உத்தம நபீ உன்போன்ற மனிதனா?

February 2, 2012
அதி சங்கைக்குரியஷெய்குனா 
மௌலவீ,அல்ஹாஜ் A அப்துர்றஊப் மிஸ்பாஹீஅவர்கள் 
வஹ்ஹாபிஸ குழியில் வழுக்கி விழுந்த அல்லாஹ்வின் அடியானே! நபீ ஸல் அவர்கள் என் போன்ற மனிதனென்று நீ சொல்கிறாயா? 
ஏன் இவ்வாறு சொல்கிறாய்? இது உனது அறியமையா? அல்லது ரியாலுக்காக நீ நடிக்கும் நாடகமா? இது உனது அறியாமையாயின் இதற்கு மருந்தும் உண்டு. மருத்துவமனையும் உண்டு. இது உனது நாடகமாயின் இதற்கு மருந்துமில்லை. மருத்துவனையுமில்லை. என்ன மருந்து? எந்த மருத்துவனை என்ற கேட்க நினைக்கிறாயா? கவலைப்படாதே. இரண்டையும் சொல்லி விடுகிறேன். 
திருக்குர்ஆனும், திருநபீயின் நிறைமொழியும், அவ்லியாக்கள், இமாம்களின் வழிமாட்டலுமே இதற்கான மருந்து காத்தான்குடி06,BJM. வீதியிலுள்ள அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞான பேரவைதான் இதற்கான மருத்துவமனை உன் அறியாமை இருளகன்று அறிவெனும் 
ஒளிபெற நீ விரும்பினால் உன்னிலுள்ள பெருமை,பொறாமை,கர்வம் போன்ற மலங்ளை அகற்றிவிட்டு தூய மனதுடன் மனிதனாக மருத்துனைக்கு வா. உத்தம நபீ யாரென்று உனக்கு புரியும். அவர்களின் எதார்தம் தெளியும். 
அல்லாஹ்வின்அடியானே!
உத்தம நபீ உன் போன்ற சாதாரண மனிதனென்று ஏன் சொல்கிறாய் என்று உன்னைக் கேட்டால் யாவும் கற்றறிந்த கலாநிதி என்ற நினைப்பில் பின்வரும் திருவசனத்தை ஓதிக்காட்டுகிறாய் 
قلإنّماانابشرمثلكم 
முஹம்மதே நான் உங்கள் போன்றமனிதனென்று நீங்கள் சொல்லுங்கள். 
-திருக்குர்ஆன்- 
இத்திருவசனம் ஏன் அருளப்பட்டது? எப்போது அருளப்பட்டது? இது உள்ளடக்கியுள்ள அகமியமென்ன? என்ற விபரங்களை நீ தெரிந்து கொள்ளாமல் இத்திரு வசனத்தின் வெளியரங்கத்தை மட்டும் கவனத்திற்கு கொண்டு உத்தம நபீ உன் போன்ற மனிதனென்று முடிவுக்கு வந்து விட்டாய். இதற்குக் காரணம் திருக்குர்ஆனின் எதார்த்தத்தை நீ புரியாமல் போனதேயாகும். 
திருக்குர்ஆன் என்பது உனது பேச்சுமில்லை. எனது பேச்சுமில்லை அது அல்லாஹ்வின் பேச்சு. அது மிக ஆழமான ஆழி. அதற்கு எல்லை என்பதே இல்லை. ​ஒரேயொரு கருத்தை வைத்துக் கொண்டு இது மட்டுமே அதன் கருத்தென்று வாதிட எவருக்கும் முடியாது. 
திருக்குர்ஆனின் ஒரு வசனத்திற்கு ஒரு கோடி விளக்கத்தை புரிந்து கொண்ட ஒருவரால் கூட தான் விளங்கிக் கொண்டது மட்டுமே அதன் விளக்கமென்று வாதிட முடியாது. அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். 
எனது இறைவன் வார்த்தைகளுக்கு (பேச்சுக்கு) கடல்மையாக இருக்குமானால் எனது இறைவனின் பேச்சுக்கள் முடிவதற்குள் கடல் முடிந்து விடும். அது போன்ற இன்னொரு கடலை மையாக்கிக் கொண்டு வந்தாலும் சரியே என்று சொல்லுங்கள் நாயகமே. 
-திருக்குர்ஆன்- 
பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோள்களாகவும், சமுத்திர நீர் மையமாவும் இருந்து எழுத உதவிய போதிலும் அல்லாஹ்வின் வசனங்கள் நிச்சயமாக எழுதி முடிவு பெறமாட்டா. நிச்சயமாக அல்லாஹ் யாவையும் மிகைத்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கின்றான். 
-திருக்குர்ஆன்- 
இவ்விரு வசனங்களும் திருக்குர்ஆனின் விளக்கம் இவ்வளவுதான் என்று எவராலும் மட்டுப்படுத்திக்கூறவோ, எழுதவோ முடியாதென்பதை உணர்த்துகின்றன. 
إنّلِلقلرانُظُهَرَاوَبَطْناَوَلِكلبطنسبعونبطنا 
திருக்குர்ஆனுக்கு உள்விளக்கமும்​,​ வெளிவிளக்கமும் உண்டு. ஒவ்வோர் உள்விளக்கத்துக்கும் எழுபது உள்விளக்கம் உண்டு. 
(நபீமொழி) ​ 
மேற்கண்ட நபீ மொழி திருக்குஆனுக்கு உள்விளக்கமும், வெளிவிளக்கமும் உண்டு என்பதையும், ஒவ்வோர் உள்விளக்கத்துக்கும் எழுபது உள்விளக்கம் உண்டு என்பதையும் கூறுகிறது. இறை ஞானக் கலையில் முதுமைபெற்ற மகான்கள் ஒவ்வோர் உள்விளக்கத்துக்கும் எழுபதாயிரம் உள்விளக்கம்உண்டு என்று கூறியுள்ளார்கள். எனவே, “தப்ஸீர்” எனப்படும் திருக்குர்ஆன் விளக்க நூல்களில் ஒரு சில நூல்களை மட்டும் படித்துவிட்டு அவற்றில் கூறப்பட்ட கருத்துக்கள் மாத்திரம்தான் திருக்குர்ஆனின் கருத்துக்களென்று வாதிடுவது முற்றிலும் அறியாமையாகும். 
அறபுக்கல்லூரியில் ஓதிப்பட்டம் பெறும் ஒரு மௌலவி “தப்ஸீர் ஜலாலைன்” என்ற ஒரேயொரு “தப்ஸீர்” நூலை மட்டுமே ஓதி வெளியாகின்றார். ஆயினுமவர் பட்டம் பெற்று வெளியான பின் அறபுக் கல்வியுடன் தொடர்புள்ளவராயிருந்தால் மட்டும் இன்னும் ஒரு சில “தப்ஸீர்” நூல்களையும் பார்வையிடுவார். அவ்வளவுதான் ஆகவே, திருக்குர்ஆன் விளக்க நூல்களில் ஒரு சில நூல்களை மட்டும் படித்துவிட்டு அல்லாஹ்வின் பேச்சுக்குரிய விளக்கத்துக்கு எல்லை போடுவது முற்றிலும் அறியாமையாகும். 
எனவே, நான் உங்கள் போன்ற மனிதனென்று நீங்கள் சொல்லுங்கள் என்ற திருவசனத்துக்கு ஒரேயொரு விளக்கம் மட்டும் தான் என்று வாதிடுவது அல்லாஹ்வின் பேச்சுக்குரிய விளக்கத்தை மட்டுப்படுத்துவதாகிவிடும். இது திருக்குர்ஆனின் மேற்கண்ட கூற்றுக்கு முற்றும் முரணானதாகும். இவ்வடிப்படையில் மேற்கண்ட வசனத்துக்கு “நான் உங்கள் போன்ற மனிதன் என்று சொல்லுங்கள்” என்ற பொருள் மட்டும் தான் என்று வாதிடாமல் அது உள்ளடக்கியுள்ள ஆழமான தத்துவத்தைஆராய்ந்து பார்க்க வேண்டும். . 
நான் உங்கள் போன்ற மனிதன் என்று நபீ ஸல் அவர்கள் அர்த்த்மில்லாமல் சொன்னார்களா? அல்லது அல்லாஹ் அவ்வாறு சொன்னானா? இப்படியொரு கருத்துக் கூறப்பட்டதற்கான காரணம் என்ன? இது பற்றி ஆராய்ந்து பார். 
· நபீ ஸல் அவர்களின் அற்புதங்களையும், அகமியங்களையும் கண்டு வியந்த அரபு மக்கள் இவர் யார்? “ஜின்” இனத்தவரா? “மலக்” இனத்தவரா அல்லது இறைவன்தானா? என்றெல்லாம் சந்தேகப்பட்டார்கள். அந்த அளவு நபீ ஸல் அவர்களின் அற்புதம் அவர்களை எண்ணத் தூண்டிற்று. 
ஆகவே, நான் உங்கள் போன்ற மனித இனத்தவனேயன்றி நான் இறைவனுமில்லை.வேறு இனத்தை சேர்ந்தவனுமில்லை என்பதை அந்த மக்களுக்கு உணர்த்தவே அவ்வாறு சொல்லுமாறு நபீ ஸல் அவர்களை அல்லாஹ் பணித்தான். 
அல்லாஹ்வின் அடியானே! 
நான் உங்கள் போன்ற மனிதன் என்ற வசனத்தை நீ ஆதாரமாக வைத்துக் கொண்டு அதோடு உனது பாக்காட்டிலிருந்து சாதாரண என்ற ஒரு சொல்லையும் சேர்த்து நான் உங்கள் போன்ற சாதாரண மனிதனென்று பொருள் கூறி நபீ ஸல் அவர்களை காத்தான்குடி காலிதீன் போன்றும், அலியார் போன்றும் மக்களிடம் படம் பிடித்துக்காட்ட நினைக்கிறாயே இது உனது அறியாமையா? அல்லது உளறலா? 
நான் உங்கள் போன்ற மனிதனென்றுதான் திருவசனம் கூறுகிறதேயன்றி “சாதாரண” மனிதனென்று அது கூறவில்லை. நீ இந்தப் பொருளை எங்கிருந்து எடுத்தாய்? இந்தச் சொற்செருகல் யாருடையது? இப் இப்னுஅப்தில்வஹ்ஹாபின் கருத்தை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு நபீ ஸல் அவர்களை உன் போன்ற மனிதனென்று சொல்வதற்கோ, கண்டதையெல்லாம் “ஷிர்க்” என்று கரைவதற்கோ முன்வரக்கூடாது. திருக்குர்ஆன் பெரும் ஆழி. கரை எட்டி இவ்வளவுதான் என்று மட்டிட முடியாத சமுத்திரம். 
நான் உங்கள் போன்ற மனிதனென்று தங்களின்பணிவுப்பண்பினால்தான் நபீ ஸல் அவர்கள் கூறினார்களென்று கொள்வதில் என்ன தவறுண்டு? இவ்வாறு கருத்துக் கொள்ளச் சாத்தியமிருக்கும் போது இந்தக் கருத்தை நினைத்துக்கூடப் பார்க்காமல் அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதன்தானென்று வாதிடுவதும், பிடிவாதம் செய்வதும் நபீ ஸல் அவர்களைத் திட்டமிட்டு மட்டம் தட்டுவதற்கேயன்றி வேறெதற்கு? 
ஒரு நாட்டு ஜனாதிபதி ஓர் ஊருக்குச் சென்று அவ்வூர் மக்களிடம் தனது பணிவை வெளிப்படுத்தும் நோக்குடன் நான் உங்கள் போன்ற மனிதனென்று கூறினால் அவ்வூர் மக்கள் அவர் கூற்றின் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல் அவர் சாதாரண மனிதன் என்றெண்ணி அவரின் தோளில் கைபோட்டு அவரிடம் என்ன மச்சான்? என்று கேட்கலாமா? அவரைக் கடைத்தெருவிலுள்ள பெட்டிக்கடைக்கு அழைத்துச் சென்று பீடா வாங்கிக் கொடுக்கலாமா? அவரை யாசகர் மடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களோடு சாப்பிட வைக்கலாமா? எனவே, நான் உங்கள் போன்ற மனிதனென்று ஜனாதிபதி ஏன் சொன்னாரென்பதை விளங்கி அவருக்குரிய மரியாதை கொடுத்து ஜனாதிபதியாகப் பார்ப்பதே அறிவுடமையாகும். 
அல்லாஹ்வின் அடியானே! 
நபீ ஸல் நம் போன்ற மனிதரல்லர் என்பதற்கான ஆதாரங்களில் சிலதை மட்டும் உனக்குச் சொல்கிறேன். 
1. நபீ ஸல் அவர்கள் ஒரு நொடி நேரத்தில் விண்ணுலக யாத்திரை செய்தார்களல்லவா? நீ அவ்வாறு செய்தாயா? அதை விடு. ஒரு நொடி நேரத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தையேனும் உன்னால் கடக்க முடியுமா? 
2. நபீ ஸல் அவர்களுக்கு உடும்பு ஸலாம் சொன்னதல்லவா? உனக்கு எது ஸலாம் சொன்னது? உடும்பை விடு. உன்னுடன் இருக்கும் உன் உடையாவது ஸலாம் சொன்னது? 
3. அவர்கள் பசிக்காக வயிற்றில் கல்லைக் கட்டினார்களல்லவா? நீ அதற்காக எதைக் கட்டினாய்கல்லைக் கட்டும் கதை இருக்கட்டும். உனக்குப் பசி வந்தால்தானே கல்லைக் கட்டுவதா? புல்லைக் கட்டுவதா? என்ற பிரச்சினை வரும். நீ சுகபோகத்தில் மிதக்கும் போது உனக்குப் பசி வருவதெங்கனம்] 
4. نَصرتبالرعبمسيرةشهر அவர்கள் ஒரு மாதத் தொலை தூரத்தில் பயத்தைக் கொண்டு உதவி செய்யப்பட்டார்களல்லவா? உனக்கு அவ்வாறு உதவி கிடைத்ததா? அந்த அளவு இல்லாது போனாலும் ஒரு கடுகளவேனும் பயத்தைக் கொண்டு உதவி செய்யப்பட்டாயா? 
5அவர்களின் திருக்கரத்தில் இருந்து மதுரமான நீர் பெருக்கெடுத்தோடியதல்லவா? உனக்கு அவ்வாறு நடந்ததா? உனது எந்த உறுப்பிலிருந்து மதுரமான நீர் பெருக்கெடுத்துப்பாய்ந்தது? 
6. “கந்தக்” அகழ்யுத்த நேரம் குறுக்கே நின்று தடுத்த கருங்கல்லை ஒரேயோர் அடியால் உடைத் தெறிந்தார்களல்லவா? நீ அவ்வாறு செய்தாயா? ஒரேயோர் அடியில் எக்கல்லை உடைத்தாய்? 
7. அவர்கள் இருகாலும் வீங்கும் வரை இராவணக்கம் செய்தார்களல்லவா? நீ அவ்வாறு செய்தாயா? செய்கிறாயா? உன் இராவணக்கம் இறைவணக்கம்தானா? குறைவணக்கமா? 
8. அபூ ஜஹ்ல் ஆணையிட்டபோது அண்ணலின் கழுத்தைக் கொய்ய வந்த வீரர் உமர் உத்தம நபீயின் பாதம் வீழ்ந்து சரணடைந்தார்களல்லவா? உனக்கு அவ்வாறு நடந்ததா? எந்த வீரர் எங்கே எப்போது சரணடைந்தார்?[குறைந்தபட்சம் கொசுவேனும் உன்பாதம் வீழ்ந்து சரணடைந்ததா?] 
9. அவர்களுக்கு இறைவனால் அருள் மறை அருளப்பட்டதல்லவா? உனக்கு எந்த மறை அருளப்பட்டது? அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறுமடலேனும் உனக்கு வந்ததுண்டா? 
10. அவர்கள் பின்னர் நடக்கவுள்ள விடயத்தை முன்கூட்டி அறிவித்துள்ளார்களல்லவா? நீ அவ்வாறு அறிவித்துள்ளாயா? அறிவிப்பதற்கு உனக்கு தெரியுமா? உனது அடுத்த நொடியில் நடக்கப்போவது பற்றியேனும் உன்னால் அறிவிக்க முடியுமா? 
11. அவர்களுக்கு மேகம் குடைபிடித்ததல்லவா? உனக்கு எது குடை பிடித்தது? எது நிழல் தந்தது? 
12. அவர்களின் திருவுடலில் ஈமொய்க்கவில்லையல்லவா? உனக்கு அவ்வாறுண்டா? உனது நாசச் சரீரத்தில், பீமேனியில் எம்மாத்திரம் ஈக்கள் மொய்த்திருக்கின்றன! உன்னால் கணக்கிட்டு கூறத்தான் முடியுமா? 
13. அவர்களுக்கு சொற்பன இஸ்கலிதம்-கனவில் விந்து வெளியாவில்லையா? உனக்கு இந்த நிலை உள்ளதா? எத்தனைதரம் உனக்கு கனவில் விந்து வெளியாகி உள்ளது? 
14. அவர்கள் வாழ்க்கையில் ஒரு தரமேனும் கொட்டாவி விடவில்லையா? உன் நிலைமை என்ன? நீ கொட்டாவி விட்டாயா இல்லையா? அவர்கள் தங்களின் வாழ்க்கையிலேயே கொட்டாவி விடவில்லை. ஆனால் நீயோ ஒரு மணிநேரத்திலேயே எண்ணற்ற கொட்டாவி விடுகிறாயே! 
15. அவர்கள் “கத்னஹ்” விருத்தசேதனம் செய்யப்பட்டுப் பிறந்தார்களல்லவா? நீ அவ்வாறு பிறந்தாயா? அல்லது உனது குருமார்கள் தானும் அவ்வாறு பிறந்தார்களா? நஜ்தீயின் வரலாறைப் புரட்டிப்பார். ஹர்றானியின் சரிதையைப் படித்துப்பார். 
16. அவர்கள் தலைக்கு எண்ணெய் பூசப்பட்டவர்களாகப் பிறந்தார்களல்லவா? நீ அவ்வாறு பிறந்தாயா? நீ எது பூசப்பட்டு பிறந்தாய்? 
17. அவர்கள் கண்ணுக்குச் சுறுமா இடப்பட்டு பிறந்தார்களல்லவா? நீ அவ்வாறு பிறந்தாயா? அது போகட்டும். குறைந்தபட்சம் பிறிமாமாவேனும் தடவப்பட்டுப் பிறந்தாயா? 
18. அவர்களின் சுட்டு விரலின் அசைவுக்கு சந்திரன் இரண்டாகப் பிளந்ததல்லவா? உனது எந்த விரலின் அசைவுக்கு என்ன பிளந்தது? உன் சுட்டு விரலின் அசைவுக்கு சட்டியாவது உடைந்ததுண்டா? 
19. அவர்கள் புன்னகைத்தவர்களாகப் பிறந்தார்களல்லவா? நீ எவ்வாறு பிறந்தாய்? புன்னகைத்தவனாகவா? புன்மையுள்ளவனாகவா? 
20. அவர்கள் மெய்ப் பொருள் ஒன்றென்று சுட்டுவிரலால் சுட்டியவர்களாகப் பிறந்தார்களல்லவா? நீ அவ்வாறு பிறந்தாயா? சுட்டுவிரலை சுட்டியவனாகவா? சுருட்டியவனாகவா? 
21. அவர்கள் தங்களின் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாகப் பிறந்தார்களல்லவா? நீ அவ்வாறு பிறந்தாயா? அல்லது குப்புற வீழ்ந்தாயா? 
22. அவர்களின் காற்பாதம் கருங்கல்லில் பதிந்ததல்லவா? உன் கால் அவ்வாறு பதிந்ததா? 
23. அவர்கள் முன்னால் கண்டது போல் பின்னால் கண்டார்களல்லவா? நீ அவ்வாறு கண்டாயா? பின்னாலுள்ளதைக்காணாவிட்டாலும் பக்கத்திலுள்ளதையாவது கண்டாயா? 
24. அவர்களுக்கு “வஹீ” இறையறிவிப்பு வந்ததல்லவா? அது உனக்கு வந்ததா? அது எது உத்தம நபீ உன் போன்ற சாதாரண மனிதனென்ற அறிவிப்பா? 
25. அவர்கள் ஒரே நேரத்தில் நாலுக்கும் மேற்பட்ட திருமணம் செய்தார்களல்லவா? அவ்வாறு செய்ய உன்னால் முடியுமா? அது உனக்கு “ஹலால்” ஆகுமா? 
26. அல்லாஹ் அவர்களை “யாஅய்யுஹல் முஸ்ஸம்மில்” யாஅய்யுஹல் முத்தத்திர்” “யாஅய்யுஹன் நபிய்யு” என்றெல்லாம் அழைத்துள்ளானல்லவா? உன்னை எவ்வாறு அழைத்தான்? “யாஅய்யுஹல் வஹ்ஹாபிய்யு” என்றா? அல்லது “யாஅய்யுஹல் முப்ததிஉ” என்றா? 
27. விண்ணுலக யாத்திரையின் போது அல்லாஹ் அவர்களுக்கு “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்நபிய்யு” என்று ஸலாம் சொன்னானல்லவா? அவ்வாறு உனக்கு ஸலாம் சொன்னானா? அல்லது “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹல்பத்தான்” என்றானா? 
28. அல்குர்ஆன் அவர்களை “நூர்”​ ஒளியென்று வர்ணிக்கிறதல்லவா? உன்னை எவ்வாறு வர்ணிக்கிறது? “நூர்” என்கிறதா? “நார்” என்கிறதா? 
29. அவர்கள் ஒரே இரவில் ஒன்பது மனைவியருடன் உடலுறவு கொண்டார்களல்லவா? அவ்வாறு செய்ய உன்னால் முடியுமா? அந்த அளவு உன்னிடம் என்ன பலம் உண்டு? உடற் பலம் உண்டா? அல்லது உளப் பலம் உண்டா? 
30. மலைகள் அவர்களிடம் நாங்கள் தங்கமாகமாறி உங்களிடம் வரவா கேட்டனவல்லவா? உன்னிடம் அவ்வாறு எது கேட்டது? உன் மனைவிதானும் கேட்டாளா? அல்லது மண்ணாங்கட்டியாவது கேட்டதா? 
31. அவர்கள் உறங்கும் போது அவர்களின் இரு கண்கள் மட்டும்தான் உறங்கும். “கல்பு” மனம் உறங்காதல்லவா? உன் நிலைமை என்ன? உன் கண்கள் மட்டும்தான் உறங்குகின்றனவா? அல்லது உன் உறுப்புக்கள் எல்லாமே உறங்குகின்றனவா? 
அல்லாஹ்வின் அடியானே! 
நபீ ஸல் அவர்கள் ஒரு சமயம் لستكأحدمنكمநான் உங்களில் நின்றும் எவர் போன்றவனுமல்லன் என்றும், இன்னொரு சமயம் لستمثلكم நான் உங்கள் போன்றவனல்லன் என்றும், பிறிதொரு சமயம் لستكهيتكم நான் உங்கள் அமைப்பில் உள்ளவனல்லன் என்றும் சொல்லியிருப்பதை உனது கவனத்திற் கொண்டு சிந்தனை செய்து பார். இவ்வசனங்கள் யாவும் நபீ ஸல் அவர்கள் நம் போன்ற மனிதரல்லர் என்பதை வலியுறுத்தி நிற்பது உனக்கு புரியவில்லையா? 
மேற்கண்ட வசனங்கள் சரியான நபீ மொழிகளில் வந்துள்ள வசனங்களாகும். இவை “நான் உங்கள் போன்ற மனிதரென்று நீங்கள் சொல்லுங்கள்” என்ற திருமறை வசனத்துக்கு முரணானவையாக உனக்குத் தெரிகிறதல்லவா? 
நீ இது பற்றி சற்றேனும் சிந்தனை செய்து பார்த்தாயா? நீ திருக்குர்ஆனை எடுத்து நபீ மொழியை விடப் போகிறாயா? அல்லது நபீ மொழியை எடுத்து திருக்குர்ஆனை விடப்போகிறாயா? என்ன செய்யப் போகிறாய்? திருக்குர்ஆன் நபீ மொழிக்கு மாறாகாதென்பதையும், நபீ மொழி திருக்குர்ஆனுக்கு மாறாகாதென்பதையும் நீ ஏற்றுக் கொள்கிறாயா இல்லையா? 
நபீ ஸல் அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதனென்று நீ வாதிடுவது நீ திருக்குர்ஆனை எடுத்து நபீ மொழியை தூக்கி எறிந்து விட்டாய் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நபீயைத் தூக்கியெறியும் நீ நபீ மொழியைத் தூக்கி எறிவதில் என்ன வியப்பிருக்கிறது​? 
நீ ஒன்றை எடுத்து மற்றதை விடுவதற்கு இஸ்லாத்தில் இடமேயில்லை. இரண்டையும் எடுத்தே ஆக வேண்டும். 
ஆகையால் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டையும் எவ்வாறு எடுக்க வேண்டுமென்பதை உனக்குச் சொல்லித்தருகிறேன். நபீ ஸல் அவர்கள் தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவும், அவர்களைத் தெய்வம், மலக், ஜின், என்றெல்லாம் சந்தேகப்பட்டவர்களின் சந்தேகத்தை நீக்கி வைப்பதற்காகவுமே “நான் உங்கள் போன்ற மனிதன்” என்று சொன்னார்களேயன்றி அவர்களின் எதார்த்தத்தைக் கூறுவதற்காக அல்ல. 
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்துக்கு இவ்வாறுதான் கருத்துக்கொள்ளுதல் வேண்டும். நபீ ஸல் அவர்கள் தங்களின் எதார்த்தத்தையும், அந்தஸ்த்தையும் வெ ளிப்படுத்துவதற்காகவே “நான் உங்கள் போன்ற மனிதனல்லன்” என்று கூறினார்களேயன்றி தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காக அல்ல. 
மேற்கண்ட நபீ மொழிக்கு இவ்வாறுதான் கருத்துக்கொள்ளுதல் வேண்டும். 
நபீ ஸல் அவர்கள் தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காக பல இடங்களில் பல்வேறு வசனங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். இவ்வுண்மையைப் புரியாமல் அவ்வசனங்களின் வெளியரங்கத்தைக் கொண்டு மட்டும் அவர்களைத் தரக்குறைவாகக் காணுதல் கூடாது. ஒரு சமயம் நபீ ஸல் அவர்கள் لاتفضلوني علييونسبنمتي மத்தாவின் மகன் யூனுஸை விட என்னைச் சிறப்பாக்கி விடாதீர்கள் என்று கூறினார்கள். 
நபீ ஸல் அவர்கள் தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவே இவ்வாறு கூறினார்கள். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாமல் இக்கூற்றைப் பிடித்துக் கொண்டு நபீ ஸல் அவர்களை விட யூனுஸ் நபீ மேலானவர்களென்று வாதிட முடியுமா? அவ்வாறு வாதிடுவது சரியாகுமா? 
எனவே, உத்தம நபீ வெளியரங்கத்தில் உன் போன்ற மனிதனாயிருந்தாலும்கூட அவர்கள் அகமியத்திலும், அந்தஸ்திலும், எதார்த்தத்திலும் உன்னையும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட சர்வபடைப்புக்களையும் விட மேலானவர்களேயாவர். அவர்கள்தான் படைப்புக்களில் சிறந்தவர்கள். அவர்கள் போன்ற ஒரு சிருட்டி இதுகாறும் வெளியாகவில்லை. வெளியாகப்போவதுமில்லை. உலகில் எந்த ஒரு தாயும் குணத்திலும், தரத்திலும், உடலமைப்பிலும் அவர்கள் போன்ற ஒரு குழவியைப் பெற்றதே இல்லை. 
அல்லாஹ்வின்அடியானே! 
உத்தம நபீ உன் போன்ற சாதாரண மனிதனென்று வாதிடும் நீ உன் நெஞ்சில் கைவைத்துச் சொல். அவர்கள் உன் போன்ற மனிதன்தானா? அல்லது உனக்கு வேறுபட்டவர்களா? நெஞ்சைத் தொடு. அது சொல்வதை எடு. 
அல்லாஹ்வின் அடியானே! 
இது தொடர்பாக உன்னுடன் விவாதிக்கவோ, உன்னைக் கீழ்த்தரமாக இழிவுபடுத்தவோ நான் விரும்பவில்லை. அது எனது குறிக்கோளுமில்லை. 
ஆயினும் இங்கு உன்னைப் புண்படுத்தும் சொற்கள் இடம் பெற்றிருந்தால் அது கொள்கை ரோஷத்தின் வெளிப்பாடு- உருவமென்று அறிந்துகொள் இப்லீஸ் என்றதும் “லஃனதுல்லாஹ்” என்று அவனைச் சபிப்பது நம்மீது கடமையில்லாவிட்டாலும் நாம் சபிக்கத்தான் செய்கிறோம். ஏன்? இது என்ன ரோஷம்? சிந்தனை செய்து உன் நெஞ்சில் தோன்றியதை நிறுத்திவிடு. அழுக்கை அகற்றி விடு. 
இது தொடர்பாக உன்னுடன் விவாதிக்க விரும்பாத காரணம் இயலாமையல்ல. ஆனால் இன்று ஒரு விடயம் குறித்து விவாதிக்கும் வாதி, பிரதிவாதி இருவரிடத்திலும் விவாதத்தின் உயிரான “இக்லாஸ்” என்ற தூய குறிக்கோள் இருப்பதாக நான் அறியவில்லை. காண்பதரிதாக உள்ளது . 
“இக்லாஸ்” என்ற அந்ததூய குறிக்கோள் என்னவெனில் வாதியும், பிரதிவாதியும் முன்வைக்கும் ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் முடிவை இருவரும் ஏற்றுக் கொள்ளுதலாகும். இதுவே அதன் உயிர். அதோடு இருவரும் உண்மையைக் கண்டறியும் குறிக்கோளுடன் “நிய்யத்” விவாதித்தல் வேண்டும். ஒருவரையொருவர் வென்று புகழ் பெறும் நோக்கம் விவாதத்தின் உயிரைக் குடிக்கும் நச்சுப் பாம்பாகும். ஆனால் இன்றோ விவாதம் உயிரற்ற விவாதமாகவே அமைகிறது. வாதி விவாதத்துக்காக “பைல்” ​ தூக்கும் போதே பிரதி வாதியை எப்படியாவது மடக்கி அவனை வெற்றி கொண்டு தனது வாதத்தை நிலைப்படுத்த வேண்டுமென்ற “நிய்யத்” எண்ணத்துடனேயே அதை தூக்குகின்றான். இவ்வாறுதான் பிரதிவாதியும் செய்கிறான். “இக்லாஸ்” என்ற தூய குறிக்கோள் இல்லாமற் போகிறது. உயிரற்றதாய்விடுகிறது ஆகவே, ஒருவரையொருவர் ஏசுவதையும், இழித்துரைப்பதையும் விவாதிப்பதையும் விட்டு உத்தம நபீ நம் போன்ற சாதாரண மனிதனில்லை என்ற எனது வாதத்தில் சந்தேகம் இருந்து அது பற்றி என்னிடம் தெரிந்து கொள்ள நீ விரும்பினால், அல்லது அது பற்றி என்னுடன் கலந்துரையாட விரும்பினால் என்னுடன் தொடர்புவை. 
சூரியன் உதித்த பின் இருளுக்கு இடமில்லை

You may also like

Leave a Comment