Wednesday, April 24, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சியாரதுல் குபூர் -- மண்ணறைகளைத் தரிசித்தல்.

சியாரதுல் குபூர் — மண்ணறைகளைத் தரிசித்தல்.

தொடர்-05 
சங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ 
முதலாவது நபீமொழி பற்றிச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். இந்த நபீமொழியில் எனது “கப்று” அடக்கவிடத்தை தரிசித்தவன் என்று கூறப்பட்டிருந்தாலும் அதன் சரியான அர்த்தம் என்னைத் தரிசித்தவன் என்பதேயாகும். 
சரியான அர்த்தம் அதுவாக இருந்தாலும் நபீ(ஸல்) அவர்கள் சரியான அர்த்தம் தரும் வசனமான مَنْ زَارَنِيْ என்ற வசனத்தைக் கூறாமல் விட்டிருப்பதில் மிக ஆழமான தத்துவமொன்று மறைந்திருப்பதை மிக நுட்பமாக ஆராய்ந்தால் கண்டுகொள்ள முடியும். 
அதை இங்கு சுருக்கமாக எழுதுகிறேன். 
நபீஸல் அவர்கள் தங்களை சியாறத் தரிசித்தல் தொடர்பாகக் கூறிய பொன்மொழிகள் இரண்டு விதமாக அமைந்துள்ளன. 
நபீஸல் அவர்கள் ஒருசமயம் என்னைத் தரிசித்தவன் என்றும், இன்னொரு சமயம் مَنْ زَارَ قَبْرِيْ எனது அடக்கவிடத்தைத் தரிசித்தவன் என்றும் கூறியுள்ளார்கள். 
நபீஸல் அவர்கள் இரண்டு விதமாகவும் கூறியது அவர்களைத் தரிசிக்கச் செல்பவர்களின் நன்மை கருதியேயாகும். 
அதெவ்வாறெனில் – நபீஸல் அவர்களைத் தரிசிக்கச் செல்பவர்கள் எல்லோரும் ஆத்மீகத்தில் ஒரே தரத்திலுள்ளவர்களாயிருக்கமாட்டார்கள். அவர்களிற் சிலர் ஆத்மீகம் கூடினவர்களாயும், வேறு சிலர் அது குறைந்தவர்களாயுமே இருப்பார்கள். 
ஆத்மீகம் கூடினவர்களால் மட்டுமே நபீஸல் அவர்களை – அவர்களின் திருவுடலைத் தரிசிக்க முடியும். அது குறைந்தவர்களால் அத்திருவுடலைத் தரிசிக்க முடியாது. ஆயினும் அவர்களால் அவர்களின் அடக்கவிடத்தை மட்டும் தரிசிக்க முடியும். திருவுடலைத் தரிசிப்பதற்குத்தான் ஆத்மீகப் பலம் வேண்டுமேயன்றி அடக்கவிடத்தைத் தரிசிப்பதற்கு அது தேவையில்லை. அது எல்லோருக்கும் சாத்தியமானதேயாகும். 
எனவே, ஆத்மீகப்பலன் கூடினவர்களுக்காக “என்னைத் தரிசித்தவன்” என்றும், அது குறைந்தவர்களின் நன்மை கருதியும், அவர்கள் மீது றஹ்மத் – அருளன்பு காட்டியும் அவர்களுக்காக “எனது கப்று – அடக்கவிடத்தை தரிசித்தவன்” என்றும் நபீஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் போலும். النَّبِيُّ أَعْلَمُ بِمُرَادِ هِ நபீயின் நாட்டம் நபீக்கே தெரியும். 
நபீஸல் அவர்கள், எனது அடக்கவிடத்தைத் தரிசித்தவன் என்று கூறாமல் என்னைத் தரிசித்தவன் என்று மட்டும் கூறியிருந்தால் ஆத்மீகப்பலம் குறைந்தவர்கள் அவர்களைத் தரிசிப்பதற்கும், அவர்களின் பரிந்துரைத்தலைப் பெற்றுக் கொள்வதற்கும் முடியாமற் போய்விடும். “றஹ்மதுன்லில் ஆலமீன்” உலக மக்களின் அருளான நபீஸல் அவர்களின் அருள் இங்கு எப்படி வெளியாகிறது பார்த்தீர்களா? 
நபீஸல் அவர்களை சியாறத் – தரிசிப்பவர்கள் எல்லோரும் ஆத்மீகத்தில் ஒரே தரத்தவர்களில்லை என்று நான் மேலே குறிப்பிட்டேன். 
இதைச் சற்று விளக்கமாக எழுதுகிறேன். 
நபீஸல் அவர்களைத் தரிசிக்கச் செல்வோரில் சிலர் அவர்களை – அவர்களின் திருவுடலை நேரில் தரிசிப்பர். 
இன்னும் சிலர் அவர்களை நேரில் தரிசிக்காவிட்டாலும் அவர்களுக்கு ஸலாம் கூறி அதற்கான பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வர். கேட்பர். 
வேறு சிலர் அவர்களின் திருவுடலை தரிசிக்காமலும், அவர்களிடமிருந்து ஸலாத்துக்கான பதிலைப் பெற்றுக் கொள்ளாமலும் அவர்களின் அடக்கவிடத்தை மட்டும் தரிசிப்பர். 
இன்னும் சிலர் அவர்களை நேரில் தரிசித்து அவர்களின் கரத்தை முத்தமிட்டு மகிழ்வர். 
இவ்வாறு அவர்களைத் தரிசிக்கச் செல்பவர்களில் பலதரமுடையவர்கள் உள்ளனர். 
ரிபாயிய்யஹ் தரீகஹ்வின் மூலவர் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ றழி அவர்கள் நபீஸல் அவர்களின் சியாறத் – தரிசனத்துக்காகத் திருமதீனஹ் நகருக்குச் சென்ற சமயம் அவர்களிடம் அவர்களின் அருட்கரத்தை நீட்டித் தருமாறு கேட்டதாகவும், நபீஸல் அவர்கள் அவ்வாறே தங்களின் அருட் கரத்தை வெளியே நீட்டிக் கொடுத்ததாகவும், ரிபாய் நாயகமவர்கள் அவ்வருட்கரத்தைப் பற்றி முத்தமிட்டு அருள் பெற்றதாகவும், கண்கொள்ளா இவ்வற்புதக் காட்சியை அங்கு கூடியிருந்தோர் கண்டு வியந்ததாகவும் ரிபாயீ நாயகமவர்களின் வரலாறு கூறுகிறது. 
முதலாவது நபீ மொழியில் வந்துள்ள وَجَبَتْ لَهُ شَفَاعَتِيْ அவனுக்கு எனது “ஷபாஅத்” கடமையாகிவிட்டது என்பது பற்றிச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். 
மேற்கண்ட வசனத்தில் உள்ள “வஜபத்” என்பதற்குப் பதிலாக ஹதீதுகளில் “ஹல்லத்” என்ற சொல் வந்துள்ளது. இரண்டு சொற்களின் பொருளும் ஒன்றுதான். 
நபீஸல் அவர்கள் شَفِيْعُ الْمُذْ نِبِيْنَ பாவிகளுக்காகப் பரிந்துரைப்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
மறுமையில் பாவிகள் அல்லோலகல்லோலப்பட்டு தமக்காக அல்லாஹ்விடம் 
“ஷபாஅத்” பரிந்துரைப்பவர்கள் யார்? என்று அலைந்து திரிவார்கள். ஆதம் நபீ, இப்றாஹீம் நபீ, மூஸா நபீ மற்றும் ஏனைய நபீமார்களிடம் செல்வார்கள். அவர்கள் அனைவரும் தமக்குள்ள காரணம் கூறி “ஷபாஅத்” செய்ய முடியாதென்று அவர்களை அனுப்பிவிடுவார்கள். இறுதியில் பாவிகள் அனைவரும் நபீஸல் அவர்களைக் கண்டடைந்து அவர்களிடம் பரிந்துரைக்குமாறு வேண்டி நிற்பார்கள். சலித்துக் கண்ணீர் வடிப்பார்கள். இறைதூதர், ஈருலக ரட்சகர் நபீஸல் அவர்கள் அந்தப் பாவிகளுக்காக மன்றாடுவார்கள். பரிந்துரைப்பார்கள், சிபாரிசு செய்வார்கள், அல்லாஹ் பாவிகளில் தான் நாடியவர்களை நபீஸல் அவர்களின் ஷபாஅத் மூலம் மன்னித்து அருள்புரிவான். 
இந்த ஷபாஅத் – பரிந்துரைத்தல்தான் முதலாவது நபீமொழியில் கூறப்பட்ட ஷபாஅத் ஆகும். நபீஸல் அவர்களை நேரில் தரிசிக்காவிட்டாலும் அவர்களின் புனித அடக்கவிடத்தை மட்டுமாவது தரிசித்த அனைவரும் மேற்கண்ட இந்த பரிந்துரைப்பை பெறுவார்கள். நபீஸல் அவர்களை அல்லது அடக்கவிடத்தைத் தரிசித்தவர்களுக்கு இந்த ஷபாஅத் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதற்கு நபீமொழியில் வந்த வஜபத் கடமையாகிவிட்டது என்ற சொல்தான் ஆதாரம். எனது “ஷபாஅத்” அவனுக்கு கடமையாகிவிட்டது. என்ற வசனத்தின் பொருள், நபீஸல் அவர்களை சியாறத் செய்த அனைவருக்கும் அவர்கள் நிச்சயமாகப் பரிந்துரைப்பார்கள் என்பதாகும். 
04–64 வசனத்துக்குரிய விளக்கத்தில் ஒருபாவி தனது பாவமன்னிப்புக்காக நபீஸல் அவர்களிடம் செல்ல வேண்டும். அவர்களின் மறைவுக்குப்பின் அவர்களின் அடக்கவிடத்துக்குச் செல்ல வேண்டும். அதற்கு வசதியற்ற ஒருவன் தனது குருவின் காலடிக்குச் செல்ல வேண்டும். அவர் மறைந்தபின் அவரின் அடக்கவிடத்துக்குச் செல்ல வேண்டும் என்று எழுதியுள்ளேன். 
இந்த அடிப்படையில் முதலாவது நபீமொழியை ஆராய்ந்தால் ஒரு முரீத்–சிஷ்யன் தனது ஞானகுருவின் மறைவுக்குப்பின் அவரின் அடக்கவிடத்தைத் தரிசித்தால் அவனுக்கு அவரின் “ஷபாஅத்” கிடைக்குமென்பது தெளிவாகும். 
اَلْعُلَمَاءُ وَرَثَة ُالأَنْبِيَاءِ 
மார்க்க அறிஞர்கள் – ஞானகுருக்கள் நபீமாரின் வாரிசுகளாவர் என்பது நபீமொழி. 
இந்த நபீமொழியில் வந்துள்ள “அல்உலமாஉ” என்ற சொல் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்னும் நாற்பெரும் கடல்களிலும் நீச்சலடிக்கின்ற தரீகஹ்வின் ஷெய்கு – ஞானகுருக்களைக் குறிக்குமேயன்றி அறபுக் கல்லூரிகளில் ஒருசில ஆண்டுகளைக் கழித்துவிட்டு எழுவாய் பயநிலை தெரியாமல்விதம் மௌலவீ தராதரம் பெற்று நாட்டில் நடமாடுகின்றவர்களைக்குறிக்காது. இரண்டாவது நபீமொழி பற்றிச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். 
இந்த நபீமொழியும் முதலாவது நபீமொழிபோல் நபீஸல் அவர்களைத் தரிசித்தவனுக்கு அவர்களின் ஷபாஅத் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற கருத்தையே காட்டுகிறது. அதோடு மேலும் இரண்டு விடயங்களையும் சுட்டிக் காட்டுகிறது. 
ஒன்று இந்த நபீமொழியில் “கப்று” சமாதி என்ற சொல் கூறப்படவில்லை. ஆகையால் இந்த நபீமொழியின் வெளியரங்கம் அவர்களை அவர்களின் திருவுடலைத் தரிசிப்பதை மட்டும் சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்துள்ளது. 
இரண்டு நபீஸல் அவர்களைத் தரிசிப்பதன் மூலம் தரிசிப்பவனுக்கு அவர்களின் ஷபாஅத் கிடைப்பதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அதாவது தரிசனத்தை நாடிச் செல்பவன் அதை மட்டுமே தனது குறிக்கோளாய்க் கொண்டிருத்தல் அவசியம். மதீனஹ்வுக்கு வெளியே இருந்து தரிசனத்துக்காகச் செல்பவனாயினும், மதீனஹ்வில் இருந்து கொண்டு தரிசனத்துக்காகச் செல்பவனாயினும், அவனின் குறிக்கோள் தரிசனம் மட்டுமாக இருத்தல் வேண்டும். 
மதீனஹ் நகரின் வெளியே இருந்து தனது சொந்த வேலையைக் குறிக்கோளாகக் கொண்டு அங்கு சென்று தனது வேலையை முடித்துவிட்டுத் தரிசித்தவனும் மதீனஹ் நகரில் இருந்து கொண்டு தனது சொந்த வேலைக்காகச் செல்லும் வழியில் எதிர்பாராமல் தரிசித்தவனும் நபீஸல் அவர்களின் ஷபாஅத் பரிந்துரைக்கு ஆளாகுவானா? 
இந்த அடிப்படையில் வேலைவாய்ப்பைக் குறிக்கோளாகவும், வஹ்ஹாபிஸக் கல்வியைக் குறிக்கோளாகவும் கொண்டு திருமதீனஹ் நகருக்குச் சென்ற ஒருவன் ஒரு நாளைக்கு ஆயிரம் தரம் தரிசித்தாலும் அவனுக்கு ஷபாஅத் கிடைக்குமா? ஆயினும் அவனுக்கு தரிசனத்துக்கான நன்மை மட்டும் நிச்சயமாகக் கிடைக்கும். இந்த இரண்டாவது நபீமொழியில் நபீஸல் அவர்களின் ஷபாஅத்தைப் பெறுவதற்கு தரிசிக்கச் செல்பவனின் குறிக்கோள் – இலட்சியம் தரிசனம் மட்டுமாக இருத்தல் வேண்டும். அவனின் குறிக்கோள் கலப்பானதாயிருந்தால் அவனுக்கு ஷபாஅத் கிடைக்க மாட்டாது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிக்கோள் தரிசனம் மட்டுமாயிருக்க வேண்டுமென்ற இந்த நிபந்தனை “இக்லாஸ்” என்ற கலப்பற்ற நிலையையும், நபீஸல் அவர்களின் உயர்வையும் எடுத்துக் காட்டுவது அறிவுள்ளவர்களுக்கு மறைவானதல்ல. 
இந்த அடிப்படையிலேயே ஒரு சிஷ்யன் தனது குருவின் தரிசனத்துக்காகச் செல்லுதல் வேண்டும். இன்றேன் அவரின் “பைழு” அருள்கிடைக்காது. 
மண்ணறைகளைத் தரிசித்தல் சம்பந்தமாக ஆரம்பத்தில் ஐந்து நபீமொழிகளை எழுதிய நான் அவற்றில் முதலாம் இரண்டாம் நபீமொழிகளுக்கு மட்டும் விளக்கம் எழுதினேன். இனிமூன்றாவது நபீமொழி பற்றி ஆராய்ந்து பார்ப்போம். 
3) ஒருவன் எனது மரணத்தின் பின்னர் “ஹஜ்” வணக்கத்தை முடித்துவிட்டு எனது “கப்று அடக்கவிடத்தைத் தரிசித்தானாயின் அவன் நான் உயிருடன் இருந்தபோது என்னைத் தரிசித்தவன் போலாவான்” என்று நபீஸல் அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் – தாரகுத்னீ 
இந்த நபீமொழியிலும் “கப்று” அடக்கவிடம் என்ற சொல்லே வந்துள்ளது. 
இந்த நபீமொழியின்படி ஒருவன் தன்மீது கடமையான “ஹஜ்” வணக்கத்தை முடித்துவிட்டு திருமதீனஹ் நகர் சென்று நபீஸல் அவர்களின் அடக்கவிடத்தை தரிசித்தானாயின் அவன் நபீஸல் அவர்களை அவர்கள் உயிருடன் இருந்தபோது தரிசித்தவன்போலாகிவிடுகிறான் என்பது தெளிவாகிறது. 
நபீஸல் அவர்களை நேரில் கண்ட ஒருவர் “ஸஹாபீ” என்ற பெயர் பெறுகிறார். 
மேலே எழுதிய நபீமொழியில் நபீஸல் அவர்களின் மறைவின் பிறகு அவர்களின் அடக்கவிடத்தை தரிசித்தவன் அவர்கள் உயிரோடிருந்தபோது அவர்களைக் கண்டவன் போலாகிவிடுகிறான் என்று சொல்லப்பட்டிருப்பதால் அவன் உண்மையில் “ஸஹாபீ” இல்லாது போன்றாலும் ஸஹாபி ஒருவரின் அந்தஸ்த்தைப் பெறுகிறான் என்பது சாடையாக விளங்கப்படுகிறது. 
நாலாவது நபீமொழி ஒருவன் “ஹஜ்” செய்துவிட்டு என்னைத் தரிசிக்கவில்லையானால் அவன் என்னை வெறுத்து விட்டான் என்று நபீஸல் அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் – அல்காமில் இப்னுஅதிய்யி 
நபீஸல் அவர்களைத் தரிசித்தல் ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றாக இல்லாது போனாலும் ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றிய ஒருவன் மதீனஹ் நகர் சென்று நபீஸல் அவர்களைத் தரிசிக்கவில்லையானால் அவன் அவர்களை வெறுத்துவிட்டான் என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து அவர்களைத் தரிசிக்காமல் தாயகம் திரும்பினவன் “முஃமின்” விசுவாசியல்ல என்பது தெளிவாகிறது. 
ஏனெனில் எண்ணற்ற பல நபீமொழிகள் மூலம் நபீஸல் அவர்களை நேசிப்பது அவர்கள் மீது “மஹப்பத்” அன்பு வைப்பது “பர்ழுஐன்” கட்டாயக் கடமை என்றும் அவர்களை நேசிக்காதவன் “முஃமின்” விசுவாசியாகமாட்டான் என்றும் தெளிவாக விளங்கப்படுவதால் அவர்களை வெறுத்தவன் நிச்சயமாக விசுவாசியாகமாட்டான் என்பது உறுதியாகின்றது. “ஜபா” என்ற சொல்லுக்கு வெறுத்தான் என்பது பொருள். ஹஜ் வணக்கத்தை முடித்த ஒருவன் என்னைத் தரிசிக்கவில்லையானால் அவன் பாவியாகிவிட்டான் என்றோ, அவன் நன்றியில்லாதவன் என்றோ அவர்கள் சொல்லியிருந்தால் அதற்கு மேற்கண்டவாறு பொருள் கொள்ளாமல் வேறுவிதமாகப் பொருள் கொள்ள முடியும். ஆனால் அவர்கள் “ஜபானீ” என்னை வெறுத்துவிட்டான் என்ற வசனத்தைப் பயன்படுத்தியுள்ளதால் ஹஜ் செய்துவிட்டு அவர்களை சியாறத் செய்யாதவன் “ஈமான்” விசுவாசமுள்ளவனல்ல என்பது தெளிவாகின்றது. 
நபீஸல் அவர்கள், ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றிவிட்டு என்னைத் தரிசிக்காதவன் என்ற வசனத்தில் ஹஜ் வணக்கம் என்று குறிப்பிட்டு சொன்னார்களேயன்றி என்னைத் தரிசிக்காதவன் என்னை வெறுத்தவன் என்று பொதுவாகச் சொல்லவில்லை. இதற்கு நியாயமான காரணங்கள் கூறலாம். 
என்னைத் தரிசிக்காதவன் என்னை வெறுத்து விட்டான் என்று நபீஸல் அவர்கள் பொதுவாகச் சொல்லியிருந்தால் உலகில் வாழ்கின்ற முஸ்லிம்களில் அவர்களைத் தரிசிக்காத அனைவரும் அவர்களை வெறுத்துவிட்டார்கள் என்ற கருத்துவந்துவிடும். இது பொருத்தமற்ற இரக்கம் தொனிக்காத கருத்தாகும். ஏனெனில் உலகில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவருக்கும் சஊதி அறபியாவிலுள்ள திருமதீனஹ் நகர் செல்வது சாத்தியமானதல்ல. சாத்தியமில்லாத ஒன்றைச் செய்யாத ஒருவன் தண்டிக்கப்படுவதும், குற்றம் சுமத்தப்படுவதும் பொருத்தமற்றதாகும். நபீஸல் அவர்கள் பொருத்தமற்ற ஒன்றைச் செய்யமாட்டார்கள். ஹஜ் வணக்கத்துக்காக மக்கஹ் நகருக்கு வராமல் உலகின் பலகோணங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் மீது அன்பு காட்டி அவர்களைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே நபீஸல் அவர்கள் (ஹஜ் செய்துவிட்டு) என்ற ஒரு வசனத்தைச் சேர்த்துச் சொன்னார்கள். 
ஏனெனில் உலகின் எந்த நாட்டில், எந்த மூலையில் இருந்தேனும் ஹஜ் வணக்கத்துக்காக மக்கஹ் நகர் செல்கின்ற ஒருவனுக்கு அங்கிருந்து சுமார் 300 கிலோமீற்றர் தூரத்திலுள்ள உலகரட்சகர் நபிகள் கோமான் ஸல் அவர்களின் திருமதீனஹ் நகர் சென்று அவர்களைத் தரிசிப்பது எந்தவொரு வகையிலும் சிரமமுமில்லை. சாத்தியமற்றதுமில்லை. சிரமமில்லாத, சாத்தியமான ஒரு நல்ல காரியத்தைவிட்டவன் தண்டிக்கப்பட வேண்டியவனும் குற்றம் சுமத்தப்பட வேண்டியவனுமேயாவான். இதனால்தான் அவன்மீது கோபம் கொண்டு வெறுப்படைந்த நபீஸல் அவர்கள் ஹஜ் செய்துவிட்டு என்னைத் தரிசிக்காதவன் என்று குறிப்பிட்டார்கள். 
உண்மையும், எதார்த்தமும் இவ்வாறிருக்க “சியாறத்” தரிசிக்கும் நோக்கம் கொண்டு மதீனஹ் நகருக்குப் பிரயாணம் செய்வதே கூடாதென்று வஹ்ஹாபிகள் சொல்கிறார்கள். இவர்களின் பேச்சை நம்பிக்கொண்ட பாமரமக்களும், மார்க்கம் படித்த மௌலவிகளில் அவர்களால் பயன் பெறுபவர்களும், உண்மை தெரியாத ஆலிம்களும் அந்த வஹ்ஹாபிகளின் பாட்டுக்குத் தாளம் போடுகிறார்கள். 
“ஸியாறதுல் குபூர்” தொடர்பாக ஆரம்பத்தில் ஐந்து நபீமொழிகளை எழுதிக்காட்டிய நான் அவற்றில் நான்கிற்கு விளக்கம் எழுதிவிட்டேன். இந்த இதழில் ஐந்தாவது நபீமொழிக்கு விளக்கம் எழுதுகின்றேன். 
ஒருவன் இஸ்லாத்தின் “ஹஜ்” வணக்கத்தை நிறைவேற்றி எனது “கப்று” அடக்கவிடத்தையும் தரிசித்து ஒரு யுத்தமும் செய்து, பைதுல் மக்திஸ் ஜெரூசலப் பள்ளிவாயலில் இருந்து கொண்டு என்மீது “ஸலவாத்”தும் சொன்னால் அல்லாஹ் அவன்மீது கடமையாக்கியதில் அவனிடம் ​கேட்கமாட்டான் என்று நபீஸல் அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் – அல்ஹாபிழ் ஷிபாஉஸ்ஸகாம் 
மேற்கண்ட நபீமொழியில் நான்கு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று “ஹஜ்” வணக்கம் செய்தல். இரண்டு நபீஸல் அவர்களின் அடக்கவிடத்தை தரிசித்தல், மூன்று ஒரு யுத்தம் செய்தல், நான்கு பைதுல் மக்திஸ் பள்ளிவாயலில் இருந்து கொண்டு நபீஸல் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்லுதல். 
ஒருவன் இந்நான்கு அம்சங்களையும் செய்தால் அவன்மீது “பர்ழு” கடமையாக்கியதில் அல்லாஹ் அவனிடம் கேட்கமாட்டான் என்று நபீஸல் அவர்கள் அருளியுள்ளார்கள். 
மேற்கண்ட நான்கு அம்சங்களில் இந்தக் காலத்தைப் பொறுத்தவரை பிந்தின இரண்டு அம்சங்களும் சாத்தியமற்றவையாக உள்ளன. ஆகையால் முந்தின இரண்டு அம்சங்களை மட்டும் கருத்திற்கொண்டு இந்த நபீமொழியை ஆராய்ந்து பார்ப்போம். 
அல்லாஹ் அவன்மீது கடமையாக்கியதில் அவனிடம் கேட்கமாட்டான் என்றால் அவன் தொழாதவனாயிருந்தால் ஏன் தொழவில்லை என்றோ அவன் நோன்பு நோற்காதவனாயிருந்தால் ஏன் நோற்கவில்லை என்றோ இன்னுமிவை போன்ற அவன் மீது கடமையானவற்றைச் செய்யாமல் விட்டால் அவற்றை ஏன் செய்யவில்லை என்றோ அல்லாஹ் அவனிடம் கேட்கமாட்டான் என்ற கருத்தை மேற்கண்ட நபீமொழியின் வெளியரங்கம் அறிவிக்கின்றது. இந்தக் கருத்தை “அவாமுன்னாஸ்” பாமரர்கள் ஏற்றுக் கொண்டாலும் “உலமாஉ” மார்க்கம் படித்த மாமேதைகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களால் இந்தக் கருத்தை ஜீரணிக்க முடியாது. ஒருவன் ஒருகோடி ஸலவாத் சொன்னாலும் ஒருகோடிமுறை திருமதீனஹ் நகர் சென்று நபீஸல் அவர்களை “ஸியாறத்” தரிசித்தாலும் அவன்மீது கடமையாக்கப்பட்ட தொழுகை நோன்பு போன்ற கடமைகளை அவன் செய்யவே வேண்டுமென்று அவர்கள் சொல்வார்கள் மார்க்க அறிஞர்களின் இந்தக் கருத்துச் சரியானதே. 
ஆயினும் இந்த அடியானுக்கு மேற்கண்ட நபீமொழியிலிருந்து இப்படியொரு கருத்து விளங்குகின்றது இது சரியானதா? பிழையானதா? என்பதை கற்றறிந்த மேதைகள் தீர்மானித்துக் கொள்ளட்டும். 
முசம்மில் என்பவன் முஹ்ஸின் என்பவனை தனது கடையில் வேலைக்கமர்த்தி தினமும் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வரவேண்டுமென்று நிபந்தனையிட்டான். அதை முஹ்ஸின் மனநிறைவோடு ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வந்தான். ஒரு நாள் முஹ்ஸின் குறித்த நேரம் வேலைக்கு வராமல் ஒரு மணிநேரம் தாமதமாகி வந்தான். கோபமடைந்த முஸம்மில் அவனிடம் குறித்த நேரம் வேலைக்கு வருவது உன்மீது “பர்ழு” கடமையல்லவா? ஏன்வரவில்லை? எதற்காக உனது கடமையை விட்டாய்? என்று கேட்டான் அதற்கவன் நான் கடமையை உணர்ந்து குறித்த நேரத்துக்கே வந்தேன். ஆனால் நீங்கள் பல்லாண்டு காலமாகக் காதலித்து வருகின்ற உங்கள் காதலி வழியில் என்னைக் கண்டு தனது அவசர வேலைக்காக என்னைப் பிற்படுத்திவிட்டாள் என்றான். இந்தக் கட்டத்தில் தனது கடமையைவிட்ட முஹ்ஸினை முஸம்மில் தண்டிப்பானா? மன்னிப்பானா? கற்றறிந்தோர் சிந்திக்கட்டும். வஹ்ஹாபிகள் சீறி எழட்டும். கண்மணி நாயகம் ஸல் அவர்கள் அல்லாஹ்வின் காதலுக்குரியவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முற்றும்.

==**==**==**==**==**==**==**==**==**==**==**==*

தொடர்-04

நபீஸல் அவர்கள் மதீனஹ் நகரில் சமாதி கொண்டிருப்பதால் அங்கு வாழும் மக்களுக்கும், அதன் அண்டை நாட்டுமக்களுக்கும் அவர்களின் காலடிக்குச் செல்வது சுலபம். ஆனால் மதீனஹ் நகரிலிருந்து தூர நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களின் காலடிக்கு – மதீனஹ் நகருக்குப் போவது சாத்தியமான ஒன்றல்ல. பணவசதியுள்ளவர்களுக்கு மட்டும் குறைந்தபட்சம் வாழ்க்கையில் ஒரு தரமேனும் போகமுடியும். ஆனால் வாழ்க்கைச் செலவுக்கே வசதியின்றி வாடும் ஏழைகளுக்கு இது சாத்தியமானதல்ல.




மேலே கூறப்பட்ட மூன்று அம்சங்களும் ஒன்று சேரும் பொழுதுதான் பாவமன்னிப்புக் கிடைக்கிறதென்ற திருக்குர்ஆனின் கருத்துப்படி மதீனஹ் நகரிலிருந்து தூர இடங்களில் வாழ்கின்ற வசதியற்ற முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்பு இல்லாமற் போகிறதென்று அத்தகையோர் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவ்லியாக்களும், ஞானிகளும் சில வழிகளைக் காட்டித்தருகிறார்கள். 
மதீனஹ் நகர் செல்ல வாய்ப்பில்லாதவர்கள், ஞானிகளும், வலீமார்களும் காட்டித்தருகின்ற வழியிற் சென்றால் மதீனஹ் நகரிலுள்ள மா நபீயின் காலடிக்குச் சென்றவர்களாகிவிடுவர். 
சஊதியிலுள்ள மதீனஹ் நகருக்குச் செல்லாமலேயே மா நபீயின் காலடிக்குச் செல்வதற்கு ஞானிகள் காட்டுகின்ற வழி ஒரு ஞான குருவிடம் பைஅத் ஞானதீட்சை பெற்ற ஒருவனுக்கு மட்டும்தான் பொருத்தமான வழியேயன்றி எல்லோருக்கும் பொருத்தமான வழியல்ல. 
எனவே 04 – 64 திருக்குர்ஆன் வசனம் வலியுறுத்துகின்ற மூன்று அம்சங்களையும் பேணி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புப் பெறவிரும்புகின்ற, மதீனஹ் நகர் செல்ல வசதியில்லாத ஒருவன் தனது குறிக்கோளை அடைய விரும்பினால் அவன் ஒரு ஞான குருவிடம் “பைஅத்” ஞானதீட்சை பெற்றுத்தானாக வேண்டும். 
பண வசதியில்லாதவனுக்காக ஞானிகள் காட்டியுள்ள இப்படியொரு சலுகை இருந்தும் இதைக் கூடச் செய்யாத ஒருவனுக்கு பாவமன்னிப்புத் தேவைதானா? 
மதீனஹ் நகருக்குப் போகாமல் மாநபீயின் காலடிக்குப் போவதற்கு ஞான மகான்கள் காட்டும் வழியாதெனில் ஒருவன் ஞான வழி நடந்து, ஆன்மீகப் பேரின்ப நிலை பெற்றுவதாயின் அவன் ஒரு “காமில்” சம்பூரணம் பெற்ற ஞான குருவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர்கள் காட்டும் வழி. 
அவன் அந்தக் குருவைத் தனது வழிகாட்டியாகவும் இறைதூதர் றஸுலாகவும் காணவேண்டும். அவருக்கு வழிபடுவதை றஸுலுக்கு வழிபடுவதாக கருதவேண்டும். அவரைப் பார்க்கும்போது றஸுலைப் பார்ப்பதாகக்கொள்ள வேண்டும். அவருடன் சவகாசம் செய்வதை றஸுலுடன் சவகாசம் செய்வதாக என்ன வேண்டும். 
பாவம் செய்து அதற்காக நபீஸல் அவர்களின் காலடிக்குச் சென்று பரிகாரம் தேட நினைக்கும் ஒரு “முரீது” சீடன் மதீனஹ்வில் சமாதி கொண்டிருக்கும் மன்னர் நபீயின் காலடிக்குச் செல்ல வசதியற்றவனாயிருந்தால் தனது குருநாதரின் காலடிக்குச் சென்றால் அது அவனுக்குப் போதும் அவன் நபீகளாரின் காலடிக்குச் சென்றவனாகிவிடுவான். 
இவ்விதமாகத் தனது குருவை றஸுலாகக் கருதி இவ்வாறெல்லாம் செய்வதற்கு அந்தக் குருவும் உண்மையிலேயே “ஷெய்குகாமில்” பூரணத்துவம் பெற்றவராகயிருத்தல் வேண்டும். பூரணத்துவம் பெறாமல் பெயரளவில் குருக்களாக இருப்பவர்கள் போலிகளாவர். அத்தகைய போலிக் குருக்களைப் பின்பற்றுவோர் மிக விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருந்து கொள்ளுதல் வேண்டும். அந்தப் போலிக் குருக்கள் எதார்த்தத்தில் குருடர்களாக இருப்பதால் இருளுக்கும், ஒளிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருளை ஒளியென்றெண்ணிக் கொண்டு அதன்பால் வழிகாட்டி விடுவார்கள். ஆகையால் ஒருவன் தனக்கு ஒரு ஞான வழிகாட்டியை எடுத்துக் கொள்ள விரும்பினால் காமில் – சம்பூரணம் பெற்ற ஒருவரைக் குருவாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். 
மூன்று நிபந்தனைகள் என்ற தலைப்பில் ஒருவன் தனது காமிலான ஞானகுருவை றஸுலாகக் கணித்து பாவமன்னிப்புக்காக அவரிடம் போக வேண்டுமென்று நான்மேலே கூறிய கருத்தை இறைஞான அறிவில்லாத, இஸ்லாத்தை மேலோட்டமாக விளங்கிவைத்திருக்கின்ற உலமாக்களும், படித்தவர்களும் மறுப்பார்களென்று எண்ணுகிறேன். அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு மறுப்பதை நிறுத்திவிட்டு ஒரு ஞான மகானை அணுகினால் அவர்களுக்குத் தெளிவு கிடைக்குமென்று நம்புகிறேன். 
பாவம் செய்த ஒருவன் தனது பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்பினால் அவன் நபீஸல் அவர்களின் காலடிக்குப் போக வேண்டுமென்றும், அங்கு சென்றபின் அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும், அதன்பின் நபீஸல் அவர்கள் அவனுக்காகப் பாவமன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் இம்மூன்று அம்சங்களும் இருந்தால் மட்டுமே பாவமன்னிப்பு நிகழுமென்றும் மேலே நான் எழுதியிருக்கிறேன். 
இக்கூற்றுக்குத் திருக்குர்ஆன் வசனம் ஒன்றையும் ஆதாரமாகக் கூறியுள்ளேன். 
நபீஸல் அவர்களின் காலடிக்குச் செல்ல வசதியற்றவர்கள் சம்பூரணம் பெற்ற ஒரு குருவிடம் “பைஅத்” ஞானதீட்சை பெற்று அவரை றஸுலாகக் கருதி அவரிடம் போகவேண்டு மென்றும் எழுதியிருக்கிறேன். 
இதுவரை கூறிவந்த விபரத்திலிருந்து ஒருவனின் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமானால் அவன் இறை தூதரிடம் அல்லது தனது ஞான குருவிடம் போக வேண்டுமென்பது தெளிவாகிவிட்டது. 
இறை தூதரிடம் போவதென்றால் அவர்கள் சமாதி கொண்டுள்ள திரு மதீனஹ் நகருக்குப் போகவேண்டும். ஞானகுருவிடம் போவதென்றால் அவர் உயிருடன் இருக்கும்போது அவரிருக்கும் இடத்துக்குப் போகவேண்டும். அவர் மரணித்திருந்தால் அவர் அடங்கியுள்ள தர்ஹா ஷரீப் – அடக்கவிடத்துக்குப் போக வேண்டும். இதுவே மேலே கூறிய திருக்குர்ஆன் வசனம் தருகின்ற சாரமாகும். 
எனவே திருவசனம் தருகின்ற விளக்கத்தின்படி ஒரு பாவி, நபீ ஸல் அவர்களின் ஸியாரத்துக்குப் போவது கடமை என்றும் பாவியல்லாதவன் போவது “ஸுன்னத்” என்றும் விளங்குகின்றது. இது போன்றுதான் ஒரு சிஷ்யன் தனது ஆன்மீக ஞானகுரு உயிருடன் இருந்தால் அவர் இருக்கும் இடத்துக்குச் செல்வது அவர் மரணத்திருந்தால் அவரின் சமாதிக்குச் செல்வதாகும். 
“ஸியாரத்” செய்தல் கூடாதென்று உழறும் வஹ்ஹாபிகள் மேலே கூறிய திருவசனத்திற்கு ஞானிகள் வலிமாரும் எழுதியுள்ள விளக்கத்தை தேடிப்பார்த்து விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். 
சந்தேகமுள்ளவர்களும், இவ்விளக்கத்தை பிழை காண்பவர்களும் விசயம் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். 
அல்லது தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் என்னுடன் நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இவர்களுக்காக என் கதவு என்றும் திறந்திருக்கும். கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக இலங்கையில் மெய்ஞ்ஞான அகமிய விளக்கங்களை துணிவுடன் ஆதார பூர்வமாகவும் விளக்கிவரும் அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை உலமாக்களும், உறபாக்களும் ஆன்மீக விளக்கங்கள் கூற இராப் பகலாய்த் தயார்நிலையில் உள்ளனர். 
மேலே நான் கூறிய திருவசனம் நபீஸல் அவர்களை “ஸியாறத்” செய்வது பற்றித் தெளிவாகவும் மற்றவர்களை ஸியாறத் செய்வது பற்றிச் சூசகமாகவும் சொல்கிறது. இது அறிஞர்களுக்கு மறைவானதல்ல. 
ஸியாறதுல் குபூர் – மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு திருக்குர்ஆனில் ஆதாரமுண்டா? என்று வஹ்ஹாபிகள் கேட்டால், மேலே எழுதிக் காட்டிய 04 – 64 என்ற திருவசனத்தை கூறிக் காட்டி அவர்களின் வாலை நறுக்க வேண்டும். 
மேற்கண்ட திருவசனம் நபீஸல் அவர்கள் உயிரோடிருந்த காலத்துக்கு மாத்திரமே பொருத்தமானதென்று அவர்களின் வபாத் – மறைவுக்குப்பின் இத்திருவசனம் பொருத்தமற்றதென்றும், ஆகையால் ஒருபாவி அவர்களின் ஸியாறத் – தரிசனம் நாடி அவர்களின் அடக்கவிடத்துக்குப் போகலாகாதென்றும் வஹ்ஹாபிகள் கூறிப்பொது மக்களை தடுமாற செய்து அவர்களைத் தம்பக்கம் திசை திருப்பவும் இடமுண்டு. ஏனெனில் வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரும் இதே வழியில்தான் சென்றிருக்கிறார். மக்களைக் குழப்பி தம் பக்கம் திசைதிருப்பியிருக்கிறார். தனயன் தந்தையைப் பின்பற்றுவதில் வியப்பொன்றுமில்லை. தந்தை வழியே தனயன் வழி. 
وَمَنْ يُشَابِهْ أَذَابَهُ فَمَا ظَلَمَ 
தந்தை வழி சென்றவன் அநீதி செய்தவனல்லன். 
இவ்வாறு கூறும் வஹ்ஹாபிகளுக்கு இரண்டு காரணங்கள் கூறி அவர்களின் வாலை நறுக்கவும். அல்லது வழிக்கு அழைக்கலாம் விதியிருந்தால். 
ஒன்று – திருக்குர்ஆன் நபீஸல் அவர்களின் காலத்துக்கு, அவர்களின் மறைவுக்குப்பின் உலகம் முடியும் வரையிலான காலத்துக்கும் பொறுத்தமானதேயன்றி அவர்களின் காலத்துக்கு மட்டும் பொருத்தமானதல்ல. 
திருக்குர்ஆனில் கூறப்பட்ட எந்தவொரு சட்டமாயினும், அல்லது தத்துவமாயினும் அது உலகமுடிவின்வரை அமுல் செய்யப்பட வேண்டிய, பின்பற்றப்பட வேண்டிய, எழுத்தாளப்பட வேண்டிய ஒன்றாகும். 
உதாரணமாக மதுபோதையிலுள்ளவராக இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர் என்ற திருவசனம் ஹழ்ரத் அலீ (றழி) அவர்களின் விடயத்தில் அருளப்பட்டதாயினும் அது உலகம் முடியும்வரை அமுல் செய்யப்பட வேண்டிய ஒன்றேயன்றி அலீ (றழி) அவர்களின் காலத்துக்கு மட்டும் பொருத்தமானதென்றும், அவர்களின் மறைவுக்குப்பின் மதுபோதையுடன் தொழலாம் என்றும் கொள்ள முடியாது. 
எனவே மேற்கண்ட 04 – 64 திருவசனம் நபீஸல் அவர்களுடன் தொடர்புள்ளதாக இருந்தாலும் அவர்களின் வபாத் – மறைவுக்குப் பின்னரும் அது அமுல் செய்யப்பட வேண்டிய வசனமேயாகும். 
இரண்டு – நபீஸல் அவர்கள் எதார்த்தத்தில் இன்றும் உயிரோடுதான் இருக்கிறார்கள். இதுவே ஸுபிகளின் ஏகோபித்த முடிவு யார் எப்படி உழறினாலும் இஸ்லாத்தின் முடிவு இதுவேயன்றி வேறில்லை. அவர்கள் எதார்த்தத்தில் மரணிக்கவில்லை. அவர்களுக்கு மரணம் நிகழ்ந்தது உண்மைதான். ஆயினும் அது வெளியரங்கத்தில் நடந்த ஒரு நாடகமேயாகும். அவர்களுக்கு எதார்த்தத்தில் மரணம் நிகழவில்லை என்ற தத்துவம் நீங்களும் மரணிப்பவர்களை அவர்களும் மரணிப்பவர்களே. என்ற திருக்குர்ஆன் வசனத்துக்கு முரணாகாது. ஏனெனில் இத்திருவசனம் கூட வெளியரங்கத்தில் நடந்த நாடகத்தைச் சுட்டுகிறதேயன்றி எதார்த்தத்தையல்ல. குறித்த திருவசனம் நபீஸல் அவர்கள் உயிரோடிருந்த காலத்துக்கு மாத்திரமே பொருத்தமான தென்றும், ஒரு பாவி அவர்களின் ஸியாறத் – தரிசனத்தை நாடி அவர்களின் அடக்கவிடத்துக்குப் போககூடாதென்றும் கூறும் வஹ்ஹாபிகள் மேற்கண்ட இரண்டு காரணங்களையும் சற்று சிந்தனை செய்து பார்க்கவேண்டும். 
“ஸியாறத்” பற்றி நபீமொழிகள்: 
மேலே நான் எழுதிக்காட்டிய திருக்குர்ஆன் வசனம் நபீஸல் அவர்களை ஸியாறத் தரிசித்தல் பற்றித் தெளிவாகவும் மற்றவர்களைத் தரிசித்தல் பற்றிச் சூசகமாகவும் அறிவிக்கின்றதென்று கூறினேன். 
இப்பொழுது நபீஸல் அவர்களை ஸியாறத் – தரிசித்தல் தொடர்பாக வந்துள்ள நபிமொழிகளிற் சிலதை எழுதுகிறேன். 
قال النبي صلى الله عليه وسلم مَنْ زَارَ قَبْرِيْ وَجَبَتْ لَهُ شَفَاعَتِي 
01) எனது “கப்று சமாதியைத் தரிசித்தவனுக்கு எனது “ஷபாஅத்” பரிந்துரைத்தல் – சிபாரிசு கடமையாகிவிட்டது. 
قال النبي صلى الله عليه وسلم مَنْ جَائَنِيْ زَائِرًا لَا يُعْمِلُهُ حَاجَةَ إِلَّا زِيَارَتِيْ كَانَ حَقًّاعَلَيَّ 
اَنْ أَكُوْنَ لَهُ شَفِيْعًا يَوْمَ الْقِيَامَةِ 
என்று நபீஸல் அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் : தாரகுத்னீ, பைஹகீ 
02) என்னை தரிசிக்கும் நோக்கத்தோடு மட்டும் எவனாவது என்னிடம் வந்தால் மறுமையில் அவனுக்கு பரிந்துரைப்பவனாக நான் இருப்பது என்மீது கடமையாகிவிட்டது என்று நபீஸல் அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் :தபறானீ 
قال النبي صلى الله عليه وسلم مَنْ حَجَّ فَزَار قَبْرِيْ بَعْدَ وَفَاتِيْ فَكَأَ نََمَا زَارَنِيْ فِيْ حَيَاتِيْ 
03) ஒருவன் எனது மரணத்தின் பின்னர் “ஹஜ்” வணக்கத்தை முடித்துவிட்டு எனது “கப்று” அடக்கவிடத்தைத் தரிசித்தானாயின் அவன் நான் உயிருடன் இருந்தபோது என்னைத் தரிசித்தவன் போலாவான். என்று நபீஸல் அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் : தாரகுத்னீ 
قال النبي صلى الله عليه وسلم مَنْ حَجَّ الْبَيْتَ وَلَمْ يَزُرْنِيْ فَقَدْ جَفَانِيُ 
04) ஒருவன் “ஹஜ்” செய்துவிட்டு என்னைத் தரிசிக்கவில்லையானால் அவன் என்னை வெறுத்துவிட்டான் என்று நபீஸல் அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் : அல்காமில் இப்னுஅதிய்யி 
قال النبي صلى الله عليه وسلم مَنْ حَجَّ حَجَّةَ الْاِسْلَامِ وَزَارَ قَبْرِيْ وَغَزَا غَزْوَةً وَصَلّى عَلَيَّ 
فِيْ بَيْتِ الْمَقْدِ سِ لَمْ يَسْئَلْهُ الله عَزَّ وَجَلَّ فِيْمَا افْتَرَضَ عَلَيْهِ 
05) ஒருவன் இஸ்லாத்தின் “ஹஜ்” வணக்கத்தை நிறைவேற்றி எனது “கப்று” அடக்கவிடத்தையும் தரிசித்து, ஒரு யுத்தமும் செய்து, பைதுல் மக்திஸ் – ஜெரூசலப் பள்ளிவாயலில் இருந்து கொண்டு என்மீது “ஸலவாத்”தும் சொன்னால் அல்லாஹ் அவன்மீது கடமையாக்கியதிலே அவனிடம் கேட்கமாட்டான். என்று நபீஸல் அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் : அல்ஹாபிள் 
மேற்கண்ட நபீ மொழிகள் யாவும் – அல் இமாம் தகிய்யுத்தீன் அஸ்ஸூப்கீ றஹ் அவர்கள் எழுதிய 
شِفَاءُ اسِّقَامْ فِيْ زِيَارَةِ خَيْرِ الْأَنَامْ 
என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். 
மேற்கண்ட நபீ மொழிகள் யாவும் நபீஸல் அவர்களைத் தரிசித்தல் தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகளேயன்றி பொதுவாக கப்றுகளைத் தரிசித்தல் தொடர்பாக வந்தவையல்ல. பொதுவாக வந்துள்ள நபீ மொழிகளை பின்னால் எழுதுவேன். 
==–==–==–==–==–==–==–==–==–==–==–==–==–==–==–=–==

​தொடர் — 03

சங்கைக்குரிய ஞானபிதா 
மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ 

எந்தவொரு படைப்பு அல்லாஹ்வை நினைவூட்டுகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் எனப்படும். 
இது “அவாமுன்னாஸ்” என்னும் சாமானிய மனிதர்களுக்குப் பொருத்தமான கருத்து. ஆனால் இறைஞானிகளிடம் படைப்பு எதுவாயினும் அது அல்லாஹ்வை நினைவுபடுத்தும் சின்னமேயாகும். 

وَفِيْ كُلِّ شَيْئٍ لَهُ آيَةٌ تَدُلُّ عَلَى اَنَّهُ وَاحِدٌ 

ஒவ்வொரு வஸ்துவும் அவன் ஒருவனென்று காட்டுகிறது. 
பொதுவாக அல்லாஹ்வின் படைப்புக்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, அல்லாஹ்வை நினைவூட்டும் படைப்பு, மற்றது அவனை நினைவூட்டாத படைப்பு. 
முந்தினதற்கு உதாரணம் பள்ளிவாயல், மார்க்கக் கல்விக் கூடம், “மக்பறஹ்” மையவாடி, கஃபதுல்லாஹ், “உலமாஉ” மார்க்க அறிஞர்கள், “பைஅத்” ஞானதீட்சை வழங்கும் ஞானகுருக்கள், வலீமாரின் சமாதிகள், ஸபா, மர்வஹ், உழ்ஹிய்யஹ்வுக்கென்று விடப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம் என்பன போன்று. 
ஒரு மனிதன் மேற்கண்டவற்றைக் காணும்போது அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு வருமென்பதில் சந்தேகமில்லை. 
பிந்தினதற்கு உதாரணம் படமாளிகை, மதுச்சாலை, மலசலகூடம், சந்தை, விளையாட்டரங்கு, விபச்சாரவிடுதி என்பன போன்று. 
ஒரு மனிதன் மேற்கண்டவற்றைக் காணும்போது அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு வராதென்பதில் சந்தேகமில்லை. 
எனவே மேற்கண்ட திருவசனத்தின்படி “ஷஆயிறுல்லாஹ்” அல்லாஹ்வை நினைவூட்டும் அவனின் சின்னங்களை “தஃளீம்” கண்ணியப்படுத்துதல் அவசியமாயிற்று. 
وَالْبُدُنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِاللهِ 
ஆடு, மாடு, ஒட்டகம் முதலானவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் சின்னங்களில் நின்றும் நாங்கள் ஆக்கித் தந்துள்ளோம். 
– திருக்குர்ஆன் – 
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِاللهِ 
நிச்சயமாக ஸபாவும், மர்வஹ்வும் அல்லாஹ்வின் சின்னங்களில் நின்றுமுள்ளவையாகும். 
– திருக்குர்ஆன் – 
மேற்கண்ட இரண்டு திருவசனங்களின்படி உழ்ஹிய்யஹ்வுக்கென்று விடப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம் முதலானவையும், மக்கஹ் நகரிலுள்ள ஸபா மர்வஹ் என்ற இரு மலைகளும் அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்கள் என்பதும், இவற்றைக் கண்ணியம் செய்தல் “தக்வா” இறையச்சத்தின் பிரதிபலிப்பு என்பதும் தெளிவாகிறது. 
அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துவது இறையச்சத்தைச் சேர்ந்ததென்ற மேற்கண்ட திருவசனத்தின்படி அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களைக் கண்ணியப்படுத்துவது அவசியமாகும். 
வேறுபாடு 
“தஃளீம்” கண்ணியப்படுத்துதல் என்பது வேறு. வணங்குதல் என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. வஹ்ஹாபிகள் இரண்டையும் ஒன்றென விளங்கிக் கொண்டார்கள். 
ஒரு மாணவன் தனது ஆசிரியரைக் காணும்போது எழுந்து நிற்பதும், ஒரு சிஷ்யன் தனது ஞானகுருவின் கைகாலை முத்தமிடுவதும், பிள்ளைகள் தமது பெற்றோருக்கு எழுந்து நிற்பதும், ஒரு நாட்டின் தலைவனுக்கு அந்நாட்டு மக்கள் எழுந்து நிற்பதும், “தஃளீம்” என்ற கண்ணியத்தைச் சேருமேயன்றி “இபாதத்” என்ற வணக்கத்தைச் சேராது. 
“கப்று”க்குப் போர்வை போர்த்துதல், சந்தணம் பூசுதல், அதை முத்தமிடுதல், சாம்புறாணி ஊதுபத்தி எரித்தல், அதன்மேல் மலர்போடுதல், விளக்கெரித்தல், மின்குமிழ்களால் அலங்கரித்தல், கொடியேற்றுதல் முதலானவை “தஃளீம்” கண்ணியத்தைச் சேருமேயன்றி “இபாதத்” என்ற வணக்கத்தைச் சேராது. 
அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்த வேண்டுமென்ற மேற்கண்ட திருமறை வசனத்தின்படி இவையாவும் செய்யப்படவேண்டியவையேயாகும். 
இவற்றைப் “பித்அத்” என்றும், “ஷிர்க்” என்றும், அனாச்சாரம் என்றும் கூறிவருகின்ற வஹ்ஹாபிகள் மேற்கண்ட திருவசனத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவுமில்லை, “தஃளீம்” கண்ணியத்துக்கும், “இபாதத்” வணக்கத்துக்குமிடையிலுள்ள வேறுபாட்டை விளங்கிக் கொள்ளவுமில்லை. 
வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் கண்ணியப்படுத்துதலும் வணக்கம்தானென்றால் மேற்கண்ட அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துதல் இறையச்சமென்ற திரு வசனத்தின் மூலம் சின்னங்களான சிருஷ்டிகளை வணங்குமாறு அல்லாஹ் அடியாரைத் தூண்டினதாகிவிடும். அதோடு பெற்றோரைக் கண்ணியப்படுத்தும் பிள்ளைகள் அவர்களை வணங்குகிறார்கள் என்றும், ஆசிரியரைக் கண்ணியப்படுத்தும் மாணவர்கள் அவர்களை வணங்குகிறார்கள் என்றும், ஞானகுருக்களைக் கண்ணியப்படுத்தும் சிஷ்யர்கள் அவர்களை வணங்குகிறார்கள் என்றும் வந்து விடும். 
இவர்களின் கூற்றுப்படி இன்று உலகில் வாழும் முஸ்லிம்களிலனேகர் சிருஷ்டிகளை வணங்குகின்ற “முஷ்ரிகீன்” இணைவைத்தவர்களாகிவிட வேண்டிவரும். 
இதனால்தானோ என்னவோ வஹ்ஹாபிஸத்தின் தந்தை முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவர் ஒரு சமயம் தனது கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும் “முஷ்ரிகீன்” இணைவைத்தவர்களென்று அன்றே சொல்லிவிட்டார். 
திருக்குர்ஆனின் முடிவும், திரு நபீ ஸல் அவர்களின் அருள் மொழிகளின் முடிவும், “அகீதஹ்” கொள்கைக் கலையில் பிரசித்தி பெற்ற இமாம்களின் முடிவும், ஞானக் கலையில் பிரசித்தி பெற்ற இறைஞானிகளின் முடிவும் என்னவெனில் ஒருவன் சிருஷ்டிகளில் ஏதோ ஒன்றை அது தனக்குத்தானே சுயமாக உண்டான, ஆக்கவும், அழிக்கவும் வல்லமை பெற்ற அல்லாஹ் என்ற மெய்ப்பொருள் என்று நம்பி அதற்கு கண்ணியம் கொடுத்தானாயின் அவன் “முஷ்ரிக்” இணைவைத்தவனேதான். இதில் ஐயமில்லை. இவன்தான் முஷ்ரிக் இணைவைத்தவனென்று கருதப்படுவான். இவனின் இச்செயல்தான் வணக்கமாகும். 
இதற்கு மாறாக சிருஷ்டிகளில் ஏதோ ஒன்றை அது சிருஷ்டி என்றும், தனக்குத் தானே சுயமாக உண்டாகாமல் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட படைப்பு என்றும் அதற்கு ஆக்கவோ அழிக்கவோ சுயமான வல்லமை இல்லை என்றும் நம்பிக்கொண்டு அதன்முன்னால் கைகட்டி நிற்பது கொண்டும், அதை முத்தமிடுவது கொண்டும், அதை கண்ணியப்படுத்துவது கொண்டும் ஒருவன் “முஷ்ரிக்” இணைவைத்தவனாகமாட்டான். அவனின் செயல் “ஷிர்க்” இணையாகவுமாட்டாது. மாறாக அவன்தான் எதார்த்தத்தில் பூரண விசுவாசி. இவ்வாறு நம்புவதே “ஈமான்” விசுவாசமும் “தவ்ஹீத்” ஏகத்துவமுமாகும். 
ஒரு “வலீ”யின் “கப்று”க்குச் சென்று அவருக்கு ஸலாம் கூறி, அவரின் முன்னால் கைகட்டி நின்று, அவரின் சமாதியை முத்தமிட்டு, அதன்மேல் மலர்கள் சொரிந்து, அத்தர் போன்ற வாசனைத் திரவியங்கள் பூசி, சமாதியை வர்ண மின்குமிழ்களால் அலங்கரித்து, அவரைப் புகழ்ந்து பாடிப்பேசி, அங்கு கூடும் மக்களுக்கு அன்னதானம் வழங்கிவருகின்ற எந்த ஒரு “முஃமின்” விசுவாசியும் அங்கு அடங்கியுள்ளவரை தனக்குத்தானே சுயமாக உண்டானவர் என்றும் அவருக்கு ஆக்கவும் அழிக்கவும் சுயமான வல்லமை உண்டு என்றும், அவர்தான் அல்லாஹ் என்று நம்புவதுமில்லை.எண்ணுவதுமில்லை. மாறாக அவர் அல்லாஹ்வின் படைப்பு என்றும், அவர் அவனை அறிந்து அவருக்கு வழிபட்டு வாழ்ந்ததால் “விலாயத்” என்ற ஒலித்தனம் பெற்றவர் என்றுமே நம்புகிறார். இங்கே “ஷிர்க்” எங்கே? 
எனவே, நாங்கள் மண்ணறைகளைத் தரிசிப்பதை மறுக்கவில்லை. அங்கு நடைபெறுகின்ற “பித்அத்”களையும் அனாச்சாரங்களையுமே மறுக்கிறோம் என்று கூறுகின்ற வஹ்ஹாபிகள் கண்ணியப்படுத்தலுக்குரிய விடயங்களை “இபாதத்” வணக்கமென்று விளங்கிக் கொண்டதால்தான் குளம்பிக் கொண்டார்கள். இதற்குக் காரணம் கண்ணியப்படுத்துதல் வணங்குதல் இவ்விரண்டுக்குமிடையிலுள்ள வேறுபாடு அவர்களுக்குத் தெரியாமற் போனதும், அவர்கள் “ஷிர்க்” இணை என்றால் என்ன? “ஈமான்” விசுவாசமென்றால் என்ன? என்பதை விளங்கிக் கொள்ளாமற் போனதுமேயாகும். 
ஆதாரங்கள் 
“சியாறதுல் குபூர்” “கப்று”களைச் சந்திப்பது தொடர்பாக முதலில் திருக்குர்ஆனில் இருந்து ஒருவசனம். 
அவர்கள் தமக்கு அநீதி செய்துகொள்வார்களாயின் உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத்தேடி அவர்களுக்காகத் தூதரும் பாவமன்னிப்புத் தேடினால் அவர்கள் அல்லாஹ்வை பாவமன்னிப்பு வழங்குபவனாகவும் கண்டு கொள்வார்கள். 
திருக்குர்ஆன் – 04 – 64 
நான் மேலே எழுதிய திருக்குர்ஆன் வசனத்துக்கான விளக்கத்தை இங்கு எழுதுகிறேன். 
மேலே குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனத்தில் நபீ ஸல் அவர்களை அல்லாஹ் விளித்து, ஸஹாபாக்களில் யாராவது பாவம் செய்துவிட்டு உங்கள் காலடிக்கு உங்களை நாடிவந்து அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி தூதரும் அவர்களுக்காக மன்னிப்புக்கேட்டால்தான் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்துக் கொள்வான். என்று கூறியுள்ளான். 
மூன்று நிபந்தனைகள் 
ஸஹாபாக்கள் செய்த பாவத்தை அல்லாஹ் மன்னித்துக் கொள்வதற்கு மேலே குறிப்பிட்ட திருவசனத்தில் அவன் மூன்று நிபந்தனைகள் கூறியுள்ளான். 
இம்மூன்று நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னிப்பான். இம்மூன்று நிபந்தனைகளும் ஸஹாபாக்களுக்கு மட்டுமன்றி இறுதி நாள்வரையுள்ள சகல முஸ்லிம்களுக்கும் உரியனவேயாகும். 
அம்மூன்று நிபந்தனைகளும் பின்வருமாறு : 
ஒன்று – பாவம் செய்த ஸஹாபாக்கள் நபீஸல் அவர்களை நாடி அவர்களின் காலடிக்கு வரவேண்டும். 
இரண்டு – நபீஸல் அவர்களின் காலடிக்கு வந்தபின் அல்லாஹ்விடம் அவர்கள் பாவமன்னிப்புக் கேட்கவேண்டும். 
மூன்று – நபீ ஸல் அவர்களும் ஸஹாபாக்களுக்காக பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். 
இம் மூன்று நிபந்தனைகளில் ஒன்றுகூடத் தவறிவிடுமானால் பாவம் மன்னிக்கப்படமாட்டாது. 
எனவே பாவம் செய்த ஒரு ஸஹாபீ தனது பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்பினால் முதலில் அவர் நபீஸல் அவர்களை நாடி அவர்களின் காலடிக்கு வரல் வேண்டும். பிறகு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். பிறகு நபீஸல் அவர்களும் அவருக்காகப் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். 
ஸஹாபாக்களின் காலத்தில் திருக்குர்ஆன் இறங்கியுள்ளதால் மேலே குறித்த திருவசனம் ஸஹாபாக்களைச் சுட்டிக்காட்டினாலும் கூட அவ்வசனம் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானதும் பொருத்தமானதுமேயாகும். 
எனவே உலகிலுள்ள எந்தவொரு முஸ்லிமாவது தனது பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்பினால் அவர் மேலே சொல்லப்பட்ட மூன்று நிபந்தனைகளையும் பேண வேண்டும். 
மேற்கண்ட திருவசனத்தின்படி நபீஸல் அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் பாவமன்னிப்பை நாடி நபீஸல் அவர்களின் காலடிக்குப் போயிருப்பார்கள். அது சாத்தியமான ஒன்றுதான். 
ஆனால் நபீஸல் அவர்கள் “வபாத்” மறைந்தபிறகு அந்த ஸஹாபாக்கள் யாரிடம் போனார்கள் என்பதையும், மேலே சொல்லப்பட்ட திருவசனம் உலக முஸ்லிம்கள் யாவருக்கும் பொருத்தமானதென்ற தத்துவத்தின்படி இன்று உலகில் வாழும் முஸ்லிம்கள் தமது பாவமன்னிப்புக்காக யாரிடம் போக வேண்டுமென்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். 
பாவம் செய்த ஸஹாபாக்கள் நபீஸல் அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் மறைந்தபிறகு அவர்களின் “கப்று” அடங்கியுள்ள இடத்துக்குச் சென்றார்கள். 
குறிப்பு 
வெளியுலகின் நடைமுறைகள் பேணப்பட வேண்டுமென்ற ஒரு நியதியை அடிப்படையாகக் கொண்டுதான் அவர்களுக்கு மரணம் நிகழ்ந்ததும், அவர்கள் அடக்கப்பட்டதுமேயன்றி யதார்த்தத்தில் அவர்கள் மரணிக்கவில்லை, அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அதில் ஐயமில்லை.. 
நபீஸல் அவர்கள் மறைந்த பிறகு அவர்களின் அடக்கவிடத்துக்கு ஸஹாபாக்கள் போனதுபோல் அவர்களின் மறைவுக்குப்பின் இன்று வாழ்கின்ற சகல முஸ்லிம்களும் அவர்களின் காலடிக்கே போகவேண்டும். 
நபீஸல் அவர்கள் மதீனஹ் நகரில் சமாதி கொண்டிருப்பதால் அங்கு வாழும் மக்களுக்கும், அதன் அண்டை நாட்டுமக்களுக்கும் அவர்களின் காலடிக்குச் செல்வது சுலபம். 
ஆனால் மதீனஹ் நகரிலிருந்து தூர நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களின் காலடிக்கு – மதீனஹ் நகருக்குப் போவது சாத்தியமான ஒன்றல்ல. பணவசதியுள்ளவர்களுக்கு மட்டும் குறைந்தபட்சம் வாழ்க்கையில் ஒரு தரமேனும் போகமுடியும். ஆனால் வாழ்க்கைச் செலவுக்கே வசதியின்றி வாடும் ஏழைகளுக்கு இது சாத்தியமானதல்ல. 
மேலே கூறப்பட்ட மூன்று அம்சங்களும் ஒன்று சேரும் பொழுதுதான் பாவமன்னிப்புக் கிடைக்கிறதென்ற திருக்குர்ஆனின் கருத்துப்படி மதீனஹ் நகரிலிருந்து தூர இடங்களில் வாழ்கின்ற வசதியற்ற முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்பு இல்லாமற் போகிறதென்று அத்தகையோர் கவலைப்படத்தேவையில்லை. அவர்களுக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவ்லியாக்களும், ஞானிகளும் சில வழிகளைக் காட்டித்தருகிறார்கள். 

== == == == === == == == == == == == == == == == == === === 


தொடர்-02 

சங்கைக்குரிய ஞானபிதா 
மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ 
ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் அர்றாஸீ றஹ் அவர்கள் தங்களின் அல்மதாலிப் – என்ற நூலில் 13ம் பிரிவில் சமாதிகளைத் தரிசித்து பயன் பெறுதல் என்ற பாடத்தில், ஒரு மனிதன் ஆன்மீகப் பலமும் இறை ஞானத்தில் பூரணத்துவமும் பெற்ற ஒரு வலீயின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு ஒருவன் சென்று அவ்விடத்தைத் தரிசிப்பதன் மூலமும், அங்கு சற்று நேரம் அமைதியாக நிற்பதன் மூலமும் அவன் மனதில் ஒரு திருப்பம் ஏற்படுமாயின் அங்கு சமாதி கொண்டுள்ளவருக்கும், அந்த இடத்துக்கும் ஏதோ ஒருவகைத் தொடர்புண்டு என்பதிலும் அந்த இடத்தைத் தரிசிக்க சென்றவனுக்கும் அங்கு சமாதி கொண்டுள்ளவருக்கும் சந்திப்பு ஏற்படும் என்பதிலும் ஐயமில்லை. அந்த ஆன்மீக வாதியின் உடலை சுமந்துள்ள அந்த மண்ணுக்கு இருவரையும் சந்திக்கச் செய்யும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது. 
இதனால் தரிசிக்கச் சென்றவனின் மனமும், அங்கு சமாதி கொண்டுள்ள வலீயின் மனமும் ஒன்றுக்கொன்று எதிராக வைக்கப்பட்டுள்ள, ஒன்றிலுள்ளது மற்றதில் பிரதிபலிக்கத்தக்க தெளிவான இரு கண்ணாடிகள் போலாகிவிடுகின்றன. தரிசிக்கச் சென்றவனின் மனக் கண்ணாடியிலுள்ள இறை ஞானம், ஆதாரம், கற்றகல்வி, உள்ளச்சம், பக்தி, அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொள்ளுதல் போன்ற உயர் குணங்கள் எல்லாம் சமாதி கொண்டுள்ள வலீயின் மனக் கண்ணாடியில் பதிவாகின்றன. இதே போல் சமாதி கொண்டுள்ள வலீயின் மனக்கண்ணாடியிலுள்ள எல்லாம் தரிசிக்கச் சென்றவனின் மனக்கண்ணாடியில் பதிவாகின்றன. 
இப்படியொரு விலைமதிப்பற்ற, பெறுதற்கரிதான ஆன்மீகப் பயன் “கப்று” மண்ணறைகளைத் தரிசிப்பதன் மூலம் ஏற்படுவதினால் தான் “சியாரதுல் குபூர்” சமாதிகளை – மண்ணறைகளைத் தரிசிப்பதை இஸ்லாம் வணக்கமாக்கியுள்ளது. 
சமாதிகளைத் தரிசிப்பதால் கிடைக்கின்ற ஆன்மீகப் பயன்களில் இன்னும்பலஉள்ளன. அவை மேற்கண்ட பயனை விட மிக வலுப்பமானதாயும் சிறப்பானதாயுமிருக்கும். அவற்றை எண்ணிக் கணக்கெடுக்க முடியாது. 
சமாதிகளைத் தரிசிக்கச் செல்பவர் அங்கு சமாதி கொண்டுள்ளவரை விட ஆன்மீகப் பலம் கூடினவராயும் இருக்கலாம். அல்லது அவரைவிடக் குறைந்தவராயும் இருக்கலாம். 
தரிசிக்கச் செல்பவர் ஆன்மீகப்பலம் கூடினவராயிருந்தால் அவரைக் கொண்டு சமாதி கொண்டுள்ளவர் பயன் பெறுவார். சமாதி கொண்டுள்ளவர் தரிசிக்கச் செல்பவரைவிட ஆன்மீகப் பலம் கூடினவராயிருந்தால் அவரைக் கொண்டு தரிசிக்கச் செல்பவர் பயன் பெறுவார். 
இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே “சியாரதுல் குபூர்” மண்ணறைகளைத் தரிசிப்பது “ஸுன்னத்” நல்ல வணக்கமென்று இஸ்லாம் 
கூறியுள்ளது. 
இஸ்லாம் பொதுவாக மண்ணறைகளில் உள்ளவர்களைச் சந்திப்பது பற்றிக் கூறியிருக்க நம்மில் பலர் வலீமாரின் சமாதிகளுக்கு மட்டும் சென்று அவர்களைத் தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இது மட்டுமே சியாறத் தரிசித்தல் என்றும் நம்பியுள்ளனர். அடக்கப்பட்டுள்ள சாதாரண மனிதனைத் தரிசிப்பதைவிட ஆன்மீகத்தில் சம்பூரணம் பெற்ற வலீமாரைத் தரிசிப்பது தரிசிக்கச் செல்பவனுக்குப் பயன்தருவது உண்மைதான். ஆயினும் ஆன்மீகப் பலம் குறைந்த ஒருவனை அந்தப் பலன் கூடிய ஒருவன் தரிசிக்கும் போது பலம் குறைந்தவனுக்குப் பயன் கிடைக்கும் என்பதைக் கருத்திற் கொண்டும், பிறருக்கு உதவுதல் வணக்கம் என்ற வகையிலும் அவனையும் – பலம்குறைந்தவனையும் தரிசித்தல் வேண்டும். 
ஒரு வலீ இன்னொரு வலீயின் சமாதியைத் தரிசிக்கும் போது அதிசயமான பல்வேறு நிகழ்வுகள் நிகழும். நிகழ்ந்தும் உள்ளன. அவை என்னவெனில் – தரிசிக்கப்படுபவர் தரிசிப்பவரை எந்த அளவு கவனிக்கிறார் என்பதும், தரிசிப்பவரை அவர் தனது முழுமையான ஆத்மீகம் கொண்டு நோக்குகிறார் என்பதும், தரிசிப்பவரின் எண்ணத்திற்கேற்பவும், அவனின்முயற்சிக்கேற்பவும் அவர் நோக்கப்படுகிறார் என்பதுமாகும். 
மரணித்து அடக்கம் செய்யப்படுபவர்களைத் தரிசித்தல் “ஸுன்னத்” ஆன வணக்கமாயிருப்பதுபோல் உயிரோடிருப்பவர்களில் ஒருவரை ஒருவர் சந்திப்பதும் “ஸுன்னத்” ஆன விடயமேயாகும். 
ஏனெனில் மரணித்தவர்களைத் தரிசிப்பதால் ஏற்படுகின்ற மேற்கண்ட பயன்உயிரோடிருப்பவர்களைத் தரிசிப்பதாலும் ஏற்படும். 
உயிரோடிருக்கும் ஒருவர் இன்னொருவனைச் சந்திக்கும்போது அவ்விருவருக்குமிடையில் ஆன்மீகத் தொடர்பு ஏற்படுகிறது. மேலே சொன்னதுபோல் அவ்விருவரின் மனமும் ஒன்றுக்கொன்று எதிராகும் போது ஒருவனிலுள்ள ஆன்மீகச் சுடர் மற்றவனின் மனதில் பிரதிபலிக்கிறது. 
இதனால் அவ்விருவரில் ஆன்மீகசக்தி குறைந்தவன் கூடியவனைக் கொண்டு 
பயன் பெறுவான். ஒருவனை ஒருவன் சந்திப்பதன் மூலம் இத்தகைய அரிய பயன் கிடைப்பதினால்த்தான் மக்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதலை இஸ்லாம் வரவேற்கிறது. 
வௌ்ளிக்கிழமை ஜும்அஹ் தொழுகைக்கு குறைந்தபட்சம் நாற்பது பேர்கள் ஒன்று கூடுவது கடமை என்றும், ஐங்காலத் தொழுகை கூட்டாக நடத்துவது “ஸுன்னத்” என்றும், “ஹஜ்” உடைய காலத்தில் மக்கஹ்வில் உள்ள “அறபஹ்” என்ற இடத்தில் இலட்சக்கணக்கானோர் ஒன்று கூடுவதும், தவாப்,ஸயீ என்ற வணக்கங்கள் செய்யும்போது பெருந்திரளானோர் சேர்வதும் மேற்கண்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு மார்க்கமாக்கப்பட்டவையேயாகும். 
அஷ்ஷெய்கு உத்மான் திம்யாதீ றஹ் அவர்கள் எல்லாக் காலங்களிலும் “தவாப்” என்ற வணக்கம் செய்வார்கள். ஆயினும் அந்த வணக்கத்தை “ஹஜ்” உடைய காலத்தில் செய்வதற்கே பெரிதும் விரும்புவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது சனம் குறைந்த சாதாரண காலத்தில் “தவாப்” செய்யும்போது எனதுள்ளத்தில் கிடைக்கின்ற “நூர்” பிரகாசத்தை விடக் கூடுதலான பிரகாசம் சன நெரிசலான ஹஜ் உடைய காலத்திலேயே கிடைக்கிறது என்று பதில் கூறினார்கள். 
இதற்குக் காரணம் மனிதர்கள் பெருங்கூட்டமாக ஒன்று கூடும்போது அவர்களில் ஆன்மீகப் பலம் குறைந்தவர்கள் கூடுதலானவர்களைக் கொண்டு பயன் பெறுவதும், ஆன்மீகப் பலம் கூடினவர்கள் குறைந்தவர்களுக்குப் பலன் கொடுப்பதுமேயாகும். இப்பாக்கியம் மக்கள் ஒன்று கூடும் சமயமே கிடைக்கும். 
எனவே “சியாறதுல் குபூர்” மண்ணறைகளைத் தரிசிப்பதில் மேற்கண்ட பயன் இருப்பதினால்தான் நபீ ஸல் அவர்கள் மற்றவர்களின் மண்ணறைக்குச் சென்று அவர்களைத் தரிசித்து அவர்களுக்கு 
أَلسَّلاَمُ عَلَيْكُمْ يَادَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَاللهُ بِِكُمْ لاَ حِقُوْنَ 
அஸ்ஸலாமு அலைக்கும் யாதாற கவ்மின் முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன். 
பொருள் – விசுவாசிகளான கூட்டத்தின் வீட்டவர்களே உங்களுக்கு ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுடன் சேர்ந்து கொள்வோம். 
மண்ணறைகளைத் தரிசிப்பதில் அதிக பயன் இருப்பதினால்தான் மண்ணறைகளைத் தரிசியுங்கள் என்று நபீ ஸல் அவர்கள் மக்களைத் தூண்டினார்கள். 
كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُوْرِ فُزُوْرُوْهَا الْاَنْ فَاِنَّهَا تُذَ كِّرُكُمُ الآخِرَةْ. 
மண்ணறைகளைத் தரிசிக்க வேண்டாமென்று நான் உங்களைத் தடுத்திருந்தேன். ஆனால் இப்போது நீங்கள் தரிசியுங்கள். ஏனெனில் அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று நபீ ஸல் அவர்கள் கூறினார்கள். 
வஹ்ஹாபிகள் சொல்வதுபோல் மண்ணறைகளைத் தரிசிப்பது “இபாததுல் குபூர்” மண்ணறை வணக்கமாயிருந்தால் நபீ ஸல் அவர்கள் எவரின் மண்ணறையையும் தரிசித்திருக்கவுமாட்டார்கள் தரிசிக்குமாறு மற்றவர்களைத் தூண்டியிருக்கவுமாட்டார்கள். அது மட்டுமன்று, மண்ணறையிலுள்ளவர்களுக்குச் சொல்லப்படும் ஸலாமை அவர்கள் செவிமடுக்கமாட்டார்கள் என்றிருந்தால் நபீ (ஸல்) அவர்கள் அவ்வாறு ஸலாம் சொல்லியிருக்கவுமாட்டார்கள். 
நபீ ஸல் அவர்கள் மண்ணறைகளைத் தரிசித்தும், அதைத் தரிசிக்குமாறு மற்றவர்களைத் தூண்டியும், அவர்களுக்கு ஸலாம் சொல்லியுமிருக்க நீங்கள் இதையெல்லாம் ஏன் மறுக்கிறீர்கள்? தர்ஹா பக்கம் போகிறீர்களில்லையே? கப்றுகளை சியாறத் செய்பவர்களைக் கப்று வணங்கிகள் என்று சொல்கிறீர்களே என்று வஹ்ஹாபிகளிடம் கேட்டால் நாங்கள் கப்றுகளைத் தரிசிப்பதை மறுக்கவில்லை. ஆனால் அங்கு நடைபெறுகின்ற அனாச்சாரங்களையும், பித்அத்துக்களையுமே மறுக்கிறோம் என்று சொல்கிறார்கள். 
கப்றின் மீது போர்வை போடுதல், சந்தணம் பூசுதல், மாலை போடுதல், விளக்கெரித்தல், கப்றை முத்தமிடுதல், சமாதி கொண்டுள்ளவர்களிடம் நேரடியாக உதவி தேடுதல், ஊதுபத்தி சாம்புறாணி எரித்தல் போன்றவற்றையே வஹ்ஹாபிகள் அனாச்சாரங்கள். பித்அத்துகள் என்று கூறுகிறார்கள். 
திருக்குர்ஆனையும், நபீமொழிகளையும் தூய மனதுடன் ஆழமாக ஆராய்ந்தால் வஹ்ஹாபிகள் அனாச்சாரங்கள் என்று கூறுகின்ற எல்லாமே நல்ல விடயங்கள் என்பதும், அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டு என்பதும் தெளிவாகும். அவ்வாதாரங்களை இந்த இடத்தில் விபரமாக நான் எழுதவில்லை. ஆயினும் ஒரேயொரு திருக்குர்ஆன் வசனத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன். இவ்வசனம் ஒன்றே வஹ்ஹாபிகளின் வாயை அடைப்பதற்குப் போதுமென்று நம்புகிறேன். 
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللهِ فَاِنَّهَامِنَ تَقْوَى الْقُلُوْبِ 
எவன் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறானோ அது அவனுள்ளத்தின் “தக்வா” இறையச்சமாகும். 
– திருக்குர்ஆன் – 
எந்தவொரு படைப்பு அல்லாஹ்வை நினைவூட்டுகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் எனப்படும். 
இது “அவாமுன்னாஸ்” என்னும் சாமானிய மனிதர்களுக்குப் பொருத்தமான கருத்து. ஆனால் இறைஞானிகளிடம் படைப்பு எதுவாயினும் அது அல்லாஹ்வை நினைவுபடுத்தும் சின்னமேயாகும். 
وَفِيْ كُلِّ شَيْئٍ لَهُ آيَةٌ تَدُلُّ عَلَى اَنَّهُ وَاحِدٌ 
ஒவ்வொரு வஸ்தும் அவன் ஒருவனென்று காட்டுகிறது. 
=============================================================
சியாரதுல் குபூர் 
மண்ணறைகளைத் தரிசித்தல். 
​தொடர் – 01 

சங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ

மேற்கண்ட தலைப்புத் தொடர்பான விபரங்களை நான் எழுதக் காரணம் என்னவெனில். வஹ்ஹாபிகள் “சியாரதுல் குபூர்” “இபாததுல் குபூர்” மண்ணறைகளை வணங்குதலென்று கூறிவருவதும், மண்ணறைகளைத் தரிசிக்க வேண்டாமென்று பிரச்சாரம் செய்து வருவதுமேயாகும்.
 மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு நபீ ஸல் அவர்கள் “சியாரதுல் குபூர்” என்று பெயர் சொல்லியிருக்க வஹ்ஹாபிகளோ அதற்கு “இபாததுல் குபூர்” மண்ணறைகளை வணங்குதலென்று பெயர் சொல்வதிலிருந்து அவர்கள் நபீ ஸல் அவர்களைக் கூடப் பிழை கண்டுள்ளார்கள் என்பதும் மண்ணறைகளைத் தரிசிப்பவர்களை “கப்று” வணங்கிகளென்று அவர்கள் சொல்வதிலிருந்து நபீ ஸல் அவர்களையும் “கப்று” வணங்கி என்று சொல்கிறார்கள் என்பதும் விளங்குகிறதல்லவா?
 எனவே, இக்கட்டுரையில் மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும் ஆதாரங்கள் எழுதுவதுடன் அந்த வழிகேடர்கள் சொல்வதுபோல் அது எந்த வகையிலும் “கப்று” வணக்கமாகாதென்பதையும், மேலும் மண்ணறைகளைத் தரிசித்தல் தொடர்பான ஏனைய விபரங்களையும் எழுதுகிறேன்.
மண்ணறைகளைத் தரிசித்தல் தொடர்பான ஆதாரங்களையும், விளக்கங்களையும் எழுதுமுன் “சியாரதுல் குபூர்” என்ற வசனம் தருகின்ற வெளியரங்கமான, உள்ளரங்கமான கருத்தையும், தத்துவத்தையும் எழுதுகிறேன்.இதைத் தொடர்ந்து மண்ணறைகளைத் தரிசிப்பதன் மூலம் கிடைக்கின்ற பலாபலன்களையும், ஆன்மீக நற்பேறையும் அவ்லியாக்களின் விளக்கத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதுகிறேன். 
 சியாறதுல் குபூர் இந்த வசனத்தில் இரண்டு சொற்கள் உள்ளன. ஒன்று சியாறத் மற்றது குபூர்.சியாறத் என்ற சொல்லுக்கு சந்தித்தல், தரிசித்தல் என்று பொருள்வரும்.குபூர் என்ற சொல்லுக்குச் சுருக்கமான பொருள் புதைகுழி என்பதாகும். இது “மையித்” பிரேதத்தைப் புதைக்கும் குழியைக் குறிக்கும். இதை மண்ணறை என்றும் சொல்வர். 
முஸ்லிம்கள் இதற்கு “கப்று” என்ற அறபுச் சொல்லையே பயன்படுத்துவர். “சியாறதுல் குபூர்” என்ற வசனத்துக்கு புதைகுழிகளை, பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைத் தரிசித்தல் அல்லது சந்தித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த வசனம் நபீ ஸல் அவர்களின் அருள் மொழிகளில் பல இடங்களில் வந்துள்ளது.இந்த வசனம் புதைகுழிகளைச் சந்திப்பதைக் குறிக்குமேயன்றி புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்திப்பதைக் குறிக்காது. ஆயினும் இதே வசனத்துக்கு புதை குழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று பொருள் கொள்வதற்கும் இடமுண்டு. புதை குழிகளைச் சந்திப்பதும், அங்குள்ளவர்களைச் சந்திப்பதும் சந்திக்கச் செல்பவனைப் பொறுத்த விடயமாகும்.அவன் அங்கு அடக்கப்பட்டுள்ளவரைச் சந்திக்குமளவு மனவலிமையும், ஆன்மீகப் பலமும் பெற்றவனாயிருந்தால் அவனைப் பொறுத்து இந்த வசனத்துக்கு புதை குழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று பொருள் கொள்ளலாம். சந்திப்பவன் அங்கு அடக்கப்பட்டவரைச் சந்திக்குமளவு ஆன்மீக சக்தி பெறாதவனாயிருந்தால் அவனைப் பொறுத்து இந்த வசனத்துக்கு புதை குழிகளைச் சந்தித்தல் என்று பொருள் கொள்ளலாம். நபீ ஸல் அவர்கள் மேற்கண்ட இருவரையும் கருத்திற் கொண்டுதான் இந்த வசனத்தைக் கொண்டு வந்திருக்கலாமென்று கருத இடமுண்டு.எதைச் சந்தித்தாலும் சந்திப்பில் பொதுவாக நன்மையுண்டு என்பது தெளிவாகிறது.இந்த வசனம் நபீ ஸல் அவர்களால் 
زياَرَةُ اَهْلِ الْقُبُوْرِ 
புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று சொல்லப்பட்டிருந்தால் ஆன்மீக வலிமை பெறாத சாமானிய மக்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டாமற் போய்விடுமென்பதை அறிந்ததினால்தான் உலக மக்களின் அருளான நபீ ஸல் அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை.இங்கு இன்னுமொரு உண்மை மறைந்திருப்பது அறிஞர்களுக்கு மறைவானதல்ல. அதாவது புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்திக்காவிட்டாலும்கூட அக் குழிகளைச் சந்திப்பது மட்டுமே ஒரு வணக்கமென்றும், அதைக் கொண்டு சந்திப்பவனுக்கு நன்மையுண்டு, ஆன்மீகப் பயனும் கிடைக்குமென்றும் விளங்குகிறது. 
ஞானிகள் கூறும் ஆன்மீகப் பயன் 
அஷ்ஷெய்கு அபூஉத்மான் அல்மக்ரிபீ றஹ் அவர்கள் சொல்லத் தான் கேட்டதாக அஸ்ஸெய்யித் அபுல் மவாஹிப் அஷ்ஷாதுலிய்யி றஹ் அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதன் ஒரு வலீயின் “கப்று” சமாதியைத் தரிசித்தால் அங்கு சமாதி கொண்டுள்ள வலீ தரிசிப்பவரை நன்றாக அறிந்து கொள்கிறார். தரிசிப்பவர் அவருக்கு ஸலாம் சொன்னால் அவர் அதற்கு பதில் கூறுகிறார். தரிசிப்பவர் அங்கு அல்லாஹ்வை “திக்று” நினைத்தால் அந்த வலீயும் இவருடன் சேர்ந்து அல்லாஹ்வை நினைக்கிறார். குறிப்பாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் அந்த வலீ எழுந்திருந்து இவருடன் சேர்ந்து “திக்று” செய்கிறார். இறை ஞானிகளின் உள்ளங்கள் விளக்கமின்றி எதையும் அறிவிக்கமாட்டா. 
வலீமார் தமது சமாதிகளில் உயிரோடிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த விடயமே. அவர்கள் மரணிப்பதானது பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்குக் குடிபோதல் போன்றதாகும். அவர்கள் உயிருடன் இருந்தபோது எவ்வாறு சங்கையுடனும், கண்ணியத்துடனும் இருந்தார்களோ அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னரும் இருக்கிறார்கள். அவர்கள் உலகில் வாழ்ந்த போது மற்றவர்கள் அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்தார்களோ அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். 
ஒரு வலீ இறைநேசர் மரணித்துவிட்டால் அவருக்காக எல்லா நபீமார்களினதும், வலீமார்களினதும் “அர்வாஹ்” உயிர்கள் ஜனாஸஹ் தொழுகை தொழுகின்றன.வலீமார்களிற் சிலர் தாம் உயிரோடிருந்த காலத்தில் தமது “முரீத்” சிஷ்யர்களுக்கு உதவி உபகாரம் செய்ததை விடத்தாம் மரணித்த பின்னர் அவர்களுக்குக் கூடுதலான உதவி உபகாரம் செய்வார்கள். மரணித்தால் அவர்களின் வலிமை கூடுமேயன்றிக் குறையாது.
மனிதர்களிற் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவர்களாவர். அல்லாஹ் அவர்களை எந்தவொரு வாஸிதஹ் – ஊடாக உதவியுமின்றித்தானே ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறான். மனிதர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அல்லாஹ் அவர்களைத் தனது வலீ – நேசர்கள் மூலம் ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறான். அந்த வலீ மரணித்தவராயிருந்தாலும் சரியே. அவர் தனது மண்ணறையில் இருந்து கொண்டே தனது சிஷ்யனை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது சிஷ்யனுடன் உரையாடுகிறார். அவனும் அதைக் கேட்கிறான். மனிதர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் எந்த ஓர் ஊடக உதவியுமின்றி நபீ ஸல் அவர்களே நேரடியாகக் கண்காணித்து ஆன்மீகத்தில் வளர்த்து வருகிறார்கள். இதற்குக் காரணம் நபீ ஸல் அவர்கள் மீது அவர்கள் அதிகமாக ஸலவாத் சொல்வதேயாகும்.
​தொடரும்…
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments