காதிரிய்யஹ் திருச்சபை

October 8, 2016
மெளலவீ MMA. மஜீத் றப்பானீ
தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை

அல்லாஹூ தஆலா, தன்னைப் பற்றிய அறிவை மக்களுக்கு எத்திவைப்பதற்காகவும், அவர்களை ஆன்மீக வழியில் நடாத்திச் சென்று அவர்களைத் தூய்மைப்படுத்தி, தீக்குணங்களில் இருந்து அவர்களை விலகச் செய்து, தன்பக்கம் அவர்களின் சிந்தனையைத் திருப்புவதற்காகவும் நபீமார்களை இவ்வுலகில் தோற்றுவித்தான்.

நபீமார்களின் வருகை முத்திரையிடப்பட்டபின் மக்களைத் தன் பக்கம் அழைத்துச் செல்வதற்காக நபீமார்களின் வாரிசுகளான இறைஞானத்தை நன்கறிந்த ஆலிம்கள், ஷெய்ஹ்மார்கள், வலீமார்களை அல்லாஹூ தஆலா தோற்றுவித்தான்.
எனவேதான் நபீமார்கள், வலீமார்கள், ஷெய்ஹ்மார்கள் அனைவரும் இவ்வுலகில் செய்த பணி ஆன்மீகப் பணியேயாகும். இப்பணிக்கு நிகரான பணி எதுவுமே கிடையாது.

காலத்துக்குக் காலம் தோன்றிய ஷெய்ஹ்மார்கள் மக்களை நல்வழிப்படுத்தி, ஆன்மீக வழியில் அழைத்துச் செல்வதற்காக பல வழிமுறைகளைக் கொண்டார்கள். இறைசிந்தனையற்ற மக்களுக்கு ஆன்மீக போதனைகளை வழங்கி அவர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்று சேர்த்தார்கள்.
இவ்வாறு மக்களை நல்வழிப்படுத்தும் நோக்குடனேயே தரீகஹ்கள் தோற்றுவிக்கப்பட்டன. தரீகஹ் என்பது ஒரு மனிதனைப் பண்படுத்தி அவனை இறைசமூகம் செல்வதற்குத் தகுதியான ஒருவனாக மாற்றும் ஒரு சிறந்த அமைப்பாகும். இந்த அடிப்படையில் நாம் சற்று சிந்திக்கும்போது ஒரு மனிதன் ஒரு ஞானகுருவின் கரம்பற்றி, அவரின் வழிகாட்டலுடன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டானேயானால் அவன் நிச்சயம் வெற்றி பெறுவான் எனவே தான் ஷெய்ஹ்மார்கள் தரீகஹ்களை ஸ்தாபித்து அவற்றின் மூலம் மக்களை நல்வழிப்படுத்தினார்கள்.
எந்த ஒரு தரீகஹ்வை எடுத்துக் கொண்டாலும் அந்த தரீகஹ்வின் நோக்கம் மக்களை ஆன்மீக ரீதியில் வெற்றிபெறச் செய்வதேயாகும். பல பெயர்களில் தரீகஹ்கள் அழைக்கப்படுவது அவற்றை ஸ்தாபித்த மகான்களின் ஞாபகாத்தமாகவேயாகும்.
அல் குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலி குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் ஸ்தாபித்த தரீகஹ் அத்தரீகதுஷ் ஷாதுலிய்யஹ் என்றும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் ஸ்தாபித்த தரீகஹ் அத்தரீகதுல் காதிரிய்யஹ் என்றும், ஸூல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ அவர்கள் ஸ்தாபித்த தரீகஹ் அத்தரீகதுர் ரிபாயிய்யஹ் என்றும், அஸ்ஸெய்யித் பஹாஉத்தீன் அந்நக்‌ஷபந்தீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் ஸ்தாபித்த தரீகஹ் அத்தரீகதிந் நக்‌ஷபந்திய்யஹ் என்றும், அஜ்மீர் அரசர் குத்புல் ஹிந்த் ஹஸ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் ஸ்தாபித்த தரீகஹ் அத்தரீகதுல் சிஷ்திய்யஹ் என்றும் அழைக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
இந்த வகையில் காதிரிய்யஹ் தரீகஹ்வின் ஸ்தாபகர் குத்புல் அக்தாப் அஸ்ஸெய்யித் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களின் ஸில்ஸிலஹ் வழியில் தோன்றியவர்களே காயல் பட்டணத்தைச் சேர்ந்த ஞானமகான் அதிசங்கைமிகு அஸ்ஸெய்யிது அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள்.
இவர்கள் இலங்கை நாட்டுக்கு சமூகமளித்து ஆன்மீகப் பணியில் ஈடுபட்டார்கள். மக்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம் ஏகத்துவத்தைத் தெளிவுபடுத்தினார்கள். திக்ர் மஜ்லிஸ்களை அதிகம் நடாத்தி, அதன் மூலம் முரீதீன்களுக்கு ஆன்மீகப் பயிற்சியை வழங்கினார்கள்.
இவர்களுக்கு இலங்கையின் பலபாகங்களிலும் முரீதீன்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இவர்கள் பைஅத் வழங்குவதற்கான அனுமதியை ஹைதராபாத்தைச் சேர்ந்த தத்துவக்கடல் ஞானமகான் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் அப்துல் காதிர் ஸூபீ ஹைதராபாதீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் இவர்களுக்கு வழங்கிவைத்து, இவர்களை தங்களின் கலீபஹ்வாக நியமனம் செய்தார்கள்.
எனவே, அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் ஸூபீ காஹிரீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் அத்தரீகதுல் காதிரிய்யதுல் அலவிய்யஹ், அத்தரீகதுந் நக்‌ஷபந்திய்யதுஸ் ஸித்தீகிய்யஹ் ஆகிய இரண்டு உயர் தரீகஹ்களின் அடிப்படையில் பைஅத் வழங்கி, மக்களுக்கு இறைஞானத்தைத் தெளிவாகப் போதித்தார்கள்.
முரீதீன்களை ஆன்மீக வழியில் நடாத்திய இவர்கள் தங்களின் மறைவின்பின் கலீபஹ் – பிரதிநிதியாக செயற்பட்டு மக்களை ஆன்மீக வழியில் நடாத்திச் செல்லக் கூடிய, இறைஞானத்தைத் தெளிவாகப் போதித்து அவர்களைத் தூய்மைப்படுத்தக்கூடிய ஒருவராக, அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா ஞானமகான் ஷம்ஸுல் உலமா அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ அதாலல்லாஹூ பகாஅஹூ அன்னவர்களைக் கண்டார்கள்.
எனவே, ஹிஜ்ரீ 1395ம் வருடம் துல்ஹஜ் மாதம் 28ம் நாள் அதிசங்கைக்குரிய ஷெய்ஹூனா அன்னவர்ளை தங்களின் கலீபஹ்வாக, காதிரிய்யஹ், நக்‌ஷபந்திய்யஹ் ஆகிய இரண்டு தரீகஹ்களின் ஷெய்ஹாக நியமித்தார்கள். எழுத்துமூலமாக இந்த நியமனத்தை அவர்கள் வழங்கினார்கள். எழுத்துமூலம் அவர்கள் கையெழுத்திட்டு வழங்கிய நியமனம் எம்மிடம் உண்டு.
அறபு மொழியில் அவர்கள் வழங்கிய இந்த நியமனத்தின் ஒரு சில வரிகளின் தமிழாக்கம் இதுவாகும்.
“ ஹைதராபாத்தைச் சேர்ந்த எனது குருவும், வழிகாட்டியுமான ஞானிகளின் தலைவர், தத்துவக்கடல் அஷ்ஷாஹ் முஹம்மத் அப்துல் காதிர் ஸூபீ காதிரீ வழங்கியது போன்று அதிஉயர் காதிரிய்யஹ் தரீகஹ், அதிசிறப்புக்குரிய நக்‌ஷபந்திய்யஹ் தரீகஹ் ஆகிய இரண்டு தரீகஹ்களையும் கற்றுக் கொடுப்பதற்கு, இலங்கையைச் சேர்ந்த அல் ஆலிம் அப்துல் ஜவாத் அவர்களின் புதல்வர் அல் ஆலிம் அப்துர் றஊப் அன்னவர்களுக்கு நான் அனுமதி வழங்குகின்றேன். இவர்களைத் தகுதியுடையவர்களாக நான் கண்ட பின்னரே மேற்சொல்லப்பட்ட இரண்டு தரீகஹ்களையும் கற்றுக் கொடுப்பதற்கு நான் அனுமதி வழங்கினேன்.”
சுமார் 31 வருடங்களுக்கு முன்னர் எமது ஷெய்ஹ் நாயகம் அன்னவர்கள் இரண்டு தரீகஹ்களின் ஷெய்ஹாக நியமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மாத்திரம் பைஅத் – ஞானதீட்சை வழங்கி அவர்களைத் தங்களின் முரீதீன்களாக ஆக்கிக் கொண்டார்கள்.
ஆயினும் எமது கண்ணியத்துக்குரிய ஷெய்ஹூனா மிஸ்பாஹீ அன்னவர்கள் ஒவ்வொரு வினாடியும் இறை தத்துவம் ஏகத்துவத்தைத் தெளிவாகப் பரப்புவதில் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டார்கள். செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக பல இன்னல்களையும், துன்பங்களையும் எமது ஷெய்ஹ் நாயகம் அன்னவர்கள் அனுபவித்தார்கள்.
காதிரிய்யஹ், நக்‌ஷபந்திய்யஹ் ஆகிய இரண்டு தரீகஹ்களுக்கு ஷெய்ஹாக எமது ஷெய்ஹ் நாயகம் அன்னவர்கள் இருந்தாலும் காதிரிய்யஹ் தரீகஹ்வின் ஸில்ஸிலஹ் வழியில் எமது ஷெய்ஹ் நாயகம் அன்னவர்கள் 41வது ஷெய்ஹாக திகழ்கின்றார்கள்.
சமீபகாலமாக தங்களை நாடிவருகின்ற முரீதீன்களுக்கு காதிரிய்யஹ் தரீகஹ்வின் அடிப்படையில் எமது கண்ணியத்துக்குரிய ஷெய்ஹ் நாயகம் அன்னவர்கள் பைஅத் வழங்கி வருகின்றார்கள். இதுவரை சுமார் 800க்கும் அதிகமான முரீதீன்களுக்கு பைஅத் வழங்கியுள்ளார்கள்.
எனவேதான், எமது கண்ணியத்துக்குரிய ஷெய்ஹ் நாயகம் மிஸ்பாஹீ அன்னவர்களிடம் பைஅத் பெற்ற முரீதீன்களை ஒன்று திரட்டிய ஓர் சபையாக காதிரிய்யஹ் திருச்சபை 05.02.2004ல் உதயமானது.
இத்திருச்சபையில் எமது எமது கண்ணியத்துக்குரிய ஷெய்ஹ் நாயகம் மிஸ்பாஹீ அன்னவர்களிடம் பைஅத் பெற்ற ஆண், பெண் முரீதீன்கள் மாத்திரம் அங்கத்தவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஏகத்துவத்தை முழுமையாக விளங்கியவர்களாகவும், தரீகஹ்வை முழுமையாக பின்பற்றி வாழ்வதுடன் ஷரீஅத்தை தங்களின் வாழ்வில் எடுத்து நடப்பவர்களாகவும் ஐவேளையும் விதிக்கப்பட்ட தொழுகைகளைத் தொழுவதுடன் முன் பின் சுன்னத்தான தொழுகைகளையும் ஏனைய சுன்னத்தான தொழுகைகளையும் பேணித் தொழ வேண்டுமென்பது நிபந்தனையாகும்.
இவர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் எமது பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறும் காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸ் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமென்பதும் ஒரு நிபந்தனையாகும். இந்த றாதிப் மஜ்லிஸ் எமது மரியாதைக்குரிய ஷெய்ஹு நாயகம் மிஸ்பாஹீ அவர்களின் தலைமையில் நடைபெறுவது ஒரு விஷேட அம்சமாகும்.

You may also like

Leave a Comment