குழப்பத்தை தூண்டுகிறது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா! காத்தான்குடி பொதுமக்களே விழிப்புடன் இருங்கள்!

January 28, 2016
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
இலங்கை முஸ்லிம் சமூகம் ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறை சார்ந்த சமூகமாகும். ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கையை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறையை பின்பற்றும் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது.
ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கை, தரீக்கா வழி முறை தொடர்பான பிழையான விளக்கங்கள், அடையாளப்படுத்தல்கள் அண்மைக்காலமாக  சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஸூபிஸம் என்பது இஸ்லாத்தின் ஆன்மீகப் பகுதியாகும். இது உள்ளம் சம்பந்தப்பட்ட ஆன்மீக வழிமுறையாகும். உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனை அறிதல், அவனை வணங்குதல், அவற்றின் மூலம் அவனை அடைவதற்கான வழிகாட்டல்களை அது வழங்குகின்றது.
இஸ்லாமிய ஸூபித்துவ வழிமுறை மனிதனில் இயல்பாக அமைந்துள்ள தீய எண்ணங்களான  கோபம், பொறாமை, வஞ்சகம், வேற்றுமை, கொலை, கொள்ளை, இனவேறுபாடு போன்றவற்றைக் களைந்து, கறைபடிந்த உள்ளத்தை இறையறிவினால் பரிசுத்தப்படுத்தி இறைவனுடன் அவனைச் சேர்த்து வைப்பதற்கான போதனைகளை வழங்குகிறது.
தரீக்கா என்பது நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இன்றுவரை வழிவழியாக ஸூபிஸ அறிவு போதிக்கப்பட்டு வரும் வழி முறையாகும்.
உலகளாவிய ரீதியில் தரீக்காக்கள் இஸ்லாமிய ஆன்மீகக் கல்வியை போதிக்கின்றன. இன்று உலக முஸ்லிம்களுக்கு மிக அவசியமானது ஸூபிஸ அறிவும், தரீக்கா வழிமுறையுமாகும்.

இந்த அடிப்படையில் பின்வரும் விடயங்களை  நாம் தெளிவாக வலியுறுத்துகின்றோம்.
01. அல்லாஹ்வையும் அவனது மலக்குகளையும் அவனால் இறக்கிவைக்கப்பட்ட வேதங்களையும் அவனது றஸூல்மார்களையும் மறுமை நாளையும் நலவும் தீங்கும்  அல்லாஹ்வில் நின்றுமுள்ளது என ஈமான் – நம்பிக்கை கொள்வது இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படை அம்சமாகும்.
02. அல்லாஹ் ஒருவன், அவன் தூயவன், ஏகன், இணை துணையற்றவன், அவன் தன்னைக் கொண்டு நிலைபெற்றவன், சிருஷ்டிகள் அனைத்தும் அவனைக் கொண்டே நிலைபெற்றுள்ளன. அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச் சமீபமாக இருக்கின்றான். அவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாக இருக்கின்றான். அவன் சிருஷ்டிகளுக்கு மாற்றமானவன். அவனுக்கு நிகராக எந்த வஸ்துவுமில்லை. அவனே கேட்பவனாகவும் பார்ப்பவனாகவுமிருக்கின்றான். அவன் காலம் இடம், திசை, சடம் எனும் கட்டுப்பாடுகளை விட்டும் தூயவன். அவனைக் கொண்டே தவிர அணுவும் அசையாது. சிருஷ்டிகளைப் படைக்கவேண்டிய எந்த ஒரு நிர்ப்பந்தமும் அவனுக்கில்லை. அவன் தேவையற்றவன். அவனே முந்தியவன் அவனே பிந்தியவன் அவனே வெளியானவன் அவனே உள்ளானவன், அவன் சகல வஸ்துக்களையும் நன்கறிந்தவன்.
03. “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ்” “அல்லாஹ்வுக்கு வேறான இலாஹ் (தெய்வம்) இல்லை. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராகும்”  என்ற  திருக்கலிமாவின் அடிப்படையில் “வுஜூத்” எனும் “உள்ளமை” அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது, “இலாஹ்” எனப்படும் தெய்வங்களுக்கோ ஏனைய  படைப்புகளுக்கோ  “வுஜூத்” எனும் “உள்ளமை” கிடையாது என்பதை தெளிவாக வலியுறுத்துவதே “வஹ்ததுல் வுஜூத்” கோட்பாடாகும். இதுவே தவ்ஹீத் ஆகும். இதுவே “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமா கூறுகின்ற இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையாகும்.
04. அல்லாஹ் படைப்புகளில் இறங்கியிருக்கின்றான் என்பதை வலியுறுத்தும் “ஹுலூல்” கொள்கையையும் அல்லாஹ் படைப்புகளில் இரண்டறக்கலந்து ஒன்றாகிவிட்டான் என்பதை வலியுறுத்தும் “இத்திஹாத்” கொள்கையையும் அல்லாஹ் ஏழுவானங்களுக்கு அப்பால் “அர்ஷ்” எனும் சிம்மாசனத்தில் இருக்கின்றான்; அல்லது “அர்ஷ்” எனும் சிம்மாசனத்திற்கு அப்பால் இருக்கின்றான் என்பதை வலியுறுத்தும் சடவாத “வஹ்ஹாபிஸ” கொள்கையையும் நாம் முற்றாக மறுக்கின்றோம்.
“வஹ்ததுல் வுஜூத்” என்று அழைக்கப்படும் சத்திய இஸ்லாமிய கொள்கையை அல்குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய வரலாற்றில் இமாம்கள், மகான்கள், ஏகத்துவ ஞானிகள், இறையியற் கலை மேதைகள் பலர் பேசி இருக்கின்றனர். இன்றும் சர்வதேச ரீதியில் பல இஸ்லாமிய அறிஞர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதனையே 1979ம் ஆண்டு முதல் நாம் போதித்து வருகின்றோம். சத்திய இஸ்லாமிய கொள்கையை போதிக்கும் நாமும் அதை ஏற்றுக் கொண்ட பொதுமக்களும் இது வரை காலமும் பல துன்பங்களை அனுபவித்துள்ளோம்.
1)  “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ்” என்ற திருக்கலிமாவை மொழிந்து அதை ஏற்றுக் கொண்டு ஐவேளை தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களை செய்து வரும் எமக்கு மதம் மாறியவர்கள் என்ற அநீதியான தீர்ப்பு 1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்பட்டது. இத்தீர்ப்பினைத் தொடர்ந்து பல் வேறு வகையான சமய, சமூக ரீதியான பிரச்சினைகள், வன்முறைகள், பழிவாங்கல்கள் இடம்பெற்றன.
02) இந்தத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 1998ம் ஆண்டு இலங்கை முழுவதும் புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞரும் “வஹ்ததுல் வுஜூத், ஸூபிஸ” கொள்கைப் பிரச்சாரகருமான மௌலவீ MSM. பாறூக் காதிரீ அவர்கள் இனம் தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
03) இந்தத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 2004, 2006ம் ஆண்டுகளில் காத்தான்குடியில் அல்குர்ஆன் மத்றஸாக்கள், இஸ்லாமியப் பெரியார்களின் புனித அடக்கஸ்தளங்கள், பொதுமக்களின் வீடுகள், வியாபாரத்தலங்கள் என்பன கொள்ளையிடப்பட்டு, உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
04)  இந்தத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 2006ம் ஆண்டு எமது அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அவர்கள் மீது இனந் தெரியாத ஆயுத தாரிகளால் கொலை முயற்சித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் சமய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கான பல்வேறுபட்ட இடையூறுகள், சமூக, பொருளாதார ரீதியான நெருக்கடிகள் இந்தத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு எமக்கு ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும் அநியாயக்காரர்களின் இரக்கமற்ற வன்முறைகளிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவும் 2007ம் ஆண்டு எமது ஜனநாயக உரிமைகளை இழக்கும் வகையிலான ஒரு உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். ஆயினும் அமைதி நிலையை நீடிக்கச் செய்வதற்காகவும், ஊர்மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் எமது செயற்பாடுகளை குறித்த எல்லைகளுக்குள் மட்டுப்படுத்திக் கொண்டோம்.
அந்த அடிப்படையில் ஜும்அஹ் தொழுகை, கொடி ஊர்வலங்கள், அல்மிஷ்காத் பத்திரிகை வெளியீடு, முஹ்ஸின் மௌலானா தர்கா ஷரீப் கந்தூரி நிகழ்வு போன்றவற்றை நிறுத்தியதும் ஒலிபெருக்கி பாவனையை மட்டுப்படுத்தியதும் எமது ஆதரவாளர்களின் திருமண நிகழ்வுகளையும், ஜனாஸா நல்லடக்கங்களையும் குறித்த மஹல்லாக்களில் உள்ள பள்ளிவாயலிலே நடாத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியதும் இயற்கை அனர்த்தங்களின் போது எமது தளபாடங்களை ஏனைய பள்ளிவாயல்களுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் வழங்கியதும் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதும் தேர்தல் காலங்களில் எமதூரின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் முயற்சிகளில் முன் நின்று பாடுபட்டதும் சென்ற 2011ம் ஆண்டு நகரசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளின் மூலம் எமக்குக் கிடைத்த தவிசாளர் பதவியை விட்டுக் கொடுத்ததும் எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவும் சமாதானத்திற்கான எமது ஒத்துழைப்பை வெளிக்காட்டுவதற்குமேயாகும்.
ஆயினும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா எமது தரப்பு உலமாஉகளை புறக்கணிக்கும் செயற்பாடுகளையே தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது. 2004ம் ஆண்டு உடன்படிக்கைக்குப் பின்னரான 12 ஆண்டுகளில் ஒரு குத்பஹ் பிரசங்கத்தைக் கூட எமது தரப்பு உலமாஉகளுக்கு வழங்கவில்லை. காத்தான்குடியில் பல்வேறு தஃவா அமைப்புக்கள் ஜம்இய்யதுல் உலமாவின் கொள்கைகளுக்கு மாற்றமான பல கொள்கைகளைக் கொண்டிருந்த போதும் பல செயற்பாடுகளை மேற்கொண்ட போதும் அதுபற்றி கவலைப்படாத ஜம்இய்யதுல் உலமா எம்மோடு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி ஒற்றுமையாக செயற்பட முன்வரவில்லை. இந்நிலையில் சென்ற 01.01.2016ம் திகதி தேசிய சுன்னத் வல் ஜமாஅத் சபை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மீலாதுன் நபீ விழா ஒன்றை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டது. இவ்விழாவுக்கான அனுமதி சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக பெறப்பட்டிருந்த போதிலும் இவ்விழாவினை ரத்துச் செய்யுமாறு கோரி காத்தான்குடி நகரசபையின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் ஆகியோர்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கடிதங்களை அனுப்பி இருந்ததுடன், அப்பெரு விழாவினை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது.
தொடர்ந்து 19.01.2016ம் திகதி காத்தான்குடியில் பொதுமக்கள் மத்தியில் ஒற்றுமை சீர்குலைக்கும் சிவப்பு நிற பிரசுரத்தை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ளது.
எமது தாய்நாட்டின் சட்டங்களை மதிக்காமலும், எமது ஊரின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் புறக்கணித்தும், எமதூரின் மீதான நல்லெண்ணத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில்  எமதூரான காத்தான்குடி மீது முன்வைக்கப்படும் முஸ்லிம் அடிப்படைவாத குற்றச்சாட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், இன மையவாதத்துடன் செயற்படும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மேலும் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என தங்களை தாங்களே பிரகடனம் செய்யும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடியில் பெரும்பான்மை, சிறுபான்மை என முஸ்லிம்களுக்கு மத்தியில் வேறுபாட்டை தோற்றுவிக்கும் வகையிலும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் நம்பிக்கைகளுக்கு மாற்றமான நம்பிக்கைகளையுடைய முஸ்லிம்களின் மத உரிமைகளை நிராகரிக்க அரச அதிகாரிகளை தூண்டும் வகையிலும் செயற்பட்டு வருவதனையும் நாம் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நல்லாட்சி விழுமியங்களை குழிதோண்டிப்புதைத்து, எமது தாய் நாட்டில் நல்லாட்சியையும், இன, மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவை  அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அடையாளம் காட்டுகிறோம்.
கடந்த காலங்களில் ஈமானியப் போராட்டம் என்ற பெயரில் நடந்தேறிய வன்முறைகளின் சூத்திரதாரிகளையும் மௌலவீ MSM. பாறூக் காதிரீ அவர்களின் கொலையாளிகளையும் சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அவர்கள் மீது கொலை முயற்சித் தாக்குதல் மேற்கொண்டவர்களையும் புலன் விசாரணைகள் மூலம் கண்டறியுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
காத்தான்குடியில் பல்வேறு தஃவா அமைப்புக்கள் தமது கொள்கைகளின் அடிப்படையில் செயற்படுவது போல் நாம் தரீகா அடிப்படையில் ஸூபிஸ வழிமுறையில் அல்குர்ஆன், அல் ஹதீஸ், அல் இஜ்மாஃ, அல் கியாஸ் ஆகிய இஸ்லாமிய மூலாதாரங்களின் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரம் செய்வதோடு அதனோடு தொடர்பான வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றோம். இதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் 2009ம் ஆண்டு 46ம் இலக்க அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டத்தின் மூலம் அங்கீகாரம் பெற்றுள்ளோம்.
அத்துடன் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் அரசியலமைப்பின் அத்தியாயம் III உறுப்புரிமை 10,14(1)(அ), 14(1)(ஆ), 14(1)(இ), 14(1)(உ), 14(1) ஆகியனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில் ஒருவர் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராய் இருப்பதற்கான சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் கருத்து தெரிவித்தல் சுதந்திரமும் தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும் சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரமும் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே, உலமாக்கள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள், ஊர் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள், சமய , சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நிதானமாக சிந்தித்து நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்
வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு
BJM. கட்டிடம், BJM. வீதி,
காத்தான்குடி.
29.01.2016

You may also like

Leave a Comment