் மரத்தில் வைத்து விசமிறக்கினார்கள்.
· மழையில்லாத காலங்களில் “யாரிபாஈ” என்று சொல்வதன் மூலம் பல தடவைகளில் மழை பொழியச் செய்துள்ளார்கள். இன்னும் இவை​ ​போன்ற பல அற்புதங்களை தங்கள் வாழ்வில் காட்டியுள்ளார்கள்.
மறைவு
தங்களின் மறு உலகப் பயணத்தை முன் கூட்டியே அறிந்திருந்த மகான் தாங்கள் கூறியது போன்றே ஹிஜ்ரி 1418 ஸபர் பிறை 22 இல் (30.06.1997) வெள்ளியிரவு 9.40 மணிக்கு கண்ணூரில் வைத்து “ஹுவல் அவ்வலு வல் ஆகிறு, வழ்ழாஹிறு, வல்பாதினு” எனும் திருக்குர்ஆன் வசனத்தை ஓதியவர்களாக “தாறுல்பனா” எனும் மெய்யுலகத்தை நோக்கி தங்கள் இறுதிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன் உலக வாழ்க்கையில் அல்லாஹ்வின் பனாவானவர்களுக்கு மரணமேது? ​ ​
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments