Tuesday, March 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்

அஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்

-சங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-

நங்கூரங்கள்

“நீரின் மேல் நிற்கும் பூமி அசைந்து விடாமலிருக்க அதன் மேல் மலைகளை முளைகளாக அமைத்துள்ளோம்” (அல்குர்ஆன்)
நீரில் மிதக்கும் கப்பல் அசைந்து விடாமலிருக்க நங்கூரமிட்டு அதை நிலை பெறச் செய்வது போல் நீரின் மேல் படைக்கப்பட்டுள்ள பூமி அசைந்து விடாமலிருக்க ஆங்காங்கே மலைகளை நிறுவி அதை நிலை பெறச் செய்துள்ளான் இறைவன்.
“ஜிபால்” மலைகள் என்ற சொல், பமியில் உள்ள இமயமலை, உஹதுமலை போன்ற கல்லினாலான மலைகளை எடுத்துக் கொள்ளும் இது நீரின் மேல் நீச்சலடிக்கும் அறஞர்களின் கருத்து.
“மலைகள்” என்ற சொல் ஆத்மார்த்த ஞானிகளான அவ்லியாக்களை எடுத்துக் கொள்ளும். இது நீரினுள்ளே குழியோடும் மெய்ஞ்ஞானிகளின் கூற்று.

இப்பரந்த பூமியில் ஆங்காங்கே அவ்லியாக்கள் இருப்பதினால்தான் பூமி ஆட்ட அசைவின்றி நிலைபெற்று நிற்கின்றதாம்.

மலைகளில் சிறியது, பெரியதென்று இருப்பது போல் அவ்லியாக்களிலும் பலதரத்தையு​டையோர் இருக்கின்றார்கள்.
கேடயங்கள்
“பால் சுவைக்கும் பச்சிளங்குழந்தைகளும், பரந்த புற்றரை மேயும் கால் நடைகளும், இறைவனை இடையறாது ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கும். நல்லடியார்களும் இப்பூமியில் இல்லையாயின் உங்கள் மீது வேதனை நிச்சயமாக்க கொட்டப்படும்.
தாயின் மடியிலிருந்து பால் சுவைக்கும் பச்சிளம் குழவிகள் அப்பாவிகள், பாவமே அறியாதவர்கள் மனம் தூய்மையானவர்கள், களக்கமற்ற உள்ள முடையவர்கள். இதேபோல் புற்றரைகளில் மேயும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளும் பாவம் அறியாதவைகள்.
இன்னுமிதேபோல், அல்லாஹ்வை அறிந்து அவனின் நினைவிலேயே இலயித்து உலகையும, உலகிலுள்ளவற்றையும் மறந்து வாழும் இறைஞானிகளானஅவ்லியாக்கள் பரிசுத்தமானவர்கள், தூய்மையானவர்கள்.
இம்மூன்று வகுப்பாரும் இப்பூமியில் வாழ்வதினால்தான் இறைவனை மறந்து அநீதி, அட்டகாசம், கொலை, கொள்ளை,சூது, விபச்சாரம் போன்ற பாவச் செயல்களைப் புரிபவர்கள் இறை தண்டனையில் நின்றும் தப்பித்துக் கொள்கிறார்கள். நல்லோரொருவருளரேலவர் பொருட்டெல்லோருர்க்கும் பெய்யும் மழை” என்பது போல் மேற்கூறப்பட்ட மூன்று வகுப்பாரின் பொருட்டினால் தான் பாவிகள் கூட ஒரு முடல் தண்ணீரேனும் குடிக்க முடிகிறது.
நாடாளும் அமைச்சர்கள்
அல்லாஹ் ஒரு நாட்டின் ஜனாதிபதி போன்றவன், நாயகம் (ஸல்) அவர்கள் அந்நாட்டின் பிரதமர் போன்றவர்கள். அவ்லியாக்கள் அந்நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் போன்றவர்கள். ஏனைய மனிதர்கள் அந்நாட்டின் பிரஜைகள் போன்றவர்கள். மூடர்களான குதர்க்கவாதிகளில் யார் என்ன சொன்னாலும் இதுதான் மறுக்க முடியாத உண்மை!
அமைச்சர்கள அனைவரும் அமைச்சர்கள் என்ற வகையில் சமமானவர்களாயிருந்தாலும், அவர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அமைச்சுத்துறையைப் பொறுத்து தரம் கூடியவர்களாகவும், குறைந்தவர்களாகவும் இருப்பார்கள். நிதியமைச்சரும் கைத்தொழில் அமைச்சரும் பதவி அந்தஸ்தில் சமமானவர்களாக இருந்தாலும், அவர்களின் அமைச்சின் பொறுப்பைப் பொறுத்து ,அவ்விருவருக்கு மிடையில் வேறுபாடுகள் இருப்பது உண்மை.
இதேபோல் அவ்லியாக்கள் அனைவரும் அவனது ஆட்சி நிர்வாகத்தைக் கவனிக்கும்அமைச்சர்களாக இருந்தாலும் கூட அவர்களில் சிலர் மறுசிலரை விட மேம்பட்டவர்களாகவும், பொறுப்புக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள்.
அல்லாஹ்வினால் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கப்பட்ட அமைச்சர்களில் இரண்டு “தீன்” கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
ஒரு “தீன்” பக்தாதில் வாழும் முஹ்யித்தீன் ஆவார்கள். மற்ற “தீன்” அஜ்மீரில்வாழும் முயீனுத்தீன் ஆவார்கள்.
பக்தாத் அரசர் “குத்புல் அக்தாப்” என்றும் அஜ்மீர் அரசர் “குத்புல் ஹிந்து” பிசித்தி பெற்றுள்ளார்கள்.
வைத்திய நிபுணர்கள்
அவ்லியாக்கள் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மட்டுமின்றி, மனிதர்களின் உடலைப் பாதிக்கும் வியாதிகளைக் கருவிகள் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கும் “டொக்டர்”கள் போல் மனிதர்களின் உள்ளத்தைப் பாதிக்கும் பெருமை, பொறாமை, கோபம், ஆணவம், மமதை போன்ற பெருவியாதிகளை ஞானப் பார்வையின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ஆன்மீக மருந்து வழங்கும் ஆன்மீக வைத்தியர்களாகவும் இருக்கிறார்கள்.
டொக்டர்களில் ஒவ்வொரு நோய்க்கும் “ஸ்பெஷலிஸ்ட்” இருப்பது போல், அவ்லியாக்களிலும் மனிதர்களின் உடலிலேற்படுகின்ற நோயைத் தீர்க்கும் “ஸ்பெஷலிஸ்டு” கள் இருக்கிறார்கள்.
எல்லா நோய்களுக்கும் பொதுவான டொக்டர் இருப்பது போல், பக்தாத் அரசர் “குத்புல் அக்தாப்” முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் எல்லாவிதமான நோய்களையும் கண்டறிந்து மருந்து செய்யும் டொக்டராகவும், மனிதர்களுக்கு ஏற்படுகின்ற எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் பேரரசராகவும் விளங்குகிறார்கள்.
தமிழ் நாடு, ஏர்வாடி நகரில் வாழும் ஏந்தல் இப்றாஹீம் ஷஹீத் வலியுல்லாஹ் அவர்கள் பைத்தியத்தைக்குணப்படுத்தும் “ஸ்பெஷலிஸ்ட்” ஆகவும்.,
தமிழ் நாடு நாகூர் நகரில் வாழும் காரணக் கடல் “கன்ஜேஷவாயி” ஷாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்கள் சூனியம், பேய் போன்றவற்றை வேருடன் பிடுங்கி எறியும் “ஸ்பெஷலிஸ்ட்” ஆகவும் விளங்குகிறார்கள்.
பொருள் வழங்கும் வள்ளல்
அஜ்மீர் அரசர் “கரீபே நவாஸ்”குத்புல் ஹிந்து ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி (ரலி) அவர்கள் எவ்விதமான நோய்களையும்குணப்படுத்தும் நிபுணராகவும், மனிதர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வைப்பவர்களாவும், குறிப்பாக உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க உறைவிடமின்றி வறுமையால் வாடும் வறியவர்களுக்கு வாரி வழங்கும் அவர்களைக் கோடீஸ்வரர் களாக்கும் குணமுடைய கொடை வள்ளலாகவும் திகழ்கிறார்கள்.
அஜ்மீர் நகரிலுள்ள அவர்களின் சமாதியை தரிசிக்க வருபவர்களில் அநேகர் கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என்பது குறிப்பிடத் தக்கது.
பிறப்பு
அஜ்மீர் அரசர் ஹாஜா நாயகம் (ரலி) அவர்கள் குறாஸான் நாட்டின் சன்ஜர் எனும் மாவட்டத்தில் ஜிஸ்த் எனும் ஊரில் 537ம் ஆண்டு திங்கட்கிழமை பிறந்தார்கள். அவர்கள் தோன்றி இன்று(ஹிஜ்ரி-1433) சுமார் 896 வருடங்களாகின்றன.
தந்தையின் பெயர் கியாதுத்தீன் அஹ்மத் (றழி)
தாயின் பெயர் மாஹே நூர் (றழி)
ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழித் தோன்றல்களில் ஒருவராவார்கள்.
“மீர்ஆதுல் அஸ்றார்” என்ற நூலில் கூறப்பட்ட படி அவர்களின் வம்சவழி பின்வருமாறு’
ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி (றழி)
ஹாஜா கியாதுத்தீன் (றழி)
ஹாஜா நஜ்முத்தீன் (றழி)
செய்யிது அப்துல் அஸீஸ் (றழி)
செய்யிது இப்றாஹீம் (றழி)
செய்யிது இமாம் மூஸல் காழிம் (றழி)
செய்யிது இமாம் ஜஃபர் சாதிக் (றழி)
செய்யிது இமாம் முஹம்மது பாகர் (றழி)
செய்யிது இமாம் ஜெய்னு லாப்தீன் (றழி)
செய்யிது இமாம் ஹுஸைன் (றழி)
செய்யிது இமாம் அலி (றழி)
குராஸான் நாட்டில் பிறந்து வளர்ந்த ஹாஜா நாயகம் (ரலி) அவர்களுக்கு பதினைந்து வயதான பொழுது தந்தை கியாதுத்தீன் (றழி)அவர்கள் இறையடி சேர்ந்து விட்டார்கள்.
தந்தைக்கு தோட்டம் ஒன்றும், காற்றாடி தண்ணீர் இயந்திரம் ஒன்றும் இருந்தது. தந்தையின் மறைவுக்குப் பின் அவ்விரண்டும் ஹாஜா நாயகம் அவர்களுக்குக் கிடைத்தது.
ஞானவித்திட்ட கந்தூசி
ஒரு நாள் ஹாஜா நாயகம் அவர்கள் தோட்டத்திலுள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சமயம் கந்தையான கிழிந்த ஆடைகளுடன், அடர்ந்த தலை முடி தாடியுடன் மஸ்த்தான் போன்ற ஒருவர் அங்கு வந்தார்.
அவரைக் கண்ட 15 வயதுடைய ஹாஜா நாயகம் (றழி)அவர்கள் அவரண்டை சென்று, அவர்களின் கரங்களை முத்தமிட்டு, அவரை வரவேற்று உபசரித்த, தோட்டத்திலுள்ள மர நிழலில் அமரச் செய்து குசலம் விசாரித்தார்கள். அவரின் பெயர் இப்றாஹீம் கந்தூசிஎன்பதை அவர் மூலம் அறிந்து கொண்ட ஹாஜா நாயகம் (றழி)அவர்கள் அன்னாருக்காக திராட்சைப் பழம் கொடுத்து கௌரவித்தார்கள்.
திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு முடிந்த செய்யிது இப்றாஹீம் கந்தூசி அவர்கள் தனது சட்டைப் பைக்குள்ளிருந்து எள்ளினால் செய்யப்பட்ட ரொட்டித் துண்டொன்றை எடுத்து தனது உமிழ் நீரில் அதை நனைத்து ஹாஜா நாயகத்திடம் கொடுத்து சாப்பிடுமாறு பணித்தார்கள்.
அந்த ரொட்டித் துண்டைச் சாப்பிட்ட ஹாஜா நாயகத்தின் உள்ளத்தில் இறை ஞானம் பெருக்கெடுத்தோட ஆரம்பமாயிற்று, அல்லாஹ்வின் மீது பேரின்பக் காதல் பொங்கலாயிற்று, இறைஞான ஒளியால் அவர்களின் மனம் நிரம்பிற்று. உலகாசைகள் யாவும் அவரக்ளின் உள்ளத்தை விட்டும் ஒரு மித்து ஓடிற்று!
தோட்டத்தையும் மற்றவைகளையும் விற்றுவிட்டு அதனால் கிடைத்த பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்து விட்டு ரஷ்யாவிலுள்ள “புஹாறா” நகரை நோக்கிப் புறப்பட்டார்கள்.
அங்கு சில காலம் தங்கி ஹுஸாமுத்தீன் புகாரீ (ரஹ்) அவரிகளிடம் குர்ஆன் ஓதக்கற்று, அதை மனனமும் செய்து கொண்டதுடன், மார்க்க கல்வியையும் கற்றுக் கொண்டு ஈராக் நாட்டுக்கு பிரயாணமானார்கள்.
ஞான குருவின் சந்திப்பு
ஈராக்கை வந்தடைந்த நாயகமவர்கள் அங்குள்ளவர்களிடம் “இங்கே கறாமத் அற்புதம் நிகழ்த்தக்கூடிய மகான்கள் யாரும் இருக்கிறார்களா?” என்று வினவினார்கள்.
அப்போது அங்குள்ளவர்கள் “ஹாஜா உஸ்மான் ஹாறூனி (றழி)என்ற ஒரு மகானைப் பற்றிக் கூறினார்கள். ஹாஜா உஸ்மான் ஹறூனி(றழி) அவர்களோ தங்களுடைய வணக்கத்தலத்தில் இறைவனின் “முறாகபா முஷாஹதா” எனும் மெய்ஞ்ஞான நிஷ்டை நிலையில் லயித்துப்போயிருந்தார்கள்.
ஹாஜா நாயகம் அங்கு சென்ற போது அந்த மகான் அவரது வணக்கத்தலத்தில்இருக்கவில்லை. பக்கத்திலிருந்த ஹஸ்ரத் ஜுனைதுல் பக்தாதி(றழி) அவர்களின் பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக சென்றிருந்தார்கள். அங்கு சென்று அவர்களைக் கண்டு சலாமுரைத்து அன்னாரின் பொற்பாதம் பணிந்து நின்றார்கள் ஹாஜா நாயகம் அவர்கள். அந்நேரம் அம்மகானுக்கு 52 வயதாக இருந்தது.
ஹாஜா நாயகத்தைக் கண்ட மகான் உஸ்மான் ஹாறூனி அவர்கள் ஹாஜாவின் ஞானக் கண்ணைத் திறக்கும் பணியில் கவன மெடுத்தார்கள். பல்வேறு வணக்க வழிபாடுகளில் நடை பழக்கினார்கள்.
நாற்பது நாட்கள் உருண்டோடின. நாற்பத்தி ஓராம் நாள் ஹாஜா நாயகத்தை தன்னருகே அழைத்து உட்காரச் செய்த உஸ்மான் ஹாறூனி அவர்கள் “வானத்தைப் பாருங்கள்” என்று ஹாஜா நாயகத்தைப் பணித்தார்கள். ஹாஜா வானத்தைப் பார்த்தார்கள். பின்னர் கண்களை மூடுங்கள் என்றார்கள். ஹாஜா நாயகமும் தமது கண்விழிகளை மூடினார்கள். பின்னர் கண்களைத் திறக்கச் சொன்னார்கள். ஹாஜா நாயகம் தமது விழிகளை மலரச் செய்தார்கள்.
கண்திறந்த ஹாஜா நாயகம் அவர்களிடம் மகான் உஸ்மான் ஹாறூனி அவர்கள் “என்ன தெரிந்தது” என வினவிய போது ஹாஜா அவர்கள், ஆதம் (அலை) அவர்கள் முதல் இன்று நாள் வரை தோன்றிய சர்வ சிருஷ்டிகளையும், இன்றிலிருந்து இறுதி நாள் வரை தோன்றவுள்ள சகல சிருஷட்டிகளையுங் கண்டேன்” என விடையளித்தார்கள்.
ஹாஜாவின் பதிலைக் கேட்ட உஸ்மான்ஹாறூனி(றழி) அவர்கள் “மகனே உனது காரியம் முடிந்து விட்டது. என்றாலும் சில காலம் என்னிடம் தங்கியிரு” என்று பணித்தார்கள். அதன் படி சில காலம் அம்மகானிடம் நாயகமவர்கள் தங்கியிருந்து ஞானபாட்டையில் வீறு நடையிட்டுச் சென்றார்கள்.
திருமக்கா பயணமும், பட்டம் கிடைத்ததும்!
ஒரு நாள் இருவரும் புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்கு பயணமானார்கள். ஹஜ் வணக்கத்தின் போது அவர்களுக்கிடையே பல அற்புத நிகழ்ச்சிகள் நடந்தன. விரிவையஞ்சி விட்டு விட்டோம்.
பின்னர் நபிகளுக்கரசர் முஹம்மது (ஸல்) அவர்களைதரிசிக்கும் நோக்குடன் இருவரும் மதீனா நகருக்கு ஏகினார்கள்.மகான் உஸ்மான் (றழி) அவர்கள் முதலில் நபியவர்களுக்கு சலாம் கூற அதைத் தொடர்ந்து ஹாஜா நாயகம் சலாம் கூறினார்கள்.
அப்பொழுது நபிகள் (ஸல்) அவர்களின் புனித “ரவ்ழா” விலிருந்து “வஅலைக்கு முஸ்ஸலாம்” யாகுதுபல் ஹிந்து “(இந்துக்களின் அல்லது இந்தியர்களின் குதுபே உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்)” என்று பதில் கிடைத்தது.
இச்சம்பவத்திலிருந்து தான் ஹாஜா நாயகமவர்கள் “குதுபுல் ஹிந்து” என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்கள்.மகான் உஸ்மான் (றழி)அவர்களின் ஞானப்பராமரிப்பில் ஹாஜா நாயகம் அவர்கள் 20 வருடங்களும் 6மாதங்களும் வாழ்ந்து, அவர்களிடம் ஞானதீட்சை “பைஅத்” பெற்று அவர்களின் சீடராக வெளியேறி ஈராக்கின் தலை நகரான “பக்தாத்” நகருக்கு வந்தார்கள்.
முஹ்யித்தீனைக் கண்ட முயீனுத்தீன் 
பக்தாத் நகரையடைந்த ஹாஜா நாயகம் அவர்கள் அங்குசமாதியுற்றுப் பலகோடி அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த வலிகட்கரசர் “குத்புல் அக்தாப்” முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் தர்ஹா ஷரீபில் 5 மாதங்களும் 7 நாட்களும் அவர்களின் அருளையும் நல்லாசிகளையும் பெற்றார்கள். அங்கு தங்கியிருந்த நேரம் அவர்களுக்கு நடந்த அற்புத நிகழ்ச்சிகள் ஒரு கோடி விரிவையஞ்சி விடுத்தேன்.
பின்னர் நாடு நகரங்களாகவும், காடு மேடாகவும் பல இடங்களுக்கு பிரயாணம் செய்தார்கள். அதிகமாக காடுகளிலும், கப்றுஸ் தானங்களிலும் தங்கியிருந்தார்கள். தனக்கு பணி செய்வதற்காக ஒருவரையும் தன்னுடன் அமர்த்திக் கொண்டார்கள்.
காட்டிலுள்ள இலைகுழைகளைச் சாப்பிட்டும், குளம் குட்டைகளில் உள்ள நீரைக் குடித்து வாழ்ந்து வந்தார்கள். பல நாட்கள் பட்டினியாக இருந்தார்கள். அதிகமான நாட்கள் நோன்பு நோற்றார்கள். ஒரு நாளில் இரு தடவை திருக்குர்ஆனை ஓதி முடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். இஷா தொழுகைக்கு செய்து கொண்ட “வுழூ” உடன் சுப்ஹு தொழுகையையும் தொழுதுவரலானார்கள்.
அக்கினிக் கிடங்கு பூஞ்சோலையானது
ஒரு பிரயாணத்தின் போது ஹாஜா நாயகமவர்கள்தீப்பூசகர்களின் ஊரைக் கடந்து செல்ல நேரிட்டது. அங்கு பெரியதோர் அக்கினிக் குண்டம் இருந்தது. அதில் பல ஆண்டுகளாக அணையாமல் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ஹாஜா நாயகம் அவர்கள் அன்று நோன்பு நோற்றிருந்தார்கள். நோன்பு திறந்த பின் அவர்களுக்கு ரொட்டி தயாரித்துக் கொடுக்க வேலைக்காரன் விரும்பினான். அதற்காக நெருப்பு வணங்கிகளிடம் சென்று நெருப்புக் கேட்டான். அவன் முஸ்லிம் என்பதையரிந்து தீப்பூசகர்கள் நெருப்புக் கொடுக்க மறுத்து விட்டார்கள்.
வேலைக்காரன் ஹாஜா நாயகத்திடம் முறையிட்டான். வுழூச் செய்து கொண்டிருந்த ஹாஜா நாயகம் தீப்பூசகர்கள் கூடியிருக்கும் இடத்துக்கு வந்து பார்த்தார்கள். அக்கினிப் பள்ளத்துக்கு அருகில் அக்கினிப்பூசகன் ஒருவன் ஏழுவயதுள்ள ஒரு சிறுவனைத் தூக்கிக் கொண்டு நின்றான்.
நாயகமவர்கள் அவனையனுகி “நீங்கள் இந்த நெருப்பை எதற்காக வணங்குகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவன் ” நெருப்பு ஆண்டவனின் ஜோதி என நாங்கள் விசுவாம் கொண்டிருக்கிறோம். அதனிமித்தமே இதனைப்பூசிக்கின்றோம்.எனக் கூறினான்.
அப்போது ஹாஜா நாயகம் அவர்கள் அவனை நோக்கி ” நீங்கள் வெகு காலமாகவே நெருப்பை வணங்குகிறீர்கள் அல்லவா? இப்போது ஒரு கட்டி நெருப்பை உன் கையால் எடு பார்ப்போம்.” என்றார்கள்.
அதற்கவன் “அது எப்படி முடியும்? நெருப்பின் தன்மை சுட்டுவிடக்கூடியதனறோ”? என்றான்.
அவனின் பதிலைக் கேட்ட ஹாஜா நாயகம் (றழி) அவர்கள் அந்தச் சிறுவனைத் தூக்கிக் கொண்டு நெருப்புக்கிடங்கில் நீண்ட நேரம் அங்குமிங்கும் சுற்றித் திரிந்தார்கள். இதைக்கண்ட அக்கினிப்பூசகர்கள் ஒன்று கூடி வியப்படைந்தவர்களாக கூச்சலிட்டார்கள்.
நீண்ட நேரம் கழிந்த பின் ஹாஜா நாயகம் அச்சிறுவனுடன் எவ்வித ஆபத்துமின்றி வெளியே வந்தார்கள்.பின்பு பூசகர்கள் அச்சிருவனையனுகி “நெருப்புக் கிடங்கில் உனக்கு என்ன நடந்தது” என்று கேட்டார்கள். அதற்கந்தச் சிறுவன் “எனக்கு நெருப்புக் கிடங்கு பூஞ்சோலை போல் இருந்தது. அதில் பூத்திருந்த பல்வேறு நிறங்களையுடைய பூக்கள் என் கண்களை கவர்ந்தன. அவற்றின் நறுமணம் என் மனதைக் குளிரச் செய்தது.” என்று பதிலளித்தான். இதனைச் செவியுற்ற அக்கினிப் பூசகர்களும், நெருப்பு வணங்கிகளும் அக்கணமே ஹாஜா நாயகத்தின் கரம் பிடித்து இஸ்லாத்தில் இனைத்தார்கள்.
நபிமார்களில் ஹஸ்றத் இப்றாஹீம் (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதம் போன்ற ஓர் அற்புதம்., அவ்லியாக்களில் ஹாஜா நாயகமவர்கள் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நெருப்புச்சுடுவதுமில்லை, கத்தி வெட்டுவதுமில்லை
நெருப்பு சுடுமென்றும், கத்தி வெட்டுமென்றும் சொல்லிக் கொண்டாலும் கூட நெருப்புக்குச் சுயமாக சுடும் தன்மையோ, கத்திக்கு சுயமா வெட்டும் தன்மையோ இல்லை. இதுதான் இஸ்லாத்தின் கொள்கை. நெருப்புச் சுடுவதாயினும், கத்தி வெட்டுவதாயினும் அதற்கு அல்லாஹ்வின் அனுமதி வேண்டும்.
அல்லாஹ்வின் அனுமதியில்லாமலேயே நெருப்புக்கு சுயமாகச் சுடும் தன்மையுள்ளதென்றிருந்தால், நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் கிடங்கில்எறியப்பட்ட சமயம் அது அவர்களைச் சுட்டுப்பொசிக்கியிருக்கும்.
ஹாஜா நாயகம் (றழி) அவர்கள் ஏழுவயதுச்சிறுவனை தூக்கிக் கொண்டு நெருப்புக் கிடங்கில் இறங்கிய சமயம் அது அவ்விருவரையும் எரித்துச் சாம்பலாக்கியிருக்கும்.
அல்லாஹ்வின் அனுமதியில்லாமலேயே கத்தி வெட்டும் என்றிருந்தால் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் குர்பான் செய்ய முற்பட்டவேளையில் கத்தி அவரை அறுத்து இருக்கும். நெருப்புச் சுடுவதற்கும், கத்தி வெட்டுவதற்கும் அல்லாஹ்வின் அனுமதி அவசியமாகும்.
அபார அக்கினியை அணைத்த அதிசய செருப்பு
கல்லும் முள்ளும், புற்பூண்டுகளும், அடர்ந்த உயர்ந்த மரங்களும் நிறைந்த காடுகளில் இறைவனை இஸ்தோதிரம் செய்து வந்த ஹாஜா நாயகம் அவர்கள் ஒரு காட்டில் ஏழு அக்கினிப் பூசகர்களைச் சந்தித்தார்கள். அவர்கள் இறை பக்தியிலும், மகிமையிலும் சம்பூரணம் செற்றவர்களாக தலைசிறந்து விளங்கினார்கள். ஆறு மாத காலம் வரையிலும் அவர்கள் ஒன்றுமே சாப்பிடாமலும் எதுவுமே குடிக்காமலும், தொடர்ந்து விரதம் இருந்து வந்தார்களாம்.
அவர்களின் அளவு கடந்த வணக்க வழிபாடுகளைக் கண்ட மக்கள் அவர்கள் மீது முழு விசுவாசம் கொண்டிருந்தனர். அவர்களும் காணச் செல்லுபவர்களின் முகங்​களைப் பார்த்தே அவர்களின் மனதிலுள்ளவற்றைச் சொல்லும் தன்மை பெற்றிருந்தார்கள்.
அவ்வேழுபேர்களையும் கண்ட ஹாஜா நாயகம், அவர்களிடம் “உண்மையான அல்லாஹ்வை வணங்காமல் நெருப்பை ஏன் வணங்குகிறீர்கள்”? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் “மறுமையில் நெருப்பின் வேதனை எங்களுக்கு ஏற்படாதிருக்கவே அதை வணங்குகிறோம்” என்றார்கள்.
அதற்கு ஹாஜா நாயகம் “நீங்கள் பிழை செய்கிறீர்கள்” நெருப்பை வணங்காமல் அல்லாஹ்வை வணங்குங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்களில் ஒருவன் ,”நீங்கள் படைத்த வனைத்தானே வணங்குகிறீர்கள்? உங்களுக்கு இம்மையிலேயே நெருப்பால் தீங்கு ஏற்படாமற் போனால் நீங்கள் கூறுவதை நாம் நம்புவோம்”என்றான்.
அதற்கு ஹாஜா நாயகம் அவர்கள் ” நெருப்பு எங்களுக்கு மட்டுமல்ல எங்கள் செருப்புக்குக் கூட தீங்கு ஏற்படுத்தமாட்டாது” என்று கூறிய வண்ணம்தங்களது செருப்பைக் கழற்றி பல வருடகாலமாக எரிந்து கொண்டிருந்த அக்கினிப்பூசகர்களின் அபார அக்கினிக் குழியில் எறிந்து, நெருப்பே! இது முயீனுத்தீனுடைய செருப்பு என்பதைத் தெரிந்து கொள்” என்று கூறினார்கள்.
ஹாஜா நாயகத்தின் இம்மொழி கேட்ட அக்கினிக் குண்டம் அக்கணமே ஒடுங்கிப் போயிற்று. செருப்பைக் கூட அது எரிக்கவில்லை.
அந்த அபார அற்புதத்தை கண்ணுற்ற அந்த நெருப்பு ஆராதனைக் காரர்கள் அனைவரும் அதே சமயம் ஹாஜாவின் கைபிடித்து இஸ்லாமானார்கள்.
அஜ்மீர் செல்லுமாறு அசரீதி கேட்டது
ஒரு தடவை ஹாஜா நாயகம் அவர்கள் ஹஜ் செய்துவிட்டு திருமதீனா நகர் வந்து அங்கு சிறிது காலம் நிஷ்னடயில் அமர்ந்தார்கள்.
ஒரு நாள் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் புனித ரவ்ழா ஷரீபில் இருந்து முயீனுத்தீனே! நீ தீனுக்கு துனையாளனும், பாதுகாப்பாளனுமாவீர்! இந்தியாவின் விலாயத்தை நாம் உன்னுடைய பொறுப்பில் விட்டுவிட்டோம். நீர் அஜ்மீர் நகரையடைந்து அங்குள்ள மக்களை தவ்ஹீத் எனும் ஏகத்துவக் கொள்கையின் பால் அழைக்க வேண்டும். அங்கு “குப்ர்” என்னும் இருளையகற்றி “ஈமான்” என்னும் ஒளியை ஏற்படுத்த வேண்டும். என்று ஒரு சப்தம் கேட்டது.
அஜ்மீர் செல்ல அது எங்கே இருக்கிறது? எனதனக்குள் சிந்திக்க லானார்கள் ஹாஜா நாயகம் அவர்கள். மறுகணம் அவர்களைத் தூக்கம் ஆற்கொண்டது உறக்கத்தில் உத்தமர் நபி (ஸல்) அவர்கள் தோற்றமளித்து இந்தியாவையும், இந்தியாவிலுள்ள சகல நகரங்களையும், அஜ்மீர் நகரையும் அந்நகரத்துக் செல்லும் வழியையும் படம் பிடித்துக் காட்டிக் கொடுத்தார்கள். அத்துடன் மாதுளம் பழம் ஒன்றையும் கையில் கொடுத்து போய்வரும் உம்மை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிட்டோம். என்றும் ஆசீர்வதித்தார்கள்.

கண்விழித்த ஹாஜா நாயகம் அவர்கள் மதீனஹ் நகரை விட்டு பாரத நாடு நோக்கி பிரயாணமானார்கள். அடர்ந்த மரங்களும், கல்லு முள்ளும், சிங்கம், கரடி, புலி, போன்ற பயங்கர மிருகங்களும், பாம்பு, தேள், போன்ற விஷ ஜத்துக்களும் நிறைந்து வாழும் காடு வணங்களைக் கடந்து பல்லாண்டுகளுக்குப் பின் பாரத நாட்டில் பாதம் பதித்தார்கள். பிரயாணத்தில் பல வருடங்களை கழித்த பின் ஹஜா பல அற்புதங்களைத் தாங்கள் நிகழ்த்தியும், காடுகளிலும் நகரங்களிலும் தாங்கள் சந்தித்த ஞானிகள் துறவிகள், சன்யாசிகள் ஆகியோர் நிகழ்த்திய அற்புதங்களைக் கண்டுகளித்தும் வந்தார்கள்.

 
மன்னன் பத்ஹுறா
ஹாஜா நாயகம் (றழி) அவர்கள் ராஜஸ்தான் மானிலத்தில் உள்ள அஜ்மீர் நகரையடைந்த காலை அம்மானிலத்தில் ஆட்சி காபிரான மன்னன் “பத்ஹுறா” என்பானின் கையில் இருந்தது. அவனின் தாய் சோதிட சாஸ்த்திரத் துறையில் மிகப்பிரசித்தி பெற்றவளாகத் திகழ்ந்தாள். அவள் கூறிய சாஸ்திரங்களில் ஒன்றாவது பொய்யாகிப் போனது கிடையாது.
ஹாஜா நாயகம் அவர்கள்அஜ்மீர் நகரையடைவதற்கு 12 வருடங்களுக்கு முன்னரே அவள் தனது மகன் பத்ஹுறாவுக்கு “இங்கு ஒரு மகான் தோன்றப் போகின்றார்”
அவரால் உனது அரசாங்கத்துக்கு அபாயம் ஏற்படப் போகிறது. என்று சொல்லிக் கொண்டும், எச்சரித்துக் கொண்டும் இருந்தாள். இதனால் மன்னன் பத்ஹுறா துக்கமடைந்தவனாக இருந்தான்.
மகான் ஹாஜா நாயகத்தின் அங்க அடையாளங்களையும் தன் தாயிடம் விபரமாக கேட்டுத் தெரிந்து கொண்ட மன்னன், அத்தகைய ஒருவர் இம்மானிலத்துக்குள் பிரவேசித்தால் உடனே அவரை சிறைப்படுத்தி தன்னிடம் கொண்டு வரவேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்திருந்தான். அவனின் கட்டளையைச் செவியேற்ற அதிகாரிகள் குறித்த அடையாளமுள்ளவரைத் தேடி நாடெங்கும் வலை விரித்திருந்தார்கள்.
ராஜஸ்தான் மானிலத்தில் அஜ்மீரையடுத்து “ஸமாஸ்” என்னுமிடத்தை ஹாஜா நாயகம் அவர்களது நாற்பது சீடர்களும் வந்தடைந்த பொழுது அரசன் பத்ஹுறாவின் சிப்பந்திகளால் அடையாளம் காணப்பட்டார்கள்.
ஹாஜா நாயகத்தை அரசன் பத்ஹுறாவிடம் அழைத்துச் செல்வதற்காக அவர்களைக் கண்ட அந்தச் சிப்பந்திகள் “தாங்கள் தங்குவதற்காக நாங்கள் வசதியான இடம் தருகிறோம். அங்கே தங்களுக்கு வேண்டிய வசதிகள் செய்துள்ளோம். என்று கூறிய ழைத்தார்கள்.
அவர்களின் பேச்சில் சந்தேகம்கொண்ட ஹாஜாநாயகம் இது சம்மந்தமாக நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் முடிவைப் பெறுவதற்காக சிறிதுநேரம் நிஷ்டையில் அமர்ந்தார்கள்.
அந்நிஷ்டையில் தோற்றமளித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”முயீனுத்தீனே! நீங்கள் அந்த துரோகிகளின் பேச்சுக்கு இணங்க வேண்டாம். அவர்கள் உங்களை துன்புறுத்தப் போகின்றனர்.” என்று கூறி மறைந்தார்கள்.
அதன்பின் அவர்களின் அழைப்பை மறுத்துவிட்டு தங்கள் சிஷ்யர்களுக்கு இரகசியத்தைக் கூறிவிட்டு அஜ்மீரை நோக்கிபுறப்பட்டார்கள் ஹாஜா நாயகம் றழிஅவர்கள்.
அஜ்மீர் நகரிலுள்ள ஒருமரத்தடியில் தங்குவதற்கு ஹாஜாநாயகம் முயன்ற பொழுது, அங்கு நின்றவர்கள் ”இது அரசனின் ஒட்டகம் தங்குமிடம். இங்குதங்கக்கூடாது” எனக்கூறி துரத்திவிட்டார்கள்.
”சரி நாங்கள் சென்றுவிடுகிறோம்” எனக்கூறி ஹாஜாநாயகம்,மலைச்சாறல் ஒன்றில் ”அனாஸ்கார்” எனும் நீரோடை அருகிலுள்ள ஓரிடத்தில் அமர்ந்தார்கள். அந்தமலையும் அந்நீரோடையும் ஹாஜாநாயகமும் சீடர்களும் தங்கியருந்த இடமும் இப்போதும் இருக்கிறது. அஜ்மீர் செல்லும் ஹாஜாபக்தர்கள் அனைவரும் அங்கு சென்று அவ்விடங்களை தரிசித்து, பாத்திஹா ஓதி அருள் பெற்றுவருகின்றார்கள்.
ஹாஜாநாயகத்தின் தர்ஹாவிலிருந்து சுமார் ஒருமைல் தொலைவில் மலைப்பகுதியில் இந்த இடமிருக்கிறது. இவ்விடத்தில்தான் ஹாஜாநாயகத்தின் ஞானகுருவான ஷெய்கு உஸ்மான்ஹாறூனி (ரழி) அவர்களின் அடக்கஸ்தளமும் உள்ளது.
கூஸாவில் புகுந்த குளத்து நீர்
”அனாஸ்கார்” எனும் நீரோடை அந்தநேரம் கடல் போல் பரந்து விரிந்துகாணப்பட்டது. பெருந்தொகையா னபெரிய சிறியமீன்களும் அதில் வாழ்ந்துவந்தன. அந்தநீரோடை மூலமாகவே ராஜஸ்தான் மாநில மக்கள் நீர் பெற்றுவந்தனர். அம்மாநில எல்லா வயல்வாய்க்கால்களுக்கும் அந்நீரோடையிலிருந்துதான் தண்ணீர் பாய்ச்சப்பட்டுவந்தது.
அந்நீரோடையருகே சிஷ்யகோடிகளுடன் ஞானஸ்தோத்திரத்தில் அமர்ந்த ஹாஜாநாயகம் (றழி) அவர்கள் வுழூ செய்வதற்காக அதில் நீரெடுக்கச்சென்றார்கள். குளத்துப் பாதுகாவலன் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டான்.
ஹாஜாநாயகம் ரழி அவர்கள் தமது கமுக்கட்டில் எடுத்துச்சென்ற நீர்மொள்ளும் சிறிய கூசாவை அக்குளத்தில் வைத்தார்கள் அவ்வளவுதான். அதில் வாழ்ந் தமீன்கள் உட்பட (குளத்துநீர்முழுவதும்) கூசாவில் நுழைந்துவிட்டது.
குளம் வற்றிவறண்டு போயிற்று. ஆடுமாடுகள் செத்துமடிந்தன. வயல்கள் வறட்சியடைந்தன, நாடெங்கும் பஞ்சம் பரவியது. மக்களை பட்டினிப்பேய்பிடித்து வாட்டியது, எங்கும் நோய்பரவியது, மரணங்கள் சாதாரணமாக நிகழ்ந்தன. இதைக்கண்டு கவலையாலும், வேதனையாலும் துவண்டுபோன அரசன் ”பத்ஹுறா” சிந்திக்கலானான்.
ஒருநாள் சோதிட சிஹாமனியான மன்னன் பத்ஹுறாவின் தாய் அவனையழைத்து 12 வருடங்களாக நான் சொல்லிவருகின்ற மகான்தான் இவர். நீ அவரிடம் சென்று அவரை கௌரவிக் கவேண்டும். அவருடையமனம் வேதனைப்படா வண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இன்றேல் உனது அரசுகவிழ்ந்துவிடும் எனக்கூறினார்.
தாயின் சொல்லைக்கேட்ட அரசன் பத்ஹுறா இதற்கு என்ன செய்வது என மிக யோசித்து தனக்குகுருவாகவும் பெரி யமந்திரவாதியாகவுமுள்ள அஜேபால் எனும்யோகியிடம் உதவிதேடமுயற்சித்தான். அரசனின் கட்டளைப்படி மந்திரவாதி அஜேபால் கொண்டுவரப்பட்டான்.
மந்திரவாதியின் சீற்றம்
அரசன் கூறியதைக்கேட்ட அஜேபால் அந்தமனிதன் பெரியமந்திரவாதி என நம்புகிறேன் அவனை நான்பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படவேண்டாம். இதோ நான் போகிறேன்நீயும் உன்னால் முடிந்த ஏற்பாடுகளை செய்துவிட்டு அங்குவந்துசேர். என்று கூறிவிட்டு ஹாஜாவைக் கவிழ்க்கபுறப்பட்டான் அகங்காரம் கொண்ட மந்திரவாதி அஜேபால்.
ஹாஜாநாயகத்திற்கு சதி செய்யநாடி வீறுநடையிட்டுவந்த அஜேபால், வழியில் குருடனாகிவிட்டான். அவனது இருவிழிகளும் ஒளி இழந்தன. திடுக்கிட்டவனாய் சதி ஒன்றும் செய்யமாட்டேன் என்று தனக்குள் நினைத்தான் மறுகணம் கண்கள்பார்வை பெற்றன.
ஹாஜாநாயகத்தை நாடி 700 சிஷ்யர்களுடன் மந்திரவாதி அஜேபால் புறப்பட்டுப்போனான்.
அஜேபால் என்பவன் அரசனின் மந்திரவாதியும் சூனியக்காரனுமாவான். அரசனை முறியடிக்கும் சக்தியெல்லாம் தனது அபாரமந்திர சக்தியால்தோற்கடித்து அரசனிடமும் பிரஜைகளிடமும் புகழ் பெற்றிருந்தான். அக்காலத்தில் அரசர்கள் தமக்கென பயங்கர மந்திரவாதிகளை வைத்திருப்பது வழக்கம்.
அஜேபாலின் அபார மந்திரசக்தியின் மூலம் அவனுக்கு 700விஷநாகங்கள் சிஷ்யர்களாக வயப்பட்டிருந்தன. அவை ஆகாயத்தில் 1500அடி உயரம் பறந்து அங்கிருந்து கொண்டே விரோதிகளைத்தாக்கும் சக்திகளை பெற்றிருந்தனவாம்.
அவனுடன் சென்ற 700 சிஷ்யர்களும் மந்திரம் படித்தவர்கள். அவர்கள் ஹாஜாநாயத்தின் மீது பல்வேறு மந்திரசக்திகளை பிரயோகித்துப்பார்த்தனர். எனினும் ஒன்றும் பலிக்கவில்லை.
மந்திரவாதிகள் சிஷ்யர்கள் மூலம் இரும்புவளையங்களை ஆகாயத்திலிருந்து ஹாஜாநாயகத்தின் மீது அவ்வளயங்ளை வீழ்த்தி கொன்றுவிடுவதற்கு முயன்றார்கள். ஆயினும் அவ்வளையங்கள் எறிந்தவர்களின்மீதே விழுந்து அவர்களைத் தாக்கின. அவர்களில் சிலர் கொல்லப்பட்டனர். இன்னும் சிலருக்கு உடலங்கங்களுக்கு சேதமும் காயமும் ஏற்பட்டன.
மந்திரசக்தி மூலம் உயரப்பறந்துசென்ற விஷப்பாம்புகள் திரும்பி வந்தவுடன் புமி விழுங்கிவிட்டது.
மந்திரம் ஏதும் பழியாத காரணத்தினால் கவலைகொண்ட அரச ன்பத்ஹுறாவும் அவனது மந்திரவாதி அஜேபாலும் இறுதிநடவடிக்கையாக ஹாஜாநாயகத்தி ன்மீது பயங்க ரமந்திரம் ஒன்றைகையாண்டனர்.
அஜேபால் தன்னிடமிருந்த “மான்தோல்” ஒன்றை ஆகாயத்தில் எறிந்தான்.அது
கீழே விழாமல் ஆகாயத்தில் மிதந்த்து. அதேபோல் தனது மூச்சை அடக்கிக்கொண்டு மேலே ​ பறந்து சன்று அந்த மானதோல் மீதமர்ந்தான்.அதிலிருந்து கொண்டு உயரப்பறக்கத் தொடங்கினான்.
அஜேபாலின் மந்திரத்தின் முன்பு ஹாஜா தோற்று விட்டாரென்று அரச படை
களும்,மந்திரவாதிகளும் சிரித்து மகிழ்ந்தார்கள்.ஹாஜா நாயகத்தை நையாண்டிசெய்தார்கள். மந்திரத்தின் முன் ஒலித்தனம் தலைகுனியுமா? என்னஅதிசயம்?
நெடுநேரம் தலை குனிந்து “முறாக்கபா” எனும் நிஷ்டையியலிருந்து தலையுயர்த்திய ஹாஜா நாயகம் “அஜேபால் எதுவரை போயிருக்கிறான்?” என்று தமது சிஷ்யர்களிடம் வினவினார்கள்.
“அவன்​ இப்போது ஒரு பறவையளவில் சிறிதாகத் தென்படுகிறான்” என்று பக்தர்கள் கூறினார்கள் பின்னர் சற்று நரம் கழித்து முன் கேட்டவாறு கேட்போது “இப்போது அவன் பார்வையில் நின்றும் மறைந்து விட்டான்.”என்று பதிலளித்தார்கள்.மௌனமாயிருந்த ஹாஜா நாயகம் (றழி) அவர்கள் தங்களின செருப்புக்குக் கட்டளையிட்டார்கள். அப் பாதணியானது அக்கணமே​ உயரப் பறந்துசென்று அஜேபாலைத் தேடிப்பிடித்துஅவனைஅடிக்கத் தொடங்கியது.அடியின்வேதனையை தாங்க முடியாதுஅஜேபால் கதறியழத்தோடங்கினான்.அவனது அழுகைக்குரல் பூமியிலிருந்த அவனது ஆதரவாளர்ளை நடுங்கச்செய்ததது. அவனை அடித்த வண்ணமேஹாஜாநாயகத்தின் காலணி கீழேஇறங்கியது.
அஜேபால் ஹாஜா நாயகத்திடம் வந்துகை கட்டி நின்று மரியாதை செய்தான்.
அதேபோல் அரசன் பத்ஹூறாவும் ஹாஜா நாயகத்தின் பொற்பாதம் பணிந்து மன்னிப்புக் கோரினான்.
இருவரும் ஹாஜா நாயகத்திடம் “கூசாவில் அடைத்த குளத்து நீரை விட்டு விடுங்கள். நாட்டில் வரட்சியும்,வறுமையும் நீங்கி மலர்ச்சி ஏற்பட வழிசெய்யுங்கள்” என கண்ணீரும் கம்பலையுமாக வேண்டினார்கள்.
குளத்து நீர் அடங்கியிருந்த கூசாவைத் தூக்கிவரும்படி அஜேபாலை ஹாஜாநாயகம் அவர்கள் பணித்தார்கள். என்னே புதுமை? அந்தச் சிறிய கூசாவை நகர்த்தகூட முடியாதுபோய் விட்டது. பின்பு காஜா நாயகம் தன்னிடம் இஸ்லாத்தில் இணைந்து தங்களால் “சாதிக்” என்றுபெயர் வைக்கப்பட்ட ஜின்னை அழைத்து அக் கூசாவை தூக்கிவரும்படி பணித்தார்கள். அந்த ஜின் அதைக்கொணர்ந்து அவர்கள் முன்வைத்தது. அதிலுள்ளகொஞ்சத் தண்ணீரை ஹாஜா நாயகம் கையிலெடுத்து வற்றி வறண்டு போயிருந்த குளத்தில் எறிந்தார்கள். அக்கெணமே குளம் முன்னிருந்தது போல்தண்ணீர் பெருக்கெடுத்தோட ஆரம்பித்தது. வயல்கள் செழிப்புற்றன. கால்நடைகள் புற்பூண்டுகளில் மேயத் தொடங்கின. நாட்டில் பஞ்சம் நீங்கி வறுமை யொழிந்தது.
மந்திரவாதி அஜேபாலும், ராஜஸ்தான் மானில மக்களும் ஹாஜா நாயகத்தின்
கரம் பற்றி புனித இஸ்லாத்தில் இணைந்து கொண்டார்கள்.ஆனால் அரசன்
“பத்ஹூறா” இறுதிவரை புனித இஸ்லாத்தில் இணைந்துகொள்ளவில்லை. இச்சம்பவத்தின்போது சுமார் 100 000பேர் வரை இஸ்லாத்தில் இணைந்ததாக வரலாறு கூறுகின்றது.
இச்சம்பவத்துடன் “பத்ஹூறா “வின் ஆட்சியும் கவிழ்ந்தது. ராஜஸ்தான் மானிலத்தின் ஆட்சி ஹாஜா நாயகம் அவர்களிடம் வந்தது.ஆட்சி பீடமேறிய கருணைஹாஜா அம் மானிலத்திலிருந்து வந்த எல்லாக் கோயில்களையும் கைப்பற்றினார்கள். அங்கிருந்த விக்ரகங்கள், சிலைகள், யாவற்றையும் உடைத்தெறிந்தார்கள். சில கோயில்களைப் பள்ளிவாயல்களாக்கினார்கள். இன்னும் சில கோயில்களை இருந்தவாறே விட்டுவிட்டார்கள். அவ்வாறு மசூதிகளாக்கப்பட்ட பல கோயில்களை இன்றும் அஜ்மீர் நகரில் காணமுடியும்.
872 ஆண்டுகள் வாழ்ந்து வரும் அஜேபால்
காஜா நாயகத்திடம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மந்திரவாதி அஜேபால் உலக முடிவு வரை தான் உயிரோடிருக்கப் பிரார்த்தனை செய்யுமாறு அவர்களைக் கேட்டதாகவும், ஹாஜா நாயகமவர்களும் அவ்வாறே பிரார்த்தனைசெய்ததாகவும் அதன்படி இன்றுவரை அம்மந்திரவாதி அஜேபால் அஜ்மீர் நகரை அடுத்துள்ள அடர்ந்த காடொன்றில் வாழ்ந்து வருவதாகவும், அடிக்கடி ஹாஜா நாயகத்தின் “தர்ஹா” ஷரீபுக்கு அவர் வந்து தரிசித்து விட்டுப்போவதாகவும் வரலாறு கூறுகின்றது.மேலும் அஜ்மீர் நகர் வாழும் எல்லா இன மக்களும் இவ்விடயத்தில் இன்று வரை நம்பிக்கையுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்.அஜ்மீர் நகர்செல்லும் ஞானிகளும், துறவிகளும், பக்தர்களும் அதைச்சுற்றியுள்ள காடுகளுக்குச் சென்று மந்திரவாதி அஜேபாலைத் தேடி வரும் வழக்கம் அங்கே இப்போதும் உண்டு.
மறைவு.
காஜா நாயகம் அவர்கள் திருமணத்திற்குப்பிறகு ஏழாண்டுகள் அஜ்மீரில் வாழ்ந்து தங்களது 97 வயதில் ஹிஜ்ரீ 633 ரஜப் மாதம் 6ம் நாள் இறையடி சேர்ந்தார்கள்.
(முற்றும்)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments