மகிழ்ச்சி தரும் பெருநாட்கள்

July 17, 2015

உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும்  வருடத்தில் இரு “பெருநாள்” கொண்டாடுகின்றார்கள். இவ்விரு பெருநாட்களும் இஸ்லாத்தில் மார்க்கமாக்கப்பட்டவையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் முக்கிய அம்சங்களில் மூன்றாவதான “நோன்பு” எனும் கடமையை அல்லாஹ்வுக்காக நோற்று, தன் மனவெழுச்சியை அவனுக்காக அடக்கிப் பசித்திருந்து, தாகித்திருந்து, சிறிய, பெரிய பாவங்களை விட்டும் தவிர்ந்து, பகலில் நோன்பிருந்து, இரவில் நின்று வணங்கி , றஹ்மத், மஃபிறத், இத்கும் மினன்னார் போன்றவற்றை ஆதரவு தேடி அல்லாஹ்விடம் “துஆ” பிரார்த்தனை செய்து இறுதியில் மனம் மகிழ பிரியாவிடை கொடுத்து றமழானை வழியனுப்பி விட்டு அல்லாஹ்வை புகழ்ந்து போற்றி, துதித்து, தக்பீர் முழங்க இறை நினைவில் கொண்டாடும் பெருநாளை “நோன்புப் பெருநாள்” என்று சொல்கின்றோம்.

இந்தப் பெருநாளை நோன்பிருந்தவர்களும், நோன்பிருக்காதவர்களும்  சேர்ந்து  கொண்டாடுகின்றனர்.
அதேபோல்  இஸ்லாத்தின் இறுதி அம்சமான “புனித ஹஜ்”  எனும் வணக்கத்தைப் பூரணப்படுத்தி  அன்று பிறந்த  பாலகனாகி “ஹஜ் பெரு நாளை” கொண்டாடுகின்றோம்.

மேலும்,… செய்யிதுனா நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களுக்கு ஏற்பட்ட இறை சோதனையை நினைவு கூர்ந்து, அவர்கள் இறைவனுக்காக  செய்த தியாகத்தை அறிந்து, விளங்கி கால் நடைகளை (ஆடு, மாடு, ஒட்டகம்)  அல்லாஹ்வுக்காக அறுத்தப் பலியிட்டு அல்லாஹ்வைப் புகழ்ந்து, துதித்து அந்த ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்றோம். இந்தப் பெரு நாளை ஈதுல் அழ்ஹா அல்லது ஈதுத்தழ்ஹிய்யா, ஈதுன் நஹ்ர்  என்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
இதனை “ஹஜ்” கடமயானவர்கள் (ஹஜ் செய்தவர்கள்), மற்றும் அது தனக்கு விதிக்கப்படாத ஏழைகளும் இணைந்து ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர்.
பெருநாட்களில்  சிறப்பு அதிகமானது  இப்பெருநாள்தான் என  இமாம்கள் கூறுகின்றனர்.
இவை இரண்டும் நாங்கள் விளங்கி வைத்திருக்கின்ற ‘ஷரீஆ” விதியாக்கிய சுன்னத்தான பெருநாட்களாகும்.
ஆரிபீன்கள், ஞானவான்கள் நாங்கள் அறிந்திராத இன்னும் மூன்று பெருநாட்களை குறித்துப் பேசுகின்றார்கள்.
அதில் முதலாவதானது, அவாம் (பாமரர்களின்)களின் பெருநாள்.!
முஸ்லிம்களுக்கு இவ்வுலகில் பெருநாட்களாக இருக்கின்ற இரு நாட்களும் சொர்க்கத்தில் அவாம்களான இப்பிரிவினருக்கு பெருநாளாகவே இருக்கும். அந்நாளில் தங்களின் இறைவனின் திருவதனக் காட்சிக்காக ஒன்று சேர்வார்கள். அவ்வேளையில் “றப்புதஆலா” வெளியாகிக் காட்சி வழங்குவான். மேலும் இவர்கள் தங்களின் ஏனைய உற்றார் உறவினர்களை சந்திப்பதற்காக நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாட்களில் ஒன்று சேர்வார்கள்.
இப்படி ஒன்று சேரும் இவர்கள் ஜும்ஆ தொழக்கூடியவர்களாக உலகில் இருந்தவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு இரண்டு முறை மட்டுமே இறை லிகா (காட்சி) கிடைக்கின்றது.!
இரண்டாவது, “கவாஸ்ஸுகள்” (விஷேடமானவர்களின்)-  பெருநாள்.
மேற்கூறிய  பிரிவினர்களை விட சற்று  சிறப்புடையவர்களின் பெருநாளாகும். இவர்களை  “கவாஸ்ஸுகள்” விஷேடமானவர்கள் என்று  கூறப்படும். இவர்கள் எத்தகையோர் என்றால் தங்களின் உலக நாட்கள்  அனைத்தும்  இவர்களுக்கு பெருநாட்களாக அமைந்திருந்தவர்கள். இவர்களுக்கு அந்த பெருநாட்களாக
அமைந்திருந்த அனைத்து நாட்களும் மறுமையில் பெருநாட்களாகவே அமையும். இவர்களுக்கு வல்ல அல்லாஹுத்தஆலா காலையும், மாலையும் தரிசனை (காட்சி) வழங்குவான். (இவர்கள் காலை, மாலை வேளைகளில் தொடராக இறைவனை துத்திருந்தவர்களாவார்கள்.)
இவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவை வீதம் இறை காட்சி கிடைக்கும். முந்திய சாராரைவிட இவர்களின் நிலை படித்தரத்தில் கூடியதேயாகும்.
மூன்றாவது, “அகஸ்ஸுல் கவாஸ்”  விஷேட மானவர்களில் அதி விஷேடமானவர்களின் பெருநாள். இவர்களை “அர்பாபுல் ஹகீகா” எதார்த்தமுடையவர்கள் என்றும் சொல்லப்படும்.
இவர்கள் தங்களின் அனைத்து (ஆரம்ப, இறுதி) சுவாசத்தையும் நோட்டமிட்டு (முறாகபா செய்து), இறைவன் தன்னினைவில் தங்களின் மூச்சுக்களை இழுத்து, அவன் நாமத்திலேயே அதனை இறக்கிவிட்டவர்களாவார்கள். இவர்கள் கொண்டாடும் பெருநாள் எப்படி என்றால் தங்களின் மேல் நோக்கி இழுக்கப்பட்ட மூச்சு “அல்லாஹ்” என்பதாகவே இருக்கின்றது, எனவே அது மேல்  நோக்கி இழுக்கப்படும் நேரத்தில் பெருநாளாக அமைந்து விடுகின்றது. இழுத்த மூச்சு இறங்கும் போது “அல்லாஹ்” எனும் திரு நாமம் மூலமாக  இறங்கும் நேரம் அதுவும் பெரு நாளாகவே அமைந்தும் விடுகின்றது. இது மிகப் பெறுமதியான பெரு நாளாகும். காரணம் இவ்வுலகத்தின் எல்லா நொடிப் பொழுதிலும், மறுமையில் கழிந்து செல்லும் எல்லா சுவாச வழியூடாகவும் பெருநாளகவே இவர்களுக்கு இது ஆகின்றது.
இவர்களை “அல்லாஹ்” வின் நினைவில் தங்களின் நினைவை அழித்துக் கொண்டு “பனா” வானர்கள் என்றும் சொல்லப்படும்.
இவர்கள் பெறக்கூடிய இப்பாக்கியம் அளவிட்டட்கரியது. காரணம் இவர்கள் இழுத்து விடுவது அல்லாஹ்வின் தாத்தின் நிலைப்பாட்டை உறுதி செய்யும் ஆன்மா எனும் றூஹையாகும். இவர்களுக்கு முந்திய சாரார் மறுமையில் இரண்டு வீதம் அல்லாஹ்வின் காட்சியைப் பெறுகின்றார்கள். அவர்களை விடவும் இவர்கள் அந்தஸ்த்தில் கூடியவர்களாகவும் காணப்படுகின்றார்கள். இவர்களின் காட்சி குறித்த நிலைப்பாட்டை ஆரிபீன்கள் கூறவில்லை. அங்கே  ஓர் மௌனம் நிலவுகின்றது. எனது சொந்தக்கருத்து என்னவன்றால்  அங்கு துவிதம் நீக்கப்படுகின்றது. அத்துவிதம் குதூகளிப்படுகின்றது.!
(இக்கருத்துக்களில் சில “அத்தஃவீலாதுன் நஜ்மிய்யஹ்’ எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.)
அன்பு மலர்ந்தவர்களே!
மலர்திருக்கின்ற நோன்புப் பெருநாள் எங்கள் அனைவருக்கும் “ஷரீஆ” வின் சுன்னத்தான பெருநாளாக அமைவதுடன், பெற்றோர், குடும்பத்தைப் பேணி நடந்து, பொறாமை, பெருமை, மமதை, ஆணவம், அகங்காரம், நான் எனும் வேற்றுமை குபாடம், ஆகிய தீக்குணங்களைக் களைந்து, தர்மம், சகாத், சகாதுல் பித்ரா போன்றவற்றை இந் நாளில்  அள்ளி வழங்கி, ஏழைகளுக்கு இரங்குவோம் !
மலர்ந்திருக்கும் திருநாளை அன்பும், பண்பும் நிறைந்ததாக அனைவருடனும் “ஸலாம்” சொல்லி மகிழ்ந்து கொண்டாடுவோம்.!
“அகஸ்ஸுல் கவாஸ்” எனும் விஷேடமானவர்களில் அதி விஷேடமானவர்கள் கொண்டாடும் பெறுமதி மிக்க பெருநாளாக எமது பெருநாளும் அமைய எமது ஒவ்வொரு  சுவாசத்தையும் இப்பெருநாள் முதல் கொண்டு “அல்லாஹ், அல்லாஹ்” எனப்பழக்கி ஏற்றிறக்கம் எந்நாளும் ஏற்றி ஏற்றி நினைவாவோம், நித்திரை செய்வோம்.!
அல்லாஹு அக்பர் ! அல்லாஹு
அக்பர் ! அல்லாஹு அக்பர் !
லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு  அக்பர்
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!

You may also like

Leave a Comment