இஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்! புரிந்து செயற்படுவோம்.

September 8, 2019
-மௌலவீ,சாமசிரீ,தேசகீர்த்தி, மர்ஹூம் HMM.இப்றாஹீம்(நத்வீ)(JP)-

சர்வ உலகங்களையும் படைத்த அல்லாஹ் தஆலா மனிதர்களுக்கு ஏகத்துவ ஞானத்தை ஊட்டி நேர்வழி காட்டுவதற்காக றஸூல்மர்களையும், நபிமார்களையும் படைத்து அவர்களில் சிலரைவிட சிலரை சிறப்பாக்கி வைத்தான்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அனைத்து றஸூல்மார்களிலும் நபிமார்களிலும் எங்கள் கண்மணி நாயகம் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயர்படைப்பாகப் படைத்தான். அவர்களின் அந்தஸ்த்தை உலகறியச் செய்தான்.
மலக்குகள்
இதேபோல் மலக்குகளையும் படைத்து அவர்களில் சிலரைச் சிறப்பாக்கி வைத்தான்.
வலிமார்
இறைநேசர்களான வலிமார்களில் “குத்பு“ கௌது,அப்தால்,அவ்தாத், நுகபா, நுஜபா போன்ற படித்தரமுடையவர்களாக அமைத்தான்.
முகம்மது நபியின் உம்மத்
அதேபோல் உலகில் தோன்றிய மக்கள் அனைவரிலும் எங்கள் தலைவர் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் “உம்மத்” சமுகத்தினரைச் சிறப்பாக்கி உயர்ந்த அந்தஸ்தை அளித்தான்.

தேசங்கள்
இதேபோல் தேசங்களிலும் நாடுகளிலும் இறைவன் வித்தியாசத்தை வகுத்துள்ளான். மக்கஹ்,மதீனா,ஜெருஸலம் போன்றவை சிறப்பம்சத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
புனித இடங்கள்
இதேபோல் இடங்களையும் இறைவன் தரப்படுத்தியுள்ளான். நபீகள் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள புனித றவ்ழஹ் ஷரீபஹ், புனிதகஃபதுல்லாஹ்,மஸ்ஜிதுன்நபவீ,பைத்துல்முகத்தஸ்,அர்ஷ், குர்ஸீ,
லௌஹ், கலம், பைத்துல்மஃமுர், சொர்க்கங்கள், கஹ்பஹ்வை அண்டியுள்ள புனித தலங்கள், ஸியாரங்கள் இத்தரப்படுத்தலுக்குச் சான்றாக அமைகின்றன
காலங்கள்
இதேபோல் காலங்களுக்கும் இறைவன் விஷேட தன்மைகளைக் கொடுத்து வசந்தகாலம், மாரிகாலம்,கோடைகாலம் போன்று வகைப்படுத்தியுள்ளான்.
வருடங்கள்
இதேபோல் வருடங்களையும் ஆமுல்பீல்,ஆமுல்ஹூஸ்ன் போன்று ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான தன்மைகளைக் கொடுத்து சிறப்பாக்கியுள்ளான்.
மாதங்கள்
இதேபோன்றுமாதங்களையும் ஒன்றுக்கில்லாத சிறப்பை இன்னொன்றுக்கு அளித்து சிறப்பித்துள்ளான்.
நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவதாரத்தால் றபீஉனில் அவ்வலையும், ஒரு மாத நோன்பால் றமழான் மாதத்தையும், புனித ஹஜ்ஜால் துல்ஹஜ் மாதத்தையும், இவைபோன்றவைகளையும் போன்றாகும்.
இதேபோல் மாதங்களில் முஹர்ரம், றஜப், துல்கஃதா, துல்ஹிஜ்ஜஹ் ஆகிய நான்கு மாதங்களையும் சங்கையான மாதங்கள் எனவும் இவற்றில் யுத்தம் செய்யக்கூடாதென்றும்தடுத்துள்ளான்.
நாள்கள்
இதேபோல் நாள்களிலும் விஷேடங்களை அமைத்துள்ளான். ஸ்தாபிதம்,வியாபரம்,பிரயாணம்,கல்வி போன்றவற்றிற்கு பொருத்தமாக முறையே ஞாயிறு,திங்கள்,புதன் போன்ற நாள்களையும், நாள்களில் தலைநாளாக வெள்ளிக்கிழமையையும் அமைத்துள்ளான்.
அதனால் மற்றநாள்கள் மோசமானவை என்பதல்ல. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பை அல்லாஹ் வழங்கியுள்ளான்.
இதேபோன்றே காலங்கள் வருடங்கள்,மாதங்கள் நேரங்களுமாகும்.
நேரங்கள்
நேரங்களில் லைலதுல் கத்ர் உடைய நேரம்,வெள்ளிக்கிழமைகளில் “துஆ”ஏற்றுக்கொள்ளப்படும் நேரம், ஒவ்வொரு தொழுகையின் நேரங்கள், நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த நேரம் மற்றும் இவைபோன்றவை சிறப்புக்குரியவையாகும்.
முஹர்ரம்
இஸ்லாமிய மாதங்களில் “முஹர்ரம்” தலைமாதமாகும். இம்மாதத்தில் பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அத்தனைஅம்சங்களும் அகிலத்தாருக்குப் படிப்பினையூட்டக்கூடியவையாகவே அமைந்துள்ளன.
ஆஷூறா
முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் “ஆஷூறா” தினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முன்தினம் ”தாஸூஆ” ஒன்பதாம்நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.
முஹம்மது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கஹ்வைத் துறந்து மதினஹ் வந்த போது அங்கு வாழ்ந்த யூதர்கள்“ஆஷூறா”பத்தாம் நாள் நேன்பு நோற்றிருந்தார்கள். இதுபற்றி நபீகள் வினவியபோது இன்றுதான் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தோழர்களும் “பிர்அவ்ன்” எனும் சர்வாதிகாரியையும் அவனது கூட்டத்தையும் தோற்கடித்த நாளென்றும் இன்றுதான் பிர்அவ்ன் கடலில் மூழ்கி இறந்த நாளென்றும் இதனாலேயே நோன்பு நோற்றோம் என்று நவின்றார்கள்.
இதைக்கேட்ட நபீகள் நாயகம் எனது சகோதரர் மூஸாவுக்குக் கிடைத்த வெற்றியை முன்னிட்டு நீங்கள் நோன்பு நேற்பதைவிட நான் மிகத் தகுதியுடையவன் எனக்கூறி தாமும் அன்று நோன்பிருந்த்துடன் தான் அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்றார்கள். ஆயினும் அதற்கிடையில் நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறையடி சேர்ந்து விட்டார்கள்.
நபீகள் ஸல் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்காவிடினும் நோற்பேன் என்று சொன்னதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் சுன்னத் ஆக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகள் 
முஹர்ரம் பத்தாம் நாள் “ஆஷூறா”தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய மாதினமாகும். சுருங்கக்கூறின்……
* அன்றுதான் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் மன்னித்தான்.
*அன்றுதான் நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் தூபான் வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பற்றப்பட்டு ஜூதீமலையில் தரை தட்டியது.
* அன்றுதான் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்தார்கள்.
*அன்றுதான் சர்வாதிகாரி நும்றூதால் நெருப்புக்கிடங்கில் எறியப்பட்ட நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் காப்பற்றப்பட்டார்கள்.
*அன்றுதான் நபீ யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது.
*அன்றுதான் நபீ ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துன்பம் நீங்கியது.
*அன்றுதான் நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மகன் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இழந்தார்கள் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
*அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் அலைஹிஸ்ஸலாம் அதில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
*அன்றுதான் உலகம் படைக்கப்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
*அன்றுதான் பூமியில் முதல் முதலாக மழை பெய்தது.
*அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு முதலில் இறங்கியது.
*தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன்முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
*அன்றுதான் சுலைமான் நபீயவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
*அன்றுதான் நபீ ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நபீ யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தாரகள்.
*அன்றுதான் பிர்அவ்னும் அவனது சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
*அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்.
*அன்றுதான் நபீ பேரர் ஹூஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் “அஹ்லுல்பைத்” என்றழைக்கபடுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.
நல்லமல்கள்
இதனாற்தான் “ஆஷூறா” தினத்தில் றொட்டி சுட்டு நபீ பேரர்களான ஹஸன் ஹூஸைன் பாதிமா மற்றும் அஹ்லுல் பைத்தினரின் ஆத்மசாந்திக்காக யாஸீன் கத்ம் ஒதப்பட்டு வருகிறது. இன்றுவரை இவ்வழகம் இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாகக் காத்தான்குடியிலும் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் தோன்றிய வழிகேடர்களால் இவ்வழக்கம் பித்அத் என்றும் ஷிர்க் என்றும் மக்களிடையே பரப்பப்படுகின்றது.
மேற்குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்சிகள் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளான “ஆஷூறா” தினத்திலேதான் நிகழ்ந்துள்ளன.
இதனாற்றான் இந்நாள் முஸ்லிம்களுக்கு விஷேட நாளாக அமைந்துள்ளது.
முஸ்லிம்கள் இந்நாளைச் சாதாரண நாளாக நினைத்து வீணாகக் கழிக்காமல் நோன்பு நோற்றல்,குர்ஆன் ஓதுதல், ஸலவாத் சொல்லுதல்,திக்ர், பிக்ர் செய்தல், தியாணம் செய்தல், தானதர்மம் செய்தல், மஸார்களை ஸியாறத் செய்தல் போன்ற நல் விடயங்களில் ஈடுபடவேண்டும்.
நோன்பு
ஆஷுறா நோன்பு பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அது கடந்த வருடத்தின் குற்றங்களுக்குப் பரிகாரமாக அமையுமென்று நபிகர்கரசர் நவின்றார்கள்.
றமழான் மாதத்தில் நோற்கத் தவறிய “கழா” நேன்புள்ளவனும் நேர்ச்சை நோன்புள்ளவனும் “தாஸுஆ” , “ஆஷுறா” ஒன்பதாம் பத்தாம் நாட்களில் தன்மீதுள்ள கழா, அல்லது நேர்ச்சை நோன்பு நோற்றால் அவர் நோற்ற நோன்பு நிறைவேறுவதுடன். இந்நாட்களில் நோற்ற இவ்விரு சுன்னத்தான நோன்புகளின் நன்மைகளும் கிடைக்கும் ஆனால் நிய்யத் வைக்கும் போது பர்ழான றமழான் கழா நோன்பு என்றும் நேர்ச்சை நோன்பு என்றும் நிய்யத் வைக்க வேண்டும்.
கழா அல்லது நேர்ச்சை நோன்பில்லாதவர்கள் “தாஸுஆ, ஆஷுறா” நோன்பு என்று நிய்யத்வைக்க வேண்டும்.
“ஆஷுறா” தினத்தின் மனிதர்கள் நோன்பு நோற்பது போல் மிருகங்களும் பூச்சி புழுக்களும் நோன்பு நோற்கின்றன.
பறவை இனத்தின் முதலில் மைனா என்ற பறவை நோன்பு நோற்றது.
“ஆஷுறா” தினத்தில் ஒருவன் தனது குடும்பத்தவர்களையும் நண்பர் உறவினர்களையும் பேணி நடந்து உதவிகள் செய்தால் அவனுக்கு அல்லாஹ் அருள் நிறைந்த வாழ்வளிக்கின்றான் என்றும் அவ்வருடம் முழுவதும் அவனுக்கு எண்ணற்ற அருள் புரிகிறான் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்
ஐம்பது ஆண்டுகளாக இவ்விடயத்தை நாங்கள் பரீட்சித்து வந்துள்ளோம் எவ்வித மாற்றமுமின்று அருள் பெற்று வருகின்றோம். என்று மெய்ஞ்ஞானி சுப்யான் அத்தெளரீ றஹிமஹுல்லாஹ் நவின்றுள்ளதாக “அல்பறகஹ்” எனும் நூலில் வந்துள்ளது.
இம்மாதத்தின் நான்காம் நாள் நஜ்றான் நஸாறாக்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இம்மாதத்தின் ஏழாம் நாள் நபி யூனுஸ் பின் மத்தா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்த வெளியேறினார்கள்.
இம்மாதத்தின் பதினேழாம் நாள் உஹது யுத்தம் நடை பெற்றது. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா றழியல்லாஹு அன்ஹு அவர்கள கொலை செய்யப்பட்டு ஷஹீதானார்கள்.
இம்மாதம் இருபத்தைந்தாம் நாள் முதல் மாதம் முடியும்வரை “நஹ்ஸ்” உடைய (பறகத் குறைந்த) நாற்களென்று சொல்லப்படுகின்றன.
இந்நாட்களில் திருமணம் செய்தல், வீடு கட்டுதல், வியாபாரம் போன்ற நற்காரியங்களை ஆரம்பித்தால் பொருத்தமற்றவை என்பது வைத்திய நிபுணர்களின் கருத்துக்களாகும். இந்நாள்களில்தான் ஆத் தமூத் கூட்டத்தினர் பயங்கர சோதனை மூலம் அழிக்கப்பட்ட வரலாறுகள் சான்று பகர்கின்றன.
எனவே புனித “தாஸுஆ” ஆஷுறா” தினங்களில் நோன்பு நோற்று நல்லமல்கள் புரிந்து நல்லடியார்களாவோமாக! ஆமீன்.

You may also like

Leave a Comment