“தரீகா”வின் “றூஹ்” உயிர் எது என்று தெரியாத “தரீகா”வாதிகள்

September 13, 2015
ஒரு “ஷெய்கு”
ஞான குருவிடம் “பைஅத்” என்ற ஞானதீட்சை பெற்று அவரின் “முரீத்” ஆன்மீக மாணவனாக வாழ விரும்பும் ஒருவர் முதலில் தனக்கு விருப்பமான குருவை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
“குரு”வாக தெரிவு செய்யப்படுபவர் (ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத்) முதலான நான்கு வகை அறிவிலும் “கமாலிய்யத்” பெற்றவராக இருத்தல் வேண்டும் – நிறைந்த அறிவுள்ளராக இருத்தல் வேண்டும்.
“முரீத்” சிஷ்யனின் ஆன்மீக நாடி பிடித்து அவனின் உள நோய்களுக்கான மருந்து வளங்குபவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.
குருமாரில் இருவகையுண்டு. ஒருவர் “விலாயத்” என்ற ஒலித்தனம் பெற்றவராகவும், ஆன்மீகத்தை சீர் குலைக்கும் நோய்களுக்கேற்ற மருந்துகள் வழங்கி தனது சிஷ்யனை பக்குவப்படுத்துவராகவும் இருப்பார்.
இவர் “ஷெய்குத்
தர்பியத்” شيخ التربية  சிஷ்யனை
வளர்க்கும் குரு என்று அழைக்கப்படுவார்.

மற்றவர் “விலாயத்” என்ற ஒலித்தனம் பெறாதவராயினும் குருமார் பரம்பரையில் வாழையடி வாழையாகத் தோன்றினவராக இருப்பார்.
இவர் “ஷெய்குல்
பறகத்” شيخ البركة  அருள்
பெறுவதற்கான குரு என்று அழைக்கப்படுவார்.
இக்காலத்தைப் பொறுத்த வரையில் முந்தினவகை குருமார்களில் ஒருவரைக் கூட காண்பது குதிரைக் கொம்பேயாகும். இன்னோர் உலகில் இலை மறை காய் போலவே வாழ்ந்து வருவார்கள். கண்டு பிடிப்பது கடினம்.
இரண்டாம் வகை குருமார்களோ அவர்களை எங்கும் காணலாம். அவர்கள் மலைகால ஈக்கள் போன்றவர்கள்.
யார் எவரைத் தெரிவுசெய்தாலும் முதிரை மரத்திற்கும், முருங்கை மரத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளங்கித் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
“தரீகா”வின் உயிர் – றூஹ் – இறையியலேயாகும். இவ்வியல் தெரியாத ஒருவரின் கைபற்றி “பைஅத்” செய்து கொண்டவன் அந்தகனின் கைபற்றி வழி கெட்டவன் போன்றவனே! இறுதியில் இருவரும் “ழலாலத்” என்ற வழிகேட்டில் விழுந்து விடுவான்.
“லாயிலாக இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவின் அந்தரங்கம், ரகசியம் தெரியாத எவரும் “பைஅத்” வழங்கும் குருவாக இருப்பதற்கு தகுதியுள்ளவர் அல்லர்.
குறிப்பாக “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தெரியாத ஒருவன் வழிகாட்டியாக – “முர்ஷித்” – ஆக இருப்பதற்கு மண்ணளவும் தகுதியுள்ளவர் அல்லர். இத்தகையோரிடம் “பைஅத்” பெறுவதை விட பெறாமலிருப்பதே சிறந்ததாகும்.
இன்று உலகில் வாழ்பவர்களிற் பலர் – அவாமுன்னாஸ் – சாதாரண மக்கள் – உடைகளையும், உடற்பருமனையும், அடர்ந்த தாடியையும், – அஸா – கோலையும் கண்டு ஏமாறிவிடுகிறார்கள்.
ஒருவர் வெளிநாட்டில் இருந்து தன்னை “ஷெய்கு“ ஞானகுரு என்று அறிமுகஞ் செய்து கொண்டு விமான நிலையம் வந்தால் போதும். செல்வந்தர்களும், செல்வாக்குள்ளவர்களும் விமான நிலையத்தை மொய்த்து விடுவார்கள். குருமகான் அவர்கள் குண்டு துளைக்காத வாகனத்தில் கோடீஸ்வரண் ஒருவரின் மாளிகைக்கு அழைத்து வரப்படுவர்.
அந்த மகானை ஏழைகளோ உலமாஉகளோ சந்திக்க வாய்ப்பிருக்காது. கதவு திறக்காது. ஆலிம் அவர்களும், ஹஸ்றத் அவர்களும் மழையில் நனைந்தும், வெயிலில் வெந்தும் கோடீஸ்வரனின் கோட்டையை சுற்றிக் கொண்டிருப்பார்கள். கண்ட பலனொன்றுமில்லை. கண்ணே றஹுமானே!
வெளிநாடுகளில் இருந்து வருகின்ற ஷெய்குமார்கள் ஒருபுறமிருக்கட்டும். நமது நாட்டில் வாழ்கின்ற ஷெய்குமார்கள் என்ன செய்கிறார்கள்?
வஹ்ஹாபிகள் வானைத் தொடுமளவு உயரப்பறந்து வஹ்ஹாபிய நச்சுக் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இறைஞானம் தெரியாத இன்னொரு கூட்டம் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “குப்ர்” என்றும், “ஷிர்க்” என்றும் கழுதை சத்தமிடுகிறது. இதே நேரம் இந்நாட்டில் வாழும் பல குருமார்கள் வீட்டுக்கள் முடங்கிக் கிடக்கின்றார்கள். அவர்கள் ஒன்றோ வஹ்ஹாபிகளுக்கும், கழுதைகளுக்கும் பகிரங்க மறுப்புக் கொடுக்க வேண்டும். அல்லது தமக்கும், குறித்த ஞானத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிக்கை விடவேண்டும்.
“ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையையும், இறை ஞானத்தையும் கட்டிக் காத்து வளர்க்க வேண்டிய ஷெய்குமார் – குருமார் – பற்றை மறைவில் பதுங்கிக் கொண்டிருப்பது நியாயமானதல்ல.
இவர்கள் போல் பெருமானார் “ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” அவர்களின் தோழர்களும், அவ்லியாஉகளும் பற்றை மறைவில் பதுங்கி இருந்தால் இன்று உலகில் ஓர் இஸ்லாமியன் கூட இருக்க முடியாது.
எனவே, “தரீகா”
வாதிகள் அனைவரும் அதன் “றூஹ்” உயிர் எது என்பதை தெளிவாக அறிந்து அவ்வழியிற் செவ்வனே செல்ல வேண்டும். அவ்வுயிருக்கு மேலும் உயிரூட்ட முன்வரவும் வேண்டும்.
இலங்கை நாட்டிலுள்ள “பைஅத்” வழங்கும் ஷெய்குமார்களும், அவர்களின் கலீபாக்களும், “முகத்தம்”களும், மற்றும் “தரீகா”வின் ஆதரவாளர்களான சங்கைமிகு உலமாஉகளும் “தரீகா”க்களின் வளர்ச்சிக்காக அயராது உழைக்க வேண்டும் என்று அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 
மௌலவீ துன்னூன் அல்மிஸ்ரி அல் – அம்ஜதீ

You may also like

Leave a Comment