கொடியேற்றுவது பற்றி இஸ்லாம்சொல்வதென்ன?

August 17, 2012
தொடர் .. 02

-மௌலவீ இப்றாஹீம் (நத்வீ) (JP)
(சாமஸ்ரீ, தேசகீர்த்தி)
ஆன்மீகக் கொடிகள்:
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் கொடிக்குக் கொடுத்த முக்கியத்துவங்கள் ஹதீஸ்களில் நிறைந்து காணப்படுகின்றன.
யுத்த வேளைகளில் கொடிகளை ஏந்தி தலைமை தாங்கிச் செல்வதிலும் அது கீழே விழுந்து விடக்கூடாது என்பதிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் மிகக் கரிசனையுடையவர்களாக இருந்துள்ளார்கள்.
கொடி சம்பந்தமான சில ஹதீஸ்களை மட்டும் இங்கே தருகின்றேன்.
கைபர் கொடி:
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த யுத்தங்களில் மிகபிரசித்தம் பெற்ற யுத்தங்கள் உள்ளன. அவற்றில் கைபர் யுத்தமும் ஒன்றாகும்.
இந்த யுத்தத்திற்குச் சென்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் இரவு நேரத்தில் வந்திறங்கினர். கைபர் வாசிகள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கைபரில் இறங்கும் போது கடும் நித்திரையி்ல் இருந்தனர்.
நபிகளும் தோழர்களும் கைபர் வந்ததைக்கண்ட அவ்வூர் நாய்கள் கூட குரைத்து ஆரவாரம் செய்யவில்லை. சஹர் வேளை கூவும் சேவல் கூட கூவவில்லை. அனைத்துமே மௌனம் சாதித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவின.
காலையி்ல்தான் கைபர் காபிர்கள் முஹம்மதும் தோழர்களும் இங்கு வந்து பாசறையடித்துள்ளனர் என்பதை அறிந்தனர்.
இங்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருபது நாட்களுக்கு மேல் படை கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் அபூபக்கர் (றழீ), உமர் (றழீ) போன்ற தோழர்களை படைத் தளபதிகளாக்கி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பி வைத்தனர். போர் நடந்ததாயினும் போர் உச்சத்தை அடையவில்லை. கோட்டைகள் பிடிபடவில்லை.
இறுதியில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர் முன்னே தோன்றி பின்வருமாறு பிரகடனம் செய்தார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் பிரகடனம் கொண்ட பின்வரும் பொன் மொழி ஸஹீஹூல் புகாரி ஷரீபில் பதிவாகியுள்ளது.
عن سهل ابن سعدرضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يفتح على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله فبات الناس ليلتهم أيهم يعطى فغدوا كلهم يرجوه فقال اين علي فقيل يشتكي عينيه فبصق فى عينيه ودعا له فبرئ كأن لم يكن به وجع فأعطاه. فقال أقاتلهم حتى يكونوا مثلنا فقال أنفذ على رسلك حتى تنـزل بساحتهم ثم ادعهم إلى الإسلام وأخبرهم بما يجب عليهم فوالله لأن يهدي الله بك رجلا خيرلك من أن يكون لك حمر النعم. (صحيح البخاري)
ஸஹ்ல் பின் ஸஃது (றழீ) அவர்களைத் தொட்டும் சொல்லப்படகிறது. கைபர் நாளில் . நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக அவர்கள் சொல்கிறார்கள்.
கொடியை நான் நாளை ஒருவரிடம் கொடுப்பேன். அவரின் கையிலே யுத்தம் வெற்றி பெறும். அவர் அல்லாஹ்வையும் அவனது றஸூலையும் உவப்பவர். அவரை அல்லாஹ்வும் உவக்கிறான். அவனது றஸூலும் உவக்கிறார். இதைக் கேட்ட மனிதர்கள் நாளை யாரிடம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கொடியைக் கொடுப்பார்கள் என்று நினைத்தவர்களாக அன்றைய இரவைக் கழித்தனர். அனைவரும் அக்கொடி தமக்கே கிடைக்க வேண்டுமென்று ஆதரவு வைத்தனர். மறு நாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி அலீ எங்கே? என்று கேட்டார்கள். அவர் கண் வருத்தத்தினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.என்று சொல்லப்பட்டது. அதைக் கேட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அழைத்து வருமாறு பணித்தார்கள். அவரை அழைத்து வரப்பட்டது.
இவர் இருகண்களும் தெரியாமல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மடியில் தலையை வைத்து அல்லாஹ்வின் றஸூலே என்பாதம் வைக்கும் இடம் கூட தெரியவில்லை என்று சொல்லி அழுதார்கள். அவர்களின் தலையை வருடிய அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்காக பிரார்த்தித்து அவரது கண்களில் உமிழ்ந்தார்கள். உடன் அவரது கண்வருத்தம் மறைந்து சுகம் பெற்று நோயற்றவராக ஆனார். உடன் அவரிடம் கைபர் கொடியைக் கொடுத்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அதைப் பெற்றுக்கொண்ட அலீயவர்கள் “அவர்கள் எம்மைப் போல் ஆகும் வரை அவர்களுடன் போர் செய்வேன்” என்றார். அதைக்கேட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் அவர்களின் சாலையில் இறங்கும் வரை உனது வாகனத்தில் செல். அவர்களை நீர் அடைந்து விடின் அவர்களை இஸ்லாத்தின் பால் அழை. அவர்கள் இஸ்லாத்தை ஏற்பின் அவர்களுக்கு கடமையானவற்றை அறிவித்துக் கொடு. இறைவன் மீது ஆணையாக உன்னைக் கொண்டு இறைவன் ஒரு மனிதனை நேர்வழி காட்டுவது உனக்கு சிவந்ந ஒட்டகைகள் கிடைப்பதை வி்ட மேலானது என்று நவின்றார்கள்.
நபிகளிடம் விடைபெற்று திருக்கொடியைத் தாங்கியவர்களாக யுத்தகளத்தை அடைந்தார்கள் வீரர் அலீ.
அங்கே கைபரில் பெயர் பெற்ற வீரர்களெல்லாம் சிங்கம் போல் கர்ச்சித்து ஒருவர் பின் ஒருவராக கோதாவில் இறங்கினர்.
ஒருவன் வீரா வேசத்துடன் “நான்தான் கைபரின் சிங்கம். என்னைப் பற்றி கைபரிடம் கேட்டுப்பார். சிங்கத்துடன் சண்டை செய்ய வந்த சுட்டிப்பயல் நீ யார் என்றான். அவனது உடல் ஆயுதங்களால் நிரம்பியிருந்தது.
அதே போல் ஒவ்வொருவரும் வந்து அலீ அவர்களை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அலீ அவர்கள் “என் பெயர் அலீ. என் தாய் என்னைப் புலியாகவே வளர்த்துள்ளார். உங்களைக் குத்திக் குதறி எறியவே வந்துள்ளேன் என்றார்கள் வீரர் புலீ அலீ!
ஒரு கையில் கொடி மறு கையில் வீரவாள். கோட்டை வாயிலின் மேல் பாய்ந்து கொடியை நட்டினார்கள் வீரர் அலீ கொடியிருந்த கையில் கேடயத்தைப் பிடித்து கொடியின் முன்னால் நின்று சுழன்றார்கள். அப்போது அவர்களது கையில் இருந்த கேடயம் விழுந்து விட்டது. கையில் கேடயம் இல்லாததால் அவர்களை வீழ்த்துவதற்கு எதிரிகள் வளைத்தனர்.
என்ன செய்வார் வீரர் அலீ. கோட்டை வாயிலின் கதவைப்பிடித்து இழுத்தார். என்ன அதிசயம் நாற்பது முழ நீளத்தையும் ஏழு முழ அகலத்தையும் கொண்டிருந்த கோட்டைக் கதவு களண்டு அவர்களின் கையிலிருந்தது. இதைக் கண்ட எதிரிகள் அதிசயத்தைக் கண்டு தலை தெறிக்க ஓடினர்.
எதற்காக எதிரிகள் விரண்டோடுகிறார்கள் என்று பார்த்த அலீ(றழீ) அவர்களுக்கு வீரம் பேசிய தலைவர்களின் தலைகள் கீழே கிடப்பதையும் கோட்டையின் கதவு கையில் இருப்பதையும் கண்டார்கள். அவர்களின் வாயிலிருந்து “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்“ என்று தக்பீர் வெளியானது. அவர்களின் படைவீரர்கள் எதிரிகளைத் துரத்திச் சென்று வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தனர்.
வீரர் அலீ அவர்களும் தோழர்களும் கைபரின் 15 கோட்டைகளையும் அக் கோட்டைகளிலிருந்த தங்கம் வெள்ளி ஆயுதங்கள் மற்றும் பெறுமதி மிக்க களஞ்சியங்கள் உணவுத்தானியங்கள் அனைத்தையும் கைப்பற்றினர். கைபர் கோட்டையின் மேல் “லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் றஸூலுல்லாஹி“ எனும் திருக்கொடி பறக்கவிடப்பட்டது.
கோட்டைக்கதவு கையில் வந்த காரணம் 
ஒரு பத்து கிலோ பாரத்தை ஒருவரால் தொடர்ந்து தூக்கிக் கொண்டு இருக்க முடியாது. ஆனால் நாற்பது முழம் நீளமான கோட்டைக்கதவு எவ்வளவு பாரமானதாக இருக்கும்.அது கோட்டை வாசலில் எவ்வளவு பலமாக இணைக்கப்பட்டிருக்கும். பலர் சேர்ந்து களட்டினாலும் களட்டப்படாத அக்கதவை பலர் சேர்ந்து தூக்கினும் தூக்கப்படாத அக்கதவை அலீ(றழீ) அவர்கள் களட்டி இடது கையில் கேடயம் போல் தூக்கி வைத்திருந்ததும் அக்கதவு தனது கையில் இருந்தது தனக்கே தெரியாதிருந்ததும் வியப்பிலும் வியப்பாகும. அதிசயத்திலும் அதிசயமாகும்.
அது அவர்களது பலமல்ல! 
அது அவர்களது ஈமமானின் பலம்! 
இது எது போலனில் முஹம்மது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் தனது வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்த அபூஜஹ்ல் தனது வீட்டு வாயலின் முன் பெரியதோர் குழி தோண்டி அது வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்தான். எப்போதாவது தன்னைத் தேடி முஹம்மது வந்தால் அதில் அவர் விழவேண்டும். நான் கைகொட்டி சிரிக்க வேண்டும் என்பதே அவனது நோக்கமாக இருந்தது.
அன்று ஒரு ஸஹாபி நபிகளிடம் அழுதவாறு வருகிறார். யாறஸூலல்லாஹ் எனது பணப்பையை அபூஜஹ்ல் பறித்துச் சென்று விட்டான். தாங்கள் அதை வாங்கித்தர வேண்டும் என்று நபிகளிடம் கேட்டுக் கொண்டார்.
உடன் நபிகள் அவரை அழைத்துச் சென்று அபூஜஹ்லின் வீட்டின் சற்று முன் நின்று அவனது பெயர் சொல்லி அழைத்தார்கள்.
அவன் உள்ளேயிருந்து வந்தான். நபிகளாரைக் கண்டதும் திடுக்கம் அடைந்து தான் நபிகளுக்காக வெட்டிய குழியை மறந்து அதில் அவனே விழுந்து விட்டான்.
கருணை நபிகள் அவனுக்கு கை கொடுத்து வெளியில் எடுத்து இவரது பணப்பையை நீ எடுத்தாயா? என்று கேட்டார்கள். அவன் அடங்கி ஒடுங்கி ஆம் என்றான். உள்ளே சென்று பணத்தை எடுத்து வந்து கொடுத்தான்.
உனது பணம் சரியாக இருக்கின்றதா என்று எண்ணிப் பார்க்கும் படி தோழரை நபிகள் பணித்தார்கள். அவர் எண்ணிப் பார்த்து சரி என்றார்.
பின் அந்த நபித்தோழர் இந்தப்பணம் இருந்த பணப்பையும் வேண்டும் என்றார். எங்கே என்று கேட்டார்கள் நபியவர்கள். அதுவும் இருப்பதாகக் கூறி அபூ்ஜஹ்ல் உள்ளே சென்று அதையும் எடுத்துக் கொடுத்தான். நபிகளும் தோழரும் சென்று விட்டனர்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அபூஜஹ்லின் மனைவி என்னே…. என்னிடம் வீரம் பேசினாய். இப்போது முஹம்மதைக் கண்டதும் பெட்டிப் பாம்பு போல் அடங்கி விட்டாயே. இது தானா உனது வீரம்? என்று அபூஜஹ்லை நகைத்தாள்.
அதற்கு அவன் ஏய் வாய் பொத்து. நான் வீரம் பேசியது உண்மைதான். ஆனால் தற்போது முஹம்மது வந்த போது அவரது தோளில் பெரியதொரு பாம்பு படம் எடுத்து என்னை பாய்ந்து கொத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது. நான் மறுத்திருந்தால் என்னை அது கொத்தியிருக்கும். அதனால்தான் நான் பயந்தேன் என்றான். பிறிதொரு ஹதீஸில் நபிகளின் தோளில் சிங்கம் இருந்ததாகவும் வந்துள்ளது.
பாம்பு எங்கிருந்து வந்தது?
முஹம்மது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி்ன் தோளி்ல் இருந்த பாம்பு அல்லது சிங்கம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி்ன் ஈமானேயாகும். அவர்களின் ஈமானே பாம்பின் உருவம் பெற்றிருந்தது.
ஹழ்றத் அலீ(றழீ) அவர்களின் கையில் கைபர் கோட்டைக் கதவு கேடயம் போல் ஆனதும் அவர்களின் ஈமானின் பலமேயாகும்.
எனவே மேற்படி கைபர் யுத்தத்தில் கொடி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக அலீ(றழீ) ஆற்றிய சேவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். கொடியின் மகத்துவம் மேற்படி நபி மொழியிலிருந்து தெளிவாகின்றது.
தொடரும்…
==***==***==***==***==தொடர் .. 01

-மௌலவீ இப்றாஹீம் (நத்வீ) (JP)
(சாமஸ்ரீ, தேசகீர்த்தி)

அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் நபீமார் றஸுல்­­­­மார்கள் பற்றி பிரகடனம் செய்தது போல் இறை நேசச் செல்வர்களான “அவ்லியாஉல்லாஹ்“ வலீமார்கள் பற்றியும் பல இடங்களில் பிரகடனம் செய்துள்ளான்.
அவர்கள் ஏனைய மனிதர் போன்றவர்களல்லர் என்றும் எதற்கும் எச்சந்தர்ப்பத்திலும் பயம் அற்றவர்கள் என்றும் கவலை இல்லாதவர்களென்றும் வர்ணித்துள்ளான்.
சுன்னத் வல் ஜமாஅத் வழிவாழும் மக்கள் அன்று முதல் இன்று வரை நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீலாத் மௌலித் மஜ்லிஸ் தினங்களிலும் அவர்கள் பேரில் திருக்கொடிகள் ஏற்றி மகிழ்வை வெளிப்படுத்தி “பறக்கத்“பெற்று வருகின்றனர்.
யார் பெயரால் திருக்கொடி ஏற்றப்படுகின்றதோ அவர்களால் கொடி ஏற்றுபவர்களுக்கும் அந்நிகழ்வில் கலந்து கொள்வோருக்கும் நற்பயன்கள் கிடைக்கின்றன. அவர்களது முறாதுகள் ஹாஜத்துக்கள் நிறைவேறுகின்றன.
இதே போல் ஏற்றிய கொடியை இறக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வோருக்கும் நற்பலன்கள் கிடைக்கின்றன. முறாதுகள் நிறைவேறுகின்றன.
ஆனால் சிலர் இது இஸ்லாமியக் கொள்கைக்கு மாறுபட்ட செயலென்றும் இது இந்து பௌத்தர்களின் கொள்கை என்றும் இது குர்ஆனுக்கு மாறுபட்ட றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகரிக்காத ஷிர்க்கான செயலென்றும் இதில் கலந்து கொள்வது ஷிர்க்கான செயலில் கலந்து கொள்வதென்றும் சொல்லியும் போதித்தும் வருகின்றனர்.
எது உண்மை?
எனவே இச்சிறு நூலில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கொடியேற்றுவதும் அக்கொடியை தலைமை தாங்கி எடுத்துச் செல்வதும் அதை முத்தமிடுவதும் ஏற்றுவதும் இறக்குவதும் அந்நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் ஆகுமானதா? இல்லையா? எது உண்மை என்பது பற்றி சுருக்கமாக விளக்கி வைக்க விரும்புகிறேன்.
கொடிகள் இரு வகை:
இன்று இரு வகைக் கொடிகள் ஏற்றி கண்ணியம் செய்யப்பட்டு வருகின்றன.
1) இலௌகிகக் கொடிகள்.
2) ஆன்மீகக் கொடிகள்.
இலௌகிகக் கொடிகள். 
இது பல வகைப்படும்.
01) தேசியக் கீதம் இசைத்து ஏற்றப்படும் பிறந்த தேசத்தின் தேசியக் கொடிகள்.
02) பலதரப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்றி வைக்கப்படும் கொடிகள்.
03) மாநாடுகளில் ஏற்றப்படும் கொடிகள்.
04) மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளின் நிகழ்வுகளின் போது ஏற்றப்படும் கொடிகள்.
05) பாடசாலைகளில் ஏற்றப்படும் கொடிகள்.
06) உலக நாடுகளுக்கான கொடிகள்.
07) ஐக்கிய நாடுகளுக்கான கொடிகள்
08) நிறுவனங்களுக்கான கொடிகள்.
இப்படி பார்க்கையில் இலௌகிகக் கொடிகள் எத்தனையோ ஏற்றப்படுகின்றன. அவ்வேளை அங்கு கண்ணியமும் கொடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு கொடிகளும் ஏற்றப்படும் போது அக்கொடிகளுக்குரிய கலாச்சாரங்களும் கொடிகளுக்குரிய தாபனங்களின் இலட்சியங்களும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
தேசியக் கொடி:
தேசியக் கொடி ஏற்றி வைக்கப்படும் போது தேசியக் கீதம் இசைக்கப்படுகின்றது. அனைவரும் எழுந்து நின்று மௌனம் சாதித்து கண்ணியம் செய்கின்றனர்.
அதிசயம் ஆனால் உண்மை:
அதிசயம் என்னவெனில் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவாகவும் அவ்லியாஉகளின் நினைவாகவும் ஏற்றப்படும் திருக்கொடிகளை எதிர்ப்பவர்களும் அவற்றை “ஷிர்க்“ என்று சொல்வோரும் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளை எழுந்து மரியாதை செய்யத் தவறுவதில்லை. அதை அவர்கள் எதற்காக செய்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. பயத்தினாலோ அல்லது அதிகாரிகள் தம்மை மதிக்கமாட்டார்கள் என்பதினால் செய்கிறார்களோ தெரியாது. ஆனால் அவர்களின் கொள்கையின்படி அதுவும் ஒரு ஷிர்க்கான செயலாகும். அரச அதிகாரிகள் பலர் சேர்ந்து கொடியேற்றும் போது தாம் எழுந்து கண்ணியம் செய்யாதிருந்தால் தன்னை அரச துரோகி என்று நினைத்து தனது தொழில் பறந்து விடும் என்ற துன்யாவின் அச்சத்தினாலோ தெரியாது.
இவர்களிடம் இறைநேசர்களின் கொடியேற்று நிகழ்வை “ஷிர்க்“ என்று சொல்லி அதில் கலந்து கொள்ளாத நீங்கள் “தேசியக் கொடி விளையாட்டுப் போட்டிக்குரிய கொடிகள் ஏற்றப்படும் போது கண்ணியமளித்து எழுந்து நின்றீர்களே….. அதன் காரணம் என்ன வென்று கேட்டால் அது வேறு இது வேறு என்று சொல்லித்தப்பி விடுகின்றனர்.
இதே போல் கிரிக்கட் அரங்குகளில் ஏற்றப்படும் கொடிகளும் அந்தத்தேச மக்களின் நாட்டுப் பற்றையும் ஒற்றுமை வெற்றி தோல்வியில் சகிப்புத்தன்மை தலைமைத்துவத்திற்கு கீழ் பணிதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கி்ன்றன.
இவ்வாறு தேசியக் கொடி மற்றும் ஏனைய கொடிகள் ஏற்றப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது தேச பக்தர்களின் உயர் பண்பாகும். அவற்றுக்கு அவமரியாதை செய்வது வன்பாகும்.
இவ்வாறு இலௌகிகக் கொடிகளுக்கு நம்சமூகம் கொடுக்கும் கௌரவம் ஆன்மீக ரீதியில் ஏற்றப்படும் கொடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது மட்டுமன்றி அதை ஷிர்க் என்றும் இந்து பௌத்தமத செயற்பாடென்றும் நகைப்பதும் கீழ்மைப்படுத்துவதும் சன்மார்க்க விடயங்களில் அவர்களது அறியாமையையும் கொடியின் மகத்துவத்தைப் புரியாமையுமேயாகும்.
தொடரும்…

You may also like

Leave a Comment