Thursday, March 28, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அலையெழுப்பும் அற்புதக்கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்

அலையெழுப்பும் அற்புதக்கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்

அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்டு, அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் 17வது வருட கந்தூரி வைபவத்தின் போது வெளியிட்டு வைக்கப்பட்ட (அலையெழுப்பும் அற்புதக் கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்) எனும் நூலிருந்து….
விஷமிறக்கும் அற்புதக்கல் :
பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டவர்களின் விஷத்தை உறிஞ்சி எடுக்கும் விஷக்கல் தங்கள் வாப்பா அவர்களால் இலங்கையின் பல ஊர்களிலும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காத்தான்குடி, காங்கேயனோடை, பதியத்தலாவ முதலான ஊர்களிலுள்ள விஷக்கல் கொண்டு பல மத,இன மக்களும் பயன்பெற்று வருகின்றார்கள்.
குறிப்பிடத்தக்க விஷேடமென்னவெனில் தங்கள் வாப்பா அவர்கள் ஒரு கல்லை தங்களின் கையால் எடுத்து ஒன்றுமே ஓதாமல் “இது எல்லா விஷங்களையும் எடுக்கும்” என்று சொல்லி வைத்தார்களாயின் போதும். அன்றிலிருந்து  அது எல்லா விஷங்களையும் எடுக்கும். இது அவர்களின் கறாமத் அற்புதம் எனலாம்.

படிக்காத மேதை :
சங்கை மிகு தங்கள் வாப்பா அவர்கள் எந்தவொரு அறபுக்கல்லூரியிலோ, அல்லது பல்கலைக்கழகத்திலோ படித்தவர்களுமல்லர்;. எந்தவொரு ஆசிரியரிடமும் கால் மடித்து அமர்ந்தவர்களுமல்லர். அவர்களிடமிருந்த கல்வி ஞானங்களுக்கு அல்லாஹ்தான் ஆசிரியனாக இருந்தான் என்றே சொல்ல வேண்டும்.
பிக்ஹ் என்ற இஸ்லாமிய ஷரீஆ சட்டக்கலையில் மிக ஆழமான, நுணுக்கமான அறிவுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை அவர்களுடன் நெருங்கியிருந்நவர்கள் அறிவார்கள்.
கறாமத் – அற்புதங்கள் :
சங்கை மிகு தங்கள் வாப்பா அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலும், அவர்கள் மறைந்த பின்னும் பல அற்புதங்கள் அவர்களால் வெளியாகியுள்ளன.
ஒரு வருடம் காத்தான்குடியில் தொடர்ந்து மழை பெய்யாததால் கடும் வரட்சி ஏற்பட்டது. கால் நடைகள் குடிப்பதற்கு நீர் இன்றியும், உண்பதற்கு புற்பூண்டு இன்றியும் செத்துப்போயின. இன்னும் சில மெலிந்தும், நலிந்தும் போயின. கிணறுகள் வற்றிவிட்டன. குளம் குட்டைகளும் வரண்டுபோயின.
தங்கள் வாப்பாவின் மஹப்பத் அன்புக்குரிய பலர் அவர்களிடத்தில் வந்து ஊரின் நிலவரத்தைக் கூறி மழைக்காக துஆ செய்யுமாறு கேட்டார்கள்.
தங்கள் வாப்பா அவர்கள் குத்பு நாயகம் பெயராலும், ரிபாயீ நாயகம் பெயராலும் ஒரு கந்தூரி – அன்னதான நிகழ்வு-நடத்தினால் மழை பெய்யும் என்று கூறினார்கள். பல மாடுகள் அறுத்து கறி சமைத்தும்,  சோறு சமைத்தும் கந்தூரி மிகச் சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தங்கள் வாப்பா தங்களின் இரு கரம் ஏந்தும் முன்னரே வானம் இருண்டது, குளிர் காற்று வீசத் தொடங்கியது. கூடி நின்ற சனத்திரள் ஒரு கணம் வாப்பாவைப் பார்த்தது. மறுகணம் வானத்தைப் பார்த்தது. ஸுப்ஹானல்லாஹ்! இடி முழக்கத்துடன் மழை பெய்யத் தொடங்கியது. மழையென்றாலும் மழைதான். பாதைகள் வெள்ளத்தால் நிரம்பின. மழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் மக்களின் வீடுகளிலும் வெள்ளம் ஏறியது. ஊர் தலைவர்களும், தங்கள் வாப்பாவின் முஹிப்பீன்களும் அவர்களிடம் வந்து மழையை நிறுத்தி வைக்குமாறு கேட்டார்கள். இன்னும் சில நிமிடங்களில் மழை நின்று விடும் என்று தங்கள் வாப்பா அவர்கள்கூ றினார்கள். அவ்வாறே மழை நின்றது.
இது மௌலானா வாப்பா மூலம் வெளியான ஊரறிந்த பகிரங்க அற்புதமாகும்.
சங்கைமிகு மௌலானா வாப்பா அவர்கள் இலங்கை நாட்டுக்கு வருவதற்காக தங்களின் முரீத் சிஷ்யர் ஒருவருடன் திருவனந்தபுர விமான நிலையத்தில் சோதனைக்காக (கியூ) வரிசையில் நின்றிருந்தார்கள். அப்போது பரிசோதனைக் குழுவைச் சேர்ந்த ஓர் அதிகாரி வாப்பா அவர்களிடம் வந்து நீங்கள் இலங்கைக்கு ஏன் போகிறீர்கள் என்று கேட்டார். எனக்கு அங்கு காணிகள், வீடுகள், அறபுக்கல்லூரிகள் உள்ளன. அங்கு எனக்கு பல சிஷ்யர்களும் உள்ளார்கள். அதற்காக நான் செல்கிறேன் என்று தங்கள் வாப்பா சொன்ன போது அங்குள்ள சொத்துக்களுக்கான உறுதிகள் உங்களிடம் உள்ளனவா? என்று அதிகாரி கேட்டார். ஆம் என்று சொன்னவர்களாக தங்களின் பாஸ்போர்ட் கடவுச்சீட்டு மட்டும் வைப்பதற்கு அளவிலான சிறிய துணிப்பையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக பல உறுதிகளையெடுத்து அதிகாரியின் மேசையில் வைத்தார்கள். அந்த அதிகாரி ஆவணங்கள் சரியானவையா? இல்லையா என்று கூட பரீட்சித்துப் பார்க்காமல் ஒரு பாஸ்போர்ட் மட்டும் வைக்கத்தக்க சிறிய பையிலிருந்து பல உறுதிகளை எடுத்ததைக் கண்டு வியந்த அதிகாரி எழும்பி நின்று கை கூப்பி மன்னிப்புக் கேட்டு அவரே சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்து வழியனுப்பிவைத்தார்.
இந் நிகழ்வை நேரில் பார்த்துக்கொண்டிருந்த வாப்பா அவர்களின் சிஷ்யன் வியப்பால் வியர்த்துப் போனார்.
மேற்கண்ட கறாமத் போன்ற அற்புதங்கள் நிறைய உள்ளன. அவற்றை முழுமையாக எழுத இச்சிறிய பிரசுரம் இடம் தரவில்லை.
பைஅத் ஞானதீட்சை :
சங்கை மிகு தங்கள் நாயகம் தங்களின் “மஷாயிக்” குருமார் வழியில் ஞானதீட்சை வழங்கி நல்வழி காட்டுபவர்களாகவும் இருந்தார்கள். “பைஅத்” வழங்கும் குருமார்களிற் சிலர் தாமாகவே பிறரை அழைத்து ஞானதீட்சை வழங்குவார்கள். ஆனால் திங்கள் முகம் கொண்ட தங்கள் வாப்பா அவர்களோ அவ்வாறு செய்வதில்லை. அவர்களிடம் ஞானதீட்சை பெறவிரும்பும் ஒருவர் பல வருடங்கள், பல மாதங்கள் அலைந்த பின்னரே வழங்குவார்கள். இன்னும் சிலர் பல வருடங்கள் அலைந்தாலும் கூட அவர்களுக்கு வழங்கமாட்டார்கள். அவர்களின் ஞானப் பார்வையை நம்மால் அளக்க முடியாது. கட்டுப்பாட்டுடன் “பைஅத்” வழங்கியும் கூட இன்று இலங்கையில் பல பாகங்களிலும் பல்லாயிரம் சிஷ்யர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அழியாத செல்வங்கள் :
கல்விக்கு உயிர் கொடுத்த மகான்கள் பட்டியலில் தங்கள் வாப்பா அவர்களும் ஒருவராவார்கள். தெஹிவளையில் “அல் ஜாமிஅதுல் கௌதிய்யஹ்” என்ற பெயரில் கல்விக்களஞ்சியம் ஒன்றையும், கண்டி “படுபிடி” என்ற இடத்தில் “அல்ஜாமிஅதுல் மின்ஹாஜிய்யஹ்” என்ற பெயரில் இன்னொரு கல்விக் களஞ்சியத்தையும் உருவாக்கினார்கள். இரண்டு கல்வித் தாபனங்களும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” அடிப்படையிலும், தரீகா அடிப்படையிலும் பல உலமாக்களை உருவாக்கி சிறப்பாக நடந்து வருகின்றன.
கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ :
 சங்கைமிகு சற்குரு, சற்குணம் நிறைந்த நம் குரு, திங்கள் முகத் தங்கள் செய்யிதுனா அஷ்ஷெய்கு அப்துர் றஷீத் றஹ்மதுல்லாஹி அவர்கள் ஹிஜ்ரீ 1418 (கி.பி 1997) ஸபர் மாதம் பிறை 22 வெள்ளிக்கிழமை இரவு 09:40 மணிக்கு “தாறுல் பனா”வை விட்டும் “தாறுல் பகா”வுக்குச் சென்றார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

அன்னாரின் “முரீதீன்”களும் “முஹிப்பீன்”களுமான நாம் அவர்களைக் கண்ணியப்படுத்தி வாழ்ந்தது போல் அவர்களின் வழித்தோன்றல்கள், குடும்பத்தவர்கள், இரத்த உறவினர்கள் அனைவரையும் கண்ணியப்படுத்தி வாழ அல்லாஹ் அருள் செய்வானாக!

மிஸ்பாஹீ
************************************++++++++++++++*****************************

கண்ணூர் வாழும் காமில் வலீ, அஸ்ஸெய்யிது அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களை புகழ்ந்து “நஸீஹத்” வீடியோ அல்பத்திற்காக ஆசிரியர் HMM.றஹீம் அவர்களால் எழுதப்பட்டு, குட்டிக் குரலரசன், பாடகர் MFM.பிஹாம் அவர்களால் பாடப்பட்ட பாடல்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments